Showing posts with label அலட்சியம். Show all posts
Showing posts with label அலட்சியம். Show all posts

Wednesday, June 19, 2024

"கவச்” எங்கேய்யா மோடி?

 


ரயில் விபத்துக்களை தவிர்க்க “கவச்” என்றொரு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து ரயில்களிலும் பொருத்தப்பட்டு விட்டது என்று சில வருடங்களுக்கு முன்பு ஆரவாரமாக மோடியால் அறிவிக்கப்பட்டது.

 20 சதவிகித ரயில்களில் கூட “கவச்” பொருத்தப்படவில்லை என்ற மோசமான உண்மை, கடந்த வருடம் ஒடிஷாவில் 200 உயிர்களைக் குடித்த விபத்தின் போதுதான் தெரிய வந்தது.

 ஒரு கொடிய விபத்திற்குப் பிறகாவது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்றால் எதுவும் நடக்கவில்லை என்பது இன்னொரு விபத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

 இந்த ஒரு வருடத்தில் என்னதான் நடந்துள்ளது?

 வந்தே பாரத் என்ற பெயரில் கட்டணக் கொள்ளை நடத்தும் ரயில்களை அதிகரித்துள்ளார்கள், அதற்கு கொடியசைக்க தெய்வக் குழந்தை ஊர் ஊராகப் போனது.

 ஆறே கால் லட்ச ரூபாய் செலவில் மோடியின் மூஞ்சியோடு புகைப்படம் எடுக்க செல்ஃபி பாயிண்ட் ஸ்டேஷன் ஸ்டேஷனாக அமைக்கப்பட்டது.

 சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் வெட்டப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டது.

 சீனியர் சிட்டிசன்களுக்கான  சலுகை வெட்டப்பட்டது தொடர்கிறது.

 ரயில்வே நிலத்தை விற்கும் முயற்சி, தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி என்று ரயில்வேவிற்கு மூடு விழா காணத்தான் ஆசைப்படுகிறது மோடி அரசு.

 இதெல்லாம் செய்யத் தெரிந்த மத்திய அரசுக்கு விபத்தை தவிர்க்க மட்டும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

 காரணம்?

 திமிர், அலட்சியம், பொறுப்பின்மை, இத்யாதி, இத்யாதி . . .

 இந்த எழவெடுத்த ஆட்சியில் இன்னும் என்னென்ன நடக்குமோ?

 

 

 

 

 

 

 

Wednesday, November 16, 2022

உங்களை நம்பித்தானே டாக்டர்?

 


இளம் கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் துயரமும் கோபமும் தருகிறது.

ஜவ்வு கிழிந்ததற்கு தரப்பட்ட சிகிச்சை மரணத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தைத் தவிர வேறெதுவும் காரணமில்லை என்பதுதான் மிகவும் கோபம் அளிக்கிறது.

அந்தப் பெண் தன் உடல் நலன், எதிர்காலம், உயிர் எல்லாவற்றையும் உங்களிடம் முழுமையாக நம்பி அளித்ததே,, அந்த நம்பிக்கைக்கேற்றார் போல பொறுப்போடு நடந்து கொண்டிருக்க வேண்டாமா? இந்திய கால்பந்து அணியில் இணைய வேண்டுமென்ற கனவை சுவாசித்துக் கொண்டிருந்த அந்தப் பெண் தன் காலை அகற்றிய போதே இறந்து போயிருப்பாள்!

அந்தப் பெண்ணின் நம்பிக்கை மட்டுமா தகர்ந்தது?

கொரோனா காலத்திற்குப் பின்புதான் மக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை வரத் தொடங்கியது. அந்த நம்பிக்கையையும் சிதைக்குமே உங்கள் அலட்சியம்!

Saturday, August 12, 2017

யோகி சீ கொடுத்த சொர்க்கம்



உபி முதல்வர் யோகி சீ யின் சொந்த ஊரான கோரக்பூரில் உள்ள மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக வெறும் முப்பதே முப்பது குழந்தைகள் இறந்து போயிருக்கின்றன.

பாவம் யோகி சீ எவ்வளவு பிஸியானவர். அவர் ஆட்சிக்கு வந்த பின்பு இதுவரை 729 பாலியல் வன் கொடுமைகளே நிகழ்ந்திருக்கிறது. அந்த எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த வேண்டாமா என்று அவரது குண்டர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டியுள்ளது. கொலைகள் இரட்டிப்பாக வேண்டாமா? அப்போதுதானே உ.பி அமைதிப் பூங்காவாக உள்ளது என்று கிரிமினல் வக்கீல் ஜெய்ட்லி சொல்லுவார்.

மருத்துவமனை எப்படி உள்ளது, சாலை உள்ளதா? கழிப்பறை உள்ளதா? வேலை கிடைக்கிறதா? கல்வித்தரம் எப்படி உள்ளது போன்ற அற்ப விஷயங்களை கவனிக்கவா அவர் சாமியார் பொறுப்போடு முதல்வர் பொறுப்பையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மாடுகளுக்கு பிரச்சினை என்றால் சொல்லுங்கள். யோகி சீ கவனிப்பார். மனிதர்களைப் பற்றி எல்லாம் கவலைப்பட முடியாது, 

அந்த குழந்தைகள் எல்லாம் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவை. அதனால்தான் அவையெல்லாம் முதல்வரின் ஊரில் செத்துப் போயிருக்கின்றது.

முதல்வர் ஊரில் இறந்தால் ஸ்ட்ரெய்ட்டாக சொர்க்கம்தான். 

இந்த பாக்கியம் போதாதா அந்த குழந்தைகளுக்கு!!

Friday, September 25, 2015

ஹஜ் பலி - முதல் முறைதான் விபத்து. தொடர்ந்தால் அது ………



நேற்றைக்கு சவுதி அரேபியாவில் ஹஜ் பயணிகளுக்கு நிகழ்ந்தது கொடுமையான ஒன்று. ஹஜ் பயணத்தில் மினா என்ற இடத்தில் சாத்தான் மீது கல்லெறிவது என்ற சடங்கின் போது ஏற்பட்ட நெரிசலில் எழுநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்து போயுள்ளனர்.
           
இந்த இடத்தில் நெரிசல் ஏற்படுவதோ, பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் இறந்து போவதோ முதல் முறையல்ல. 1991 ம் ஆண்டு இதே இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். அப்போது அச்செய்தி மிகுந்த அதிர்ச்சியளித்தது.

ஆனால் அதற்கு பிறகு பார்த்தால் அதே இடத்தில் நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் இறப்பது தொடர்கதையாகி விட்டது. முதல் முறை விபத்து நடந்த போதே சவுதி அரேபிய அரசு விழித்துக் கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் தொடர் மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியாத அளவிற்கு சவுதி அரேபிய அரசு ஒன்றும் பஞ்சப் பரதேசி அரசு கிடையாது. செல்வச் செழிப்பு மிக்க அரசுதான். மேலும் ஹஜ் பயணத்தின் மூலமும் அரசுக்கு நிதி வந்து கொட்டுகிறது.

அப்படி இருக்கையில் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல் தனது நாட்டிற்கு வரும் பக்தர்களின் உயிரோடு விளையாடுவது, அவர்கள் உயிரை துச்சமென மதிப்பது சவுதி அரேபிய அரசின் அலட்சியம் என்று சொல்வது கூட தவறு. அராஜகம் என்பதே பொருத்தமான வார்த்தையாக இருக்கும்.

ஹஜ் பயணத்தின் போது மெக்காவில் இறப்பவர்கள் நேரடியாக அல்லாவிடம் செல்கின்றார்கள் என்றொரு வாதத்தை சில தினங்கள் முன்பு நடந்த விபத்தின் போது சிலர் எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது. அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதைத் தவிர வேறில்லை.

இப்படிப்பட்ட கருத்தோட்டங்கள் சவுதி அரேபிய அரசின் அராஜகம் தொடர்வதற்கே வழி வகுக்கும், மேலும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் எதிர்காலத்தில் நெரிசலில் சிக்கி இறப்பதற்கும் கூட.

Friday, September 4, 2015

அலட்சியங்களும் தற்கொலைகளும்






வாட்ஸப்பில் வந்த வீடியோ அது.

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. தங்கள் பிரச்சினைகளை விவசாயிகள் கூறிக் கொண்டிருக்கையில் ஒரு அதிகாரி ரொம்பவும் சீரியஸாக தனது அலைபேசியில் ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இவர்களால் விவசாயிகளுக்கு என்ன நல்லது செய்து விட முடியும்?

பொறுப்பற்றதனம் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் இருக்க முடியுமா? 


அதிகார வர்க்க ஆணவ மனோபாவம்!!!!

விவசாயிகளை தற்கொலைக்கு துரத்துவதே இந்த அலட்சியப் போக்குதான்.