Sunday, February 28, 2021

கேரட் தேங்காய் பர்பி சுலபம்

 



 

மீண்டும் ஒரு சமையல் பதிவு

 கேரட் துறுவல், தேங்காய் துறுவல் சம அளவில் எடுத்துக் கொள்ளவும்.

 


இரண்டு நன்றாக கலக்க மிக்ஸியில் ஒரு நிமிடம் சுற்றி விடவும்.

 



ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

 அதிலே தேங்காய்-கேரட் கவவையை கொஞ்ச நேரம் வதக்கி அதே அளவு சர்க்கரை சேர்த்து கிளறவும்.

 நன்றாக சுருண்டு வரும் வேளையில் ஏலக்காய் பொடி, முந்திரி சேர்த்து கிளறி

 தட்டில் கொட்டி

 சிறிது நேரம் கழித்து வில்லை போடவும்

 











தேங்காய், கேரட் துறுவும் நேரம் கூட பர்பி கிளற ஆகாது. அவ்வளவு சுலபம். கேரட்டின் இயல்பான நிறமும் சேர்ந்தே கிடைக்கும்.

 

வலிமை அப்டேட்

 




 சென்னையில் கிரிக்கெட் டெஸ்ட் நடந்த போது யாரோ ஒரு ரசிகர் இங்கிலாந்து வீரரிடம் “வலிமை அப்டேட்” கேட்கும் வீடியோவை என் மகன் அனுப்பினான்.

 


வலிமை அப்டேட்டுக்காக ஏங்கிய அஜித் ரசிகரா

இல்லை

அப்படி ஏங்கிப் போயுள்ள அஜித் ரசிகர்களை கலாய்க்கிறாரா

 

என்றுதான் தெரியவில்லை.

மோடி அரசு – பயம், பயமின்றி வேறில்லை.

  



மோடியைப் போல வீராதி வீரர், சூராதி சூரர் கிடையாது என்று நாமே ஏமாந்து போகும் அளவிற்கு “மத்யமர்” குழுவில் அவரது அபிமானிகளின் பதிவுகள் இருக்கிறது.  மோடி நல்லவரா கெட்டவரா என்று சென்ற ஞாயிற்றுக்கிழமை கேள்விக்கு வந்த பதிவுகள் அப்படி. (மனம் விட்டு சிரிக்க வைத்தவை அவை என்பதையும் சொல்வதுதான் நியாயம்)

 வாய், வாய், வாயைத் தவிர வேறு எதுவும் இந்த ஆட்சிக்குக்  கிடையாது. அவரது அதி தீவிர அபிமானிகளுக்கு வேண்டுமானால் அந்த வாய் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அதிலே எல்லோரும் ஏமாந்து விட மாட்டார்கள். உண்மையில் மிகவும் அச்சப்படுகிற அரசு இந்த அரசு.

 ஒரு சின்ன தொழிற்சங்கத்தின் கோட்ட (வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவை பிரதேசம்) அளவில் இருக்கிற நாங்கள் கூட “எங்கள் நிறுவனத்தை பாதிக்கிற அரசியல் முடிவுகள் வரும் போது ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி  அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்போம்”

 ஆனால் எல்லா மொழிகளிலும் மோடி அஞ்சுகிற ஒரே வார்த்தை “பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு” அநேகமாக கரண் தாப்பர் சந்திப்பு அவர் மனதில் இன்னும் மாறாத காயமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போல.

 அவர்கள் அச்சப்பட்டு நடுங்குகிற இன்னொரு விஷயத்தைப் பற்றிதான் இந்த பதிவு.

 எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விற்பனை குறித்து பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். எல்.ஐ.சி நிறுவனம் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனம். எங்கள் நிறுவனம் எல்.ஐ.சி சட்டம் 1956 ந் படி உருவாக்கப்பட்டது. ஐந்து கோடியாக இருந்த எல்.ஐ.சி யின் மூலதனத்தை ஐ.ஆர்.டி.ஏ சட்டத்தின் படி 2011 ல்  நூறு கோடி ரூபாயாக உயர்த்திய போது “எல்.ஐ.சி சட்டம் 1956” ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. நிதியமைச்சகத்தின் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அத்திருத்தம் உட்படுத்தப்பட்டது.

 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடந்த பின்பு “எல்.ஐ.சி நிறுவனம் என்றென்றும் பொதுத்துறை நிறுவனமாக நீடிக்க வேண்டும். அதன் பொதுத்துறைத் தன்மை எந்த விதத்திலும் நீர்த்துப் போக அனுமதிக்கப்படக் கூடாது. ஒருவேளை நாளை எல்.ஐ.சி நிறுவனத்திற்கு கூடுதல் மூலதனம் தேவைப்பட்டால் அது அரசு கஜானாவிலிருந்து நாடாளுமன்ற அனுமதியோடுதான் வழங்கப்பட வேண்டும்” என்று கட்சி பேதமில்லாமல் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு.

 இந்திய அரசியல் அதிசயமான இந்த முடிவைத்தான் மாற்றுகிறது மத்தியரசு. எல்.ஐ.சி பங்கு விற்பனை அவசியமற்றது என்பதை விளக்கி பல பதிவுகள் எழுதியுள்ளதால் மீண்டும் அதைப் பற்றி இங்கே விவரிக்கப் போவதில்லை. பார்க்காத மத்யமர்கள் www.ramaniecuvellore.blogspot.com என்ற என்ற முகவரியில் “ஒரு ஊழியனின் குரல்” என்ற என் வலைப்பக்கத்திற்கு  வரவும்.

 அரசு தன் முடிவை அமலாக்குவதில் கூட நேர்மையை கடைபிடிக்க தயாராக இல்லை. எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்க வேண்டுமெனில் அது எல்.ஐ.சி சட்டம் 1956 ல் திருத்தம் கொண்டு வர வேண்டும். அதற்கான மசோதாவை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் முன் வைக்க வேண்டும். ஒரு வேளை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும் சூழலும் கூட வரலாம்.

 இங்கேதான் அரசின் அச்சம் வெளிப்படுகிறது.

 தனியாக ஒரு திருத்த மசோதாவை கொண்டு வருவதற்குப் பதிலாக பட்ஜெட் முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் கேட்கும் நிதி மசோதாவில் (Money Bill) ல் இதற்கான ஷரத்துகளை இணைத்துள்ளது. நிதி மசோதாவை மக்களவை ஏற்றுக் கொண்டு விட்டால் மாநிலங்களவை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட அது நிறைவேறும். இது விதி.

 எனவே தனியாக ஒரு மசோதா கொண்டு வந்து அது மாநிலங்களவையில் விவாதத்திற்கோ ஓட்டெடுப்பிற்கோ வருவதை தவிர்க்க இப்படி ஒரு குறுக்கு வழியை பயன்படுத்த வேண்டிய அளவிற்கு அரசுக்கு பயம் இருக்கிறது.

 தனி மசோதா என்றால் வரும் விவாதம், நிதி மசோதா என்றால் வரப் போவதும் கிடையாது. ஏனென்றால் கடந்த வருடம் மக்களவை பட்ஜெட்டை நிறைவேற்ற அரசு எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவு தெரியுமா?

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

வெறும் பத்து நிமிடங்கள்.

 இதுதான் இந்த அரசின் உண்மையான குணம். பயம், பயமின்றி வேறில்லை. ஆனால் வீரர்களாக காண்பித்துக் கொள்வார்கள், தமிழ்ப்படம் திரைப்படத்தில் “பயமே என்னைப் பார்த்து பயப்படும் என்று சொல்லும் சிவா, குட்டி நாய் குறைப்பதற்கே பயப்படுவது போல.

 பிகு :  மேலே உள்ள படம் சில நாட்களுக்கு முன்பாக நாங்கள் நடத்திய ஊடக சந்திப்பின் போது எடுக்கப்பட்டது.

Saturday, February 27, 2021

ஆக மொத்தம் 15,18,000. சியர்ஸ்

 

 

முதலில் இந்த வடிவேலு காமெடி காட்சியை பார்த்து விடுங்கள்.

 


ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்சம் ரூபாய் தருவதாக 2014 தேர்தலில் வாக்குறுதி கொடுத்தார் மோடி. அது சும்மா ஜும்லா என்று சொல்லி பிரச்சினையை முடித்து விட்டார் அமித் ஷா.

 அதே ஜும்லா அமித் ஷா, மேற்கு வங்க மக்களுக்கு 18,000 ரூபாய் தருவதாக சொல்கிறார்.

 


வடிவேலு நிலைமையில்தான் மக்கள். அவருடைய “ரெண்டு அம்பது” பறி போனது  மட்டுமல்ல, அடி வேறு கிடைத்தது. பதினைந்து லட்சமும் கிடைக்கவில்லை. பதினெட்டாயிரமும் கிடைக்கப் போவதில்லை. ஆட்சியாளர்கள் சியர்ஸ் சொல்லி தாக்கிக் கொண்டு மட்டும் இருப்பார்கள்.

 பிகு : எழுதி ரொம்ப நாளாச்சுங்க

Friday, February 26, 2021

பாஜக போதைப் பொருள் கடத்தல் அணி

 


தமிழ்நாட்டில் அபின். மேற்கு வங்கத்தில் கொகெய்ன்

 மேற்கு வங்க பாஜக இளைஞர் அணியின் செயலாளர் பமீலா கோஸ்வாமி போதைப் பொருளான கொகெய்னை வியாபாரத்திற்காக வைத்திருந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டார்.



 நான் குற்றவாளி என்றெல்லாம் அவர் மறுக்கவில்லை. பாஜகவின் தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் செயலாளர் ராகேஷ்சிங் என்னுடைய பாஸ். எனக்கு ஸ்டாக் கொடுத்து கைமாற்றி விடச் சொன்னவரே அவர்தான் என்று போட்டு கொடுக்க இப்போது அவரும் கைது செய்யப்பட்டு விட்டார்.

 கொஞ்ச நாள் முன்பாகத்தான் தமிழகத்தில் ஒரு பாஜக பிரமுகர் பஞ்சாமிர்த டப்பாவில் அபினை கடத்தினார்.

 ஏற்கனவே பாஜகவில் கிரிமினல்களுக்கான ஒரு அணி உள்ளது. அதில் ஒரு துணை அணியாக போதைப் பொருள் கடத்தல் அணியும் உள்ளது என்பது இப்போதுதான் தெரிகிறது.

செவ்வணக்கம் தோழர்.தாபா

 


செவ்வணக்கம் தோழர்.தா.பாண்டியன்

கமல்-ரஜினி-மாலன்-சக்கர நாற்காலி

 


சிங்கப்பூர் லீக்வான் க்யூ போல ரஜினிகாந்த் சக்கர நாற்காலியிலாவது அரசியல் செய்ய வேண்டும் என்று சொன்ன மாலன் அவர்களே, சக்கர நாற்காலியில் இருந்து அரசியல் செய்பவர்களை கமலஹாசன் இழிவு படுத்தி பேசியுள்ளாரே, அதை கண்டிக்க மாட்டீர்களா?

ஓ!

அவர் இழிவுபடுத்தியது உங்கள் பழைய முதலாளி கலைஞரைத்தானே! இப்போது படியளிக்கிற மோடியை அல்லவே!



உடல் ஊனம் உள்ளவரை கேலி செய்யும் காமெடிகளை உங்களின் எத்தனையோ படங்களில் வைத்துள்ளீர்கள். அது திரைப்படத்தில் மட்டும் அல்ல, உங்கள் பார்வையே அப்படித்தான் என்பது இப்போது புரிகிறது.

இப்போது நக்கலடிக்கும் நீங்கள், இதனை மலர்ந்த முகத்தோடு கரம் பற்றிய போதே சொல்லியிருக்கலாமே.

எனினும் நீங்கள் பேசியது நல்லதுதான்.

வேடம் கலைகிறது.

Thursday, February 25, 2021

மோடி ஸ்டேடியம் – விடாது கருப்பு

 

மூன்று பதிவுகளுக்கான கண்டெண்ட்டாக இருந்தாலும் ஒரே பதிவாக மாற்றிவிட்டேன்.

 

அதானி, அம்பானி  என்ன நினைப்பார்கள்?

 ஒரு சின்ன கற்பனை

 


மோடி தன் பெயரை வைத்துக் கொண்டது கூட ஹிட்லரிடமிருந்து காப்பி அடித்ததுதானாம். 



சுய புத்தியே கிடையாது.

 

ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரனின் பக்கத்தில் நேரு பெயரில் இல்லையா? இந்திரா பெயரில் இல்லையா? ராஜீவ் பெயரில் இல்லையா என்றெல்லாம் ஒரு சங்கி ஒரு பட்டியல் கொடுத்திருந்தார்.

 அவரும் பொறுமையாக

 “இந்த பெயர்களை அவர்களே சூட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் இறந்ததும் அவர்களுக்கு பின் வந்தவர்கள்தான் சூட்டினார்கள். அதிலும் கூட இப்படி வெட்கமில்லாமல் ஒரு தலைவர் பெயரை அகற்றி மாற்றப்படவில்லை”

என விளக்கம் கொடுத்தார்.

 “அப்படியென்றால் சங்கிகள் தங்கள் தலைவர்கள் பெயரை எதற்காவது சூட்ட  வேண்டுமென்றால் அவர்கள் இறந்து போகும் வரை காத்திருக்க வேண்டுமா என்று ஒருவர் கேட்டார்.

அவருக்கு நான் அளித்த பதில்

"அதிகாரம் இல்லையென்றால் தன்னை யாரும் சீண்ட மாட்டார்கள் என்று அத்வானியை ஓரம் கட்டிய மோடிக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் பதவியில் இருக்கும்போதே தன் பெயரை சூட்டி விட்டார். இது தொடக்கமே. இன்னும் வரும்" 

நீங்களே ஆகமத்தை மீறலாமா ராசா, விஷமூர்த்தி!


எங்க கையில கோயில் வந்தால்தான் ஆகமத்தை காப்பாத்த முடியும்னு சீன் போடற எச்.ராசா, விஷமூர்த்தி வகையறாக்கள்தான் ஆகம விதிக்கு எதிராக கலாட்டா செய்திருக்காங்க.

இவர்களோட நோக்கம் எப்போதுமே கோயில் வருமானத்தையும் பழமையான சிலைகளை திருடுவதும்தான்.

இது புரியாம இந்த மோசடிப் பேர்வழிகள்தான் இந்து மதக் காவலர்கள்னு ஒரு மூடர் கூட்டம் நம்பிக்கிட்டு இருக்கு.

பதிவை எழுதிய பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் மற்றும் பகிர்ந்து கொண்ட எங்கள் பண்ருட்டி தோழர் என்.ஆரோக்கியராஜ் ஆகியோருக்கு நன்றி



 ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்பது சங்கராச்சாரியார் விவகாரத்தில் மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியுள்ளது. அடாவடி அரசியல்வாதிகளான ஹெச்.ராஜா, குருமூர்த்தி புடை சூழ இராமேஸ்வரம் கோவிலில் ஆர்பாட்டமாக நுழைந்த சங்கராச்சாரியார் ஆகமவிதிகளை காலில் போட்டு மிதித்து, அத்துமீறி செயல்பட்டுவிட்டதாக ஆன்மீகவாதிகளே வருத்தப்படுகின்றனர். இது குறித்து சற்றே விபரமாகப் பார்ப்போம்;


பக்தி, ஆன்மீக விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று இராமேஸ்வரம் ராம நாதஸ்வாமி கோவிலில் நடந்தேறியது!
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 22 ந் தேதி காஞ்சி சங்கரமட பீடாதிபதி விஜயேந்திரர் பாஜகவின் ஹெச்.ராஜா, ஆடிட்டர் குருமூர்த்தி..உள்ளிட்ட படை பரிவாரங்களுடன் இராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோவிலுக்கு வந்தார்! அவருக்கு பூரணகும்ப மரியாதை எல்லாம் தரப்பட்டது. அவர் ஸ்வாமியை தரிசிக்க வருவதாக அனைவரும் கருதி இருந்த நேரத்தில், திடீரென்று கோவில் கருவறைக்குள் நுழைந்து தானே ஸ்வாமி மேனியைத் தொட்டு பூஜை செய்ய வேண்டும் என முயற்சிக்க, அதை அவருடன் வந்தவர்கள் ஆரவாரமாக ஆமோதிக்க கோவில் குருக்கள் இருவர் மிகுந்த பணிவுடன், ’’நீங்க பெரியவா..உங்களுக்கு தெரியாதது இல்லை. இந்த கோவில் கருவறையில் சிவாகம முறைப்படி தீட்சை பெற்று, பாரம்பரிய வழிமுறையில் சிவாகமத்தை ஓதுபவர்கள் மட்டுமே கருவறைக்குள் செல்ல முடியும்! பெரியவா.. நீங்களே ஆகமவிதிகளை அதுமீறப்படாது..’’என எடுத்துச் சொல்லியுள்ளனர்.
ஆனால், அவரும்,அவர் கூட வந்தவர்களும் இந்த வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கவில்லை. மீண்டும்,மீண்டும் வலுயுறுத்தி உள்ளே போக எத்தனிக்கவும் குருக்கள் குறுக்கே படுத்து வீழ்ந்து கெஞ்சியுள்ளனர்.ஆனால், அவர் கூட வந்தவர்கள் ‘’சங்கராச்சாரியாரையே அவமானப்படுத்துவதா..? அவருக்கு இல்லாத உரிமையா? அவர் லோக குருவாச்சே..’’ என்றெல்லாம் அடாவடியாகப் பேசியும், கத்தியும் ரகளையில் ஈடுப்பட்டனர். பக்தர்கள் பெருந்திரளாக இதை வேடிக்கை பார்க்கும் நிலை உருவாகிவிட்டது. கூட வந்தவர்கள் கோவில் நிர்வாக அதிகாரியை அழைத்து, ’’குருக்களை சமாதானப்படுத்தி, சங்கராச்சாரியாரை உள்ளே அனுமதிக்க ஆக வேண்டியதை செய்யுங்கள்’’ என கட்டளையிட்டதும், இதென்னடா மேலிடத்து பொல்லாப்பு நமக்கு ஏன்? அப்புறம் நம்ம வேலைக்கு ஆபத்தாகிவிடப் போகிறது என்ற பயத்தில் அவர்களும் சேர்ந்து வற்புறுத்தி, சங்கராச்சாரியாரை கருவறைக்குள் அனுமதித்துள்ளனர்!
மூலஸ்தானத்தை,கருவறை பூஜையை போட்டோ எடுக்க கூடாது என்பது கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் மரபு.அதையும் சங்கராச்சாரியார் ஆட்கள் மீறியுள்ளனர்.
மேற்படி சம்பவம் குறித்து நான் இராமேஸ்வரம் சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாகி மணிகண்ட நாராயணனிடம் (65) விசாரித்த போது, ‘’இப்ப நடந்த சம்பவம் ரொம்ப துரதிஷ்டவசமானது. இந்த கோவில் கருவறைக்குள் பூஜை செய்வதற்கு முறைப்படி சிவாமக மந்திரங்களை ஓதுகின்ற- மாகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட- சிருங்கேரி மடத்து சங்கராச்சாரியாரிடம் தீட்சை பெற்ற - குருக்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு! இந்த பாரம்பரிய விதிமுறைகள் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு நன்றாகவே தெரியும். இதே போல 2001 ஆம் ஆண்டும், 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறையும் ஜெயேந்திர ஸ்வாமிகள் முயற்சித்தார். அப்போது அவருக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லி திருப்பி அனுப்பி உள்ளார்கள். ஆனபோதிலும், தற்போது விஜேயேந்திரர் ஏன் இப்படி ஒருமுயற்சி செய்தார் எனத் தெரியவில்லை. இது நல்லதல்ல! ஆதிகாலத்துல இருந்து இராமேஸ்வரம் சேத்திரத்திற்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு.அந்த பாரம்பரியத்தை மதிக்கணும், மீறுவது யாருக்குமே நல்லதில்லை. இந்தக் குழந்தைக்கு இவா தான் தகப்பன்னு யாரை சொல்லிக் கொடுத்திருக்காளோ..அவா தான் தகப்பன், மற்றவா உரிமை கொண்டாட முடியாது. விஜேயேந்திரருக்கு உரிய மரியாதை தரப்பட்டது.அவர் அர்த்த மண்டபத்துடன் நின்று ஆராதனை செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு சொல்லியும் மீறப்பட்டுள்ளது. ஆன்மீகத்தில் இருக்கும் துறவிகளுக்குள்ளே மோதல் என்று வருவது ஆரோக்கியமானதில்லை என்பதால் நான் இந்த அளவோட நிறுத்திக்கிறேன். இது குறித்து எங்க தலைமை என்ன முடிவு எடுக்கப்போறான்னு தெரியல.’’ என்றார்!
சென்னையைச் சேர்ந்த மூத்த சிவாச்சாரியாரான சுப்பிரமணிய குருக்களிடம் (75) பேசிய போது, ‘’பொதுவாக சந்நியாசிகள் கருவறைக்குள் செல்ல ஆகமவிதிப்படி அனுமதி கிடையாது. பெரியவா இருக்கும் போது இந்த விதியை அவர் மீற முயன்றதில்லை! அடுத்தவா போன போதும் அவா அனுமதிக்கல.அப்படி இருக்கும் போது இவர் ஏன் போனார்னு எனக்கு விளங்கல. தெரிந்து போனாரா? தெரியாம போனாரா…? மொத்தம் 28 ஆகமங்கள் இருக்குது! அந்தந்த குருக்களிடம் அதற்கான ஆகமங்கள்,மந்திரங்கள் பயின்று, அதை அப்படியே வழிவழியாக பாரம்பரியமாக செய்பவர்களே செய்ய வேண்டும். இதை மீறினால் அதற்குரிய கஷ்ட, நஷ்டங்களை நாம் அனுபவிக்க தான் வேண்டும். இதனால் இந்த நாட்டுக்கே கூட ஆபத்து ஏற்படலாம். துறவின்னா எல்லாவற்றையும் துறந்தவா தான் துறவி. அவங்க தங்களோட அனுஷ்டானங்களுக்கேற்ப நடந்துக்கிடணும். அது போல லோகத்து ஜனங்களோட கஷ்டங்கள் தீர, அவா சார்பா கடவுளிடம் பூஜை செய்பவர்களே சிவாச்சாரியார்கள்! சிருங்கேரி மடத்திற்கு சொந்தமான இராமேஸ்வரம் கோவிலில் மற்றவர்கள் தலையிடுவது ஏற்புடையதல்ல’’ என்றார்.
ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்கள்; கிழக்கில் பூரியின் கோவர்தன மடம், தெற்கில் சிருங்கேரியில் உள்ள சிருங்கேரி மடம், மேற்கில் துவாரகையின் காளிகா மடம்  வடக்கில் பத்ரிகாஷ்ரமத்தின் ஜோதிர் மடம் ஆகிய நான்கு மட்டுமேயாகும்!. ஆதிசங்கரரின் வரலாறு, இந்த நான்கு மடங்களின் வரலாறு ஆகிய எதிலும் காஞ்சி சங்கர மடத்தைப் பற்றிய குறிப்புகள் கிடையாது. ஆனால், ஆதி சங்கரால் உருவாக்கப்பட்ட மடமாக தன்னை நிறுவ சங்கர மடம் பல பொய்யான கதைகளை சிருஷ்டித்துக் கொள்வதோடு, தனக்கு இல்லாத அதிகாரங்களும்,உரிமைகளும் இருப்பதாக அடவாடி செய்கிறது! உண்மை என்னவென்றால், 1821ல் சிருங்கேரி மடத்தின் கிளை ஒன்று  கும்பகோணத்தில் துவங்கப்பட்டது. அந்த கிளை சிருங்கேரி மடத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தனித்து இயங்குவதாக அறிவித்துக்கொண்டது. அது பின்னாட்களில் காஞ்சிக்கு இடம்பெயர்ந்தது. அது தமிழக பிராமணர்களால் அரசியல், அதிகார மையங்களுக்கு தன்னை நெருக்கமாக்கிக் கொண்டது. எல்லா இடங்களிலும் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முயற்சிக்கிறது! மற்ற உண்மையான சங்கரமடங்கள் ஆன்மீகப் பணிகளை தவிர்த்த அரசியல் விவகாரங்களில் அனாவசியமாக தலையிடுவதில்லை என்பதும் கவனத்திற்குரியது.
கிருபானந்த வாரியாரின் சீடரும்,ஆகமவிதிமுறை அர்சகர்களை பயிற்றுவிப்பருமான சத்தியவேல் முருகனாரிடம் பேசிய போது, சங்கராச்சாரியார்கள் தொடர்ந்து இது போல அத்துமீறல்களை செய்ய முயன்ற போதெல்லாம் கடும் எதிர்ப்புகளை கடந்த காலங்களில் சந்தித்து உள்ளனர்! காஞ்சிபுரம் மடத்துக்கு உரிய கோவிலான காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிசேகத்தின் போது,முன்பு ஒரு சம்பவம் நடந்தது. கும்பாபிஷேக கோபுரத்தின் மீதே, இதே போல ஜெயேந்திரர் ஏறி தானும் செய்ய முயன்றார். அப்போது உடனே, அத்தனை கோபுரங்களில் இருந்த சிவாச்சாரியார்களும் கீழே இறங்கி ’’நாங்க இனிமே எதையும் செய்யமாட்டோம். அவரே செய்யப்பட்டும்’’ என கிளம்பிவிட்டனர். உடனே பெரியவர் அழைத்து சிவாச்சாரியார்களை சமாதானப்படுத்தியதோடு, ஜெயேந்திரரை மன்னிப்பு கேட்க வைத்தார். அவரவர் எல்லைகளை உணர்ந்து அவரவர் செயல்பட்டால் நல்லது. மேற்படி விவகாரத்தில் கோவிலின் அரசாங்க நிர்வாகிகள் தலையிட்டு விஜயேந்திரருக்கு ஆதரவாக அவர் கருவறைக்குள் செல்ல துணை போயுள்ளனர். இந்து அறநிலைய சட்டப்படி பூஜை முதலிய உள்விவகாரங்களில் அரசு அதிகாரிகள் தலையிடக் கூடாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், அங்கு விஜயேந்திரர் உடன் சென்றவர்கள் அதிகாரிகளை தங்களுக்கு ஆதரவாக செயல்பட தூண்டியுள்ளனர். இதற்கு குமூர்த்தி,ஹெச்.ராஜா ஆகியோரே காரணம். இந்த குருமூர்த்தி, ஹெச்.ராஜா போன்றவர்கள் இது நாள் வரை கோவில் விவகாரங்களில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்று பேசி வந்தவர்கள் தான். ஆனால், தற்போது அரசாங்கமே தலையிட வழிவகையற்ற கோவில் பூஜை போன்ற உள்விவகாரங்களில் இவர்கள் அரசாங்க அதிகாரத்தை மிஸ்யூஸ் செய்ய வைத்துள்ளனர்.’’ என்றார்.
‘’உருவ வழிபாடே கூடாது.பக்தி மயக்கங்களில் இருந்து விடுபடுங்கள்.பிரம்சூத்திரத்தை உணர்ந்து ஞானம் பெறுங்கள்’’ என்பதே ஆதிசங்கரரின் உபதேசம்! அதற்கு விரோதமாக பூஜை, புனஸ்காரம், கோவில்..அவற்றுக்கு தங்க காசுகள்,வெள்ளி பொருட்கள் நன்கொடை.. பதிலாக தங்களுக்கு பூரணகும்ப மரியாதை என சராசரி மனிதர்களை போல சங்கராச்சாரியார்கள் செயல்படுவது துறவுக்கே இழுக்காகும்!
அத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்

Wednesday, February 24, 2021

கொண்டையையாவது மறைங்க மத்யமரே!

 



“தோற்றுப் போனவர்கள் கவிழ்த்தனர் ஆட்சியை” என்ற பதிவை நேற்று வலைப்பக்கத்தில் பதிவு செய்து விட்டு “மத்யமர்” முக நூல் குழுவிலும் பதிவிட்டேன். ரொம்ப நேரம் வரை வெளியிடப்படவே இல்லை.

 மத்யமர் குழுவில் இன்சூரன்ஸ் துறை தொடர்பான பதிவுகள் தவிர வேறு எதையும் பதிவிட்டதில்லை. அதிலும் கூட முக்கியமான ஒரு பதிவு எல்லோரும் தூங்கப் போன பின்பு இரவு 11.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 


ஆனால் இந்த பதிவை “பகிர்வு பதிவு என்பதால் நிராகரிக்கப்படுகிறது என்றும் உங்களுடையதுதான் என்றால் ஆதாரத்துடன் சமர்ப்பிக்கவும்”என்று சொல்லியிருந்தார்கள்.

 யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை சொந்த பதிவு என்று சொல்லி ஏமாற்றுபவனா என்று கோபம் வந்து விட்டது. மற்றவர்கள் பதிவை எப்போது பகிர்ந்தாலும் அவர்களுக்கு நன்றி சொல்லாமல் பகிர்ந்ததே கிடையாது.

 இது நானே, நானேதான் எழுதியது என்று சொல்லி மறுபடியும் பதிவிட்ட பின்பு பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது.



 ஜனநாயகப் படுகொலை என்ற வார்த்தையையும் படத்தையும் அகற்றி விட்டு மறுபடியும் பதியவும் என்று வந்தது.

 ஜனநாயகப் படுகொலை என்ற வார்த்தையை அகற்றி நானும் ஒரு ஜனநாயகப் படுகொலை செய்ய விரும்பாததால் மீண்டும் பதிவிடவில்லை.

 பெரும்பாலும் மோடியை உயர்த்திப் பிடிக்கும் பதிவுகளே மத்யமர் குழுவில் இடம் பிடிக்கும்.  திமுகவை 200 ரூபாய் உபிக்கள், திருட்டு திமுக, கலைஞரை கட்டுமரம், தந்தை பெரியாரை சொறியான், மு,க,ஸ்டாலினை சுடலை என்றெல்லாம் அழைக்கும் பதிவுகளுக்கெல்லாம் தாராளமாக அனுமதி தருபவர்களுக்கு ஜனநாயக படுகொலை என்ற உண்மை மட்டும் கசக்கிறது.

 இன்று கூட டில்ஷா ரவிக்கு பிணை கொடுக்கப்பட்டது குறித்த பதிவை நீண்ட நேரத்திற்குப் பிறகு அதே போன்ற பதிவை இன்னொருவரும் போட்ட பின்பு வெளியிட்டார்கள்.

 பாஜக ஆதரவு முகநூல் குழு என்று வெளிப்படையாக சொல்லி விட்டால் நேர்மையாக இருக்குமே. அதை விடுத்து வேறு காரணங்களை ஏன் சொல்ல வேண்டும்!

 ஆனால் அவர்களால் பாஜக ஆதரவு கொண்டையை மறைக்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். இப்பதிவை எழுத நான் காரணமே இந்த குழுவின் நோக்கம் பற்றிய கொள்கை விளக்கம்தான்..  இரு விதமான அணுகுமுறை கையாளப்படுகிறது என்பதற்கு திமுகவினர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளுக்கும் வலதுசாரிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளுக்குமான வேறுபாடுகளளே சான்று.  

 




இதில் சொல்லப்பட்டது போல அப்படி ஒன்றும் வலதுசாரிகள் ப்ளாக் செய்யப்படுவதில்லை என்பதுதான் யதார்த்தம். விவசாயிகள் மசோதா குறித்து பல விளக்கங்களை ஆதாரத்துடன் எழுதி வந்த ஒருவர் நீக்கப்பட்டார் என்பதுதான் உண்மை. இந்த குழுவில் இணைந்தது நம் கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கு மட்டுமல்ல, பாஜகவினர் எப்படியெல்லாம் மூளைச்சலவை செய்யப் பட்டுள்ளனர் என்பதையும் அறிந்து கொள்வதற்காகத்தான். தொடர்வதும் அதற்காகத்தான்.

 

 

இது படேலுக்கு அவமதிப்பில்லையா மோடி?

 


சர்தார் வல்லபாய் படேலுக்கு காங்கிரஸ் உரிய மரியாதை கொடுக்கவில்லை. ஆனால் நாங்கள் அவருக்கு வானளவு சிலை வைத்தோம் என “ஸ்ட்டேட்டுக்கு ஓப்பி யூனிட்டி” திறந்த போது பாஜகவினர் பீற்றிக் கொண்டார்கள்.

படேல் இறந்த போது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூட நேரு செல்லவில்லை என்று கூட மோடி கதை விட்டார். நேரு சென்றது மட்டுமல்ல அவரது சவப்பெட்டியைக் கூட தூக்கிச் சென்றார் என்று மொரார்ஜி தேசாயின் சுய சரிதை புத்தகத்திலிருந்து எடுத்துச் சொன்ன பிறகு கூட அந்த பொய்க்கு மோடி வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது வேறு விஷயம்.

இப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள “சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் ஸ்டேடியம்”  பெயர் மாற்றம் செய்யப்பட்டு “நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியம்” என்று நாமகரணம் நிகழ்ந்துள்ளது.

சர்தார் வல்லபாய் படேல் பெயரை நீக்கி உங்கள் பெயரை சூட்டுவது படேலுக்கு செய்யும் அவமதிப்பில்லையா மோடி?

ஒரு டவுட்டு

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா வென்றால் மோடியின் பெயர் ராசி என்று நிச்சயம் தம்பட்டம் அடிப்பார்கள். 

ஒரு வேளை தோற்றுப் போனால்?

தோற்றுப் போகாமல் இருக்க மேட்ச் பிக்ஃசிங் செய்வார்களோ?

 

சங்கிகள் இதற்கு பதில் சொல்வார்களா?

 

அசிங்கமா போச்சா அமித்து?

 


அமித்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் நேற்று அசிங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தில் சர்வதேச சதி உள்ளது என்று போலியாக சித்தரிக்க சூழலியல் செயற்பாட்டாளர் டில்ஷா ரவி கைது செய்யப்பட்டார்.

சதி அம்பலமாகி அசிங்கப்பட்டு நிற்கிறார்கள் பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகள்

அவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பகிர்ந்து கொண்ட டூல் கிட் தீங்கற்றது (INNOCUOUS என்ற வார்த்தை நீதிபதியால் பதிவு செய்யப்பட்டுள்ளது)

அதிலே வன்முறைக்கோ கலவரத்திற்கோ அழைப்பு விடுப்பது போல ஏதுமில்லை. தேசத் துரோகக் குற்றச்சாட்டிற்கான சிறு முகாந்திரம் கூட இல்லை. ஜனவரி 26 அன்று நடைபெற்ற செங்கோட்டை நிகழ்வுகளுக்கும் அவரது அமைப்பிற்கும் சிறு துளி அளவு கூட தொடர்பில்லை என்றெல்லாம் நீதிபதி பதிவு செய்துள்ளார்.

அவர் மீது சொல்லப்பட்ட எந்த குற்றச்சாட்டிற்கும் சிறு ஆதாரம் கூட கிடையாது என்றும் சொல்லியுள்ளார்.

அவர் ஒரு தேச விரோதி, ஆன்டி இந்தியன், தூக்கில் தொங்க விட வேண்டும் என்றெல்லாம் பல "மத்யமர்கள்" கொந்தளித்தார்கள். அவர்களுக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

Tuesday, February 23, 2021

ஆட்சியைக் கவிழ்த்தது தோற்றுப் போனவர்கள்

 



நேற்று புதுவையில் நடந்த ஜனநாயகப் படுகொலை பற்றிய பதிவைப் படித்த ஒரு புதுவை தோழர் “நியமன எம்.எல்.ஏ க்கள் எல்லாம் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு மோசமாக தோற்றவர்கள்” என்று வாட்ஸப் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று ஒரு பயணம். இரவில் வீடு திரும்புகையில் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் அந்த விபரங்களை தேடி எடுத்தேன்.

2016 சட்டமன்ற தேர்தலில் பாஜக முப்பது தொகுதிகளிலும் போட்டியிட்டது.  மொத்தம் பதிவான 7,90,881 வாக்குகளில் அது பெற்ற மொத்த வாக்குகள் 18406 மட்டுமே.

உசுடு என்ற ஒரே ஒரு தொகுதியில் மட்டும் 6,323 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது. இரண்டு தொகுதிகளில் மட்டும் தலா 1492, 1633 வாக்குகளைப் பெற்று நான்காவது, ஐந்தாவது இடங்களைப் பெற்றிருந்தது. மொத்தம் பதிவான வாக்குகளில் பாஜக பெற்றது வெறும் 2.32 % மட்டுமே.

 ஐநூறுக்கும் மேல் வாக்குகள் பெற்ற தொகுதிகள் ஐந்து. மூன்னூறிலிருந்து ஐநூறுக்குள் பெற்றது மூன்று தொகுதிகள். இருநூறிலிருந்து முன்னூறுக்குள் பெற்றது எட்டு தொகுதிகள். நூறிலிருந்து இருநூறுக்குள் பெற்றது ஒன்பது தொகுதிகள். நூறுக்கும் குறைவாகப்ப் பெற்றது இரண்டு தொகுதிகள்.

 கிரண் பேடியால் தன்னிச்சையாக நியமனம் செய்யப்பட்ட மூன்று எம்.எல்.ஏ க்களில் ஒருவர் புதுவை பாஜக தலைவர். இன்னொருவர் பாஜக பொருளாளர். இன்னொருவரோ “கல்வி வள்ளல்:. சங்கர் என்ற பொருளாளர் இறந்து போனதால் அந்த இடத்தில் விக்ரமன் என்ற இன்னொரு சங்கி நியமன எல்.எல்.ஏ ஆகிறார்.

 இந்த நியமன எம்.எல்.ஏ க்கள் பெற்ற வாக்கு விபரங்களைப் பார்ப்போம்.

 கல்வி வள்ளல் எஸ்.செல்வ கணபதி போட்டியிடவில்லை.

 லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட வி.சாமிநாதன் பெற்றது 1,492 வாக்குகள் மட்டுமே. நான்காவது இடம். வெற்றி பெற்றவர் பெற்றதோ 11,980 வாக்குகள்.

 மனவேலி தொகுதியில் போட்டியிட்ட டி.விக்ரமன் பெற்றது 172 வாக்குகள் மட்டுமே. ஒன்பதாவது இடத்தைப் பிடித்தவர் இவர். வெற்றி பெற்றவர் பெற்றதோ  9,194 வாக்குகள்.

 இன்னொரு முக்கியமான ஒன்று உண்டு. கவிழ்ப்பு வேலையை முன் நின்று செய்த கிரண் பேடி அம்மையார் டெல்லி சட்டமன்ற தேர்தலில் 2,200 வாக்குகள் வித்தியாசத்திலும் தமிழிசை அம்மையார் மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் 3,47,200 வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்றுப் போனவர்கள்.

புதுவை மக்களால் கேவலமான முறையில் நிராகரிக்கப்பட்டவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ஆட்சியை கவிழ்ப்பது என்பது எவ்வளவு மோசமான செயல்!

 

நிச்சயம் இதற்கு புதுவை மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

இப்போதும் உண்டா மோடிஜி

 


சீன ஜனாதிபதி மீண்டும் இந்தியா வரப் போவதாக இன்று செய்தி படித்தேன். கடந்த முறை அவர் வந்த போது நடந்த காட்சிகள் நினைவுக்கு வந்தன.






சீனா இந்திய எல்லைக்குள் ஊடுறுவிய காரணத்தால் கோபமாக 56 இஞ்ச் மார்பராக Go Back என்று சொல்வீர்களா?


Monday, February 22, 2021

அண்ணாமலை, நீ போலீசா இருந்தியா? இல்லை?

 



பொள்ளாச்சி சம்பவங்கள் முடிந்து போனவை என்பதால் அவை பற்றி பேச வேண்டாம் என்று சொல்லியுள்ளார் ஆட்டுக்கார அண்ணாமலை.

 அவர் நிஜமாகவே போலீசாக இருந்தாரா என்றே சந்தேகம் வருகிறது. கொலை, திருட்டு, பாலியல் கொடுமை  போன்ற எல்லா குற்றச் செயல்களும் முடிந்து போனவைதான் என்பதால் அதைப் பற்றியெல்லாம் போலீஸ் விசாரிக்க வேண்டாம், குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டாம் என்று பதவியில் இருந்த போது சொல்லி இருப்பாரோ!

 இன்னொரு சந்தேகமும் வருகிறது.

 சாமி படத்தில் விக்ரம் சொல்வது போல இவர் போலீசாக இருந்திருப்பாரா அல்லது பொறுக்கியாக இருந்திருப்பாரா? இவரே ஏதாவது பாலியல் புகாரில் சிக்கிக் கொண்டு தப்பிப்பதற்காக போலீஸ் வேலையிலிருந்து ஓடி வந்திருப்பாரா?

 மூன்றாவது சந்தேகமும் உள்ளது.

 பொள்ளாச்சி சம்பவத்தில் இவருக்கோ அல்லது இவரைச் சேர்ந்தவர்களுக்கோ ஏதாவது தொடர்பு இருக்குமோ? அதனால்தான் இவர் அது பற்றி  பேசக்கூடாது என்று சொல்கிறாரோ?

புதுவை படுகொலை புதிதல்ல.

 



 

புதுவையில் வி.நாராயணசாமி அரசு கவிழ்ந்துள்ளது. முன்னாள் போலீஸ் அதிகாரியின் சட்ட விரோத நடவடிக்கையே இன்றைய ஜனநாயகப் படுகொலைக்கு அடிப்படை.

 மாநில அரசை கொஞ்சம் கூட மதிக்காமல் தன்னிச்சையாக மூன்று காவிகளை சட்டமன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்து அவர்களுக்கு தானே பதவிப் பிரமாணமும் செய்து வைத்து படுகொலைக்கு அட்வான்ஸ் கொடுத்தார் கிரண் பேடி அம்மையார்.

 நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை கிடையாது என்பதை புதுவைக்கு மட்டும் மாற்றி படுகொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது மத்தியரசு. அந்த ஸ்கெட்சிற்கு அங்கீகாரம் கொடுத்தது உச்ச நீதி மன்றம்.

 காவிகள் காண்பித்த ஆசைக்கு அடிபணிந்து கொலைகாரர்களாக மாறினார்கள் ராஜினாமா செய்த சபலப் பேர்வழிகள்.

 மோடியின் ஆட்சியில் ஜனநாயகப் படுகொலைகள் புதிதல்ல.

 கோவா, மணிப்பூர், கர்னாடகா, மத்தியப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் என்று அதன் கொடுங்கரங்கள் செய்த கொலைகள் எண்ணற்றவை.

 இப்போது நடந்துள்ளது புதுச்சேரியில்.

 ஜாதிக்கட்சிக்கோ, மதக் கட்சிக்கோ புதுவை மக்கள் இதுவரை இடம் கொடுத்தது கிடையாது. இனியும் ஆதரிக்க மாட்டார்கள் என்றே நம்புவோம்.

மஹா பயங்கர "அயோக்கியத்தனம்" மேடம்

 


பெட்ரோல்  டீசல் விலை உயர்வு குறித்து வாய் திறந்துள்ள நிர்மலா அம்மையார் அது "மஹா பயங்கர தர்ம சங்கடம்" என்று சொல்லியுள்ளார். விலையை குறைக்க முடியாது என்பதற்கு பல காரணங்களையும் சொல்லியுள்ளார்.

விலையை நிர்ணயிப்பது எண்ணெய் நிறுவனங்களே தவிர அரசு அல்ல.

கச்சா பொருளின் விலை உயர்ந்தால் விலை உயர்வு தவிர்க்க முடியாது.

மத்தியரசு வரியை குறைத்தாலும் மாநில அரசுகள் வரியைக் குறைக்காவிட்டால் பயனில்லை. 

இதெல்லாம்தான் அவர் உதிர்த்த கருத்து முத்துக்கள்.

அவர் சொன்னதெல்லாம் சரியா?

விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்தது அரசுதான். அரசு அப்பொறுப்பை மீண்டும் தன் வசம் எடுத்துக் கொள்ள முடியும்.

கச்சா பொருளின் விலை குறைந்தாலும் இங்கே விலை குறையாமல் இருப்பதுதானே பிரச்சினை!

ஜி.எஸ்.டி வரம்பின் கீழ் பெட்ரோல்  டீசல் வந்து விட்டால் இந்தியா முழுதும் ஒரே விதமான வரிதானே இருக்கும்! அதை செய்ய ஏன் அரசு தயாராக இல்லை? ஜி.எஸ்.டி என்றால் 28 % க்கு மேல் வரி போட முடியாது. மாநிலங்களுக்கும் பங்கு தர வேண்டும். 

உண்மை இப்படி இருக்க "மஹா பயங்கர தர்ம சங்கடம்" என்று செண்டிமெண்ட் வசனம் பேசி தப்பிப்பதுதான் "மஹா பயங்கர அயோக்கியத்தனம்" நிர்மலா மேடம்.