Showing posts with label புத்தகக் கண்காட்சி. Show all posts
Showing posts with label புத்தகக் கண்காட்சி. Show all posts

Tuesday, April 1, 2025

இந்த சபலத்தை மட்டும் . . .

 


இந்த சபலத்தை மட்டும் . . .

வேலூரில் புத்தக விழா தொடங்கிய தகவல் தெரிந்ததில் இருந்து அங்கே செல்ல கால்கள் துடித்தாலும் இருக்கும் புத்தகங்களை முதலில் படித்து முடி என்று இன்னொரு குரல் மனதில் ஒலிக்க கொஞ்சம் கட்டுப்பாடாகவே இருந்தேன். வீட்டில் நடைபெற்ற பராமரிப்பு வேலைகளுக்காக விடுப்பில் இருந்ததும் கட்டுப்பாட்டை பாதுகாக்க உதவியது. 

விடுப்பை முடித்து விட்டு அலுவலகம் சென்ற நாளன்று அங்கே வந்த எங்கள் முன்னாள் பொருளாளரும் ஓய்வூதியர் சங்கத்தின் தற்போதைய செயலாளருமான தோழர் டி.செந்தில்வேல் வேலூர் புத்தக விழாவிற்கு போகவில்லையா என்று கேட்க மனக்கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் நொறுங்கத் தொடங்கியது.

புத்தக விழா போகிறோம், வெறுமனே பார்க்கிறோம், ஆனால் புத்தகம் எதையும் வாங்கப் போவதில்லை என்று புதிய விதி ஒன்றை வகுத்துக் கொண்டு போனேன்.

உள்ளே நுழையும் வரைதான் அந்த விதி. முதல் அரங்கிலேயே அது காணாமல் போய் விட்டது. சபலமே வென்றது. 

பெரும்பாலும்  புனைவு நூல்களே, அதிலும் பெரும்பாலான நூலாசிரியர்கள் காலஞ்சென்ற எழுத்தாளர்கள்தான். ஏற்கனவே இரு முறை படித்த நூலாக இருப்பினும் யாரோ சுட்டுக் கொண்டு போனதால் மீண்டும் மாக்சிம் கார்க்கியின் தாய் வாங்கினேன்.

இந்த வருட வாசிப்பு இதுவரை நிறைவு தந்ததாலும் இந்த ஆண்டு பேரவைக் கூட்டங்களுக்கான பயணங்கள் இருப்பது மட்டும் புதிய நூல்களை வாங்குவதற்கான காரணமில்லை. 01.08.2025 முதல் கிடைக்கப் போகும் ஓய்வும் கூட முக்கியக் காரணம் . . . 



Thursday, February 20, 2025

சிறைவாசிகள் மீது என்னே அக்கறை!

 


நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஒரு செய்தி வந்திருந்தது. கும்பமேளாவில் குளித்த புண்ணியம் சிறைவாசிகளுக்கு கிடைக்க மொட்டைச்சாமியார் நடவடிக்கை என்று முதலில் சொல்லப்பட்டிருந்தது. ஆஹா! கும்பமேளாவை முன்னிட்டு சிறைவாசிகள் எல்லோருக்கும் விடுதலை அல்லது பரோல் கொடுக்கப் போகிறார்களா அல்லது சிறைவாசிகளை அலகபாத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறார்களா என்று ஆவலோடு மேலே படித்தேன்.

கும்பமேளாவிலிருந்து தண்ணீரை உ.பி யில் உள்ள எல்லா சிறைச்சாலைகளுக்கும் எடுத்துக் கொண்டு போய் அங்கே உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியில் கலந்து விடுவார்களாம். அப்படி கும்பமேளா தண்ணீர் கலக்கப்பட்ட தண்ணீரில் குளித்தால் அவர்களுக்கு கும்பமேளாவில் குளித்த புண்ணியம் கிடைத்து விடுமாம்.

 அடேங்கப்பா! சிறைவாசிகளுக்கு புண்ணியம் கிடைக்க எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்! உருப்படியா மக்களுக்கு எதுவும் செய்யாவிட்டாலும் இந்த மாதிரி யோசனை மட்டும் எப்படி வருதோ?

 இங்கே தமிழ்நாட்டிலும்தான் இருக்கிறார்களே! சிறைவாசிகளுக்கு நல்ல வாசிப்பனுபவம் கிடைக்க வேண்டும், அவர்களின் அறிவுத்திறன் பெருக வேண்டும் என்பதற்காக எந்த ஊரில் புத்தக விழா நடந்தாலும், அங்கெல்லாம் "கூண்டுக்குள் வானம்" என்ற பெயரில் ஒரு அரங்கம் அமைத்து வாசகர்களிடமிருந்து புத்தகங்களை திரட்டி சிறை நூலகத்தை மேம்படுத்தி வாசிப்பை ஊக்குவிக்கிறார்கள்.

 


மொட்டைச்சாமியார் ரேஞ்சிற்கு யோசிக்க மாட்டேங்கறாங்களே!

 பிகு: வேலூர் புத்தக விழாவின் போது சிறைவாசிகளுக்கு என்னுடைய சேகரிப்பில் இருந்த சில புத்தகங்களை கொடுத்த போது எடுத்த படம் மேலே.

 

Saturday, January 11, 2025

சென்னை 2025 – 33 – 7635

 


நேற்று சென்னையில் மூன்று வேலைகள் இருந்தது. முதல் வேலையை முடித்து விட்டு இரண்டரை மணிக்கு சென்னை புத்த்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தேன். முதற்கடமையாக நுழைவாயிலில் இருந்த வள்ளுவர்-காந்தி-வ.உ.சி சிலைகள் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டு பின்பு அரங்கங்களை பார்வையிடத் தொடங்கினேன்.

வாங்க வேண்டிய நூல்கள் பற்றி ஏற்கனவே ஒரு எக்ஸெல் போட்டு எடுத்துச் சென்றதால் வேகமாகவே அவற்றை வாங்கியதோடு வேறு சில நூல்களையும் வாங்க முடிந்தது.  இந்த வருடம் வாங்கியவற்றில் சாகித்ய அகாடமி விருது வாங்கிய நூல்கள் இரண்டு. இறுதிச்சுற்ற்றில் பல வருடங்களாக இடம் பெறும் நூல் ஒன்று.


 

கைகளில் சுமக்க தெம்பு இருந்த வரை, அரங்குகளை பார்வையிட முடிந்தது. ஒரு பாட்டி, சக்கரங்கள் வைத்த ஒரு பெட்டியை எடுத்து வந்திருந்தார்கள். அடுத்த வருடம் அதனை முயற்சிக்க வேண்டும்.

 இந்த வருடம் வாங்கிய நூல்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் அவற்றின் பக்கங்கள் அதிகம். 01 ஆகஸ்ட் முதல் வாசிப்புக்கு அதிக நேரம் கிடைக்கும் என்ற தைரியம்தான்.

 பார்ப்போம் என்ன நடக்கிறது என்று!!!

பட்டியல் கீழே இணைத்துள்ளேன். இவற்றில் யாராவது வாங்க வேண்டுமென்றால் வசதியாக அரங்கு எண்ணும் கொடுத்துள்ளேன்.

நாளை சென்னை புத்தகவிழாவின் இறுதி நாள் 





 

Tuesday, February 27, 2024

வேலூரில் நல்ல வேட்டை

 


வேலூரில் புத்தக விழா என்ற அறிவிப்பைப் பார்த்தது முதலே சென்று வர வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். அதற்காக துவக்கப்பட்ட ஒரு வாட்ஸப் குழுவில் வேறு இணைத்து அன்றாட நிகழ்வுகளைப் பற்றியெல்லாம் பதிவு செய்து கொண்டே இருந்தார்கள். ஆனால் தொடர்ச்சியான வேலைகள், பயணங்கள் காரணமாக அதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை.

இன்றுதான் விழாவின் இறுதி நாள் என்பதால் இன்று எப்படியாவது சென்றிட வேண்டும் என்ற வேகத்துடன், மதிய உணவு இடைவேளையின் போது வேகம், வேகமாக சென்று, அதை விட அதி வேகமாக அரங்குகளுக்குள் நுழைந்து புத்தகங்களை வாங்கி வந்தேன்.

செலவழித்த நேரம் குறைவென்றாலும் புத்தகங்கள் வாங்கியதில் குறையெதுவும் இல்லை. மனம் நிறைவடையக்கூடிய விதத்தில்தான் இருந்தது. ஞாயிறு கடலூர் சென்று திரும்பிய நேரத்தில் 256 பக்கங்கள் கொண்ட கள அனுபவ கட்டுரை நூலை படித்து முடிக்க முடிந்ததால் உருவான தைரியமே இந்த அளவு புத்தகங்களை வாங்க தூண்டியது.

இன்று வாங்கிய நூல்களின் பட்டியல் கீழே


எண்

நூல்

ஆசிரியர்

பக்கம்

1

தண்ணீர்

அசோகமித்திரன்

112

2

எரியும் மண் -மணிப்பூர்

கிர்த்திகா தரன்

83

3

நாடோடியாகிய நான்

சமுத்திரக்கனி

136

4

நரவேட்டை

சக்தி சூர்யா

280

5

நகலிசைக் கலைஞன்

ஜான் சுந்தர்

143

6

எதனையும் மறக்க இயலாது

நேஹால் அகமது - தமிழில் சுனந்தா சுரேஷ்

160

7

போராட்டம் தொடர்கிறது

பிரபீர் பூர்காயஸ்தா தமிழில் .சுப்பாராவ்

253

8

செயலற்ற அரசு

எம்.ராஜ்ஷேகர் - தமிழில் .சுப்பாராவ்

352

9

பேசும் பொம்மைகள்

சுஜாதா

230

10

திருடர்களின் கைகள் மென்மையானவை

கரங்கார்க்கி

103

11

மலரும் சருகும்

டி.செல்வராஜ்

198

12

சபக்தனி

சம்சுதீன் ஹீரா

272

13

தமிழ்ச் சினிமாவில் கம்யூனிசம்

பாலு மணிவண்ணன்

88

 

 

 

2410

 

பார்ப்போம், எவ்வளவு விரைவாக இவற்றையெல்லாம் வாசித்து முடிக்க முடிகிறதென்று.                                                          

Monday, January 1, 2024

போன வருஷ வாசிப்பு - அவ்வளவு சுகமில்லை.

 


கீழே உள்ளது போன வருடத்தில் வாசித்த புத்தகங்களின் விபரங்கள். முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும் போது சென்ற ஆண்டு படித்தது குறைவுதான். என் புத்தக வாசிப்பு பெரும்பாலும் பயணத்தில்தான்.  இந்த வருடம் பயணங்களுக்கு குறைவில்லை. ஆனாலும் என்னமோ தெரியவில்லை. காரில் ஏறியவுடனேயே கண்ணை சொக்கிக் கொண்டு வந்து விடுகிறது. 18,000 பக்கம், 16,000 பக்கம் என்றெல்லாம் படித்த பொற்காலம் எப்போது திரும்புமோ?

கடந்த வருடம் வாங்கிய நூல்களே இன்னும் காத்துக் கொண்டு இருக்கிறது. இதிலே சென்னை புத்தக விழா வேறு சபலப்படுத்துகிறது. என் செய்வேன்!

 முன்னுரிமை கொடுத்து படிக்க வேண்டிய நூல்களை தனியே எடுத்து வைத்துள்ளேன். அவைதான் மேலே உள்ள படத்தில் உள்ளது.

 இதற்கிடையில் தமுஎகச, காட்பாடி கிளை வேறு ஒரு புத்தகக்கண்காட்சியை ஏற்பாடு செய்ய, நேற்று கால்கள் அங்கே செல்ல, கண்கள் தேர்ந்தெடுக்க இன்னும் சில புத்தகங்கள் வேறு வாசிப்பு பட்டியலில் இணைந்து விட்டது. நேற்று வாங்கியவை கீழே. . .

 


வாசிப்பதைத் தவிர இன்னொரு முன்னுரிமைப் பணியை இந்த வருடமாவது செய்து முடிக்க வேண்டும். எல்.ஐ.சி நிறுவனத்தில் 1974 ல் கொண்டு வரப்பட்ட லாக் அவுட்டும் அதற்கு எதிரான காலவரையற்ற வேலை நிறுத்தமும் ஒரு வீர காவியம். அதை நாவலாக அளிக்க வேண்டும் என்ற சிந்தனை ரொம்ப நாளாகவே மண்டையில் ஓடிக் கொண்டிருக்கிறது. பல தரவுகள் தயார். தார்வார்டிலும் பாட்னாவிலும் உள்ள மூத்த தோழர்களோடு ஒரு நீண்ட உரையாடல் தேவைப்படுகிறது. அது இந்த வருடமாவது நிகழ வேண்டும்.

 பார்ப்போம், அடுத்த வருடத்தில் எழுதும் போது என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை.

 

எண்

நூல்

ஆசிரியர்

பக்கம்

1

ஊமைகளின் தலைவன்

முகில்

32

2

விடுபட்டவர்கள்

இனியன் ராமமூர்த்தி

78

3

சைத்ய பூமி

புதிய மாதவி

166

4

கயிறு

விஷ்ணுபுரம் சரவணன்

16

5

நகுலன் வீட்டில் யாருமில்லை

எஸ்.ராமகிருஷ்ணன்

144

6

பாதி நீதியும் நீதி (பா)தியும்

கே.சந்துரு

225

7

அஷோரா

சயந்தன்

256

8

நாத்திக குரு

இரா.முருகவேள்

232

9

அது ஒரு நிலாக்காலம்

ஸ்டெல்லா புருஸ்

204

10

மலை மாளிகை

சுஜாதா

48

11

மார்க்சியம்

ச.லெனின்

120

12

வி.பி.சிந்தன்

என்.ராமகிருஷ்ணன்

32

13

மெரினா

சுஜாதா

94

14

வேட்டை

லட்சுமி சரவணகுமார்

309

15

முகாம்

அ.கரீம்

263

16

நாதுராம் கோட்சே

திரேந்திர கே.ஜா தமிழில் : இ.பா.சிந்தன்

400

17

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டுதான் இருந்தது

எஸ்.ராமகிருஷ்ணன்

174

18

உண்மைகள், பொய்கள், கற்பனைகள்

ஹரிசங்கர்

160

19

அன்று சிந்திய ரத்தம்

சாத்திரி

144

20

அம்மா ஒரு கொலை செய்தாள்

அம்பை

277

21

இச்சா

ஷோபா சக்தி

303

22

நீதிமன்றமும் நானும்

சிகரம் செந்தில்நாதன்

111

23

மாக்காளை

டி.கே.கலாபிரியா

294

24

நான் ஒரு ரசிகன்

எம.எஸ்.விஸ்வநாதன்

168

25

பொய்கைக்கரைப்பட்டி

எஸ் . அர்ஷியா

196

26

க்ளிக்

மாதவராஜ்

248

27

அநீதிக்கதைகள்

அருண்.மொ

132

28

சென்னைக்கு மிக அருகில்

வினாயக முருகன்

367

29

தட்டப்பாறை

முஹம்மது யூசுஃப்

530

30

ககந்தக பூமியில் கண்ணீர்

பி.என் .தேவா

24

31

கொல பசி

அ.முத்துக்கிருஷ்ணன்

166

32

போராட்டங்களின் கதை

அ.முத்துக்கிருஷ்ணன்

267

33

ஜமீன் கதைகள்

கே.என்.சிவராமன்

720

34

மதராஸ் - மண்ணும் மக்களும்

வினாயக முருகன்

180

35

இசையும் தமிழும் இசைத்தமிழ் தாத்தாவும்

களப்பிரன்

44

36

மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்

ஆதவன் தீட்சண்யா

54

37

பக்கார்டி

ஹரிசங்கர்

127

38

ஒற்றைச் சிறகு ஓவியா

விஷ்ணுபுரம் சரவணன்

120

39

காட்ஃபாதர்

யுவகிருஷ்ணா

368

40

ரைட்டர்ஸ் உலா

யுவகிருஷ்ணா

192

 

 

மொத்தம்

7985