Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Tuesday, November 20, 2018

நட்புக்கும் அவர்கள்தான் . . .





பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வெளியிடும் "காப்பீட்டு ஊழியர்'  மாத இதழின் நவம்பர் 2018 இதழில் பிரசுரமான எனது கட்டுரை


பொதுவுடமைக்கு மட்டும் இலக்கணம் படைத்தவர்கள் அல்ல . . .

அது ஒரு வறுமையான காலம். செல்லும் இடங்களிலெல்லாம் புரட்சியின் விதைகளை தூவிச்செல்கிறார் என்பதால் பல நாடுகளில் ஆட்சியாளர்கள் மார்க்ஸை தங்களுடைய எல்லைக்கு அப்பால் துரத்திக் கொண்டிருந்த நேரம். 1844 ல்  பாரீஸில் தங்கியிருந்த மார்க்ஸை முதல் முறையாக ஏங்கல்ஸ் சந்திக்கிறார். ஒரு செல்வந்தர் குடும்பத்தின் வாரிசாக இருந்தும் அந்த படோடபங்கள் மீது நாட்டமற்று பாட்டாளிகள் படும் துயரத்தின் மீது கவலை கொண்ட மனிதரான ஏங்கல்ஸ் பிறந்ததும் கூட மார்க்ஸ் பிறந்த அதே ரைன்லாந்து மாநிலத்தில்தான்.

முதல் சந்திப்பு

“தத்துவத்தின் வறுமை’ என்ற நூலை அப்போதுதான் மார்க்ஸ் எழுதியிருந்தார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் குடும்ப வணிகத்தை பார்த்துக் கொண்டிருந்த ஏங்கல்ஸ் தொழிலாளர்கள்தான் துயரப்படும் வர்க்கம் என்பதை முதன் முதலில் சொன்ன “இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர்கள் நிலை” என்ற நூலை எழுதி இருந்தார். இருவரின் சந்திப்பு உலக பாட்டாளி வர்க்கத்தின் வாழ்நிலையை புரட்டிப் போடக்கூடிய தத்துவங்களை உருவாக்கப் போகிறவர்களின் சந்திப்பு என்பதை அவர்கள் கூட அப்போது உணர்ந்திருக்கவில்லை.

முதல் நூல்

முதல் சந்திப்புக்குப் பிறகு தொடர்ச்சியாக தகவல் பரிமாற்றங்களைச் செய்து கொண்டிருந்த மார்க்ஸூம் ஏங்கெல்ஸும் இணைந்து 1945 ல் உருவாக்கிய முதல் நூல் “புனிதக் குடும்பம்” பாட்டாளி வர்க்கத்தை கருத்துமுதல் வாதக் கண்ணோட்டத்தில் கடுமையாக விமர்சித்து வந்த ஹெகலியவாதிகளுக்கு அவர்கள் அளித்த பதிலே இந்த நூல். “ஆபத்தான விமர்சனத்தைக் குறித்த விமர்சனம்’ (Critique of Critical Critique.)  என்று முதலில் பெயர் சூட்டப்பட்டிருந்த இந்த நூல் பாட்டாளி வர்க்கத்தை பொருள் முதல்வாத கண்ணோட்டத்தில் விளக்கியது. முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டும் வல்லமை பாட்டாளி வர்க்கத்திற்கே உள்ளது என்பதை முதன் முதலில் சொன்னதும் கூட இந்த நூலே.  

வெளியேற்றப்பட்டவரும் வெளியேறியவரும்

பிரெஷ்ய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மார்க்ஸ் பிரான்ஸை விட்டு வெளியேற்றப்படுகிறார். அவர் பாரீஸிலிருந்து பெல்ஜியம் நாட்டின் ப்ரஸ்ஸல்ஸ் நகருக்குச் செல்கிறார். அதே நேரம் ஏங்கெல்ஸும் தனது வீட்டிலிருந்து வெளியேறி ப்ரஸ்ஸல்ஸ் செல்கிறார். அந்த நகரின் நூலகங்கள் அவர்களின் அறிவுத் தேடலுக்கு போதுமானதாக இருக்கவில்லை. இருவரும் இங்கிலாந்து செல்கிறார்கள். மான்செஸ்டர் நூலகங்களில் பொழுதைச் செலவழித்து பின் லண்டன் செல்கின்றனர்.


அமைப்பினை உருவாக்கும் பணி

தொழிலாளர் புரட்சியை உருவாக்க அமைப்பு வேண்டும் என்பதை உணர்ந்து பல நாடுகளிலும் அமைப்புக்களை உருவாக்கும் பணியை இருவரும் செய்யத் தொடங்கினர். இங்கிலாந்தில் இருந்த அமைப்புக்களை ஒருங்கிணைக்கும் பணியை ஏங்கெல்ஸ் செய்தாரென்றால் பிரான்ஸிலும் ஜெர்மனியிலுமிருந்த அமைப்புக்களை ஒன்றினைக்கும் பணியை மார்க்ஸ் செய்தார்.

கம்யூனிஸ்ட் லீக் உருவாகிறது, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் கூட

இச்சூழலில்தான் 1847 ல் லண்டனில் செயல்பட்டு வந்த் நீதியாளர் சங்கம், மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும் தங்கள் அமைப்பில் இணைய வேண்டுமென்றும் தங்கள் சங்கத்தின் புதிய வேலைத்திட்டத்தையும் கூட உருவாக்கித் தர வேண்டுமென்றும் கோருகிறது. அதனை ஏற்று அந்த சங்கத்தின் காங்கிரஸில் ஏங்கெல்ஸ் பங்கேற்கிறார். நிதிப் பிரச்சினை காரணமாக அப்போது மார்க்ஸால் அக்கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. ஏங்கெல்ஸ் கலந்து கொள்கிறார். அந்த கூட்டத்தில்தான் அமைப்பின் பெயர் “கம்யூனிஸ்ட் லீக்” என மாறுகிறது.

கம்யூனிஸ்ட் லீகின் வேலைத்திட்டமாகத்தான் 1848 ல்  மார்க்ஸும் ஏங்கெல்ஸும் தயாரித்ததுதான் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”. இன்றளவும் உலகத்து உழைப்பாளி மக்களுக்கு வழிகாட்டி போராட்டத்திற்கு உற்சாகமளிப்பது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. இழப்பதற்கு அடிமைச்சங்கிலியைத் தவிர வேறெதுமில்லாத தொழிலாளர்கள்  அடுத்த எழுபது ஆண்டுகளிலேயே மண்ணுலக சொர்க்கமாக சோவியத் யூனியனைப் படைத்தார்கள்.

1848, 1849 ஆகிய ஆண்டுகளில் ஐரோப்பாவில் பல இடங்களில் நடைபெறும் புரட்சிகளை மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஆதரிக்கிறார்கள், உற்சாகப்படுத்துகின்றார்கள், தொழிலாளர்கள் மத்தியில் தங்கள் கருத்துக்களை எடுத்துச் செல்வதற்காக “புதிய ரைன்லாந்து கெஜட்’ என்ற பத்திரிக்கையை மார்க்ஸ் துவக்குகிறார். ஏங்கெல்ஸ் அதிலே கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி பொருளாதார உதவிகளையும் செய்கிறார்.

நண்பனுக்காக

உலகத்தின் மக்களின் வறுமைக்கான காரணம்  என்னவென்று ஆராய்ந்து அதைப் போக்குவதற்கான அருமருந்தை உருவாக்கும் ஆராய்ச்சிப் பணியை 1850 ல் மார்க்ஸ் துவங்குகிறார். ஆம், அதுதான் “மூலதனம்” எழுதும் பணி. உலக மக்களின் வறுமை பற்றி கவலைப்பட்ட மார்க்ஸ் அப்போது மிக மோசமான வறுமையால் பீடிக்கப்பட்டிருந்தார் என்பது ஒரு முரண் நகை.

அப்போது ஏங்கெல்ஸிற்கும் சில பொருளாதார நெருக்கடிகள் இருக்கத்தான் செய்தது. ஆனால் மார்க்ஸின் ஆய்வு எந்த தடங்கலாலும் பாதிக்கப்படாமல் பொருளாதார உதவி செய்வதற்காகவே மான்செஸ்டரில் இருந்த குடும்ப வணிகத்தை கவனிக்கத் தொடங்கினார். “நாய் வர்த்தகம்” என்று அதனை வெறுப்போடு வர்ணித்தாலும் நண்பனின் மகத்தான பணிக்காக அதிலே இருபது வருடம் ஈடுப்பட்டார். அது மட்டுமா,

நியுயார்க் டெய்லி டிரிப்யூனல் பத்திரிக்கைக்கு மார்க்ஸின் பெயரில் கட்டுரைகளை எழுதியனுப்பி, அதற்கான தொகையையும் கிடைக்கச் செய்திருந்தார். 

ஏங்கெல்ஸ் மட்டும் இல்லாதிருந்தால் மார்க்ஸால் “மூலதனம்’ நூலை முடித்திருக்கவே முடியாது. வறுமையின் கொடுமையில் மூழ்கி இருந்திருப்பார் என்ற லெனின் கூற்றிலிருந்தே மார்க்ஸிற்கு எந்த அளவு பாதுகாப்பு அரணாக ஏங்கெல்ஸ் இருந்தார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

1864 ல் பல நாட்டு தொழிற்சங்கங்கங்கள், தொழிலாளர் கட்சிகள் ஆகியவற்றை இணைத்து “முதல் அகிலம்” என்று அழைக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் சங்கம் உருவாக்கப்படுகிறது. அந்த அமைப்பின் பொறுப்பாளர்களாக, அதனை வழி நடத்துபவர்களாக மார்க்ஸும் ஏங்கெல்ஸும் செயல்பட்டனர்.

அஞ்சலி உரை

மூலதனம் நூல் எழுதும் பணி முடிவுற்றது. முதல் பாகம் அச்சுப்பிரதியாக வெளி வந்தது. இந்த நிலைமையில்தான் உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்த மார்க்ஸ் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த படியே 1883 மார்ச் மாதம் 14 ம் நாள் சிந்திப்பதை நிரந்தரமாக நிறுத்தி இருந்தார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு லண்டன் ஹைகேட் மயானத்தில் மார்க்ஸை அடக்கம் செய்கிற போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரையானது மிகவும் முக்கியமானது, அவர்கள் நட்பின் ஆழத்தை எடுத்துரைப்பதாக அமைந்திருந்தது.

“இதோ இந்த மார்ச் 14 ம் தேதி மதியம் 3 மணிக்கு இவர் சிந்தனையில் மூழ்கிக் கொண்டிருந்த போது இரண்டு நிமிடங்கள் தனிமையில் விட்டுச் சென்றோம். திரும்பி வந்து பார்க்கையில் இனி விழிப்பே வராத தூக்கத்தில் நாற்காலியிலேயே உறங்கிப் போயிருந்தார்.

இந்த மேதையின் மரணம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்கத்திற்கும் வரலாற்று விஞ்ஞானத்திற்கும் அளவிட முடியாத இழப்பை உருவாக்கியுள்ளது. இந்த மகத்தான மனிதருடைய பிரிவால் ஏற்பட்டுள்ள இடைவெளியை நாம் விரைவிலெயே உணர்வோம்.

உயிரியல் இயற்கையில் வளர்ச்சி விதியினை டார்வின் கண்டுபிடித்தது போல மனித சமூக வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.  அரசியல், மதம், அறிவியல், கலை இவற்றை அடையும் முன்பு உண்ண உணவு, உடுத்த உடை, குடிக்க நீர், வசிக்க வீடு ஆகிவற்றை மனிதன் பெற வேண்டும் என்ற எளிய உண்மையை மட்டும் இவர் உலகிற்கு சொல்லவில்லை. முதலாளித்துவ அடிப்படையிலான உற்பத்தி முறையும் அது யாருக்கு பணிந்து செல்கிறது என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியதுதான் மிகவும் முக்கியம். அவர் உபரி மதிப்பை கண்டுபிடித்தது அவரது வாழ்நாள் சாதனை.

மார்க்ஸ் ஒரு புரட்சிக்காரர். முதலாளித்துவ சமூகத்தை ஒழிப்பதற்கு, அது உருவாக்கியிருக்கிற நிறுவனங்களை ஒழிப்பதற்கு நவீன பாட்டாளி வர்க்கத்தின் சொந்த நிலைகளையும் அதன் தேவையையும் உணரும்படி, அதன் விடுதலையின் நிலைமைகளை உணரும்படி செய்த முதல் நபர் அவரே. போராட்டமே அவர் உயிர். அவரைப் போல  உணர்ச்சிகரமாக, வெற்றிகரமாக போராடுவதற்கு யாராலும் முடியாது. அவர் வேறு எதையாவது செய்யாதிருந்தால் கூட, சர்வதேச தொழிலாளர் சங்கத்தை நிறுவியது ஒன்று போதும், அவரது பெருமையைச் சொல்ல.

மார்க்ஸ் தன் காலத்தில் அதிகமாக வெறுக்கப்பட்ட, மிகவும் அவதூரு செய்யப்பட்ட மனிதராக இருந்தார். எதேச்சாதிகார நாடுகளும் சரி, குடியாட்சி நாடுகளும் சரி அவரை தங்களது நாடுகளிலிருந்து வெளியேற்றின. முதலாளி வர்க்கத்தினர், அவர்கள் பழமைவாதிகளோ அல்லது அதி தீவிர ஜனநாயகவாதிகளோ, மார்க்ஸ் மீது அவதூறுகளை குவிப்பதில் போட்டியிட்டனர்.  இவற்றையெல்லாம் சாதாரண ஒட்டடை போல அவர் ஒதுக்கித் தள்ளினார்.

அவருக்கு பல எதிரிகள் இருந்திருக்கலாம். ஆனால் தனிப்பட்ட விரோதி என்று ஒருவர் கூட கிடையாது. சைபீரியாவின் சுரங்கங்கள் முதல் கலிபோர்னியா வரை, ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டங்களின் அனைத்து பகுதிகளிலும் லட்சக்கணக்கான புரட்சிகர தொழிலாளர்களின் அன்புக்குப் பாத்திரமான அவர் மறைந்த போது அவர்கள் கண்ணீர் சொரிந்தனர்.

மார்க்ஸின் பெயரும் எழுத்துக்களும் உலகில் எப்போதும் நிலைத்து நிற்கும்”

ஒரு ஒப்பீடு

1943 ல் காரல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதிய வெ.சாமிநாத சர்மா மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும் ஒப்பிடுகிறார். 

அவர் தனது நூலில்

“சுபாவத்தில் மார்க்ஸ் மகா முன் கோபி. ஏங்கெல்ஸ் வெகு நிதானஸ்தன். மார்க்ஸை நெருங்குகிற போது ஓர் அச்சம் உண்டாகும். ஏங்கெல்ஸை அணுகுகிற போது ஓர் அன்பு உண்டாகும். எதிர்க்கட்சியினரை மார்க்ஸ் போராடி வெல்வார், ஏங்கெல்ஸ் அன்பினால் அணைத்துக் கொண்டு விடுவார். மார்க்ஸ் பிறவித் தலைவன். ஏங்கெல்ஸ் பிறவித் தோழன்.

இருவரிடத்திலும் மனோ உறுதி, விடா முயற்சி இருந்தன. சலிக்காத உழைப்பாளிகள், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சமாளித்துக் கொள்வார்கள். ஏழைகளுக்கு இரங்கும் மனம் படைத்தவர்கள், எடுத்துக் கொண்ட செயலை முடிக்கும் ஆர்வம் கொண்டவர்கள். பொது நல விஷயத்தில் சொந்த மதிப்பை பாராட்டாதவர்கள். பிறருடைய குற்றங்குறைகளை கண்டிப்பதில் எப்படி தயவு தாட்சண்யம் இல்லாதவர்களோ அது போல தங்களுடைய குறைகளையும் எடுத்துச் சொல்வதற்கு தயங்காதவர்கள்.”

இந்த குணாம்சங்கள்தான் இருவரையும் இணைத்தது. மார்க்ஸ் மறைந்த பின்பு அவருடைய பணிகளை ஏங்கெல்ஸ் முன்னெடுத்துச் சென்றார். மூலதனம் நூலின் இரண்டாவது, மூன்றாவது பகுதிகள் மார்க்ஸ் மறைந்த போது கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தது. அதை வெளியிட்டவர் ஏங்கெல்ஸே. முதலாவது அகிலத்தின் பணிகளையும் அவர் தொடர்ந்து செய்து வந்தவர். தன் வாழ்வின் இறுதி நாள் வரை மார்க்ஸின் புகழை உலகிற்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் பொதுவுடமைக் கொள்கைக்கு மட்டும் இலக்கணம் படைக்கவில்லை. நட்புக்கும் தோழமைக்கும் கூட இலக்கணமாய் வாழ்ந்தவர்கள்.

-    வேலூர் சுரா

Friday, November 2, 2018

இவ்வளவுதாங்க வாழ்க்கை . . .


மேலே உள்ள விளம்பரத்தை காலையில் தீக்கதிரை படிக்கும் போது பார்த்தேன்.

இப்போது முகநூல் சென்றால் தீக்கதிர் புகைப்படக்காரர் தோழர் ஜாபரின் பதிவில் தோழர் விஜயகுமார் இன்று மதியம் சாலை விபத்தில் இறந்து விட்டார் என்ற செய்தி உள்ளது. தோழர் விஜயகுமார் அவர்களுக்கு அஞ்சலி. 

தோழர் விஜயகுமார் எனக்கு பழக்கம் இல்லாதவர்தான். ஆனாலும் மனது வலிக்கிறது. மாலை பாராட்டு விழா நடைபெற வேண்டிய சூழலில் மதியம் அகால மரணம் அடைவது என்பது எவ்வளவு பெரிய கொடுமை!

இதுதான் வாழ்க்கை. . .
இவ்வளவுதான் வாழ்க்கை. . . 
எதிர்பாராததுதான் வாழ்க்கை . . . .

இருக்கும் காலத்தை உருப்படியாக செலவழிப்போம்.
முடிந்தவரை அடுத்தவருக்கு நல்லது செய்ய முயற்சிப்போம்.
அது முடியாவிட்டால் கெட்டதாவது செய்யாமல் இருப்போம்.

Sunday, September 30, 2018

ஒரு மண்டபம் – இரு நினைவுகள்




கடந்த மாத இறுதியில் ஓய்வு பெற்ற ஒரு தோழரின் மகனின் திருமணத்திற்காக சென்றிருந்தேன். வேலூரின் ஒரு கோடியில் உள்ள மண்டபம் அது.

பல முறை சென்ற மண்டபம் என்றாலும் இரண்டு நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது.

ஒரு தோழரின் மகளின் திருமணம். ஒரு எட்டு மணி அளவில் மண்டபத்திற்கு சென்றால் திருமண வீட்டிற்கான சுவடே தெரியவில்லை. எங்கள் தோழரையும் காணவில்லை. அங்கங்கே சிலர் அமர்ந்திருந்தாலும் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. மணமக்கள் சில நிமிடங்களில் வந்து விடுவார்கள் என்று மட்டும் சொன்னார்கள்.

அப்படியே வந்தார்கள். இருவர் முகத்திலும் உற்சாகமில்லை. மண மகள் கண்களெல்லாம் கலங்கி இருந்தது. எங்கள் தோழரை காணவில்லை. அவரது மனைவி சில மாதங்கள் முன்புதான் இறந்து போயிருந்தார். சரி ஏதோ திருமணத்தில் ஏதோ பிரச்சினை வந்து முடிந்திருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு பரிசுப் பொருளை கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டோம்.

மறு நாள் காலையில்தான் விஷயம் தெரிந்தது. எங்கள் தோழரின் தம்பி, மணப்பெண்ணின் சித்தப்பா, மாலை நான்கு மணி அளவில் திருமணத்திற்கான பொருள் எதையோ வாங்க இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது லாரி ஒன்று மோத, அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போய் விட்டார்.

அந்த துயர வேளையிலும் மண மகன் வீட்டினர் ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளனர்.  இவ்வளவு செலவு செய்து திருமண ஏற்பாட்டை செய்து விட்டு திருமணத்தை நிறுத்த வேண்டாம். நாங்களே பெண் வீடு, மாப்பிள்ளை வீடு இரண்டுமாக இருந்து திருமணத்தை நடத்திக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டனர். 

கெட்ட சகுனம் என்று சொல்லி திருமணத்தையே ரத்து செய்கிற காலத்தில் யதார்த்தமாக முடிவெடுத்த அந்த நிகழ்வு எப்போதுமே நினைவில் இருக்கும்.

அதே போல இன்னொரு நிகழ்வும் மறக்க முடியாதது.

2010 ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் குடியாத்தத்தில் எங்கள் கோட்டச் சங்க மாநாடு நடந்தது.

ஒரு ஞாயிறு, திங்கள் இரு நாட்களில் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. வியாழன், வெள்ளி இரு நாட்கள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு வேலூரில். மாநாட்டு வரவேற்புக்குழுவின் சார்பில் ஏராளமான வேலைகள். மாநாட்டுக்கு வந்த இரண்டு தலைவர்கள் தோழர் பட்டூர் ராமையா எனும் ஆந்திர மாநில முன்னாள் எம்.பி, தோழர் சுனீத் சோப்ரா என்ற டெல்லித் தோழர். இருவரையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டிருந்தது.

மாநாட்டை முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் யெச்சூரி பேசினார்.  எங்கள் அலுவலகத்திற்கு அருகில் இருந்த ஆவணா இன் ஹோட்டலில்தான் அவர் தங்குவதற்கு ஏற்பாடு. எங்கள் தோழர்கள் பலரோடு அவருக்கு ஒரு சிறப்பான வரவேற்பு கொடுத்தோம். அன்றைய கூட்டம் கூட மிகச் சிறப்பாக இருந்தது. பாஜக கூட்டம் போல காலி நாற்காலி கூட்டம் அல்ல.

மனம் நிறைவாக இருந்தது. ஞாயிறு அன்று ஒரு தோழர் திருமணம். சனிக்கிழமை வரவேற்பில் மனைவியுடன் கலந்து கொண்டு மறுநாள் முகூர்த்தத்தில் சந்திப்போம் என்று சொல்லி வீட்டிற்கு திரும்பி வருகையில்தான் இன்னொரு இரு சக்கர வாகனம் ராங் சைடில் ஓவர் டேக் செய்ய, அந்த வாகனத்தின் பின்னே கட்டப்பட்டிருந்த இரண்டு கறுப்பு கேன்கள் (அனேகமாக அது கள்ளச்சாராய கேனாக இருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் நாங்கள் கீழே விழுவதைப் பார்த்தும் நிற்காமல் அதி வேகத்தில் பறந்து விட்டார்கள்) இடிக்க, பேலன்ஸ் தவறி கீழே விழுந்து விட்டோம். வண்டி எங்கள் மேலே விழுந்து விட்டது.

சாலையில் இருந்தவர்கள் வந்து எழுப்பி விட்டார்கள். எழுந்து கொள்ளவே முடியவில்லை. கால் துண்டானது போன்ற உணர்வு. அந்த விபத்து, அதன் பின் விளைவு, கால் வலி, இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இவை பற்றியெல்லாம் ஏற்கனவே எழுதியுள்ளதால் மீண்டும் எழுதி உங்களை எல்லாம் போரடிக்க விரும்பவில்லை.

அந்த மண்டபத்திற்கு சென்றதும் அந்த விபத்தின் நினைவு வந்ததை தவிர்க்க இயலவில்லை. அது போலவே அந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட ஊனத்தை சில நல்லவர்கள் நக்கலடித்ததும் நினைவுக்கு வந்து விட்டது.  முகமுடிகளையே முகங்கள் என நினைக்கிற உலகமிது என்பது கூட . . .

வாழ்க்கையில் எல்லாவற்றையும் மறப்பதும் மன்னிப்பதும் முடியாது அல்லவா !

Tuesday, July 19, 2016

மறக்க முடியாத 19 ஜூலை





அலுவலகப் பதிவேட்டின்படி இன்று பிறந்தநாள். கோட்டத்தின் அதிகாரபூர்வமான இன்ட்ராநெட்டில் பிறந்தநாள் வாழ்த்து என்ற பகுதி உள்ளதால் பல தோழர்கள் வாழ்த்து சொல்லி மகிழ்ச்சியளித்தனர். ஆனால் மனதில் வேறு ஒரு விஷயம்தான் ஓடிக் கொண்டிருந்தது.

எங்கள் வேலூர் கோட்டச் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டை ஒட்டி அதன் இருபத்தி ஐந்து ஆண்டு கால வரலாற்றை தொகுத்தது பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

அதிலிருந்து ஒரு பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

வேலூர் கோட்டம் தோன்றியவுடன் உருவான முதல் பெரிய பிரச்சினை என்பது நெய்வேலியில் உருவானது. ஊழியர் குடியிருப்பு ஒதுக்கீடு செய்வது தொடர்பான பிரச்சினை. இரண்டு ஊழியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட என்.எல்.சி குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என்று நிர்வாகம் நிர்ப்பந்தித்தது. நம் தோழர்களால் அது இயலாத சூழல். அதற்கான அவசியமும் கிடையாது. என்.எல்.சி நிறுவன அதிகாரிகளை எல்.ஐ.சி நிர்வாகம் சந்தித்து பேசியிருந்தால் இந்த பிரச்சினை எழ வாய்ப்பே இருந்திருக்காது.  கிளை நிர்வாகமும் கோட்ட நிர்வாகமும் கடை பிடித்த அணுகுமுறை ஊழியர்களுக்கு எதிராக இருந்தது.  அது ஊழியர்களுக்கும் கள ஊழியர்களுக்கும் இடையேயான பிரச்சினையாக சித்தரிக்கப்பட்டு பூதாகரமானது. அலுவலக ஒழுங்கு சீர் கெட்டது. காவல்துறையை அழைக்க வேண்டியிருந்தது.

கோட்ட நிர்வாகம் அதன் பின்பு ஏராளமான சமரசங்களை வேறு செய்து கொண்டு பாரபட்சமாகவே செயல்படுகிறோம் என்று வெளிப்படையாகவே காட்டிக் கொண்டது. அதனால் நிலைமை இன்னும் மோசமானது. இரு தரப்பிலும்  தென் மண்டல அளவில் உள்ள தலைவர்கள் வந்து சுமுக உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அந்த உடன்பாடு சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. ஏனென்றால் சில தவறான நபர்கள் தங்களின் சுய லாபத்திற்காக பிரச்சினை செய்யவே விரும்பினார்கள்.

ஒரு ஊழியர் அடியாட்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்குக் கூட நிலைமை மோசமானது. இப்பிரச்சினைக்காக கோட்ட அளவில் போராட்ட இயக்கங்கள் நடந்த பின்பே நிர்வாகம் சில நடவடிக்கைகள் எடுக்க துணிந்தன. அந்த சமயத்தில் அனைத்து ஊழியர்களும் முழுமையான ஒற்றுமையோடு இல்லை என்பதும் நிலைமைகள் மோசமாக ஒரு காரணம். தவறான சில நபர்கள் வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு நிறுவனத்தை விட்டே வெளியேறிய பின்பே நிலைமை சீரானது. அதன்பின்பு இன்றுவரையில் நெய்வேலியில் ஊழியர்களுக்கும் கள ஊழியர்கள் முகவர்களுக்கிடையில் நல்ல உறவு இருந்து வருகிறது.

அடியாட்களால் தாக்கப்பட்ட அந்த ஊழியர் வேறு யாருமில்லை. நான்தான். சம்பவம் நடந்த நாள் பத்தொன்பது ஜூலை 1989.

அன்று காலை அந்த அடியாட்கள் ஊழியர் குடியிருப்பு இருந்த பகுதியில்  உலாவுவதை பார்க்கத்தான் செய்திருந்தேன். ஆனால் அவர்கள் வந்தது  எனக்காகத்தான் என்பது தெரியவில்லை. முதல் நாள் அலுவலகத்தில்  வேறு ஒரு ஊழியருக்குத்தான் பிரச்சினை வந்தது. அவரை அடிக்கத்தான் ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்று எண்ணி அலுவலகம் சென்று எச்சரிக்கை செய்வோம் என்று வேகமாக போனால் அவர்கள் என்னை மடக்கி அடித்து விட்டார்கள்.

பல் உடைந்து  உதடு கிழிந்தது. உதட்டில் ஐந்து தையல்கள் போடப்பட்டது. உடனடியாக என்.எல்.சி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். தகவல் அறிந்து என்.எல்.சி சி.ஐ,டி.யு சங்கத்தின்  அன்றையப் பொதுச்செயலாளர் விரைந்து வந்தார். இவர் எங்கள் தோழர், நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல என்.எல்.சி யின் ஸ்பெஷல் வார்டான ஏ வார்டில் அனுமதித்தார்கள். அதன் பின்பும் நல்ல கவனிப்புதான். அந்த தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் தற்போதைய தமிழ் மாநிலச் செயலாளருமான தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள்தான்.

ஒரு வாரம் மருத்துவமனை வாசம். எந்த டயட் கட்டுப்பாடும் கிடையாது. ஆனாலும் வாயில் இருந்த கட்டினால் சாப்பிட மட்டும் முடியவில்லை. கஷ்டப்பட்டு ஸ்ட்ரா வைத்து ஜூஸ் மட்டும் குடிக்க முடிந்தது. அதன் பிறகு ஒரு பதினைந்து நாட்கள் விடுப்பில் இருந்தேன். இத்தோடு தொழிற்சங்கத்திற்கு தலை முழுகி விடு என்று குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் உபதேசம் செய்தார்கள்.

ஆனால் விடுப்பு முடிந்து அலுவலகம் சேர்வதற்கு முன்பு போன இடம் வேலூர். கலந்து கொண்ட நிகழ்வு வேலூர் கோட்டச்சங்கத்தின் இரண்டாவது பொது மாநாடுதான்.


வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. காவல்துறை காசு கொடுத்தவர்களை விட்டு விட்டு அடியாட்கள் மீது மட்டும் பழி போட்டிருந்தது. அதிலே ஒருவர் நெய்வேலி நிறுவனத்திற்கு சொந்தமான அமராவதி திரையரங்கில் தற்காலிக ஊழியர். பல தற்காலிக ஊழியர்கள் நிரந்தரம் ஆன நேரத்தில் இவருக்கு இந்த வழக்கு காரணமாக நிரந்தரப் பணி கிடைக்கவில்லை. வழக்கை திரும்ப்ப் பெறக் கேட்டு வந்தார். எய்தவர்களை விட்டு அம்பை மட்டும் ஏன் தண்டிக்க வேண்டும் என்பதால் கோட்டச்சங்கத் தலைவர்களிடம் ஆலோசனை பெற்று சமாதானமாகப் போவதாக நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்து விட்டேன்.

என்ன பிரச்சினை வந்தாலும் கலங்காமல் சமாளித்துக் கொள்ளலாம் என்ற மன உறுதி கொடுத்தது இந்த சம்பவம்தான். தொழிற்சங்க இயக்கத்தை வாழ்க்கைப்பாதையாக தேர்ந்தெடுக்கக் காரணமான திருப்புமுனையும் கூட. சில சமயங்களில் சோர்வு வந்தாலும் கூட  இந்த நிகழ்வை நினைத்துக் கொள்வேன். “அதையே பாத்தாச்சு, இதெல்லாம் ஜுஜுபி” என்ற எண்ணம் வரும்.

அந்த வகையில் நான் மன உறுதியுள்ளவனாக மீண்டும் பிறப்பெடுத்த நாள் இதுதான்.

Sunday, July 17, 2016

முப்பது ஆண்டுகள் முடிந்தது




நேற்று எழுதியிருக்க வேண்டிய பதிவு. சென்னைக்கு போய் விட்ட காரணத்தால் ஒரு நாள் கால தாமதமாக இன்று எழுதுகிறேன்.

முப்பது ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆம் எல்.ஐ.சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்து முப்பது ஆண்டுகள் முடிந்து முப்பத்தி ஓராவது ஆண்டில் அடியெடுத்து வைத்தாகி விட்டது. 

மிகவும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் 16.04.1986 அன்றுதான் பணியில் சேர்ந்தேன். ஆனால் மூன்று மாத பயிற்சிக் காலம் பணிக்காலமாக சேர்த்துக் கொள்ளப்படாது. ஆகவே தகுதி காண் பருவம் தொடங்கிய 16.07.1986 என்பதுதான் பணி தொடங்கிய நாள்.

இப்போதுதான் நெய்வேலியிலிருந்து புறப்பட்டு சென்னையில் பயிற்சி வகுப்பிற்கு சென்றது போல இருக்கிறது. பூமியின் வேகமான சுழற்சியால் முப்பது வருடங்கள் ஓடி விட்டது. 

என்ன எழுதுவது என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது.

ஒரு முறையாவது வாழ்க்கையில் பார்க்க வேண்டும் என்று கனவு கண்ட பதினான்கு மாடி எல்.ஐ.சி கட்டிடத்திற்கு முதல் முறை சென்றதே நேர்முகத் தேர்விற்காக என்பதும் அதுதான் வாழ்வின் திருப்புமுனை என்பதும் குறிப்பிடத்தக்கது. (நேற்று கூட எல்.ஐ.சி கட்டிடத்திற்குத்தான் சென்றிருந்தேன்)

தனிப்பட்ட பொருளாதார நிலைமையில் ஏற்பட்ட முன்னேற்றத்தையா?

உலகை, உறவுகளை, நட்புக்களை, தோழமைகளை, அரசியலை, பொருளாதாரத்தை புரிந்து கொள்ள கிடைத்த வாய்ப்புக்களையா?

பேசவும் எழுதவும் தயங்கி தடுமாறிய நிலையிலிருந்து இன்று பெற்றுள்ள முன்னேற்றத்தையா?

கற்றது கைமண்ணின் நூறில் ஒரு அளவு, இன்னும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை உணர்ந்ததையா?

பூங்கொத்துக்களையும் கல்லடிகளையும் சமமாகவே கருதும் பக்குவத்தை பெற்றதையா?


எரிச்சலூட்டிய சில நிகழ்வுகள் மனதை பாதித்து சோர்வுற்ற நிலையில் அந்த பதிவு அமைந்திருந்தது. அடுத்தவர்களை காயப்படுத்தும் வன்மத்தையும் வக்கிரத்தையுமே வாழ்க்கையாகக் கொண்டவர்களை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற மன நிலை வந்து விட்டதால் அவற்றை இதயத்திற்கு எடுத்துச் செல்லாததால் வலி ஏற்படுவதில்லை என்பதுதான் இரண்டாண்டுகளில் நான் அடைந்துள்ள மாற்றம். தொழிற்சங்கம், இடதுசாரி இயக்கம்,  வலைப்பக்கம் ஆகியவை தாண்டி சிறுகதைகளை தொடர்ந்து எழுதி வருவது என்பதும் இந்த இரண்டாண்டு கால முன்னேற்றத்தில் ஒன்று.

கல்லூரிப் படிப்பை முடித்த ஓரிரு மாதங்களிலேயே எல்.ஐ.சி பணி கிடைத்தது என்பது ஒரு வரம் என்றால் எல்.ஐ.சி யில் இணைந்ததாலேயே  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்ற மகத்தான அமைப்பில் இணையக் கிடைத்த வாய்ப்பு என்பது அதை விட மிகப் பெரிய வரம். 

என் வாழ்வும் வளமும் என்றும் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்ற உணர்வை எப்போதும் போல மனதிலிருத்தி பயணத்தை தொடர்கிறேன். 

 

Monday, June 20, 2016

நாகேஷ் சொன்ன அருமையான உதாரணம்

வாட்ஸப்பில் வந்தது. நன்றாக இருந்ததால் பகிர்ந்து கொள்கிறேன்


 
நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...

- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
 
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
 
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
 
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.

மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

நான் வாழை அல்ல...! சவுக்குமரம்....

Saturday, April 4, 2015

குறையொன்றும் இல்லை... மனுஷ்ய புத்திரன்






இன்று காலையில் படித்த அற்புதமான பதிவு. உற்சாகம் தரும் இக்கட்டுரையின் இணைப்பை இங்கே தந்துள்ளேன்

நன்றி திரு மனுஷ்ய புத்திரன். சோர்வுற்ற மனங்களுக்கு தன்னம்பிக்கை தருகிற கட்டுரை. உங்களைப் போலவே எல்லோருக்கும் நல்ல தோழமைகள் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்தையும் அளித்த பதிவு