Friday, October 30, 2015

ஐம்பதில் அடங்கிய நூறு




வலைப்பதிவர் விழாவில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசாக கொடுக்கப்பட்ட நூல் திரு ஈழ பாரதியின் ஹைக்கூ கவிதைத் தொகுப்பான “பனைமரக்காடு”

பதிவர் விழாவில் ஒவ்வொரு பதிவரும் அறிமுகம் செய்து கொண்டு மேடையில் இறங்கும் முன்பாக ஒரு இளைஞர் பொன் மயமான பரிசுத்தாள் சுற்றி அழகுற பேக் செய்யப்பட்ட ஒரு புத்தகத்தை புன்னகைத்த முகத்தோடு கொடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். இப்போது புத்தகத்தில் உள்ள புகைப்படத்தை பார்க்கையில் அவர்தான் கவிஞர் ஈழ பாரதி என்பதை புரிந்து கொள்ள முடிந்திருந்தது.

ஐம்பது பக்கங்களில் பக்கத்திற்கு இரண்டு என்று நூறு கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த இவரது வலி பல கவிதைகளில் வெளிப்படுகிறது. ஈழம் பற்றி மட்டுமல்ல, சுற்றுச் சூழல் மீதான நேசம், குருவிகள் மீதான காதல், தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான கோபம், மூட நம்பிக்கைகளை சாடல், ஊழல் அரசியல்வாதிகள் மீதான எரிச்சல் என்று பல்வேறு உணர்வுகளை கவிதைகளாக வடித்துள்ளார்.

பதிவின் நீளம் கருதி இருபத்தி ஓரு கவிதைகளை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஒரு பத்து கவிதைகள் மட்டுமே பகிர்ந்து கொள்ள  நினைத்தேன். ஆனால் என்னதான் முயற்சி செய்தாலும் இந்த 21 கவிதைகளை தவிர்க்க முடியவில்லை. அவ்வளவு அழுத்தமாக உள்ளது.

வெடிகுண்டுச் சப்தம்
         உறக்கத்தில்
ஈழக்குழந்தைகள்.

    சாலைஓர மரம்
        சாமியானது
 சரியாமல் நின்றது.

ஓங்கி ஒலிக்கும்
தமிழனின் குரல்
செவிடாய் உலகம்..?

கதர் ஆடைக்குள்
      கரும்புள்ளி
   கறுப்புப் பணம்

தமிழனின் ரத்தம்
   சிங்கள அரசின்
 சிவப்புக் கம்பளம்

தலித்துக்கள் மிதிக்காமல்
        தீட்டாகிப் போனது
        கோயில் கருவறை

   யுத்தம் நிறுத்து
நித்தம் கலையுது
  குருவிகள் கூடு




தனியார் மயமாக்கல்
   மலிவு விலையில்
         அரசுப் பள்ளி

தூண்டிலுடன் மீனவன்
துப்பாக்கியுடன்
கடற்படை

தலித்துக்களுக்கு தடை
நடுவீடுவரை வரும்
நாய்கள்

கணக்கில் வராததால்
கடவுளுக்கும் பங்கு
உண்டியல் பணம்

பசிக்கு உணவில்லை
             படத்திற்கு
              படையல்

வெள்ளரிக் கொடியில் இரத்தம்
            வேடிக்கை பார்க்கும்
                           புத்தன்

முள்வேலிக்குள்  ஈழம்
          முகமுடிக்குள்
               தமிழகம்

தேன் எடுக்க மறுக்கும்
     வண்ணத்துப் பூச்சி
பூவிலும் பூச்சிக்கொல்லி

பேசத்துடிக்கும் மகன்
மறுக்கும் அப்பா
கீழத்தெரு பெண்

பட்டாசு வெடிக்க மனமில்லை
                        வாசலில்
                   குருவிக் கூடு

பாலுக்கு ஏங்கும் குழந்தை
படத்துக்கு
பால் அபிஷேகம்

டவர் வளர்த்தோம்
பிறந்தது செல்
இறந்தது குருவி

பாசமாய் வளர்த்த மகள்
சாதியைக் காப்பாற்ற
கௌரவக்கொலை

ஒரே தண்ணீரில்தான்
கழுவுகின்றார்கள்
இரட்டைக் குவளைகளை

நிச்சயம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

அழகான அட்டைப்படம், ஒவ்வொரு கவிதைக்கும் பொருத்தமானதோர் படம்  என்று மிகவும் அழகியல் உணர்வோடு நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நண்பர் ஈழ பாரதி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

சமீப காலத்தில் நான் படித்த மிகச் சிறந்த புத்தகம், உணர்வுகளை மிகவும் அதிர வைத்த, தீ பரவும் வேகத்தோடு நகரும், உண்மையை உள்ளபடியே சொன்ன ஒரு புத்தகம் ஒன்று உண்டு, ஓரிரு நாட்களுக்குள் அந்த நூல் பற்றி

அவர் முந்திக் கொண்டார்



வழக்கமாக பதிவுகளுக்கு பின் குறிப்பு தேவைப்படும். ஆனால் இன்று எனக்கு முன்னுரை தேவைப்படுகிறது.

ஏனென்றால்

இன்று காலை இணையத்துக்குள் நுழைந்ததும் இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. நண்பர் திரு கரந்தை ஜெயகுமார் அவர்கள், எங்கள் வேலூர் கோட்டச் சங்க வரலாறு குறித்து நான் தொகுத்திருந்த நூலை அவரது வலைப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவ்வளவு அன்பிற்கும் அவரது புகழுரைக்கும் நான் தகுதியானவன் இல்லை என்பதால் கொஞ்சம் கூச்சமாகவே இருக்கிறது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எனும் மாபெரும் அமைப்பின் சாதாரண ஊழியன் மட்டுமே. பல்வேறு மகத்தான தலைவர்களின் தியாகத்தால் இன்று நாங்கள் வளமாகவும் வலிமையாகவும் இருக்கிறோம் என்பதுதான் உண்மை. 



இதில் என்ன ஒற்றுமை என்றால் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போதுதான்  அவரது “வித்தகர்கள்” நூலைப் பற்றி பதிவு செய்வதற்காக எழுதியிருந்தேன். ஆனால் அலுவலகத்திலிருந்து புறப்படும் போது பென் ட்ரைவை எடுத்துக் கொள்ள மறந்து விட்டேன். அதனால் நேற்று அதனை பதிவு செய்ய முடியவில்லை. அதனால் இன்று பதிவு செய்கிறேன். எனது மறதியால் அவர் முந்திக் கொண்டார்.

அதனால் பதிவின் தலைப்பும் மாறி விட்டது.

இப்போது ஒரிஜினலாய் எழுதிய பதிவிற்குச் செல்வோம்.

அன்பின் அடையாளமாய் கிடைத்த ஐவர் பற்றி


மழை நின்றும் தூறல் நிற்கவில்லை என்பது போல வலைப்பதிவர் விழா பற்றிய பதிவுகளை நான் நிறைவு செய்து விட்டாலும் அதன் தொடர்ச்சியாய் வலைப்பதிவர் விழாவில் கிடைத்த இரண்டு நூல்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.

புதுகை வலைப்பதிவர் விழாவில் புத்தக் கண்காட்சி இருந்த போதும் நான் எந்த புத்தகமும் வாங்கவில்லை. படிக்க வேண்டிய புத்தகங்களின் வரிசை மிரட்டிய காரணத்தால் அந்த பட்டியலில் கூடுதலாக எதையும் இணைக்க வேண்டாம் என்பதாலும் புத்தகங்களை எங்கே வைப்பது என்ற இடப் பிரச்சினையாலும் கட்டுப்பாடாக இருந்து விட்டேன்.

ஆனாலும் என்னைத் தேடி புத்தகங்கள் வந்து சேர்ந்தது.

புதுகை வலைப்பதிவர் விழாவில் நண்பர் கரந்தை ஜெயகுமார் வெளியிட்ட “வித்தகர்கள்” நூலை தனது அன்புப்பரிசாக எனக்கு அளித்தார். விழா முடிந்து என் சகோதரி வீட்டிற்கு வந்து வேலூர் புறப்படும் முன்பே அந்த நூலை படித்து முடித்து விட்டேன். ஐந்து முக்கிய மனிதர்கள் பற்றிய அறிமுகம் அந்த நூல்.

திருக்குறளும் தமிழுமே தன் வாழ்வாய் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு புலவர் இரா.இளங்குமரனார் நம்மை அதிசயிக்க வைக்கிறார். திருக்குறளுக்கு கோயில், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை தமிழ் வழியில் நடத்தியது, 25,000 க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் கொண்ட பாவாணர் நூலகம் என அனைத்து தகவல்களும் புலவர் அவர்களை ஒரு சிறப்பான மனிதராக சித்தரிக்கிறது.

“இடப் பிரச்சினை காரணமாக புத்தகங்கள் வாங்கவில்லையா? இங்கே பார் ஒரு புத்தகக் காதலரை!” என்று என்னை இடித்துரைத்தது புதுக்கோட்டை திரு ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றிய கட்டுரை. வாழ்வும் சுவாசமும் புத்தகங்கள் மட்டுமே என்று வாழ்ந்து வரும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றி படிக்க பிரமிப்பாக இருந்தது. அது மட்டுமல்ல அவரது மனைவி திருமதி டோரதி அவர்களும் ஒரு புத்தகக் காதல் என்பதும் அவர்களை வாழ்வில் ஒன்றிணைத்ததும் புத்தகங்களே என்ற தகவலும் சுவாரஸ்யமானது.

ஐவரில் ஒருவர் திரு கர்னல் கணேசனை பதிவர் விழாவிற்கு வந்தவர்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும். தென் துருவமான ஆர்டிக் பிரதேசத்தில் இந்திய அரசின் சார்பில் நடத்தப்பட்ட தட்சின் கங்கோத்ரி ஆய்வு மையத்தின் தலைவராக இருந்து பெருமை சேர்த்த தமிழரைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். ஒவ்வொரு வருடமும் வெண்மணி பயணம் மேற்கொள்கிறபோது அவரது ஊரான சன்னாநல்லூர் வழியாகத்தான் செல்வோம். ஆனால் அங்கே ஆர்டிக் பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பழமையான பாறை கொண்டு அமைக்கப்பட்ட பூங்கா உள்ளது என்பதை இப்போதுதான் அறிந்து கொண்டேன். இந்த வருடம் வெண்மணி அஞ்சலி முடிந்து திரும்பி வரும் வழியில் சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்கா பார்த்து வர உத்தேசித்துள்ளேன். எனக்கும் மற்ற தோழர்களும் நல்லதொரு அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பிறப்பில் ஏற்பட்ட குறைபாட்டை தன் முயற்சியால் வெற்றி கொண்ட இளைஞர் வெற்றிவேல் முருகன் பற்றி முதல் முறையாக இந்த நூல் மூலம்தான் கேள்விப்படுகிறேன். பார்வைத் திறன் இல்லாத குறைபாட்டை தனது கடினமான உழைப்பின் மூலம் சந்தித்து அமெரிக்காவில் டாக்டரேட் பெற்ற இவர் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார். அவர்கள் பயன்படுத்தும் பல உத்திகள் பற்றியும் நண்பர் ஜெயகுமார் விரிவாக எழுதியுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்காக மற்ற மாநிலங்கள் செய்யும் உதவிகளில் சிறுபகுதி கூட தமிழக அரசு செய்வதில்லை என்ற ஆதங்கத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடித் தாக்குதல் நடத்துகிற அரசல்லவா இது? அது மட்டுமா விழியிழந்தோர் ஒரு போராட்டம் நடத்துகையில் அவர்கள் மீது தடியடி நடத்தியது மட்டுமன்றி கைது செய்து ஒரு முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் அத்துவானக்காட்டில் இறக்கி விட்டு தவிக்கவிட்ட மனிதாபிமானிகள்தானே நமது காவல்துறை!

வழக்கறிஞர் சிங்காரவேலன் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். அவருடைய எளிமையான குணங்கள் பற்றி இந்த நூலின் மூலம்தான் அறிய முடிந்தது. எல்.ஐ.சி யில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி பணி நீக்கம் செய்யப் பட்டவர்களின் வழக்கு பற்றி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பற்றி கூடுதல் விபரம் சொல்ல வேண்டும்.

நிரந்தரப் பணி நியமனம் செய்யாமல் தற்காலிக ஊழியர்களைக் கொண்டு காலம் தள்ளும் போக்கு எல்.ஐ.சி நிறுவனத்தில் நிலவிய போது எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், தேசிய தொழிலாளர் தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றது. அதன்படி 20.05.1985 வரை தற்காலிகமாக பணி செய்தவர்களுக்கு நிரந்தரப் பணி கிடைத்தது. மூன்றாம் பிரிவு பணிகளில் எண்பத்தி ஐந்து நாட்களும் நான்காம் பிரிவு பணிகளில் எழுபது நாட்களும் பணி புரிந்தவர்களுக்கு வேலை கிடைத்தது. நிரந்தரப் பணியாளர்களுக்குப் பதிலாக எண்பத்தி ஐந்து நாட்களிலும் எழுபது நாட்களிலும் ஊழியர்களை மாற்றிக் கொண்டே இருந்ததால் தற்காலிகமாக பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விட்டது. நிரந்த பணி நியமனம் செய்ய முடியாமைக்கு பல நீதிமன்ற வழக்குகளும் கூட ஒரு காரணம். ஆனால் நிர்வாகத்தின் மெத்தனத்திற்கு அவர்கள் விலை கொடுக்க வேண்டியிருந்தது.

20.05.1985 க்குப் பிறகு பணியாற்றியவர்களுக்காக மத்தியரசு தொழிலாளர் தீர்ப்பாணையத்தில் இன்னொரு வழக்கு தொடுக்கப்பட்டு அதுவும் தற்காலிக ஊழியர்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் டெல்லி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பாணையத் தீர்ப்பை ரத்து செய்து விட்டது. இப்போது உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மத்தியரசு தொழிலாளர் தீர்ப்பாணையம் அளித்த உத்தரவு செல்லும் என்று சொல்லி விட்டது. 20.05.1985 முதல் 04.03.1991 வரை தற்காலிகமாக பணியாற்றியவர்களிடம் இருந்து நிர்வாகம் விண்ணப்பங்களை பெற்று பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. ஆக சமீபத்திய உச்சநீதி மன்ற தீர்ப்பிற்கு அடிப்படையான  தேசிய தொழிலாளர் தீர்ப்பாணைய, மத்தியரசு தொழிலாளர் தீர்ப்பாணைய உத்தரவுக்களை பெற்றுக் கொடுத்தது எங்கள் சங்கம் என்பதில் எனக்கு ஒரு பெருமை. அதே போல நான்காம் பிரிவு பணிகளில் தினக்கூலி ஊழியர்களாக ஐந்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஐயாயிரம் பேருக்கு உச்ச நீதி மன்ற வழக்கு மூலம் நிரந்தரப் பணி வாங்கிக் கொடுத்த பெருமையும் எங்கள் சங்கத்திற்கு உண்டு. 2012 ம் ஆண்டு சார்பணியாளராக சேர்ந்த அவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது பதிவு எழுத்தராக பதவி உயர்வும் பெற்று விட்டார்கள்.

இவை அத்தனையும் ஃப்ளாஷ் பேக் மூலமாக ஒரு நிமிடத்தில் நினைவிற்கு வந்ததால் உங்களோடும் அவற்றை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

புத்தகத்தின் அட்டை அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் நான் அவசியம் சொல்ல வேண்டும்.


அருமையான இந்த புத்தகத்தை அளித்த நண்பர் கரந்தை ஜெயகுமார் அவர்களுக்கு அன்பும் நன்றியும். நூல் வெளியீட்டு விழாவில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டது சிறப்பு.

வலைப்பதிவர் விழாவில் கிடைத்த இன்னொரு அன்புப்பரிசு பற்றி நாளை.

பாகிஸ்தானில் அல்ல பட்டாசு, இங்கேதான்




பாஜக வை தோல்வி பயம் கவ்விக் கொண்டிருக்கிறது. மோடியின் மோசடி வித்தைகள் பீகாரில் எடுபடாது என்ற அச்சத்தில் வெறியூட்டும் பேச்சுக்களை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லீம்களுக்காக இதர பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை பறிக்கப் போகிறார்கள் என்று மோடி கிளப்பிய பீதியை யாரும் கண்டு கொள்ளவில்லை.

அதனால் நேற்று அமித் ஷா பேசுகையில் "இங்கே பாஜக அரசு அமையாவிட்டால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். அப்படி ஒரு நிலையை ஏற்படுத்துவீர்களா?" என்று சம்பந்தமே இல்லாமல் பாகிஸ்தானை பீகார் தேர்தலில் இழுத்துள்ளார். 

அமித் ஷா விற்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

பீகாரில் உங்கள் ஆட்சி அமையாவிட்டால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்களா என்று எனக்கு தெரியாது. இங்கே நாங்கள் இந்தியாவில் ஜனநாயகத்தை  நேசிக்கிற, மக்களை நேசிக்கிற, ஒற்றுமையை விரும்புகிற, அமைதியை நாடுகிற அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவோம். 

பீகாரில் உங்களுக்கு கிடைக்கும் பின்னடைவு உங்களின் தோல்வியின் துவக்கம்.

இந்தியாவிற்கு தேவைப்படுகிற நல்லதொரு மாற்றத்தின் அடையாளம்.

ஆகவே நாங்கள் கண்டிப்பாக பட்டாசு வெடித்து கொண்டாடுவோம்.

Thursday, October 29, 2015

காளை மாடு ஓகேயா? ஒரு டவுட்டு



மாட்டுக்கறி கூடாது என்று காக்கி டவுசர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். புது டெல்லியில்  உள்ள கேரளா இல்லத்தில் சோதனை போட்டு மூக்கை உடைத்துக் கொண்டார்கள். அங்கே உள்ளது எருமை மாட்டின் கறி என்று சொல்லி அசடு வழிந்தார்கள்.

எனக்கு ஒரு டவுட்டு.

மாட்டுக் கறி கூடாது என்று சொல்பவர்கள் பசு என்பது கோமாதா. "கோமாதா எங்கள் குலமாத" என்று ஏ.பி,என் படப்பாடலையெல்லாம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால்

பசு மாட்டை உண்ணக் கூடாது என்றால் காளை மாட்டுக் கறியை சாப்பிடலாமா? ஏனென்றால் பசு வதை கூடாது என்றுதான் சொல்கிறார்களே தவிர, காளை வதை பற்றி எதுவும் பேசுவதில்லை. 

இல்லை காளை என்றால் சாதாரணமில்லை. அது சிவனின் வாகனம், ரிஷப தேவர், நந்தி தேவர் என்று அதற்கும் கதை கண்டு பிடிப்பீர்களா?

சரி காளை மாட்டுக்கறி உங்களுக்கு பிரச்சினை இல்லையென்றால் எது பசு மாட்டுக்கறி, எது காளை மாட்டுக்கறி என்று எப்படி கண்டுபிடித்து பிரச்சினை  செய்வீர்கள்?

சரி எருமை மாடு மட்டும் என்ன பாவம் செய்தது? எருமை மாடு பால் தருவதில்லையா? எருமை மாட்டுப் பாலில் சத்து கிடையாதா? உங்கள் புராணங்கள்படியே தர்மத்தை நிலைநாட்டுகிற தர்மதேவனான எமதர்மனின் வாகனமாயிற்றே எருமை. அதை தின்றால் பாபமில்லை என்று சொல்கிறீர்களே?  இல்லை தர்மத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையென்பதால் எருமை வதையை கண்டு கொள்வதில்லையா? 

சொல்லுங்க பாய்ஸ், சொல்லுங்க 

Wednesday, October 28, 2015

சதாப்தி எக்ஸ்பிரஸ் - முடியல


இன்று சென்னை சென்றிருந்தேன். கடந்த முறை கோயம்பேட்டில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பஸ் கிடைக்காமல் அவஸ்தைப் பட்ட அனுபவத்தால் இந்த முறை ரயில் செல்ல முன்பதிவு செய்திருந்தேன். திரும்பி வரும் போது சதாப்தி எக்ஸ்பிரஸில்தான் முன்பதிவு கிடைத்தது. சதாப்தியில் பயணம் செய்வது இதுதான் முதல் முறை.

மிகச் சரியாக சென்னையில் 05.30 மணிக்கு புறப்பட்ட மூன்றாவது நிமிடம் தண்ணீர் பாட்டில் வந்தது. அடுத்த பத்தாவது நிமிடம் ஒரு தட்டு கொண்டு வந்து கொடுத்தார்கள். அதிலே ஒரு துண்டு அல்வா, ஒரு மிக்ஸர்  பாக்கெட், ஒரு சமூசா, பிரெட் சாண்ட்விச் இருந்தது. அதிலே அல்வாவையும் சமூசாவையும் சாப்பிட்டு விட்டு மற்றதை பையில் வைத்துக் கொண்டேன்.

இது முடிந்து பத்து நிமிடத்திற்குப் பிறகு காபியும், டீயும் வந்தது. ரயிலில் காபியோ டீயோ சாப்பிடுவதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருப்பதால் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.  அடுத்து ஒரு இருபத்தி ஐந்து நிமிடம் இருக்கும், தக்காளி சூப் சீட் சீட்டாக வந்தது. அதையும் வேண்டாம் என்று நான் சொல்லி விட்டு அக்கம்பக்கம் பார்த்தேன். என் இரு புறமும் உட்கார்ந்திருந்தவர்கள், வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். 

சரி, நம்மால்தான் முடியலை. அவர்களாவது வீண் செய்யவில்லையே என்று தோன்றியது. 

நல்ல வேளை, அடுத்த உணவு வருவதற்குள் காட்பாடி வந்து விட்டது. இறங்கும் முன்பு கவனித்தேன்.

தட்டுக்களில் ஏதோ அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

பின் குறிப்பு : அதிசயிக்கக் கூடிய விதத்தில் அல்வா, சமூசா, பிரெட் சாண்ட்விச் (வீட்டிற்கு வந்து சாப்பிட்டேன் என்பதை சொல்லாவிட்டால் யாராவது அனானி விளக்கம் கேட்பாரல்லவா?) எல்லாமே நன்றாக இருந்தது.

ஒளி வீசும் இந்தியா, துன்பத்தில் உழலும் இந்தியா என்று இரண்டு இந்தியா இருப்பது போல சதாப்திக்கு ஒரு உணவு, சாதாரண ரயிலுக்கு ஒரு உணவு போல. 

Tuesday, October 27, 2015

மகாத்மாவால் பாராட்டப்பட்ட பார்வைத்திறனற்ற வழக்கறிஞர்





இன்றைய தீக்கதிர் நாளிதழில் வந்த அற்புதமான ஒரு கட்டுரை. இப்படி ஒரு மாமனிதர் வாழ்ந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளவில்லையே என்று வெட்கமாகக் கூட இருக்கிறது. இப்போதுதான் இக்கட்டுரையை வாசித்தேன். உடனடியாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அவசியம் முழுமையாக படியுங்கள்

  சதன்குப்தாவின் பன்முகப்பார்வை
 

சாதனைகளுக்கு ஊனம் தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டிய தோழர் சதன் குப்தா கடந்த மாதம் கொல்கத்தாவில் மரணமடைந்தார். ஊனமுற்றோர் உரிமைகளுக்கான அகில இந்திய மேடையின் நிர்வாகக்குழு உறுப்பினர் மேற்குவங்கத்தை சேர்ந்த பார்வையற்ற தோழர் அனிர்பன் முகர்ஜி, உரிமைக்குரல் இதழுக்காக எழுதிய கட்டுரை யின் மொழியாக்கம்.இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பார்வையற்ற முதல் எம்.பி..!மேற்கு வங்க அரசின் தலைமை வழக்குரைஞர்... பார்வையற்றோர் கூட்டமைப்பை(சூகுக்ஷ) உருவாக்கியவர்களில் முதன்மையானவர்.. மேற்கு வங்கத்தில் மாற்றுத்திறனாளி இயக்கங்களுக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்தவர்.. இடதுசாரி இயக்கத்தின் முன்னோடி.. மாணவர் சங்கத்தலைவர்.. தொழிற்சங்கத் தலைவர்.. என அடுக்கடுக்கான பொறுப்புகளுக்குச் சொந்தக்காரர் சதன் குப்தா.. தன்னுடைய இறுதி மூச்சு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் செயல் பட்டவர். 

கடந்த செப்.19 அன்று 98-வது வயதில் கொல்கத்தாவில் தன்னுடைய இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். தற்போதைய வங்கதேச தலைநகராக விளங்கும் டாக்காவில் 1917 நவம்பர் 7-இல் அதாவது ரஷ்ய புரட்சி வெற்றி பெற்ற தினத்தன்று பிறந்தவர் சதன் குப்தா.அவருடைய தந்தை ஜோகேஷ் சந்திர குப்தா பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சிறந்த வழக்குரைஞராகவும், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராகவும் விளங்கியவர். ஒன்றரை வயதில் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு முழுமையாக பார்வையை இழந்த குழந்தை சதன் குப்தாவை பரிவோடு பாதுகாத்து வளர்த்தார் தாய் உஷா குப்தா

நாடாளுமன்ற-சட்டமன்றங்களில்

கொல்கத்தா பார்வையற்றோர் பள்ளியில் ஆரம்பக் கல்வி. பள்ளி இறுதித் தேர் வில் பத்து முதன்மையான மாணவர்களில் ஒருவராகத் தேர்ச்சி. கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் பொருளியல் படிப்பில் முதுகலைப் பட்டம். கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் சட்ட படிப்பு. பின்னர் பாரிஸ்ட்டர் பட்டம் பெற்று 1942 செப்.14 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பணி. அவருடைய சாதனைப் பட்டியல் மிகநீண்டது. 1944-இல் மஞ்சரி தாஸ் குப்தாஎன்ற வழக்கறிஞரை திருமணம் செய்தார். மஞ்சரி தாசும் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் சிறந்த வழக்குரைஞராகத் திகழ்ந்தார். கல்லூரி படிப்பின்போது இடதுசாரி மாணவர் இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட சதன் குப்தா, அப்போதைய வங்க மாகாண மாணவர் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். நாடு முழுவதும் ஆங்கிலேயரின் அடக்குமுறை கடுமையாக இருந்த 1939ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் ஆனார். ஆங் கிலேயரை எதிர்த்த போராட்டத்திலும் கட்சிப் பணிகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் சதன் குப்தா. நாடு குடியரசு ஆனதும் முதலாவது பொதுத் தேர்தல் வந்தது. அதில் கொல்கத்தா தென் கிழக்கு நாடாளுமன்ற தொகுதியில் ஜனசங்க ஸ்தாபகர் ஷியாமபிரசாத் முகர்ஜியை எதிர்த்து சதன் குப்தாவை வேட்பாளராக நிறுத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அத்தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தபோதும், ஷியாமபிரசாத் முகர்ஜியின் மறைவை அடுத்து நடை பெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார் சதன் குப்தா. இம்முறை காங்கிரஸ் வேட்பாளரும் மிகப்பெரிய சட்ட நிபுணராகவும் திகழ்ந்த ராதா பினோத் பால் என்பவரை தோற்கடித்து வெற்றி பெற்றார் சதன்குப்தா. அதன் மூலம் இந்திய குடியரசின் நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பார்வையற்ற உறுப்பினர் என்றபெருமையோடு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். 1957-இல் மீண்டும் வெற்றிபெற்று 1962 ஆம் ஆண்டு வரை சிறந்த நாடாளுமன்றவாதியாக ஜொலித்தார் சதன் குப்தா.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு தன்னை உறுதியாக இணைத்துக் கொண்டார் சதன் குப்தா. 1969 ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் கொல்கத்தாவில் உள்ள காளிகட் சட்டமன்ற தொகுதி வேட்பாள ராக சதன் குப்தாவை நிறுத்தியது மார்க் சிஸ்ட் கட்சி. அதில் வெற்றி பெற்று மேற்குவங்க சட்டமன்றத்துக்குள் நுழைந்த முதல்பார்வையற்ற உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றார். மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு 13 மாதங்களில் அந்த சட்டமன்றத்தை எதேச்சதிகாரமாக கலைத்தது. அதுவரை சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றினார் சதன் குப்தா.

தொழிலாளர்களின் தோழன்

ஐடிசி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சதன் குப்தா தொழி லாளிகளின் அன்புக்குரிய தோழனாகவும் விளங்கினார்.நாடாளுமன்றப் பணியோடு, அவரு டைய வாதத் திறமையின் காரணமாக பலமாநிலங்களில் நடைபெற்ற முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதாட வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார் சதன் குப்தா. இதனால், அவருடைய வழக்குரைஞர் பணி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தோடு மட்டுமல்லாமல், ஸ்ரீநகர், ஜோத்பூர், ஜெய்பூர், பாட்னா, அலகாபாத், கட்டாக், ஜாம்ஷெட்பூர், ஜபல்பூர் நகர்களுக்கும், அப்போதைய கிழக்கு பாகிஸ்தானின் சிட்ட காங் நகருக்கும் விரிவடைந்தன. ஒரு வழக்குரைஞர் என்ற முறையில் அவருடைய பணி மிக முக்கியத்துவம் வாய்ந்த தாக இருந்தது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காக சதன் குப்தா வாதாடாத வழக்குகளே இல்லை என்று சொல்லலாம். அதோடு மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் மனித உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கும் வகையில் நாடு முழுவதும் பலநீதிமன்றங்களில் வந்த பல வழக்கு களுக்கு எதிராகவும் அவர் ஆஜராகி வாதாடினார். கிழக்கு இரயில்வேயில் மின்மயமாக் கும் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை எந்த அறிவிப்பும் இன்றி நிர்வாகம் பணிநீக்கம் செய்ததை எதிர்த்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நீதி மன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றார்.மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் உள் ளிட்ட மாநிலங்களில் இரயில்வே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளை நிர்வாகம் பழிவாங்கியதை எதிர்த்து வாதிட்டு வெற்றிபெற்றதும் குறிப்பிடத் தக்கது. 

காந்திஜியின் வாழ்த்து

இந்திய பாதுகாப்புச் சட்டம், உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் ஆகிய கொடூரச் சட்டங்களை பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எந்த விசாரணையும் இன்றி சிறையில் தள்ளிக் கொண்டிருந்தது அன்றைய ஆங்கிலேயர் ஆட்சி. இப்படி பாதிக்கப்பட்ட ஷிப்நாத் பானர்ஜி என்ற விடுதலை வீரருக்கு ஆதரவாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றார்சதன் குப்தா. பின்னாளில் இது ஒரு பிர சித்திபெற்ற வழக்காக கருதப்பட்டது. காரணம், சதன் குப்தாவின் திருமணத்தை வாழ்த்தி அவருடைய தந்தை ஜோ கேஷ் சந்திர குப்தாவிற்கு மகாத்மா காந்திஅனுப்பிய கடிதத்தில்.. “ஆங்கிலேயர் களின் கொடுங்கோல் சட்டங்களினால் பாதிக்கப்பட்ட ஷிப்நாத் பானர்ஜிக்கு ஆதரவாக ஒரு பார்வையற்ற இளைஞன் வாதாடி னான் என்பதை அறிந்தேன். வழக்கு ஆவணங்களையும் சில மாதங்களுக்கு முன்புதான் பார்த்தேன். அந்த பார்வை யற்ற இளம் வழக்கறிஞரின் வாதத் திறமைகளை அறிந்து ஆச்சரியப்பட்டேன். அந்த பார்வையற்ற இளம் வழக்கறிஞர் உங்களுடைய மகன் என்பதை நான் ஒருபோதும்அறிந்திருக்கவில்லை. தற்போது அதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் மகனுக்கும், அவரை மணமகனாக தேர்வுசெய்த மணமகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவியுங்கள்” என காந்தியடிகள் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

1977-இல் மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் பெரும் வீச்சில் நிலச்சீர் திருத்தத்தை அமல்படுத்த துவங்கியது இடது முன்னணி அரசு. உச்சவரம்புச் சட்டத்தைப் பயன்படுத்தி, பெரும் நிலச் சுவான்தார்களிடம் அளவுக்கு அதிகமாக இருந்த நிலங்களைப் பறித்து நிலமற்ற கிராமப்புற ஏழைகளுக்கு வழங்கும் உன் னதப் பணியை மேற்கொண்டது இடது முன்னணி அரசு. இது இடது முன்னணி அரசுக்குநாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. ஆனால், நில உடமையாளர்கள் பலர் அரசின் இந்த நடவடிக் கையை எதிர்த்தனர். அனுதாபம் தேடி நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்தனர். அந்த வழக்குகளை எதிர்கொள்ள கூடு தல் அரசு வழக்குரைஞராக சதன் குப்தா வை இடது முன்னணி அரசு நியமித்தது. சதன் குப்தா இடது முன்னணி அரசின் நிலச்சீர்திருத்தச் சட்டத்தை ஆதரித்துவாதாடி நிலச்சுவான்தார்கள் தொடுத்தவழக்குகள் அனைத்தையும் தோற்கடித்தார். சதன் குப்தாவின் திறமையைக் கண்டுஅவரை 1986 ஆம் ஆண்டுமேற்கு வங்க அரசின் தலைமை வழக்கறிஞராக நியமித்தது. இதன் மூலம் இப்படிப் பட்ட பதவியை பெற்ற முதல் பார்வையற்றவர் என்ற பெருமையையும் சதன் குப்தா பெற்றார்.

சமூகம் மற்றும் கல்விப் பணி

ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான இயக்கங்களிலும் ஈடுபட்டு பிரகாசித்தார். தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பின் (சூகுக்ஷ) ஸ்தாபகத் தலைவராக அவர் விளங்கினார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் இந்திய பிராந்தியத் தலைவராகவும்அவர் செயல்பட்டார். மாற்றுத்திறனாளிகள் அடங்கிய தூதுக்குழுவோடு சோவியத் யூனியனிலும் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு கல்வி கற்றுக்கொடுத்த கொல்கத்தா பார்வையற்றோர் பள்ளி, கொல்கத்தா காதுகேளாதோர் பள்ளி ஆகியவற்றின் நிர்வாகக்குழுத் தலைவராக பின்னாளில் சதன் குப்தா விளங்கினார். பத்வான் பவன் மாண்டிசோரி பள்ளி யின் தலைவராக பல ஆண்டுகள் செய லாற்றினார்.அவருடைய மறைவு நம் அனைவருக்கும், நாட்டிற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஈடற்ற பேரிழப்பாகும். அவர் ஒரு சகாப்தம்.

தமிழில்: எஸ். நம்புராஜன்

நன்றி - தீக்கதிர்  27.10.2015