Showing posts with label நேரு. Show all posts
Showing posts with label நேரு. Show all posts

Thursday, November 14, 2024

நேருவின் மேல் என்னய்யா பயம்?

 


எங்கள் தஞ்சைக் கோட்டத் தோழரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளருமான தோழர் களப்பிரன் எழுதிய முகநூல் பதிவையும் அவர் எழுதிய கட்டுரையையும் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நேரு பற்றிய கட்டுரையை அவரது பிறந்த நாளன்று கூட அச்சிட ஊடகங்கள் மறுக்கின்றன என்றால் யார் மீது பயம்? 

இன்றைய ஆட்சியாளர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்ற பயமா?

மோடி மாதிரியான சில்லறைகள் பிரதமராக இருக்கும் காலத்தில் இப்படியும் ஒரு சிறந்த மனிதர் பிரதமராக இருந்தார் என்ற உண்மை தெரியக்கூடாது என்ற பயமா?

நேரு பற்றி கட்டமைத்த பொய்கள் தகர்ந்து போகுமா என்ற அச்சமா?

தோழர் களப்பிரனின் முகநூல் பதிவு கீழே

*9 ஆண்டுகளை இந்திய விடுதலைப் போரில் சிறையில் கழித்தவர்.*
*17 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இருந்தவர்.*
*தன் குடும்ப சொத்துக்கள் பலவற்றை இந்த நாட்டிற்கு கொடையளித்தவர்.*
*அவர் பிறந்த நாள் குழந்தைகள் தினமும் கூட.*
*ஆனால் அவர் குறித்து ஒரு கட்டுரையோ, செய்தியோ எதுவும் எதிலும் வந்துவிடக் கூடாது என்ற மேலிட உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு எல்லா அச்சு ஊடகங்களும் அச்சத்தால் இன்று மௌனம் காக்கிறது.*
*இது நம் ஜனநாயகத்திற்கு கொஞ்சமும் நல்லதல்ல...*
*இந்தச் சூழலில் நேரு குறித்த என்னுடைய இன்றைய பொழுதின் இரண்டாவது கட்டுரை.*
*இந்தக்கட்டுரையும் ஒரு பெரும் அச்சு ஊடகம் அச்சப்பட்டு பதிப்பிக்க மறுத்த கட்டுரையே. இதனை மாற்று இணைய இதழ் தற்போது பதிப்பித்துள்ளது.*
*அவசியம் வாசிக்கவும்*
மாற்று இணைய தளத்தில் வெளியான கட்டுரை

நேரு – இந்தியாவின் விலைமதிப்பில்லா ஆபரணம்


”இந்திய விடுதலையின் விடியலுக்கு முன்னால் இருந்த இருள் சூழ்ந்த பொழுதில், நமது வழிகாட்டும் விளக்காக ஜவஹர்லால் நேரு தான் இருக்க வேண்டும் என்ற முடிவும், விடுதலையை நாம் சாதித்ததைத் தொடர்ந்து, இந்தியா பிரச்சினைக்குப் பின் பிரச்சனையை எதிர் கொள்ளும் போது, நமது நம்பிக்கையை உயர்த்திப் பிடிப்பவராகவும், நமது படைகளின் தளபதியாகவும் நேரு மட்டுமே இருக்க வேண்டும் என்பதும், அவருக்கு இருந்த தகுதிகளின் அடிப்படையில் தான் அவரை தேர்வு செய்தோம். நமது கடினமான வாழ்வின் கடைசி இரண்டு ஆண்டுகளில் இந்த நாட்டுக்காக நேரு எந்த அளவுக்கு உழைத்தார் என்பது என்னை விடவும் வேறு ஒருவரும் அறியார். அவர் சுமந்த பிரமாண்டமான பொறுப்புக்களாலும், அவர் வகித்த உயர்ந்த பதவி தந்த கவலைகளாலும், அந்தக் காலத்தின் போது, விரைவாக அவருக்கு வயதாகி விட்டதை நான் கண்டேன்.” 

இந்த வார்த்தைகளை நேருவின் தீவிர ஆதரவாளரோ, நண்பரோ, உறவினரோ, அல்லது அவரை விட வயதில் குறைந்த யாரோ ஒருவர் சொல்லியிருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர்   நேருவை விட 14ஆண்டுகள் வயதில் மூத்தவரான சர்தார் வல்லபாய் படேல். நேருவுக்கு எதிராக பல நேரங்களின் இன்றைய பிரதமர் தொடங்கி ’நேரு ஒவ்வாமை’ கொண்ட அத்தனை சங்பரிவாரத்தவர்களும் நேருவிற்கு எதிராக படேலை முன் நிறுத்தி உண்மைக்குப் புறம்பான பிரச்சாரம் செய்துவருகிறார்கள். படேலின் 150ஆவது ஆண்டுவிழாவில் கூட படேலை உயர்த்திப்பேசுவதற்காகவே நேருவை தாழ்த்திப்பேசும் நிகழ்வுகள் அறங்கேறின. ஆனால் உண்மை அதுவல்ல என்பதை அந்தக்காலத்தின் ஆவணங்கள் நமக்கு உணர்த்துகிறது. நேரு குறித்த நீண்ட உரையின் ஒரு பகுதியான இந்த வார்த்தைகள், படேல் தான் காலமாகும் ஓராண்டு முன்பாக 14 அக்டோபர் 1949ல் தன் அந்திம காலத்தில் பேசியவை.

நேருவின் தேர்வும் – படேலின் இசைவும்

1947 இந்திய விடுதலைக்கு முன்பாக நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் மிக முக்கியமானது. அந்தத் தேர்தலில் தேர்வு செய்யப்படுகிறவர் தான் இந்தியாவின் முதல் பிரதமர் என்கிற நிலை இருந்தது. அன்றைய இந்தியாவின் 15 மாகானங்களில் 12 மாகனங்கள் படேலை தேர்வு செய்தனர். அந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சியை படேல் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் இந்திய நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமல்ல, உலகத் தலைவர்கள் மத்தியிலும் புகழ் மிக்க தலைவராக நேரு இருந்தார். அதோடு காந்தியடிகள் தனது தீவிர விசுவாசியான படேலுக்கு பதிலாக, தன்னிடம் பல இடங்களில் முரண்படும்  நேருவை பிரதமராக தேர்வு செய்ய தனது விருப்பத்தை தெரிவித்தார். அதற்கு காந்தியடிகள் சொன்ன காரணம், “நேரு நவீன சிந்தனை கொண்டவர். உலகலாவிய அவரின் முற்போக்கு எண்ணம் கொண்ட பார்வை இந்தியாவின் எதிர்காலத்திற்கு உதவும்” என்று குறிப்பிட்டார். இறுதியில் காந்தியின் முடிவே காங்கிரஸ் முடிவானது.

நேரு விடுதலை இந்தியாவின் முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் 1947 ஆகஸ்ட் 1 அன்று நேரு படேலுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் “ஓரளவு சம்பிரதாயங்கள் கடைபிடிக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் மத்திய அமைச்சரவையில் உங்களை சேர்த்துக் கொள்வதற்கான முறையான அழைப்பு விடுப்பதற்கான கடிதம் இது. இந்தக் கடிதத்திற்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது, ஏனெனில் நீங்கள் நம் அமைச்சரவையின் வலுவான தூண்.” என்று குறிப்பிட்டார். அதற்கு படேல், “எனது வாழ்வின் எஞ்சியுள்ள காலம் முழுவதும் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். உங்களைப் போன்ற தியாகத்தை வேறு யாரும் செய்ததில்லை, நாட்டின் லட்சியத்தை நிறைவேற்ற அப்பழுக்கற்ற முழுமையான விசுவாசத்தை காட்டுவேன்.” என்று பதில் எழுதினார். இந்த இருவரைத் தான் இன்றைக்கு ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்த முயற்சிக்கிறார்கள்.

எல்லோருக்கும் இடம் கொடுத்த நேரு அமைச்சரவை

கருத்தியல் ரீதியில் படேலுக்கு நேருவிற்கு பல எதிர் முனைகள் இருந்தாலும், செயல்பாட்டில் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து எங்கும் நடந்துகொள்ளவில்லை. படேல் மட்டுமல்ல, எதிர்கட்சிகளாக இருந்தவர்களையும் கூட தன்னுடைய முதல் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார் நேரு. தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் நேருவின் கொள்கைகளை விமர்சித்து வந்தவர் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர். அதே போல் நேரு தன் காலம் முழுக்க விமர்சித்து வந்த இந்து மகாசபை அமைப்பின் அப்போதைய தலைவர் டாக்டர் ஷியாம்பிரசாத் முகர்ஜி. இந்த இருவருக்கும் தனது அமைச்சரவையில் இடம் கொடுத்தார் நேரு. அதற்கு நேரு சொன்ன காரணம், ”இருவரின் கல்வி மற்றும் அரசியல் அறிவுத்திறன் புதிய இந்தியாவிற்குத் தேவை” என்றார். அதோடு ”நாம் பெற்றுள்ள சுதந்திரம் காங்கிரஸுக்கானது மட்டுமல்ல, அனைத்து மக்களுக்குமானது” என்றார் நேரு. பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் தனது அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அவர் வாதிட்டார்.

நேரு வாரிசு அரசியலுக்கு வித்திட்டாரா

“நேரு தனது குடும்பத்தை மட்டுமே அரசியல் வாரிசாக்கினார் என்றும், படேல் உள்ளிட்டவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் திட்டமிட்டு அரசியலில் இருட்டடிப்பு செய்துவிட்டார்” என்றும் கூசாமல் இன்றும் தவறான விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள். உண்மை என்ன என்றால் நேரு காலமாகும் வரை அவரது ஒரே மகளான இந்திரா நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட அவர் அனுமதிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் படேல் மறைவிற்குப் பிறகு அவரது மகள் மணிபென் படேலுக்கு 1952 முதல் தேர்தலிலேயே தெற்கு கைரா தொகுதியிலிருந்து போட்டியிட வாய்ப்பு கொடுத்து வெற்றி பெறச்செய்தார். அதே போல் 1957ல் ஆனந்த் நாடாளுமன்றத் தொகுதியிலும் 1964 மாநிலங்களவை உறுப்பினராகவும் காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்டார் மணிபென். அதோடு 1957 தொடங்கி 1964 வரை மணிபென் குஜராத் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். அதே போல் படேலின் மகன் தஹ்யாபாய் படேலும் 1957 முதல் 1973 வரை நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பதவி வகித்தார். இதில் நகை முரண் என்னவென்றால் இன்றைக்கு படேலுக்காக கண்ணீர் வடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கார்ர்கள் தான், அன்றைக்கு படேல் வாரிசுகளான மணிபென்னும், தஹ்யாபாயும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட போது, ஒவ்வொரு முறையும் கடுமையாக எதிர்தவர்களாக இருந்தார்கள். ஆனால் நேருவின் ஒரே மகள் இந்திராவோ 1964 நேரு மறைவிற்குப் பிறகே நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார்.

நேரு சந்தித்த தேர்தல்கள்

நேருவை பிரதமராக தேர்வு செய்த காந்தியடிகள் 1948லேயே இந்துத்துவ தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுவிட்டார். நேருவின் அமைச்சரவையில் இருந்த மூத்த உறுப்பினரான படேல் 1950லேயே காலமாகிவிட்டார். ஆனால் இவர்களது மறைவிகுப் பின்னர் தான் நாட்டின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலும் எழுத்தறிவு இல்லாத, ஆனால் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்களிக்கும் முறையில் முதன் முதலாக அறிவிக்கப்பட்ட உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு, தனது முதல் தேர்தலை 1952ல் சந்தித்தது. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக எதிர்கட்சிகளை தகாத வார்த்தைகளில் நேரு பேசவில்லை. உண்மைக்குப் புறப்பான செய்திகளை சொல்லி நேரு வாக்கு கேட்கவில்லை. அன்றைக்கு புதிய இந்தியாவின் முன் இருந்த பல்வேறு சவால்களை எளிய மக்கள் முன் வைத்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்யலாம் என்று பேசினார். அதோடு மதவாதத்தால் பீடிக்கப்பட்டிருந்த பகுதிகளின் மத்தியில் மதவாதத்தில் உள்ள தீமைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சாரத்தின் முடிவில் நடந்த தேர்தலில் தான் 490 இடங்களில் காங்கிரஸ் 364 இடங்களில் வெற்றி பெற்றது. அது முதல் தேர்தல் அதனால் தான் அவ்வளவு இடங்களை காங்கிரஸ் வென்றது என்று நினைக்கலாம். ஆனால் நேரு இருந்த காலத்தில் நடைபெற்ற 1957ல் தேர்தலில் 371 இடங்களும், 1962 தேர்தலில் 361 இடங்களையும் தொடர்ந்து காங்கிரஸ் வென்றது. இது முழுக்க முழுக்க நேரு என்கிற மனிதர் இந்தியா எனும் நாட்டை மதசார்பற்ற, ஜனநாயக நாடாக பாதுகாத்து நடத்திய உள்நாட்டுப் போராட்டத்திற்கு, நாட்டு மக்களிடம் நடத்திய உரையாடலுக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.

நேரு குறித்து நிறைவாக படேல்

படேல் தனது மேற்கண்ட உரையின் நிறைவாக ”நேருவின் மாபெரும் மற்றும் அனைவரையும் விஞ்சி நிற்கும் ஆளுமை பற்றி இந்த சில வார்த்தைகளால் நிறைவு செய்வது வெளிப்படையாகவே இயலாத ஒன்று. அவரது பல்துறை திறம் மிக்க பாத்திரமும், சாதனைகளும் அவர் பற்றிய வரையறுப்பை உடன் மீறக்கூடியவை. சில நேரங்களில் அவருடைய சிந்தனைகள், எளிதில் அளக்க முடியாத ஓர் ஆழம் மிக்கவை. ஆனால் அவற்றுக்குள் எல்லாம் ஆழ்ந்திருப்பது, ஜாதி, சமயம், இனம் மற்றும் மத வேறுபாடின்றி அனைவருக்கும் அவரை பிரியமுடையவராக்கும் ஓர் வெளிப்படையான நேர்மையும், ஓர் இளைஞனின் நெஞ்சுரமும் தான். அவரது அறுபதாம் ஆண்டு வைர விழாவை முன்னிட்டு, சுதந்திர இந்தியாவின் இந்த விலை மதிப்பற்ற சொத்துக்கு நாம் மரியாதை செலுத்துவோம். இந்த நாட்டை முன்னேற்றுவதிலும், அவருடைய இலட்சியங்களை அடைவதற்கான முயற்சிகளிலும் அவர் பெரும், பெரும் வெற்றிகளை உறுதி செய்யட்டும்.” ஜவஹர் என்றால் ஆபரணம் என்று பொருள். ஆம் ஜவஹர்லால் நேரு நம் இந்திய நாட்டின் விலைமதிப்பில்லா ஆபரணம் தான்.

– களப்பிரன்

Tuesday, April 30, 2024

தப்பு பண்ணிட்டீங்க நேரு

 


ஆம்.

நேரு தவறு செய்து விட்டார்.

என்ன தவறு?

மோடி சொல்லும் தவறுதான்.


உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதிலும் நீர்ப்பாசனத்திற்காக அணைகளை கட்டுவதிலும் அடிப்படை கட்டமைப்புத் தேவைகளுக்காக பொதுத்துறை நிறுவனங்களை ஏற்படுத்தியதிலும் காண்பித்த அக்கறையை மோடி சொன்னது போல கோயில்களை கட்டியிருந்தால், நேரு உருவாக்கிய நிறுவனங்களை சிதைப்பது போல கோயில்களையும் பாபர் மசூதி போல இடித்திருப்பார் மோடி.

அதற்கு வாய்ப்பு தராமல் போய் விட்டீர்களே நேரு . . .

Thursday, December 29, 2022

மோடி நேருவாக முடியாது . .

 


மோடி தன் அம்மாவுக்கு ஈழுதிய கடிதங்கள் என்றொரு நூல் வெளி வந்திருப்பதாக அறிந்தேன். மனம் விட்டு சிரித்தேன்.

 


“உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது” என்ற பழமொழி மோடிக்குத்தான் பொருந்தும்.

 என்னத்தான் மோடி எப்போதும் நேருவை திட்டினாலும் அவர் நேரு போல தன்னை காண்பித்துக் கொள்ள முயல்கிறார். நேரு சிறையிலிருந்து தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் நூலாகி உலகப் புகழ் பெற்றது போல தானும் ஒரு நூல் எழுதி புகழ் பெற நினைக்கிறார் போல. . .

 எதுவும் தெரியாத முட்டாள் என்று நிரூபணமான மோடிக்கு புத்தகம் எழுதிக் கொடுத்த  பிசாசு எழுத்தாளர் (Ghost Writer)  யாரோ?

 அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் என்று நூல் வெளியிடுவதற்குப் பதில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தொகுத்து நூலாக்குங்கள் மோடி. அதுதான் உங்கள் நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் நூலாக இருக்கும்.

 

Tuesday, November 15, 2022

நேரு இல்லையேல் மோடியில்லை.

 


ஆமாம். நிஜம்தான்.


நேரு இல்லாமல் மோடியால் என்று எதுவுமே செய்ய முடியாது.

நேரு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியிருக்காவிட்டால் அவற்றை மோடி எப்படி விற்க முடியும்! எப்படி அந்த பணத்தில் ஊதாரித் தனமாக செலவழிக்க முடியும்!


நேரு தொலை நோக்குப் பார்வையோடு துறை முகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை உருவாக்கியிருக்காவிடில் மோடியால் எப்படி அவற்றை தன் நண்பன் அதானிக்கு தாரை வார்க்க முடியும்!

 

நேரு ஏர் இந்தியாவை உருவாக்கியதால்தான் அதனை மோடியால் டாடாவிற்கு தாரை வார்க்க முடிந்தது.

 

நேரு உருவாக்கிய எல்.ஐ.சி யின் பங்குகளை மோடியால் விற்க முடிந்தது.

 

இவை மட்டுமா, மோடி தன்னுடைய கையாலாகததனத்திற்கு பழி போட கிடைத்த பெரிய பொக்கிஷமல்லவா நேரு!

 

நேரு மட்டும் இல்லையென்றால் இன்று மோடியின் பிழைப்பே நடக்காது.

 

ஆனாலும் சங்கிகளுக்கு ஏன் நேரு மீது கடுப்பு?

 

சங்கிகள் இந்தியாவை அவர்கள் நினைத்தது போல

 

ஒரே நாடு-ஒரே மதம்-ஒரே மொழி- ஒரே கலாச்சாரம்

 

என்று திணிக்க முடியாத அளவிற்கு இந்தியாவின் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தையும் மதச்சார்பின்மையையும் மக்களின் மனதில் விதைத்து விட்டுப் போயிருக்கிறாரே! அவரை எப்படி சங்கிகள் ஏற்றுக் கொள்வார்கள்!

 

பாஜக யாரையெல்லாம் வெறுக்கிறதோ, அவர்களையெல்லாம் நாம் உயர்த்திப் பிடித்திட வேண்டும்.

 

பிகு: கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் நேருவின் புகைப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவர், ஒன்றிய அமைச்சர்கள் என யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்த வருடமும் கலந்து கொண்டது போல தெரியவில்லை. பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் எந்த செய்தியும் இல்லை. அதே நேரம் நரேந்திர மோடியின் பக்கத்தில் இரு வரி செய்தி உள்ளது. 



ஆனால் அதற்கு வந்துள்ள பின்னூட்டங்கள் படு கேவலமாக, நேருவை இழிவு படுத்துவதாகவே அமைந்துள்ளது. சங்கிகளின் புத்தி வேறெப்படி இருக்கும்!

Monday, November 14, 2022

நேரு எனும் சிற்பி




 *நாளொரு கேள்வி: 14.11.2022*


தொடர் எண்: *898*

*பொதுத் துறைகளின் சிற்பி நேரு பிறந்த நாள்*

இன்று நம்மோடு இன்சூரன்ஸ் ஒர்க்கர் ஆசிரியர் *அமானுல்லா கான்* (தமிழில் கோவை *சுதா*)
#########################

*தன்னாட்சி செயல்பாடா? - அரசாங்க கட்டுப்பாடா?*

கேள்வி: பொதுத் துறை நிறுவனங்களை கட்டுப்பாடு என்ற பெயரில் கழுத்தை நெரிக்கும் மத்திய அரசின் அணுகுமுறை, இன்சூரன்ஸ் துறை மீதான தாக்கம் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

*அமானுல்லாகான்*

மத்திய அரசு எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை தன்னாட்சிபெற்ற பொதுத்துறை நிறுவனங்களாக கருதாமல், அரசின் துறைகளைப் போன்றே கருதுகிறது என்பதை சமீப காலத்திய வளர்ச்சிப்போக்குகள் தெளிவாக காட்டுகின்றன.

தங்கள்வணிகங்களை நடத்த இந்நிறுவனங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றவை என்பதுஏட்டளவிலேயே உள்ளது. இந்த நிறுவனங்களின் நிர்வாகங்கள் (Board) அரசின் அதிகாரமுடிவுகளை சிரமேற்கொண்டு செயல்படுத்தும் அமைப்புகளாக மட்டுமே செயல்படும் நிலைக்கு தாழ்ந்துள்ளன.  இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகமட்டங்களின் முடிவெடுக்கும் செயல்திறனைக் கட்டுப்படுத்தும் இத்தகைய *அதிகாரமட்டத் தலையீடு அந்நிறுவனங்களுக்கு பெரும் தடையாக* உள்ளது. 

எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் செயல்பாட்டில் அதிகாரத்துவ தலையீடு காணப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்று நடந்துள்ளது. மற்ற பொதுத்துறை நிறுவனங்களைப் போலவே எல்.ஐ.சி மற்றும் அரசு பொது இன்சூரன்ஸ்  நிறுவனங்களும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசால் தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தலையீடும், கட்டுப்பாடும் தற்போது இருப்பது போல் அப்பட்டமாக கடந்த காலத்தில் இருந்ததில்லை. இத்தகைய தேவையற்ற தலையீடுகள் வணிகத்தேவைகளுக்காகவும், கடுமையான போட்டிச் சூழலை எதிர்கொள்ளவும் இயக்குனரவை திறம்பட முடிவெடுப்பதில் சிக்கலை உருவாக்கும் எனவும், தொழில்துறை உறவகளை மோசமாக பாதிக்குமெனவும் கூறக் தேவையில்லை.

பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களில் ஊதிய உயர்வு, நிலுவைக் தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. *முதல் முறையாக PSGI நிறுவனங்களின் ஆட்சிக் குழுவான GIPSA ஐ ஓரங்கட்டி, நிதிஅமைச்சக அதிகாரிகள், ஊழியர் சங்கங்களோடு நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதை இந்தத் துறை கண்ணுற்றது.* ஏப்ரல் 2019ல் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையின் போதே GIPSA ஊதிய உயர்வுக்கான கோரிக்கையை விரைவில் தீர்க்க ஆர்வமுடன் இருந்தது. நீண்டகால நடைமுறையினைப் போன்று எல்.ஐ.சிக்கு இணையான ஊதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் திறன் கொண்டவைகளாக அந்நிறுவனங்கள் உள்ளதென GIPSA தொழிற்சங்கங்களுக்கு உறுதியளித்தது. துரதிர்ஷ்டவசமாக இந்த நேர்மறையான உத்திரவாதத்திற்குப் பிறகு, ஜிப்சாவிடம் கனத்த மெளனம் நிலவியது. ஓவ்வொரு முறை பிரச்சனை எழுப்பப்படும் பொழுதும் கோரிக்கைகளை நிதிஅமைச்சகம் பரிசீலித்து வருகிறது என்ற பதிலைக் தந்தது...தீவிரமான பிரச்சாரங்களும், தொடர்ந்த போராட்டங்களும் GIPSA வை பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டிய நிர்பந்தத்தினை ஏற்படுத்தியது. மேலும் இத்தகைய இரண்டு சந்தர்ப்பங்களில், நிதி அமைச்சகத்தின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது முன்னெப்போதும் இல்லாதது.

இந்த விவாதங்களில் 1.8.2022 முதல் தரப்பட வேண்டிய ஊதிய உயர்வின் முற்றிலும் புதிய வடிவத்தினை தொழிற்சங்கங்களை ஏற்கச் செய்வதில் நிதி அமைச்சக பிரதிநிதி மிகுந்த ஆர்வம் காட்டினார். தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் எதிர்கால ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற திருத்தத்தினை உள்ளடக்கி ஊதிய ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுளள்து.. செயல்திறனை தீர்மானிக்கும் அளவுகோல்கள் குறித்து எந்த அறிவிப்பும் குறிப்பிடப்படவில்லை. சமூக பொறுப்புக்கள் மற்றும் அரசின் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு என்ன மதிப்பீடு வழங்கப்படும் என்பதை குறித்து அரசு எதுவும் கூறவில்லை. 

*பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனா* போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் கணிசமான இழப்பை சந்தித்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய பாலிசிகளுக்கான பிரிமிய விகிதங்களை நிர்ணயிக்க PSGI  நிறுவனங்களுக்கு சுதந்திரம் இல்லை, மேலும் இந்நிறுவனங்கள் இதனால் அடைந்த இழப்புகளுக்கான இழப்பீட்டையும் அரசு வழங்குவதில்லை. இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் ஊதியம் மற்றும் ஊழியர் நலன்கள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நிர்வாகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை  
அனுமதிப்பது தான் சிறந்தது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த பிரச்சனைகளில் அரசின் தலையீடு தொழிலக உறவுகளை சீர்குலைப்பது மட்டுமன்றி தொழிலக ஜனநாயகத்தை மீறும் நடவடிக்கையுமாகும்..

எல்.ஐ.சி நிர்வாகக்குழு *குடும்ப ஓய்வூதியத்தை ஒரே சீராக 30% ஆக உயர்த்துவதற்கான தனது பரிந்துரைகளை 2019ம் ஆண்டில் அரசிற்கு அனுப்பியது. இப்பிரச்சனை இன்று வரை நிதிஅமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது.* எல்.ஐ.சி திறமையான, செயல்பாட்டு சுதந்திரமிக்க நிர்வாகக்குழுவால் நிர்வகிக்கப்படுகிறது என்னும் கூற்றை கேலிக்குரியதாக்கவில்லையா? அல்லது நிதி அமைச்சக அதிகாரிகள் எல்.ஐ.சி நிர்வாகக்குழு தனது முடிவுகளின் விளைவுகளை புரிந்து கொள்ளும் தகுதியற்றது என எண்ணுவதின் வெளிப்பாடா? எல்.ஐ.சியின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதில் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் மெத்தனத்தினால் ஓய்வூதியதாரர்கள் பெரியதுன்பத்தை சந்தித்து வருகின்றனர். இந்த இடைப்பட்டகாலத்தில் கணிசமான ஓய்வூதியதியர்கள் இறந்துள்ளனர். அவர்களின் துன்பங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்பது உண்மையே. ஆனால் எல்.ஐ.சி நிர்வாகம் தனது பொறுப்பிலிருந்து தப்ப முடியுமா? பரிந்துரை செய்த பிறகு அரசின் ஒப்புதலை பெறுவதும், அதனை செயல்படுத்துவதை உறுதி செய்வதும் எல்.ஐ.சியின் பொறுப்பல்லவா? நாட்டின் மிகப்பெரிய நிதி நிறுவனத்தின் நிர்வாகக்குழு தனது நிலைபாட்டில் நின்று அரசிடமிருந்து ஒப்புதல் பெறுவதை உறுதி செய்து, அதன் பலன்கள் உத்தேசிக்கப்பட்ட தேதிகளிலிருந்து ஊழியர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றதா? இச்சூழல் தொழிலுறவுகள் உட்பட நிறுவனத்தை நிர்வகிக்க எவ்வளவு தன்னாட்சி அதிகாரத்தை எல்.ஐ.சி தன்னகத்தே கொண்டுள்ளது என்ற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது.

பாலிசிதாரர்களின் நலனைப் பாதுகாப்பதனை முதன்மையாகவும், நாட்டின் வளர்ச்சிக்கும் அதன்மூலம் ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் சேமிப்புகளை திரட்டுவதை அடுத்தபடியாகவும் கொண்டு எல்.ஐ.சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் பலமுறை, பாலிசிதாரர்களுக்கு நலன்களுக்கு எதிராக கடினமான பொருளாதார சூழலில் அரசை மீட்டெடுக்க  எல்.ஐ.சியை எதிர்பார்க்கும் பொழுது இந்த உத்திரவாதம் நீர்த்து போகிறது. *ஐடிபிஐ* அதற்கு சரியான உதாரணமாகும். ஐடிபிஐ பாரம்பரியமாக நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து வந்தது, ஆனால் துரதிர்ஷடவசமாக அரசின் குறுகிய நோக்கத்தினால் வளர்ச்சி வங்கி வணிக வங்கியாக மாற்ற பட்டது. அதன் காரணமாக இயல்பாகவே குறுகிய காலக்கடனை வாங்கவும், நீண்டகாலத்திற்கு முதலீடு செய்யவும் நிர்பந்தித்ததன் காரணமாக வங்கி நொடிந்து போனது. வங்கியை மீட்டெடுக்க அரசு எல்.ஐ.சியை நாடியது. *பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி எல்.ஐ.சி வங்கியின் பெரும்பகுதி பங்குகளை வாங்கி கடுமையாக முயன்று வங்கியை ஆரோக்கியமானதாக மாற்றியது. இந் நடவடிக்கையின் காரணமாக ஐடிபிஐ எல்.ஐ.சியின் மிகப்பெரிய வங்கி காப்பீட்டுக் கூட்டாளியாக மாறியது. நிலைமைகள் மாறி வரும் தருணத்தில் அரசு ஐடிபிஐ வங்கியை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பதற்கு முடிவெடுத்து, தனது பங்குகளை விற்பதோடு எல்.ஐ.சி வைத்துள்ள பெரும்பகுதி பங்குகளையும் விற்குமாறு பணித்தது.* தற்போது ஐடிபிஐயில் 49.24% பங்குகளை வவைத்கிருக்கும் எல்.ஐ.சி 20.24% பங்குகளை விற்கும்படி கேட்டுக்கொள்ளப் படுவதால் நிர்வாகக் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும்.  எல்.ஐ.சி நீண்ட கால ஆதாயங்களுக்காக ஐடி.பிஜயில் முதலீடு செய்திருந்தால், பங்குகளை விற்க ஏன் தற்போது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது? 

ஒவ்வொரு பெரிய தனியார் நிறுவனமும் ஒரு வங்கியால் ஆதரிக்கப்படும் நிலையில் போட்டிச் சூழல் சவாலை எதிர்கொள்ளும் எல்.ஐ.சிக்கு நிர்வாகக் கட்டுப்பாடு இல்லையென்றால் பின்னடைவாகிவிடாதா? உத்தேசித்துள்ள ஒப்பந்தத்திலிருந்து எல்.ஐ.சி லாபம் பெறுமா அல்லது பாலிசிதாரர்களின் நிதிகளுக்கு இழப்பை ஏற்படுத்துமா? பாலிசிதாரரின் நலன்களைப் பாதுகாப்பதே அதன் அடிப்படைப் பொறுப்பு என்பதை எல்.ஐ.சி நினைவில் கொள்ளவேண்டும், எந்த ஒப்பந்தமும் இந்தக் கொள்கையை சமரசம் செய்வதாக இருக்கக்கூடாது. 
எல்.ஐ.சி பங்கு விற்பனை என்னவாயிற்று? அது அரசின் நிதிப்பற்றாக்குறை இலக்குகளை சரி செய்வதற்காக மிகவும் புகழ் பெற்ற பொதுத்துறை நிதி நிறுவனத்தை விற்றதாகும்... வணிகத்தில்  ஈடுபடுவது அரசின் பணி அல்ல என்ற கருத்தியல் மட்டுமல்லாமல் நிதிப்பற்றாக்குறையினால் அரசு தவிக்கிறது. எனவே எல்.ஐ.சி நிர்வாகத்தை அவசரகதியில் பங்கு விற்பனைக்கு ஓப்புதல் அளிக்குமாறு வற்புறுத்திய்து. பொருளாதார தேக்கநிலை, போர் ஆகியவற்றின் காரணமாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் எந்த முதலீடும் செய்யாமல் எச்சரிக்கையாக உள்ளனர் என்பதை அறிந்திருந்தும், அரசு எல்.ஐ.சியின் 3.5% பங்குகளை விற்க முன்வந்தது. எல்.ஐ.சியின் பிராண்ட் மதிப்பும், மக்களிடையே அது ஏற்படுத்தியிருந்த நம்பிக்கையும் பங்கு விற்பனையின் வெற்றியை உறுதி செய்தன. ஆனால் பட்டியலிடுவதன் காரணமாக அதீத லாபத்தை எதிர்பார்த்த முதலீட்டாளர்கள், பட்டியலிடப்பட்ட விலை, பங்குகளின் விலையில் சரிவு ஆகியவற்றால் ஏமாற்றமடைந்தனர். இது மிகுந்த அதிருப்தியையும் புதுவணிகத்தில் நேரடி தாக்கத்தையும் ஏற்படுத்தியது. *நிறுவனத்திற்கு நிதித்தேவை இல்லாத நிலையிலும், நிதி வரவிற்கான தேவை ஏற்படாத நிலையில் எல்.ஐ.சி நிச்சயமாக பங்கு விற்பனை முடிவை எடுத்திருக்கக் கூடாது.* இது அரசு சிக்கலான பொருளாதார சூழலில் தனது நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட எடுக்கப்பட்ட முடிவு என்பதற்கு சரியான உதாரணமாகும்...

வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலன்களுக்கு ஏற்ப ஒரு நிறுவனம் தனது செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கு மிகவம் அவசியமான செயல்பாட்டு தன்னாட்சியை அரசின் அதிகாரத்துவம் எவ்வாறு தர மிறக்கியுள்ளது என்பதற்கு இவை சில எடுத்துக்காட்டுகள் ஆகும். அதீதமான அதிகாரத்துவ தலையீடு பாலிசிதாரர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வணிக முடிவுகளையே தோற்றுவிக்கும். எத்தகைய, சமூக நோக்கங்களுக்காக “தோற்றுவிக்கப்பட்டதோ அந்த நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் தங்களது செயல்பாடுகளை நிர்வகிக்க எல்ஐசி மற்றும் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள்  தேவையான தன்னாட்சி அதிகாரத்தைக் கோரிப் பெற வேண்டிய தருணம் இது.

*செவ்வானம்*

Wednesday, August 17, 2022

உலகம் உறங்கும் போது இந்தியா




 *நாளொரு கேள்வி: 16.08.2022*


தொடர் எண்: *808*

இன்று நம்மோடு இந்தியாவின் முதல் பிரதமர் *ஜவகர்லால் நேரு*
#########################

*உலகம் உறங்கும் போது இந்தியா விழித்துக் கொள்கிறது*

கேள்வி: 

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு தந்த செய்தி என்ன? 

*ஜவகர்லால் நேரு*

(உலகின் மிகச் சிறந்த பேச்சுகளில் ஒன்றான A Tryst With Destinyஐ இங்கே தமிழில்) 

"பல ஆண்டுகளுக்கு முன் விதியுடன் ஒரு சந்திப்புக்கு நாம் காலம் குறித்திருந்தோம். இப்போது நமது உறுதிமொழியை நிறைவேற்றும் காலம் வந்திருக்கிறது... *நள்ளிரவுக்கான மணியடிக்கும் இந்த நேரத்தில், உலகம் உறங்கும் வேளையில் இந்தியா வாழ்வோடும் விடுதலையோடும் விழித்தெழுகிறது.*

வரலாற்றில் இப்படிப்பட்ட தருணங்கள் அரிதாகவே கிடைக்கும். நாம் பழமையிலிருந்து புதுமையில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்; ஒரு யுகம் முடிந்திருக்கிறது; வெகுகாலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த தேசத்தின் ஆன்மா விடுதலை அடைந்திருக்கிறது. இந்த முக்கியமான தருணத்தில் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும், இன்னும் விரிவாகச் சொன்னால் மனித குலத்திற்கும் நம்மை அர்பணித்துக்கொள்ள உறுதிபூணுவது மிகச் சரியானதாக இருக்கும். 

*வரலாற்றின் விடியலில் இந்தியா தனது முடிவில்லாத தேடலைத் துவங்கியது.* இந்தியாவின் பல நூற்றாண்டுகள் அதன் முயற்சிகளாலும் வெற்றி - தோல்விகளின் மகோன்னதத்தாலும் நிரம்பியிருக்கின்றன.  நல்ல நேரங்களிலும் சரி, மோசமான தருணங்களிலும் சரி, இந்தியா தனது தேடல் மீதான பார்வையை மாற்றிக்கொள்ளவில்லை. தனக்கு பலம் தந்த கொள்கைகளை மறந்துவிடவில்லை. நாம் ஒரு மோசமான காலகட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறோம். இந்தியா தன்னை மீண்டும் கண்டுணர்ந்து கொள்ளும். 

நாம் இன்று கொண்டாடும் சாதனை என்பது, நமக்காகக் காத்திருக்கும் மிகப் பெரிய வெற்றிகளை நோக்கி வைக்கும் ஒரு அடி. அதற்கான ஒரு வாய்ப்பு. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நம்மிடம் அறிவும் துணிச்சலும் இருக்கிறதா? எதிர் காலம் முன்வைக்கும் சவால்களை நம்மால் ஏற்க முடியுமா?

சுதந்திரமும் அதிகாரமும் பொறுப்பை கொண்டுவருகிறது. அந்தப் பொறுப்பு, இந்திய மக்களின் இறையாண்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் இறையாண்மை மிக்க அமைப்பான இந்த நாடாளுமன்றத்திற்கு இருக்கிறது. *சுதந்திரம் பிறப்பதற்கு முன்பாக நாம் எல்லா வலிகளையும் அனுபவித்தோம். இந்தத் துயரத்தின் நினைவு நம் இதயத்தைக் கனக்கச் செய்தது. அந்த வலிகளில் சில இன்னமும் தொடர்கின்றன.*

இருந்தபோதும், கடந்த காலம் என்பது முடிந்துவிட்டது. எதிர்காலம் இப்போது நம்முடன் கைகோர்க்கிறது. 
ஆனால், *எதிர்காலம் என்பது எளிதானதாகவோ, ஓய்வெடுக்கும் வகையிலோ இருக்காது.* மாறாக, தொடர்ச்சியாக முயற்சிகளைக் கோரக்கூடியதாக இருக்கும். அப்போதுதான் நம்மால் நாம் இதற்கு முன்பு எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளையும் இப்போது ஏற்கும் உறுதிமொழிகளையும் நிறைவேற்ற முடியும். 

இந்தியாவுக்கு சேவை செய்வதென்பது, துன்பத்தில் இருக்கும் கோடிக் கணக்கான மக்களுக்கு சேவை செய்வது. ஏழ்மை, நோய், வாய்ப்புகளில் சமத்துவமின்மை, அறிவின்மை ஆகியவற்றை ஒழிப்பது. 
*நம் தலைமுறையின் மகத்தான மனிதரின் லட்சியம் என்பது, ஒவ்வொரு கண்ணின் ஒவ்வொரு துளிக் கண்ணீரையும் துடைப்பது.* அது நம்மால் இயலாததாக இருக்கலாம். ஆனால், துன்பமும் கண்ணீரும் இருக்கும்வரை, நம்முடைய பணி ஓயாது.

ஆகவே, நாம் நம் கனவுகளுக்கு உருவம் கொடுக்க உழைக்க வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். அந்தக் கனவுகள் இந்தியாவுக்கானவைதான். ஆனால், உலகத்திற்குமான கனவுகளும்கூட. காரணம், எல்லா நாடுகளும் மக்களும் இப்போது மிக நெருக்கமான இணைந்திருக்கிறார்கள். தனித்தனியாக வாழ முடியும் என்பதை கற்பனைகூட செய்ய முடியாது. 

அமைதி என்பதை பிரித்துக்கொள்ள முடியாது. சுதந்திரமும் அப்படித்தான். வளமும் அப்படித்தான். இந்த உலகில் நிகழும் பேரழிவுகளும் அப்படித்தான். இந்த உலகில் யாரும் தனித்தனியாக வாழ முடியாது. 

இந்த மாபெரும் சாகசத்தில் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இணைந்து கொள்ளுங்கள் என்று இந்திய மக்களுக்கு அதன் பிரதிநிதிகளான நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். சின்னத்தனமான, அழிவை ஏற்படுத்தக்கூடிய விமர்சனங்களுக்கு இது நேரமல்ல. கெட்ட எண்ணத்திற்கோ, மற்றவர்களைக் குற்றம் சொல்வதற்கோ இது நேரமல்ல. *எல்லாக் குழந்தைகளும் நன்றாக வளரக்கூடிய சுதந்திர இந்தியா என்ற மகத்தான கட்டடத்தை நாம் கட்டியாக வேண்டும்.*
குறிக்கப்பட்ட நாள் வந்துவிட்டது. விதியால் குறிக்கப்பட்ட நாள். மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு இந்தியா சுதந்திரமாக மீண்டும் எழுந்து நிற்கிறது. 

கடந்த காலம் என்பது நம்மோடு ஏதோ ஒரு வகையில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. நாம் அடிக்கடி செய்துகொண்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு முன்பாக நாம் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. இருந்தபோதும், கடந்த காலம் என்பது ஒரு திருப்பு முனை. வரலாறு நமக்குப் புதிதாகத் துவங்குகிறது. நாம் அந்த வரலாற்றில் வாழ்வோம், செயல்படுவோம். மற்றவர்கள் அவற்றைப் பற்றி எழுதுவார்கள். 

இந்தியாவிலும் ஆசியாவிலும் உலகிலுமுள்ள நமக்கு, இது விதிவசத்தால் அமைந்த தருணம். *ஒரு புதிய நட்சத்திரம் உதயமாகிறது. கிழக்கில் சுதந்திரத்தின் நட்சத்திரம் உதயமாகிறது. புதிய நம்பிக்கை பிறக்கிறது. நீண்ட காலமாக கனவு கண்டுகொண்டிருந்த ஒரு லட்சியம் நனவாகிறது. இந்த நட்சத்திரம் ஒருபோதும் மறையாமலிருக்கட்டும்.* நம்பிக்கை ஒருபோதும் நிராசையாகாது இருக்கட்டும். 

நம்மை கருமேகங்கள் சூழ்ந்திருந்தாலும், நாம் இந்த சுதந்திரத்தில் திளைத்திருப்போம். நம்முடைய மக்களில் பலர் துன்பத்தில் உழன்றுகொண்டிருக்கிறார்கள். மிகச் சிக்கலான பிரச்சனைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. இருந்தபோதும் *சுதந்திரம் என்பது பொறுப்பையும் சுமைகளையும் கொண்டுவருகிறது.* சுதந்திரமான, ஒழுக்கம்மிக்க மக்களாக நாம் அவற்றை எதிர்கொள்வோம். 

இந்த நாளில், இந்தச் சுதந்திரத்தை கட்டியமைத்த சிற்பி, நம் தேசத் தந்தை, இந்தியாவின் பழைய ஆன்மா உருக்கொண்டதைப் போன்று இருப்பவர், சுதந்திர ஜோதியை உயர்த்திப் பிடித்தவர், நம்மைச் சூழ்ந்திருந்த இருளை விலகச் செய்தவரை நாம் நினைத்திருப்போம். 
நாம் பல தருணங்களில் அவருடைய தொண்டர்களாக இருக்கத் தகுதியில்லாததைப் போல நடந்துகொண்டிருக்கிறோம். அவர் அளித்த போதனைகளில் இருந்து விலகியிருக்கிறோம். ஆனால், நாம் மட்டுமல்ல, பின்னால் வரும் தலைமுறைகளும் இந்த போதனைகளை நினைவில் கொள்ளும். *இந்தியாவின் மகத்தான மகனை தன் இதயத்தில் அது ஏந்தி நிற்கும். தன்னுடைய நம்பிக்கை, பலம், துணிச்சல், எளிமை ஆகியவற்றில் மகத்தான ஒரு மனிதர் அவர். எவ்வளவு பெரிய காற்றடித்தாலும், புயல் வீசினாலும் சுதந்திர ஜோதியை நாம் வீழ அனுமதிக்க மாட்டோம்.*

அடுத்ததாக நம்முடைய முகம் தெரியாத தன்னார்வலர்களை, சுதந்திரத்தின் காலாட்படை வீரர்களை நினைவில் கொள்ள வேண்டும். இந்தவித புகழையோ பரிசையோ எதிர்பாராமல், இந்தியாவுக்காக அவர்கள் சேவை செய்தார்கள். சாவையும் எதிர்கொண்டார்கள். 

அடுத்ததாக, அரசியல் எல்லைகளால் நம்மிடமிருந்து துண்டிக்கப்பட்டு, இந்த சுதந்திரத்தை நம்மோடு பகிர்ந்துகொள்ள முடியாத நம்முடைய சகோதர, சகோதரிகளையும் நாம் நினைவில் கொள்வோம். அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள். என்ன நடந்தாலும் நம்மைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களுடைய நல்லதையும் கெட்டதையும் நாமும் பகிர்ந்துகொள்வோம். 

எதிர்காலம் நம்மை அழைக்கிறது. நாம் அந்த அழைப்பை ஏற்றுச் செல்வோமா, அப்படிச் சென்றால் நம் முயற்சிகள் என்னவாக இருக்கும். வளமான, ஜனநாயக உணர்வுள்ள, முற்போக்கான தேசத்தை உருவாக்க இந்தியாவின் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சாதாரண மனிதர்களுக்கும் வாய்ப்புகளையும் சுதந்திரத்தையும் கொண்டுசேர்க்க வேண்டும். ஏழ்மை, அறியாமை, நோய் ஆகியவற்றை போரிட்டு ஒழிக்க வேண்டும்.   எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீதி, வாழ்வின் முழுமை ஆகியவற்றை அளிக்கும் சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும். 

*கடினமான பணி நமக்காகக் காத்திருக்கிறது. நாம் நம் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றும் வரை நம்மில் யாருக்கும் ஓய்வு என்பதே கிடையாது.* இந்திய மக்கள் என்னவாக வேண்டுமென விதி நினைத்திருக்கிறதோ, அதை அடையச் செய்யும்வரை நமக்கு ஓய்வு கிடையாது. 

நாம் மிகத் துணிச்சலுடன் முன்னோக்கி அடியெடுத்து வைக்கும் ஒரு மகத்தான தேசத்தின் குடிமக்கள். அந்த உயர்ந்த தரத்திற்கு நம்மை நாம் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.  நாம் எல்லோரும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சம உரிமையும் கடமையும் கொண்ட இந்தியாவின் குழந்தைகள்.  வகுப்புவாதத்தையோ, குறுகிய மனப்பாங்கையோ நாம் ஆதரிக்க முடியாது. *சிந்தனையிலோ, செயலிலோ குறுகியவர்களைக் கொண்ட எந்த தேசமும் மகத்தானதாக இருக்க முடியாது.*

உலக மக்களுக்கும் நாடுகளுக்கும் எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அமைதி, சுதந்திரம், ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவர்களோடு ஒத்துழைப்போம் என உறுதியேற்கிறோம். 

இந்தியாவுக்கு, நம் நேசத்திற்குரிய தாய்நாட்டிற்கு, பழங்கால, நிரந்தரமான ஆனால் புதிதான  தேசத்திற்கு நாம் நம் மரியாதையைச் செலுத்துகிறோம். நாட்டின் சேவைக்கு நம்மை ஒப்புக்கொடுக்கிறோம். 

ஜெய் ஹிந்த்."

(நன்றி: பி. பி.சி ஊடகவியலாளர் முரளிதரன் முக நூல்)

*செவ்வானம்*

Monday, April 4, 2022

நேரு இல்லையேல் மோடியில்லை

 

+

    

முக நூலில் பார்த்த படம் மேலே உள்ளது.

"எட்டு வருடமாக ஆட்சி நடத்துகிறாய், இனியாவது என் மீது பழி போடுவதை  நிறுத்தி விட்டு உன் சொந்தக்காலில் நிற்க முயற்சி செய்" என்று நேரு மோடியிடம் சொல்வது போல் அமைக்கப்பட்ட கார்ட்டூன் அது.

நேரு இல்லாமல் மோடியின் ஆட்சியே இல்லை என்பதுதான் யதார்த்தம்.

ஆம்.

மோடி ஒரு அழிவு சக்தி.

மோடி அழிப்பதற்கான அனைத்தும் நேரு உருவாக்கவில்லை என்றால் சாத்தியம் கிடையாதல்லவா!

நேரு உருவாக்கிய/உயர்த்திப் பிடித்த

மதச்சார்பின்மை,

மத நல்லிணக்கம்,

அரசியல் சாசனம்,

ஜனநாயக விழுமியங்கள்,

பொதுத்துறை நிறுவனங்கள்,

சுயேட்சையான அரசியல் சாசன அமைப்புக்கள் (நீதி மன்றம், தேர்தல் ஆணையம், சி.பி.ஐ)

இவற்றை நேரு உருவாக்கியதால்தானே மோடியால் அழிக்க முடிகிறது!

இவை எல்லாம் இல்லையென்றால் மோடியின் அழிவாட்டம் இன்னும் எவ்வளவு அராஜகமாக இருந்திருக்கும்!

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை 😥😥😥😥😥

Monday, November 15, 2021

நேரு - நேர்மைக்கு நன்றி சங்கிகளே!

 


நேற்று பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள்.


கொரோனா வந்ததற்கும் இன்றைய மழை வெள்ளத்துக்கும் கூட நேருதான் காரணம் என்று சொல்பவர்கள் மோடி வகையறாக்கள். ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை விற்று தரகுக்கூலி வாங்கி கட்சி நடத்துபவர்கள்.. 

முன்னாள் பிரதமரான நேருவின் பிறந்த நாளன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது படத்துக்கு மலட் தூவி மரியாதை செய்யும் நிகழ்வில் மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துணைத்தலைவர், பிரதமர், மந்திரி பிரதானிகள் என்று யாரும் தலை காட்டவில்லை.

மரபிற்காகக்கூட நேருவை மதிக்க முடியாது என்ற சங்கிகளின் நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

ஆமாம்.

பிரதமர் என்ற பதவியில் இருக்கிற ஒரே காரணத்திற்காக மோடி எனும் மோசமான மனிதனை, கொலைகாரனை, தரகனை மதிக்க வேண்டாம் என்று அவர்கள்தான் சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.

நன்றி சங்கிகளே!

Saturday, November 14, 2020

இந்தியாவை இவரா சீரழித்தார்?

தங்களின் அனைத்து தோல்விகளுக்கும் நேருவின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்கிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள். ஆறு வருடமாக இந்தியாவை நாசகரமாக ஆண்டு கொண்டிருப்பவர்களால் உருப்படியாக ஒரு நடவடிக்கை கூட எடுக்க முடியாத காலக்கட்டத்தில் நேருவை நினைத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

அவரது நடவடிக்கைகள் மீதும் விமர்சனம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதே நேரம் நேரு மீது இவர்கள் பழி போடுவது என்பது தங்களின் கையாலாகத தனத்தை மறைத்து திசை திருப்பவே.

இப்பதிவை முழுமையாக படிக்கையில் அதை நீங்களே உணர்வீர்கள்



 *நாளொரு கேள்வி: 14.11.2020*

####################

*தீபத் திருநாள் வாழ்த்துக்கள்*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க. சுவாமிநாதன்*
####################

*நேரு: குழந்தைகளுக்கு என்ன செய்தி*

*கேள்வி:*

ஜவகர்லால் நேருவின் 132 வது பிறந்த நாளில் அவரது முத்தாய்ப்பான மூன்று பங்களிப்புகள் என்றால் எவற்றை சொல்லலாம்?

*க.சுவாமிநாதன்*

நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவர் அவர். அவரது தியாகம் நிறைந்த வாழ்க்கை மகத்தானது. 1921 - 1945 காலத்தில் *நேரு இந்திய விடுதலைக்காக 3259 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார்.* அதில் தொடர்ச்சியாக கழித்த நீண்ட சிறை வாசம் 1041 நாட்கள். அவரின் முத்தாய்ப்பான மூன்று பங்களிப்புகள் என்று வரிசைப்படுத்துவது சிரமம். காரணம் அவரின் பங்களிப்புகள் வரிசைப்படுத்தலில் ஒன்றோடு ஒன்று போட்டி போடும். 

*பூரண சுதந்திரம்,* (Complete Independence) *பொருளாதார தேசியம்,* (Economic Nationalism) *பன்மைத்துவம்* (Pluralistic society) ஆகிய மூன்றைப் பேசலாம். இம் மூன்றும் தாக்கப்படுகிற காலம் இது. ஆகவே நேருவின் காலம், அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு இட்ட அடித்தளம் ஆகியன பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதுவே எதிர்கால இந்தியாவுக்கு, குழந்தைகளுக்கு இந்நாளின் செய்தி. 

*பூரண சுதந்திரம்* என்ற முழக்கத்தை இந்தியாவின் தேசிய இயக்கத்திற்குள் முதலில் முன் மொழிந்தது கம்யூனிஸ்டுகளே. *1921 அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் துவங்கி 1929 லாகூர் மாநாடு வரை* இதற்கான விவாதங்கள் காங்கிரசுக்குள் நடந்தது. பெசாவர், கான்பூர், மீரட் சதி வழக்குகளை எதிர்கொண்டு கம்யூனிஸ்டுகள் பூரண சுதந்திரம் என்கிற கோரிக்கைகளை வளர்த்தெடுத்தார்கள் எனில் நேரு காங்கிரசுக்குள் அதற்கான கருத்துப் போராட்டத்தை நடத்தினார். *சுயராஜ்யம், ஹோம் ரூல், டொமினியன் அந்தஸ்து* என்று பல பெயர்களில் காங்கிரஸ் அதுவரை முன் வைத்து வந்த கோரிக்கைகள் அனைத்துமே பிரிட்டிசாரின் கட்டுப்பாட்டிற்குள் - ஒத்துழைப்போடு தொடர்கிற ஏற்பாடாகவே இருந்தது. நேரு சொன்னார், *"ஆட்டுக் குட்டிகள் சிங்கத்திடம் எப்படி ஒத்துழைப்போடு இருக்க முடியும்?... இறுதியில் ஆட்டுக்குட்டி சிங்கத்தின் வாய்க்குள் போய் விடாதா?* என்று கேட்டார். மோதிலால் நேரு, காந்தி ஆகியோருக்கு கூட இக் கோரிக்கையில் அன்று உடன்பாடு இல்லை. லாகூர் மாநாட்டிற்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் பூரண சுதந்திரம் என்ற கோரிக்கைக்கான இசைவு காங்கிரசுக்குள் பெறப்பட்டது. அக் கூட்டத்தில் நேருவின் பங்கு முதன்மையானது. காந்தி அப்போது *"சிறுவர்களின் விளையாட்டு"* என்றே அம் முடிவை வர்ணித்தார். (பிற்காலத்தில் இந்திய விடுதலை இயக்கத்தை மகாத்மா காந்தி வெகு ஜன எழுச்சியாக மாற்றினார் என்பதை நாம் மறக்கக் கூடாது.) லாகூர் மாநாட்டிற்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழுந்த போது காந்தியின் பெயர் முன் மொழியப்பட்டது. ஆனால் காந்தி நேருவை முன் மொழிந்தார். *நேரு தலைமையில் கூடிய அம் மாநாட்டில்தான்* இந்திய வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்த "பூரண சுதந்திரம்" என்ற கோரிக்கையை காங்கிரஸ் நிறைவேற்றுகிறது. 750 பக்கங்கள் கொண்ட அத் தீர்மானம் முழு விடுதலை என்றால் *அரசியல், பொருளாதார, பண்பாட்டு, ஆன்மீக விடுதலை* என்று அறிவிக்கிறது. உரிமைகளை அது உறுதி செய்தது. வருமான ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான பிரகடனம் அதில் இருந்தது. இத் தீர்மானமே விடுதலைக்குப் பின்னர் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் ஆதார சுருதியாக அமைந்தது. 

*"பொருளாதார தேசியம்"* என்கிற கருத்தாக்கத்தின் தந்தை தாதாபாய் நௌரோஜி என்றால் அதற்கு இயக்க ரீதியான வெகு சன இசைவைப் பெற்றுத் தந்ததில் கராச்சி காங்கிரஸ் முக்கியப் பங்கை வகித்தது. இன்று பல *"முகமூடி தேசியங்கள்"* வலம் வருகிற சூழலில் விடுதலை இயக்கம் வளர்த்தெடுத்த கனவை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டியுள்ளது. பொருளாதாரத் தேசியமே அது. உணமையான தேசியம் அது. போலி தேசியம் பேசுவோரின் உதடுகள் தப்பித் தவறிக் கூட உச்சரிக்காத தேசியம் அது. கராச்சி காங்கிரஸ் கூடிய போது *நாடு கொதி நிலையில்* இருந்தது. காந்தி - இர்வின் ஒப்பந்தம் மக்களை சமாதானம் செய்ய இயலவில்லை. *பகத்சிங்* தூக்கில் இடப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கூடிய மாநாடு. பகத் சிங் உயிரை காங்கிரஸ் காப்பாற்றத் தவறி விட்டதென்ற குற்றச் சாட்டு இருந்தது. மாநாட்டிற்கு ரயிலில் வந்து இறங்கிய *காந்தி, படேலுக்கு கறுப்புக் கொடிகள்* காண்பிக்கப்பட்டன. தனது கைகளில் தர்ப்பட்ட கறுப்பு மலர்களை வாங்கிக் கொண்டு காந்தி நடந்தார் என்பது அன்று நிலவிய ஜனநாயக உணர்வுகளுக்கு சாட்சியம். நேருவுக்கு காந்தி இர்வின் உடன்பாடு பற்றி முழுமையான ஏற்பு இல்லை. ஆகவே மாநாடு அந்த உடன்பாட்டிற்கு ஒப்புதலை தருவதற்கு அவர் வலியுறுத்திய முன் நிபந்தனையே கராச்சி காங்கிரஸ் நிறைவேற்றிய *எதிர்கால இந்தியாவின் பொருளாதாரப் பாதை* குறித்த தீர்மானம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

காந்தி இர்வின் உடன்பாடை வரவேற்ற அம் மாநாடு, பகத் சிங் சகாக்களின் தியாகத்தைப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றியது. *கராச்சி காங்கிரஸ் தீர்மானம், கேந்திரத் தொழில்கள் அனைத்தும் அரசின் வசம் இருக்கும், உள்நாட்டுத் துணிகளுக்கு பாதுகாப்பு தரப்படும், குழந்தை உழைப்பு தடை செய்யப்படும், கந்து வட்டி ஒழிக்கப்படும், பிரசவ விடுப்பு வழங்கப்படும்* என பன்முக நோக்கில் நம்பிக்கை அளிக்கிற முழக்கங்களை முன் வைத்தது. இன்று பொதுத் துறை, அரசின் சமூகக் கடப்பாடு, பாலின நீதி எல்லாம் ஒரு சேரத் தாக்கப்படும் போது நேருவின் பங்களிப்பு ஓர் கருத்தாயுதமாக, கள அனுபவமாக நமக்கு பயன்படுகின்றன. 

பொதுத் துறையை விடுதலை இந்தியாவில் உருவாக்குவதில் வளர்ப்பதில் அவரின் பங்கு மிக முக்கியமானது. இந்தியாவின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு *அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் உதவ மறுத்த நிலையில், சோவியத் யூனியன் உதவியோடு* பிலாய் உருக்காலையை அமைத்தார். பிறகு ஜெர்மனியும், பிரிட்டனும் உதவ முன் வந்து முறையே ரூர்கேலா, துர்க்காபூர் உருக்காலைகள் அமைகின்றன. இந்தியத் தொழிலதிபர்கள் கைகளில் போதிய மூலதனம் இல்லாத நிலையில், இருந்தாலும் நீண்ட கால முதலீடாகப் போடத் தயங்கிய நேரத்தில் அரசு முதலீடுகளோடு பொதுத் துறை நிறுவனங்கள், அடிப்படைக் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டன.

 *பக்ரா நங்கல் அணையின் துவக்க நிகழ்ச்சியில்* நேரு ஆற்றிய உரையில் *"கோயில், மசூதி, குருத்வாராக்களுக்கு செல்கிறோம். பொது நன்மைக்கு அவை உதவுபவை என்று உணர்கிறோம். அப்படி விரிந்த பொது நன்மைக்கானதே பக்ரா நங்கல் அணைத் திட்டம். ஹிராகுட் உருவாகி வருகிறது. இவையெல்லாம் நவீன யுகத்தின் திருக் கோயில்கள்"* என்றார். ஸ்டேட் வங்கி 1955 ல், எல்.ஐ.சி 1956ல், ஓ.என்.ஜி.சி 1956 ல் உருவாகின்றன. அரசுப் பள்ளிகள், பொது சுகாதாரம், கிராமங்களுக்கான போக்குவரத்து ஆகியன விரிந்தன. *1990 களின் தெற்காசிய நிதி நெருக்கடி, 2008 உலக நிதி நெருக்கடி புயலில் இந்திய வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வீழாமல் தாங்கிப் பிடித்தது எதுவெனில்* அவை அரசு நிறுவனங்களாக இருந்ததே. 


*"பன்மைத்துவம்"* இந்தியாவின் அரிய பண்பு. இந்தியா விடுதலை பெறும் போது பிரிட்டிஷ் இந்தியாவுக்கு அப்பாற்பட்டு 565 சமஸ்தானங்கள் இருந்தன. பல சமுகக் குழுக்கள், மொழிகள்... சிதறிக் கிடந்த முத்துக்களை எடுத்து கோர்க்கப்பட்ட அழகான மாலையே இந்தியா ஆகும். *அன்றிருந்த மொத்த இந்தியப் பரப்பில் 40%ம், மக்களில் 23 % (அதாவது 10 கோடி பேர்) சமஸ்தான ஆட்சிக்குட்பட்டே இருந்தன(ர்) என்றால் நவீன இந்தியாவை நிர்மாணிப்பது அவ்வளவு சாதாரணமானதா?*

விடுதலைக்குப் பிந்தைய பிரிவினைக் கலவரங்களில் இரத்த ஆறு ஓடியது. வங்காளத்திற்கு போய் மக்களை சந்தித்து அமைதிக்காக காந்தி அரும்பாடுபட்டார் எனில் *டெல்லிக் கலவரங்களில்* வீதிகளுக்கு சென்றார் நேரு. மோதல் நிகழும் போதே அதைத் தடுத்து உரையாடினார். இதை இ.எம்.எஸ் *"நேருவின் தத்துவமும் நடைமுறையும்"* என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.  எவ்வளவு ஆளுமையும், நம்பகத்தனமையும் இருந்திருந்தால் அவரால் இதை செய்திருக்க முடியும் என்பதையும் அண்மைய டெல்லிக் கலவரத்தின் போது ஆட்சியாளர்கள் நடந்து கொண்டதையும் பார்க்கும் போது வேதனைதான் எஞ்சுகிறது. *சோம்நாத் கோயில் புனரமைப்பு விழாவில்* அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் கலந்து கொள்வதை எதிர்த்தார். ஒவ்வொன்றை சொல்லும் போது இன்றைய எதிர்மறை நடப்புகள் ஏதாவது ஒன்று மனத் திரையில் வந்து போவதை தவிர்க்க இயலவில்லை. காஷ்மீர் இந்து மன்னரையும், இஸ்லாமிய மக்களைப் பெரும்பான்மையாகவும் கொண்ட சமஸ்தானம். ஆனால் அது இந்தியாவுடன் இணைந்தது. இந்து மன்னர்கள் சிலர் கூட பாகிஸ்தானுடன் ரகசிய உடன்படிக்கைக்கு சென்றனர். ஆனால் இவற்றையெல்லாம் தகர்த்து *இந்திய ஒன்றியம்* உருவானது. காந்தி, நேரு ஆகியோர் மீது இருந்த ஈர்ப்பு, அவர்களின் நேரிய அணுகுமுறை மீதான நம்பிக்கை இதற்கு முக்கியப் பின்பலம் ஆகும்.  

நவீன இந்தியா குறித்த விடுதலைக் கன்வுகள் இவை.

இன்னும் நிறைய இருக்கிறது. கூட்டு சேரா கொள்கை, ஜனநாயகம் ஆகியன உயிர்ப்பான உதாரணங்கள். 

*இவையெல்லாம் தனி நபர் சாகசங்கள் அல்ல. உன்னதமான தலைவர்கள் விவாதத்திற்கு, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. மக்களின் உணர்வை, ஏக்கத்தை, எழுச்சியை முன்னெடுத்துச் செல்லும் வரலாற்று சக்கரத்தை சுழற்றியவர்களில் நேரு முக்கியமானவர் என்பதே. மக்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள். மக்களுக்கு தலைமை தாங்குபவர்கள் முன்னணிப் பாத்திரம் வகிக்கிறார்கள்.*

நேரு... உங்களின் ஒவ்வொரு நகர்வும் எதிர்கால இந்தியாவுக்கு செய்தி. 

*****************
*செவ்வானம்*