Showing posts with label சுகாதாரம். Show all posts
Showing posts with label சுகாதாரம். Show all posts

Wednesday, December 29, 2021

இதற்கா வரச் சொன்னீர் யோகியாரே?

 


இந்தாண்டு கேரளாவுக்கு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய உ.பி முதல்வர் மொட்டைச் சாமியார் வந்திருந்தார். “சுகாதாரக் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள உத்திரப் பிரதேசத்திற்கு வாருங்கள்”  என்று  அப்போது அவர் தோழர் பினராயி விஜயனை  பொது மேடையில்  பகிரங்கமாக நக்கல் செய்தார்.

திட்டக் கமிஷனுக்கு மாற்றாக மோடியால் உருவாக்கப்பட்ட “நிதி ஆயோக்” சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள், மருத்துவ மனைகள் தரம் ஆகியவை எப்படி உள்ளன என்ற தர வரிசைப் பட்டியலை நேற்று முன் தினம் வெளியிட்டுள்ளது. பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் என்று இரண்டாக பிரிக்கப்பட்டு தர வரிசை அளிக்கப்பட்டுள்ளது.

பெரிய மாநிலங்களுக்கான பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள மாநிலம் பினராயி விஜயன் முதலமைச்சராக இருக்கிற கேரளாதான்.

 அந்த பட்டியலில் கடைசி இடம் யாருக்கு?

பினராயி விஜயனுக்கு சுகாதாரக் கட்டமைப்பு தொடர்பாக கற்றுத் தருவதாக சவடால் பேசிய மொட்டைச் சாமியார் முதலமைச்சராக இருக்கிற உத்திரப் பிரதேசம்தான்.

நிதி ஆயோக்கின் இணைய தளத்திலிருந்தே நேரடியாக  தரவிறக்கிய அந்த பட்டியல்  இதோ…


அதைப் பார்த்தால் இன்னொரு உண்மையும் தெரியும்.

 

முந்தைய வருடத்தில் கூட கேரளா முதலிடத்திலும் உபி கடைசி இடத்தில்தான் இருந்திருக்கிறது.

 

ஆனாலும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மொட்டைச் சாமியார் சவடால் விட்டுள்ளார்.

 

மோடியின் சிஷ்யன் வேறெப்படி இருப்பார்!!!!

 

பிகு: “இந்த மண் கோட்டையை நம்பியா மனக்கோட்டை கட்டினான்” என்ற வசனம் பொருத்தமாக இருக்கும் என்பதற்கே இப்படம். மற்றபடி தோழர் விஜயன் பானர்மேன் அல்ல, யோகியும் கட்ட பொம்மன் அல்ல.

 

Sunday, October 22, 2017

மெர்சல் - திசை திருப்பியதா பாஜக?




தமிழிசை, எச்.ராசா மற்றும் பாஜக  உருவாக்கிய அவசியமற்ற சர்ச்சையால் மெர்சல் படத்தை இன்று திரையரங்கிற்குச் சென்று பார்த்தோம்.

வழக்கமான  விஜய்யின் பழிவாங்கல் படம்தான். சுவாரஸ்யமான படமும் கூட.

விஜயின் நடனம், புரியாத பாட்டுக்கள், சில சண்டைகள்,  கொஞ்சம் பஞ்ச் வசனம்,  சும்மா வந்து போகும் கதாநாயகிகள், இத்தோடு கொஞ்சமா ஒரு கதை, சில மெஸேஜ்  என்று அமைந்த ஒரு பொழுது போக்குப் படத்தை ஏதோ புரட்சிகரப் படம் என்ற அளவிற்கு எடுத்துச் சென்றது நிச்சயமாக பாஜக ஆட்கள்தான். அதற்காக திரைப்படக்குழு பாஜகவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.

விஜய் மூன்று பாத்திரங்களில் வருகிறார். முதல் முறையாக தாடியெல்லாம் வைத்துள்ளார். வழக்கத்தை விட பெட்டர் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பு உள்ளது.  ஐந்து ரூபாய் டாக்டரும் மேஜிக் நிபுணரும் ஒரே பாத்திரம்தான் என்று குழம்பும் அளவிற்கு சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ளது. 

மருத்துவத்துறை பற்றிய கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் பணம் பார்ப்பதற்காக செய்கின்ற பல கொடுமைகள் இந்தப் படத்தில் அம்பலப்படுத்தப்படுகின்றன. நோயாளிகளை அதிக நாட்கள் தங்க வைக்கவே சுகப்பிரசவங்கள் கூட சிஸேரியனாக மாற்றப் படுகின்றன என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

நூறு நல்ல மருத்துவர்கள் இருந்தாலும் பத்து மோசமானவர்களால் எல்லோருடைய பெயரும் கெடுகிறது என்பதும் அரசு மருத்துவமனைகளின் மோசமான நிலையால் மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள் என்பதும்  யதார்த்தத்தில் நடக்கிறது என்பதை யாரால் மறுக்க முடியும்?

ஒட்டு மொத்த உற்பத்தியில் சுகாதாரத்திற்கு ஐந்து சதவிகிதம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை உலக சுகாதார நிறுவனத்திடம் (WHO) ஒப்புக் கொண்டிருக்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  இடதுசாரிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு கொடுத்த காலத்தில் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் இதனை அமலாக்க உறுதி சொன்னது. அதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் நிச்சயமாக அரசு மருத்துவ மனைகளின் நிலைமையில் பெரும் முன்னேற்றம் வந்திருக்கும். இன்று கேரள அரசு இவ்விஷயத்தில் காண்பிக்கிற அக்கறையை அனைத்து மாநிலங்களிலும் இல்லை என்பதும் உண்மைதானே.

கார்ப்பரேட் மருத்துவமனைகள் எந்த ஒரு நோயாளியிடமும் முதலில் கேட்கிற கேள்வி "மெடிக்ளெய்ம் இன்சூரன்ஸ் உள்ளதா?" . சிகிச்சை என்பது அக்கேள்விக்கான பதிலின் அடிப்படையில்தான். மருத்துவம் என்பது சேவை என்ற நிலையிலிருந்து வணிகம் என்று மாறி விட்டது. அதை மாற்ற மருத்துவத்துறை அரசின் கட்டுப்பாட்டிற்கு வர வேண்டும் என்பதை சொல்கிறது இப்படம்.

"மெர்ஸல்"  படத்தின் இந்த அடிப்படைப் பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்ப  "ஜி.எஸ்.டி" யை மருத்துவர் தமிழிசை கையில் எடுத்துள்ளாரோ என்று சந்தேகம் வருகிறது.   

ஏனென்றால் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா இதெல்லாம் போகிற போக்கில் வரும் வசனங்கள். சாதாரணமாக விட்டிருந்தால் அவ்வளவாக கவனம் ஈர்த்திருக்காது. இப்போது அவை பரபரப்பாகியுள்ளது. மருத்துவ வணிகமயம் பின்னுக்குப் போய் விட்டது.

பல மருத்துவர்கள் கோபமாக பொங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் விஜய் மீதும் அட்லீ மீதும் பொங்குவதற்குப் பதிலாக தங்கள் துறையில் உள்ள கறுப்பாடுகள் மீது பொங்குவது மக்களுக்கு நலன் பயக்கும். 

சரி, திரைப்படத்திற்கே மீண்டும் வருவோம்.

மூன்று கதாநாயகிகளில் நித்யா மேனனுக்காவது கொஞ்சம் நடிக்க வாய்ப்பு இருந்தது. காஜல் அகர்வாலும் சமந்தாவும் பாவம். ஒரு பாட்டு, இரண்டு சீன். அவ்வளவுதான்.

வடிவேலு மீண்டும் திரும்பி இருக்கிறார். வருகிற காட்சிகளில் தன்னை நிரூபிக்கிறார்.  சத்யராஜிற்கு பெரிய வேலை இல்லை.  எஸ்.ஜே.சூர்யாவை இனி பல படங்களில் வில்லனாக பார்க்க முடியும்.

பாடல்கள், பின்னணி இசை பற்றி ஏதாவது எழுதினால் "நீ இளையராஜா ரசிகன். அதனால்தான்" என்று யாராவது சொல்வார்கள். எதற்கு வம்பு?

துப்பாக்கி, கில்லி போல இல்லாவிட்டாலும்  சுறா அளவு மோசமும் இல்லை. 

சுவாரஸ்யமான படம்தான். ஒரு முறை பார்க்கலாம்.  

பின் குறிப்பு 2 : ஜோசப் விஜய் என்று எச்.ராசா வழக்கம் போல விஷம் கக்கினார். அவர் திருட்டுத்தனமாக இந்த படத்தைப் பார்த்த போது விஜய் நெற்றி முழுதும் வீபூதியோடு வருவதை பார்க்கவில்லை போலும். ஒரு நல்ல கண் டாக்டரை பார்ப்பது நல்லது. நல்ல டாக்டர் யார் என்று மருத்துவர் தமிழிசையிடம் மட்டும் யோசனை கேட்க வேண்டாம்.

பின் குறிப்பு 2: யப்பா ரசிகக் கண்மணிகளா, கொஞ்சம் அமைதியா படத்தைப் பாருங்கப்பா, உங்க ஆரவாரத்தில காது வலிக்குது.

பின் குறிப்பு 3 : ஏழு ரூபாய் டாக்டர் - நாளை





Monday, October 13, 2014

பில் கேட்ஸ் மீது போலி தடுப்பூசி போட்ட வழக்கா?

 vaccine bill gates india polio 263x164 Bill Gates Faces Trial in India for Illegally Testing Tribal Children with Vaccines

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் நட்த்தும் தொண்டு நிறுவனம் இந்தியாவில் மலைவாழ்ப் பெண்களுக்கு  மற்ற நாடுகளில் தடை  செய்யப்பட்ட தடுப்பூசி போடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக் இணைப்பில் உள்ள செய்தி சொல்கிறது.

முதலாளிகள் காண்பிக்கும் பாசத்தின் பின்னணியில் பெரும்பாலும் மோசம் ஒளிந்திருக்கும். 

இந்த செய்தி உண்மையென்றால் மோடி அரசு என்ன செய்யப் போகிறது?

மேக் இன் இந்தியா, ஸ்வச்சச் பாரத் என்ற கோஷங்களை வேறு விதத்தில்தான் அமலாக்க வேண்டும். 

உண்மையான சுயசார்பான இந்தியாவை உருவாக்க வேண்டும்.
பன்னாட்டு உலகமயக் குப்பையிலிருந்து இந்தியாவை தூய்மை செய்ய வேண்டும்.

இந்த வழக்கு பற்றிய விபரங்கள் அறிந்தவர்கள் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

Thursday, November 15, 2012

பப்பாளி இலைச்சாறு குடித்தால் டெங்கு ஜூரம் குணமாகுமா?





இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல், பப்பாளியின் இலையை சாறு பிழிந்து தினமும் மூன்று முறை குடித்தால் டெங்கு ஜீரம் குணமாகிறது, ரத்தத்தில் உள்ள ப்ளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று சொல்கிறது.

இது எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை.

நம்பவும் முடியவில்லை, நம்பாமல் ஒதுக்கித் தள்ளவும் இயலவில்லை.

பப்பாளியின் இலைக்கு மருத்துவ குணம் உண்டா?
அப்படி உண்டென்றால் டெங்கு ஜூரம் குணமாகும் வாய்ப்பு உண்டா?

விபரம் தெரிந்தவர்கள், மருத்துவர்கள் கொஞ்சம் விளக்கம் அளிக்கலாமே...

இது உண்மையென்றால் அரசிற்கும் தகவல் சொல்வோமே!


Saturday, August 20, 2011

மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை நல்லதுதான். ஆனால்?



கலைஞர் கட்டிய தலைமைச் செயலகத்தை மல்டி
ஸ்பெஷாலிடி மருத்துவமனையாகவும் மருத்துவக்
கல்லூரியாகவும் மாற்ற தமிழக  அரசு முடிவெடுத்துள்ளது
நல்லதுதான் . 


கோடிகளை  கொட்டி உருவாக்கப்பட்ட ஒரு கட்டிடம்
பாழும் கட்டிடமாக மாறி சமூக விரோதிகளின் 
புகலிடமாக மாறி  விடுமோ  என்ற அச்சம் இருந்தது.
அக்கட்டிடம் பயன்படுத்தப்பட வேண்டும்  என்ற 
மக்களின் உணர்வுகளை ஏற்க வேண்டிய கட்டாயம்
ஜெயலலிதாவிற்கு  வந்ததும் நல்லதுதான் .

இல்லையென்றால்  எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் 
வீராணம் குழாய்கள்  காட்டுமன்னார் கோயில் 
தொடங்கி  விக்கிரவாண்டி வரையில்  சாலையில்
கிடந்து குடியிருப்பாய்  மாறியது போல ஏதாவது
நிகழ்ந்திருக்கும். கலைஞர் செய்த ஊழலை நினைவு
படுத்தவே   அவ்வாறு  அங்கிருந்து அகற்றாமல் 
வைத்திருந்தார்கள் என நினைக்கிறேன். சரி, அந்த
குழாய்கள் இப்போது எங்கே? 


மூன்று நாட்கள் முன்பு நடந்த சம்பவம்  இது. 
திருப்பத்தூரில்  அலுவலகத்திற்கு  வந்த எங்கள்
தோழருக்கு  மாரடைப்பு வர அங்கே ஒரு 
மருத்துவமனைக்கு  எடுத்து செல்கின்றனர்.
அவர்கள் ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில்
காண்பித்து விட்டு வேலூர் சி.எம்.சி  போகச்
சொல்லி விட்டனர்.  ஆம்பூர் மருத்துவமனையும்
கை விரித்து விட்டது.


மாரடைப்பு   வந்து  கிட்டத்தட்ட மூன்று
மணி நேரத்திற்குப் பிறகே  அவர்களால் சிஎம்சி
வர முடிந்தது. மிகவும் தாமதம் உயிர் பிழைக்க 
 மிக மிக  வாய்ப்பு குறைவு என்று  சொல்லியே 
உள்ளே அனுமதித்தார்கள். 


செயற்கை சுவாசம் உள்ளிட்ட எந்த சிகிச்சையும்
பலனளிக்கவில்லை.  அவர் உயிர்  பிரிந்து விட்டது.


உடனடி சிகிச்சைக்கு வாய்ப்பிருந்தால்  ஒரு வேளை
அவர்  பிழைத்திருக்கலாம்.
மாநகரங்களில்  பிரம்மாண்டமான மருத்துவமனை 
கட்டுவதை விட  சிறிய ஊர்களில்  அனைத்து அடிப்படை
வசதிகளுடன்  தரமான மருத்துவமனைகள் அமைப்பதே
அவசியமான ஒன்று.


ஜெயலலிதா இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.  

Saturday, March 26, 2011

குடும்பத்தால் கொலை செய்யப்பட்ட ஒரு அப்பாவி,


எனது முந்தைய  பதிவுகளில்  கார்ப்பரேட் மருத்துவமனைகள் பற்றியும் 
'ரமணா' திரைப்படக்காட்சி  மிகையல்ல, எனக்கே  அது போன்ற  ஒரு 
அனுபவம்  உண்டு  எனக் குறிப்பிட்டிருந்தேன்.  அது பற்றிய  பகிர்வு இது.

ஒரு அதிகாரி, சென்னைவாசி, பதவி உயர்வில் வேலூர் வந்திருந்தார். 
இங்கே தனியாக அறை  எடுத்து இருந்திருந்தார். ஒரு சனிக்கிழமை 
காலை அவருக்கு பக்க வாதம் வந்து  அவர் தங்கியிருந்த வீட்டின் 
உரிமையாளர்  அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து விட்டு ஆட்டோவில்
சி.எம்.சி   மருத்துவமனையில்  சேர்த்தார். நடந்து வந்த அவர் நிலை படிப்படியாக மோசமாகி  நினைவிழந்து போனார். சி.எம்.சி யில்  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து  உடனடியாக சில சோதனைகள் செய்தார்கள். 

மூளையில்  ரத்த நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  மிகவும் 
மோசமான நிலைக்கு செல்லாததால்   விரைவில்  குணமாக வாய்ப்பு 
உள்ளதாகச்சொல்லி  நரம்பியல் அவசரப் பிரிவிற்கு மாற்றினார்கள். 
காலை பத்து மணிக்கு முன்பாகவே  அவரது குடும்பத்திற்கு தகவல் 
கொடுத்தாலும்  மாலை ஆறு மணிக்குத்தான்  வந்தார்கள்.    

வந்த உடனேயே எப்போது டிஸ்சார்ஜ்  செய்யலாம், சென்னைக்கு அழைத்து  போகலாம்  என்று பரபரத்தார்கள்.  இப்போது பயணம் 
செய்வதற்கான உடல்நிலையில்  அவர் இல்லை. அப்படி செய்வது 
இன்னும் மோசமாக மாறி விடும்  என்று மருத்துவர்கள் சொன்னார்கள். 
அதெல்லாம்  கேட்க அவர் தம்பி தயாராக இல்லை.  அவரது மனைவியால்  வாய் திறந்து  பேச முடியவில்லை.  ஒரு மணி நேரம் 
இருவருக்கும் விளக்கமாகப் பேசி மருத்துவமனையில்  ஒருவர் 
இருந்தால் போதும், மற்ற பணிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
என்று தைரியம்  சொல்லி விட்டு வந்தோம். 

இரவு பதினோரு மணிக்கு முதல் நிலை அதிகாரிகள் சங்கத்தின் 
செயலாளர் தோழர் கேசவன் தொலை பேசி செய்து சி.எம்.சி வாருங்கள் 
என்று கூப்பிட்டார்.  வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியிருந்தது.  என் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை. ஆகவே 
சென்னை போகின்றோம்  என்று பிடிவாதம் பிடித்தார். என்ன சமாதானம் சொன்னாலும்  கேட்க தயாராக இல்லை. மருத்துவர்கள் கடுப்பாகி 
விட்டனர். அப்போது சாலையும் மிகவும் மோசமாக இருந்தது. 
இந்த நிலையில் பயணம் என்பது அவர் உயிரைப் பறிப்பதற்கு 
சமம் என்று கூறினார். யார் சொல்வதையும் கேட்க அந்த மனிதன்
தயாராக இல்லை. 

மருத்துவ ஆலோசனைக்கு மாறாக எனது சொந்த விருப்பத்தில் சொந்த 
பொறுப்பில்  டிஸ்சார்ஜ் செய்கிறேன்  என்று கையெழுத்து வாங்கிக் கொண்டு  டிஸ்சார்ஜ்  செய்தார்கள். நானும் தோழர் கேசவனும் 
சாட்சிக் கையெழுத்து போட்டோம். இரவு ஒரு மணிக்கு ஆம்புலன்ஸ் 
ஏற்பாடு செய்து கொடுத்து  அனுப்பி வைத்தோம். ஒரு நான்கு நாட்களுக்கு
தகவலே இல்லை. 

பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் உயிருக்கு போராடுவதாக 
தகவல் வந்தது. ஒரு வண்டி வைத்துக்கொண்டு  சென்னை விரைந்தோம். 
சென்னைக்கு அழைத்துப்போன பிறகு கூட சரியான ஒரு மருத்துவ மனையில்  அவரை அந்த படுபாவிகள் சேர்க்கவில்லை.  ஏதோ ஒரு 
சாதாரண மருத்துவமனையில் சேர்த்து விட்டு அங்கே எந்த வசதியும் 
இல்லாமல் நிலைமை முற்றிப் போனதும் அப்பல்லோவில் சேர்த்துள்ளனர்.  

அப்பல்லோவில்  ஒன்றரை  லட்ச ரூபாய் பணம் கட்டச்சொல்லி 
கூறியுள்ளார்கள்.  கட்ட வேண்டுமா என்ற விவாதம் ரொம்ப நேரம் 
ஓடிக்கொண்டிருந்துள்ளது . எல்.ஐ.சி யில் மருத்துவ சிகிச்சைக்கு 
முன் பணம் தருவார்கள்  என்று சொல்லி மருத்துவமனை அளித்த
விபரங்கள், செலவின எஸ்டிமேட்டை  வேலூர்ருக்கு  ஃ பாக்ஸ் 
அனுப்பி விட்டு அப்போதிருந்த முது நிலைக் கோட்ட  மேலாளருக்கு
தொலைபேசி செய்து அட்வான்ஸ் உடனே சாங்க்ஷன் செய்யுங்கள். 
மண்டல அலுவலகத்திற்கு சொல்லி அவர்களை காசோலை கொண்டு 
வரச்சொல்லுங்கள் என்றேன். 

அந்த புண்ணியவான் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? அவர் அதிகாரி 
ஆயிற்றே? உங்கள் சங்க உறுப்பினர் கிடையாதே? நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?   தொலைபேசியிலியே  கடுப்படித்ததும் வேலை நடந்தது. 
கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்களில் காசோலை கைக்கு வந்து விட்டது. 
நாங்கள் செய்த தவறு அதுதான். 

அதற்கு சில நிமிடங்கள் முன்பாக இனி வாய்ப்பு இல்லை. வீட்டிற்கு 
எடுத்துச்செல்லுங்கள், மானிட்டரை எடுத்தால் அடுத்த நிமிடம் மரணம்
என்று சொன்னவர்கள், பத்தாயிரம் ரூபாய் பணம் கட்டி டிஸ்சார்ஜ் 
செய்து கொள்ளுங்கள் என்றவர்கள், ஒரு லட்சம் ரூபாய்க்கான 
காசோலையை பார்த்த உடன்  சுறுசுறுபபாகி  விட்டார்கள். ஐ.சி.யு 
படலம் ஒரு லட்ச ரூபாய் தீரும் வரை எந்த சிகிச்சையும் இல்லாமலேயே 
தொடர்ந்தது. தேடி வந்த லட்சுமியை  திருப்பி அனுப்ப அப்பல்லோ 
விரும்பவில்லை. கட்டிய பணம் தீர்ந்ததும் மானிட்டரை அகற்றி 
உயிர் போய் விட்டது என்று சொல்லி  உடலை கட்டிக்கொடுத்து விட்டார்கள். 

வேலூரிலிருந்து அழைத்து வராமல்  இருந்தால்  ஒரு வேளை அவரை 
காப்பாற்றி இருக்கலாம் என்று சொன்ன போது  பான்பராக்கை குழப்பிக் 
கொண்டே அந்த அன்புச்சகோதரன் சொன்னான் 'நாபத்தி அஞ்சு வயசுல
செத்துப்போகணும் அப்டிங்கறது  அவன் விதி சார். இதெல்லாம் யார் 
மாத்த முடியும்? செத்தப்பறம் ஆராய்சி பண்ணா அவன் வரவாப் 
போறான்?. நீங்க ரொம்ப மனச அலட்டிக்காதீங்க" 

இதுதான் உறவுகளின் உண்மையான நிலை என்ற வேதனையான 
பாடம் கிடைத்தது அன்று.   நல்ல சிகிச்சைக்கான வாய்ப்பு இருந்தும்
சென்னைக்கு கூட்டிப்போய்  அவரை அவரது குடும்பத்தினரே 
சாகடித்து விட்டனர்  என்பது  எவ்வளவு மோசமான உண்மை?  

Friday, March 25, 2011

துயர வரி அகற்றப்பட்டது. கார்ப்பரேட் மருத்துவமனைகளின் பகற்கொள்ளை நிறுத்தப்படுமா?

மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மீது விதிக்கப்பட்ட  துயர வரி என்று  மருத்துவத்துறையால்  அழைக்கப்பட்ட சேவை வரி திரும்பப் பெறப்பட்டு விட்டது.  இது உண்மையிலேயே  நல்ல விஷயம்தான். 
எதிர்ப்புக்கு  அரசு  அடிபணிந்துள்ளது  என்று கூட  பலரும் பெருமைப் படலாம்.  நிதி நிலை அறிக்கையில் முன்மொழியப்பட்டு பின்பு அது நிறைவேறும் வேளையில்  திரும்பப்பெறப்பட்ட  அனுபவம்  ஏதேனும்   இதற்கு முன்பு உண்டா?  

பங்குச்சந்தை  தரகர்களுக்கு  முன்பு  சேவை வரி விதிக்கப்பட்டது. 
அவர்கள்  போராடினார்கள். மும்பை பங்குச்சந்தை  ஒரு நாள் முடங்கிப்
போனது. சிவகங்கைச்சீமான்  சிதம்பரம் மும்பை பறந்தார்.  தரகர்களை 
சமாதானம் செய்தார். விதித்த வரியை அகற்றினார். இப்போது துயர வரி.

ஆக  தரகர்களோ, பெரும் பணக்காரர்களோ, பெரிய மருத்துவமனைகளோ 
போராடினால்  மத்தியரசு ஓடோடி வரும், அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும்  என்பது துயர வரி விஷயத்திலும்  நிரூபணம் ஆகி விட்டது. 
என்னே ஒரு வர்க்க பாசம்! இதுவே  சாதாரண உழைப்பாளி மக்கள் போராடும் போது  மழைத்தண்ணீர்  மேலே விழுவதை  உணராத  
எருமைகளாய்தான்  மத்தியரசு உள்ளது. 

முந்தைய பதிவில் துயர வரி குறித்து டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி 
எழுதியிருந்தது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.அரசு விதிக்கும்  வரிகளால்தான்  மருத்துவமனைகள்  ஏராளமான கட்டணம் விதிப்பதாக
அவர் எழுதியிருந்தார். வரிகள் மட்டும் இல்லையென்றால்  எதோ அரசு
மருத்துவமனைகளை விட கொஞ்சமே கொஞ்சம்தான்  அதிகமாக 
கட்டணம் வசூலிப்பார்கள்  என்பது போன்ற தொனி  அதில் இருந்தது. 


வரிகள்தான் மருத்துவக் கட்டண உயர்விற்குக் காரணமா? வேறு எதுவுமே
கிடையாதா? ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யில்லையா இது? 

ஆடம்பரக் கட்டமைப்புகள்  ஒரு முதலீடு. கார்ப்பரேட் மருத்துவமனைகளும்  சரி பெரும் வணிகப் பல்கலைக் கழகங்களும் 
தங்கள் கட்டிடங்களை பிரம்மாண்டமாகக் கட்டி காட்டி காசு பிடுங்க
முயற்சிக்கின்றன. மிகப் பெரிய மருத்துவமனைகளில் நுழைபவர்களில்
கணிசமான காசு பறிக்கப்படுவது  சோதனைகளுக்குத்தான். இந்த 
பரிசோதனைகள்  நோயாளிக்கு  அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால்  வாங்கி வைத்துள்ள இயந்திரங்களுக்கு அவசியம். 


மருந்துகளைப் பொறுத்தவரை  நோயாளிகளின்  தேவையை பூர்த்தி
செய்யாத மருந்தாகக் கூட அது  இருக்கலாம், ஆனால் அவை மருத்துவரின்  விருப்பத்தை பூர்த்தி செய்த மருந்து நிறுவனம்  தயார்
செய்த மருந்தாக இருப்பது  முக்கியம்.  ஆடம்பரப் பொருட்கள், வெளி நாட்டு சுற்றுலா என்றெல்லாம் கவனிப்பதற்காக செய்யப்பட செலவினம் 
நோயாளியின் தலையில் தான்  விடிகிறது. 


அறுவை சிகிச்சைகளுக்கு  ஆகும்  செலவினம்  எல்லா  மருத்துவமனைகளிலும்  ஒன்று போல  உள்ளதா?  வேலூர் சி.எம்.சி 
மருத்துவமனைக்கும்   சென்னையில்  உள்ள  மருத்துவமனைகளுக்கும்
பல முக்கிய  மருத்துவ  சிகிச்சைகளில்   செலவினத்தில்   மிகப் பெரிய 
வித்தியாசம்  உள்ளதை   பல முறை  நான் கவனித்துள்ளேன். சி.எம்.சி 
மருத்துவமனைக்கு  வெளி நாட்டு நிதி வருவதாக வேண்டுமானால் 
சொல்வார்கள்.   


சென்னைக்கு உள்ளேயே  உள்ள மருத்துவமனைக் கட்டணங்களிலும் 
பலத்த முரண்பாடுகள்  உண்டு.  பல தோழர்களின்  மருத்துவ செலவின 
பில்களை பல ஆண்டுகளாகப் பார்த்து வருபவன்   என்ற முறையில்  
பல மருத்துவமனைகள்   செய்வது பகற்கொள்ளை  என்று  உறுதியாக 
சொல்ல முடியும்.  'ரமணா' திரைப்படக் காட்சி என்பது அதீதமல்ல. 
யதார்த்தத்தில் எனக்கே  அப்பல்லோ  மருத்துவமனையில்  ஒரு 
மோசமான  அனுபவம்  உண்டு.  அது பற்றி  தனியாக எழுதுகிறேன்.


ஏழை மக்கள் மீது அனுதாபம் உள்ளதாகச்சொல்லி  துயர வரியை 
ரத்து செய்ய வைத்து விட்டார்கள். நல்லது. அவர்கள் மீது கூடுதல்
பாரம் ஏறவில்லை  என்பது மகிழ்ச்சி.  துயர வரி வரும்போது வந்த
அனுதாபத்தை  இனியாவது  நோயாளிகள் மேல் கார்ப்பரேட் மருத்துவமனைகள் காண்பித்தால் அது மிக நல்லது.  
 
   

 

Monday, March 21, 2011

ஆஸ்பத்திரிக்கா போறே? கொண்டே புடுவேன்!

மத்தியரசு ,இவ்வாறு சொல்லாமல்  சொன்னதாக கொந்தளிக்கிறார்கள் மருத்துவர்கள். மருத்துவமனைகளுக்கு  சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதைக்  கண்டிக்கிறார்கள். ஆளுநர் மாளிகை முன்பாக 
ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. பெங்களூர் நாராயண ஹிருதயலாயா 
மருத்துவமனையின்  தலைவர் டாக்டர் தேவி  பிரசாத் ஷெட்டி  இது தொடர்பாக எழுதிய கடிதமும்  மின்னஞ்சல்களில் சூடாக உலாவின. 
டாக்டர் தேவி  பிரசாத்  ஷெட்டி  என்ன சொல்கிறார்.  மருத்துவத்திற்காகவும் சுகாதாரத்திற்காகவும்  ஒட்டு மொத்த உற்பத்தியில் ஒரு சதவிகிதத்திற்கும்  குறைவாக செலவிடுகிற  அரசாக  இந்தியா உள்ளது,அரசு செய்யத்தவருகின்ற  பணியைத்தான் தனியார் மருத்துவமனைகள் செய்வதாகவும்,  இதய அறுவை சிகிச்சை, சிறு நீரக மாற்று சிகிச்சை ஆகியவைக்கு பத்தாயிரம் முதல்  பதினைந்தாயிரம் வரை கூட ஆகும்  என்றும் புற்று நோய் சிகிச்சைக்கு  இருபதாயிரம் வரை 
கூடுதலாகும்  என்று அவர் கூறியுள்ளார். 

அது மட்டுமல்ல, இந்த சேவை வரி  நவீன கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு  மட்டும் பொருந்தும், பணக்காரர்கள் மட்டுமே 
பாதிக்கப்படுவார்கள்  என்று  அரசு சொல்வது தவறு என்று மறுக்கிற 
அவர், அனைத்து  அறுவை சிகிச்சை அறைகளும்  ரத்த வங்கிகளும் 
சட்டப்படியும் சரி, தொழில் நுட்ப தேவையின் அடிப்படையிலுமே 
குளிர்சாதனம்  செய்ய வேண்டிய  கட்டாயம் உள்ளது. எனவே இந்த 
சேவை வரி அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என்றும் 
அவர் கூறுகின்றார். 

இதய, சிறு நீரக, மூளை, அறுவை சிகிச்சைகளையும் இவ்வரி மூலமாக
ஒட்டு மொத்த மக்கட்தொகையில்  பத்து சதவிகிதம்  மட்டுமே சிகிச்சை
பெறக்கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும்  இதனால் அதிகமான 
விதவைகளை  உருவாக்கக் கூடிய நாடாக இந்தியா மாறி விடும் என்றும்
அவர் கூறுகின்றார். இந்த சேவை வரிக்கு துயர வரி (Misery Tax) என்றும் 
பெயர் சூட்டி  இதற்கு எதிராக போராட முன்வருமாறு  அவர் அழைத்துள்ளார்.

அரசு செய்யத்தவறிய கடமைகளை  சுட்டிக்காட்டியுள்ளது சரியானது. 
மருத்துவ சிகிச்சைக்கான  கட்டணம் உயரும்  என்பதும் சரியானது. 
சேவை வரி அகற்றப்பட வேண்டும் என்பதும் அதற்காக போராட வேண்டும்  என்பதும் மிகச்சரியானது.  துயர வரி என்ற பெயர் மிகவும் 
பொருத்தமானது. 

ஆஸ்பத்திரிக்கா போறே? கொண்டே புடுவேன்  என்று மிரட்டுவது 
மத்தியரசு மட்டும்தானா?  மருத்துவமனைகள்  தங்களிடம் வருகின்ற
நோயாளிகளை மிரள வைப்பதே கிடையாதா?  
கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியும்  மருத்துவமனைகளின் 
மறுபக்கம்  எவ்வாறு  உள்ளது? மருத்துவக்கட்டணங்கள்  உயருவதற்கு
வரிகள் மட்டுமே காரணம்  என்று சொல்வது எவ்வளவு தூரம் 
சரியானது? 

மத்தியரசு  என்றுமே ஏழைகளுக்கு எதிரானது. அவர்களின் துயர 
வரியை கண்டிப்போம், அகற்று  என்று குரல் கொடுப்போம்.
அதே நேரம் பகட்டான மருத்துவமனைகளின் பகற்கொள்ளையைப்
பற்றியும் அறிந்து கொள்வோம். 
நாளை தொடரும் ...