Thursday, November 30, 2017

அந்த கழுதைகளுக்காக பீட்டா வராதா?



யோகி ஆதித்யநாத் ஆளும் உ.பி மாநிலச் செய்தி இது.

சிறை வளாகத்திற்கு முன்பு இருந்த செடிகளை மேய்ந்ததால் எட்டு கழுதைகளை மூன்று நாட்கள் சிறையில் அடைத்து விட்டார்கள். 



விலங்குகளுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள ராதாராஜன் அம்மையார் உள்ளிட்ட பீட்டா அமைப்பினர் சிறை வைக்கப்பட்ட கழுதைகளுக்காக அனுதாபப்பட்டு கண்ணீர் சிந்த மாட்டார்களா? யோகியோடு சண்டை போட மாட்டார்களா?



கழுதைகளை அவற்றின் ரத்த சொந்தங்களே ஒதுக்கலாமா?

மதுரையில் நிகழ்ந்த அராஜகம்



மதுரையில் உள்ள அரபிந்தோ மிரா பள்ளி எனும் தனியார் பள்ளியில் நிகழ்ந்த ஒரு அராஜகத்தைப் பற்றி எங்கள் மதுரைக் கோட்டச் சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையையும்  அந்த அராஜகத்திற்கு நீதி கேட்டு மதுரையில் உள்ள தொழிற்சங்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

கல்விக்கூடங்கள் சித்திரவதைக் கூடங்களாக மாறி வருகிறது என்பதை இக்கொடிய சம்பவம் உணர்த்துகிறது.

அந்த பள்ளியின் இணைய தளத்திற்குச் சென்று மாணவன் ஆசிக் பாரதிக்கு நடந்த கொடுமையை கண்டிப்பதாகவும் அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் (என்னுடைய பெயர், மின்னஞ்சல், தொலைபேசி எண், வீட்டு முகவரியோடு {அனாமதயேமாக}  பதிவிட்டிருந்தேன். அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

குற்றமுள்ள நெஞ்சு ஒளிந்து கொண்டு விட்டது  போலும்!











காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்
மதுரைக் கோட்டம்

சுற்றறிக்கை எண்: 77/2017.                                                                     நாள் : 26.11.2017

அன்பார்ந்த தோழர்களே!

மாணவன் ஆசிக் பாரதிக்கு நீதி வழங்கு!

மதுரை அரபிந்தோ மீரா பள்ளியில் +2 படிக்கும் மாணவர் ஆசிக்பாரதி பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தோழர் பி.ஜி. ஜெயந்தி (கோட்ட அலுவலகம்) மற்றும் தோழர் நாசர் ஆகா (முதல்நிலை அதிகாரி, நகர்க்கிளை 1) ஆகியோரின் மூத்த மகன் ஆவார். அவரின் இரண்டு கால்களும் முழங்காலுக்குக் கீழ் நொறுங்கியும், தாடை எலும்பு உடைந்தும், பல பற்கள் உடைந்தும் அபாய நிலையில் அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாகி மேல் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் மதுரை மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள் பகிர்ந்து கொள்ளும் செய்திகள், முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களை ஆழ்ந்த கவலைக்குள்ளாக்குவதாக உள்ளன. இப் பகிர்வுகளின் அடிப்படையில் இப்பள்ளியில் படித்து வரும் ஆசிக் பாரதி உள்ளிட்ட மாணவர்களை ஆசிரியர்கள் கடுமையாக அடித்தும், அனைத்து மாணவர்கள் முன்னிலையில் அவமானகரமாகப் பேசியும், அவசியம் ஏற்பட்டபோது கழிவறைக்கு அனுமதிக்காமல், சாப்பிட, தண்ணீர் குடிக்க நேரம் தராமலும் துன்புறுத்தி வந்துள்ளனர் என்பவை வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கல்வி நிலையங்களில் ஜனநாயகம் குறித்த குறைந்த பட்ச புரிதலும், பொறுப்பும் அற்ற சூழல் நிலவுகிறது என வேதனை தெரிவிக்கிறார்கள்.

இது தனிப்பட்ட ஆசிக் பாரதியின் பிரச்சினை மட்டுமல்ல, அவர் நமது இன்சூரன்ஸ் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் கூடுதல் மனவேதனையை நமக்குத் தந்துள்ளது உண்மையே. ஆனால், அதோடு சுருங்கிவிடக் கூடிய பிரச்சினையல்ல. கல்வி நிலையங்களில ஜனநாயகம், ஆசிரியர் - மாணவர்கள் நல்லுறவு குறித்து விவாதங்களும், விரைவான நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன என்பதை உணர்த்தியிருக்கிற பிரச்சினையாகும். ரோகித் வெமுலாவில் துவங்கி சென்னை கவின் கல்லூரி மாணவர் பிரகாஷ் வரை தொடர்ந்த தற்கொலைகள் உள்ளிட்டவற்றின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ஆசிரியர் திட்டியதால் நான்கு மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை என்ற நேற்றைய செய்தி இடியாய் இறங்கியுள்ளது.

பள்ளியில் சம்பவம் நடந்த அன்றில் இருந்தே பொது அமைப்புகள் பல உடனடி விசாரணையையும் குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கையையும் வலியுறுத்தி வந்தன. குறிப்பாக இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மதுரை ஆட்சியரை நேரில் சந்தித்து இப்பிரச்சினை மீது முறையிட்டன. பல்வேறு ஜனநாயக, முற்போக்கு இயக்கத்தினர் சிகிச்சை பெற்று வரும் மாணவரையும், அவரது பெற்றோரையும் சந்தித்து ஆறுதலும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். சி.பி.எம் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் மருத்துவமனைக்குச் சென்று நேரில் சந்தித்ததோடு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் வலியுறுத்தினார். இதற்கிடையில் தோழர் ஜெயந்தி மதுரை மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து நடந்தவற்றை விளக்கி, தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி புகார் மனு அளித்தார். மேலும் கல்வித்துறை உயரதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

வாலிபர், மாணவர் அமைப்புகளின் புகார் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், வருவாய்க் கோட்டாட்சியரின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 23ஆம் தேதி அன்று வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு அழைப்பு வந்தது. அன்றைய தினம் தோழர் ஜெயந்தி மற்றும் நாசர் ஆகா ஆகியோருடன் நமது தோழர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உடன் சென்றிருந்தோம். காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பிணையில்லா பிரிவான சிறார் வன்கொடுமைப் பிரிவின் கீழ் பள்ளி ஆசிரியர்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்தும், யாரையும்  கைது செய்யவில்லை.

நம்மைப் பொறுத்தளவில், இது நமது தோழரின், அவர்தம் குடும்பத்தினைப் பாதித்த பிரச்சினையாக மட்டும் நாம் கருதவில்லை. இது அண்மைக் காலங்களில் சமூகத்தினை பாதிக்கிற பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்ட வேண்டிய பள்ளிகளே, அவர்களது எதிர்காலத்தை சிதைக்கிற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகலாமா? மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை தரவல்ல ஒரே பணி ஆசிரியப் பணி தானே. எவ்வளவு மகத்தான கடமை அது! அடிப்பது, கட்டளைக்கு அடிபணியச் செய்வது, அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்துவது என்பதாக மட்டும் "ஒழுங்கு" பராமரிப்பை பேண முயல்வது எவ்வளவு பிற்போக்குத் தனமானது! ஆசிரிய மாணவ உறவில் சாதி மத பேதங்களுக்கு இடம் உண்டா! மாணவர் நலன் பேணுவதில் பள்ளி நிர்வாகங்கள், குறிப்பாக தனியார் பள்ளி நிர்வாகங்களின் பொறுப்பு என்ன என்ற கேள்விகளை இந்த நிகழ்வு நம்முன் எழுப்பியுள்ளது.

நல் வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார் ஆசிக் பாரதி. அவரை இந்த நிலைக்கு உள்ளாக்கியவர்கள் மீது விருப்பு வெறுப்பின்றி சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதும், பிரச்சினைக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் அது நடைபெறாமல் முற்றிலும் தடுப்பதும் தானே நம் அனைவரின் கடமையாக இருக்க முடியும்.

அதேவேளையில் இக்குற்றம் இழைத்தவர்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் பாதிக்கப்பட்ட மாணவருக்கு உரிய நீதி கிடைத்திடவும், தவறிழைத்தவர்ககள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறு இழைத்தவர்கள் தப்பிப்பதற்கான கால தாமதம் கூடாது. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப் பட வேண்டும்.

நீதி கிட்டும் வரை தொடர்ந்து போராடுவோம்!

வாழ்த்துக்களுடன்,

       தோழமையுள்ள,
ஒப்பம் . . என்.பி.ரமேஷ் கண்ணன்
பொதுச் செயலாளர்.


தனியார் பள்ளிகளை வரைமுறைப்படுத்து...
தவறு செய்தவர்களைக் கைது செய்...

கண்டனக் கூட்டம்!

மதுரை நகர் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பாக நாளை 28.11.2017 (செவ்வாய்) மாலை 5.30 மணிக்கு பழங்காநத்தம் பைபாஸ் சாலை நடராஜ் தியேட்டர் அருகில் கண்டனக் கூட்டம் நடைபெறும். அனைத்துத் தோழர்களும் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.

எட்டு கால் பூச்சிக்கு பத்து கால்




யானை மாலை போட்டதால்
பிச்சைக்காரன் அரசன் ஆனது போல

ஒரு விபத்து போல 
முதலமைச்சரான எடுபிடி பழனிச்சாமி

நேற்று

கம்ப ராமாயணத்தை எழுதியது
சேக்கிழார் என்று சொன்னது போல

நாளை

எட்டுக் கால் பூச்சிக்கு
பத்து கால் 

என்று சொன்னாலும் வியப்பில்லை.

தமிழகத்திற்கு இப்படி ஒரு சோதனையா?

 

Wednesday, November 29, 2017

இப்படித்தான் சிரிக்க வேண்டியுள்ளது

ஸ்டேட்டும் சரியில்லை.
சென்ட்ரலும்  சரியில்லை.

அரசு சரியில்லை என்றாலும்
நீதி கிடைக்க எங்கே வாய்ப்பு
உள்ளது என்ற நம்பிக்கை
மக்களிடம் உள்ளதோ

அங்கே அதிலும் 
சென்னையிலும் சிக்கல்
டெல்லியில் சிக்கல்

 (இப்படி எழுதினால் அது
அவதூறு கணக்கில் வராதல்லவா!) 

இடுக்கண் வருங்கால் நகுக 
என்று வள்ளுவன் எழுதினாலும்

தேசத்திற்கு துன்பம் வரும் வேளையில்
சிரிப்பு வர மறுக்கிறது.

ஆனாலும் கூட கலைவாணரின்
இந்தப் பாடல்    இப்போது கூட
சிரிப்பை வரவைக்கிறது.



கலைவாணருக்கு நினைவஞ்சலி.

 

எடுபிடி அரசின் கழிவறை அடக்குமுறை





இது வரை எந்த அரசும் இவ்வளவு கேவலமாக தரம் தாழ்ந்து கீழிறங்கி நடந்தது கிடையாது என்ற சாதனையை படைத்துள்ளது எடுபிடி அரசு.

முறையான பணி நியமனம் பெற்றும் வெறும் ஏழாயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்குவதை மாற்றி கால வரன் ஊதியம் வழங்க வேண்டும் என்று செவிலியர்கள் சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் நான்கு நாட்களாக முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முயலாத தமிழக அரசு அவர்கள் போராட்டத்தை ஒடுக்க முயல்கிறது.

கைது நடவடிக்கை, காவல்துறை தடியடி போன்றவைகளுக்கு மாறாக புதிய அடக்குமுறை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது எடுபிடி எடப்பாடி அரசு.

அந்த வளாகத்தில் உள்ள அனைத்து கழிவறைகளையும் பூட்டி வைத்து விட்டது. பெண்கள் தங்கள் உடல் உபாதைகளுக்கு அஞ்சி முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் என்று ஒரு இழிவான யோசனையைச் சொன்ன அந்த வக்கிர சிந்தனையாளன் யாரோ?

கழிவறையைப் பூட்டிய காரணத்தால் அவர்களே செலவு செய்து மொபைல் டாய்லெட் வேன் வரவைத்தாலும் அதனை உள்ளே வருவதற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை.

பெண் ஊழியர்களை ஒரு அரசால் இப்படிக்கூட நடத்த முடியும் என்று நினைத்துப் பார்க்கவே கோபமாக இருக்கிறது.

செவிலியர்கள் போராட்டம் இப்போது ஜனநாயக  இயக்கங்களின் போராட்டமாக கழிவறை அடக்குமுறையால் மாறி இருக்கிறது.

உணர்வுள்ள ஒவ்வொருவரும் இந்த அடக்குமுறையை எதிர்க்க வேண்டும்.