Thursday, June 30, 2022

மோடி விறைச்சுப் போயிருப்பாருய்யா

தமிழ் இந்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. ஜெர்மனிக்குப் போன மோடி ஏ.சி இல்லாத ஹோட்டலில் தங்கினாராம்.

 


அடேய்களா, அந்த ஊரின் மிக அதிகபட்ச வெப்ப நிலையே 15 டிகிரிக்கும் குறைவுதானாம்.

 

அந்த இயல்பான படு குளிர் பிரதேசத்தில் ஏ.சி போட்டால் மோடி விறைத்துப் போய் கட்டையாகி இருப்பார்.

 

அந்தாளுக்கு பில்ட் அப் கொடுக்க என்ன வேணும்னாலும் எழுதுவீங்களா?

 

என்ன, இதைப் பார்த்து எங்காளு எவ்வளவு எளிமைன்னு நாலு முட்டாள் எழுதுவான். அதை நாலாயிரம் முட்டாள் பகிர்ந்து கொள்வான்.       

ஆம், அது ஆணவச் சிரிப்புதான்

 


இன்று காலை இந்து ஆங்கில நாளிதழில் பார்த்த புகைப்படம் கீழே உள்ளது. அதைப் பார்த்ததும் ரிக்சாக்காரன் படத்தின் "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், அது ஆணவச் சிரிப்பு" பாடல்தான் நினைவுக்கு வந்தது.


Application of Mind என்பதை சில நீதியரசர்கள் பயன்படுத்தவே மாட்டார்கள் போல. 

குதிரை பேரம் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்பது சரிதான்.

ஆனால் குதிரை பேரம் நடந்து முடிந்ததால்தான் இப்போது மகாராஷ்டிராவில் பிரச்சினையே என்பது அவர்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு கடிவாளம் கட்டிக் கொண்டு விட்டார்கள்.

அதனால்தான் உச்ச நீதிமன்ற வளாகம் இந்த ஆணவச் சிரிப்பை கண்ணுற்றுள்ளது. 

நேற்று நாற்காலிகளைப் பற்றி காவிக்கயவர்கள் ஒரு செய்தியை உலவ விட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குப் போட்ட பின்னூட்டத்தை இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று அந்த ரத்தத்தின் மேல் அமர்ந்தால் அது மோடி நாற்காலி.

அம்பானிக்கும் அதானிக்கும் உலக அளவில் புரோக்கர் வேலை பார்த்து அதில் கிடைத்த பிச்சைக் காசில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கி அமர்ந்தால் அது பாஜக நாற்காலி

Wednesday, June 29, 2022

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் நூபூர் சர்மா?

 


நூபூர் சர்மாவின் மத வெறிப் பேச்சின் ஆதரவளார் ஒருவர் இன்னொரு இரண்டு மத வெறியர்களால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்துள்ளது இந்த படுகொலை.  இந்த கொலைக்கு என் வன்மையான கண்டனம்.

நூபூர் சர்மாவும் கொலை வெறி சங்கிகளும் ஆசைப்பட்டது இதைத்தான். மாற்று மதத்தவரை உணர்ச்சி வசப்பட வைத்து தவறிழைக்கத் தூண்டுவது. ஓரிருவர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த மதத்தவரையும் காரணமாக்கி வேட்டையாடுவது.

காலம்காலமாக சங்கிகள் கலவரத்தை நிகழ்த்த கடைபிடிக்கும் உத்தி இதுதான். அந்த உத்திக்கு இருவர் மூடத்தனாக இரையாகி விட அவர்களின் தவறுக்கு பல அப்பாவிகளுக்கு பாதிக்கப்படப் போகிறார்கள்.

மொத்தத்தில் நூபூர் சர்மா நினைத்தது நடந்து   விட்டது. கலவரம் எங்கே எப்படி வெடிக்கும் என்பதுதான் தெரியவில்லை. 

 

இதுதான் இன்றைய அராஜகம்


ஐயா, இந்த பத்திரிக்கைக்காரன் இரண்டு சமூகங்களுக்கு இடையே பகைமை உணர்ச்சியை தூண்டக் கூடிய விதத்தில்  சில பதிவுகள், ட்வீட்டுகள் ஆகியவற்றை செய்தான். வீடியோவை வேறு பகிர்ந்தான்.

ஆமாம் ஐயா, உங்கள் வெறுப்புப் பேச்சு வீடியோவைத்தான்.

இதுதான் கார்ட்டூன் சொல்லும் செய்தி. 

இன்றைய நிலைமையும் இதுதான்.

குஜராத் கலவரக் குற்றவாளிகளை அம்பலப்படுத்திய டீஸ்ட்டா செதல்வாட், எம்.பி,ஸ்ரீகுமார், ஐ.பி,எஸ், பொய் செய்திகளை அம்பலப்படுத்தும் ஆல்ட் நியூஸ் முகமது சுபைர் ஆகியோரின் கைதுகள் சொல்லும் செய்தியும் இதுதான்.

பாசிஸம் என்பதைத்தாண்டிய  அராஜகம் இதுதான்.

Tuesday, June 28, 2022

ஆட்டுக்காரனே சொல்லியாச்சா? அப்ப சரி

 


மோடி என்ன படித்துள்ளார் என்ற சர்ச்சை இப்போது முடிவுக்கு வந்து விட்டது. 

ஆமாம்.

ஆட்டுக்காரனின் ஒப்புதல் வாக்குமூலம் வெளி வந்து விட்டது.

காணொளியைப் பாருங்கள்.


மோடி "எம்.ஏ என்டயர் பொலிட்டிக்கல் சைன்ஸ்" படித்ததாக சொன்னது பொய் என்று பல காலமாக சொல்லி வந்தது இப்போது நிரூபணமாகி விட்டது.

என்ன "படிக்காத முட்டாள்" என்று சொல்வதற்குப் பதிலாக டங் ஸ்லிப்பாகி மேதை என்று சொல்லி விட்டார்.

ஆமாம். கட்சி ரகசியத்தை வெளியே சொல்லி விட்டதற்காக ஆட்டுக்காரனை பிரியாணி போட்டுடுவாங்களா? 


இப்போதைக்கு போதும் கிருஷ்ணா . . .

 


ஆஹா ! படிக்கவே எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது தெரியுமா?

சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பும் அளவில் உள்ளதால் ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் தேதியிலிருந்து கிருஷ்ணா நீரை அனுப்ப வேண்டாம் என்று தமிழக அரசு ஆந்திர அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இப்போதுள்ள கையிருப்பு எட்டு மாதங்கள் வரை போதுமானதாக இருக்கும் என்று சொல்லியுள்ளனர்.

இப்படிப்பட்ட நிலைமை எந்நாளும் நிலவட்டும்.

மழைக்காலம் வந்தால் உபரி நீரை சேமிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக எடுத்திட வேண்டும். 

Monday, June 27, 2022

இயல்பான கலைஞனின் இழப்பு

 


நாடகங்களிலும் திரைப்படங்களிலும் இயல்பான நடிப்பை அளித்த, இன்று மறைந்த,  மக்கள் கலைஞன் "பூ ராமு" அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி. 

அவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு காட்சி இங்கே, பரியேறும் பெருமாள் திரைப்படத்திலிருந்து. . .



அதானிக்கு திருடன் மேல்….

 


ஏதோ ஒரு கூட்டத்தில் தோழர் பாரதி கிருஷ்ணகுமார் சொன்ன கதை . . .

ஒரு டவுன் பஸ்ஸில் ஏராளமான பயணிகள் நெருக்கிக் கொண்டும் அவஸ்தைப் பட்டுக் கொண்டும் சென்று கொண்டிருந்தனர்.

 நடத்துனர்    பயணச்சீட்டுக்களை கொடுத்து வருகிறார். ஒரு பயணி, அலறுகிறார். அவருடைய பேண்ட் பாக்கெட் கீறப்பட்டு பர்ஸ் திருடப்பட்டு இருந்தது. அவர் அலறுகிறார். நடத்துனரோ டிக்கெட் எடுக்கச் சொல்கிறார். இவர் சுற்றி முற்றி பார்க்கிறார். தெரிந்தவர் யாருமில்லை. நடத்துனரிடமே நிலைமையைச் சொல்லி இன்று ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள், நாளை கொடுத்து விடுகிறேன் என்று வெட்கத்தை விட்டு கெஞ்சுகிறார். அவரோ கறாராக டிக்கெட் வாங்க முடியலைன்னா அடுத்த ஸ்டாப்பில இறங்கிடு என்று கட்டளையிடுகிறார்.

 

இவர் கிட்டத்தட்ட அழும் நிலைமைக்கு வந்து விட்டார். பர்ஸில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பறி போனதை விட டிக்கெட்  வாங்க பத்து ரூபாய்க்கு வழியில்லாமல் போய் விட்டதே என்பதுதான் அவரை மிகவும் பாதித்தது. அடுத்த ஸ்டாப்பில் இறங்கும் முன்பாக ஒரு உரத்த குரல் அவரை தடுத்து அவருக்காக டிக்கெட் கேட்டது. அந்த மனிதரை இவர் நன்றியோடு பார்க்கிறார். நா தழுதழுத்தது.   

 இவர் இறங்க வேண்டிய ஸ்டாப்பில்தான் அந்த மனிதரும் இறங்குகிறார். அவரது கைகளைப் பற்றி நன்றி தெரிவிக்கிறார். டிக்கெட்  காசை திருப்பித் தர விலாசம் கேட்கிறார், “மனுசனுக்கு மனுசன் இது கூட செய்யலைனா  நான் என்னய்யா மனுசன்!” என்று சொல்ல இவர் வீட்டுக்குப் போகிறார்.

 அந்த மனிதன் மனதுக்குள் சொன்னான்.

 “மொத்த பர்ஸையும் அடிச்சாச்சு. பத்து ரூபாய்    கொடுத்தது பெரிய விஷயமா?“

 விமான நிலையம், துறைமுகம், சுரங்கங்கள், நுகர்வோர் பொருட்கள், மின்சார உற்பத்தி, இதரவை, இதரவை என்று  இந்தியாவில் உள்ள எல்லாவற்றையும் மட்டுமல்ல ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை  என்று   சேவகன் மோடியின்  உதவியோடு   விரிவுபடுத்திக் கொண்டு அதற்கு வங்கிகளிலிருந்து கடன் வாங்கி, அந்த கடனையும் திருப்பிக் கட்டாமல் தள்ளுபடி செய்ய வைத்து குவிக்கும் காசிலிருந்து ஏதோ கொஞ்சம் தொகையை தர்ம காரியத்துக்கு கொடுப்பதாக அறிவித்தால் (நோட் த பாயிண்ட். அறிவிப்பு, கொடுப்பது அல்ல) அதானிக்கு என்ன நஷ்டம்?

 அதையும் ஆஹா, ஒஹோ என்று புகழ்ந்து எழுத ஐ.டி செல் இருக்கிறது. அதையும் பரப்ப முட்டாள் சங்கிகள் இருக்கவே இருக்கிறார்கள்.

 அறிவித்த அதானியை விட 10 ரூபாய் கொடுத்த பிக்பாக்கெட் திருடன் மேல்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        

உலகம் மதிப்பதும் இவர்கள் கொல்வதும் . ..

 


தற்போது படித்துக் கொண்டிருக்கும் நூல், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய "தமிழ் நெடுஞ்சாலை".

இன்று காலை உபி யில் அவர் நடத்திய சட்டப்பேரவைத் தேர்தல் பற்றிய அத்தியாயத்தை படித்துக் கொண்டிருந்தேன்.  அதில் கடைசியாக எழுதியது கீழே . .


ஆம். உண்மைதான்.

உலகத்தோர் மதிக்கும் காந்தியைக் கொன்றார்கள்.
விலைக்கு  வாங்குவதன் மூலம் மக்களாட்சியை கொல்கிறார்கள்.
தாஜ் மகாலை அழிக்கவும் திட்டமிட்டு  விட்டார்கள்.



Sunday, June 26, 2022

ஒரு குப்பையே, அடடே !!!!

 


தோழர் இரா.எட்வின் வரிகளிலிருந்து இன்ஸ்பையர் ஆகி எழுதியது.

ஒரு குப்பையே . . . .
குப்பையை . . . .
பொறுக்குகிறதே . . .
அடடே . . .
ஆச்சர்யக்குறி !!!!!!!!!

Saturday, June 25, 2022

இருவர் - வரிகளும் குரலும்

 



நேற்றே பதிவிட நினைத்தேன். நேரமில்லாததால் இயலவில்லை. நேற்று கவியரசு, மெல்லிசை மன்னர் ஆகியோரின் பிறந்த நாள். அதனால் கவியரசரின் பாடல் வரிகளை மெல்லிசை மன்னர் பாடிய ஐந்து பாடல்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.







சாதனைப் பெண்மணிக்கு வாழ்த்துக்கள்

 


நேற்று ஒரு தோழர் கீழே உள்ள புகைப்படத்தை மட்டும் அனுப்பி இருந்தார்.


யார் இவர் என்று கேட்டதற்கு இவர் பெயர் பிரதிக்சா டோண்ட்வாக்கர் என்றும் இந்த வருடம் ஸ்டேட் வங்கியில் உதவி பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்று சொன்னார்.

அதானிக்கு கடன் கொடுத்து இன்று அம்பானி கம்பெனியில் வேலை பார்க்கும் அருந்ததி பட்டாச்சார்யா ஸ்டேட் வங்கியின் சேர்மனாகவே இருந்திருக்கிறாரே, இவருக்கென்ன  சிறப்பு என்று வினவினேன்.

அப்போதுதான் இந்த தகவலை அனுப்பினார்.


ஏழாம் வகுப்பு படிப்போடு பகுதி நேர துப்புறவாளராக ஸ்டேட் வங்கியில் பணியில் சேர்ந்து கல்வித்தகுதியை வளர்த்துக் கொண்டு சார் பணியாளர், கிளார்க், அதிகாரி என்று தன் முயற்சியால் படிப்படியாக முன்னேறியது என்பது மிகப் பெரிய சாதனை.

சாதனைப் பெண்மணிக்கு வாழ்த்துக்கள். 

Friday, June 24, 2022

கவியரசு பற்றி கவிஞரின் ஆய்வு

 


காலையில் கணிணியை உயிர்ப்பித்ததும் கண்ணில் பட்டது கவியரசு கண்ணதாசன் பற்றி கவிஞர் டி.கே.கலாபிரியா அவர்கள் ஆற்றிய உரையை அவரது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்ததைத்தான்.

உரை என்று சொல்வதை விட ஆய்வு என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும். அதனை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


கண்ணதாசன் விருது உரை (24.06.2012)

அன்பார்ந்த நண்பர்களே
அனைவருக்கும் என் வணக்கம்.
கண்ணதாசன் என்ற பெயர் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம்பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஏன் எழுபது ஆண்டு என்று கூடச் சொல்லலாம். அரசியலிலும் ஆன்மீகத்திலும்,இயல், இசை நாடகம் என்று முத்தமிழிலுமந்த அகரக் கவிஞனின் பெயரைத் தவிர்த்து விட்டு எந்த தமிழ் வரலாறும் இருக்க முடியாது. அவர்பெயரும் கவித்துவமும், அவர் பாடல் வரிகளிலேயே சொல்வதானால்

”கல்லில் வடித்த சொல் போலே -அது
காலம் கடந்த இன்பநிலை..”

பொதுவாக பெயர்கள் அகராதியில் இடம் பெறுவதில்லை. அதற்கு ஏதேனும் இலக்கண வரையறைகள் இருக்கிறதோ என்னவோ. கண்ணதாசன் இலக்கணமில்லை , மீண்டும் அவர் வரிகளிலேயே சொன்னால்

”இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ..”என்று அவர் இலக்கணம் மீறிய இலக்கியமானவர்.

கண்ணதாசன் என்ற பெயர் தமிழ் அகராதியில், இருக்கிறதா இல்லையா என்பதல்ல விஷயம். ஒரு வேளை தொடையகராதியில் கண்ணதாசன் பெயர் இருந்தால் அதற்கு எதுகையாக வண்ணதாசன் என்ற பெயரும் கண்டிப்பாய் இடம் பெறும்.இந்த நேரத்தில் என்னையும் என் வரிகளையும் வளர்த்தெடுத்த வண்ணதாசன் என் நினைவுக்கு வருவதில் வியப்பொன்றும் இல்லை. இந்த விருதை அவருக்கே நான் சமர்ப்பிக்கிறேன். அந்த வகையில் கண்ணதாசன் கழகம் தரும் இந்த பெருமை மிக்க விருதை வண்ணதாசன் இரண்டு முறை பெற்றவராகிறார்.

சக இருதயர்கள் உவப்பத் தலைக்கூடி,ஒன்று சேர்ந்து, சங்கம் அமைப்பது தொன்று தொட்டு வரும் மரபு போலிருக்கிறது..அதற்கு ஆண்டவனும் அரசனும் தலைமை ஏற்றதாகவும் சொல்லுவார்கள்.ஆனால் இந்த மாதிரியான மன்றங்களும், சங்கங்களும் அந்தக் காலத்திலேயே மக்கள் மத்தியில் முதலில் தோன்றி பின்னரே அரசப்பிரதானிகளின் கவனத்திற்குச் சென்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் சாதாரணர்களாகவும் நாடோடிகளாகவும் இருந்த பாணர்களே நல்ல கவிதைக்காரர்களாக இருந்திருப்பதாக சமீப ஆய்வுகள் சொல்கின்றன. பின்னரே ஏதோ ஒரு அரசியல் மாற்றம் காரணமாக புலமை மேட்டிமைக்காரர்களின் சொத்தாகிறது.கண்ணதாசன் நிச்சயமாக ஒரு பாணணாகத்தான் இருக்க வேண்டும். அவன் பாடல்களும் பாடு பொருளும் அதைத்தான் சுட்டுகின்றன. அவனைக் கொண்டாடுவோரில் பலதரப்பினரும் இருப்பினும் அவனிடம் அதிக அந்நியோன்யம் காட்டுபவர்கள் கனக ராஜும் காளிதாஸும், சிங்கை முத்தும்,முத்தையாவும் கிருஷ்ணகுமாரும்,போன்ற அற்புதமான ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்.

அவர்களால் ஆதுரத்துடன் ஆரம்பிக்கப் பட்ட இந்த ‘கண்ணதாசன் கழகம்’ இன்று கண்ணதாசனைக் கொண்டாடும் விதமாக அவரில் தோய்ந்த அவரது வழித்தோன்றல்களை விருதளித்துக் கௌரவிக்கிறது.அவர்கள் அத்தனை பேருக்கும் என் நன்றியைப் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன். என்னுடன் விருது பெறும் திரு ஆர்.பி. சங்கரன் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்கிறேன். அவருடன் விருது பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அற்புதமானவர்களின் சங்கப்பலகையில் ஒரு ஓரமாகவேனும் நான் அமரும் தகுதி கொண்டவன். எனது எட்டுவயதில் இருந்து நான் கண்ணதாசனை யாரென்று அறிவேன். நாடோடிமன்னனும் அதைத் தொடர்ந்து ‘மாலையிட்ட மங்கையும்’கண்ணதாசனை என் பால பாடத்தில் சேர்த்தன.அதற்கு என் சொந்தச் சகோதரர் மீனாட்சி சுந்தரம் தான் முக்கிய காரணம்.அன்று நான்காம் வகுப்பில், ”எங்கள் திராவிடப் பொன்னாடே பாடலை.....” அபஸ்வரமாகப்பாடி அதற்காகவும், அதன் அப்போதையத் தீண்டாமைத் தன்மைக்காகவும் பாதியிலேயே நிறுத்தச் சொல்லி விட்டார் ஆசிரியர்.

இந்த நேரத்தில் நான், கண்ணதாசனின் தீராப்புதையலைத் தேடித்தேடிப் பதிப்பிக்கும் திரு ஆர்.பி சங்கரனிடமொரு வேண்டுகோளை வைக்க நினைக்கிறேன்.கண்ணதாசனின் திரைப்படங்களின், திரைக்கதை வசனங்களை நூலாகக் கொண்டு வரவேண்டும். எனக்குத் தெரிந்து,பெரும்பாலான சிவாஜி சினிமாக்களைத் தவிர “சிவகெங்கைச் சீமை”யும் ’மதுரை வீரனு’ம், ஒலிச்சித்திரங்களாக இசைத்தட்டு வடிவில் வந்துள்ளன. அவையெல்லாம் இப்போது கிடைப்பதில்லை. இரண்டுமே திரைக்கதை அமைப்பின் உச்சம் என்று சொல்லுவேன்.’சிவகங்கைச் சீமைதான் தமிழில் வெளிவந்த உண்மையான ஒரே ஒரு வரலாற்று சினிமா. மற்றவையெல்லாம் ஜெய்ப்பூர் மாளிகைகளில், ஜோத்பூர் ஆடை அணிகலன்களுடன் தமிழ்க் கலாச்சாரத்தை அடகு வைத்தவை.கண்ணதாசன் தமிழ் உரை நடைக்கு ஆற்றியிருக்கும் பெரும் பங்களிப்பை அவை இன்னும் உறுதிப் படுத்தும்.அந்தக் காரியத்தை திரு சங்கரன் அவர்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கண்ணதாசனின் திரைக்கதைகள நான் ஏன் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அவர் ஒவ்வொரு பாடலையுமே அந்தப் படத்தின் திரைக்கதையை மனசுக்குள் ஓடவிட்டுக் கொண்டே எழுதியிருக்கும் அதிசயத்தைக் கண்டு கொண்டவன் என்றுதான்.எந்த படத்தின் பாடலாக இருந்தாலும், அதன் காட்சி விளக்கத்தைக் கேட்டபின், அவர் பல்லவியும் சரணமும் சொன்னால் அதுவே கதையை விளக்கியும் நகர்த்தியும் விடும். ஆயிரக்கணக்கான பாடல்களைச் சொல்லலாம்.ஆனால் ரசம் மிக்க சிலவற்றைச் சொல்ல வேண்டும்.

சூடிக்கொடுத்தவள் நான் தோழி
சூட்டிக் கொண்டவளே நீ வாழி
பாடிக் கொடுத்தவள் நான் தோழி
பாட்டை முடித்தவள் நீ வாழி.- டீச்சரம்மா என்ற படத்தின் பாடல்.கதைக் கேற்ற பாடல் என்பதிருக்கட்டும். அதற்குள்
தொன்மமான படிமமாக ஆண்டாளை நினைவு படுத்திவிடுகிறார்.

இதே போல் அபூர்வ ராகங்களில்,
தலைவன் திருச்சானூர் வந்து விட்டான்
மங்கை தருமதரிசனத்தைத் தேடுகின்றான்.
அலமேலு அவன் முகத்தைப் பார்ப்பாளோ
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ-

என்று ஸ்ரீனிவாச புராணத்தை நடத்திக் காட்டிவிடுவார்.இதில் அற்புதமென்னவென்றால் ஆண்டாளின், அலர்மேல் மங்கையின் நிறவேறாக்காதலை கவிஞர் எப்போதும் அசை போட்டுக் கொண்டிருப்பதுதான்.

அந்தப் பெண்களுக்காக இவர் உருகுவது ஒரு பாட்டிலா இரண்டு பாட்டிலா,,,(பாட்டில் பாட்டிலாக உருகுவார், எங்களைப்போல் கைக்கிளையான்களையும் பருக வைப்பார் உருக வைப்பார் அது வேறு விஷயம்)

கனியை மரமறியும் காதலை மனமறியும்
கனிவிருந்தால் அல்லவோ கன்னியர் நிலைதெரியும்
ஆண்டவனுக்கொரு மனது ஆண்களுக்கிரு மனது
தோன்றிய நாள்முதலாய் துடிப்பதுதான் பெண் மனது.
என்று ஒரு சாதாரணப் பெண்ணையும்,
“சித்திரத்துல் பெண்ணெழுதி சீர் படுத்தும் மாநிலமே ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயோ.....”/

அன்னையென்றும் தந்தையென்றும் ஆர்ப்பரிக்கும் பெரியோரே/இன்னமுத தெய்வமெல்லாம் ஏட்டில் வரும் தேன் தானோ/மன்னர் குல கன்னியரும் கண் கலங்க நேருமென்றால்/ மண்டலத்தில் பெண்களுக்கே வாய்த்த விதி இதுதானோ..

என்று ராணி சம்யுக்தைக்கும் குரல் கொடுப்பது கண்ணதாசனே.ராணி சம்யுக்தா படத்தின் வசனமும், ராஜா தேசிங்கு பட வசனமும் ‘மாநில சுயாட்சி’ என்று முழங்குபவர்கள் மனப்பாடம் செய்ய வேண்டியவை.

ஆனால் உண்மையில் இந்த காதல்ச் சோகம் பெண்களுக்கு மட்டும்தானா ஆண்களுக்கில்லையா. பெண் அடக்கமாய் இருந்து விடுவாள் ஆண் அழுது அரற்றி அவளைப் பற்றிக் காவியம் பாடுகிறான். காலம் மாறினும் தேகம் அழியினும் கதையில் கவிதையில் கலந்தே வாழவைக்கிறான்.கண்ணதாசன் அப்படி ஒரு ஆத்மா.

பழகிய காதல் எண்ணிப் பள்ளியில் தனியே சாய்ந்து
அழுவது சுகமென்பேன் நான், அறிந்தவர் அறிவாராக...
என்று எங்களையெல்லாம் கூட்டணி சேர்த்துக் கொள்கிறார்.இது அவரது தனிப்பாடல்.திரையிசையில் கேட்கவே வேண்டாம்.அவரது நெஞ்சில் குடியிருக்கும் காவேரி எங்கெல்லாம், எல்லா அணைகளையும் மீறிப் பாய்கிறாள் தெரியுமா.

நாயகியே எனது காவிய எல்லை /நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை என்றும்,

உதயமாகும் நேரமென்று கிழக்கினில் சென்றேன்/ அவள் பொழுது போகும் நேரமென்று மேற்கினில் சென்றாள்/ அஸ்தமனச் சூரியன் என்று அவளைச் சொல்லலாம் –நான் அவளை வெல்ல முடியவில்லை விதியை வெல்லவா.என்று விதியையும் அவளையும் நினைத்து ஏங்கும் எத்தனையோ கவிஞர்களைப் படைத்து தனக்கு பதிலியாய் உலவவிட்டுச் சென்றிருக்கிறான் அரை நூற்றாண்டே வாழ விதிக்கப்பட்ட இந்த அற்புதக் கவிஞன்.

கண் போல் வளர்ப்பதில் அன்னை-அவள் கவிஞனாக்கினாள் என்னை என்றும்

இங்கு
நானும் கவியாக யார் காரணம் அந்த நாலும் விளையாடும் விழிகாரணம்....

என்றும் என் கல்லூரி நோட்டுப்புத்தகத்தின் மூலை முக்கெல்லாம் அவனது வரிகளே ஆட்சி செலுத்தின அந்தப் பதின் பருவத்தில்...அப்போது நான் எழுதிக் குவித்தவை ஏராளமாக நாட்குறிப்பில் மக்கிப் போய்க் கிடக்கிறது.

நாங்கள் எழுதிய புத்தகம் /நானே சொன்ன தத்துவம்/ இங்கே அந்தப் புத்தகம்/ எங்கே அந்தத் தத்துவம்/
ஒரு பக்கம் பார்த்தால் கற்பனை/மறு பக்கம் பார்த்தாலற்புதம்/
அதை முற்றும்பார்க்கும்முன்னமே/ ஏன்மூடச்சொன்னாய் தெய்வமே

என்று கண்ணதாசன் எழுதிய பாடலைப் போல அந்த மகா கலைஞனை முற்றும் பார்க்கும் முன்பே....ஏன் மூடச் சொன்னாய் தெய்வமே என்று பேராசை பிடித்த தமிழ் மனம் தவிக்கிறது.

கண்ணதாசனின் பன்முக ஆளுமையைப்பற்றி அவனது திரைப்படப் பாடல்களிலிருந்து மட்டுமே நிறுவிக் கொண்டே போகலாம். அப்படியொரு ஆளுமையின் பெயரால் வழங்கப் படும் இந்த விருதுனைப் பெறுவதில் உள்ளபடியே நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இதை வழங்கும் “கண்ணதாசன் கழக “ அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. கண்ணதாசன் சொல்வாரே ”கண்கள் அருகே இமையிருந்தும் கண்கள் இமையைப் பார்த்த்தில்லை” அது போலவோ இல்லை எங்கள் பக்கத்தில் சொல்வார்களே,நல்ல மாடு உள்ளூரிலேயே விலை போகும் என்று, அது போலவோ, உள்ளூரில் அடையாளமே தெரியாத என்னை, கவிஞர் தேவமகள் இலக்கிய விருது,கவிஞர் சிற்பி இலக்கிய விருது என விருதுகள் வழங்கி எப்போதும் அடையாளப்படுத்துகிற கொங்கு மண்டலத்திற்கும் குறிப்பாகக் கோவை நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி வணக்கம்.


Thursday, June 23, 2022

திரைப்படத்திலும் நிஜத்திலும் . . .

 


மேலே உள்ளது பேராண்மை திரைப்படக் காட்சி. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கதாநாயகன் துருவன் திட்டமிட்டு இழிவு படுத்துவதாக காட்சி அமைந்திருக்கும். 


இந்தப் படம் என்னவென்று அதில் உள்ள குறிப்புக்களே சொல்கிறது. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

முதலாவது நேரடியாக திணிக்கப்பட்டது. இரண்டாவதோ திணிப்பை ஏற்றுக் கொள்வது இயல்பாக்கப்பட்டது. ஒரு வேளை விஷமூர்த்தி ஜனாதிபதி வேட்பாளரென்றால் இது நடந்திருக்காது.

பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஜனாதிபதியானால் அவர்களுக்கு எந்த விடியலும் கிடைக்காது. ஏனென்றால் தலைமை பீடத்தின் கொள்கை அதற்கு முரணானது. 

குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாத . . .

 


மகாராஷ்டிர அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். உத்தவ் தாக்கரே தன் வீட்டிற்கே வந்து விட்டார்.

அவர் கட்சி எம்.எல்.ஏ க்கள் முதலில் பாஜக ஆளும் மாநிலமான குஜராத்திற்கு சென்றார்கள், இப்போது அங்கிருந்து பாஜக ஆளும் இன்னொரு மாநிலமான அஸ்ஸாமிற்கு சென்றுள்ளனர். 

அவர்களின் ஒரே கோரிக்கை  சிவசேனா தற்போதைய என்.சி.பி, காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகி பாஜக கூட்டணியில் இணைய வேண்டும். அதற்காகத்தான் இப்போது புரட்சி, போராட்டம் எல்லாமே . . .

ஆனால் பாஜக சொல்கிறது 

"சிவசேனாவில் நடப்பதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நாங்கள் எதுவும் தூண்டவில்லை. அவர்களாகவே தூண்டப்பட்டார்கள்"

"ஆமாம். எங்களோடு கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்ட கட்சி, எங்களை கழட்டி விட்டு ஆட்சி செய்வது பிடிக்கவில்லை"

"தேவேந்திர பட்னாவிஸிற்கு முதல்வர் பதவியில்லாமல் இருக்க முடியவில்லை" 

என்றெல்லாம் நேர்மையாக சொல்ல முடியாத அளவிற்கு அயோக்கியர்கள் அவர்கள். 

கேட்பவன் கேணையனாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் கதை அளக்கலாம் என்ற எண்ணம்தான். கேணையர்களுக்கும் பஞ்சம் இல்லா தேசமல்லவா இது?

Wednesday, June 22, 2022

கலவரத்துக்கு அலையும் கயவர்கள்

 


மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் முகநூல் பதிவு கீழே உள்ளது.

 “திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் செல் பேசி டவர்.

நம்மாழ்வார் பாடிய கோவிலில் வாடகை சம்பாதிக்க HRCE அராஜகம்”
என்று வாட்ஸ் அப் செய்திகள் பகிரப்படுகிறது.
இது உண்மையல்ல.
கோபுர பாதுகாப்புக்காக 2014 ஆம் ஆண்டு நிர்வாகத்தின் சார்பில் பொருத்தப்பட்ட இடிதாங்கி கோபுரமாகும்.




பொய்யையே வாழ்க்கையாக கொண்டவர்கள், பொய்யைப் பரப்பியாவது கலவரத்தைத் தூண்ட முயலும் அயோக்கியர்கள்  காவிக்கயவர்கள் என்பது இப்பதிவின் மூலமும் நிரூபணமாகிறது.

பிகு : மேலே உள்ள படம் காவிக்கயவர்கள் நடத்திய குஜராத் கலவரத்தின் ஓர் காட்சி

 

விஷமூர்த்திக்கு கன்ப்யூசனா கீதாம் . .

 


விஷமூர்த்திக்கு பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது முன்பே தெரிந்திருக்கிறது போல. 

அதனால்தான் 'சீ, சீ இந்த பழம் புளிக்கும்" என்ற கதையாக "முற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை" என்று கார்ட்டூன் போட்டு தன் கடுப்பை வெளிப்படுத்தினார் போல. 

எதிர்க்கட்சிகள் நிறுத்தியுள்ள வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா குருமூர்த்தியின் வரையறைக்குள் வருபவர். 

இப்போது விஷ மூர்த்தி யாரை ஆதரிப்பார்?

கட்சி வேட்பாளரா? ஜாதி வேட்பாளரா?

பாவம் அவருக்கு ஒரே குழப்பம் . . .

Tuesday, June 21, 2022

அக்னிபாத் – மனு தர்ம சதி

 



 

அக்னிபாத் திட்டத்தினை கொண்டு வருவதில் மிகப் பெரிய மனு தர்ம சதி அடங்கியுள்ளது.

 ராணுவத்தில் சிப்பாய் வேலைகளுக்கு செல்பவர்கள் யார்?

 பத்து வருடங்களுக்கு முன்பாக எங்கள் நிறுவனத்தில் “ஐந்தாண்டுகளுக்கு மேலாக சார் பணியாளராக, நான்காம் பிரிவு பணியில்  பணியாற்றியவர்களுக்கு” உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நிரந்தரப் பணி அளிக்கப்பட்டது. எங்கள் கோட்டத்தில் கிட்டத்தட்ட நூறு பேர் பணி நிரந்தரம் பெற்றனர். அவர்களின் சமூக பின்னணியை ஆய்வு செய்த போது பாதிக்கும் மேற்பட்டவர்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் மீதியுள்ளவர்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்களாகவுமே இருந்தார்கள். முற்பட்ட வகுப்பினர் என்று சொல்லக் கூடியவர்கள் ஒருவர் கூட இல்லை. பிற கோட்டங்களிலும் இதே நிலைமைதான்.

 அதாவது தற்காலிக சார்பணியாளராக நான்காம் பிரிவு பணியில் வேலை பார்க்க ஒரு முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் கூட முன்வரவில்லை. இதற்கு முன்பாக 1993 ல் நிரந்தரப் பணி நியமனத்தின் போது விண்ணப்பித்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவில்தான் இருந்தது.

 ராணுவத்தில் முற்படுத்தப்பட்டவர்கள் யாருமே கிடையாதா?

 இருக்கிறார்கள்.

 அவர்கள் அதிகாரிகளாக நியமனம் பெற்றவர்கள். அதிகாரத்தின் படிக்கட்டுக்களில் மேலே மேலே செல்பவர்களும் அவர்கள்தான்.

 ராணுவத்தில் சிப்பாயாக வேலைக்கு சேர்பவர்களில் அனைவரும் தேச பக்தியால் உந்தப்பட்டு சேர்பவர்கள்தான் என்று நாம் நினைத்தால் அதை விட பெரிய தவறு எதுவுமில்லை.

 மேற்படிப்பிற்கு வாய்ப்பில்லாமல், வேலைக்கான சந்தையில் மிகவும் சிரமப்பட்டு ராணுவத்தில் சேர்ந்தாலாவது நம் பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கையில் வருபவர்கள். ஓய்வூதியமும் பணி ஓய்வுக்குப் பிறகு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் முன்னாள் ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் முன்னுரிமையுமே ராணுவத்துக்கான ஈர்ப்பு சக்தி.

 இன்று அரசுத்துறையிலும் பொதுத்துறையிலும் பணி நியமனம் என்பது கானல் நீராக மாறி வரும் சூழலில் ஓய்வூதியமே அவர்களுக்கான ஒரே பிடிப்பு.

 அவர்கள் பட்டப்படிப்பு படித்தவர்களாக இருப்பார்கள், குறைந்த பட்சம் பனிரெண்டாவது தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.

 17 வயதில் அக்னி வீரனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனிடமிருந்து பள்ளி மேல் நிலைக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் பறிக்கப்படுகிறது. நான்கு வருடத்திற்குப் பிறகு அவன் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகிற போது கல்விக்கான காலம் கடந்து போயிருக்கும். மறு வேலை வாய்ப்பு என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைதான். அரசுத்துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணி நியமனம் என்பதே இல்லாத நிலையில் இந்த மந்திரிகளின் முன்னுரிமை அறிவிப்பெல்லாம் வழக்கமான ஜூம்லாதான். 0*10 % எவ்வளவோ அவ்வளவுதான் இவர்கள் தரும் மறு வேலை வாய்ப்பு.

 புதிய கல்விக் கொள்கை மூலம் குலக் கல்வி திட்டத்தை கொண்டு வரலாமா என்று சதி செய்கிற ஆட்சியாளர்கள், சாதாரண இள நிலை படிப்பிற்குக் கூட நீட் தேர்வை அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ள ஆட்சியாளர்கள், இளைஞர்களின் நான்கு வருட உழைப்பைச் சுரண்டி அவர்களின் கல்வியைப் பறித்து பின்பு நடுத்தெருவில் நிற்க வைக்கும் சதியே அக்னிபாத் திட்டம்.

 நான்கு வருடத்துக்குள் அவர்களுக்கு தேச பக்தி ஊட்டப்படும். அதனால் அவர்கள் வேலை கேட்டோ, ஓய்வூதியம் கேட்டோ போராட மாட்டார்கள் என்று பெருமிதமாக கதையளக்கிறார்கள் சங்கி மூடர்கள்.

 தங்களின் வாழ்வைத் தொலைத்து விட்டு நடுத்தெருவில் நிற்கும் போது அவர்களின் தேச பக்தியை விட பட்டினியும் வறுமையுமே அவர்களை வழி நடத்தும். வெயிலிலும் பனியிலும் நேரம் காலம் பார்க்காமல் தங்கள் உழைப்பைச் சுரண்டியவர்கள் மீதுதான் அந்த கோபம் இயல்பாகவே திரும்பும். இந்த சிறு உண்மை கூட சங்கிகளின் முட்டாள் மூளைக்கு எட்டவில்லை.

 மொத்தத்தில் அக்னிபாத் என்பது ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த வாலிபர்களின் கல்வியை பறித்து ஒப்பந்தக் கூலியாக்கி பின்பு நடுத்தெருவில் நிற்க வைக்கும் மனு தர்ம சதி. சிக்கன நடவடிக்கை என்று சொன்னாலும் உண்மையில் அரசின் நோக்கம் வாலிபர்களின் வாழ்வோடு விளையாடுவதுதான்.

 ராணுவம் போன்ற அமைப்புக்களில் நிரந்தரமான சிப்பாய்கள் இல்லாமல் போனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். நாட்டின் பாதுகாப்பிற்கே ஆபத்து ஏற்படும்.

 எனவே அக்னிபாத்தை கொண்டு வந்தவர்களும் ஆதரிப்பவர்களும்தான் தேசத் துரோகிகள்.

 எதிர்ப்பவர்கள் மட்டுமே தேச பக்தர்கள். . . .

அதான் அர்த்தம் ஆட்டுக்காரா . . .

 


கல்வித்துறை செயலாளர்கள் கூட்டத்துக்கு கல்வித்துறை செயலாளர் போகவில்லை. 

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பழனிவேல் தியாகராஜன் செல்லவில்லை.

கல்வி அமைச்சர்கள் கூட்டத்திற்கு அன்பில் மஹேஷ் செல்லவில்லை.

இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று கேட்டுள்ள ஆட்டுக்காரா! 

உனக்கு நிஜமாகவே ஆட்டு மூளைதான். 

உங்க கட்சியை, உங்க ஒன்றிய அரசைஒரு பொருட்டாகவே தமிழ்நாட்டில் யாரும் மதிக்கவில்லை என்பதுதான் அதன் அர்த்தம். . .

Monday, June 20, 2022

புதுசா ஜிந்தியுங்க மோடி . .

 


மோடிக்கு வேண்டாத எவனோ ஒருத்தன், மோடிக்கு முட்டாள்தனமா ஐடியா குடுத்துருக்கான்.

குப்பை பொறுக்கற வேஷம் ஏற்கனவே மகாபலிபுரத்தில எடுபடலை. இதெல்லாம் ஒரு பொழப்பான்னு மக்கள் திட்டிட்டாங்க.



இப்போ மறுபடியும் அதே கேரக்டரை கொடுத்து அசிங்கப்படுத்தறாங்க. 

மோடி வர வழியைக் கூட சுத்தமா வைக்காமல் அதிகாரிங்க இருக்காங்களா? என்னங்கடா காதுல பூ சுத்தறீங்க. . .



ஏதாவது புதுசா ஜிந்தியுங்க மோடி. அப்பறம் உங்க அம்மாவை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க. . உங்க மனைவியை கண்டுக்காத மாதிரி அவர்களையும் கண்டுக்காதீங்க. உங்க போட்டோ செஷனுக்காக அவங்களை இது வரைக்கும் செஞ்ச டார்ச்சர் போதும்.

என்ன, உங்க நடிப்பெல்லாம் புரிய நாலு முட்டாளுங்க, மோடியை பாத்தியா, பாட்டிலை எடுத்து போட்டு சுத்தம் செய்யறாருன்னு எழுதுவாங்க. அவங்களை கடிக்கற வேலை வேறு எங்களுக்கு எக்ஸ்ட்ரா

அதெல்லாம் முடியாதுடா தம்பி . . .

 


அக்னிபாத் எனும் அயோக்கியத்திட்டத்தை சரியாக புரிந்து கொண்ட இளைஞர்களின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய ஒவ்வொரு ஒன்றிய மந்தியும் சாரி மந்திரியும் தங்கள் துறையில் வேலை வாய்ப்பில்  10 %  ஒதுக்கீடு அக்னி வீரர்களுக்கு தருவோம் என்று அறிவித்து வருகின்றனர். 

இது போன்ற இட ஒதுக்கீடெல்லாம் கொல்லைப்புற வழியில் வருவதாகும். இதையெல்லாம் அனுமதிக்க முடியாது என்று இரண்டு மாதம் முன்புதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆக இந்த 10 % இட ஒதுக்கீடு என்பதே பெரிய டுபாக்கூர் வேலைதான். மோடியின் மந்திரிகள் மட்டும் மோடியைப் போலவே ஃப்ராடுகள்தானே என்ற உங்கள் மனதின் குரல் கேட்டு விட்டது.

மற்ற மந்திரிங்க அறிவிப்பை கேட்டதும் விமானத்துறை மந்திரியான ஓடுகாலித் தம்பி ஜோதிர் ஆதித்தியா சிந்தியாவும் உணர்ச்சிவசப்பட்டு விமானத்துறையிலும் 10 % இட ஒதுக்கீட்டுன்னு சொல்லிட்டான்.

தம்பி சிந்தியா, ஏர் இந்தியாவை டாடா கிட்ட வித்துட்ட, ஏர்போர்ட்டை எல்லாம் அதானிகிட்ட கொடுத்திட்ட, இவங்கெல்லாம் அக்னிவீரனுக்கு வேலை கொடுப்பாங்களா? (கிழிப்பாங்க) நீ மந்திரியாக இருக்கறதே தண்டம்தான்.  இதுல விமானத்துறையில் 10 % இட ஒதுக்கீடுன்னு காமெடி செய்யறே!

பிகு: அக்னிபாத் என்பது சமூக நீதிக்கு எதிரான மிகப் பெரிய மனு தர்ம சதி. விரிவாக விரைவில் எழுதுவேன்


Sunday, June 19, 2022

சாமியார்களின் நிழல் உலகம் அறிய . . .


 

அவன் சாகட்டும், செத்து ஒழியட்டும்”

 

என்று சொல்லிக் கொண்டே தரையில் காயங்களுடன் படுத்துக் கிடந்த ஒரு முதியவரின் வயிற்றில் தன்னுடைய காலால் ஓங்கி மிதித்தார் ஒரு துறவி.

 

இது எந்த திரைப்படத்தின் முதல் காட்சியுமல்ல, திரேந்திர கே.ஜா எழுதி தோழர் இ.பா.சிந்தன் தமிழாக்கம் செய்த “ஆன்மீக அரசியல்” நூலின் தொடக்கமே இப்படித்தான் அமைகிறது.

 

அயோத்தியின் பெரிய அரசியல் மையமான துறவிகள் குழுவான நிர்வானி அகாரா குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள  அனுமார் கோயிலின் வாசலில்  அந்த அகாராவின் துறவி, வாடகை கொடுக்காத பூக்கடை வைத்திருந்த முதியவரைத்தான் அப்படித்தான் தாக்கினார்கள். அந்த குழு மிகவும் பிரசித்தி பெற்ற குழுதான். அந்த குழுவைச் சேர்ந்த அபிராம்தாஸ் என்ற துறவிதான் பாபர் மசூதியில் திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்தவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

 

இந்த நூல் இந்துத்துவ வெறியர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு நூல். ஆன்மீக அரசியல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்நூல் சாமியார்களின் நிழல் உலகை அம்பலப்படுத்துகிற நூல். சாமியார்கள் எப்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் விஸ்வ ஹிந்து பரிஷத் மூலமாக வளைக்கப்பட்டார் என்பதை சொல்கிற நூல்.

 

உங்களை படிக்கத் தூண்டுவதற்காக நூலிலிருந்து சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

 

துறவிகள் குழுக்கள் அகாராக்கள் என்று அழைக்கப்படுகிறது. சைவத்தை, வைணவத்தை, சீக்கியத்தையும் கூட பின்பற்றும் அகாராக்கள் உண்டு. அவற்றுக்குள் பிரிவினைகள் உண்டு, அவைகள்தான் கோயில்கள், மடங்களை நிர்வகிப்பவை. அகாராக்களின் தலைவர்களாக இருக்கும் மகந்துகள் என்பவர் அதி முக்கியமானவர்கள். அகாராக்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு அகில இந்திய அகாரா பரிஷத். உபி முதல்வர் யோகி கூட கோரக்பூர் மடத்தின் மகந்து என்பதை நினைவில் கொள்க..

 

மல்யுத்தம் கற்றுக் கொள்வதற்காக அகாராக்களில் இணைபவர்கள் உண்டு. முகலாய ஆட்சிக் காலத்திலும் பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அகாராக்கள் கூலிப்படை நடத்தி மன்னர்கள் சார்பாக போர்களுக்குச் செல்வார்கள். இதிலே அவர்களுக்கு எந்த கொள்கையும் கிடையாது. ஒரு வருடம் ஆதரித்த அரசரை அடுத்த வருடம் எதிர்த்த கதையும் உண்டு. காரணம் பணம்.

 

ஒரு மடத்தின் வாரிசாக வருவது என்பதற்காக கொலையெல்லாம் நடந்துள்ளது. குருவை சீடன் கொல்வதும், ஒரு மடத்து விஷயத்தில் தலையிட இன்னொரு மடம் கொலையாட்களை அனுப்புவது ஆகியவையெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்துள்ளது என்பதை நூலின் பல பக்கங்கள் சொல்கிறது.

 

ஒரு சாமியார் இறந்து போய் விட்டார். அவரை யார் அடக்கம் செய்வது என்று இரண்டு கோஷ்டிகளுக்குள் கம்பு, கத்தி, வாள் ஆகியவற்றைக் கொண்டு சண்டை நடக்கிறது. இந்த சண்டையில் ஒரு கோஷ்டிக்கு ஆதரவாக சண்டையிட குதிரையில் வந்த ஒரு சாமியார் தன்னை பாதுகாத்துக் கொள்ள, எதிரணியினரை தாக்க ஆயுதமில்லாமல் தவித்து புதிய ஆயுதத்தை கண்டறிகிறார். இறந்து போன சாமியாரின் சடலத்தை கால்களைப் பிடித்து தூக்கி, அதனைக் கொண்டே அனைவரையும் தாக்குகிறார்.

 

 

இது போல ஏராளமான சம்பவங்கள் நடக்கும் இடம்தான் அயோத்தி.

 

அனைத்து அகாராக்களுக்கும் முக்கியமான நிகழ்வு கும்ப மேளா, அவர்கள் குளித்த பின்புதான் மற்றவர்கள் குளிக்க முடியும். எந்த அகாராவில் அதிகமான நிர்வாண சாமியார்கள் உள்ளார்களோ, அவர்கள்தான் வலிமையானவர்கள் என்று கருதப்படுவார்கள், வருமானமும் அதிகரிக்கும் என்பதால் பிச்சைக்காரர்களையும் சாமியார்களாக அழைத்து வந்து கணக்கு காண்பிக்கிறார்கள் என்பதை சாமியார்களே வேதனையோடு பகிர்ந்து கொள்கிறார்கள். நாக சாதுக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் உள்ள வேறுபாட்டை அந்த சாமியார்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை நூலை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

 

அகாராக்கள் சில சாமியார்களுக்கு “மகா மண்டலேஸ்வரர்கள்” என்று பட்டம் தரும். அப்படி பட்டம் கிடைத்த சாமியாருக்கு பக்தர்கள் அதிகமாவார்கள், காணிக்கை பெருகும் என்பதால் பணம் வாங்கிக் கொண்டு பட்டம் கொடுக்க மகாமண்டலேஸ்வரர்கள் எண்ணிக்கை இப்போது பெருகி விட்டது. ராதா மே என்ற பெண் சாமியாருக்கு அப்பட்டம் தந்தது சர்ச்சையாகி உள்ளது. ஆனால் அப்படி எந்த சர்ச்சையும் நித்தியானந்தருக்கு அளிக்கப்பட்ட போது உருவாகவில்லை.

 

இந்துக்களின் மிகப் பெரிய மதத்தலைவராக கருதப்படுகிற சங்கராச்சார்யார்களுக்குள் நடக்கிற சர்ச்சை, அரசியல், பிரச்சினைகள் குறித்து இந்த நூல் விரிவாக அலசுகிறது. ஆதி சங்கரர் உருவாக்கிய சங்கர மடங்கள் ஜோதிர்மத், துவாரகை, பூரி, சிருங்கேரி ஆகிய நான்கு இடங்களில் உள்ளதாக சொல்லப்படுகிறது. காஞ்சி மடம் தாங்களும் ஆதி சங்கரரால் உருவாக்கப்பட்ட மடம் என்று சொன்னாலும் இதனை மற்ற நான்கு மடங்கள் ஏற்பதில்லை. ஜோதிர்மத் மடத்தின் சங்கராச்சார்யாராக முடி சூட்டிக் கொண்ட அச்சுதானந்த தீர்த்தர் என்பவரை அகாராக்கள் எப்படி துரத்தியது என்பதை நூல் விவரிக்கிறது, அது மட்டுமல்ல இப்போது கிட்டத்தட்ட 100 சங்கராச்சார்யார்கள் உள்ளார்கள் என்பதையும் அம்பலப்படுகிறது.

 

சாமியார்களின் துணை இருந்தால் அவர்கள் மூலம் பக்தர்களிடம் தங்கள் அரசியலை கொண்டு செல்லலாம் என்று வி.ஹெச்.பி எடுத்த முயற்சிகள், அதன் ஒரு பகுதியாக முன்னுக்குக் கொண்டு வரப்பட்ட ராமர் கோயில் பிரச்சினை, ஆரம்ப காலத்து முட்டுக்கட்டைகள், பின்னர் அவர்கள் எப்படி முன்னேறினார்கள் ஆகியவை விவரமாக எழுதப்பட்டுள்ளது.

 

பாஜகவின் மத அரசியலை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதன் பின்புலத்தில் உள்ள சாமியார்களின் நிழல் உலகை புரிந்து கொள்ள வேண்டும். போதைப் பொருள் மாஃபியாவை விட மோசமான அந்த உலகை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார் நூலாசிரியர் திரேந்திர கே.ஜா. மொழி பெயர்ப்பு என்ற உணர்வு வராத வண்ணம் எப்போதும் போல மிகச் சிறப்பாக தமிழாக்கம் செய்துள்ளார் தோழர் இ.பா.சிந்தன்.

 

இப்படி ஒரு சர்ச்சையான நூலை தைரியமாக வெளியிட்ட பொள்ளாச்சி எதிர் வெளியீட்டிற்கும் வாழ்த்துக்கள்.