Showing posts with label மே தினம். Show all posts
Showing posts with label மே தினம். Show all posts

Wednesday, April 30, 2025

உங்களின் தியாகமே எங்களுக்கான உரமாக . . .

 





சூரியன் உதிப்பதும் தெரியாமல் அஸ்தமிப்பதும் தெரியாமல் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளான தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை வேண்டும் என்று கேட்டார்கள். பேரணியாய் திரண்டு கேட்டார்கள். முதலாளிகளால் முதலாளிகளுக்காக நடத்தப்படும் முதலாளிகள் அரசால் இந்த கோரிக்கை வைக்கப்படுவதையே சகிக்க முடியவில்லை.

 சிக்காகோ ஹே மார்க்கெட் சதுக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில்  இன்றும் ஏவல் துறையாகவே செயல்படும் காவல் துறை குண்டாந்தடிகளால் தாக்கியது. துப்பாக்கியால் தோட்டாக்களை உமிழ்ந்தது. கொலை வெறி அடங்காததால் தலைமை தாங்கியவர்களை தூக்கிலிட்டு குரல் வளையை நெறித்தது.

 அந்த தியாகிகளின் நினைவைப் போற்றத்தான் உலகத் தொழிலாளர்கள் எல்லோருமே மே தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

 தோழர்களே உங்கள் தியாகம்தான் பல முன்னேற்றங்களை உழைப்பாளி வர்க்கம் அடைய அடி உரமாக இருந்தது.

 உயிரைக் கொடுத்து நீங்கள் நடத்திய போராட்டம்தான் உரிமைக்குரல் எழுப்ப உற்சாகம் தருகிறது.

 லாப வெறியில் தகிக்கும் முதலாளிகளின் வெறி இன்னும் அடங்கவில்லை. வாரத்திற்கு நூறு மணி நேரம் வேலை செய், மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் பார்ப்பாய் என்றெல்லாம் உபதேசிக்கிறது.

 முதலாளிகளின் விசுவாசிகளாகவே ஆட்சிகளும் இருக்கிறது. போராட்டங்களை ஒடுக்க காவல் துறையை ஏவி விடும் போக்கு அப்படியே தொடர்கிறது.

 நீங்கள் சென்ற வழியில் போராட்டப்பாதையில் உழைப்பாளி மக்களின் உரிமை காக்க உறுதியோடு செயல்படுவோம் என்று மே தின சூளுரை ஏற்கிறோம்.

 மே தினம் வெல்க, மே தினத் தியாகிகளுக்கு செவ்வணக்கம்.

அனைவருக்கும் புரட்சிகர மே தின வாழ்த்துக்கள்

 



Wednesday, May 1, 2024

எதிரிகளையும் துரோகிகளையும் முறியடித்து


 
எதிரிகள் நேரில் மோதுவர்,
துரோகிகள் முதுகில் குத்துவர்,
கோழைகளாய் சிலர் பதுங்கிக் கொள்வர்,
நமக்கென்ன என சிலர் ஒதுங்கிக் கொள்வர்,
சமரசம் செய்து கொள்ள சிலர் உபதேசம் செய்வர்,
தவறுகளுக்கு சிலர் சாமரம் வீசுவர்.
அத்தனையையும் தாண்டி
அனைத்தையும் சந்தித்து
உழைப்பாளி வர்க்கம் என்றும் முன்னேறும்.

புரட்சிகர மே தின வாழ்த்துக்கள். 


Monday, May 1, 2023

போலீஸை செங்கொடி தூக்க வைத்தவர்

 

தலைமை ஆசிரியர் தோழர் இரா.எட்வின் அவர்களின் முகநூல் பதிவு



முப்பது ஆண்டுகளுக்குமேல் இருக்கும்.
தோழர் ராஜாமணி எழுதிய “ ஆஷர்மில் பழநிச்சாமி” என்ற சிறிய நூலினை கையில் திணித்த அண்ணன் நந்தலாலா,.
“ இந்த மாத சோலைக் குயில்களுக்கு இது பற்றி எழுது”
அப்போது திருச்சி த.மு.எ.ச விலிருந்து சோலைக் குயில்கள் என்றொரு கவிதை இதழை மாதா மாதம் கொண்டு வந்து கொண்டிருந்தோம்.
ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமைகளிலும் திருச்சி பழக்கடை பூங்காவில் ஒரு பதினைந்து இருபது பேர் கூடிவிடுவோம். நான், நந்தலாலா, புதிய கம்பன், பொன்னிதாசன், அண்ணன் முகில், முகவை அழகுடையான் போன்றோர் ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாது பங்கேற்போம்.
எல்லோரும் கவிதை வாசிப்போம். வர இயலாதவர்கள் எங்களில் யாருக்கேனும் கவிதைகளை அனுப்பி வைப்பார்கள். அதையும் அங்கே வாசிப்போம். மனுஷ்யப் புத்திரன் கவிதைகளும் அங்கே அந்த காலத்தில் வாசிக்கப் பட்டதுண்டு.
கவிதை வாசிப்பு முடிந்ததும் எல்லோருடைய கவிதைகளையும் அண்ணன் முகில் சேகரிப்பார். பிறகு ஒரு நாள் அவரது வீட்டில் ஆசிரியர் குழு கூட்டம் நடக்கும். வந்துள்ள கவிதைகளில் இருந்து சினிமா பாட்டுப் புத்தகம் அளவில் வரும் சோலைக் குயில்கள் தயாரிப்போம்.
அந்த இதழுக்குத்தான் அண்ணன் விமர்சனம் கேட்டார்.
கல்லூரியில் எங்கோ படித்துக் கொண்டிருந்த நேரம். பழநிச்சாமி ஆஷர் மில்லின் உரிமையாளர் போலும் என்கிற சராசரிப் புரிதலைத் தவிர வேறு எதுவும் ஆஷர்மில் பழநிச்சாமியைப் பற்றிஅந்தப் புள்ளியில் என்னிடமில்லை.
உள்ளே போகப் போகத்தான் விரிந்தது பிரமிப்பு. பழநிச்சாமி அந்த ஆலையில் பணியாற்றிய ஊழியர். தொழிற்சங்கத்தின் தலைவர்.
உரிமையாளார் பெயரோடு பொருத்திப் பேசப் படாத அந்த ஆலையின் பெயர் ஒரு ஊழியனோடு பொருத்திப் பேசப் படுகிறதென்பது அந்தக் காலத்தில் என்னை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
பொதுவாக தொழிற் சங்கத் தலைவர்கள் என்றால் வறட்டுத் தனமாக மோதும் குணம் கொண்டவர்கள் என்று என்னுள் செழித்து வளர்ந்திருந்த பிம்பத்தை அது சுக்கல் சுக்கலாக கிழித்துப் போட்டது.
அதில் வரும் ஒரு சம்பவம் தொழிற்சங்கத் தலைவர்கள் எவ்வளவு நெளிவு சுழிவுடன் எதையும் வென்றெடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.
அப்போது இடதுசாரி இயக்கங்களும் தொழிற்சங்கங்களும் தடை செய்யப் பட்டிருந்த நேரம். பழநிச்சாமியின் தலைக்கு பத்தாயிரம் ரூபாய் அரசாங்கம் விலை வைத்திருந்த நேரம்.
திருப்பூர் பகுதியில் தலைமறைவு வாழ்க்கை. மே தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று அந்த நிலையிலும் அவருக்கு ஆசை.
எல்லோரும் அசந்து உறங்கிய முந்தைய இரவில் மாறு வேடத்தில் வந்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே மே தின வாழ்த்து சொன்ன ஒரு தட்டியை கட்டுகிறார்.
அடுத்த நாள் அங்கே ஒரு பெரும் திரள் கூடுகிறது. மாறு வேடத்தில் பழநிச்சாமியும் அங்கே இருக்கிறார். தட்டியை அகற்ற எத்தனித்த காவலர்கள் பின் வாங்குகிறார்கள். தட்டியின் கீழ் மூலையில் களி மண்ணால் வெடி போன்று செய்து கருப்புத் துணியால் சுற்றி திரி இணைத்து கட்டியிருந்தார்.
அதற்கு கீழே “தோழர்கள் தொட வேண்டாம். தொடும் துரோகிகள் அழியட்டும்” என்று எழுதியிருந்தார்.
எந்தக் காவலர் நெருங்குவார்.
அப்போது ஒரு ரயில் வருகிறது.
மாறு வேடத்தில் இருந்த பழநி சொல்கிறார்,
“ ரயில் வந்தால் அதிர்ச்சியில் வெடித்துவிடும் வெடி”
“ என்ன செய்யலாம்?”
“ரயிலை நிறுத்துங்கள்”
“எப்படி?”
“இந்தக் கொடிகளைக் காட்டுங்கள்”
தயாராய் வைத்திருந்த சிவப்புக் கொடிகளைத் தருகிறார்.
காவலர்கள் சிவப்புக் கொடிகளோடு ரயிலை நிறுத்த ஓடுகிறார்கள்.
சிரிக்கிறார் பழநிச்சாமி.
எந்தக் காவலர்கள் செங்கொடியை அழித்துவிட கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் கைகளிலேயே செங்கொடிகள்.
அவரது புன்னகை எவ்வளவு உன்னதமானது.
மேதின வாழ்த்துகள்

பிகு : இணையத்தில் தேடிய போது தோழர் பழனிச்சாமியின் படம் கிடைக்கவில்லை. அவரது நினைவு நாளை திருப்பூர் மார்க்ஸிஸ்ட் கட்சி அனுசரித்த போது எடுத்த படம்தான் கிடைத்தது.


Monday, May 2, 2022

அயோக்கியத்தனமென்பது இதுதான் . . .

 


சங்கிகள் மே தினத்தை உழைப்பாளர்கள் தினமாக ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். அவர்களின் கற்பனை கதாபாத்திரம் விஸ்வகர்மாவின் பிறந்த நாள்தான் அவர்களுக்கு தொழிலாளர்கள் தினம். அதை ஒவ்வொரு வருடம் மே தினத்தன்றும் சங்கிப் பாம்புகள் விஷமாய்க் கக்கும்.

அப்படி இருக்கையில் இப்படி ஒரு படத்தை போட்டுள்ளார்கள்.



தொழிலாளர்களின் ரத்த்த்தை உரிஞ்சும் முதலாளிகளின் புரோக்கர்கள் பெயரை இணைப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

இப்படி எல்லாம் படம் போட காவிக்கயவர்களே உங்களுக்கு வெட்கமே கிடையாதா?

Sunday, May 1, 2022

உரிமைக்காக உயிர் கொடுத்த . . .

 

எட்டு மணி நேர வேலை எனும் உரிமையைக் கோரி அதற்காக உயிர் நீத்த சிக்காகோ நகர் தியாகிகளுக்கு வீர வணக்கம்.

அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.

தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் பகிர்ந்து கொள்ள கவிஞர் தமிழ் ஒளியின் கவிதை கீழே





கோழிக்கு முன்னெழுந்து
கொத்தடிமை போலுழைத்துப்
பாடுபட்ட ஏழைமுகம்
பார்த்துப் பதைபதைத்து
கண்ணீர் துடைக்க வந்த காலமே வருக !
மண்ணை , இரும்பை மரத்தைப் பொருளாக்கி
விண்ணின் மழையிறக்கி
மேதினிக்கு நீர் பாய்ச்சி
வாழ்க்கைப் பயிருட்டு
வாழ்ந்த தொழிலாளி
கையில் விலங்கிட்டுக் காலமெல்லாம் கொள்ளையிட்ட
பொய்யர் குலம் நடுங்க
பொங்கி வந்த மேதினமே

அமெரிக்க மாநகரில்
அன்றொரு நாள்
மக்கள் குமுறியெழுந்து
குருதியெலாம் சிந்தியதால்
வான் சிவந்து
மண் சிவந்து
மாகடலும் தான்சிவந்து
ஊன் சிவந்து வந்தாய்
உயிர் சிவந்த செந்தினமே !
உன் கொடியைப் போற்ற
உயிர்விட்டார் அந்நாளில்.
வன் கொடியர்
மாய வழிகண்டா ராதலினால்,
வாழ்கின்றார் இன்றும் ;
வளர்கின்றார் நாள் முழுதும்
சூழ்கின்றார் வானில் ;
சுடர்கின்றார் நீ வருக !
கண்ணின் கருமணியே ,
காசினிக்கும் மாமணியே ,
கண்ணீர் துடைக்கவரும் காலமே
நீ வருக !
அன்னை ஒருத்தியதோ
அங்கே நெடுந்தொலைவில்
தன் மகனைத் தூக்கேற்றி
கொல்லும் சதிகாரர்
வஞ்சமெண்ணி அஞ்சுகிறாள்
வாராய் மணிவிளக்கே !
அன்னவள்தன் நெஞ்சத்தின்
ஆறுதலே வாராய் நீ !
தூக்குக் கயிற்றைத்
துச்சமென எண்ணுமகன்
கண்ணில் ,உள்ளத்தில்
களிப்பேற்ற வாராய் நீ !
உலகத் தொழிலாளர் ஒற்றுமையே ! நல்லுணர்வே !
அன்பே !
இருட்கடலின் ஆழத்திருந்து
வந்த முத்தே , முழுநிலவே ,
மே தினமே வாராய் நீ !
வாராய் உனக்கென்றன்
வாழ்த்தை இசைக்கின்றேன் !
கவிஞர் தமிழ் ஒளி -1949.


Saturday, May 1, 2021

மே தினம் - அ முதல் ஔ வரை

 

  


அடிமை விலங்கை அறுத்தெறிந்து
ஆர்ப்பரித்தெழுவோம்.
இப்பூவுலகின் உரிமையாளர்கள் எங்களை
ஈனர்களாய் நடத்த
உரிமை இல்லை உடமையாளருக்கென
ஊரெங்கும் கேட்க உரக்கச் சொல்வோம்.
என்றென்றும் போராட்டம்தானா என
ஏக்கத்துடன் கேட்போருக்கு
ஒற்றுமையின் வலிமையில்
ஓங்கிடும் நம் கரங்கள் என்றே நம்பிக்கையளிப்போம்.
ஔடதமாய் நாம் திகழ்வோம் வலி சுமந்த தொழிலாளிக்கு.
 
வரலாற்று நாயகர்களை நினைவில் கொண்டு
நிகழ்காலத்தில் புது வரலாறு படைப்போம்
எதிர்காலம் என்றும் நமதே.
  
 மே தின வாழ்த்துக்கள்.

Friday, May 1, 2020

சுட்டெரிக்கும் உண்மை



உண்மையின் தரிசனம்
********************************

உழைப்பு முடங்கினால்
உலகம் முடங்கும்
உண்மையின் தரிசனம்

ஒவ்வோர் மனிதனின்
நலமும் வாழ்வுமின்றி
உய்யுமோ உலகம் 

யாரோ தும்மினால் 
அய்யோ என பதறுது 
ஒவ்வொரு மனசும்

மாறுகிறது இலக்கணம்
சந்தையை கடவுள் என்ற
வல்லரசுகளின் லட்சணம்

மூலதனத்தின் குரூரம்
முக கவசம், கையுறை என
மரண பயத்திலும் லாபம்

காணோம் காணோம்...
தனியார் மருத்துவம்..
வருந்தி அழைத்த விளம்பரம்...

சமரசம் உலாவும் இடமாய்
வாழவும் சாகவும்
பொது மருத்துவம்...

எள்ளலுக்கும் ஏச்சுக்கும்
ஆளாச்சு பொதுத் துறை...
அது உலகமய எக்காளம்

விலகு விலகு அரசு விலகு
பன்னாட்டு வண்டி வருது
வாங்கடா வண்டியை தள்ளுங்கடா

லாபங்களுக்கே இடம் 
சவங்களுக்கு இல்லை
சுதந்திர தேவி கண் திரை நனைக்கும் ஈரம்...

சூரியன் மறையா தேசம்
கொத்து கொத்தாய்
வீழ்கிற உயிர்கள் பாடம்

ஐயகோ மீண்டும் நாசமோ
ஐ.எம்.எப் வாசலில்
மூன்றாம் உலக தேசம்

பல நூறு மைல்கள்
பாரத தாய் விரல் பிடித்த
பரிதாப பயணம்

மொழி தெரியா நாம்
உடல் மொழியால் 
உணர்ந்த வீதிப் பாடம்

என்ன பதில் சொல்வோம்
லோகேஷ் அம்மா
உனக்கு என்ன பதில் சொல்வோம்

வீட்டிலேயே இரு என்போரே
இருக்கிறோம்... சொல்லுங்கள்
உயிரோடும் இரு என்று

வடியாத ஒன்று வடிவேலு பாசம்..
இலவச டி.வியில் பசியாற்றும்..
எவ்வளவு பொறுக்கும் எங்கள்
தோள் சாய் செல்வம்..

அரசு கொடுத்த ஆயிரம்
முதல்வர் நிதிக்காம்
கடைசி மனிதனின் கரிசனம்

சூப்பர் ரிச் வரி எனில்
குற்றம்... பாயும் அதிகாரம்
கார்ப்பரேட்டுகள் கபடம்

போங்கடா நீங்களும்
ஒங்க உலகமயமும்
போங்கடா நீங்களும்
ஒங்க தனியார் மயமும்

பொதுவில் வைப்போம் எல்லாம்...
இதுவே இன்றைய பாடம்...
சுகாதாரம் கல்வி வளம்
இன்னும் இன்னும்...

எட்டு மணி நேர வேலை
சிக்காகோ சிந்திய ரத்தம்
குரூரம் இன்றும்... கூடுமாம் நேரம்

வரலாறு அசை போடும் மனம்...
ஏமாறுமோ இனி தினம்...
மாற்றும் உலகை மே நாள் தியாகம்...

ஸ்பைஸ் மரண வரிகள் ரீங்காரம்....
தூக்கில் இடுங்கள் எங்களை...
அது நெருப்பின் மீதான உங்கள் பயணம்...

உங்கள் பின்னால்... முன்னால்
எங்கும் எங்கும் எழும் எழும்
அது பூமித் தாயின் கோபம்

தனித்திருக்கட்டும் உடல்.. 
பிரியாதிருக்கட்டும் உள்ளம்..
கனன்று எழட்டும் களம்..

க.சுவாமிநாதன்
துணைத் தலைவர்,
தென் மண்டல் இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

எந்நாளும் எதையும் மறவோமே!!!


இப்படி ஒரு மே தினத்தை இது வரை கண்டதில்லை.

மே தினப் பேரணிகள் கிடையாது.
மே தினப் பொதுக்கூட்டங்கள் கிடையாது.
மே தினக் கொடியேற்றங்களைக் கூட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தோழர்களைக் கொண்டே நடத்த வேண்டிய சூழல்.

தனி மனித விலகலை கடை பிடிக்க வேண்டியும் ஊரடங்கு உத்தரவை மதிக்க வேண்டியும் உழைப்பாளர் தின நடைமுறைகளை தொழிலாளி வர்க்கம் மாற்றி அமைத்துள்ளது.

நரியின் கண் இரையின் மீதே என்பது போல இந்த சோதனையான சூழலிலும் கூட ஆளும் வர்க்கம் தன் முன்னுரிமைகளாக 

முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்தல்,
தொழிலாளிகளை தாக்குதல்

என்பற்றையே கொண்டுள்ளது.

பெரும் செல்வந்தர்களுக்கு கூடுதல் வரி விதிக்கலாம் என்று ஆலோசனை சொன்ன இளம் ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையை பாய்ச்சுகிற மத்தியரசு

தன் ஊழியர்களின் அகவிலைப் படி உயர்வை பறித்துள்ளது.

நிதிப்பற்றாக்குறை என்று புலம்பிக் கொண்டே புதிய நாடாளுமன்றக் கட்டிடம், ராஜ பாட்டை என்று ஊதாரித்தனச் செலவுகளை தொடர்ந்து கொண்டே உள்ளது.

இதையெல்லாம் தொழிலாளி வர்க்கம் எந்நாளும் மறவாது.

தனக்கு துரோகம் இழைப்பவரை எந்நாளும் மறவாது, மன்னிக்காது.
சரியான நேரத்தில் கணக்கு தீர்க்கும்.

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த தியாகிகளின் நினைவு வழிகாட்டும். 

அனைவருக்கும் புரட்சிகர மே தின வாழ்த்துக்கள்




Tuesday, April 30, 2019

தடியடி, தோட்டா, தூக்கு . . .


இன்று மே தினம்.



உலகெங்கிலும் உள்ள உழைப்பாளி மக்கள் உணர்வுபூர்வமாக கொண்டாடும் ஒரு திருநாள். 

தியாகிகளை என்றும் மறக்காத ஒரே வர்க்கம் உழைப்பாளி வர்க்கம்தான்.

எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர ஓய்வு என்ற முழக்கத்தை முன்வைத்து ஆளும் வர்க்கத்தின் தடியடி, தோட்டாக்கள் மற்றும் தூக்குத்தண்டனை பரிசு பெற்ற சிக்காகோ நகரத்து தியாகிகளை ஒரு நூற்றாண்டு கடந்த பின்பும் உழைப்பாளி மக்கள் மறக்கவில்லை. உலகின் எந்த பகுதியிலும் மறக்கவில்லை.

முன்னெப்போதையும் விட மே தினத்திற்கான தேவை இப்போதுதான் அதிகமாக தேவைப்படுகிறது.

ஆம்

சுரண்டல்கள் அதிகமாகி உள்ளது மட்டுமல்ல அவை புதிய புதிய வடிவங்களையும் அடைந்துள்ளது.

எட்டு மணி நேர வேலை என்பது பல இடங்களில் எட்டாக் கனவாகவே மாறி வருகிறது.

இருக்கும் வேலைகளைப் பறித்து விட்டு  அந்த இன்னலைக் கண்டு மகிழ்ச்சியடைகிற சேடிஸ்ட் முதலாளிகள் அதிகமாகி வரும் நாள் இது.

வேலையைப் பறிக்க முடியாவிட்டாலும் பெற்ற உரிமைகளை பறிக்க முயல்கிற முதலாளிகள், அவர்களுக்கு வால் பிடிக்கும் ஆட்சியாளர்கள் அதிகரித்துள்ள காலம் இது.

உலகெங்கும் இப்படிப்பட்ட நிலைமைகளை பார்க்க முடிகிறது. இந்தியாவிலும் கூட காண முடிகிறது.

ஆனால் இதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்கிற அடிமைகளின் கூட்டமாக உழைப்பாளி வர்க்கம் இல்லை.

“தொழிலாளி கோடிக் கால் பூதமடா, கோபத்தின் ரூபமடா” என்ற ஜீவாவின் வாசகங்களுக்கு ஏற்ப போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தங்களின் மீதான அடக்குமுறைக்கு எதிராக, தாக்குதல்களை தகர்த்திட உலகெங்கும் உழைப்பாளி மக்களின் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.

அந்த போராட்டங்கள் என்றைக்கும் வீண் போகாது. தியாகங்கள் அர்த்தம் இழக்காது.

மே தினம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உழைப்பாளி மக்களுக்கு எழுச்சியும் உற்சாகமும் அளிக்கிற நாள்.

நீண்ட நெடிய போராட்டத்தின் இறுதியில் வெற்றி என்றைக்கும் உழைப்பாளி மக்களுக்கே!

அனைவருக்கும்  புரட்சிகர  மே தின வாழ்த்துக்கள்.

Tuesday, May 1, 2018

அனைவருக்கும் . . .


உழைக்கும் மக்களின் உன்னத தினம் . . .
போராடும் உழைப்பாளி மக்களுக்கு எழுச்சி அளிக்கும் தினம் . . .
தியாக முன்னோரை நினைவு கொள்ளும் தினம் . . .
உங்கள் குருதியால் கொடியை சிவப்பாக்கிய தோழர்களே,
உங்கள் பாதையில் எங்கள் பயணம்  உறுதியோடு . . .

அனைவருக்கும்

புரட்சிகர மே தின வாழ்த்துக்கள்  . . .

Thursday, May 4, 2017

மன்மோகன் (சிங் அல்ல) பாணியில் மோடி





பிரபல ஹிந்திப்பட இயக்குனர் மன்மோகன் தேசாயை ஒரு முறை பத்திரிக்கையாளர்கள் பேட்டி கண்ட போது “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? “ என்று கேட்டார்கள்.

“ஒரு காட்சிக்குப் பின் அடுத்த காட்சி, அதற்கடுத்து இன்னொரு காட்சி என்று காட்சிகளை வேகம் வேகமாக அடுக்கிக் கொண்டே வருவேன். அந்த வேகத்தில் முந்தைய காட்சி பற்றி ரசிகன் யோசிக்கவே அவகாசம் இருக்காது. ரசிகனை சிந்திக்க விடாமல் செய்வதே என் வெற்றியின் அடிப்படை”  என்று பதிலளித்தாராம் மன்மோகன் தேசாய்.

அது போலத்தான்

ஸ்டாண்ட் அப் இந்தியா,
க்ளீன் இந்தியா,
மேக் இன் இந்தியா,
ஸ்டார்ட்டப் இந்தியா,
டி மானிட்டைசேஷன்,
டிஜிட்டல் இந்தியா

என்று அடுத்தடுத்து முழக்கங்களை மோடி அடுக்கிக் கொண்டே போகிறார். மன்மோகன் தேசாய் போல மக்கள் சிந்திப்பதற்கு அவகாசம் கிடைக்காமல் பார்த்துக் கொள்கிறார். முந்தைய திட்டத்தின் அமலாக்கம் நடந்ததா, அதன் விளைவு என்ன என்பதைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலை இல்லை. மக்கள் சிந்திக்க வாய்ப்பு தரக்கூடாது. அவ்வளவுதான்.

01.05.2017 அன்று வேலூரில் நடைபெற்ற மேதினப் பொதுக்கூட்டத்தில் எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் பேசியதிலிருந்து.

Sunday, May 1, 2016

இறுதியில் தெரியும் வெற்றி யாருக்கென்று?

ஒரு பணக்கார மனிதர் ஒரு உணவு விடுதிக்குள் நுழைகிறார். 

சுற்றி முற்றும் பார்க்கும் அந்த மனிதர் கண்ணிலே, அந்த விடுதியின் ஒரு மூலையில் வேட்டி சட்டை அணிந்த ஒரு எளிய மனிதர் கண்ணில் படுகிறார். அந்த மனிதரை பார்த்ததுமே இவருக்கு எரிச்சல் வந்து விடுகிறது. அந்த மனிதரை வெறுப்பேற்ற நினைத்து 

ஒரு சர்வரைக் கூப்பிட்டு

"இங்கே சாப்பிடும் அனைவருக்கும் ஒரு சிக்கன் பிரியாணி கொடு, அந்த வேட்டி கட்டிய மனிதனைத் தவிர. எல்லாருக்கும் நான் பணம் தருகிறேன்" 

என்று சத்தமாக சொல்கிறார். அப்படியே அந்த வேட்டி மனிதரையும் பார்க்கிறார். அவரது முகத்திலோ ஒரு மலர்ச்சி. அங்கிருந்தபடியே "நன்றி"  என்று சொல்கிறார்.

இவருக்கு எரிச்சல் அதிகமாகிறது.

"அந்தாளத் தவிர எல்லோருக்கும் ஒரு சிக்கன் க்ரேவியும் கொடு" 

என்று அடுத்து சொல்கிறார்.

இப்போதாவது அந்த மனிதர் அவமானத்தில் கூனிக் குறுகிப் போவாரா என்று பார்த்தால் இப்போதும் அதே சிரிப்புதான். 

இவருக்கு கோபம் வந்து விட்டது.

"அந்த வேட்டிக்காரரைத் தவிர எல்லோருக்கும் ஒரு ஐஸ் கிரீம் கொடு " என்று அடுத்த ஆர்டரைச் சொல்லுகிறார்.

வேட்டிக்காரரின் முகத்தில் புறக்கணிப்புக்கான சாயல் கொஞ்சமும் இல்லை. மாறாக மகிழ்ச்சியே தென்படுகிறது. இவரது பக்கத்தில் வந்து கை கொடுத்து நன்றி என்று சொல்கிறார்.

பணக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. சர்வரைக் கூப்பிட்டு பணத்தை கொடுத்தபடியே 

"என்னய்யா, அந்த ஆள் என்ன மெண்டலா? நான் எவ்வளவு அசிங்கப் படுத்தியும் நன்றி சொல்றான்" 

என்று கேட்க

சர்வர் நிதானமாக பதில் சொல்கிறார்.

"இல்லை. அவர்தான் இந்த ஹோட்டல் உரிமையாளர்".


அந்த பணக்காரர் போலத்தான் முதலாளிகளும் பன்னாட்டுக் கம்பெனிகளும் தொழிலாளர்களை தாக்குகிறார்கள். வேலைகளைப் பறித்து இழிவு படுத்துகிறார்கள். போராடுகையில் அரசையும் போலீசையும் பயன்படுத்தி சிறை வைக்கிறார்கள். குண்டாந்தடித் தாக்குதலையும் தோட்டாக்களையும் பரிசாக அளிக்கிறார்கள்.  ஆனால் என்றும் ஆணவம் வெல்லாது. இறுதி வெற்றி என்றும் உழைக்கும் மக்களுக்கே.

அனைவருக்கும் புரட்சிகர மே தின வாழ்த்துக்கள்

 

Thursday, May 1, 2014

தயவு செய்து மேதினம் என்று அழைக்காதீர்கள்





மேதினம் வருகிற போதெல்லாம் தமிழக தொலைக்காட்சிகள் செய்கிற அக்கிரமத்தை சகித்துக் கொள்ளவே முடியவில்லை.

எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்ற முழக்கத்தை முன்வைத்து போராடியவர்களை முதலாளிக் கூட்டத்தின் கைப்பிள்ளைகளான காவல்துறை குண்டாந்தடி கொண்டு தாக்கியது. துப்பாக்கித் தோட்டாக்களை பரிசளித்தது. முன்னணியில் நின்ற தலைவர்களை தூக்கு மேடையேற்றியது.

சிக்காகோ நகரத்தில் ரத்தம் சிந்திய தியாகிகளின் நினைவாக உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் அன்றைய தினத்தை மேதினமாக, உழைப்பாளர் தினமாக அனுசரிக்கிறோம். எங்களின் உரிமைப் போராட்டம் தொடங்கிய நாள் என்ற உணர்வோடு போராட்டப்பாதையில் மேலும் மேலும் செல்ல உற்சாகம் பெறும் நாளாக மேதினத்தைப் பார்க்கிறோம்.

கொடியேற்றுதல், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என்று இந்திய பாட்டாளி வர்க்கம் மேதினத்தை கொண்டாடுகிறது. இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தொழிலாளர்களும் கூட அப்படித்தான் கொண்டாடுகிறது. இருக்கும் உரிமைகளை தக்க வைப்போம், இன்னும் உரிமைகளை வென்றெடுப்போம் என்பதுதான் உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் மேதின முழக்கம்.

ஆனால் தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சிகள் மேதினத்தை கொண்டாடும் விதமோ கண்றாவியாக உள்ளது.

ராஜா ராணி, கல்யாண சமையல் சாதம், வீரம், கில்லி, சம்திங் சம்திங், இன்னும் மற்ற தொலைக்காட்சிகளில் என்ன்வென்று நான் பார்க்கவில்லை, இந்த திரைப்படங்களுக்கும் மேதினத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? மேதின உணர்வை, மேதின வரலாற்றை, மேதினத்தின் முக்கியத்துவத்தை, உன்னதத்தை இந்த திரைப்படங்களில்  கொஞ்சமாவது வெளிப்படுத்துமா? இவற்றில் ஒன்று கூட தொழிலாளர்களின் பிரச்சினைகளையோ,  போராட்டங்களையோ பேசும் படம் அல்ல. அஜித் பிறந்தநாளை முன்னிட்டு “வீரம்” என்று சொன்னால் கூட கொஞ்சம் நேர்மை இருக்கும்.

விடுமுறையில் வீட்டில் இருப்பவர்களை குஷிப்படுத்த என்ன எழவு படங்களாவது போட்டுத் தொலையுங்கள். கோடைக் கொண்டாட்டம், விடுமுறைக் கொண்டாட்டம் என்று ஏதோதோ பெயர் வைக்கிறீர்களே, அது போல வைத்துத் தொலையுங்கள்.

தயவு செய்து மேதினம் என்று சொல்லி உழைக்கும் மக்களுக்காக உயிர் நீத்த தியாகிகளையும் அவர்களின் உன்னதமான நினைவைக் கொண்டாடும் உழைப்பாளி மக்களையும் கொச்சைப்படுத்தாதீர்கள். 

மேதினம் கொண்டாடிய உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துக்கள்