Wednesday, April 1, 2020

காய்கறிக்காக பேரம் பேசிய எம்.பி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் பதிவு இது.

மதுரை மக்கள் கொடுத்து வைத்தவர்கள்


மதுரை மக்களே….கைவிட்ராதீங்க!

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரைத் தெருக்களில் கூடிய கூட்டம் யாரையும் மிரளச்செய்யும். “வழக்கமான நாள்களில் கூடுவதைவிட இரண்டு மடங்கு . . . இல்லையில்லை நான்கு மடங்கு . . .” என்று ஆளுக்கு ஒரு கணிப்பைச் சொன்னார்கள்.


மக்கள் கடைக்கு வந்து குவியாமலிருக்க என்னதான் வழியென்று இரண்டு நாள்களாக நிர்வாகம் சார்ந்த பல்வேறு ஆலோசனைகள் நடந்துகொண்டே இருந்தன.

இன்னொரு பக்கம் மொத்தக்கடைகாரர்கள், சில்லறைக்கடைக்காரர்கள், நுகர்வோர் என அனைத்து தரப்பினரிடமிருந்தும் தொடர்ந்து போன் வந்துகொண்டே இருந்தது. எல்லோரும் எல்லோரிடமும் பேசினார்கள். ஆனால், என்ன தீர்வைக் காண்பது என்றுதான் முடிவுக்கு வர முடியவில்லை.


எங்களது கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்துக்குப் பின்னாலிருக்கும் தெருவைச் சேர்ந்த மக்கள் எனக்கு போன்போட்டு, “சார், இன்னைக்கும் பெட்டிக்கடை தெறக்கலைன்னா, உங்க கட்சி அலுவலகத்துக்கு வந்திருவோம். நீங்கதான் சாப்பாடு போடனும்” என்று உரிமையோடு கோபித்தார்கள்.

சில்லறை விற்பனைக்கடைகள் அனைத்தும் ஒரே வளாகத்துக்குள் இருப்பது போலவும் மொத்த விற்பனைக்கடைகள் அனைத்தும் ஒரே வளாகத்துக்குள் இருப்பது போலவும்தான் காலங்காலமாய் நகர அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மதுரைக்காஞ்சிக் காலத்தில் வணிகவீதிகள் எப்படி இருந்தனவோ அப்படித்தான் இன்றைய வணிக வீதிகளும் இருக்கின்றன. அதனால்தான் கீழமாசி வீதியின் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை நடந்துசென்றால், அவ்வீதியெங்கும் நிறைந்து கிடக்கும் வகைவகையான தானியங்களின் வெவ்வேறு வகையான மணம் நமது மூக்கில் நிறைகிறது. ஆனால் ஒரே நாளில் இந்த நிலைமையை தலைகுப்புற மாற்ற வேண்டியுள்ளது. 

கடைகள் நெருக்கமாக அடுத்தடுத்து இருக்கக்கூடாது. வாங்குபவர்கள் தள்ளித்தள்ளி இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் மூன்றடி இடைவெளி தேவை. ஆனால், ”தராசு தட்டுக்கான சங்கிலியே ஒரு அடில்லதான் இருக்கு, மனுஷனோட கையி ரெண்டு அடிதான். அப்புறம் எப்படியா மூனடிக்கு அங்கிட்டு இருந்து வாங்க முடியும்?” என்று கேட்கிறார்கள் மக்கள். மதுரக்காரன பேசி ஆகவைக்கிறது எளிய காரியமல்ல.


எதையும் கேட்கலாம். ஆனால் எதைக்கேட்டாலும் மூன்றடிக்கு அங்கிட்டு இருந்து கேட்பதே பாதுகாப்பு. எனவே கடைகளையெல்லாம் வளாகத்தைவிட்டு வெளியே கொண்டுவர வேண்டும், அதற்கான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும், அதனை வியாபாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும், மக்கள் வந்து சேர வேண்டும், இவை அனைத்தையும் உடனுக்குடன் செய்தாக வேண்டும் என்ற அவசரகதியில் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது.

இதற்கிடையில் தேனி மாவட்ட ஆட்சியர் 150 ரூபாய்க்கு உழவர் சந்தையில் காய்கறித் தொகுப்பைக் கொடுக்கும் முயற்சியைச் செய்தார். அது சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பினைப்பெற்றது. ஆனால், அதிலிருந்த சிக்கல் மீண்டும் சந்தையை நோக்கி மக்களை வரவைப்பது. அதைச்செய்தால் குரோனோவுக்கு எதிரான சமூகவிலகல் என்பதற்கு அர்த்தமில்லாமல் போய்விடுகிறது. வைகைப்புயல் வடிவேல் பாஷையில் “சங்கத்தையும், சந்தையையும் கலைங்கப்பா” என்பதுதான் இப்பொழுது முதல் வேலையாக இருக்கிறது.

காய்கறிகளை வீடு நோக்கிக் கொண்டுசெல்லும் திட்டந்தான் குரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையோடு பொருந்திப்போவதாக இருக்கிறது என்று முடிவுசெய்யப்பட்டது. மாநகராட்சி நிர்வாகமோ, குட்டி யானை என்று சொல்லப்படுகின்ற டாட்டா ஏசி வண்டியை டீசல் போட்டு ஓட்டுநருடன் கொடுக்கிறோம், மார்க்கெட்டில் ஒரே விலை நிர்ணயம் செய்யப்பட்ட காய்கறி தொகுப்புகளை மக்களிடம் தன்னார்வலர்கள் மூலம் விற்றுப்பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ( தோழர் சாஜி உள்பட) இரண்டு குழுகளாக இப்பணியைச் செய்ய முன்வந்துள்ளனர். அதே போல “ வா நண்பா வா” அமைப்பைச் சேர்ந்தவர்களும் இரண்டு என்.ஜி.ஓ.களும் இப்பணியைச் செய்ய முன்வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.


இதற்கிடையில் தூத்துக்குடி மாநகராட்சியில் வண்டியில் கொண்டுப்போய் 200 ரூபாய்க்கான காய்கறித் தொகுப்பினை விற்கும் முயற்சியை, அம்மாநகராட்சியின் ஆணையர் இன்று தொடங்கிய செய்தி வெளியானது. உடனே அவரிடம் மதுரை மாநகராட்சி ஆணையர் பேசி விபரங்களைக் கேட்டறிந்தார்.

காவல்கோட்டம், வேள்பாரி என எனது படைப்புகளின் தீவிர வாசகரும் தமிழிலக்கியக் காதலருமான தூத்துக்குடி ஆணையரிடம் நானும் தொலைபேசியில் பேசினேன். “இரண்டு வண்டிகளில் 200 ரூபாய்க்கான காய்கறித் தொகுப்புகளை 800 பைகளிகளில் போட்டு இன்று விற்பனையைத் தொடங்கினோம். நல்லபடியாக விற்று முடிந்தது” என்றார். நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.


தேனியில் தொடங்கி தூத்துக்குடி வழியாக மதுரைக்கு வந்து சேர்ந்தது காய்கறி வியாபார உத்தி. எங்கே வாங்கி, எவ்வளவு ரூபாய்க்கு தொகுப்பாக்கி, எப்படி விற்பது என்று மாநகராட்சி நிர்வாகம் முயற்சி செய்து ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

இரவு 10 மணிக்கு மாநகராட்சி ஆணையரிடம் பேசினேன். ”மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வருவதுபோல 250 ரூபாய்க்கு ஒரு காய்கறித் தொகுப்பை உருவாக்கியுள்ளோம்” என்று சொன்னார், “சரி, பட்டியலை அனுப்புங்கள்” என்றேன். 10. 40 மணிக்கு பட்டியலை அனுப்பினார்.

பட்டியல் முழுவதையும் பார்த்துவிட்டு, ”இன்னும் சிலவற்றைக் கூட்டலாமே” என்றேன். ”


எங்கள் மக்கள் பேசிப்பார்த்ததில் இவ்வளவுதான் முடிந்தது” என்றார்.
”மார்கெட் சங்கத் தலைவரிடம் நான் பேசுகிறேன்” என்றேன்.
”எனக்கு அவரைத் தெரியாது. நீங்கள் பேச முடிந்தால் நல்லது சார்” என்றார்.

இரவு படுக்கைக்குப்போய்விட்ட தோழர் அலாவுதீனுக்கு போன்செய்து, “மனுவேல் செயராஜ் போன் நம்பரைத் தாருங்கள்” என்று கேட்டு வாங்கினேன்.

மணி 11க்கு மேல் ஆகிவிட்டது, சற்றே தயக்கத்தோடுதான் போன் செய்தேன். மதுரை சென்ரல் மார்க்கெட் காய்கறி மற்றும் அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மனுவேல் ஜெயராஜ் அவர்கள் மார்க்கெட்டின் பேரிரைச்சலுக்கு நடுவே போனை எடுத்துப் பேசினார்.


இந்நேரத்துக்கு நான் கூப்பிட்ட திகைப்பு அவரின் குரலில் தெரிந்தது. நான் நேரடியாக விசயத்தை சொன்னேன். “விலையைக் குறைக்க வேண்டும் அல்லது போடப்படும் பொருளின் எண்ணிக்கையையும் எடையையும் கூட்ட வேண்டும்” என்றேன்.

அவரோ அவர் தரப்பில் இருக்கும் பிரச்சனைகளை விரிவாகக் கூறினார். பொருள்கள் போடவேண்டிய பையின் விலை, அதில் காய்கறிகளை நிறுத்துபோடுவதற்கான உழைப்பு என பலவற்றைச் சொன்னார்.

“உண்மைதான் சார், எல்லோரும் கஷ்டப்படுகிறோம். மக்களுக்காக கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்” என்றேன்.

சற்றே தயக்கத்தோடு “என்ன செய்ய முடியும் எனப் பார்க்கிறேன் சார்” என்றார்.


அடுத்து ஆணையருக்கு போன்செய்து, மனுவேல் ஜெயராஜ் நம்பரைக் கொடுத்து “நீங்களும் கையோடு பேசுங்கள்” என்றேன்.

“சார், மணி 11.30, என்றார்”
“அவர் மார்க்கெட்டில்தான் சார் இருக்கிறார். தாராளமாகப் பேசலாம்” என்றேன்.
உடனே அவரிடம் பேசிவிட்டு, என்னைக் கூப்பிட்டார், “எம்.பி. சாரும் பேசினாரு, நீங்களும் சொல்லியிருக்கீங்க. நான் நல்லபடியா பண்ணிக்கொடுக்கிறேன்” என்று சொல்லியுள்ளதாகக் கூறினார்.

மாநகராட்சி நிர்வாகம் 10 வண்டிகளை நாளை காய்கறி வியாபாரத்துக்காகக் கொடுக்கிறது. எரிபொருள் நிரப்பி, ஓட்டுநருடன் இலவசமாகக் கொடுக்கிறது. ஐந்து குழுகளும் தலா இரண்டு வண்டிகளை எடுத்துக்கொண்டு பைகளில் போடப்பட்டுள்ள காய்கறிகளைத் தெருகளில் கொண்டுசென்று மக்களுக்கு நேரடியாக விற்க வேண்டும். இப்புதிய முயற்சி நாளை சிறப்பாக நடந்தால் கூடுதலாக 70 வண்டிகளைத்தர மாநகராட்சி நிர்வாகம் தயாராக இருக்கிறது. இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள நினைக்கும் தன்னார்வலர்கள் கூடுதலாக முன்வரலாம்.

அடுத்த இரண்டு வாரத்துக்கு சந்தைகளில் கூட்டமாய்க் குழுமிக்கிடப்பதைத் தவிர்ப்போம். சரியான மாற்று ஏற்பாட்டுக்கு விரைவாய்ப் போவோம். ஒவ்வொரு நாளும் சூழல் மோசமாகிக்கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தோடு மடிக்கணினி முன் உட்கார்ந்தேன்.


கொடுமையிலும் கொடுமை, கிராமப்புற மக்களுக்கு வேலைபார்த்த கூலியை இன்னும் கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. எனவே மத்திய ஊரக துறை அமைச்சருக்கு கடிதம் எழுதத் தொடங்கும்போது தொலைபேசி அலைப்போசை கேட்டது.

இரவு 12.15க்கு யார் கூப்பிடுவது என்று யோசித்தபடி போனை எடுத்தேன். மனுவேல் ஜெயராஜ் சார் கூப்பிட்டார். “எம் பி சார். நீங்களும் கமிஷினரும் உங்களுக்காகவா கேக்குறீங்க; மக்களுக்காத்தான கேக்குறீங்க. அதனால சுமார் எட்டரை கிலோ எடைக்கு இருபது வகையான காய்கறியோடு பை போட்டுக்கொடுத்துற்றோம் சார்” என்று எண்ணிக்கையையும் எடையையும் கூட்டி உற்சாகத்தோடு சொன்னார்.

மிகுந்த நன்றியைக் கூறிக்கொண்டேன்.

மதுரை மக்களே… காய்கறிக்காக நள்ளிரவு வரை பேரம் பேசியுள்ளோம். கைவிட்ராதீங்க.

No comments:

Post a Comment