Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Tuesday, April 7, 2026

ஜெமோ நீடூழி வாழட்டும், மற்றவர்கள் கூடுதலாகவே

 


நாய் வால் நிமிராது என்பதை புளிச்ச மாவு ஆஜான் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அஞ்சலி குறிப்பு மூலம் இறந்தவரை அசிங்கப்படுத்துவது என்பது அவரது இயல்பாகி விட்டது.

சமீபத்தில் மறைந்த காலச்சுவடு பதிப்பாசிரியர் அரவிந்தன் பற்றி அவருடன் பழகிய எண்ணற்றவர்கள் தங்கள் அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

ஜெயமோகன் மட்டும் வழக்கம் போல தன் வன்மத்தை கொட்டியுள்ளார். அவர் எழுதியதை படியுங்கள்.

தார்ஷியா என்ற பெயரில் ஆனந்த விகடனில் எழுதிக்கொண்டிருந்த டி..அரவிந்தனின் தந்தைதான் எனக்கு முதலில் அறிமுகம்அதன்பின்னர் அன்று மாணவராக இருந்த அவரை அறிமுகம் செய்துகொண்டேன்அச்சகங்களில் வெட்டிப்போட்டபின் மிஞ்சும் விளிம்புத்தாள்களை சேகரித்து குறிப்பேடுகள் தயாரிப்பவர்களிடம் விற்கும் தொழிலை அன்று செய்துகொண்டிருந்தார். அவர் கடுமையான உடலுழைப்புக்கு இயலாத சிறிய உடற்குறைபாடு கொண்டிருந்தாலும் அன்று மிகக்கடினமான அப்பணியைச் செய்யவேண்டியிருந்ததது.

நான் தொடர்பு கொண்டிருந்த விஜயபாரதம் அச்சகத்திற்கு காகிதம் சேகரிக்கும் பொருட்டு வந்தவர் நான் புதுமைப்பித்தனை கல்கியுடன் ஒப்பிட்டு எழுதிய ஒரு கட்டுரையை வாசித்துவிட்டு என்னிடம் உரையாடினார். அவர் கல்கியை அப்போதுதான் வாசித்திருந்தார். ஒரு நாள் சில கதைகளை என்னிடம் அளித்தார். அவற்றை செம்மை செய்து வெளியிட்டேன். அதன்பின் அவர் இந்தியா டுடேயில் அன்றைய நண்பர் மகாதேவன் வழியாக ஆசிரியராகச் சேர்ந்தார். 

ஓர் ஐந்தாண்டுக்காலம் அவருடன் அணுக்கமான நட்பும் உரையாடலும் இருந்தது. புதிய காலச்சுவடு அணியுடன் அவர் இணைந்த பின் அந்த தொடர்பு இல்லாமலாகிஎன் மேல் அவர் முழுமையான ஓர் எதிர்மனநிலையில் நீடித்தார். எப்போதாவது ரயில் நிலையங்களில் தற்செயலாகச் சந்தித்துக்கொண்டால் ஒரு சில சொற்களை பெரும்பாலும் நானே சென்று பேசுவதுடன் தொடர்பு நின்றதுசென்ற டிசம்பரில் ரயிலில் சந்தித்தபோது நாகர்கோயிலில் இருப்பதாகச் சொன்னார். 

அவருடைய மறைவு திகைப்பையும் வருத்தத்தையும் அளிக்கிறதுஇத்தகைய தருணங்களில் மிக இளைஞராக அவரைச் சந்தித்த முகம்தான் நினைவிலெழுகிறதுஅஞ்சலி.

இறந்தவரின் பொருளாதார நிலை,

உடல் குறைபாடு,

அவர்களின் வாசிப்பனுபவம் பற்றிய அலட்சியம்,

அவர்களுக்கு தான் செய்த உதவிகள்,

அடுத்தவர் உதவியில்லாமல் அவர்கள் முன்னேற முடியாது,

அவர்கள் பகைவர்களாக இருப்பினும் தான் ரொம்ப நல்லவன் என்று காண்பிப்பது.

இவையெல்லாம் அவரது அஞ்சலி வன்மக் குறிப்புகளில் வழக்கமாக இருக்கும். அரவிந்தனுக்கான குறிப்பிலும் இதெல்லாம் இருக்கிறது. அவற்றை அடிக் கோடிட்டுள்ளேன்.

இன்னும் கூட ஒரு மோசமான விஷயத்தை முதலில் எழுதியிருந்தார். பிறகு அதனை மட்டும் நீக்கி விட்டார். மற்ற விஷமெல்லாம் அப்படியேதான் இருக்கிறது. 

ஜெயமோகனை என்ன சொல்வது? 

ஜெயமோகன் நீடூழி வாழட்டும். மற்ற இலக்கியவாதிகள், பதிப்பாளர்கள் ஆகியோரெல்லாம் ஜெயமோகனை விடவும் கூடுதல் காலம் வாழட்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஜெமோ அஞ்சலி குறிப்பு எழுதும் வாய்ப்பு கிடைக்காது. 

பிகு 1 : அசோகமித்திரனை பேச அருகதையற்ற ஜெமோ - நாளை

பிகு 2 : ஜெயமோகனை விமர்சிப்பவர்களை வெட்டி ஆபீசர்கள் என்று சொல்கிறார் கவிஞர் போகன் சங்கர். அவரைப் போல முட்டு கொடுப்பவர்களை முட்டாள் ஆபீசர்கள் என்று சொல்லலாமா? 


Sunday, March 1, 2026

அவசரம் ஏன் தோழர்?


 இன்றைய காலைப் பொழுது ஒரு துயரச் செய்தியோடு விடிந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ன் மாவட்ட செயற்குழு உறுப்பினர், கட்சியின் முன்னாள் மாவட்டச்செயலாளர், தற்போதைய மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.டி.சங்கரி அவர்களின் கணவரரும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் ஆர்.தயாநிதி நேற்று நள்ளிரவு காலமானார்.

கடந்த ஜனவரி மாதம் இதய பை பாஸ் சர்ஜரி செய்து கொண்ட தோழர் தயாநிதி அவர்களை கடந்த புதன் கிழமையன்றுதான் நாங்கள் (இன்சூரன்ஸ் ஊழியர் சங்கப் பொறுப்பாளர்கள்) சந்தித்து நலன் விசாரித்து வந்தோம்.

மிகுந்த நம்பிக்கையோடு பேசிய தோழர் தயா விரைவிலேயே எப்போதும் போல இயக்கங்களுக்கு, களத்திற்கு வருவேன் என்று தெரிவித்தார். ஆனால் அவரது நம்பிக்கை பொய்த்துப் போனது கொடுமை. 63 வயது என்பது இறப்பதற்கான வயதா என்ன? 

நான் வேலூருக்கு வந்த காலம் முதல் அறிவேன்.  எங்களது எத்தனையோ கூட்டங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.  களத்தில் கடுமையாக உழைப்பவர், ஒன்றிணைந்த வேலூர் மாவட்டத்தை அங்குலம் அங்குலமாக அறிந்தவர்.  துல்லியமான திட்டமிடல் அவரது சிறப்பு. 

மிகச் சிறந்த ஓவியர். 1996 ல் எங்கள் தென் மண்டல மாநாடு வேலூரில் நடைபெற்ற போது அனைத்து விளம்பரப் பணிகளையும் அவர்தான் செய்தார். பிரம்மாண்டமான பேனர்கள், அலங்காரமான, அழகான பின்புலம், டயர் தட்டிகள் என்று பல வடிவங்களில் அவர் கைவண்ணம் மிளிர்ந்தது.

நல்ல வாசிப்பாளர். கடைசி சந்திப்பின் போது கூட தான் அப்போது படித்து முடித்த நூல்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

வேலூர் மாவட்ட கட்சிக்கென ஒரு மாதாந்திர செய்தி மடல் வெளியிட வேண்டும் என்பது அவர் நீண்ட நாள் விருப்பம். நாம் இது தொடர்பாக உட்கார்ந்து விவாதிக்க வேண்டும் என்று பலமுறை சொல்லியுள்ளார். அது ஏனோ கைகூடவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது உண்மையான செயல் வீரரை இழந்துள்ளது,  வாழ்வுக்குப் பிறகும் தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக்க, மக்களுக்கு பயன் கிடைக்கும் வண்ணம் தோழர் தயா உடல் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட உள்ளது. 

செவ்வணக்கம் தோழர் தயாநிதி . . .

பிகு: எங்கள் சங்க அலுவலகம் சரோஜ் இல்லத் திறப்பு விழாவில் தோழர் தயாநிதி வாழ்த்துரை வழங்கிய போது எடுக்கப்பட்ட படம் மேலே உள்ளது. 

Wednesday, February 25, 2026

செவ்வணக்கம் தோழர் நல்லக்கண்ணு

 


மூத்த பொதுவுடமை இயக்கத்தலைவர்,

சுதந்திரப் போராட்ட வீரர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராய் செயல்பட்டவர்,

சிறை வாழ்வையும் தலைமறைவு வாழ்வையும் மகிழ்வாய் அனுபவித்தவர்.

இறுதி மூச்சு வரை போராளியாய் திகழ்ந்தவர், எளிமையாய் வாழ்ந்தவர், 

நூற்றாண்டு கண்ட தகைசால் தமிழர் 

தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு

நெஞ்சார்ந்த அஞ்சலி, செவ்வணக்கம் தோழர்.

அவரை ஒரே ஒரு முறைதான் பார்த்துள்ளேன். கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழுக் கூட்டத்திற்கு செல்ல புகைவண்டியை பிடிக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த போது அங்கே வந்த அப்போதைய திருநெல்வேலி கோட்டப் பொதுச்செயலாளர் தோழர் டி.தேவபிரகாஷ், எனக்கு முன் இருந்த நாற்காலியைக் காண்பித்து யார் உட்கார்ந்திருக்கிறார் என்று பார்த்தாயா என்று கேட்டார்.

அங்கே அமர்ந்திருந்தது தோழர் ஆர்.நல்லக்கண்ணு.

தோழர் தேவபிரகாஷ் அவரோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். என்னையும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் மாநிலச் செயலாளர். ஆனால் தனியாகத்தான் இருந்தார். எந்த ஆரவாரமும் இல்லை. 

அவர்தான் தோழர் நல்லக்கண்ணு. 


Friday, January 16, 2026

எம் நினைவுகளில் எந்நாளும் வாழ்வீர்கள் . . .

 



இன்றைய நாள் ஒரு துயரச் செய்தியுடன் விடிந்தது. 

எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிதாமகர், நிறுவனத் தலைவர்களில் ஒருவர்,  1955 முதல் 1994 வரை பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தலைவர் ஆகிய பொறுப்புக்களில் அகில இந்திய இன்சூரனஸ் ஊழியர் சங்கத்தை வழி நடத்தியவர். 

செப்டம்பர் 1957 ல் இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழ் தோழர் சந்திரசேகர போஸ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வரத் தொடங்கியது. இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழ் நவம்பர் 1997 ல் சென்னையிலிருந்து வெளிவர தொடங்கும் வரை நாற்பதாண்டுகள் அதன் ஆசிரியராக செயல்பட்டவர்.

ஹிந்துஸ்தான் கோவபரேட்டிவ் என்ற தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியில் சேர்ந்தவர். அங்கேயிருந்த சங்கத்திற்கு வேகம் கொடுக்கிறார். சுரண்டலுக்கு எதிராக போராட்டத்தை துவக்குகிறார். போனஸ் கோரிக்கைக்காக  போராட்டம் நடக்கிறது. ட்ரிப்யூனலுக்கு பிரச்சினை செல்கிறது. லாபம் இல்லை என்று நிர்வாகம் பொய்க்கணக்கு காண்பிக்கிறது. மிகுந்த சிரமத்துடன் உண்மையான கணக்குகளை போட்டோ எடுத்து ட்ரிப்யூனலிடம் சமர்ப்பிக்கிறார். நிர்வாகம் மட்டுமல்ல ட்ரிப்யூனலின் நீதிபதி கூட இது துரோகம் என்று கொந்தளிக்கிறார். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். என்னை என்ன வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள், ஊழியர்களுக்கு நியாயமான போனஸை அளியுங்கள் என்பதே அவர் நிலையாக இருந்தது. பணி நீக்கம் செய்யப்பட்ட அவர் மீண்டும் ஊழியர்களின் போராட்டத்தால் பணியில் இணைகிறார்.

நாடெங்கிலும் இருந்த பல்வேறு இன்சூரன்ஸ் கம்பெனிகளின் சங்கங்களை ஒன்றிணைத்து ஒரு அகில இந்திய அமைப்பை உருவாக்க ஒரு கூட்டம் பம்பாய் நகரில் நடந்த போது மேற்கு வங்க ஊழியர்களின் சார்பாக அவர் கல்கத்தாவிலிருந்து பம்பாய் செல்கிறார். 01.07.1951 அன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உருவாகிறது. அகில இந்திய செயற்குழு உறுப்பினராகிறார் தோழர் போஸ். 1953 ல் முதல் மாநாடு. 1955 ல் இரண்டாவது மாநாடு. அம்மாநாட்டில் அகில இந்திய பொதுச் செயலாளராகிறார் தோழர் போஸ்.

இதற்கிடையில் 1954 ல் ஒரு சம்பவம். மெட்ரோபாலிடன்  இன்சூரன்ஸ் கம்பெனி என்ற தனியார் கம்பெனியில் சங்கம் அமைக்க முயற்சித்த 55 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட அங்கே கல்கத்தா நகர இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக தோழர் சந்திரசேகர் போஸ் மற்றும் பின்னாளில் சங்கத்தை பொதுச்செயலாளராக வழி நடத்திய தோழர் சரோஜ் சவுத்ரி ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர்.  கீழமை நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

1956 ல் ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமயமாக்கப்பட்ட போது அதனை வரவேற்று அகில இந்திய இன்சூர்ன்ஸ் ஊழியர் சங்கம் தந்தி அனுப்பியது. அனுப்பியவர் அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் போஸ். முதலாளித்துவ சிந்தனை கொண்ட சில காங்கிரஸ் எம்.பி க்களும் என்றைக்குமே கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான பாஜகவின் அன்றைய வடிவமான ஜனசங்கும் தேசியமயத்தை கடுமையாக எதிர்த்த போது "ஊழியர்கள் ஆதரிக்கிறார்கள்" என்று அன்றைய நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக் அந்த தந்தியை காண்பித்து உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தில் இது பதிவாகியுள்ளது.

ஊழியர்களுக்கான பலன்களை பெறுவதில் கவனம் செலுத்துபவர் என்றும் நிர்வாகத்தின் முன்மொழிவுகளுக்கு சரியான எதிர்வினைகளை உடனுக்குடன் தருவதில் வல்லவர் என்று எங்கள் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அவர் ஒரு திறந்த புத்தகம் என்பதை அவரது தன் வரலாறு நூல் உணர்த்தியது. 

1983 . அவர் எல்.ஐ.சி பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் சங்கத்திலிருந்து அவர் ஓய்வு பெறவே இல்லை. 1994 ல் தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாலும் சங்க இயக்கங்களிலிருந்து அவருக்கு ஓய்வு என்பதே இல்லை. 

அவரை முதன் முதலாக பார்க்கும் வாய்ப்பு 1988 ல் கிடைத்தது. அகில இந்திய தலைமையகம் கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாறிய போது சென்னை எல்.ஐ,சி கட்டிடத்தில் பிரம்மாண்டமான கூட்டம் ஒன்று நடந்தது. பெரிய ஆரவாரம் இல்லாத தெளிவான நீரோடை போன்றது அவர் பேச்சு. அந்த தெளிவும் அழுத்தமும் இறுதி நாள் வரை மாறவே இல்லை. எங்கள் வேலூர் கோட்டத்திற்கு ஒரு முறை வந்துள்ளார்.

1998 ல் நான் வேலூர் கோட்டப் பொதுச்செயலாளராகிறேன். 2000 ம் ஆண்டு சென்னையில் அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது என்னை அழைத்து பேசி உற்சாகமும் நம்பிக்கையும் கொடுத்தார். அந்த காலகட்டத்தில் புதிதாக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற வேறு சிலரையும் அழைத்து உற்சாகப்படுத்தினார் என்று பின்பு அறிந்து கொண்டேன்.










ஏழாண்டுகள் முன்பாக அவரை அவரது வீட்டில் சந்தித்தேன். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரத்திற்கும் மேல் நடந்த சந்திப்பு அது. இயந்திரமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தை நாவல் வடிவில் கொண்டு வர வேண்டும் என்ற வேட்கையில் கொல்கத்தா சென்று அவருடன் பேசி பல்வேறு விபரங்களை அறிந்து கொண்டேன். அறுபதுகளின் சம்பவங்களை முழுமையாக தன் நினைவிலிருந்து சொன்னவர் மறைந்த தன் சகாக்களான தோழர் சரோஜ், தோழர் சுனில் பற்றி பேசும் போது மட்டும் உணர்ச்சிவயப்பட்டார். 



 வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் இது. தமிழ்நாட்டிலிருந்து தோழர் வந்துள்ளார். அதனால் எங்கள் இருவருக்குமே தோசை ஆர்டர் செய்து விடு என்று பேரனிடம் சொன்னார். இரவு 10.30 க்கு புறப்படுகையில் ஊபரில் டாக்ஸி புக் செய்த போது, பக்கத்தில்தான் டாக்ஸி ஸ்டாண்ட் உள்ளது. நானே ஏற்பாடு செய்து தருகிறேன் என்று அவர் புறப்பட்ட போது அவரது வயது அதிகமில்லை, வெறும் 96 தான். 

அந்த போராட்டத்தை "முற்றுகை" எனும் நூலாகஆறாண்டுகளுக்கு முன்பாக   விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் அவரே வெளியிட்டது வாழ்வில் எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.



நூறாண்டுகளை கடந்த நிலையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் அவர் தினமும் வந்து கலந்து கொண்டார். மாநாட்டின் போது மட்டுமல்ல அதற்கு முன்பாக மம்தாவின் அடாவடி காரணமாக தற்காலிக அரங்கம் அமைக்கப்பட்ட போது அதன் பணிகளை அன்றாடம் வந்து பார்த்து ஆலோசனை வழங்கியுள்ளார்.




அவரை நாங்கள் இறுதியாக பார்த்தது 31.12.2025 அன்றுதான். 28.12.2025 முதல் 01.01.2026 வரை புவனேஸ்வரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் 29.12.2025 முதல் 31.12.2025 வரை அவர் 104 வயதில் கலந்து கொண்டார். மிகவும் தெளிவான உரை ஒன்றையும் நிகழ்த்தினார். அவரது வருகையும் இருப்புமே அனைவருக்கும் உற்சாகமளித்தது, வேகம் கொடுத்தது.




அதன் பின்பு உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தோழர் சந்திரசேகர் போஸ் இன்று இயற்கையுடன் இணைந்து விட்டார்.

அவர் 

எளிமையின் வடிவம்,'

தியாகத்தின் உருவம்,

உறுதிக்கு உதாரணம்,

வரலாற்றுப் பொக்கிஷம்,

இயக்கத்திற்கு எழுச்சி தந்த நாயகன்.

சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாத தலைவர்.

எந்நாளும் அவர் எங்களின் நினைவில் வாழ்வார், வழி காட்டுவார்.




Sunday, November 23, 2025

ஒன்பது முறை எழுந்தவன்

 


தமிழ்நாட்டின் பெரும் கவி ஈரோடு தமிழன்பவன் அவர்கள் இயற்கை எய்தி விட்டார். அவரை ஒரு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகத்தான் முதன் முதலில் அறிந்து கொண்டேன். பின்பு தூர்தர்ஷனில் கலைஞர் தலைமை தாங்கிய ஒரு கவியரங்கத்தில் கவிதை வாசித்த போதுதான் அவர் கவிஞர் என்று அறிந்து கொண்டேன். 

இந்தி திணிப்பை எதிர்த்த "அசோகச் சக்கரத்தை அஜர்பைஜான் விசாரிக்கும்" என்ற கவிதையை சங்கிகள் "அஜர்பைஜான் எரிக்கும்" என்று மாற்றி அவரது செய்தியாளர் பணியை பறித்தார்கள் என்பது நாம் மறக்கக் கூடாத நிகழ்வு.

பாரதியின் "வீழ்வேன் என்று நினைத்தாயோ" போல அவரது :ஒன்பது முறை எழுந்தவனல்லாவா நீ" யும் சோர்வைப் போக்கி எழுச்சி தரும்.

அவர் தமிழாக்கம் செய்த பாப்லோ நெரூடாவின் கவிதைகளில் ஒன்றை மூன்றாண்டுகளுக்கு முன்பு எங்கள் கோட்டத்தின் காலண்டரில் பயன்படுத்தியுள்ளோம்.

முற்போக்கு சிந்தனையாளரான தோழர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலி.

அவரது மறைவை ஒட்டி அஞ்சலியாக அவரின் சில கவிதைகள்.

******************************************************************************


அறத்தில்
விழித்தது எதுவோ -
அன்பில்  தழைத்தது எதுவோ
அது தமிழ் உயிர்


இளகிக் 
கனிவது எதுவோ 
இரங்கிக் கரைவது எதுவோ 
அது தமிழ் உளம்


அணுவில் 
விரிவது எதுவோ
அண்டம் இணைப்பது எதுவோ
அது தமிழ் அறிவு

**********************************************************


“பத்து முறை விழுந்தவனைப் பார்த்து
நிலம் சொன்னது -
ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ ?”

*****************************************************************************

"மாங்கல்யத்தின் மகிமையை
மனைவி அறிவாள்
மணவாளன் அறிவான்
அவர்கள் இருவரையும்விட
மார்வாடியே
அதிகம் அறிவான்"

*****************************************************************************
"கவிதை, தான் கவிதையாவதற்கு
வார்த்தைகளைக் காட்டிலும்,
அர்த்தங்களைக் காட்டிலும்
வாழ்க்கையையே நம்பி இருக்கிறது.
வாழ்க்கைக்கு அர்த்தம்
அனுபவங்களில் புரிந்தும்
புரியாமலும் தெரிந்தும்
தெரியாமலும்
சிதறிக் கிடக்கிறது."
*********************************************************************************
'சிலம்பை உடைத்து என்ன பயன்
அரியணையிலும்
அந்தக் கொல்லன்..'

******************************************************************************
"இமயப்பறவைகள் நாம்
எரிமலையின் உள்மனம்நாம்.
அக்கினிக் காற்றிலே
இதழ்விரிக்கும் அரும்புகள்நாம்.
திக்குகளின் புதல்வர்கள்
தேசவரம்பற்றவர்கள்”


Monday, October 27, 2025

தோழர் ஏகாம்பரம் - மிகச் சிறந்த வழிகாட்டி

 


நேற்றைய இரவு துயரமான இரவாக முடிந்தது.

எங்கள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டத்தின் முன்னாள் தலைவர் தோழர் என்.ஏகாம்பரம் நேற்று இரவு இயற்கை எய்தினார்.  அவருடனான நினைவுகள் மனதில் அலை அலையாய் மோதிக் கொண்டிருந்தது.

அவரை நான் முதன் முதலில் அறிந்தது 12.06.1988 அன்று நடைபெற்ற வேலூர் கோட்டத்தின் அமைப்பு மாநாட்டில்தான்.

வேலூர் கோட்டத்தின் இணைச்செயலாளராக அந்த மாநாட்டில்தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகே அவருடனான பரிச்சயம் தொடங்கி பின்னாளில் வேலூர் கோட்ட அலுவலகத்திற்கு மாறுதலில் வந்த பிறகு அது நெருக்கமாக மாறியது.

எனக்கு திருமணம் நிச்சயமான சூழலில் அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த நெய்வேலிக்கு  கும்பகோணம் கிளையில் பணியாற்றிக் கொண்டிருந்த என் மனைவிக்கு மாறுதல் கிடைக்காது என்ற நிலையில் என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்த எனக்கு "வேலூருக்கு இருவரும் வாருங்கள்" என்ற ஆலோசனையை அவர்தான் வழங்கினார்.

தோழர் ஏகாம்பரம், எல்.ஐ.சி நிறுவனம் உருவான பின்பு முதலில் பணி நியமனம் செய்யப்பட்ட உதவியாளர்களில் ஒருவர். பணியில் சேர்ந்த போதே சங்கத்திலும் சேர்ந்தவர். சங்கத்தின் உறுப்பினர்களை, தலைவர்களை நிர்வாகம் வேட்டையாடிக் கொண்டிருந்த நேரம் அது. எந்த அச்சமும் இல்லாமல்  சங்கத்தில் இணைந்தது மட்டுமன்றி செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர்.

பணியில் சேர்ந்து பல வருடங்களுக்குப் பிறகுதான் பயிற்சி வகுப்பே நடத்தினார்கள் என்பார். அந்த பயிற்சி வகுப்பில் அவரோடு பங்கேற்றவர் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம். அப்போதே தென் மண்டல இணைச்செயலாளராக இருந்த தோழர் என்.எம்.எஸ், பயிற்சி வகுப்பின் தேநீர் இடைவேளையின் போதும் மதிய உணவு இடைவேளையின் போதும் மாநாட்டு அறிக்கையை எழுதிக் கொண்டிருப்பார், அவர் மிகப் பெரிய உயரத்துக்குச் செல்வார் என்று அப்போதே தெரிந்தது என தோழர் என்.எம்.எஸ் அவர்களைப் பற்றி தோழர் ஏகாம்பரம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். 

ஊழியர்கள் பலன் பற்றிய அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார். அவர் அலுவலகத்தில் செய்த பணியும் "ஓய்வுக்கால பலன்களை  பட்டுவாடா செய்தல், பதவி உயர்வு பெறுவோருக்கான ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்தல்" ஊழியர்களுக்கு அதிகபட்ச பலன் கிடைப்பதையும் அவை உரிய காலத்தில் கிடைப்பதையும் உறுதி செய்தவர். 

ஊழியர்களுக்கான பணியிட மாறுதல்களின் போது அதிகபட்ச மாறுதல்கள் கிடைப்பதற்கான சூட்சுமங்கள் அறிந்தவர். அவர் உருவாக்கிய ராஜபாட்டை இன்றும் பல தோழர்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கிறது. 

பணி ஓய்வு என்பது அவரது சங்க உணர்வுகளுக்குக் கிடையாது. நுகர்வோர் குறியீட்டு எண் என்ன என்பதை ஒவ்வொரு மாதமும் கண்டறிந்து ஒவ்வொரு மூன்று மாதமும் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு வரும் என்பதை கணக்கிட்டு தகவல் சொல்வார். அவர் எனக்கு இறுதியாக வாட்ஸப்பில் அனுப்பிய செய்தி கூட அகவிலைப்படி உயர்வு பற்றித்தான். 

அந்த ஆர்வம்தான் கடந்தாண்டு "அகவிலைப்படி- தோற்றமும் முன்னேற்றங்களும், ஒர் வரலாற்றுப் பார்வை" என்ற நூலை அவரது 86 வது வயதில் எழுத வைத்தது. அந்த நூல் வெறும் அகவிலைப்படியோடு நிற்கவில்லை. ஆட்சியாளர்களின் கொள்கைகள் உழைக்கும் மக்களை எப்படித்தாக்கும் என்பதை விளக்கும் நூலாகவும் இருந்தது.  திண்டிவனத்தில் நடைபெற்ற கோட்டச்சங்க மாநாட்டில் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா வெளியிட்டார்.

அவர் நிஜமாகவே "எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்"தான். கர்னாடக இசையில் ஆர்வம் உள்ளவர்கள். ராகங்களின் அழகை விளக்கக் கூடியவர். ஆபேரி ராகத்தின் அழகை "நகுமோ" கீர்த்தனையில்தான் உணர முடியும் என்பார். பல கர்னாடக இசை காணொளிகளை அனுப்பி அந்த ராகங்களின் சிறப்பையும் சேர்த்து சொல்வார்.

மார்க்சியத்தின் மீதும் மதச்சார்பின்மை கொள்கையின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டவர். மத உணர்வுகளை அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்பவர்களை அம்பலப்படுத்த தயங்காதவர். இன்றைய ஆட்சியாளர்கள் பற்றி அவர்களை ஆதரிக்கும் உறவினர்களுக்கு இவர் அனுப்பிய சில செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். கொள்கைக்காக யாரிடமும் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் கறாராக இருப்பவர் என்பதை அந்த செய்திகளே சொல்லும்.

வயது வித்தியாசம் இல்லாமல் பழகக் கூடியவர்.  அனைவரிடமும் தோழமை உணர்வை வெளிப்படுத்துபவர். 

பல சந்தர்ப்பங்களில் நான் அவருடைய ஆலோசனையை கேட்டுப் பெற்றுள்ளேன். பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டுமென எங்கள் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் முன்மொழிந்த போது அந்த பொறுப்பை ஏற்று நம்மால் செயல்பட முடியுமா என்று மலைப்பு ஏற்பட்ட போது அவரிடம் ஆலோசித்தேன். நம்பிக்கையும் தைரியமும் உற்சாகமும் கொடுத்தார். 

பணி ஓய்வு பெற்று 27 ஆண்டுகள் ஆன பின்பும் சங்கத்தின் தகவல்களை கேட்டு தெரிந்து கொள்வார், எல்.ஐ.சி நிறுவனத்தின் சுற்றறிக்கைகளை அனுப்பச் சொல்லி தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பார். 

அவர் என்னை செல்லமாக கடிந்து கொண்ட ஒரு நிகழ்வும் உண்டு. 

1990ல் தென் மண்டல மாநாடு ஹைதராபாத் நகரில் நடக்கிறது. நான்கு நாட்கள் தென் மண்டல மாநாடு நடந்தது. ஐந்தாவது நாள் தென் மத்திய மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் அமைப்பு மாநாடு. மாநாட்டு அறிக்கையில் ஒரு வார்த்தை சொல்ல வந்த முக்கியக் கருத்தை எவ்வாறு சிதைக்கிறது என்று எங்கள் கோட்ட பிரதிநிதிகள் விவாதிக்கையில் சுட்டிக்காட்டினார். அவர் சொன்ன கருத்தை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்கையில் தோழர் ஜகதீசன் சுட்டிக் காண்பிக்க அதனை அறிக்கை மீதான விவாதத்திற்கு தொகுப்புரை வழங்குகையில் அந்த வார்த்தையை மாற்றுவதாக அன்றைய தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.ராஜப்பா குறிப்பிட்டார். 

தென் மண்டல மாநாடு முடிந்த நாளன்று ஏதாவது தெலுங்குப் படம் பார்ப்போம் என்று கிளம்பினோம். அவரையும் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றோம். எதுவும் தெரியாமல் ஒரு திரை அரங்கில் நுழைந்தோம். கடைசியில் அந்த படம் மிக மோசமான முறையில் சொதப்பலாக எடுக்கப் பட்டிருந்த 16 வது வயதினிலே படத்தின் ரீமேக், "என் தூக்கத்தை கெடுத்து இப்படி ஒரு படத்துக்கு போய் கூட்டிட்டு  போனீங்களே" எறு கேட்டதுதான் அந்த நிகழ்வு.

கதவடைப்புப் போராட்டத்தின் ஐம்பதாவது ஆண்டை முன்னிட்டு ஒரு சிறு பிரசுரத்தை வெளியிட்டோம். அந்த நூலிற்கு ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்புமாறு கேட்டுக் கொண்டோம். மகிழ்வோடு இசைந்து உடனடியாக அனுப்பி வைத்தார். அச்சிடும் பணியின் இறுதிக்கட்டத்தில் தொலைபேசி செய்து வேலூர் கிளையின் அனுபவத்தைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுத விரும்புகிறேன். உங்களால் அதனை இணைக்க முடியுமா என்று கேட்க அது எங்களுக்கான நல்வாய்ப்பு என்று சொல்ல மறுநாளே அருமையான ஆங்கிலத்தில் அனுப்பி வைத்தார். அவரின் சங்க உணர்வுக்கு அது ஒரு சான்று. 

கடந்த ஜூலை இறுதியில் 70 பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்ட ஒரு நோட்டை கொடுத்தனுப்பியிருந்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முக்கியப் போராட்டங்கள் பற்றி எழுதியிருந்தார். அதனை ஒரு நூலாக்கும் பணிகள் துவங்கும் முன்பே அவர் மறைந்து விட்டார். அந்த பணியை முடித்து உரிய காலத்தில் வெளியிட வேண்டும்.

இறுதி மூச்சு வரை சங்கத்தின் மீது கொண்ட பற்று மாறாமல் தான் அறிந்தவற்றை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று உழைத்தவர் தோழர் ஏகாம்பரம். அவர் வாழ்வே மற்றவருக்கான உதாரணம். 

நீங்கள் உயர்த்திப்பிடித்த தீபத்தை தொடர்ந்து பாதுகாப்போம் என்று உறுதியேற்று  செயல்படுவதே அவருக்கான சிறந்த அஞ்சலி.

செவ்வணக்கம் தோழர் ஏகாம்பரம்

சில முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் கீழே . . .




அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வைரவிழாவை முன்னிட்டு வேலூர் கோட்டம் வெளியிட்ட நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு பேசிய போது எடுக்கப்பட்ட படங்கள்.



வேலூர் கோட்டத்தின் வெள்ளிவிழா ஆண்டு துவக்க விழாவின் போது தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களை கௌரவித்த போது.


வேலூர் கோட்ட வெள்ளி விழா ஆண்டு மாநாட்டின் போது அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லா கான், தோழர் ஏகாம்பரம் அவர்களை கௌரவித்த போது . . .



வேலூர் கோட்ட வெள்ளி விழா ஆண்டு மாநாட்டின் போது வெளியிடப்பட்ட வேலூர் கோட்ட 25 ஆண்டுகள் வரலாறு நூலின் முதல் பிரதியை பெற்ற போது. 



அவர் எழுதிய "அகவிலைப்படி, தோற்றமும் முன்னேற்றங்களும், ஓர் வரலாற்றுப் பார்வை" நூலை, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா வெளியிட்ட போது . . .


Wednesday, July 23, 2025

இப்படித்தான் இருக்க வேண்டும் மரணம் . . .

 

மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களின் முகநூல் பதிவுகளை பகிர்ந்து கொண்டுள்ளேன். படங்களும் அவரது பக்கத்திலிர்ந்து எடுக்கப்பட்டவையே.

மெய் சிலிர்க்கிறது !!!















நானும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கே.பாலகிருஷ்ணன்,உ.வாசுகி ஆகியோரும் மறைந்த மகத்தான தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்களுக்கு செவ்வணக்கம் செலுத்த ஆலப்புழா வந்து காத்திருக்கிறோம். நேற்று பிற்பகல் இரண்டு மணிக்கு திருவனந்தபுரம் நகரிலிருந்து அவருடைய உடலை சுமந்த ஊர்தி 24மணிநேரம் கடந்த பிறகும் இங்கு வந்து சேர முடியவில்லை. தூரம் என்னவோ 150 கிலோமீட்டர் தான் ஆனால், கேரள மாநில மக்கள் அனைவருமே தெருவில் குவிந்து விட்டார்கள் என்று சொல்லத் தக்க அளவுக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம்.

இறந்த பின்னும் மக்களை திரட்டும் வல்லமை கொண்டவராக தோழர் வி.எஸ் திகழ்கிறார் என்பதை கண்ணாரக் கண்டு வியந்து போய் இருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல. நாடே வியந்து தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. எப்போது அவருடைய முகத்தை பார்ப்போம் என காத்திருக்கிறோம். மரணம் என்றால் அது இப்படி இருக்க வேண்டும்.

********************************************************************************

என்னுடைய வாழ்நாளில் நான் பார்த்த மிக நீண்ட தூர இறுதி ஊர்வலம் தோழர் வி.எஸ் அவர்களுடையதுதான். பல லட்சக்கணக்கான மக்கள் 150 கிலோமீட்டர் தூரமும் நின்று தாங்கள் நேசித்த தலைவருக்கு இறுதி மரியாதை செய்ய கொட்டுகிற மழையில் காத்திருந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். நான் பார்த்த மிகப்பெரும் மக்கள் திரள் பங்கெடுத்த இறுதி ஊர்வலமும் இதுதான். மக்களின் மனங்களை வென்ற மகத்தான தலைவராக தோழர் வி.எஸ் அவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார். இல்லை, இல்லை மக்கள் மனங்களில் தொடர்ந்து வாழ்வார். அனைத்து தொலைக்காட்சிகளிலும் கடந்த மூன்று நாட்களாக தோழர் வி.எஸ் அவர்களின் இறுதி நிகழ்ச்சியை தவிர வேறு எந்த நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படவில்லை என்பது மற்றொரு சிறப்பு. அவரைப்போல் வாழ முயற்சிப்போம்

Tuesday, March 4, 2025

கவிஞர் நந்தலாலாவிற்கு செவ்வணக்கம்

 


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைத்தலைவரும் சிறப்பான உரை வீச்சால் பல மேடைகளை தன் வசப்படுத்தியவருமான தோழர் கவிஞர் நந்தலாலா இன்று இயற்கை எய்தியது மிகவும் வருத்தமளிக்கிறது.

அவரை முதலில் பார்த்தது 1998 ம் வருடம் இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு வேலூரில் நடைபெற்ற போதுதான். நெடுஞ்செழியன் என்ற பெயரில் வங்கி வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடும் நந்தலாலா என்று தோழர் எஸ்.வி.வேணுகோபாலன் துவக்க மாநாட்டின் போது அறிவித்தார்.

அன்று மாலை வேலூர் கோட்டை மைதானத்தில் கலை இரவு நிகழ்ச்சி நடந்தது. அதிலே ஞான.ராஜசேகரன் இயக்கிய "ஒரு கண், ஒரு பார்வை" குறும்படம் திரையிடப்பட்டது. ஆசிரியர் ஒருவரின் ஜாதிய வெறியால் கண் பார்வையை இழந்த சேலம் தனம் என்ற சிறுமியின் கதை அது.

குறும்படத்தை தொடர்ந்து பேச வந்தார் தோழர் நந்தலாலா. ஒரு புதிய அனுபவமாக இருந்தது அவரது உரை. அவரை தொடர்ந்து பேசிய பாரதி கிருஷ்ணகுமாரின் உரை வீச்சும் அசத்தலாக இருக்க, எங்கள் கோட்டச்சங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் ஒரு புதிய திறப்பு.

அந்த வருடம்தான் வேலூரைத்தாண்டி எங்கள் மாநாடு முதல் முறையாக புதுவையில் நடைபெற இருந்தது. பொது வெளியில் "மக்கள் ஒற்றுமை கலை விழா"  அப்போதிலிருந்து தொடங்கியது. அந்த நிகழ்வில் உரை வீச்சு நிகழ்த்திய தோழர் நந்தலாலா, அதன் பின்னும் பல வருடங்கள் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருக்கோயிலூர், குடியாத்தம் என பல வருடங்கள் மக்கள் ஒற்றுமை கலை விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

குடியாத்தம் மாநாட்டிற்குப் பிறகு நீண்ட இடைவெளி. கடந்த 2024 ம் வருடம் திண்டிவனத்தில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமை கலை விழாவில் கலந்து கொண்டு "நடந்த கதை மறந்து விட்டாய், கேளடா கண்ணா" என்ற தலைப்பில் உரை வீச்சு நிகழ்த்தி சிரிக்க, சிந்திக்க வைத்தார்.




முன்னதாகவே வந்திருந்து எங்கள் தோழர்கள் வழங்கிய "மாட்டிக் கொண்ட மகாராஜா" நாடகத்தையும் ரசித்து பார்த்து தோழர்களையும் பாராட்டினார்.

அந்த மாநாடே எங்கள் கோட்டத்தில்  அவர் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சி என்று எதிர்பார்க்கவில்லை.

ஒரு திறமையான, அர்த்தபூர்வமாக பேசுகிற, சிந்தனைகளை தூண்டுகிற சிறந்த பேச்சாளரை தமிழ்நாடு இழந்து விட்டது.

செவ்வணக்கம் தோழர் கவிஞர் நந்தலாலா . . .

Saturday, February 1, 2025

இணையற்ற செயல் வீரரை இழந்தோம்

 


டி.டி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிற எங்கள்  வேலூர் கோட்டச்சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் தோழர் டி.தேவராஜ் அவர்களின் மறைவுச்செய்தி இன்றைய நாளை துயரமாக்கியது. 

1993 ல் எல்.ஐ.சி யில் பணியில் சேர்ந்த தோழர் அவர். எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்த தோழர் சங்கத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது அலுவலக வாசலில் அமர்ந்து அலுவலகம் வருபவர்களை "இன்று வேலை நிறுத்தம்" என்று சொல்லி திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத ஒருவர் அவரை நக்கலாக "நீ என்ன வாட்ச்மேனா"  என்று கேட்க, "ஆமாம். எல்.ஐ.சி யை பொதுத்துறையாய் பாதுகாக்கும் வாட்ச்மேன்" என்று தோழர் தேவராஜ் சூடாக திருப்பி பதியளிக்க கேள்வி கேட்டவர் உள்ளே ஓடிவிட்டார்.



கோட்ட அலுவலகக் கிளையின் உதவி செயலாளர், செயலாளர்  என்று பணியாற்றிய தோழர் தேவராஜ், 2011 ல் சிதம்பரத்தில் நடைபெற்ற கோட்ட மாநாட்டில் கோட்ட துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் தேவராஜ் கடந்த 2024 ம் வருடம் வரை அந்த பொறுப்பில் செயல்பட்டார்.

தோழர் தேவராஜ் சிறந்த செயல் வீரர். அவரிடம் கொடுக்கப்படும் பணி எதுவானாலும்  செம்மையாக செய்து முடிப்பார். பயணங்களில் உடன் இருப்பார். கொரோனா காலம் வரை தவறாமல் ஒவ்வொரு வருடமும் வெண்மணி பயணத்தில் கலந்து கொண்டவர். இடதுசாரி சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர். இளம் வயதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கப் பொறுப்பிலும் இருந்துள்ளார். 

2022 ல் தென் மண்டல மாநாட்டை வேலூரில் நடத்திய போது விளம்பரக் குழு அமைப்பாளராக அவர் ஆற்றிய பணி மனதில் நிலைத்துள்ளது. காவல் நிலையத்துக்கு அனுமதிகளுக்காக சளைக்காமல் சென்று வந்தார். பேரவைக் கூட்டங்களில் பேச எப்போதுமே தன்னை தயார்ப்படுத்திக் கொள்வார்.

வெளிப்படையாகும் பேசும் குணம் கொண்டவர், கடின உழைப்பாளி. இரண்டாண்டுகளுக்கு முன்பு அவரை கேன்ஸர் எனும் கொடிய நோய் தாக்கியது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்ல தயாராகும் வேளையில் அவரது மன உறுதியை பாதிக்கக்கூடிய விதத்தில் ஒரு ஜென்மம் பேசிய பேச்சு அவரது செவிகளையும் எட்டியது. ஆனால் அது அவரது மன வலிமையை அதிகரித்தது. நான் மீண்டு வருவேன் என்ற மன உறுதியோடு சிகிச்சைக்கு சென்றார்.

மூன்று நான்கு மாதங்களிலேயே மீண்டு மீண்டும் அலுவலகம் வந்தார். அவரது பணிகளை வழக்கம் போல செய்யத் தொடங்கினார். 2023 ல் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கோட்ட மாநாட்டில் இரண்டு நாட்களும் முழுமையாக கலந்து கொண்டார். இனி அவர் எப்போதும் போல செயல்படுவார் என்று நம்பிய போது நோய் மீண்டும் அவரை தாக்கி மருந்துகளின் பக்க விளைவுகள் அவரை மிகவும் படுத்த இந்த முறை அவரை நோய் வென்று விட்டது.

உங்கள் பணிகளால், சங்கத்தின் மீதான உங்கள் பற்றுதலால், உங்கள் இனிய அணுகுமுறையால் எப்போதும் எங்களோடு இருப்பீர்கள்.

செவ்வணக்கம் தோழர் டி.டி 

Monday, December 16, 2024

வாஹ்! ஜாகீர் …

 


உலகெங்கும் இந்திய இசையின் அடையாளமாக திகழ்ந்த தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் உசேன் காலமாகி விட்டார்.

 தாஜ் மஹால் டீ விளம்பரத்தில்தான் அவரை முதன் முதலில் பார்த்துள்ளேன். அதி வேகமாய் நடனமாடும் விரல்களும் னெற்றியில் அலைபாயும் தலைமுடியும் புன்னகைத்த முகமுமாய்  உள்ளத்தை கவர்ந்தவர். வாஹ்!தாஜ் என்ற அந்த விளம்பரத்தை யாரால் மறக்க முடியும்.



 எப்போதும் சோம்பி வழியும் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளில் விறுவிறுப்பான நிகழ்வாக அவரது தபேலா நாதம் ஒலிக்கும்.

 


ஒரே ஒரு முறைதான் அவரது நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

 அது திருவையாறு தியாகராஜ உத்சவம். மாண்டலின் ஸ்ரீனிவாஸின் கச்சேரி அது.

 அந்த நிகழ்ச்சியில் தபேலாவில் ஜாகீர் உசேனும் தவிலில் ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேலுவும் நடத்திய தனி ஆவர்த்தனம் காலம் முழுதும் நெஞ்சில் நிலைக்கும்.

 அதன் இரு  காணொளிகள்  இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

 




ஒரு குழந்தை தன் தந்தையின் தலையில் தபேலா வாசிக்கும். அதுதான் ஜாகீர் உசேன் ஏற்படுத்திய தாக்கம்.

 அவருடைய அப்பா உஸ்தாத் அல்லாரக்கா, பண்டிட் ரவிசங்கருக்கு தபேலா வாசிப்பவர். ஜாகீர் உசேனும் அவருக்கு வாசித்துள்ளார்,

 


தந்தையை மிஞ்சிய தனயானாக, சர்வதேச அளவில் முத்திரை பதித்தவர் ஜாகீர் உசேன். தபேலா என்றால் முதலில் நினைவுக்கு வருபவரும் அவர்தான்.

 அவருக்கு மனமார்ந்த அஞ்சலி.

 

Sunday, November 10, 2024

டெல்லி கணேஷ் - மனதில் நிற்கும் நடிகர்

 

தமிழின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் இன்று காலமானார். 

அநேகமாக அனைத்து வகை பாத்திரங்களையும் திறம்பட கையாண்டவர். 

சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி என்று பல படங்களில் அவர் முத்திரை பதித்தாலும் படம் முழுதும் அவருக்கு ஸ்கோர் செய்ய ஸ்கோப் இருந்த படம் "ஆஹா"

டெல்லி கணேஷ் அவர்களுக்கு அஞ்சலி

அவருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் சில காணொளிகள். 

ஆஹா

மைக்கேல் மதன காமராஜன்

அவ்வை சண்முகி


சிந்து பைரவியில் வரும் "பாடறியேன், படிப்பறியேன்" பாடல்



Thursday, September 12, 2024

செவ்வணக்கம் தோழர் சீத்தாராம் யெச்சூரி

 


உலக கம்யூனிஸ இயக்கங்களுக்கே இன்று ஒரு துயரமான நாள்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ன் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி இன்று மறைந்தார்.

மிகவும் இளைய வயதில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரானவர் அவர். 

இந்தியாவின் மிகச் சிறந்த அறிஞர் அவர். மார்க்சியம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், கலை, அறிவியல், இந்திய அரசியல் சாசனம்,  என்று அனைத்து துறைகளிலும் அவர் விற்பன்னர், 

மிகச் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர்,

தொழிலாளர் வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரம்,

இன்சூரன்ஸ் ஊழியர்களின் நெருங்கிய தோழர். தன்னை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கௌரவ உறுப்பினர் என்று சொல்லியுள்ளார்.

எங்களுடைய ஊதிய உயர்வில் ஒரு முறை சிக்கல் ஏற்பட்ட போது அவரது தலையீடு, மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.

அவருடைய உரையை பல முறை கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவை அனைத்தும் புரிதலை அதிகரிக்கும் வாய்ப்பாகவே அமைந்தது.

வேலூருக்கு அவர் ஒரு முறை வந்த போது எங்கள் சங்கத்தின் சார்பில் அவருக்கு தோழர்களுடன் ஒரு வரவேற்பளித்தோம். அந்த நினைவு இன்று மனதில் ஓடிக் கொண்டே இருந்தது.

பாசிஸ சக்திகளுக்கு எதிரான போராட்டத்திற்கு தத்துவார்த்த பின்புலத்தை அமைத்துக் கொடுத்தவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி.

நேபாளத்தில் ஜனநாயகம் மலர்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளை அந்நாட்டு நாடாளுமன்றமே பதிவு செய்துள்ளது.

அவரது இழப்பு இந்தியாவிற்கும் உழைக்கும் மக்களுக்கும் முற்போக்கு இயக்கங்களுக்கும் பெரும் இழப்பு.

செவ்வணக்கம் தோழர் சீத்தாரம் யெச்சூரி. . .



வேலூரில் தோழர் யெச்சூரிக்கு இன்சூரன்ஸ் ஊழியர்கள் அளித்த வரவேற்பு கீழே . . .