Friday, June 23, 2017

ஏழையென எழுதி . . .. அச்சா தின் அசிங்கம் . . .

மருத்துவரீதியில் எனக்கு ரத்தக் கொதிப்பு எல்லாம் கிடையாது. ஆனால் தங்களின் அலங்கோல ஆட்சி மூலமாக காவிகள் உருவாக்கி விடுவார்கள் போல.

இன்று காலை ஹிந்து நாளிதழில் படித்த செய்தி அப்படிப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் டௌசா என்ற மாவட்டத்தில் யாரெல்லாம் ரேஷன் கடையில் இலவச கோதுமை வாங்குகிறார்களோ, அவர்கள் வீட்டுச் சுவரில்

“நான் ஏழை. ரேஷன் கடையில் இலவசமாக கோதுமை வாங்குகிறேன்”

என்று மாவட்ட நிர்வாகம் பெயிண்டால் எழுதி வைத்துள்ளது. குடும்பத் தலைவரின் பெயரையும் வேறு எழுதி வைத்துள்ளது.

தன்னுடைய மக்களை எப்படி கேவலப்படுத்துவது என்பதில் மோடியும் அவரது மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றனர்.

இன்று சுவரில் எழுதிய கயவர்கள் நாளை முகத்தில் பச்சை குத்துவார்களா?

இதுதானய்யா மோடி சொன்ன “அச்சா தின்”

இனியும் பாஜக விற்கு ஓட்டு போடுபவர்கள் மன நலன் குன்றியவர்களாக மட்டுமே இருக்க முடியும்….

Thursday, June 22, 2017

பத்து லட்சத்தோடு தொடரும் பயணம்
கோபத்தோடு முந்தைய பதிவை எழுதி விட்டு பின்னூட்டம் இருக்கிறதா, எவ்வளவு பார்வைகள் முந்தைய நாளில் இருந்தது என்ற விபரங்களைப் பார்த்தால் ஒரு இனிய தகவல் காத்துக் கொண்டிருந்தது.

ஆம்.

வலைப்பக்கத்தின் பார்வைகள், அதாவது Hits பத்து லட்சம்  என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. மனதிற்கு மகிழ்ச்சியும் அளிக்கிறது.

2009 ல் வலைப்பக்கம் துவங்கினாலும்  2010 மத்தியிலிருந்துதான் தீவிரமாக இயங்கத் தொடங்கினேன்.  அப்போது தொடங்கிய பயணம் இதுவரை நிற்காமல் தொடர்கிறது. வெளியூர் பயணங்களின் போது பதிவுகள் எழுதியிருந்தாலும் வெளியிட முடியாத நிலை இருந்தது. ஸ்மார்ட் போன் வந்த பின்பு அந்த பிரச்சினை தீர்ந்து விட்டது. அந்த மாதிரி சமயங்களுக்காக சில புகைப்படங்கள், புத்தக விமர்சனங்கள் ஆகியவை ட்ராப்டில் தயாராகவே இருக்கும்.

இத்தனை நாள் வலைப்பக்க அனுபவத்தில் கற்றுக் கொண்ட ஒரு முக்கியமான ரகசியம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் வைக்கும் தலைப்புதான் உங்கள் பதிவை படிக்க தூண்டுகிறது. ஈர்க்கும் தலைப்பு இல்லாவிடில் முக்கியமான விஷயங்கள் எழுதியிருந்தாலும் அவை கண்டுகொள்ளப்படாத அபாயம் உண்டு.

ஆயிரம் பதிவுகளை எழுதிய போது இரண்டு லட்சம் என்ற எண்ணிக்கையில் பார்வைகள் இருந்தது. பதிவுகள் இரண்டாயிரத்தைத் தொட்ட போது ஐந்து லட்சம் என்று பார்வைகள் அதிகரித்தது. மூவாயிரமாவது பதிவை நெருங்குகையில் பத்து லட்சம் என்ற மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

அன்றாட நிகழ்வுகளை இடதுசாரிப் பார்வையுடன் எழுதுவது என்பது முன்னுரிமையாக இருந்தது. அவ்வப்போது சற்று இளைப்பாற இசை, சமையல் என்றும் செல்வேன்.  இன்றைக்கு மதவெறி மூலம் நாட்டை நாசமாக்கும் சங் பரிவாரக் கும்பலின் மோசடிகளை, பொய்களை அம்பலப்படுத்துவதே பிரதான பணியாக இருக்கிறது.

அந்த பணியை மேலும் வேகப்படுத்த “பத்து லட்சம் பார்வைகள்” என்ற எண்ணிக்கை உண்மையிலேயே உற்சாகப்படுத்துகிறது. ஒரு சில அனானிகளின் தொல்லை இருக்கத்தான் செய்கிறது. கரப்பான்பூச்சி, கொசுக்களோடுதானே வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது.

ஆதரவளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

சரியான பாதை எது என்பதை வழி காட்டிய எங்கள் அகில இந்திய  இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இல்லாவிடில் நானும் இல்லை, என் எழுத்துக்களும் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக பதிவு செய்யும் தருணம் இதுதான்.

பதில் சொல்லுங்கள் மிஸ்டர் அடிமை (எ.பாடி) பழனிச்சாமி

சமாதி அம்மையாரின் அடிமையாய் தொடங்கி பரப்பன அக்ரஹார சிறைவாசியாரின் அடிமையாய் மாறி இன்று மோடியின் அடிமையாய் தொடரும் எடப்பாடி பழனிச்சாமி எனும் தமிழகத்தின் துயரம், தனது ஏவல்படை கொண்டு தன் தற்போதைய எஜமானர்களை திருப்திப் படுத்தியுள்ளார்.

ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டத்தை இயற்று என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தி வந்த நடைப்பயண இயக்கத்தை சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்காமல் தாம்பரத்திலே தடை செய்து பயணக்குழுத் தோழர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை கைது செய்துள்ளார்கள்.

இந்த நடைப்பயணத்தை சென்னை நகருக்குள் அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடுமாம்!

கடந்த ஒன்பதாம் தேதி சேலத்தில் தொடங்கி நேற்று மாலை தாம்பரம் வரை நடைபெற்ற  பயணத்தில் எங்காவது சிறு அசம்பாவிதம் நடந்ததாக ஏவல் படையால் சொல்ல முடியுமா? ஏதேனும் மோதல் உண்டா? பயணக் குழுவில் வந்தவர்கள் குடித்து விட்டு கும்மாளமிட்டார்களா? பெண்கள் முகம் கோண நடந்து கொண்டார்களா?ஆபாசமாய் பேசினார்களா? வழியில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கினார்களா? பிரியாணியை அண்டாவோடு திருடிக் கொண்டு ஓடினார்களா?

என்ன குற்றம் செய்தார்கள் மிஸ்டர் பழனிச்சாமி?

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், மாரிமுத்து ஆகியோர் மாண்ட துயரத்தைச் சொன்னார்கள். அவர்களின் படுகொலைக்குப் பின்னே  ஒளிந்துள்ள, தமிழகத்தை பீடித்திருக்கிற ஜாதிய வெறி பற்றி சொன்னார்கள். கௌசல்யா போல, அபிராமி போல வேறெந்த பெண்ணிற்கும் இது போன்ற கொடுமைகள் நிகழக் கூடாது என்றார்கள். அதனை தடுக்க சட்டம் வேண்டுமென்றார்கள். சமத்துவத்திற்கான விதைகளை வரும் வழி எங்கும் தூவிக் கொண்டே வந்தார்கள். ஜாதியத்திற்கு எதிரான குரலை வலிமையாக ஒலித்துக் கொண்டே வந்தார்கள். அவர்கள் இறுதியில்  உங்களிடம்தான் வருவதாக  இருந்தார்கள். சட்டம் இயற்றும் இடத்தில் நீங்கள்தானே உள்ளீர்கள்?

சேலம் தொடங்கி தாம்பரம் வரை சட்டம் ஓழுங்கிற்கு ஏற்படாத அபாயம் எப்படி ஐயா, சென்னை நகருக்குள் மட்டும் ஏற்படும்?

ஜாதியத்திற்கும் ஆதிக்க சக்திகளுக்கும் எதிரான குரல் சென்னையில் ஒலிப்பதைக் கேட்க உங்கள் செவிகளுக்கு விருப்பமில்லையா? உங்களை ஆட்டிப்படைக்கும் மிகப் பெரிய தீய சக்தியின் உத்தரவா?

கூவாத்தூர் சாக்கடையில் மூழ்கி பதவியைப் பெற்று அதை தக்க வைத்துக் கொள்ள இன்னொரு சாக்கடையில் கூடிக் குலாவும் உங்களுக்கு நேர்மையின் அடையாளமான செங்கொடியின் புதல்வர்களைச் சந்திக்க உள்ளம் கூசுகிறதோ? நீங்கள் பதவி பெற்றதற்கும் உங்கள் ஜாதியப் பின்னணி ஒரு காரணி என்பதாலும் அந்த ஆதிக்க சக்திகளில் நீங்களும் ஒருவர் என்பதால் தீண்டாமையை கடைபிடிக்கிறீரோ?

சொல்லுங்கள் மிஸ்டர் பழனிச்சாமி, தடை செய்ததன் மர்மம் என்னவோ?

உங்களின் முதல் எஜமானர், அதுதான் சமாதி அம்மையார், அவரே கூட அனுமதிக்காத ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி கையில் குண்டாந்தடிகளோடு வாயில் மத வெறி முழக்கங்களோடு மனதில் மக்களை துண்டாடும் வெறியோடு காவிகள் சென்னை நகரில் நடைபோட அனுமதித்த உங்களால் செங்கொடிகளின் சங்கமத்தை தடை செய்ய முடிகிறதென்றால் அதற்கு உங்களின் மோடி விசுவாசத்தைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

சொந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாலேயே, அதுவும் தகாத உறவுப் பிரச்சினைக்காக கொல்லப்பட்ட சசிகுமார் என்பவரின் பிணத்தை வைத்துக் கொண்டு கோவையிலே காவிகள் ஊர்வலம் செல்லவும் செல்லும் வழியில் கலவரங்கள் நிகழ்த்துவதையும், கடைகளிலே புகுந்து கொள்ளையடிப்பதையும் சிறு சலனம் கூட இல்லாமல் வேடிக்கை பார்த்த உங்களால் நியாயமான கோரிக்கையோடு அமைதியான முறையிலே நடைப்பயணம் வந்தவர்களை மட்டும் எப்படி தடுக்க முடிக்கிறது? கைது செய்ய முடிகிறது?

அடிமைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த உங்களைப் போன்றவர்கள் எல்லாம் தமிழகத்தின் முதல்வராக இருப்பது வெட்கக்கேடு. மானக்கேடு.

Wednesday, June 21, 2017

நரகத்துக்குப் போ, அர்னாப் அட்ராசிடிஓடி ஒளிந்த அர்னாப் கூட்டம்காலையில் முகநூல் பார்க்கையில் அர்னாப்பின் ரிபப்ளிகன் டிவி முக நூல் பக்கத்திற்கு லைக் கொடுங்கள், மெசேஜ் அனுப்புங்கள் என்று தொடர்ந்து குறுக்கீடு வந்து கொண்டே இருந்தது.

மிகவும் கடுப்பாகி

“மோசடிப் பேர்வழிகளால் மோசடிக்கட்சியான பாஜக விற்காக நடத்தப்படும் மோசடித் தொலைக்காட்சி”

என்று ஒரு செய்தி அனுப்பினேன்.

உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி. இந்தியாவில் உள்ள அனைவரையும ரிபப்ளிகன் டிவி சென்றடைகிற வரை தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருங்கள்

என்று பதில் வர நான் இன்னும் கடுப்பாகி விட்டேன்.

நாம் இவனை திட்டுகிறோம். ஆதரவுக்கு நன்றி என சொல்கிறானே. ஒரு வேளை நிஜமாவே லூஸ்தான் போல இருக்கு என்று நினைத்துக் கொண்டே

உங்களை எந்நாளும் ஆதரிக்க மாட்டேன் என்று இன்னொரு செய்தி அனுப்பிய பின்பு

அப்படியென்றால் டிக்கெட் வாங்கிக் கொண்டு நரகத்திற்கு போ

என்று பதில் வந்தது.

நம்மை செத்துப் போகச் சொல்ல இவன் யார் என்று சூடாக ஒரு பதில் அனுப்பலாம் என்று பார்த்தால் அதற்குள் நம்மை ப்ளாக் செய்து ஒளிந்து கொண்டு விட்டான்.

அர்னாப் ஒரு வெறியன் என்றால் அந்த மனிதனின் முக நூல் பக்கத்தை நடத்துபவர்கள் இன்னும் பெரிய வெறியர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தொலைக்காட்சியை ஆதரிக்காதவர்கள் நரகத்துக்குச் செல்ல வேண்டுமாம்! நல்ல கதையாக  இருக்கிறதல்லவா?

காவிகளின் தொலைக்காட்சி என்பதை நன்றாகவே நிரூபித்து விட்டார்கள். 

அந்த உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட் கீழே

 

ஆனால் ஒன்று, அவர்களால் பதில் சொல்ல முடியாமல் ஒளிந்து கொண்டு விட்டார்களே,

அந்த பயம்

எனக்கு பிடித்திருக்கிறது.

தமிழக அரசே தடுக்காதே

இன்றைய ஜூனியர் விகடன் இதழில் வெளியான செய்தியை முதலில் படியுங்கள்.
ஆணவக் கொலைகளை தடுக்க திராணியற்ற தமிழக அரசு,
மத வெறி முழக்கங்களோடு ஆர்.எஸ்.எஸ் நடத்திய பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசு

இந்த நடைப்பயணம் சென்னையில் நுழைய விடாமல் தடுக்கப் போகிறதாம். ஏவல் படைகளை வைத்து பயணக் குழுவில் வருபவர்களை கைது செய்யப் போகிறதாம்.

தமிழக அரசே, ஆதிக்க சக்திகளுக்கு துணை போகாதே,

ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த சட்டம் இயற்று என்ற முழக்கத்தோடு வரும் நடைப்பயணத்தை தடை செய்யாதே.
கோரிக்கையை நிறைவேற்று.

தலித் ஒருவரை ஜனாதிபதியாக்கப் போகிறோம் என்று பீற்றிக் கொள்ளும் பாஜக, ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்றுவதற்காக குரல் கொடுக்குமா?

 

அடுத்து என்ன? போலி எண்கவுண்டரா?
பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் என்பது வெறும் தந்திரமின்றி வேறொன்றுமில்லை என்றும்  ஆர்.எஸ்.எஸ் அமைப்பினைச் சேர்ந்தவர் என்பதால்  அவரை ஏற்றுக் கொள்ள முடியாமல் விமர்சிப்பவர்கள் மீது தலித் விரோதிகள் என்ற குற்றச்சாட்டு பாயும் என்று இரண்டு தினங்கள் முன்பு எழுதியிருந்தது நிஜமாகத் தொடங்கியுள்ளது.

அமித் ஷா வின் திருதராஷ்டிர ஆலிங்கனத்தால் பாதிக்கப்பட்ட டாக்டர் கிருஷ்ணசுவாமி அந்த வசையாடலை தொடங்கி விட்டார். அவர் புதிய தமிழகம் கட்சியை கலைத்து விட்டு விரைவில் பாஜகவிலேயே தன்னை கரைத்துக் கொண்டு விடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

"குஜராத் கோப்புக்கள்"  மூலம் மோடி, அமித் ஷா கூட்டணியின் பல அராஜகங்களை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ராணா அயூப் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். 

"என்னமோ பிரதீபா படீல்தான் மோசமான தேர்வு என்று சொன்னீர்களே" என்று ட்விட்டரில் அவர் தெரிவித்த கருத்துக்கு ஏராளமான வியாக்யானம் கொடுத்து புகார் கொடுத்துள்ளனர். ஏற்கனவே அவர் மீது கொலைவெறியில் இருக்கும் சங்கிகள், அவரை போலி எண்கவுண்டர் செய்யாமல் இருக்க வேண்டும்....
இனி "தடா". "பொடா" என்ற பழைய சட்டங்களில் கைது செய்து உள்ளே தள்ளுவார்களோ?