இவற்றை பகிர்ந்து கொள்வதா, வேண்டாமா என்ற நீண்ட தயக்கத்திற்குப் பிறகு பகிர்ந்து கொள்கிறேன். நம்முடைய நூலைப் பற்றி நாமே பகிர்ந்து கொள்வது விளம்பரமாகி விடுமோ என்பதுதான் தயக்கத்திற்குக் காரணம். இருப்பினும் நூலை வாங்கியவர்களை வாசிக்க வைக்க, இந்த அறிமுகங்கள் தூண்டும் என்பதால் தயக்கத்தை தள்ளி வைத்து பகிர்ந்து கொள்கிறேன்.
"முற்றுகை" நூலுக்கு மதுரையிலிருந்து பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் வெளி வருகிற காப்பீட்டு ஊழியர் மாத இதழில் வந்த நூல் அறிமுகம் பகுதியில் தோழர் எஸ்.ராகவி எழுதியது கீழே உள்ளது.
அதே போல எங்கள் கோட்டச் சங்க இதழான சங்கச்சுடர் மற்றும் தென் மண்டல உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் வெளியாகும் "உதயம்" இதழ்களுக்காக எங்கள் முன்னணித் தோழரும் உதயம் ஆசிரியர் குழு உறுப்பினருமான தோழர் எஸ்.ஜெயஸ்ரீ எழுதியது கீழே உள்ளது.
தோழர்களுக்கு என் நன்றி.
ஒரு போராட்டத்தின் கதை
(”முற்றுகை” நாவல் பற்றிய அறிமுகம்)
-------எஸ். ஜெயஸ்ரீ, கடலூர்
--------------------------------------------------------------------------------------------------------------------------
சங்கத்தின் ஒரு போராட்டத்தை நாவல் வடிவத்தில் ஆவணப்படுத்த முடியும் என்பதாக, வேலூர் கோட்டச் செயலாளர் தோழர் ராமன் “முற்றுகை” புத்தகத்தை எழுதியுள்ளார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வரலாற்றில் “ இலாக்கோ விஜில்” என்ற போராட்டம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இயந்திரமயமாக்கலை எதிர்த்து 1966-67 ல் நடைபெற்ற இந்தப் போராட்டத்தைப் பற்றி பல தலைவர்களின் உரைகளில், உரையாடல்களில் கேட்டிருப்போம். அதை நாம் அவர்கள் சொல்கிறார்களே என்பதற்காகக் கேட்டிருப்போம். அதன் தாக்கம், வலிமை, வீர்யம் இவைகள் நம் மனதைச் சிறிதளவே ஊடுருவியிருக்கும். ஆனால், அதன் முழு வடிவத்தையும், தாக்கத்தையும் மிகச் சிறப்பாக வாசிப்பவரை ஒன்றி உணரச் செய்கிறார் தோழர் ராமன். நாவல் மிகவும் ஜனரஞ்சகமாக இருந்திருந்தால், போராட்டத்தின் வலிமையைப் பற்றியதான தகவல்களை நீர்த்துப் போகச் செய்திருக்கும்; போராட்டத்தை மிகவும் சிறப்பாகச் சொல்லி விட வேண்டும் என்றிருந்தால், நாவல் என்ற தன்மையை வறட்சியாக்கியிருக்கும். இந்த இரண்டையும் சமரசம் செய்து கொள்ளாமல், மிகச் சிறப்பாகப் படைக்கப்பட்டிருப்பதில்தான் இந்தப் புத்தகத்தின் வெற்றி இருக்கிறது.
“பொன்னியின் செல்வன்” நாவல் படிக்கும் அதே சுவாரசியத்துடன் இந்தப் புத்தகத்தைக் கீழே வைக்காமல் வாசிக்க முடிகிறது. ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பணிகளுக்காக, கல்கத்தாவில் “இலாகோ” என்ற கட்டிடத்தில் வைத்துப் பாதுகாக்கப்படப் போகும் கம்ப்யூட்டரை, அந்தக் கட்டிடத்திற்குப் பக்கத்தில் கூடக் கொண்டு வர முடியாதபடி நடைபெற்றது ம் இந்தப் போராட்டம் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.1966-67 களில் இந்த அளவுக்குத் தொலைத்தொடர்பு வசதிகளும் கிடையாது. தரைவழித் தொடர்புத் தொலைபேசி மட்டும்தான்;அதுவும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்.இப்படிப்பட்ட சூழலில் ஒரு போராட்டம், அனைத்துத் தொழிற்சங்கங்களின் முழு ஒத்துழைப்போடு பத்து மாதங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக நடைபெற்றிருக்கிறது என்பது மிகவும் பிரமிப்பூட்டக்கூடியது. ஏன் இந்தப் போராட்டம் என்பதற்கான வினாவும், விடையும் அத்தியாயம் 11ல் 46 ஆம் பக்கத்தில் சரோஜ்தாவின், முத்தரப்புக் கூட்டத்தின் வாதம் மூலம் எடுத்துக் காட்டப்படுகிறது. இப்போது, இயந்திரமயமாக்கல் எந்த அளவுக்கு எல்.ஐ.சி. நிறுவனத்தை உலகத்தின் மிகச் சிறந்த நிறுவனமாக உயர்த்தியிருக்கிறது; ஆனால். அந்த காலக்கட்டத்தில், அதே இயந்திரமயமாக்கல், வேலை வாய்ப்பை எந்த அளவுக்குப் பறித்திருக்கும் என யோசிக்கும்போது, நம் தலைவர்களின் முன்யோசனைத் திட்டமிடல்களும், போராட்ட வியூகங்களும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
சகோதரத் தொழிற்சங்கங்கள் எப்படியெல்லாம் ஆதரவாக இருந்திருக்கிறார்கள் என்பது நினைந்து நினைந்து வியக்கவைக்கிறது. தோழர்கள் சரோஜும், போசும் கைது செய்யப்படாமல், ஜாமீனில் வெளி வருவதற்கு, சொத்து உள்ளவர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும் என ஒரு விதி. அதற்கு, வங்கித் தலைவர் ஜதீன் அவர்களின் வயதான தாயார் பெயரில் இருந்த சொத்து ஜாமீனாகக் கொடுக்கப்பட்டது என்பதோடு, அந்த மூதாட்டி மூன்று முறைக்கும் மேலாக நீதிமன்றத்திற்கு அலைய வேண்டியிருந்தது என்பதெல்லாம், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர்கள் எந்த அளவுக்கு சகோதரத் தொழிற்சங்கங்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார்கள் என்பதும், எந்த அளவுக்கு வலிமையான ஒற்றுமையைக் கட்டியிருந்தார்கள் என்பதையும் நமக்கு விளங்க வைக்கிறது.. இலாக்கோ கட்டிடத்தை முற்றுகையிட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது என்பது வாசிப்பவரை ஆச்சரியத்தில் உயர்த்திய புருவத்தை கீழிறக்க விடாமல் செய்கிறது.
முதலாளித்துவ நிர்வாகம் எப்போதும் ஒரே மாதிரிதான் என்பதைப் புரிந்து கொள்ள அருமையான சில இடங்கள் புத்தகத்தில். அத்தியாயம் 16 ல் முன்கோபியான தோழர் தேபபிரதா மாஜியைக் கோபப்படுத்தி வேலை இடை நிறுத்தம் செய்து சங்க நடவடிக்ககைகளை முடக்க நினைப்பது, அத்தியாயம் 17ல் போராட்டத்திற்கு எப்படி நிதி வருகிறது என அரசு விசாரிக்க வேண்டும் எனத் தூண்டுவது, சண்டிகரில் பல்வேறு தொழிற்சங்கங்களுக்கு வழிகாட்டியாக இருந்த தோழர் மன்சந்தாவை, அவருடைய பெரிய மீசையே அவரைப் பெரிய குற்றவாளியாகக் காட்டுவதாகக் குற்றம் சாட்டி பணி நீக்கம் செய்ய வைத்தது, இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழுக்கு நிர்வாகம் கொடுக்கும் விளம்பரங்களைப் போராட்டங்களுக்கெதிரானதாக மாற்றியது என தொழிலாளர்களுக்கெதிரான நிர்வாகத்தின் முகத்தைப் பல இடங்களின் வழியே மிக அழகாக சுட்டிக் காட்டிச் செல்கிறது இப்புத்தகம்.
போராட்ட வரலாற்றோடு, அழகான, கவித்துவமான ஒரு காதலையும் இணையாக நூலாசிரியர் பதிவிடுகிறார். தொழிற்சங்கமும், வாழ்க்கையும் இரண்டுமே போராட்டங்கள் நிறைந்ததுதானே? மிக அழகாக இந்த இரண்டையும், ஊடும், பாவும் போல ராமன் நெய்திருக்கிறார். அசோக் தன் காதலைச் சொல்லத் தயங்கும் இடம் மிகவும் அருமை. பெண்கள் இப்போதுதான் போராட்டம் என்றெல்லாம் வெளியில் வர ஆரம்பிக்கிறார்கள், இதைச் சொல்லி விட்டால் அவர்கள் வரத் தயங்குவார்கள் என யோசிப்பது ஒரு விவேகமுள்ள தொழிற்சங்கத் தோழரிடம் மட்டுமே சாத்தியம். அசோக் – ஆஷா தோழர்களின் திருமணமும், இலாக்கோ போராட்ட நிறைவும் ஒன்றாக இருப்பது மிகவும் அருமையாக சொல்லப்பட்டிருக்கிறது.
போராட்ட வரலாற்றை வாசிக்கிறோம் என்ற அலுப்புத் தட்டாமல், ஒரு மர்ம நாவலை வாசிப்பது போல, அடுத்தடுத்த நிகழ்வுகளை தோழர் ராமன் சுவாரசியமாக விவரிக்கிறார். துறைமுக ஊழியர் சங்கத்தின் செயலாளர், சரக்கு துறைமுகத்தின் எந்த வாயிலின் வழியே வெளியில் வரப் போகிறது என்ற தகவலைச் சொல்கிறார். இந்தத் தகவலோடு ஆரம்பிக்கும் அத்தியாயம் 12 ,அடுத்தடுத்த நகர்வுகளை வாசிக்க வாசிக்க நகம் கடிக்க வைக்கும் பரபரப்பான சுவாரசியம் மிகுந்தது. அதே போல கல்கத்தாவில் பிரபலமான துர்கா பூஜையையும் போராட்டப் பந்தலிலேயே மிகச் சிறப்பாகக் கொண்டாடியது அருமையான இடம். தோழர்களின் பக்தி செண்டிமெண்ட்ஸ்களையும் அனுசரித்து, தொழிற்சங்கத்தின் வர்க்க உணர்வுகளையும் சிதைய விடாமல், நம் தலைவர்கள் எப்படியெல்லாம் போராட்டத் திட்டங்கள் தீட்டியிருக்கிறார்கள் என நினைந்து நினைந்து நம்மை நெஞ்சம் விம்ம வைக்கிறது.
சில இடங்களில் அழகான உதாரணங்களையும், பிரபல வாசகங்களையும் ஒப்பிட்டும், நகைச்சுவை உணர்வோடு சில வரிகளையும் கையாண்டிருப்பது பாராட்டுக்குரியது. பத்ம வியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யு போல என்ற வரிகள், அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்ற பாரதியின் வரிகள், கட்டபொம்மனின் பிரபல வசனம்”உனக்கெதற்குக் கொடுக்க வேண்டும் வரி” போன்ற வரிகள் மிகுந்த ரசிப்புக்குரியவை.
இடையே மெட்ரொபாலிடன் கம்பெனியில் 55 பேர் பணிநீக்கம் தொடர்பான போராட்டத்தையும் கதையோட்டதிலேயே சொல்லியிருப்பதும், அன்றைய போராட்டத்தின் முக்கியத்துவத்தையும், இன்று நாம் அடைந்திருக்கும் பென்ஷன் பலனையும், இன்று இயந்திரமாக்கலின் தேவையையும் என கால மாறுபாடுகளின் வித்தியாசங்களை எவ்வித குழப்பமுமில்லாமல் அழகாக விவரித்திருப்பது தோழர் ராமன், ஒரு சிறந்த தொழிற்சங்கவாதி மட்டுமல்லர், சிறந்த நாவலாசிரியாரும் கூட என சொல்ல வைத்திருக்கிறது ‘முற்றுகை” நாவல். நம் போராட்ட வரலாறுகளை இது போன்ற சுவையான வடிவங்களில் கொடுத்தால், நாமும், நமக்கடுத்த தலைமுறை ஊழியர்களும் நாம் கடந்து வந்த போராட்டப் பாதையைப் புரிந்து கொள்வதற்கு பேருதவியாக இருக்கும். தோழர் ராமனே கூட அடுத்து பல நல்ல நாவல்களைத் தருவார் என எதிர்பார்க்கலாம். அவருடைய முதல் முயற்சியான இந்த நாவலே மிகவும் சிறப்பாக வந்துள்ளது என்பது மிகுந்த பாராட்டுக்குரியது. அதற்கான அவரது உழைப்பும், மெனக்கெடலும், கள ஆய்வும் இவை எல்லாம் போற்றுதலுக்குரியது. மிகச் சிறப்பாக அச்சாக்கித் தந்துள்ள பாரதி புத்தகாலயத்தார் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.
( முற்றுகை – ஆசிரியர்: வேலூர் சுரா – வெளியீடு:பாரதி புத்தகாலயம், விலை:ரூ. 80/-)
எங்கள் கோட்ட இணைச்செயலாளர் தோழர் ஜி.வைத்திலிங்கம் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி தோழர் ரமணன் ஆகியோரும் நீண்ட விமர்சனம் எழுதியிருந்தனர். அவற்றை மாலை பகிர்ந்து கொள்கிறேன்.
வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteஇணைய வழி வாங்கி வாசிக்கிறேன் ஐயா
நன்றி
சிறப்பு. தங்கள் வாசிப்பும் எழுத்தும் எப்போதும் போல் தொடரட்டும். முடிந்தால் கொரோனா காலத்துக்குப் பின் தங்கள் நூலை வாங்கிப் படிக்கிறேன்.
ReplyDeleteமேலும், இந்த பதிவை வாசிப்பு என தாங்கள் வகைப்படுத்தியிருக்கலாம். எமது வலைத் திரட்டியின் மெனுவில் காணப்படும் தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டு தங்கள் பதிவுகளுக்கான குறிச் சொற்களை உருவாக்கினால் அந்தந்த பிரிவுகளில் திரட்டியில் தானாகவே இணைந்துவிடும்.