Showing posts with label கோட்ஸே. Show all posts
Showing posts with label கோட்ஸே. Show all posts

Sunday, February 1, 2026

கோட்சேவுக்காக மறைக்கப்படுகிறதா காந்தியின் உடல்?

 


நேற்று முன் தினம் மகாத்மாவை மறவோம், கோட்சேவையும் . . .  என்ற பதிவில் போடுவதற்காக மகாத்மாவின் சடலத்தை வைத்திருக்கும் படத்தை கூகிளில் தேடினேன்.

என்ன பதில் கிடைத்தது பாருங்கள்.


மகாத்மா காந்தியின் பெயரை வேலை உறுதிச்சட்டத்திலிருந்து நீக்கியவர்கள், இப்போது அவரது சடலத்தின் படத்தையும் இருட்டடிப்பு செய்கிறார்கள்.

கோட்சேவின் புகழ் பாடும் மோடி வகையறாக்களுக்கு அவனால் கொல்லப் பட்ட மகாத்மாவின் சடலம் பொது வெளியில் இருப்பது உறுத்தலாகத்தானே இருக்கும்!

பிகு: பழைய பதிவொன்றை தேடிப்பிடித்து கிடைத்த படத்தை பகிர்ந்து கொண்டேன்.


Friday, January 30, 2026

மகாத்மாவை மறவோம். கோட்சேவையும்

 


இந்தியாவின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சூழ்ச்சியால், கோழை சாவர்க்கர் போட்டுக் கொடுத்த திட்டத்தின் படி கோட்சேவின் தோட்டாக்களுக்கு மகாத்மா காந்தி தன் இன்னுயிரை அர்ப்பணித்த நாள் இன்று.

விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளின் கையில் ஆட்சி இருக்கும் கொழுப்பில் இன்று ஏராளமான பதிவுகளை பார்க்க முடிந்தது.

மகாத்மாவை கொச்சைப்படுத்தும் பதிவுகள் மட்டுமல்ல அது, கொலைகாரன் கோட்சேவை தேசப்பிதா என்று வர்ணிக்கும் அளவிற்கு எழுதப்பட்ட பதிவுகள் அது.

அவர்கள் விரும்பியபடி இந்தியா 'ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம்" என்று மாறாமல் இன்னும் பன்முகத் தன்மையோடு நீடிப்பதற்கான அடித்தளம் இட்டவர்கள் காந்தியும் நேருவும் என்பதால்தான் அவர்கள் இறந்து எத்தனையோ வருடங்கள் கடந்த பின்னும் இன்னும் வெறுக்கிறார்கள்.

இந்தியாவின் சிறப்பான பன்முகத்தன்மையையும் மத நல்லிணக்கத்தையும் மத சார்பின்மையையும் பாதுகாப்போம் என்று உறுதியேற்போம். அதன் மூலம் மகாத்மாவையும் மறக்காமல் இருப்போம். கோட்சே ஒரு கடைந்தெடுத்த கயவன் என்பதை அம்பலப்படுத்தும் ஒரு நூலின் அறிமுகத்தை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

கோட்சே கூட்டத்தின் சூழ்ச்சியும் சதியும்.

 



 

நூல் அறிமுகம்

 

நூல்                                                     : நாதுராம் கோட்சே –    உருவான வரலாறும்

                                                                இந்தியா குறித்த அவனது பார்வையும்

 

ஆசிரியர்                                          : திரேந்திர கே ஜா

தமிழில்                                             :  தமிழில் இ.பா.சிந்தன்

வெளியீடு                                         : எதிர் வெளியீடு

                                                                பொள்ளாச்சி

விலை                                                : ரூபாய் 500.00

 

 

ஆன்மீக அரசியல், நிழல் ராணுவங்கள் என்று சங் பரிவார அமைப்புக்களை, அவற்றின் சதிகளை செயல்பாடுகளை அம்பலப் படுத்திய நூல்களை எழுதிய திரேந்திர.கே.ஜா அவர்களின் நூல். முந்தைய நூல்களைப் போலவே இந்நூலும் பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் கடின உழைப்பால் நம்மிடம் தமிழில் பேசுகிறது.

 

இந்நூல் இரு பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதி “சூழ்ச்சி” என்றும் இரண்டாம் பகுதி “சதி”  என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

 

முதல் பகுதியின் பக்கங்களை தள்ளுவதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. அதற்கு நூலாசிரியரோ, மொழி பெயர்ப்பாளரோ காரணம் அல்ல. ஏனென்றால் முதல் பகுதி கோட்சேவின் ஆரம்ப கால வாழ்வை சொல்கிறது. கோட்சேவின் மந்தம் நூலிலும் எதிரொலிக்கிறது.  எந்த ஒரு வேலையையும் செய்ய உடல் வணங்காத, ஆனால் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை கொண்ட மனிதனாகவே கோட்சே இருந்திருக்கிறான்.

 

மகாத்மா காந்தியின் சட்ட மறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டவனின் வாழ்க்கை சாவர்க்கரின் சகவாசத்தால் திசை மாறுகிறது.  மதவெறி மனதில் ஊறுகிறது. மகாராஷ்டிராவின் பேஷ்வாக்களைப் போல இந்து ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்று ஆசைப்படும் கோட்சே ஆர்.எஸ்.எஸ் மற்றும் சாவர்க்கரின் இந்து மகா சபை ஆகிய இரு அமைப்புக்களிலும் செயல்படுகிறான்.

 

ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகா சபை ஆகிய இரண்டும் தனித்தனி அமைப்புக்கள் போல காட்சியளித்தாலும் இரண்டின் நோக்கங்களும் ஒன்றே என்பதையும் இந்துக்கள் மட்டுமே இந்தியக்குடிமகனாக இருக்க வேண்டும் என்பதையும் இதர மதச் சிறுபான்மையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இரண்டு அமைப்பிறகும் வேறுபாடுகள் கிடையாது என்பதை நூல் விரிவாக பேசுகிறது.

 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பாடப்படும் பாடலோடுதான் கோட்சே இந்து மகா சபை கூட்டத்தை துவக்குவான் என்பதையும் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களையும் நடத்துவான் என்பதும் ஆர்.எஸ்.எஸ் நிறுவனரான ஹெட்கேவர் இந்து மகா சபையின் துணைத்தலைவர் என்பதும் இரண்டு அமைப்புக்களும் வேறல்ல என்பதை உணர்த்தும்.

 

இந்து ராஜ்ஜியம் அமைவதற்கு காந்திதான் தடையாக இருப்பார் என்று கோட்சே நீண்ட நாட்களாகவே கருதி வந்தான் என்பதை ஆதாரங்களோடு எடுத்துரைக்கும் நூல், காந்தியே தற்கொலை செய்து கொள் என்று மகாத்மா காந்தி நடத்திய ஒரு போராட்டத்தின் போது கூச்சலிட்டான் என்பதையும் சொல்கிறது.

 

கோட்சேவைப் பற்றி மட்டும் இந்த நூல் பேசவில்லை, கோட்சேவுடன் மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் தூக்கிலிடப்பட்ட நாராயன் ஆப்தே, இருவருக்குளான நட்பு ஆகியவற்றைப் பற்றியும் பேசுகிறது. கோட்சே அடிப்படையில் பெண்களுக்கு எதிரானவன் என்றும் நாராயண் ஆப்தே பெண்களை வஞ்சிப்பவன் என்பதும் தெரிகிறது. சாவர்க்கரின் அரசியல் (மன்னிப்பு உட்பட) நூல் விவரிக்கிறது.  கோட்சே பத்திரிக்கையாளர் அவதாரமெடுத்து நச்சு பரப்பியதையும் நூல் முழுமையாக பதிவு செய்துள்ளது. அதிலே பிரச்சினை வந்த போது சாவர்க்கர் பாணியில் மன்னிப்பு கேட்கவும் அபராதம் செலுத்தவும் அவன் தயங்கவில்லை

 

நூலின் இரண்டாம் பகுதி ஒரு துப்பறியும் நூலுக்கு இணையான வேகத்தில் செல்கிறது. இந்தியாவை இந்து நாடாக உருவாக்க வேண்டும் என்பதற்காக மத வெறி கொண்டலைந்த கோட்சே ஆப்தே கூட்டாளிகள், ஜின்னாவை கொல்ல வேண்டும், பாகிஸ்தான் செல்லும் ரயிலை தகர்க்க வேண்டுமென்று திட்டமிட்டு நிதி சேகரிக்கிறார்கள், ஆனால் அவர்களால் அது முடியவில்லை அதனால் காந்தியை கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக ஆட்களை சேர்க்கிறார்கள்.

 

ஆப்தே இத்திட்டத்தில் தீவிரமாக இருக்க கோட்சேவோ பட்டும் படாமல்தான் இருக்கிறான். சாவர்க்கரை சந்தித்து ஆசி வாங்கிக் கொண்டு புறப்படுகின்றனர். மதன் லால் பக்வா என்பவனை அவனுக்கு தெரியாமலேயே காந்தியை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். கடைசி நேரத்தில் அவன் பயந்து போய் பின் வாங்க, கையெறி குண்டை அவன் வீசினால்  அந்த குழப்பத்தில் மற்றவர்கள் சுட்டு விடுவார்கள் என்று முடிவு செய்யப்படுகிறது. ஜனவரி 20 அன்று பக்வா குண்டை வீச, மற்றவர்கள் எதுவும் செய்யாமல் முயற்சி தோற்றுப் போகிறது. அவன் மட்டும் மாட்டிக் கொள்கிறான்.

 

அதன் பின்பு மகாத்மா காந்தியை சுடுவதென்று கோட்சே முடிவு செய்கிறான். அந்த கொடுமையையும் நிகழ்த்துகிறான். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த வீரர்களின் வழக்கில் மக்களின் ஆதரவு கிடைத்தது போல தனக்கும் இந்துக்களின் ஆதரவு கிடைத்து பெரிய ஆளாகி விடலாம் என்பதுதான் கோட்சேவின் எண்ணம். ஆனால் அது நடக்கவில்லை. மக்களின் எதிர்ப்பு மட்டுமே கிடைத்தது.

 

அவனுக்கும் ஆர்.எஸ்.எஸ் ற்கும் சம்பந்தம் கிடையாது என்று சொன்னதெல்லாம் பொய் என்பது பின்பு நடைபெற்ற சோதனைகளில் கிடைத்த ஆவணங்களின் மூலம் அம்பலமானது என்பதை நூல் பதிவு செய்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் நடக்கப்போவது முன்பே தெரியும் என்பதை ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வாக்கர் ஒரு கூட்டத்தில் பேசிய போது பூடகமாக தெரிவித்துள்ளார் என்பதையும் நூல் பதிவு செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் பட்டியலையோ வரவு செலவு கணக்குகளையோ பராமரிக்காமல் இருப்பது இது போன்ற சந்தர்ப்பங்களில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிப்பதற்குத்தான் என்கிறது நூல்.  கோட்சே வைத்திருந்த கணக்கு நோட்டு கிடைத்ததால் அவனது கூட்டாளிகள் சிக்கிக் கொண்டனர் என்பதோடு இணைத்துப் பாருங்கள்.

 

காந்தியின் கொலை வழக்கின் போது  யாரோ ஆங்கிலத்தில் தயாரித்து கொடுத்த உரையைத்தான் கோட்சே படித்தான் என்றும் அதன் மூலம் தன்னை தியாகியாக காண்பித்துக் கொள்ள முயன்றான் என்பதையும் நூல் உணர்த்துகிறது.  தூக்கு மேடை ஏறுவதற்கு முன்பு கூட கடைசியாக கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரார்த்தனை பாடலை கோட்சே பாடியிருக்கிறான். அகண்ட பாரதம் உருவான பின்பே சிந்து நதியில் தன் அஸ்தியை கரைக்க வேண்டும் என்று கோட்சே சொன்னதால் அது இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று பரப்பட்டுள்ள செய்தியும் ஒரு கட்டுக்கதையே என்பதை நூல் சொல்கிறது. எப்படி? நூலை படித்து விடுங்களேன்.

 

இந்தியாவில் இந்துத்துவ கொள்கைகளின் தோற்றத்தையும் அது எப்படி மகாத்மா காந்தியின் கொலைக்கு இட்டுச் சென்றது என்பதையும் தன்னை ஒரு நாயகனாக உருவாக்கிக் கொல்லவே கோட்சே காந்தியை கொலை செய்தான் என்பதையும் மிகவும் விளக்கமாக சொல்கிறது இந்நூல்.  மொழியாக்கம் என்ற உணர்வே வராத அளவிற்கு சிறப்பாக தமிழில் தந்துள்ள தோழர் இ.பா.சிந்தனுக்கும் கருத்துக்களை முடக்கும் ஆட்சியாளர்கள் இருப்பினும் இந்த நூலை வெளியிட்ட எதிர் வெளியீடு தோழர் அனுஷிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

 

பின் குறிப்பு : திருமணம் ஆனவன் என்பதை மறைத்து நாராயண் ஆப்தேவால் ஏமாற்றப்பட்ட பெண் மனோரமா என்ற பெண்ணும் மதன்லால் பக்வாவை மிகவும் நேசித்த செவாந்தி என்ற பெண்ணும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் துயரத்தை அடிப்படையாகக் கொண்டே புனைவுகளை உருவாக்க வேண்டுமென்ற தூண்டுதல் வருகிறது.

 

Friday, May 19, 2023

கோட்ஸே கும்பலோடு ஒரு மோதல்

 


வீட்டின் புனரமைப்பு வேலைகளின் இறுதிக் கட்டம். அதனால் விடுப்பில் வீட்டில்தான் இருக்கிறேன். கொஞ்ச நேரம் முன்பாகத்தான் கணிணியை உயிர்ப்பித்து முக நூலுக்கு சென்றேன்.


அங்கே மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு சங்கிப் பெண்மணி காந்தியை படுகொலை செய்த கோட்சேவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருந்தார்.


தேச விரோத, பயங்கரவாத ஆதரவு, மனிதத்தன்மையற்ற பதிவு என்று கோபமாக பதில் போட்டால்

அந்த அம்மணியோ ரொம்பவுமே கூலாக "எப்படி?" என்று கேட்கிறார்.

வேறு சிலரும் பதிவுக்கு எதிராக எழுதத் தொடங்கினார். 

"கோட்சேவை கொண்டாடும் கும்பல்தான் இக்குழுவில் பெரும்பாலானவர்கள் என்ற என் மதிப்பீட்டை நிஜமாக்கிய பதிவர், அட்மின் மற்றும் மாடரேட்டர்களுக்கு நன்றி. வெட்கம் கெட்ட ஜென்மங்களே!"

என்று சூடாக அடுத்த பின்னூட்டத்தையும் போட்டேன்.

இன்னொரு சங்கி" குழு முடக்கப்படும் அபாயம் உள்ளது" என்று எழுத என்ன ஆனதோ, பதிவை காணவில்லை.

சில நாட்களுக்கு முன்பாக அப்படித்தான் ஒரு லெட்டர்பேட் கட்சிக்காரர் கூட இதே குழுவில் மோதல் நடந்தது. அது பற்றியும் எழுத வேண்டும்.

இந்த குழுவில் நீடிக்க வேண்டுமா என்ற கேள்வி கூட வந்தது. இருப்பதால்தானே இது போன்ற அயோக்கியத்தனப் பிரச்சாரம் நடப்பது தெரிகிறது என்று மனதை தேற்றிக் கொண்டேன்.

வெறும் பார்வையாளராக இல்லாமல் அவ்வப்போது சூடாக பதில் கொடுப்பதால் அவர்களே கூடிய சீக்கிரம் தூக்கி விடுவார்கள்.

அதற்காக "ஐ யம் வெய்ட்டிங்"


Monday, January 31, 2022

கோட்ஸே பல் இளிக்கிறான்.

 




இந்த ஏழாண்டுகளில் நிலைமை மாறியுள்ளது. முன்பெல்லாம் காந்தி ஜெயந்தியோ, காந்தி நினைவு நாளோ வந்தால் சங்கிகள் அடக்கி வாசிப்பார்கள். கோட்ஸேவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று ஆர்.எஸ்.எஸ் சொன்னது போல அவர்களும் ஒதுங்கி நிற்பார்கள்.

 ஆனால் மோடி எனும் கேடி பிரதமரான பின்பு நிலைமை மாறிக் கொண்டே இருக்கிறது.

 காந்தியை எந்த அளவு திட்ட முடியுமோ, அந்த அளவு திட்டுகிறார்கள். காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் கிடையாது. அவருடைய கொள்கைகள், செயல்களோடு கண்டிப்பாக முரண்பாடு உண்டு. ஆனால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவரது மகத்தான பங்கையோ, விடுதலைப் போரில் சாமானிய மனிதர்களை ஈர்த்தவர் அவர்தான் என்பதையோ யாராலும் மறுக்க முடியாது.

 விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருங்காலிகள் என்பதால் விடுதலைப் போராட்டத்தையும் அதிலே மகாத்மாவின் பங்களிப்பையும் கொச்சைப் படுத்திய பல பதிவுகளைப் பார்த்தேன். (மத்யமர் அரசியல் என்று தனியாக ஒரு குழுவே உருவாக்கப்பட்டு விட்டது. என் ரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடாது என்று அதில் இணையவில்லை. அதில் என்னென்ன அபத்தங்களோ தெரியவில்லை)

 அது மட்டுமல்ல, கோட்சே காந்தியைக் கொன்றது நியாயமே என்ற பதிவுகளும் பல. தோழர் ஜெயச்சந்திர ஹாஷ்மி அவரது நட்புப் பட்டியலில் உள்ள ஒருவருடய பதிவை மனம் நொந்து பகிர்ந்து கொண்டார். அது இங்கே.



 காந்தியைக் கொன்றது கோட்ஸே என்று சொல்லக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கூட்டத்தில் புகுந்து தடுக்குமளவு காவல்துறையில் சில கறுப்பாடுகள் காவிமயமாகி உள்ளன. வழக்கு வேறு பதிந்துள்ளார்கள்.

 இதையெல்லாம் பார்த்தால் கோட்ஸே கண்டிப்பாக பல் இளிப்பான்.

 அதிகாரத்தின் உச்சத்திற்கு ஒரு மோசமானவன் வந்தால் அவனால் அந்த ஒட்டு மொத்த அமைப்பையுமே நாசமாக்கி விட முடியும்.

 இன்றைக்கு இந்தியாவில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மோடி எனும் மோசமான மனிதன் ஆட்சிக்கு வந்து விட்டதால் சங்கிகள் எல்லோருமே தங்கள் கோரப் பற்களோடு ரத்தம்  ருசிக்க துடிக்கிறார்கள். பொய் சொல்லவோ விஷத்தைப் பரப்பவோ கொஞ்சமும் கூசாத ஜந்துக்கள் இவர்கள்.

 சுயேட்சையாக செயல்பட வேண்டிய அனைத்து அரசியல் சாசன அமைப்புக்களுமே, நீதிமன்றங்கள் உட்பட அரசின் கடைக்கண் பார்வைக்கு ஏற்ப செயல்படுகின்றன.

 மோடி ஆட்சியை தூக்கி எறிவதைத் தவிர வேறு எப்படியும் இந்த நிலைமையை மாற்ற இயலாது.