Wednesday, July 28, 2010

திருமண மந்திரம் என்ற ஆணாதிக்க அபத்தம்.

இன்று மகளிர் செய்ய முடியாத பணிகள் என எதுவுமே கிடையாது
என்ற நிலை ஏற்பட்டிருந்தாலும் மதங்கள் மகளிரை சற்று தள்ளியே
நிறுத்தியுள்ளன. வேதங்களை பயிலுவதோ ஏன் உச்சரிப்பதோ கூட
மகளிர் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. (அது அவசியமற்றது
என்பது வேறு விஷயம்.) அக்காலத்தில் முனிவர்களாக, ரிஷிகளாக
பெண்கள் இருந்திருக்கிறார்கள் என சிலர் வாதம் புரிந்தாலும் மகளிர்
புறக்கணிக்கப்பட்ட ஒரு துறையாகத்தான் வேதம் பயிலுதல் என்பது
இருந்துள்ளது. பெண்களுக்கு எதிரான கருத்துக்களையே வேதங்கள்
கொண்டுள்ளதால்தான் அவ்வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது என்பதை
சமீபத்தில் உணர்ந்து கொண்டேன்.

திருமண மந்திரங்களின் முக்கியத்துவத்தை விளக்கி அதன் தமிழ்
அர்த்ததுடன் கூடிய ஒரு புத்தகம் ஒரு திருமணத்தில் தரப்பட்டது.
திருமண விருந்தை விட அப்புத்தகம் பரபரப்பை உருவாக்கியிருந்தது.
அப்புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்த போது திருமண மந்திரங்கள்
உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.

அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது?

மணமகளை "பரிசாகப்" பெற்ற மணமகன் கீழ்க்கண்டவாறு பிரார்த்தனை   செய்ய வேண்டுமாம்.

" என்னிடம் சகல சௌபாக்கியங்களுடன் வரும் இந்நங்கை எனது சகோதரர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கட்டும்.  ஹே பிரகஸ்பதியே!  பதியான எனக்கு தீங்கு செய்யாதவளாக இவள் இருக்கட்டும்  இந்திரனே, எங்களின்   மழலைச்செல்வங்களுக்கு இவளால் 
தீங்கு வராதவாறு ஆசீர்வாதம்    செய் சூரியனே!"

திருமணத்திற்கு முன்பே மனமகளால் தனக்கோ, தன சகோதரர்களுக்கோ, இனி பிறக்கப்போகும் குசந்தைகளுக்கோ தீங்கு விளையும், அது கூடாது  என    அட்வான்ஸ் பிரார்த்தனை செய்தால்  மணவாழ்வு  எப்படி  இனிமையாக அமையும்? ஆனால் இதே போன்ற பிரார்த்தனையை மணமகள் செய்ய முடியாது. அதற்கான மந்திரங்களே கிடையாது.

அடுத்து வரும் மந்திரம் இன்னும் சிறப்பு:

" மணமகளே! உன் கண்கள் கருணை நிரம்பியதாக இருக்கட்டும். உன்
பதியாகிய எனக்கு உன்னால் எத்தீங்கும் வரவேண்டாம். என்னைச்சார்ந்த  என் உறவினர்களிடம் அன்பாக இரு. நீ
பெருந்தன்மை உள்ளவளாகவும் ஒளி படைத்தவளாகவும் இரு. உன்
குழந்தைகள் நிறை ஆயுள் பெற்றவர்களாக இருக்கட்டும்.  எனது
பந்துக்கள் நலனில் அக்கறை உள்ளவளாகவும், எங்களது
உடமைகலாகிய பிராணிகளின் நலனில் கவனமாகவும் இரு "


அடேங்கப்பா!  என்னவெல்லாம் எதிர்பார்ப்பு!       உறவினர்களை கவனித்துக்  கொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆடு, மாடு, தொழுவம் என எல்லா  வேலைகளையும் நீதான் பார்த்துக் கொள்ளவேண்டும் என கண்டிப்புடன்  சொல்லி விட்டது வேதம்.


அடுத்து வருவது இன்னமும் மோசம்.


" கட்டை விரலாலும் மோதிர விரலாலும் தர்ப்பத்தை எடுத்து    பெண்ணின் இரு புருவங்களிடையில் துடைத்து மேற்குபுறமாக   எறிந்து விடவேண்டும். அதன் கருத்து ' ஒ பெண்ணே! உனது  பதியான என்னைக் கெடுக்கும் படியான எண்ணம் ஏதேனும்  உன்னிடம் இருந்தால் அதை இந்த தர்ப்பையுடன் தூர எரிகிறேன்"

பெண்கள்  மீது  எப்படிப்பட்ட  மதிப்பு  வேதத்திற்கு  உள்ளது  பாருங்கள்.  உன்னால்       எந்த  தீங்கும்  வரக்கூடாது  என மீண்டும்  மீண்டும்  மிரட்டுகிறது  வேதம்.  


கண்ணீரால்  ஏற்படும்  புனிதத்தன்மையை  அகற்ற  அடுத்து  ஒரு  மந்திரம்  வருகிறது.


மணமகளைப் பிரியும் போது    பெற்றோர்கள், உறவினர்கள் கலங்குவது, 
கண்ணில் நீர் வருவது     பாசத்தின்  இயல்பான  வெளிப்பாடு.   அப்படிப்பட்ட கண்ணீர் புனிதம்  அற்றதாம். எனவே அதனைக் களைவதற்கு ஒரு மந்திரமாம்.   மனிதர்களின் இயல்பான உணர்வுகளை மறுக்கிறதா வேதம்? அல்லது திருமணத்திற்குப் பிறகு பெண்கள் சிந்தும் கண்ணீர் புனிதமற்றது என்பதை முன்கூட்டியே சொல்லி வைத்து விடுகிறது போலும்.

அடுத்து வருவது மணமகளை பரிசுத்தம் செய்யும் படலம்.


" ஒ இந்திர! நுகத்தடியின் துவாரத்தில் ஜலத்தை விட்டு நீ   அபாலா என்ற கன்னிகையை சுத்தமாக்கி சூரியன் போல்  பிரகாசிக்கச்செய்தாய். அப்படியே இவளையும் பிரகாசமுள்ளவளாக  செய். உடல் வலிமையுள்ளவளாக, நோய் அற்றவளாக செய்"  

மணமகளிடம் ஏதேனும் நோய் அல்லது குறைபாடு இருந்தால் இம்மந்திரம்
அதனை அகற்றி விடுமாம். அதற்காக ஒரு முன்கதை சுருக்கம் வேறு    சொல்லப்படுகின்றது. நோயோ, குறைபாடோ அது இருவருக்கும்   பொதுவானதுதானே!   பரிசுத்தமாக வேண்டியது இருவரும்தானே. ஆனால்   வேதமோ மணமகள் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது. என்னே பெருந்தன்மை!இல்லை இன்றைய சில பணக்கார வக்கிரங்கள் செய்யும் கன்னித்தன்மை சோதனையின் வேதகால வடிவம் இம்மந்திரமோ?


மாங்கல்யம் தந்துனா என்று திரைப்படங்கள் மூலம் அனைவருமே
அறிந்துள்ள மந்திரத்தின் அர்த்தம் என்ன தெரியுமா?


நான் சிரஞ்சீவியாக இருப்பதற்குக் காரணமான இந்த   திருமாங்கல்ய நானை உன் கழுத்தில் கட்டுகிறேன். ஏ பாக்யவதி  நீயும் நூற்றாண்டு காலம் வாழ்வாயாக"

அப்பா என்ன ஒரு பேராசை! மணமகன் இறப்பே வராமல் சிரஞ்சீவியாக
வாழ்வாராம். அதற்குக் காரணமாக உள்ள பெண்ணுக்கு மட்டும் போனால்
போகட்டும் என நூறாண்டு ஆயுள் தருவாராம். வேடிக்கையாக இல்லை?

கடைசியாக வருகின்ற மந்திரம்தான் மிகக்கொடுமையானது.  அதற்கு
தேவர்களின் தொடர்பை நினைவூட்டல் என்று பெயராம்.

"மணமகளே! சோமதேவனுக்கு  நீ முதலில் கிடைக்கப் பெற்றாய்.  அதன் பிறகு கந்தர்வதேவனுக்கு  துணையானாய். பின்னர்  அக்னி   தேவன் உன் கணவனாக இருந்தான். இப்போது மனிதப்பிறவியாக   நான் உனது நாலாவது  கணவன்"

இதைப்படிக்கும் போதே கோபம் வரவில்லை? குமட்டிக்கொண்டு 
வரவில்லை? 
மொத்தத்தில் பெண்களை அடிமைகளாக மட்டுமே வேதம்கருதுகிறது  
என்பதும்  அதற்கான  சட்டபூர்வ  அடிமை சாசனமாகவே  திருமண மந்திரங்கள் உள்ளது   என்பதும் தெளிவாகிறது. 

மந்திரங்களின் அர்த்தத்தை உணர்ந்தோ உணராமலோ இந்த மந்திரங்களோடு ஏராளமான திருமணம்  அன்றாடம்  நடைபெற்றுக்
கொண்டே  இருக்கிறது.  பெண்கள் இவற்றின் உட்பொருளை உணர்ந்து கொண்டால்பொங்கி எழுவார்கள் என்பதால்     வேதம் பயிலும்    வாய்ப்பு   அவர்களுக்கு    மறுக்கப்பட்டுள்ளது   என்பதும்  தெளிவு.

கற்பு என்றால் அதனை இருவருக்கும் பொதுவில்  வைப்போம்  என்று  பாரதி பாடினான். ஆனால்வேதமோ பெண்களுக்கு  மட்டும் உபதேசிக்கிறது.  

பெண்களை  மட்டும்  சந்தேகிக்கிறது  .பெண்களுக்குமட்டுமேகட்டளையிடுகிறது. பெண்களை  அடிமைகளாக மட்டுமே கருதுகிறது. 

திருமண மந்திரங்கள் என்பது  இன்று  வெற்று  சடங்காக  மட்டுமே கூட  இருக்கலாம்.  ஆனாலும் நாம்  கவலைப்பட வேண்டிய   அவசியம்   ஒன்றுள்ளது.  வேத காலம் திரும்பிட  வேண்டும். வேதங்களின்  அடிப்படையில்  ஆட்சி  நடைபெற வேண்டும் என   
சங்பரிவாரக்கூட்டம் ஆசைப்படுகின்றது. மகளிருக்கு  எதிரான 
பிற்போக்குக் கருத்துக்களை அவ்வப்போது விதைத்துக் கொண்டே இருக்கிறது. 

ஊருக்கு மட்டும் உபதேசம் செய்பவர்களை  ஒதுக்கி வைப்பது என்பது  ஒரு 
உலக  இயல்பு. பெண்களுக்கு  மட்டும்  உபதேசம்  செய்கிற வேதங்களை  நாம்     ஒதுக்கிட வேண்டும். அதுதான்  எங்களின்  அடிப்படை தத்துவம்   என்று  சொல்பவர்களையும்  சேர்த்தே ஒதுக்கி வைக்க வேண்டும்.


( டிசம்பர் 2006  மகளிர் சிந்தனை  இதழில்  வெளியான எனது 
கட்டுரை  மேலே தரப்பட்டுள்ளது.)     






Friday, July 16, 2010

கலைஞரே ஒரு கவிதை கேளுங்கள்

 மனு தர்மம் காக்கும் மனுநீதிச்சோழர் கலைஞரே, இந்த கவிதையை
கொஞ்சம் படியுங்கள். நூறாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட
இக்கவிதை உங்களின் அவைப்புலவர்கள் போல உங்களை துதி பாடி
எழுதப்பட்டதல்ல. ஆயினும் படியுங்களேன்.

வீழ்வோமாயினும் வெல்வோம்.

நூறாயிரம் தடவைகள் தடுமாறி இருக்கிறது,
தலைக்குப்புற விழுந்திருக்கிறது.
 சிராய்த்துக் கொண்டிருக்கிறது.
மீண்டும் எழுந்திருக்கிறது தொழிலாளர் இயக்கம்.
கழுத்து நெரிக்கப்பட்டிருக்கிறது!
மூச்சு திணறி உணர்விழுந்திருக்கிறது!
நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டு,
தாக்கப்பட்டிருக்கிறது அடியாட்களால்!
தடியடி பட்டிருக்கிறது காவல்துறையினரால்!
சுடப்பட்டிருக்கிறது இராணுவத்தால்!
அவதூறு போஜியப்பட்டிருக்கிறது பொதுமக்களால்!
மிரட்டப்பட்டிருக்கிறது மதகுருக்களால்!
திசைதிருப்பப் பட்டிருக்கிறது அரசியல்வாதிகளால்!
நிராகரிக்கப்பட்டிருக்கிறது ஒடுகாலிகளால்!
உதிரம் உறிஞ்சப் பட்டிருக்கிறது புல்லுருவிகளால்!
ஊடுருவப்பட்டிருக்கிறது உளவாளிகளால்!
காட்டிக்கொடுகப்பட்டிருக்கிறது துரோகிகளால்!
பாரம்பரியம் இழந்திருக்கிறது பச்சோந்திகளால்!
விலை பேசப்பட்டிருக்கிறது கோழைகளால்!
இததனையும் மீறி இவ்வளவும் தாண்டி 
இந்தப புவிக்கோளம் இதுநாள் வரை 
அறிந்தவற்றுள் எல்லாம் 
ஜீவனும் திறனுமுள்ள சக்தியாய்
காலங்களின் அடிமைத்தளையிலிருந்து 
பாட்டாளி வர்க்கத்தை விடுவிப்பதான - தனது
சரித்திரக் கடமையை நிறைவேற்றும்!
சூரியன் உதிக்கும் என்பது போல நிச்சயமாய்

அடங்கிப்போவதுதான் அமைதி என்று
புதிய சமூக நீதி படைத்துள்ள கலைஞரே!
பாட்டாளி வர்க்கம் உம்மை
ஒருநாளும் மன்னிக்காது.

Sunday, July 11, 2010

கோயிலுக்கு ஒரு நியாயம். மசூதிக்கு ஒரு நியாயமா?






                                   




வேலூர் கோட்டை என்றால் பொதுவாக மக்களுக்கு நினைவில்
வருவது அகழியால் சூழப்பட்ட அழகிய கற்கோட்டை. வரலாறு
தெரிந்தவர்களுக்கு வெள்ளையனுக்கு எதிரான முதல் சுதந்திர
முழக்கம் அங்கேதான் ஒலித்தது என்பது நினைவிற்கு வரும்.
ஆன்மீக அன்பர்களுக்கு அங்கே உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயம்
மனதில் தோன்றும். கோட்டைக்குள்ளே திப்புசுல்தான் வழிபட்ட
ஒரு மசூதி ஒன்று உண்டு எனவோ அதிலே வழிபடும் உரிமை
இஸ்லாமியர்களுக்கு தொடர்ந்து மறுக்கப்படுகின்றது என்பது
பலருக்கு புதிய செய்தியாக இருக்கலாம்.


வேலூர் கோட்டையின் சிறப்பம்சம் என்பது பிரிட்டிஷ்
 ஏகாதிபத்தியத்தை  எதிர்த்து இந்து ,முஸ்லிம் சிப்பாய்கள்
ஒன்றிணைந்து போராடினார்கள் என்பதும் கோட்டையில்
இருந்த வெள்ளையர்களை வீழ்த்தி யூனியன் ஜாக் கொடியை
கீழிறக்கி திப்புவின் புலிக்கொடியை பறக்க விட்டார்கள்.
எட்டே மணி நேரத்தில் இப்புரட்சி வெள்ளையர்களால்
மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டது. எண்ணூறு இந்திய
வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வெட்டப்பட்டும்,
சுடப்பட்டும், தூக்கிலடப்பட்டும், பீரங்கி வாயில் கட்டி
வைக்கப்பட்டும் சிதறடிக்கப்பட்டனர். இந்து முஸ்லிம்
வீரர்களின் குருதி ஒன்றாய் கலந்து கோட்டை அகழியை
செம்மயமாக்கியது.


வேலூர் கோட்டை புரட்சியின் பிறப்பிடம் மட்டுமல்ல,
இந்து முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளசசின்னமும்
கூட.


வெள்ளையர்கள் வழிபட்ட தேவாலயம் இன்றும்
பயன்பாட்டில் உள்ளது. அவர்கள் ஆட்சி செய்தபோது
ஜலகண்டேஸ்வரர் ஆலயமும் மசூதியும் ஆயுத்தசாலையாக
தானியக்கிடங்காக மாற்றப்பட்டது. ஜலகண்டேஸ்வரர் லிங்கம்
கோட்டைக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு " சாமி
இல்லாத கோயில்" என்ற பெயரை வேலூருக்குப்
பெற்றுத்தந்தது.


இந்திய விடுதலைக்குப்பின்பு  வேலூர் கோட்டை
தொல்பொருள் துறையின்  கைவசம் வந்தது. 1947 ல்
எது எப்படி இருந்ததோ அதே நிலை அப்படியே தொடர
வேண்டும் என வறட்டுச்சட்டம் பேசியது அத்துறை.
கோயிலும் மசூதியும் மீண்டும் வழிபாட்டிற்குத்
திறந்து விடப்பட வேண்டும் என்ற கோரிக்கை
நிராகரிக்கப்பட்டது.


ஆனால் 80 ளில்  மாவட்ட ஆட்சியர் கங்கப்பா 
துணை கொண்டு இந்து அமைப்புக்கள் லிங்கத்தை 
மீண்டும் கோயிலுக்குள் அமைத்து விட்டனர். அங்கே 
இப்போது ஜலகண்டேஸ்வரர் அருள் பாலித்துக் 
கொண்டிருக்கிறார். 


ஆனால் மசூதி வழிபாடு மட்டும் கானல்நீராகவே 
உள்ளது. சட்டம் பேசி தடுக்கிறது தொல்பொருள்துறை. 
மத்தியஅரசோ  இது பற்றி எந்த முடிவையும் எடுக்க
தயங்குகிறது. சங் பரிவாரங்கள் மசூதியை திறக்கக் 
கூடாது என மிரட்டுகின்றன.


இஸ்லாமிய அமைப்புக்களும் மார்க்சிஸ்ட் கட்சியும் 
பல இயக்கங்களை நடத்தி விட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின்
மறைந்த மக்களவை உறுப்பினர் தோழர் மோகன் பங்கேற்ற 
தர்ணா போராட்டம் முடிந்ததும்  இந்து முன்னணி  ஒரு கூட்டம்
போட்டு மதுரை எம்.பி க்கு வேலூரில் என்ன வேலை என்று 
கேட்டது. 


அயோத்தியில் கோயில் கட்ட பாகிஸ்தானில் பிறந்த 
அத்வானி மட்டும் ரத யாத்திரை செல்லலாம் என்பது 
அவர்களது நியாயம்.


1947 ல் கோட்டையில் இருந்த நிலை அப்படியே இல்லை
என்பதுதான் உண்மை. பல அலுவலகங்கள் இடம் மாறி 
விட்டன. புதிதாக துவங்கப்பட்ட திருவள்ளுவர் 
பல்கலைக்கழகம் அங்கேதான் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது. ஜலகண்டேஸ்வரர் மீண்டும்
வந்து விட்டார்.


ஆனாலும்  மசூதி மட்டும் திறக்கப்படாது என
பிடிவாதம் பிடிப்பது சரியல்ல. அகழியில் கலந்து
ஓடிய இந்து முஸ்லிம் வீரர்களின் ரத்தம்
மத ஒற்றுமையை உயர்த்திப் பிடித்தது. இன்னமும்
அந்த பாரம்பரியத்தை பாதுகாத்து வரும் வேலூர்
மண்ணில் மசூதியும் திறந்து விடப்பட்டால் வேலூர்
கோட்டை, கோயில், மசூதி, தேவாலயம் என்று மூன்று
மதத்தினரின் வழிபாட்டுத் தளங்களோடு மத
நல்லிணக்கம்  சாத்தியமே என  என்றென்றும்
உரக்க முழங்கும்.   

Saturday, July 10, 2010

நெஞ்சை நெகிழ வைத்த ஒரு விழா
















இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமான
வேலூர் சிப்பாய் புரட்சியை கொண்டாட தமிழ்நாடு
முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
இன்று விழா நடத்தியது. மூன்றரை மணி நேரம்
நம்மை கட்டிப்போட்ட விழா.

குறுமன்ஸ் பழங்குடி இன மக்களின் துடிப்பான 
நடனம், காளையாட்டம், புலியாட்டம், மற்றபடி 
சிறப்பான பாடல்களைத் தொடர்ந்து ஒரு கூட்டம்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு ராஜேந்திரனும் 
சட்டப் பேரவை உறுப்பினர் திரு ஞானசேகரனும்
முக்கியப் பேச்சாளர்கள். ஞானசேகரன் உரை 
வழக்கமான  அரசியல்வாதியின் உரை. ஆனால்
மாவட்ட ஆட்சியரின் உரை யதார்த்தமாக 
அமைந்திருந்தது ஒரு ஆச்சர்யம்.

அவர் பேசியதிலிருந்து

சிப்பாய் கலகம் என மாவட்டத்தில் எங்கெல்லாம் 
பதிவு செய்யப்பட்டதுள்ளதோ அவையெல்லாம் 
சிப்பாய் புரட்சி என மாற்றப்படும்.

காந்தியின் அஹிம்சைப் போராட்டம் மட்டுமல்ல
நேதாஜியின் முயற்சிகள், மற்ற அமைப்புக்களின்
போராட்டங்கள் எல்லாமும் சேர்த்துத்தான் 
இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தது. 
(ஒரு மாவட்ட ஆட்சியர் இந்த உண்மையை 
சொல்வது கூட இன்று ஒரு அதிசயம்தான்) 

வேலூர் புரட்சியை வட இந்திய வரலாற்று 
ஆசிரியர்கள் திட்டமிட்டு மறைத்து விட்டார்கள்.

சுதந்திரப் போராட்டம் குறித்த புரிதலை 
மாணவர்கள் மத்தியில் விதைக்க முயற்சிகள்
மேற்கொள்ளப்படும்.

112  வெள்ளை சிப்பாய்களும் அதிகாரிகளும் 
கொல்லப்பட்டனர். அவர்களைப் பற்றிய 
பதிவு உள்ளது. ஆனால் கொல்லப்பட்ட இந்திய
சிப்பாய்கள் பற்றியோ அவர்கள் எங்கு புதைக்கப் 
பட்டார்கள் என்பது பற்றியோ எந்த விவரமும் 
இல்லாமல் பார்த்துக்கொண்டது  வெள்ளையர்களின் 
திமிர்தான். 

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்   எந்த ஒரு 
பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொண்டது  
ஒரு தமிழ்க்கலாச்சார மாண்பு. இதை மற்றவர்களிடம்
எதிர்பார்க்க முடியாது. (சிங்களர்களை சொல்கிறாரா?) 

இந்த புரட்சியைக் காட்டிக்கொடுத்தது ஒரு 
குடிகாரன். இப்போது நாம் ஏராளமான டாஸ்மாக்
திறந்து வைத்துள்ளோம்.

சமீபத்தில் காலமான சாரல் கலைக்குழுப் பாடகர்
தோழர் மணிவேலன் குடும்ப நிதியாக ரூபாய் 
இருபத்தி ஐந்தாயிரம் வழங்கப்பட்டது. ௦௦அப்போது
அவர் பாடிய பாடல் ஒளிபரப்பானது. அந்தக் குரல்
கேட்டு  பக்கத்து வரிசையில் அமர்ந்திருந்த அவரது
உறவினர்கள் அழுதது மனதை ஏதோ செய்து 
கொண்டே இருக்கிறது.

வேலூர் சிப்பாய் புரட்சியின் முக்கியமான ஒரு
அம்சமான இந்து முஸ்லிம் வீரர்களின் ஒற்றுமை
குறித்து ஏன் யாருமே குறிப்பிடவில்லை  என்பதுதான்
ஒரு நெருடலாக உள்ளது.
   

     

Friday, July 9, 2010

ஆக்டபஸ் ஜோசியம் பார்க்கும் அறிவியல் தேசங்கள்

நம்ம ஊர் கிளி ஜோசியமே மேல் என்று சொல்லக்கூடிய
விதத்தில் ஐரோப்பிய மக்கள் பைத்தியம் பிடித்து
அலைகின்றனர். உலகக் கோப்பை கால் பந்து
ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெரும் என ஆரகிள்
என பெயரிடப்பட்ட ஆக்டபஸ் சொல்லுகிறதோ அந்த
அணிதான் வெற்றி பெறுகிறது என பரபரப்பாய்
பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

நம்ம ஊர் கிளி ஜோசியத்தில் கூண்டை விட்டு
வெளியே வரும். அடுக்கி வைத்த சீட்டுக்களில்
ஏதேனும் ஒன்றை எடுத்துத் தரும். இந்த வேலை
கூட ஆக்டபச்சிற்கு கிடையாது. இரண்டு நாடுகளின்
கொடிகள் வைக்கப்பட்ட பெட்டிகளில் எதைத்
தொடுகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறுமாம்.

ஜெர்மனி தோற்றுப் போகும் என்ற ஜோசியம்
பலித்து விட்டதால் அதை சுட்டு தின்று விடப்
போகிறார்கள் என ஸ்பெயின் அரசே பதறுகிறது.

அறிவியலில் வளர்ந்த நாடுகள் என்று
 சொல்லப்படுபவையும்   இப்படி மூட
நம்பிக்கையை வளர்ப்பவர்களாகவே உள்ளது
நகைச்சுவையாகவும் உள்ளது, வேதனையும் 
அளிக்கிறது. 

இப்படி ஆக்டபசை ஜோசியத்திற்கு
பயன்படுத்துவது   மிருக வதையின் கீழ்
வராதா என்பதை மேனகா காந்திதான்
விளக்க வேண்டும்.

பின் குறிப்பு

இந்த பதிவை எழுதி முடிப்பதற்குள் இரண்டு  
குறுஞ்செய்திகள் வந்து விட்டன.

ஸ்பெய்ன்தான் வெற்றி பெறும் என
ஆக்டபஸ் கூறி விட்டதாம். இதற்காகவாவது
நெதர்லாந்து வெற்றி பெற வேண்டும்.
இல்லையென்றால் நம் கிரிக்கெட் சூதாடிகள்
ஆக்டபஸ் பண்ணை வளர்க்கத் தொடங்கி விடுவார்கள்

Tuesday, July 6, 2010

ஏன் இந்த வெறி? யாரை திருப்திப் படுத்த இந்த அராஜகம்?





அனேகமாக எல்லா மாநிலங்களிலும் நேற்று கதவடைப்புப் போராட்டம்
மக்களிடத்தில் தாக்கத்தை உருவாக்கும் அளவில்தான் நடைபெற்றது.
மிரட்டல்கள் மூலமாக சில இடங்களில் ஆளும் கட்சிகள் கடைகளை
திறக்க வைத்திருக்கலாம், அரசு வாகனங்களை ஓட வைத்திருக்கலாம்.
ஆனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு சரியில்லை என்ற
உணர்வு மக்களுக்கு ஏற்பட்டு விட்டது என்கிற வரையில் எதிர்க்கட்சிகளுக்கு
வெற்றியே.

நியாயமான கோரிக்கைக்காக நடைபெறுகின்ற ஒரு போராட்டம், அக்கோரிக்கை
வெற்றி பெற்றால் நுகர்வோராக உள்ள காவல்துறையைச சேர்ந்தவர்களுக்கும்
நல்லதுதான். ஆனால் எப்படி வெறியோடு போராடுபவர்களை தாக்குகிறார்கள்
பாருங்கள், இந்த வேகம் சமூக விரோதிகளை கைது செய்வதிலோ அல்லது
கொலை, கொள்ளைக்காரர்களை பிடிப்பதிலோ தென்படுவதே இல்லையே!

ஆளும் கட்சியின் தொ(கு)ண்டர் படையாக செயல்படுவது என்று மாறும்?

Saturday, July 3, 2010

தமிழினக் காவலர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

இலங்கையில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்கு யாரும்
 செல்லக்கூடாது    என்று தடை போட்ட நம் தமிழ்க்காவலர்கள்
 அதே விழாவை  நம் வீடுகளுக்கே   இன்று சன்   மியுசிக் தொலைக்காட்சி கொண்டு வந்து விட்டதே!
இப்போது என்ன    செய்யப்போகிறார்கள்? சன் 
 தொலைக்காட்சியையும், சன் பிக்சர்சையும்   புறக்கணிக்க
அறைகூவல் விடுப்பார்களா? இல்லை உமாசங்கர் கதியைப்
பார்த்து அமைதியாக இருந்து விடுவார்களா?

Thursday, July 1, 2010

வெற்றிப் பயணம் தொடரும்

                                 








இன்று எங்களின் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
அறுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.  மனம்
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எல்.ஐ.சி யில் பணியில்
சேராவிட்டால் இந்த அமைப்பில் இணையும் வாய்ப்பு
கிடைத்திருக்காது.  ஒரு சரியான திசைவழியில் செல்லும்
வாய்ப்பும் கிடைத்திருக்காது.


அலுவலகம், விட்டால் வீடு என்ற சராசரி குமாஸ்தா
வாழ்வில் காலம் முடிந்து போவதற்குப் பதிலாக
எல்லாவற்றையும் ஒரு அறிவியல் பார்வையோடு
அணுக கற்றுக் கொடுத்த ஒரு அமைப்பு. நிறுவனம்
நன்றாக இருந்தால்தான் நாமும் நன்றாக இருக்க
முடியும். நேர்மையான உழைப்பை வழங்குங்கள் என
உறுப்பினர்களை வலியுறுத்தும் அமைப்பு. நிறுவனத்தை
பாதுகாக்க தொடர்ந்து போராட்ட களத்தில் சளைக்காமல்
செயல்படும் அமைப்பு.

அலுவலகத்தின் நான்கு சுவர்களோடு நின்று போகாமல்
கையெழுத்து இயக்கம், பிரச்சார இயக்கம் என தன
உறுப்பினர்களை மக்கள் மத்தியில் இயங்கசசெய்த
சங்கம். உழைக்கும் மக்களின் ஒன்று பட்ட போராட்டம்
இல்லாமல் விடிவு சாத்தியமில்லை என உணர்த்தியுள்ள
சங்கம்.

மதச்சார்பின்மை, தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றில்
கவனம் செலுத்தும் அமைப்பு, நேரடியாக களத்தில்
நிற்கும் அமைப்பு. அவசர நிலை காலத்திற்கு எதிராக
உறுதியோடு போராடிய அமைப்பு.

உலகமயமாக்கலுக்கு எதிராக இந்தியாவிலேயே
முதல் குரல் எழுப்பிய அமைப்பு.

எல்.ஐ.சி தோன்றும் முன் உருவாக்கி, எல்.ஐ.சி யை
உருவாக்கி, இன்றுவரை  பாதுகாத்தும் வருகிற அகில 
இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கம் இன்று தனது
அறுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 

மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த சங்கத்தில் 
நானும் ஒரு உறுப்பினர் என்பதிலே பெருமை 
கொள்கிறேன். இந்த வெற்றிப் பயணம் தொடரும்.
எங்கள் தியாக முன்னோரை போற்றுகிறேன்.