Friday, June 22, 2018

கோவை - இன்னொரு பொலிவியா ?????90 களின் இறுதியில் லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவின் இரண்டாவது பெரிய நகரமான கோச்சாபாம்பா நகரத்தின் தண்ணீர் வினியோகம் "பெக்டெல்" என்ற பன்னாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான "அக்வாஸ் டெல் டுனாரி" என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கே இருந்த நதி கூட அவர்கள் வசம் சென்றது.

அவர்கள் தண்ணீரின் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே இருந்தனர். குடிதண்ணீர் மட்டுமல்லாது அனைத்து தேவைகளுக்கான தண்ணீரும் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

கிடைக்கிற ஊதியத்தில் பெரும்பகுதியை பெக்டெல் லிடமே கொட்டி அழ முடியாத சூழலில் மக்களின் போராட்டம் வெடித்தது. எடப்பாடி வகையறா போல போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட, போராட்டம் மேலும் சூடு பிடித்தது.

இறுதியாக "அக்வாஸ் டெல் டுனாரி" உடன் போடப் பட்டிருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

தண்ணீரை தனியார்மயமாக்கும் சதி முறியடிக்கப்பட்டு விட்டதால் அடுத்த படியாக காற்றை தனியார்மயமாக்கும் கொடுமைகள் எல்லாம் நடைபெறவில்லை.

பொலிவியாவில் பெக்டெலிடம் தண்ணீரை அடமானம் வைத்தது போல இப்போது கோவையில் குடிதண்ணீர் வினியோகத்தை "சூயஸ்" என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்கள். 

வரும் முன் காப்பது நல்லது.
கோவை மக்கள் போராட்டத்தை உடனடியாக துவக்கிட வேண்டும். 

கோவை மௌனமாக இருந்தால் தமிழகம் முழுதும் இக்கொடுமை பரவும். 

பி.கு : பெக்டெல் எதிர்ப்புப் போராட்டத்தின் முன்னணிப் போராளி தோழர் இவா மொரேல்ஸ் பின்னர் அந்நாட்டின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னும் அப்பொறுப்பில் தொடர்கிறார்.

Thursday, June 21, 2018

வானில் ஒரு இலவச மோசடிகொல்கத்தா பயண அனுபவத்தினை நிறைவு செய்யும் முன் இரண்டு பதிவுகளை எழுத வேண்டியுள்ளது.

சென்னையிலிருந்து கொல்கத்தா சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் கொல்கத்தாவை நெருங்கும் வேளையில் ஒரு அறிவிப்பு ஒன்றைச் செய்தார்கள்.

ஏதோ ஒரு நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அது ஸ்பைஸ்ஜெட் பயணிகளுக்கு இலவசப்பரிசு ஒன்று தருவதாகவும் அதற்கான கூப்பன் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் அதிலே ஒட்டப்பட்ட தாளை பிய்த்தால் என்ன பரிசு என்று தெரியும் என்றும் விமான நிலையத்தில் உள்ள அந்த நிறுவனத்திடம் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார்கள்.

அனைவருக்கும் அந்த கூப்பனைக் கொடுத்த பின்பு, அந்த பரிசு இலவசம்தான், ஒவ்வொன்றும் நாலாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் மதிப்புடையது. அந்த தொகையை நீங்கள் தரவேண்டியதில்லை. ஆனால் வரி மற்றும் இதர கட்டணங்களுக்காக ரூபாய் 1,299 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என்று இன்னொரு அறிவிப்பு வந்தது.

எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு கூப்பனில் ஒரு ஜோடி வாட்ச் என்று வந்தது. அதன் மதிப்பு ரூபாய் 3,990 என்று இருந்தது. அதன் வொர்த் 1300 ரூபாய் கூட இருக்கும் என்று தோன்றாததால் நான் பாட்டிற்கு லக்கேஜை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து விட்டேன்.

ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பம், பரவசமாக அந்த கடையை நோக்கிப் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்தேன். வேறு சிலரும் கூட.

வேலூர் வந்த பிறகு இணையத்தில் அந்த பிராண்ட் வாட்சின் விலை என்ன என்று தேடிப்பார்த்தால் அடக்க விலையே ரூபாய் 1200 என்றுதான் இருந்தது.

ஆக அடக்க விலையை விட நூறு ரூபாய் அதிகமாக வைத்து அதை இலவசப்பரிசு என்று வேறு பெருமையாகச் சொல்கிறார்கள்.

என்னங்கடா இது புது விதமான மோசடியா இருக்கு !!!!!!

த.நா போலீஸால் இதுதான் முடியும் . . .


தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று முன் தினம் தூத்துக்குடியில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தியது.

முதலில் காவல் துறை அனுமதி மறுத்தது. பிறகு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அனுமதி பெற்றது. விசித்திரமான நிபந்தனைகள் வேறு விதிக்கப்பட்டது. தோழர் பிருந்தா காரத் மற்றும் தோழர் உ.வாசுகி ஆகிய இரு தலைவர்கள் மட்டும்தான் பேச வேண்டும். ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என இரண்டு நிபந்தனைகளை விதித்தது.

ஆயிரம் பேருக்கு பதிலாக 1,720 பேர் கலந்து கொண்டார்கள் என்று சொல்லி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழுவின் செயலாளர் தோழர் கே.எஸ்.அர்ச்சுணன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. 

புகார் கொடுத்தது யார் தெரியுமா?

சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர்தான்.

எஸ்.வி.சேகரை கைது செய்ய துப்பில்லாத,
கொலை, கொள்ளை குற்றங்களை தடுக்க கையாலாகாத,
ஆளும் கட்சி,
மணற்கொள்ளையில் பங்கு வாங்குகிற,
ஆளும் கட்சி கிரிமினல்களுக்கு பாதுகாப்பு அளிக்கிற

தமிழ்நாடு போலீஸால்

மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை கைது செய்யவும்

அவர்கள் மீது வழக்கு போடவும்

மட்டும் முடிகிறது.

சீருடை அணிந்த சமூக விரோதிகளாய் மாறிக் கொண்டிருக்கின்றனர்.Wednesday, June 20, 2018

காஷ்மீர் மேலும் நாசமாய் போகும் . . .

போர் நிறுத்த அறிவிப்பை மத்தியரசு திரும்பப் பெற்ற போதே பெரிய வில்லங்கம் வரப்போகிறது  என்று எதிர்பார்த்தேன். பாஜக - முப்தி கட்சிகள் தேர்தலுக்குப் பிந்தைய  கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்ததிலும் எந்த கொள்கையும் கிடையாது, மக்கள் நலனும் கிடையாது.

இப்போது பாஜக ஆட்சியை விட்டு வெளியேறி அதனைக் கவிழ்த்ததிலும் எந்த கொள்கையும் கிடையாது, மக்கள் நலனும் கிடையாது. 

இனிமேலும் மெஹ்பூபா முப்தியோடு இணைந்து செயல்பட முடியாது என்ற ரீதியில்தான் பாஜக பேசுகிறதே தவிர, என்ன காரணங்களுக்காக வெளியேறுகிறோம் என்று ஆணித்தரமாக எதுவும் சொல்லவில்லை. இனியும் சொல்லாது. ஏனென்றால் அப்படி எதுவும் கிடையாது.

பாஜக வின் செயலால் இனி என்ன நிகழும்?

காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமென்றால் காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசின் மீது அடிப்படையாக நம்பிக்கை வர வேண்டும். அப்படி நம்பிக்கையை உருவாக்கும் எந்த செயலையும் நான்காண்டுகளில் மோடி செய்யவில்லை. இந்த ஆட்சிக் கலைப்பு என்பது அந்த நம்பிக்கையின்மையை மேலும் அதிகப்படுத்திடும். 

ஜனாதிபதி ஆட்சியின் மூலமாக  பாஜக வின் ஆட்சிதான் அங்கே நடைபெறப் போகிறது. மூன்றாண்டுகளில் பாஜக செய்ய நினைத்த பல சதிகளை இப்போது அரங்கேற்றும்.

காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி என்பது கிட்டத்தட்ட ராணுவத்தின் ஆட்சிதான். மக்களுக்கும் ராணுவத்திற்குமான மோதல்களும் முரண்பாடுகளும் ஏற்கனவே உள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தை ராணுவம் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்ளும். காஷ்மீரில் ராணுவம் செய்து வரும் அத்து மீறல்கள் உலகப் பிரசித்தி படைத்தது.

பாஜக என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் அதனால் ஜம்மு பகுதியைத் தாண்டி வெற்றி பெற முடியாது. கடந்த முறை பெற்ற 25 தொகுதிகளில் கூட இனி வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகமே.

ஆகவே குடியரசுத்தலைவர் ஆட்சி என்ற பெயரில் ஒரு பினாமி ஆட்சியை காஷ்மீரிலும் நடத்தப்போகிறது. அந்த ஆட்சி நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அம்மாநில மக்கள் மனதளவில் இந்தியாவிடமிருந்து விலகிப் போய்க் கொண்டே இருப்பார்கள்.


Tuesday, June 19, 2018

போஸ் கொடுக்க இவரே என்ன மோடியா?மேற்கு வங்கம் ஜல்பைகுரியில் ஒரு கிராமத்தில் முப்பது அடி நீள மலைப்பாம்பு சிக்கியுள்ளது. வனத்துறைக்கு தகவல் சொல்லியுள்ளனர்.

பிடிபட்ட மலைப்பாம்பை ஒரு பையில் அடைத்து காட்டில் விட வேண்டிய ரேஞ்சர் அதை தன் கழுத்தின் மேல் போட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

அந்த பாம்பு அவரை இறுக்கி ஒரு நிமிடம் மரண பயத்தை காண்பித்த பின்பே சுதாரித்து செய்ய வேண்டிய வேலைகளைப் பார்த்துள்ளார்.

ஆனால் அந்த சாகஸப்படம் வைரலாகி இப்போது வனத்துறை அவர் மீது விசாரணை துவங்கியுள்ளதாம்.

போட்டோவிற்கு போஸ் கொடுக்க எல்லோரும் மோடியா என்ன?


Monday, June 18, 2018

வீரத்தை வர்ணிக்க வார்த்தையில்லை

ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அங்கே எழுதிய பின்னூட்டத்தைத்தான் தலைப்பாக  கொடுத்துள்ளேன்.

ஆசிரியர் சுஜாத்திற்கு வீர வணக்கம்


Vijayasankar Ramachandran
வீர வணக்கம் சகாக்களே!

சுமார் ஏழு மணிக்கு அலுவலகத்திலிருந்து இறங்கிச் செல்கிறார் ஆசிரியர். அடுத்த நாள் வர வேண்டிய பத்திரிக்கை தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் குழுவினர் வெளியே ஏதோ வெடிச்சத்தம் கேட்கின்றனர். ஓடிப் போய்ப் பார்த்தால் ரத்த வெள்ளத்தில் காரின் பின் இருக்கையில் கிடக்கிறார். அவரை வாரி எடுத்து மருத்துவமனைக்குச் செல்லும் காவல் துறை வாகனத்தை பதைபதைப்புடன் தொடர்கின்றனர். உயிர் பிரிந்துவிட்டது எனக் கேட்டவுடன் துயரமும் அதிர்ச்சியும் கண்ணீராய்ப் பெருகுகிறது. 

மூன்று வருடங்களுக்கு முன் ஸ்ட்ரோக் வந்து மருத்துவமனையில் கிடந்தபோது ஆசிரியர் சொன்னது நினைவுக்கு வருகிறது. “நான் வீழ்ந்தாலும் பத்திரிக்கை தொடர வேண்டும்” 


உடனே அலுவலகத்துக்கு விரைகிறார்கள். ஆசிரியரின் உடல் அவர் பிறந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

நள்ளிரவையும் தாண்டி பணிபுரிந்து 16 பக்கங்கள். 
ஆசிரியரே தலைப்புச் செய்தியாய்!


சகாக்களே வீர வணக்கம்!
சகாக்களே முன்னேறுவோம்!

வாய்ப்புள்ளோர் வாய்ப்பை பயன்படுத்துவீர் . . .

எங்கள் தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி அவர்களின் நினைவு நாளை ஒட்டி இன்று மாலை 5.15 மணிக்கு   ஆற்காடு சாலையில் உள்ள எல்.ஐ.சி   வேலூர் கோட்ட அலுவலக வளாகத்தில் 

"நீட்  தேர்வு மூலம் தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகள் - என்ன செய்யப் போகிறோம்? "

என்ற தலைப்பில் திறந்த வெளிக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

கல்வியாளரும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளருமான தோழர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்புரையாற்ற உள்ளார்.

வேலூர் மற்றும் அருகாமை நகரங்களில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாறு அன்போடு அழைக்கிறோம்.


Sunday, June 17, 2018

கொஞ்சம் நிலவு, சின்னதாய் ஒரு . . .

கொஞ்சமாய் நிலவும் சின்னதாய் ஒரு நட்சத்திரமும் மேகக் கூட்டங்களுக்கிடையில் தெரியும் ஒரு அழகிய காட்சியை அலைபேசிக்குள் அடக்கி வைத்தேன். 

உங்களுக்காக அதனை விடுவிக்கிறேன்.


அன்று சொன்னது இன்றும் . . .

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை ஒரு மகத்தான அமைப்பாக, போர்க்குணமுள்ள இயக்கமாக மாற்றிய பெருமை மிகு தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி அவர்களின் நினைவு நாள் இன்று.

தன் எழுத்துக்களால் இன்றும் அவர் எங்களை வழி நடத்துகிறார்.

ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய ஒரு கட்டுரை இன்றும் பொருந்துகிறது.

முதலாளித்துவ சமுதாய அமைப்பில் ஆட்சியாளர்கள்  முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பவர்களாகவும் அதனால் ஏற்படும் சுமையை மக்கள் மீது சுமத்துபவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை இக்கட்டுரை உணர்த்துகிறது. 

இன்னும் எத்தனை நாள் சுமைகளை நாம் பகிர்ந்து கொள்ளப் போகிறோம் என்று அவர் எழுப்புகிற கேள்விக்கு தக்க பதிலை அடுத்த வருட தேர்தலிலாவது அளித்திட வேண்டும். 

தோழர் சரோஜ் அவர்களுக்கு செவ்வணக்கம்...


சுமைகளை பகிர்ந்து கொள்ளல்

தோழர் சரோஜ் சவுத்ரி
இன்சூரன்ஸ் வொர்க்கர் ஜூலை 1963

நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் வாசகர்களுக்கு தீனி போடக் கூடிய அனைத்து ஊடகங்களும் தங்களின் ஒவ்வொரு புதிய இதழிலும் ஒரு கோஷத்தை தங்களின் லட்சக்கணக்கான வாசகர்களுக்கு பிரபலப்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. தேசம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளதாகச் சொல்லி வாசகர்களுக்கு அவர்களின் கடமைகளையும் பொறுப்புக்களை நினைவு படுத்தி அவர்களின் தேச பக்தியை உசுப்பேற்றி தியாக உணர்வை தூண்டுகிற கோஷம் அது. அன்றொரு நாள் எனக்கு மிகவும் விருப்பமான ஒரு ஆங்கில நாளிதழில் முக்கியமான செய்திகளை படித்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க நிகழ்வு, சோவியத் நிகழ்வு என்று தாவி இங்கிலாந்து பற்றிய செய்தியை படித்துக் கொண்டிருக்கையில் கொட்டை எழுத்தில் மிகுந்த முக்கியத்துவத்தோடு அன்று வெளியிடப்பட்ட “ சுமைகளை புன்னகையோடு பகிர்ந்து கொள்ளுங்கள்” என்ற கோஷத்தின் மீது என் கண்கள் நிலை கொண்டது.

சுமையை புன்னகையோடு பகிர்ந்து கொள்ள நான் இல்லையில்லை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோமா? நாம் நிஜமாகவே சுமையை பகிர்ந்து கொண்டிருக்கிறோமா? கட்டாய வைப்பு நிதிக்கு ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்ய எனது நிறுவனத்திற்கு அதிகாரம் அளிக்கும் படிவத்தை நேற்றுதான் பூர்த்தி செய்து கொடுத்தேன். இதன் மூலம் என் ஊதியத்திலிருந்து எனது குடும்பத்தின் செலவுகளுக்கான தொகையில் பெருமளவு தொகை வெட்டப் படுகிறது. என் சகாக்களைக் கேட்ட போது அவர்களும் அதையே செய்ததாகச் சொன்னார்கள். ஏற்கனவே பற்றாக்குறையில் தவிக்கும் குடும்ப பட்ஜெட்டில் மிகப் பெரிய நெருக்கடியை இது உருவாக்கியுள்ளது. குடும்பப் பொருளாதாரத்தில் எந்த செலவை வெட்ட முடியும்? கைக்குழந்தைகளுக்கு பால் கொடுக்காமல் இருக்க முடியுமா அல்லது குழந்தைகளின் கல்விக்கு செலவழிக்காமல் இருக்க முடியுமா? நிச்சயமாக இது சாத்தியமில்லை. கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. அதன் மூலம் எதிர்காலம் அடமானம் வைக்கப்படுகிறது.

கட்டாய வைப்பு நிதி மூலம் அறுபதிலிருந்து எழுபது கோடி ரூபாய் வரை அரசு வசூலிக்க முயல்கிறது. தேசத்தின் வருமானத்தில் பெரும் பகுதியை அபகரித்துள்ள அந்த கனவான்களிடமிருந்து அப்பணத்தை பெற முடியாதா? பொருட்களை பதுக்கி வைத்து லாபம் பார்க்கும் பேர்வழிகளிடமிருந்து பெற முடியாதா?

இந்தியாவில் நேரடி வரிகளை விட மறைமுக வரிகளே அதிகம். அன்றாட வாழ்வை நடத்த தேவைப்படும் பொருட்களை வாங்குவதனால் பெரும்பான்மை மக்களால் மறைமுக வரிகளிலிருந்து தப்ப முடிவதே இல்லை. ஆனால் நேரடி வரி செலுத்துபவர்களோ சலுகைகள் பெறுகிறார்கள், வழக்குகள் மூலம் சமரச உடன்பாடுகளை பெறுகிறார்கள். குறைத்து மதிப்பிட்டு தப்பிக்கிறார்கள்.

நூறு கோடி ரூபாய் வரை ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி செலுத்தாமல் இந்தியாவில் ஏய்க்கப்படுவதாக பேராசிரியர் கல்டோர் சொல்கிறார். நமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நாம் அழைத்த அந்த கற்றறிந்த பேராசிரியர் ஒவ்வொரு ஆண்டும் நூறு கோடி ரூபாய் அளவில் வருமான வரி ஏய்க்க்ப் படுவதாகச் சொல்லி நீண்ட காலமாகி விட்டது. அரசின் கஜானாவுக்கு வராமல் உள்ள பணம் ஒன்றும் குறைவான தொகை அல்ல. அரசு வசூலிக்க வேண்டிய வரி பாக்கி 137.90 கோடியை தள்ளுபடி செய்து விட்டதாக நிதியமைச்சகம் கூறி உள்ளது. வருமான வரி பாக்கியாக ரூபாய் 181 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டி உள்ளதாக கடந்தாண்டு நாடாளுமன்றத்திலேயே சொல்லப்பட்டது. இத்தொகை வேகமாக வசூலிக்கப்படுமானால்?

வருமான வரி பற்றிய புள்ளிவிபரங்களை ஆராய்கிற போது வருமான வரி செலுத்துவோரின் சராசரி வருமானம் 1953 ல் 10,940 என்று இருந்தது 1959 ல் ரூபாய்10,583 ஆக குறைந்துள்ளது. அதிகமான ஊதியம் வாங்குபவர்கள் மீது கவனத்தை குவிப்பதற்குப் பதிலாக குறைவான ஊதியம் உள்ளவர்களை வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வந்ததன் மூலம் இது நிகழ்ந்துள்ளது. இங்கே நாம் சுமையை பகிர்ந்து கொள்ளவில்லையா?

தங்கக் கட்டுப்பாட்டு சட்டத்திற்கு என்ன ஆனது? நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இந்நாட்டில் இருந்த போதிலும் கூட, அரசு சொல்லும் நல்ல எண்ணங்கள் இருந்த போதிலும் கூடுதல் கால அவகாசத்தை நீட்டித்த போதும் அரசால் எட்டு கோடி மதிப்பிலான தங்கத்தையே பெற முடிந்தது. ஒரு ஆய்வின் படி1955-56 ல் உள்ள இந்திய மக்கட்தொகையில் 25 % பேரின் மாத வருமானம் ரூபாய் பத்திற்கும் குறைவாக உள்ளதென்றும் இந்தியாவின் தேச வருமானத்தில் அவர்கள் பங்கு வெறும் 9 % மே. அதே சமயம் 0.3 % உள்ளவர்களோ தேச வருமானத்தில் 5.8%ஐ கைப்பற்றுகிறார்கள்.

இன்னொரு சமீபத்திய ஆய்வு 1960 ல் நகர்ப்புறங்களில் உள்ள 85 % குடும்பங்களின் ஆண்டு வருமானம் 3000 ரூபாயாக உள்ளது என்றும் தேச வருமானத்தில் அவர்களின் பங்கு 52 % என்றும் சொல்கிறது. இந்திய பொருளாதார முறையை ஆய்வு செய்ய மத்தியரசால் அமைக்கப்பட்ட மஹாலானோபிஸ் குழுவின் முதற்கட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வளவு சுமையை பகிர்ந்து கொண்டுள்ளனர்?

இதே மஹாலானோபிஸ் குழு இந்தியாவின் சொத்து மதிப்பு 1949-50 ல் 10,635 கோடி ரூபாய் என்றும் அவற்றில் 75 % தனியாரின் கைகளில் உள்ளதென்றும் சொல்லியுள்ளது. 25 % மதிப்பிலான சொத்துக்கள் நிறுவனங்களில் கைகளில் உள்ளது. தனியார் கைகளில் உள்ள சொத்துக்களில் 40 % வீடுகள் போன்று இருப்பதாகவும் அவ்வறிக்கை சொல்கிறது.

இவர்கள் எல்லாம் தங்களின் சக்திகளுக்கு ஏற்றார் போல சுமையை பகிர்ந்து கொள்கின்றனரா? கடந்த பத்தாண்டுகளில் செல்வத்தின் குவியலும் உற்பத்திச் சாதனங்களும் பெருமளவில் கொஞ்சம் கொஞ்சமாக சிலருடைய கைகளில் வந்தடைந்துள்ளது. தேசத்தின் பொருளாதாரத்திற்கே ஊறு விளைகிற வண்ணம் இந்த பொருந்தா நிகழ்வு அரங்கேறியுள்ளது. சமூகத்தின் பெரும் பகுதியினருக்கு வளர்ச்சியின் பலன் மறுக்கப்படும் நிலைக்கே இது இட்டுச் சென்றுள்ளது. இந்தியாவின் செல்வாக்கு படைத்த 1 % பேர்வழிகளின் கட்டுப்பாட்டில்தான் இந்தியாவின் செல்வத்தில் பெரும் பகுதி உள்ளது என்று அக்குழு நிறைவு செய்கிறது.

எந்த ஒரு நிறுவனத்தையோ, வணிகத்தையோ போதுமான இழப்பீடு தராமல் அரசு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இந்திய அரசியல் சாசனம் சொல்கிறது. அது போலவே இழப்பீடும் அளிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீடு தேசியமயமாக்கப் பட்டதனால் பழைய தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு 31.12.1961 வரை நான்கு கோடியே 76 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. சமீபத்தில் வங்கித் துறையை தேசியமயமாக்கியபோது பர்மா (தற்போதைய மியன்மார்) அரசாங்கம் பர்மாவில் செயல்பட்ட ஒவ்வொரு அன்னிய வங்கியும் தங்களின் க்யாட் மூலதனத்திற்கு 20க்யாட் லாபம் ( க்யாட் – பர்மா நாட்டு நாணயம். அன்று க்யாட்டின் மதிப்பு ரூபாய்) சம்பாதித்ததாக சொன்னது.

மறுக்க முடியாத ஏராளமான நியாயமான வாதங்களும் விரிவான கோரிக்கைகளும் இருந்த போதிலும் கூட இங்கே இன்னும் வங்கித்துறை தேசியமயமாக்கப்படவில்லை. பொதுக்காப்பீட்டுத்துறையை தேசியமயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஊழியர்களாலும் பொது மக்களாலும் முன்வைக்கப் பட்டபோதிலும் அது கண்டுகொள்ளப்படவில்லை. அங்கே மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. பிர்லாக்களால் நடத்தப்படும் ரூபி ஜெனரல் மற்றும் நியூ ஏசியாட்டிக் நிறுவனங்களின் கறுப்பான ஊழல் பக்கங்கள் வெளிச்சத்திற்கு வந்தது பெரும்பாலான பொதுக்காப்பீட்டுக் கம்பெனிகளின் அவல நிலையை உணர்த்துகிறது. இத்துறையை தேசியமயமாக்கினால் மட்டுமே அரசுக்கு 85 கோடி ரூபாய் கிடைக்கும். கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பிலும் பெரு முதலாளிகள் லாபத்தை சுருட்டிக் கொண்டே இருக்க, சாதாரண மனிதனின் துயரங்களோ அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

மார்ச் 1963 லிருந்து ஜூன் 1963 க்கிடையிலான காலகட்டத்தில் மட்டும் விலைவாசிக் குறியீட்டு எண் 8.8 %  உயர்ந்துள்ளதாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மத்திய தொழிலாளர் அமைச்சர் கூறுகிறார். அதிலே 7 % வரை உணவுப் பொருட்களால் உருவானது. உணவு தானிய வணிகம் என்பது இந்தியப் பொருளாதாரத்தில் நிரந்தரமாகவே ஊழலாகவே மாறி விட்டது. உணவுப் பொருட்களை அரசு ஏன் கொள்முதல் செய்து ஏழை விவசாயிகளையும் மக்களையும் பேராசை பிடித்த பதுக்கல்காரர்களிடமிருந்து பாதுகாக்கக் கூடாது? நம்முடைய ஒரே விடி வெள்ளியாக இருக்கிற ஏற்றுமதிகளில் நடைபெறுகிற ஏராளமான முறைகேடுகளை தடுக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

விலைகளை நிர்ணயிப்பதில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் ஏகபோக முதலாளிகள் கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். இந்தியா மிகப் பெரிய ஏழை நாடுகளில் ஒன்றாக இருந்தாலும் விலைகள் மட்டும் உலகிலேயே மிகவும் அதிகமாக இருக்கும் நாடாக இருக்கிறது என்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுசீலா நய்யார் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அவசர நிலைக் காலத்திலும் கூட சர்க்கரை ஆலை அதிபர்கள் சந்தையில் கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை தடுக்க அரசால் முடியவில்லை. எப்போதுமே தொழிலாளர்களுக்கு எதிரான கல்கத்தாவின் ‘ஸ்டேட்ஸ்மேன்” பத்திரிக்கை, கடந்த இருபதாண்டுகளில் அரிசியின் விலை இவ்வளவு மோசமாக இருந்ததில்லை எனச் சொல்கிறது. அன்னியப் படையெடுப்பின் காரணமாக நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து நினைவூட்டப் படுகிறோம். தேசத்திற்காக தியாகம் செய்ய நாம் தயாராக உள்ளோம். தேசப் பாதுகாப்பு நிதிக்கு 50 கோடி ரூபாய் நாம்தான் அளித்தோம் என்பது உலகிற்கே தெரியும்.

தேசத்தின் பாதுகாப்பிற்கு சமூக நீதி அத்தியாவசியமானது என்று பிரதமர் மிகவும் சரியாகவே சொன்னார். ஆனால் எங்கே இருக்கிறது சமூக நீதி? பொருட்களின் விலைகளை உயர்த்திக் கொண்டே போவதன் மூலம் முதலாளிகளும் பதுக்கல் பேர்வழிகளும் நமது ரத்தத்தை உறிஞ்சி நம்மை எதுவுமே இல்லாதவர்களாக மாற்றுகிறார்கள். பழமொழியில் சொல்வதைப் போல ஒட்டகத்தின் முதுகை ஒடிக்கும் கடைசி சுமையாக கட்டாய வைப்பு நிதி வந்து சேர்ந்துள்ளது.

உண்மையான பகிர்தலாக இருக்கும் பட்சத்தில்  நாடு இன்றிருக்கும் சூழலில் சுமையை பகிர்ந்து கொள்வதில் யாருக்குமே எதிர்ப்பு இருக்க முடியாது.  பதட்டமான நிலைமைகள் நிலவிய கடந்தாண்டு நவம்பர், டிசம்பரில் ஒரு பிச்சைக்காரர் தன்னுடைய ஒரு நாளைய ஒட்டு மொத்த வருமானத்தையும் தேசப் பாதுகாப்பு நிதிக்கு அளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அத்தொகை எவ்வளவு இருக்கும்? எழுபது பைசாவோ, எண்பது பைசாவோ இருக்கலாம். பொருளாதார அடிப்படையில் பார்க்காவிட்டால் அதுதான் ஒரு மனிதன் தேசத்திற்காக தியாகம் செய்யக்கூடிய, சுமையை பகிர்ந்து கொள்ளக் கூடிய அதிகபட்ச அளவாக இருக்க முடியும். 

இந்தியாவின் பெரும் வணிக நிறுவனங்கள் தங்களது சக்திக்கு ஏற்றார்போல சுமைகளை பகிர்ந்து கொள்கின்றனரா? பிரம்மாண்டமான வருமான வரி பாக்கியை தள்ளுபடி செய்திடுமாறு அரசை தூண்டுகின்றனர். ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் நூறு கோடி ரூபாய் அளவிற்காவது வருமான வரி கட்டாமல் ஏய்க்கிறார்கள். ஆனால் இந்த அரசோ தொழிலாளர்கள், மத்தியதர ஊழியர்கள், ஏழை, நடுத்தர விவசாயிகள், சிறு வணிகர்கள் ஆகியோரிடமிருந்து அற்பதிலிருந்து எழுபது கோடி ரூபாய் வரை கட்டாய வைப்பு நிதியாக வசூலிக்கிறது.

“சுமையை பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று சொல்வதற்குப் பதிலாக நாளிதழ்கள் “சுமையை புன்னகையோடு சுமந்து செல்லுங்கள்” என்று கோஷத்தை மாற்றி விடலாம்.

ஆனால் நம்மால் மட்டும் சுமக்கக் கூடியதா இது? வலுவற்ற, நொறுங்கக் கூடிய நமது தோள்களால் பாரம் அதிகமுள்ள இச்சுமையை தாங்க முடியுமா?

LG - இதான்யா கடமை உணர்ச்சி !!!!!!

புதுடெல்லி துணை நிலை ஆட்டுத் தாடி (Lieutenant Governor) க்கு எதிராக அவரது அலுவலகத்தில்  முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நடத்தும் உள்ளிருப்புப் போராட்டத்துக்கு அஞ்சி ஆட்டுத்தாடி அலுவலகம் செல்வதில்லை.அதை நக்கலடித்து ஒருவர் எல்.ஜி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில்  துணை நிலை ஆளுனர் அலுவலகத்தில் கேஜ்ரிவால் இருக்கும் படத்தோடு "உங்களுக்கு டெல்லியில் சேவை மையம் உள்ளதா? அங்கே எல்.ஜி  தானும் வேலை செய்வதில்லை, மற்றவர்களையும் செய்ய அனுமதிப்பதில்லை"

என்று பதிவிட

அந்நிறுவனமோ மிகவும் பொறுப்பாக

"உங்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகர்யத்துக்கு மிகவும் வருந்துகிறோம். உங்களது தொடர்பு எண், முகவரியோடு என்ன பிரச்சினை என்பதையும் தெரிவித்தால்  உடனடியாக அதை சரி செய்ய முயற்சிப்போம்"

என்று பதிலளித்துள்ளது. 

வாடிக்கையாளர் சேவை என்றால் இப்படித்தான் பொறுப்பாக இருக்க வேண்டும்.

என்ன கடமையுணர்ச்சி !!!!!

Saturday, June 16, 2018

சபாநாயகராக இருப்பினும் அவரும் . . .மாண்புமிகு என்ற வார்த்தைகள் எப்போதோ அர்த்தம் இழந்து விட்டது. மரபுகள் என்று சொல்லப்படுபவையெல்லாம் காணாமல் போய் விட்டது.

தமிழக சட்ட மன்றத்தைத்தான் சொல்கிறேன்.

"இருட்டு அறையில் . . ." என்று ஒரு படம் வந்ததாமே. மிகவும் கேவலமான படம் என்று பலரும் விமர்சித்திருந்தார்கள்.

தமிழக சட்டமன்றத்தைப் பார்த்துத்தான் இரட்டை அர்த்தமும் ஆபாசக் காட்சிகளையும் எடுத்தோம் என்று நாளை எந்த இயக்குனராவது சொல்வாரோ என்று அச்சமாக உள்ளது.

ஒரு பெண் உறுப்பினர் இழிவு செய்யப்படுகிறார். இரட்டை அர்த்தத்தோடும் ஆபாச சைகையோடும் அதைச் செய்பவர் சட்டமன்றத்தின் மாண்பை பாதுகாக்க வேண்டிய சபாநாயகர். ஆளும் கட்சி உறுப்பினர்கள் அதைப் பார்த்து சிரிக்கிறார்கள்.  சட்டசபையில் ஆபாசப்படம் பார்த்த கட்சியின் அடிமைகள் அல்லவா? 

எதிர்க்கட்சி உறுப்பினர்களோ சிறிய அளவில் கூட கண்டிக்காமல் கௌரவ சபையில் வீற்றிருந்த பெரியோர் போல மௌனம் காக்கிறார்கள்.

சபாநாயகராக இருப்பினும் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் என்று யாராக இருந்தாலும்

தாங்கள் அடிப்படையில் 

ஆண்கள்,
ஆணாதிக்க சிந்தனை உடையவர்கள்

என்பதை நிரூபித்துள்ளனர்.

ம்ம்ம்ம்.

ஒரே ஒரு இடதுசாரி உறுப்பினர் உள்ளே இருந்திருந்தால் இப்படி ஒரு அவலம் நிகழ்ந்திருக்குமா? 

அன்று திரௌபதியின் அவலக்குரல் கேட்டு ஆடை கொடுத்த கண்ணன் கூட இடதுசாரி உறுப்பினர்கள் இல்லாத அவைக்கு வர அஞ்சிடுவான் அல்லவா?


மீம்ஸுக்கு கூட்டாளி தேடும் மோடி?

தான் அசிங்கப்படுவது போதாது என்று கர்னாடக முதல்வர் குமாரசாமியும் மீம்ஸுகளால் அசிங்கப்பட அவருக்கு சவால் விடுத்துள்ளார் மோடி.

அந்த வலையில் அவர் சிக்காமல் இருப்பாராக . . .

ஆமாம். மோடி எப்பதான் பிரதமர் வேலையை பாக்கப் போறாரு?


Friday, June 15, 2018

கஸ்தூரி அம்மையாரெல்லாம் சமூக ஆர்வலராம் . . .

சமூக ஆர்வலர் என்று ஊடகங்களால் அழைக்கப்படுகிற கஸ்தூரி அவர்களின் சமூக சிந்தனை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு அவர் ட்விட்டரில் போட்டுள்ள பதிவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மாற்றுப் பாலினத்தவர் என்றும் திருநங்கை, திருநம்பி என்றும் அழைக்கப்படுகிற இந்த காலகட்டத்தில் அவர்களின் சமூக நிலைமை மேம்பட வேண்டும் என்ற உணர்வு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக் கொண்டிருக்கிற சூழலில் இப்படி அவர்களை பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது. கேவலமானது.

இதனை காமெடியாக வேறு எடுத்துக் கொள்ள வேண்டுமாம். 

தீண்டாமை வன் கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிக்கு எதிராக தலித் அமைப்புக்கள் நடத்திய பேரணியின் போதும் இப்படித்தான் வக்கிரத்தைக் கக்கினார். 

இப்படிப்பட்ட புத்தி உடையவர்கள் சமூக ஆர்வலர்கள் என்று அழைக்கப்படுவது எவ்வளவு கொடுமையானது !!!!!!

மோடி வீடியோக்களைப் பார்த்தும் சிரிச்சுடுங்க . . .நேற்றைய மோடி பாடி பில்டிங் மீம்ஸின் தொடர்ச்சியாக வெளி வந்துள்ள இரண்டு வீடியோக்களைப் பார்த்தும் சிரித்து விடுங்கள்.

56 இஞ்ச் மார்பர் காமெடி பீஸாக மாறுகிற பரிதாப மொமெண்ட் இது . . .

அதிலும் இரண்டாவது வீடியோவில் சவுண்ட் மிக்ஸிங் அற்புதம்
Thursday, June 14, 2018

தீர்ப்பின் பின்னே தெரிவது என்ன?பதினெட்டு எம்.எல்.ஏ க்களின் பதவி பறிப்பு வழக்கில் இரண்டு நீதிபதிகள் இரு வேறு தீர்ப்புக்கள் கொடுத்ததன் மூலம் பிரச்சினை இன்னும் கால தாமதமாகப் போகிறது என்பது ஒரு புறம் இருந்தாலும் தலைமை நீதிபதியின் தீர்ப்புதான் சர்ச்சை நிறைந்ததாக உள்ளது.

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ க்கள் விஷயத்தில் சபாநாயகருக்கு உரிமை கிடையாது என்று சொன்ன அதே வாயால்

தமிழக சபாநாயகரின் செயலை நியாயப்படுத்தியுள்ளார்.

இது முரண்பாடு என்று சட்ட ஞானம் உள்ளவர்கள் சொல்லலாம். 

ஆனால் இரண்டு தீர்ப்பும் ஒன்றுதான்.

இரண்டுமே பாஜக விற்கு சாதகமான தீர்ப்புதான்.

பாஜக ஆட்கள் ஜனநாயக விரோதமாக நியமனம் செய்ததை ஏற்றுள்ளார்.

பாஜகவின் அடிமை ஆட்சிக்கு எதிரான எம்.எல்.ஏ க்கள் நீக்கப்பட்டதை ஏற்று எடுபிடி ஆட்சி தொடர்வதையும் உறுதி செய்துள்ளார்.

இது சட்டத்தின் தீர்ப்பா?
அரசியல் தீர்ப்பா?

இதன் பின்னணியில் எதிர்கால எதிர்பார்ப்புக்கள் இருக்கிறதா?

அமித் ஷாவை விடுதலை செய்த கையோடு கேரளாவின் ஆளுனராக பொறுப்பேற்றுக் கொண்ட கொடுமையை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா என்ன?


போட்டோஷாப் போதுமா மோடி? அல்டிமேட் காமெடி

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் முடிவு என்பது போல,

போட்டோஷாப் மூலமாக இந்திய மக்களை ஏமாற்றி வந்த மோடி கூட்டத்தாரையே நிலை குலைய வைத்து விட்டார்கள் மீம் க்ரியேட்டர்ஸ்.

என்ன இருந்தாலும் பிரதமரில்லையா என்று ஓலமிடும் சங்கிகளுக்கு ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.

மீம் கிரியேட்டர்ஸாவது மோடியின் விளம்பர மோகத்தை கிண்டல் அடிக்கிறார்கள். ஆனால் வாய் கூசாமல் நேரு பற்றி மோடி தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டிருந்தாரே,  என்ன இருந்தாலும் நேருவும் பிரதமராக இருந்தவராயிற்றே, அதுவும் செத்துப் போன மனுசனைப் பற்றி இப்படி அபாண்டமாக கட்டுக்கதையை பரப்பலமா என்று மோடியை கண்டித்தது உண்டா?

இல்லையென்றால் வாயை மூடிக்கொண்டு செல்லவும்.

மக்களே, படங்களைப் பாருங்கள், வாய் விட்டு சிரியுங்கள்.

இதில் அல்டிமேட் காமெடி சசிகலா சத்தியம் செய்வதுதான். சின்னக்கவுண்டர் பம்பரம் விடுவதுதான்.

இந்த படங்களைப் பார்த்த பிறகாவது போட்டோஷாப் ஃப்ராடுத்தனத்தை பாஜக கை விட வேண்டும்Wednesday, June 13, 2018

நன்றி மறந்தவரா த.செ அம்மையார்?ஐம்பது நாளில்லை, நூறு நாள் ஆனாலும் சிப்பு சேகரை தமிழக காவல்துறை கைது செய்யப்போவதில்லை.

தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்யநாதன் அம்மையாரின் கொழுந்தனார் என்ற ஒரே காரணத்தால் கைது செய்யப்படவில்லை என்பதுதான் யதார்த்தம்.

இதில் இன்னொரு பக்கமும் உள்ளது.

எஸ்.வி.சேகர் மற்றும் பாஜக சிபாரிசு இல்லாமல் அந்த அம்மையாரால் வேறு சில அதிகாரிகளை பின்னுக்குத் தள்ளி தலைமைச்செயலாளர் பொறுப்பிற்கு வந்திருக்க முடியுமா?

தன்னை தலைமைச்செயலாளராக்கி அழகு பார்த்தவரையே கைது செய்யும் அளவிற்கு அவர்கள் என்ன நன்றி மறந்தவரா?

இல்லை

அவர் என்ன சினிமா அதிகாரியா?

நேர்மையோடு நடந்து கொள்ள  . . . .

சாமியார்களும் சாமானியர்களே - தற்கொலை உட்பட . .ம.பி முதல்வரால் அமைச்சர் அந்தஸ்து அளிக்கப்பட்ட "பாயு மஹராஜ்" என்ற சாமியார் நேற்று துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். எந்த ஒரு மரணமும் துயரமானதே.

தன் தற்கொலைக்கான காரணமாக "தாங்க முடியாத மன அழுத்தம்"  என்று தற்கொலைக் குறிப்பில் எழுதியுள்ளார். 

இன்று சாமியார்களை நாடிச் செல்கிற பலரும் அதற்கான காரணமாக முக்கியமாக சொல்லும் விஷயம்

"அந்த சாமியாரிடம் சென்றால் மன அழுத்தம் குறைகிறது. அவர் பேசுவதைக் கேட்டாலே போதும், மனம் தெளிவடைகிறது, etc, etc"

"ஆனால் சாமியார்கள் ஒன்றும் சர்வ சக்தி படைத்தவர்கள் அல்ல, அவர்களும் சாமானிய மனிதர்களே. மோடியைப் போல அவர்களும் நாவன்மை படைத்தவர்கள், அவ்வளவுதான்"

என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வு சாமியார்களிடம் இல்லை.  நீங்கள் நிதானமாக சிந்தித்தாலே அதன் காரணம் தெரியும். 

அரசியல், பொருளாதார, சமூகம் என்று பின்னணியில் இருப்பவற்றை அறிந்து கொண்டால் தீர்வு காணும் வழியும் கிடைக்கும்.

சாமியார்களும் சாமானிய மனிதர்களே என்பதை பாய்யு மஹராஜ் கற்றுக் கொடுத்துள்ளார்.

Tuesday, June 12, 2018

இந்த அசிங்கம் தேவையா மோடி?

வாட்ஸப்பில் வந்த படம் இது.ஒரு பிரதமருக்கு இப்படி ஒரு அசிங்கம் தேவையா என்ற கேள்வி வந்தது. 

ஆனால் அவர் பிரதமரானதே இப்படி ஊர்க்காசில் ஊதாரித்தனமாக உலகம்  சுற்றத்தானே என்று நினைக்கையில் தவறாகத் தெரியவில்லை.

இது மிகவும் கேவலம் எடப்பாடி . . .கோவையில் நடந்த புதிய தலைமுறை நிகழ்ச்சியில் அராஜகம் செய்ததும் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டதும் பாஜக ஆட்கள் மட்டுமே. தமிழிசையின் கண்ணசைவில்தான் அனைத்தும் நடந்தது.

தமிழிசை மீதும் ரௌடித்தனம் செய்த பாஜக ஆட்கள் மீதும் வழக்கு பதிவதற்குப் பதிலாக  புதிய தலைமுறை மீதும் அமீர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது மிகவும் கேவலமானது. அதை நியாயப்படுத்தி சட்டமன்றத்தில் பேசியுள்ளது அதை விட கேவலமானது.

அடிமைத்தனத்திற்கும் ஒரு அளவு உள்ளது எடப்பாடி.


Monday, June 11, 2018

காலா – ஒரு கேள்வி, ஒரு ஏமாற்றம்
நேற்றைய பதிவின் தொடர்ச்சி

காலா படத்தின் ஒரு காட்சியில் ரஜனிகாந்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து போய் பஞ்சாயத்து நடக்கும். அநே இருக்கும் அமைச்சர் கதாபாத்திரத்தில்  நடித்த சாயாஜி ஷிண்டேவைப் பார்த்து போதையில் உள்ள ரஜனிகாந்த் “யாரு இவரு?” என்று மீண்டும் மீண்டும் கேட்டு வெறுப்பேற்றுவார். தூத்துக்குடி மருத்துவமனையில் மாணவன் சந்தோஷ்குமார் “யார் நீங்க?” என்று  கேட்ட போது இக்காட்சி உங்களுக்கு நினைவில் வந்ததா ரஜனிகாந்த் சார்? அக்காட்சியை பார்க்கும் போது தூத்துக்குடி சம்பவம் எனக்கு நினைவு வந்தது என்னமோ உண்மை.

“வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன். தில்லிருந்தா மொத்தமா வாங்கடா?”

என்று ட்ரெய்லரில் மீண்டும் மீண்டும் காண்பித்ததால்  பாட்சா படத்தில் மாணிக்கம் பாட்சாவாக மாறுகிற ஆக்ரோஷமான சண்டைக் காட்சி போல ஒரு ஆக்ரோஷமான சண்டையை எதிர்பார்த்தேன்.  பாட்சா படத்தின் அந்த காட்சியும் சண்டையும் மிகவும் பிடிக்கும். ஆனால் ஒத்தையில் நின்ன  நீங்க சண்டை போட துவங்கும் முன்னே உங்க ஆளுங்க வந்து சண்டை போட்டு உங்களுக்கு லைட்டா கூட கையை உயர்த்த வாய்பில்லாமல் செஞ்சுட்டாங்களே!

இக்காட்சி உருவாக்கியிருந்த பில்ட் அப் ஏமாற்றத்தைத்தான் அளித்தது.

நேற்றைய பதிவில் குறிப்பிடாத ஒரு நல்ல காட்சி.

காவல்துறையால் ஆடை அவிழ்க்கப்படும் பெண், ஆடையை எடுக்காமல் அருகில் உள்ள தடியை எடுத்து போலீஸை அடிக்கும் காட்சி சூப்பரான ஒன்று. 

பாவம் யேசுநாதரை விட்டுவிடுங்கள்


உத்தர்கண்டில் பெரும் வெள்ளம் வந்து உயிர் நாசம் ஏற்படும் என்று யேசுநாதர் தன்னிடம் கூறியதாக முன்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் பிதற்றினார்.

மோடி மீண்டும் பிரதமராவார் ஈன்று யேசுநாதர் தன்னிடம் கூறி உள்ளதாக பிரச்சாரகரும் காருண்யா கல்விக் கொள்ளையருமான பால் தினகரன் இப்போது உளறியுள்ளார்.

அவரது உளறலுக்கான கீழே காரணம் கீழேமோடி மீண்டும் பிரதமரானால் உங்கள் கொள்ளை தொடரும் என்ற பேராசை நன்றாக தெரிகிறது.

அதற்கு ஏனய்யா தேவையில்லாமல் யேசு நாதரை இழுக்கிறீர்கள்?

சிவபெருமான் கனவில் வந்து சொன்னதால் நித்திக்கு பட்டம் சூட்டியதாகச் சொன்ன மதுரை ஆதீனத்தின் கதி நினைவில் உள்ளதா?


Sunday, June 10, 2018

தின மலர் பார்க்க வைத்த "காலா"
ரஜனியின் தூத்துக்குடி விஜயத்திற்குப் பிறகு "காலா" படத்திற்கு செல்ல வேண்டாம் என்று எடுத்திருந்த முடிவை மாற்றியது தினமலர் வெளியிட்ட தலைப்புச் செய்திதான்.

வேலூரில் புதிதாக திறந்துள்ள பி.வி.ஆர் சினிமாஸ் அரங்கில்தான் "காலா" பார்க்கச் சென்றோம். விமான நிலைய செக்யூரிட்டி செக் எல்லாம் செய்தார்கள். ஸ்னாக்ஸ் எடுத்துச் செல்லக்கூடாதாம். அங்கே கொள்ளை விலை வைத்துள்ள பொருட்களை வாங்க வைப்பதற்கான ஏற்பாடு.

"நிலம் எப்படி ஆதிக்கக்காரர்களிடம் சிக்கிக் கொள்கிறது" என்ற அரசியல் வகுப்பு முதல் ஒரு நிமிடத்தில் வேகம் வேகமாக சொல்லி முடித்து விடுகிறார்கள், யாரும் நிதானமாக கவனித்து மனதில் வாங்கிக் கொள்வதற்கு முன்பே.

நிலத்தினை அரசோ, முதலாளிகளோ கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம் என்ற போராட்டம்தான் படத்தின் துவக்கத்திலிருந்து கடைசி வரை. அமைதியான போராட்டத்தை சீர்குலைக்க அரசும் முதலாளிகளும் எப்படி சமூக விரோதிகளை அனுப்புகிறார்கள் என்ற சதியும் காண்பிக்கப்படுகிறது.

மும்பை நகரெங்கும் காணும்  நானே படேகர் புகைப்படங்கள் அடங்கிய "தூய்மை மும்பை" பேனர்கள், மோடியின் ஸ்வச்ச பாரத்தை நினைவு படுத்தினால் நீங்களும் இந்திய அரசியலை அறிந்தவரே.

வெள்ளையையும் தூய்மையையும் அடையாளப்படுத்துகிற ஒருவர் மனதில் இருப்பதெல்லாம் அழுக்கும் ஆதிக்க வெறியும்தான் என்று சொல்கிற படம் தினமலருக்கு எரிச்சல் தருவது இயல்பானதுதான்.

புதிதான கதையோ, காட்சியமைப்புக்களோ கிடையாது. ரஜனியின் வயதைக் கணக்கில் கொண்டு அவருக்கான காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர்.

படத்தை தாங்கும் மூன்று தொழில் நுட்பத் தூண்கள்

ஒளிப்பதிவாளர்,
இசையமைப்பாளர்,
கலை இயக்குனர்.

முதல் பாதியில் ஈஸ்வரி ராவும் இரண்டாவது பாதியில் நானே படேகரும் படத்தைத் தாங்குகிறார்கள்.

தாராவி மக்களை அழிப்பதற்கு தாக்குதல்கள் நடக்கும் வேளையில் வில்லன் வகையறாக்கள் ராமாயண உபன்யாசம் கேட்டுக் கொண்டிருப்பது பொருத்தமான காட்சியமைப்பு.

"போராட்டம் என்பது தொடர்ச்சியானது. மக்களின் வாழ்வு போராட்டத்தில்தான் அடங்கியுள்ளது" 

என்ற செய்தியை சொல்வதாலும்

"கருப்பும் சிவப்பும் நீலமும் இணைய வேண்டியது இன்றைய அவசியம்"

என்பதை இறுதியில் வலியுறுத்தியுள்ளதாலும் "காலா" கவர்கிறது.

தூத்துக்குடி செல்வதற்கு முன்பாக ரஜனிகாந்த் ஒரு முறை இப்படத்தை பார்த்து விட்டுச் சென்றிருக்க வேண்டும். 

பி.கு

இத்திரைப்படம் பார்த்ததும் தோன்றிய  இரண்டு விஷயங்கள் பற்றி நாளைய பதிவில்

  

தமிழிசை தூண்டிய கோவைக் கலவரம் . . . .

கோவையில் நடக்கவிருந்த ஒரு கலவரம் தவிர்க்கப்பட்டு விட்டது. கருத்துக்களை எதிர் கொள்ள கையாலாகாத தமிழிசை அம்மையாரே ஒரு கலவரத்திற்கு தூண்டுகோலாக இருந்தார் என்பதை தீக்கதிர் நாளிதழில் இன்று வெளியான முழுமையான ரிப்போர்ட் அம்பலப்படுத்துகிறது.

காவிக்கூட்டத்தை இந்திய ஊடகங்கள் புறக்கணிப்பது அவற்றுக்கு நல்லது.

இப்போது ரிப்போர்டை படியுங்கள்


ஆம்... நாங்கள் உண்டியல் குலுக்கிகள்தான்!

கோயம்புத்தூர், ஜுன் 9- எம். கண்ணன்

கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பாக ‘வட்டமேசை விவாதம்’ நிகழ்ச்சி எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கில் வெள்ளியன்று மாலை 6மணியளவில் துவங்கியது. ‘‘தொடர் போராட்டங்கள் : அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல் காரணங்களுக்காகவா?’’ என்பதுதான் தலைப்பு. இதில் ‘‘போராட்டங்கள் நடப்பது அரசியல் காரணங்களுக்காகவே’’ என்று பேச பாஜக சார்பில் தமிழிசை சவுந்தர்ராஜன், அதிமுக சார்பில் செம்மலை, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஞானதேசிகன், இந்திய குடியரசு கட்சியின் சார்பாக செ.கு.தமிழரசன் ஆகியோர் ஒரு பக்கத்திலும், ‘‘தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவே’’ என்று வாதிடுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், கொங்கு நாடு இளைஞர் பேரவையின் உ.தனியரசு, இயக்குநரும், நடிகருமான அமீர் ஆகியோர் மறுதரப்பாகவும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை புதிய தலைமுறையின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் நெறிப்படுத்தினார்.முதலில் பேச அழைக்கப்பட்ட டி.கே.எஸ்.இளங்கோவன், ‘‘நாட்டின் விடுதலை துவங்கி எல்லாமே போராட்டத்தால்தான் பெறப்பட்டிருக்கிறது. நாட்டில் உள்ள மக்கள் நல்ல தண்ணீர் வேண்டும். நல்ல காற்று வேண்டும் எனக் கேட்டுப் போராடுவது குற்றமா..?’’ என்ற கேள்வியை முன்வைத்தும், பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டியும் பேசி முடித்தார்.

தமிழிசை பாய்ச்சல்

அதன் பின்னர் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜனை, கார்த்திகைச் செல்வன் பேச அழைத்தார்.அப்போது தமிழிசை, ‘‘தூத்துக்குடி போராட்டத்திற்கு சமூகவிரோதிகள்தான் காரணம்….. போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கின்றனர். 24 வருடமாக இந்த ஸ்டெர்லைட் ஆலை இருக்கத்தானே செய்தது. அப்போது போராடாதவர்கள் இப்போது ஏன் இப்படி போராடுகிறார்கள். இப்போது ஏன் வன்முறை வெடிக்கிறது...’’ என தமது வழக்கமான பல்லவியைப் பாடினார். பேசிக்கொண்டே வந்தவர், எதிரிலிருந்த கே.பாலகிருஷ்ணனை பார்த்தவுடன், ‘‘இந்த கம்யூனிஸ்ட்கள் இங்கே (தமிழகம்) கெயில் குழாய் திட்டத்தை எதிர்க்கின்றனர். ஆனால் இவர்கள் ஆளும் கேரளாவில் கெயில் திட்டத்தை ஆதரித்து வருகின்றனர். அவர்களது ஆட்சியின் சாதனையில் அதனைக் குறிப்பிட்டும் விளம்பரம் செய்கின்றனர். கம்யூனிஸ்ட்கள் போராட்டம் நடத்தியதால்தான் தொழிற்சாலைகள் எல்லாம் பூட்டப்பட்டிருக்கிறது” என மூச்சு விடாமல் பேசி முடித்தார்.

எந்த மண்ணில் நின்று கொண்டு பேசுகிறீர்கள் தெரியுமா?

அதன் பின்னர், நெறியாளர் கார்த்திகைச் செல்வன், கே.பாலகிருஷ்ணனை பேச அழைத்தார்.கே.பாலகிருஷ்ணன், பேசத் துவங்கினார்... 

‘‘இந்த கொங்கு மண் போராட்டத்தால் சிவந்த மண். திருப்பூர் குமரன் கையில் கொடியோடு போராடி வீழ்ந்தான்; ஸ்டேன்ஸ் மில் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடந்திருக்கிறது. போராடிய தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆலை முதலாளிகளை எதிர்த்த தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டங்கள் நடைபெற்ற மண் இந்த கோவை. விவசாயிகளைத் திரட்டிப் போராடிய நாராயணசாமி நாயுடு இந்த மண்ணைச் சேர்ந்தவர்தான். உழைப்பாளர்களைத் திரட்டிப் போராடிய எங்கள் தோழர் ரமணி உள்ளிட்ட பல்வேறு போராட்டத் தலைவர்கள் வாழ்ந்த மண் இந்தமண். அம்மையார் தமிழிசை எந்த மண்ணில் இருந்து போராட்டத்திற்கு எதிராக பேசுகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். (அரங்கம் அதிர கைதட்டல்)அழுத குழந்தைதான் பால் குடிக்கும்… போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும். குழந்தை கூட அழும் போதுதான் தாய் பால் கொடுக்கிறார். குழந்தை சும்மா இருக்கும் போது பால் கொடுப்பதில்லை. குழந்தை கூட அழுது போராடித்தான் உரிமையைப் பெறுகிறது. போராடுவது ஒவ்வொருவரின் உரிமை. (விசில் சப்தம் காதைப் பிளக்கிறது)தமிழ்நாட்டில் அதிகமான போராட்டங்கள் நடைபெறுகிறது என்பது உண்மையே. தமிழகம் முன்னைக்காட்டிலும் வேகமும், விழிப்புணர்வும் பெற்றுள்ளது. இன்று அரசின் கொள்கைகளால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதனால் மக்கள் தாங்களாகவே எதிர்த்துப் போராடுகின்றனர். சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டால் தவறு. திருடினால் தவறு. ஏன் என்று கேள்வி கேட்டு போராட முன்வருவதைப் பாராட்ட வேண்டும். அது, வாழ்த்த வேண்டிய நல்ல அம்சமாகும். அத்தகைய போராட்டத்தின் மீது ஏன் கோபம் கொள்கிறீர்கள்?

தமிழிசை அம்மையார் கேட்கிறார்... 24 வருடமாக இருந்தவர்கள் இப்போது ஏன் போராடுகிறார்கள், என்ன நியாயம் என்று கேட்கிறார்... தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து எத்தனை ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது; எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது அவருக்குத் தெரியுமா?இந்தியாவில் பிரிட்டிஷ்காரன் கூட 200 ஆண்டுகாலமாக நம்மை அடிமைப் படுத்தி வைத்திருந்தான், ஆனால் 1947 ல்தான் விடுதலை கிடைத்தது. அப்போது இவ்வளவு நாளாக அடிமையாக இருந்த இந்தியர்கள் இப்போது ஏன் போராடுகிறார்கள் என பிரிட்டிஷ்காரன் கேட்டால் எப்படி இருக்குமோ அதே போல்தான் இருக்கிறது தமிழிசையின் கருத்து…(அரங்கமே கைதட்டலால் அதிர்கிறது)

(தமிழிசை குறுக்கிட்டு பேசவிடாமல் செய்ய முயலுகிறார்)நான் சுதந்திரப் போராட்ட பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவள்…
கே.பாலகிருஷ்ணன் : கொஞ்சம் அமைதியாக இருங்கள்... பொறுமை வேண்டும்... என்னை பதில் சொல்ல அனுமதியுங்கள்...

(கார்த்திகைச் செல்வன் தலையிடுகிறார்...)

கே.பாலகிருஷ்ணன் : அடுத்து சொன்னாங்க… கம்யூனிஸ்ட்கள் கேரளாவில் கெயிலை ஆதரிக்கிறார்கள்; இங்கே எதிர்க்கிறார்கள் என்று! உண்மைதான். கேரளாவில் கெயில் பைப் லைன் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் விவசாயிகளின் வீட்டிற்குள் பைப்லைன் வருகிறது. விவசாய நிலத்தில் வருகிறது. அதனால்தான் எதிர்க்கிறோம். நாங்கள் கெயில் பைப் லைன் திட்டம் வேண்டாம் எனக் கூறவில்லை. விவசாயிகளின் விளைநிலத்தையும், வீட்டையும் அழித்து வேண்டாம் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.கெயில் நிறுவனம் ஏன் கேரளாவில் ஒரு நிலைப்பாடும், தமிழகத்தில் ஒரு நிலைப்பாடும் எடுக்க வேண்டும்? 

அதனை ஏன் பாஜக ஆதரிக்க வேண்டும்? தமிழகத்திலும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொண்டு சென்றால் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீடு கூட கொடுக்க வேண்டியதில்லையே; அது அரசின் நிலம்தானே, அதில் உங்களுக்கென்ன சிரமம்? இங்கே இரண்டு நிலை எடுப்பது கம்யூனிஸ்ட்களா? அல்லது பாஜகவா? (அரங்கத்தின் ஆரவாரம் அடங்க சிறிது நேரம் ஆகிறது)கம்யூனிஸ்ட்கள் போராடியதால்தான் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாக கூறுகிறார் தமிழிசை... நான் கேட்கிறேன்… சென்னையில் ஹூண்டாய், நோக்கியா நிறுவனங்களை மூடியது. நாங்கள் போராட்டம் நடத்தியதாலா? அரசின் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு கொள்ளை லாபம் ஈட்டியவுடன் ஓட்டம் பிடித்தன. நாட்டில் இதுவரை மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலைகள் எல்லாம் கம்யூனிஸ்ட்கள் போராடியதால்தான் மூடப்பட்டிருக்கிறதா?ஸ்டெர்லைட் ஆலையிடம் பாஜக பணத்தைப் பெற்றுக்கொண்டு, போராடிய மக்களுக்கு எதிராக, போராட்டத்தை கொச்சைப்படுத்திப் பேசுகிறது…

தமிழிசை : இதனை நான் கடுமையாக கண்டிக்கிறேன்… இதற்கு ஆதாரம் இருக்கிறதா? (நாற்காலியின் முனைக்கு வந்து கத்துகிறார்...)

கே.பாலகிருஷ்ணன் : தமிழிசை, கொஞ்சம் பொறுமையாக இருங்க… ஆதாரம் இருக்கிறது… சொல்கிறேன் கேளுங்கள்…
(தமிழிசை, பேசவிடாமல் மீண்டும் கத்தி ஏதோ சொல்கிறார்…)

கார்த்திகைச் செல்வன் : (தமிழிசையைப் பார்த்து) அமைதியாக இருங்கள் நீங்கள் மறுப்பு தெரிவிக்கலாம். அதற்கான எல்லா வாய்ப்பும் இருக்கிறது. அவரைப் பேச அனுமதியுங்கள் …

கே.பாலகிருஷ்ணன் : ஸ்டெர்லைட்டின் வேதாந்தா குழுமத்திடம் இந்தியாவிலேயே அதிகமாக நன்கொடை பெற்ற கட்சி பாஜக. அந்தப் பணத்தை பெற்றுக்கொண்டுதானே இன்று தூத்துக்குடியில் போராடிய மக்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள்… இங்கே யார் சமூக விரோதி?பாஜக வேதாந்தா குழுமத்திடம் இருந்து அதிக நன்கொடை பெற்றது குறித்த வழக்கு கூட நீதிமன்றத்தில் இருக்கிறது. பல்வேறு அமைப்புகள் வேதாந்தா குழுமத்திடம் எவ்வளவு நன்கொடை, யார் யார் வாங்கியிருக்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. அது பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது... 

(தமிழிசை மீண்டும் மீண்டும் குறுக்கிட்டு ஏதோ சொல்கிறார்…)

கே.பாலகிருஷ்ணன் : நான் சொல்கிறேன்... கார்ப்பரேட்டுகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த நன்கொடையும் பெற்றதில்லை... தமிழிசை, பாஜக எந்த நன்கொடையும் பெறவில்லை என்று கூற முடியுமா? ஏன், எங்கள் கட்சி பத்திரிகைக்கு வேதாந்தா குழுமம் விளம்பரம் தந்த போது அதனை பிரசுரிக்க முடியாது என மறுத்த இயக்கம் நாங்கள்... வேதாந்தா விளம்பரத்தை வெளியிடாத ஒரே பத்திரிகை எங்கள் பத்திரிகை தீக்கதிர்…!

தமிழிசை : உண்டியல் குலுக்கிகள்… வெளிநாட்டில் இருந்து பணம்… (கத்தத்துவங்கினார்) (உடனே கே.பாலகிருஷ்ணன் பேச்சுக்கு ஆதரவாக அரங்கமே ஆர்ப்பரித்து தமிழிசைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்...)

கே.பாலகிருஷ்ணன் தொடர்ந்தார்:

அம்மையார் தமிழிசை கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்… நான் அதற்கும் பதில் சொல்கிறேன்...ஆம், நாங்கள் உண்டியல் குலுக்கிகள்தான்… எங்கள் முழுநேர ஊழியர்களின் அலவன்சுக்கு கூட உண்டியல் குலுக்கி அந்தக் காசைத்தான் தருகிறோம்... அதனை மக்களிடம் சென்று உண்டியல் ஏந்தி நேர்மையாக கேட்கிறோம்... அதில் எங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை. அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்…!ஆனால், பாஜக போன்று ஸ்டெர்லைட், அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளிடமும், பெருமுதலாளிகளிடமும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்காக வாலாட்டிக் கொண்டு திரிய மாட்டோம்… (அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது)இன்றைக்கு மூடும் ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் 99 நாள் போராடிய போது மூடியிருந்தால் இந்த 13 பேர் உயிரிழப்பே ஏற்பட்டிருக்காது. எனவே இந்த உயிரிழப்பிற்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம்… போராட்டத்தில் வன்முறை என்கிறார்கள். யார் வன்முறை செய்கிறார்கள்? வரலாறு முழுவதுமே அமைதியாகப் போராடிய மக்களின் மீது அதிகாரமும், ஆட்சியாளர்களும், காவல்துறையும்தான் வன்முறைத் தாக்குதல்களைத் தொடுத்து, உயிர்களை எடுக்கின்றனர். இது தொடர்கதையாக நடந்துவருகிறது. மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்காகத்தான் போராடுகின்றனர். வன்முறையில் ஈடுபடும் நோக்கத்தோடு அல்ல. ஆனால் அவர்களின் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவது இன்று நேற்றல்ல, 

வரலாறு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.கீழ் வெண்மணியில் அரைப்படி நெல்லைக் கூலி கேட்டுப் போராடியபோது, 44 பேர் தீயிட்டுக் கொளுத்தப்பட்டார்கள். இந்தக் கொடுமையை செய்தது ஆண்டைகள், நிலப்பிரபுக்கள். மக்கள் சிறு வன்முறையில் கூட ஈடுபட்டதில்லை.இந்திய வரலாற்றிலேயே போராடும் மக்களின் மீது காவல்துறையை ஏவ மாட்டேன் என்று அறிவித்தது மேற்குவங்க முன்னாள் முதல்வர் தோழர் ஜோதிபாசுதான். அதுபற்றி தொழிற்சங்க தலைவர் முகமது அமீன் கூறியபோது, “மக்களின் ஒன்றுபட்ட கோரிக்கைகளுக்கும், அமைதிவழிப் போராட்டங்களுக்கும் அரசு ஆதரவாக இருக்கும் என நின்றது ஜோதிபாசுவின் அரசு” என்கிறார்.போராடும் மனிதன்தான் முழுமையான மனிதன்.. போராடாத மனிதன் அரைகுறை மனிதன். திசைகள் அதிர நிறைவு செய்தார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்.

தவித்துப் போன செம்மலை

அதன் பின்னர் நெறியாளர் கார்த்திகைச் செல்வன் அதிமுக சார்பில் செம்மலையை பேச அழைத்தார்.ஆனால் செம்மலை, நேரடியாக பேச முடியாமல் சிகாகோ வரை சென்று பார்த்தார். அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் பொறுமை இழந்து, பேசியது போதும் முடியுங்கள் என குரல் கொடுத்தனர். அப்படியே கேரளாவிற்குத் தாவிய செம்மலை, கேரளாவிலும் விவசாய நிலத்தில்தான் கெயில் பைப் லைன் பதித்திருப்பதாக செய்தித்தாளில் பார்த்தேன். அங்கு மக்களைத் தூண்டி விட ஆள் இல்லை. அதனால் போராட்டம் நடப்பதில்லை என்று கூறி மீண்டும் எங்கெங்கோ சென்றார்.

அடுத்ததாக அதே அணியில் இருந்த தமாகா ஞானதேசிகனைப் பேச அழைத்தார்.எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, காமராஜர் என எல்லா ஆட்சியிலும் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது எனக் கூறி 13 பேர் படுகொலையையும் நியாயப்படுத்த ஞானதேசிகன் முயன்றார். மேலும் காவல்துறையில் இருப்பவர்கள் எல்லாம் சமூக விரோதியா என ஜல்லிக் கட்டு சம்பவத்தையொட்டி ஆட்டோவிற்கு தீ வைத்த போலீசையும் புனிதராக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்கு அரங்கத்தில் இருந்தவர்களின் எதிர்ப்பு கடுமையாக இருந்தது.அதன் பின்னர் நெறியாளர் கார்த்திகைச் செல்வன், தனியரசைப் பேச அழைத்தார். “போராட்டம் இல்லாமல் எதுவுமில்லை. பாதிக்கப்படும் மக்கள் போராடத்தான் செய்வார்கள்.. ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாவிட்டால் கண்டுகொள்ளும்படி போராடத்தான் செய்வார்கள். புரட்சி வெடிக்கத்தான் செய்யும். உண்மையான சமூக விரோதிகள் யார் தெரியுமா… ஊர்வலமாகச் சென்று சட்டத்தை மதிக்காமல் பாபர் மசூதியை இடித்தார்களே அவர்கள்தான்” என்றார் தனியரசு.(அப்போது குறுக்கிட்ட தமிழிசை, அதனை வன்மையாகக் கண்டிப்பதாக கூறி ஏதோ பேச முயன்றார். அதற்கு பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்.

‘அமீர் பேசக்கூடாது’

அதன் பின்னர் இயக்குநரும், நடிகருமான அமீரை பேச அழைத்தார் கார்த்திகைச் செல்வன்.

அமீர்: கருவறையில் இருக்கும் குழந்தை கூட போராடித்தான் வெளியே வருகிறது. மக்கள் அமைதியாக இருக்கத்தான் விரும்புகிறார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் விடுவதில்லை. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை.(உடனே தமிழிசையும், பார்வையாளர்கள் பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்த பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். அமீர் கூறியதில் பாஜகவினருக்கு என்ன பிரச்சனை என்று பார்வையாளர்கள் குழப்பமடைந்தனர். அடுத்து அமீர் பேச முயன்ற போது பாஜகவினர் கூச்சல் போட ஆரம்பித்தனர்.)

கார்த்திகைச் செல்வன் : (பாஜகவினரைப் பார்த்து) அமீர் பேசட்டும்... அதற்கு அனுமதியுங்கள்... அதற்கு பதில் தர தமிழிசை இருக்கிறார். அவரும் பேசுவார்.

அமீர் : கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட போது, கடைகள் சூறையாடப்பட்டன. போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. அப்போது போலீசின் துப்பாக்கி எங்கே போனது?(அமீர் பேசி முடிக்கும் முன் அரங்கின் பல்வேறு பகுதியில் அமர வைக்கப்பட்டிருந்த பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட காவிக் கும்பல்களைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் மேடையை நோக்கி ஓடினர். எங்களைப் பற்றி அமீர் பேசக்கூடாது; உடனே வேளியேற வேண்டும் எனப் பாய்ந்தனர். அங்கிருந்த காவல்துறை மற்றும் புதிய தலைமுறை பணியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.)

உங்கள் தரப்பு மாற்றுக் கருத்தைக் கூற அரங்கத்தில் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் இருக்கிறார்கள்; பொறுமையாக இருங்கள் என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார் நெறியாளர். ஆனால் சங்பரிவார் கூட்டம் கருமமே கண்ணாக எப்படியாவது நிகழ்ச்சியை நடத்த விடக்கூடாது என்ற அடிப்படையில் தொடர் ரகளையில் ஈடுபட்டனர்.இந்த களேபரத்தில் அரங்கத்தின் முன் பகுதியில் இருந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், காவிக் கும்பல் முன்பகுதிக்கு வந்தவுடனேயே பெண்கள் மற்றும் பொதுமக்கள் இடத்தை காலி செய்து வெளியேறினர்

.ஒரு கட்டத்தில் கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்தவர்கள் முன் பகுதிக்கு வந்து பாஜகவினருக்கு எதிராக ரகளையில் இறங்க, மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. உடனே தனியரசு வந்து தனது தொண்டர்களை பெயரைச் சொல்லி அழைத்து அமைதி காக்க வேண்டினார். அதனை தொடர்ந்து முன்பகுதி அமைதியாக இருந்தது.இதற்கிடையில் பின் பகுதியில் இருந்த பொதுமக்கள் சங் பரிவாரின் அராஜகத்தை கண்டித்தவாறே அரங்கத்தை விட்டு வெளியேறினர்.

போலீஸ் நிர்ப்பந்தம்

இதற்கிடையில் மேடைக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள், கார்த்திகைச் செல்வனை தனியே அழைத்து உடனே நிகழ்ச்சியை முடியுங்கள், கலவரம் ஏற்பட்டு விடும், அனுமதிக்க முடியாது எனக் கூறினர். மேலும் காவல்துறை அதிகாரிகள் அமீர் பேசக்கூடாது என்றும் கூறினர்.

அதனைத் தொடர்ந்து கார்த்திகைச் செல்வன் செ.கு.தமிழரசனை பேசுமாறு கூறினார். அப்போது பின் பகுதியில் இருந்து, இது அநியாயம்.. அமீரை பேசச்சொல்லுங்கள் எனக் குரல் வந்தது. ஆனால் செ.கு.தமிழரசன் பேசிக்கொண்டிருந்தார்.மேடையில் இருந்த கே.பாலகிருஷ்ணன், நெறியாளரைப் பார்த்து, ‘‘அமீர்தானே பேசிக்கொண்டிருந்தார். அவர் முழுமையாக ஒரு நிமிடம் கூட பேசவில்லை. பாஜக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பதற்காக அமீரை பேச அனுமதிக்க மறுப்பது எப்படி சரியாக இருக்கும்? இது நியாயமே இல்லை. அமீரை பேச அழையுங்கள்’’ எனக் கூறினார். அமீர் பக்கம் திரும்பி அமீர் நீங்கள் பேசுங்கள், பார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறினார்.பின்னர் அமீர், ‘‘யார் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை. நான் அப்படி பேசவும் இல்லை. ஒரு சம்பவத்தைதான் குறிப்பிட முயன்றேன். ஓர் உயிர் போனது குறித்து பேசுவதற்கே நீங்கள் இப்படி ஆவேசமாக என்னை பேசக்கூடாது என்று போராடுகிறீர்களே; அப்படி என்றால் 13 உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறதே! அதற்கு போராடாமல் இருக்க முடியுமா? போராடுவோம்; போராட்டம் தொடரும்’’ என்று பேசினார்.

உடனே மேடையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் நேரடியாக அமீரிடம், “பேசியது போதும் நிறுத்துங்கள்” என வந்தார். அப்போது, கே.பாலகிருஷ்ணன் தலையிட்டு, போலீஸ் அதிகாரியைப் பார்த்து ‘நீங்கள் ஏன் அமீரை நிறுத்தச் சொல்கிறீர்கள். ரகளையில் ஈடுபடும் அவர்களை வெளியேற்றுங்கள்’ எனச் சொன்னார்.அடுத்து மீண்டும் செ.கு.தமிழரசனை கார்த்திகைச் செல்வன் பேச அழைத்தார்.பாஜகவுக்கு ஆதரவாகப் பேச வந்திருந்த செ.கு.தமிழரசன், நடந்த நிகழ்வுகளையும், பாஜக – அதிமுகவிற்கு எதிரான ஒட்டுமொத்த பார்வையாளர்களின் எதிர்ப்பையும் உள்வாங்கிய நிலையில், தனது பேச்சை துவங்கினார். 

மக்கள் அடிப்படை உரிமைக்காகவே அன்றாடம் போராட்டம் நடத்துகிறார்கள் எனத் துவங்கி போராட்டத்திற்கு ஆதரவாக பேசினார். அப்போது இருளடித்தது மாதிரி தமிழிசை வைத்த கண் மாறாமல் செ.கு.தமிழரசனை பார்த்துக் கொண்டே இருந்தார்.

போலீஸ் குவிப்பு

இதற்கிடையில் கோவையின் பல்வேறு பகுதியில் இருந்த காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அருகில் இருந்த ஒரு உளவுத்துறை காவலரிடம் ஏன் இவ்வளவு போலீஸ் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர் எனக் கேட்ட போது, எப்படியாவது அமீரைத் தாக்கி அதன் மூலம் மீண்டும் கோவையில் ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டம் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ஆகவே எப்படியாவது இந்த நிகழ்ச்சியை கலவரம் இன்றி முடித்திட வேண்டும். அதே நேரம் அமீரையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும்... அதற்காகத்தான் என்றார் நம்மிடம்! 

நிகழ்ச்சி முடிந்த நிலையில் இயக்குநர் அமீரை கே.பாலகிருஷ்ணன் மற்றும் தனியரசு ஆகியோர் அழைத்துக் கொண்டு ஒரே காரில் மூவரும் சென்றனர். முன்னும் பின்னும் காவல்துறை பாதுகாப்புடன் விமான நிலையத்தை நோக்கி கார்கள் ஊர்ந்து சென்றன.


அரங்கத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்