தப்புக் கணக்கு தீர்ப்பை விமர்சித்தால் அவதூறு
வழக்கு தொடர்வோம் என்று பார் கவுன்சில் மற்றும் தமிழக வழக்கறிஞர்கள் சங்கம்
எச்சரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பார்த்தேன்.
ஏராளமான வழக்கறிஞர் சங்கங்கள் உள்ளன. அதிலே ஏதாவது
ஒரு அம்மா ஆதரவு வக்கீல் சங்கம் அப்படி சொல்லியிருந்தால் அதற்கு முக்கியத்துவம்
கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் பார் கவுன்சில் என்பது அப்படி இல்லை.
அது கிட்டத்தட்ட ஒரு அரசு அமைப்பினைப் போன்றதுதான்.
அரசியல் கட்சிகளையோ இல்லை பொது மக்களையோ மிரட்டுவது அதன் வேலை கிடையாது.
வழக்கறிஞர்களை நெறிப்படுத்துவது என்பது அதன்
முக்கியமான பணி. வழக்கறிஞர்களுடைய உரிமைகளுக்காக செயல்படுவது என்பது மற்றொரு பணி.
இந்தப் பணிகளை பார் கவுன்சில் சிறப்பாக செய்கிறதா
என்பதை வழக்கறிஞர்கள்தான் சொல்ல வேண்டும்.
காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்கள்,
நீதிபதிகள் நியமனத்தில் இல்லாதிருக்கும் வெளிப்படைத்
தன்மை,
தேங்கிக் கிடக்கும் வழக்குகள், அலையும் அப்பாவி
மக்கள்,
அடிக்கடி நிகழும் நீதிமன்ற புறக்கணிப்புகள்,
அடிப்படை வசதிகளற்ற நீதிமன்றங்கள்
போன்ற பிரச்சினைகளில் பார் கவுன்சில் என்ன நடவடிக்கை
எடுத்துள்ளது என்பதை தெரிவித்தாலும் மகிழ்ச்சியுறுவேன்.
அது போல மைக்கேல் குன்ஹாவை மிகக் கேவலமான முறையில்
தமிழகம் முழுதும் அதிமுக ரத்தங்கள் திட்டி அசிங்கப் படுத்திய போது அதற்கு எதிராக
பார் கவுன்சில் இது போன்ற எச்சரிக்கை விடுத்ததா என்பதைக் கூட யாராவது விளக்கினால்
நலம்.
அப்படி இல்லாமல் அம்மாவிற்காகத்தான் இந்த சிறப்பு
நடவடிக்கை என்றால் பார் கவுன்சிலிடம் இரண்டு செய்திகளை சொல்ல வேண்டியிருக்கும்.
“உங்களுக்கு விதிக்கப்பட்ட வேலைகளை முதலில்
பாருங்கள். இந்த அரசியல் உங்களுக்கானது அல்ல”
இதை விட இன்னும் அழுத்தமாக சொல்வோம்.
நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்.
நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.
அதை கீழேயுள்ள படமும் உணர்த்தும்.