Saturday, April 30, 2016

என் ஆதரவும் கூட . . . ஆனால்


சற்று முன் முகநூலில் பார்த்தேன். ரசித்தேன். 

ஆனால் நடக்குமா என்பதுதான் தெரியவில்லை.

 

பாமக கும்பலிடமிருந்து தப்பிய அந்த நாள்

முக நூல்தான் காலையில் நினைவு படுத்தியது.


மூன்று வருடங்களுக்கு முன்பு பாமக ரௌடிக்கும்பலிடமிருந்து தப்பிய அந்த நிமிடங்களை வாழ்வில் எந்நாளும் மறக்க முடியுது.

அப்போது முக நூலில் போட்ட இரண்டு ஸ்டேட்டஸ்கள் இங்கே

 Escaped from PMK Violence just in few seconds. Violent Mob with stones damaging vehicles passing thailapuram garden. thanks to the swift action by driver of my car, we are safe.. now travelling in an alternate route


 Thrill Continues. road block by cutting trees near cheyyar. police cleared way using jcb machines . Another 40 kms to reach home


 another road block too by cutting another tree. after diversions finally reached highways. hope to reach home in ten minutes


அந்த திகிலூட்டும் சம்பவம் குறித்த பதிவு இங்கே.

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக கும்பலை தமிழக மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். அதுதான் தமிழகத்திற்கும் சமூக அமைதிக்கும் நல்லது.

Friday, April 29, 2016

பயணங்களின் ஊடே அழகின் ஆரவாரம்



இப்போதெல்லாம் பயணங்கள் அதிகரித்து வருகிறது. இசையும் நூல்களும் பயணத்தின் அலுப்பையும் களைப்பையும் போக்கும் துணைகளாக இருக்கின்றன.

நாம் பார்க்கும் சில காட்சிகளோ பயணத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக மாற்றி விடுகின்றன. அவற்றை உடனடியாக சிறைப் பிடிக்கவும் தூண்டும்.

அப்படி எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் இங்கே.



செயற்கை விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் ஸ்ரீரங்கம் பாலம்.



திருவண்ணாமலையின் அடிவாரத்தில் அஸ்தமிக்கும் சூரியன்.

இரண்டும் அழகுதான்.


Thursday, April 28, 2016

திருமணத்திற்கு ஏனப்பா தேவையற்ற சபதம்?





வேட்பாளர்களை அறிவிப்பதும் மாற்றுவதும் அந்தந்தக் கட்சியின் உரிமை. ஆனால் அது ஒருவரின் திருமணத்தை பாதிக்கக் கூடிய அளவிற்குப் போனதுதான் கொடுமை. அந்தக் கொடுமையை அவரே வரவழைத்துக் கொண்டார் என்பதுதான் பரிதாபம் அல்லது நகைச்சுவை.

ஜெ கட்சியில் 1991 ல் கும்பகோணம் எம்.எல்.ஏ வாக இருந்தவர் ராம.ராமநாதன்.

1996 ம் சட்டமன்றத் தேர்தலின் போது தானும் மீண்டும் எம்.எல்.ஏ வாகி அம்மாவும் மீண்டும் முதல்வரான பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறார். பாவம் இரண்டு பேருமே சட்டமன்ற உறுப்பினராகக் கூட முடியாமல் தோற்றுப் போய் விட்டார்கள்.

அதற்கடுத்த தேர்தலிலும் அதே சபதம். ஜெ முதல்வரானார். ஆனால் இவர் தோற்றுப் போய் விட்டார். ஆகவே சபதம் காரணமாக திருமணத்தை தள்ளிப் போட்டு விட்டார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு மீண்டும் சீட் கிடைத்தது. அப்போதாவது வாயை மூடிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் வாய்க்கொழுப்பு யாரை விட்டது? மீண்டும் சபதமெடுத்தார். ஜெ மீண்டும் முதல்வரானாலும் இவர் தோற்றுப் போய் விட்டார்.

இந்த தேர்தலிலும் முதலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. உடனடியாக பழைய சபதத்தை தூசு தட்டி எடுத்து அறிவித்தார். ஐம்பத்தி இரண்டு வயதிலாவது அவர் சபதம் நிறைவேறி அவருக்கு திருமணம் நடக்குமா என்று தொகுதிக்காரர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள்.

ஆனால் பாவம், அம்மாவின் வேட்பாளர் மாற்று விளையாட்டில் மனிதரை முன்னாள் வேட்பாளாராக்கி விட்டார்கள்.

சபதத்தை திரும்பப் பெற்றுக் கொள்வாரா இல்லை வாஜ்பாய், என்.ரங்கசாமி பட்டியலில் இணைவாரா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

முக்கியமான பின் குறிப்பு : முப்பது வருடங்களுக்கு முன்பு எல்.ஐ.சி யில் உதவியாளராக பணியில் சேர்ந்த போது முதல் நிலை அதிகாரியான பின்பே திருமணம் செய்து கொள்வது என எனக்குள்ளேயே ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன். அதற்கான துறைத்தேர்வுகளுக்காக முதலாண்டிலேயே தீவிரமாக படிக்கவும் ஆரம்பித்தேன். பின்பு தொழிற்சங்க ஈடுபாடு அதிகரிக்க, அதுதான் வாழ்க்கைப் பாதை என்று முடிவு செய்ததும் முந்தைய சபதத்தை நான் எனக்குள்ளேயே சப்தமில்லாமல் வாபஸ் வாங்கிக் கொண்டேன்.

இவரும் வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது.

Wednesday, April 27, 2016

இந்த பேரத்திற்கு உங்களுக்கேது உரிமை மோடிஜி?



இன்றைய ஹிந்து நாளிதழ் செய்தி இங்கே உள்ளது

ஹெலிகாப்டர் ஊழலில் விபரங்கள் சேர்த்து சோனியா காந்தியை சிறை வைப்பதில் தவறில்லை.

ஆனால் அந்த விபரங்களை அளித்தால் கொலைகார இத்தாலிய மாலுமிகளை விடுதலை செய்கிறோம் என்று பேரம் பேசும் உரிமையை மோடிக்கு யார் கொடுத்தது?

இந்தியாவின் இறையாண்மையை இதை விட கேவலமாக யாரும் அடகு வைக்க முடியாது. 

இந்த லட்சணத்தில் இவங்கெல்லாம் தேச பக்தர்களாம்.

பாரத மாதாவுக்கு ஜேவாம்.

 

Tuesday, April 26, 2016

ராஜாவிடம் இளைப்பாறினேன்


வேலூரில் இன்று நூற்றி எட்டு டிகிரி வெயில் என்று சொன்னார்கள். ஆனாலும் இந்த வெயிலில் வெளியே இரு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டிய அவசியம். 

அலைச்சல் முடிந்து வீடு திரும்பிய பின்பு என்னை உற்சாகப்படுத்திக் கொள்ள இளையராஜாவைத் தவிர வேறு உடனடி நிவாரணம் என்ன உண்டு!

நான் இளைப்பாறிய இரண்டு இசைக் கோர்வைகளை நீங்களும் ரசிக்க இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஆண்டுகள் பல கடந்தாலும் இன்னும் புத்துணர்ச்சியோடு இருக்கும் இந்த அற்புதமான இசை.



இந்த திரைப்படத்தின் ஜீவன் இறுதிக்காட்சி என்றால் அக்காட்சிக்கு தன் இசை மூலம் ராஜா, ஜீவன் கொடுத்துள்ளதை   நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள். 


ராஜா, ராஜாதான்

 

ஜெ போலவே அன்றோர் ராஜீவ் பொதுக்கூட்டத்தில்






மண்டையைப் பிளக்கும் வெயில் வேளையில் நடைபெறுகின்ற ஜெயலலிதாவின் பொதுக்கூட்டங்களில் மக்கள் மாண்டு போவதும் வெயில் தாளாமல் மயக்கமுற்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப் படுவதும் தொடர்கதையாகி விட்டது. ஆனாலும் அம்மையாரின் பிரச்சாரத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. எவன் இருந்தால் என்ன, செத்தால் என்ன  என்ற அலட்சியத்தோடே அந்த அம்மையார் செயல்பட்டு வருகின்றார்.

ஜெயலலிதா கூட்டங்களில் மக்கள் என்ன அவதிப்படுவார்கள் என்று என்னால் யூகிக்க முடியும். ஏனென்றால் அப்படிப்பட்ட மோசமான அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது. அது ராஜீவ் காந்தியின் ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கிடைத்தது.

இந்திரா காந்தி கொல்லப்பட்டதும் ராஜீவ் காந்தி பிரதமராகிறார். தன் அன்னையின் மரணத்தால் கிடைத்த அனுதாபத்தை அறுவடை செய்ய மக்களவையைக் கலைத்து விட்டு தேர்தலைச் சந்திக்கிறார்.

எங்கள் குடும்பம் அப்போது நெய்வேலியில் இருந்தது. நான் மதுரையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். தேர்தல் நேரம் கல்லூரிக்கு செமஸ்டர் விடுமுறை. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நெய்வேலிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள ராஜீவ் காந்தி வருகிறார்.

அவசரநிலைக்காலம் தொடங்கியே அரசியலில் ஆர்வம் இருந்தாலும் எந்த கட்சிக்கும் ஆதரவான நிலை என்பது அப்போது கிடையாது. அப்போது வாக்களிக்கும் வயது இருபத்தி ஒன்று. அதனால் வாக்கு கிடையாது. ஆனாலும் ராஜீவ் காந்தியின் பொதுக்கூட்டத்தைப் பார்க்கப் போனேன்.

இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண்சிங் என மூன்று பிரதமர்களை பார்த்துள்ளேன் என்று கல்லூரியில் பந்தா செய்வது உண்டு. அந்த பட்டியலில் இன்னும் ஒருவரை சேர்த்துக் கொள்வதுதான் முக்கியமான நோக்கமே.

மந்தாரக்குப்பத்தில் உள்ள ஒரு திரை அரங்கிற்குப் பக்கத்தில் (சுரேஷ்குமார் பேலஸோ, சண்முகா பேலஸோ அல்லது சந்தோஷ்குமார் பேலஸோ, சட்டென்று நினைவிற்கு வரவில்லை) கூட்டம் என்று சொன்னார்கள். ஆனால் அங்கே போனால் வேறு இடத்தை கைகாட்டினார்கள். சைக்கிளில் போகிறேன், போகிறேன், போய்க் கொண்டே இருக்கிறேன். மிகக் கடுமையான உச்சி வெயில் எதிர்காற்றில் சைக்கிளை என்ன மிதித்தாலும் பொதுக்கூட்ட மைதானம் வரவேயில்லை.

வானில் ஒரு ஹெலிகாப்டர் பறக்க, இன்னும் வேகமாய் மிதித்துச் செல்கிறேன். ஒரு வழியாய் மைதானத்திற்கு வந்து விட்டேன். சைக்கிளை நிறுத்தியதும் அப்படியே சுருண்டு விழுந்து விட்டேன். சிறிது நேரம் அப்படியே தரையில் படுத்துக் கொண்டு விட்டு, ஒரு சிண்டெக்ஸ் டாங்கில் தண்ணீர் இருந்தது. கைகளில் ஏந்தி அந்த தண்ணீரைக் குடித்து விட்டு மேடையைப் பார்த்தால் அங்கே ராஜீவ் காந்தி இல்லை. வந்தது செக்யூரிட்டி ஹெலிகாப்டர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்தே ராஜீவ் காந்தி வந்தார். அவரது உரை அப்படியொன்றும் ஈர்க்கவில்லை என்பது வேறு விஷயம்.

மீண்டும் வெயிலில் சைக்கிளை லொங்கு லொங்கு என்று மிதித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். அப்படியே படுத்துக் கொண்டவனால் சாப்பிடக் கூட எழுந்து கொள்ள முடியவில்லை. வெயிலில் பட்ட அந்த அவஸ்தை பின்பு காய்ச்சலாக மாறியது. மந்தாரக்குப்பத்தில் உள்ள ஒரு மருத்துவரிடம் இரண்டு நாட்கள் காண்பித்தும் குணமாகவில்லை. டைபாய்டாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லி அவர் என்.எல்.சி பொது மருத்துவமனைக்குப் போகச் சொல்லி விட்டார்.

அங்கே அது டைபாய்ட்தான் என்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில தினங்கள் அங்கே இருக்க வேண்டியிருந்தது. அங்கே கிடைத்த ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை முன்பே எழுதியுள்ளேன். அந்த அனுபவம் என்னவென்று அறிய இங்கே செல்லுங்கள் 

அப்போது இள வயது என்பதால் டைபாய்டோடு முடிந்து போனது. இதுவே ஏற்கனவே உடல் உபாதை உள்ள வயதானவர்களாக இருந்தால் கண்டிப்பாக வாக்காளர் எண்ணிக்கை குறையும் நிலைதான் ஏற்பட்டிருக்கும்.

இப்போது வெயிலின் நிலைமை இன்னும் மோசம்.

ஆனால் மோசமான வெயிலில் மக்களைக் காக்க வைக்கும் அலட்சியம் மட்டும் தொடர்கிறது.

இப்படிப்பட்ட கூட்டங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

சிரிப்பு மூட்டும் சீமான் வரலாறு

வாட்ஸப்பில் வந்தது.
செய்தி சூப்பர். அதற்கான படமோ  சூப்பரோ சூப்பர்

செபசுடீன் சைமன் அவர்களின் 
"" பயோடேட்டாவும் பச்சோந்தி தனமும்""

1, பிறந்தது 1970 சொந்தஊர் சிவகங்கை இன்னும் உறுதிபடுத்தபடவில்லை

2, தனது 15வயது வரை பெரியார் கொள்கையால் ஈர்க்கபட்டதாக சொல்லி கொள்வார் நம்பவேண்டாம்

3, 1985 முதல் 1990 வரை தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எதுக்காக விளக்கம் தேவை

4,1990 க்கு மேல் மீண்டும் கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இணைந்தார்... ஆனால் அந்த கட்சி மேடைகளில் பெரியார் தத்துவம் பேசியதால் அடித்து விரட்டப்பட்டார்.....

5,பிறகு பொழப்பு தேடி சென்னை வந்தார் (வந்தேறி) சினிமா இயக்க மணிவண்ணன் பாரதிராஜா விடம் உதவியாளராக சேர்ந்தார்....

6, எப்படியோ 1997 ம் வருடம் பிரபுவை வைத்து பாஞ்சாலங்குறிச்சி எடுத்தார் பிறகு வீரநடை இனியவளே படம் தோல்வியாக காணாமல் போனார் ( தெலுங்கு படத்தில் உதவி இயக்குநரானார்)

7,1999 முதல் 2006 வரை யாரும் புதுக்கதை சொல்ல வரவில்லை வந்திருந்தால் திருடி படம் எடுத்திருப்பார் பிறகு தம்பி படம் எடுக்க இலங்கை சென்றார்.....(அது ஒரு புதிய் கதை)

8, அப்போது தான் முதல் முதலாக ஈழத்தமிழர் வேதனையை அறிகிறார் போலும்....

9, தலைவர் பிரபாகரனின் காசுக்காக சிபா ஆதித்தனாரின் நாம் தமிழர் அமைப்பை தூசு தட்டுகிறார்....
(ராஜ்கிரண் பேட்டியை பார்த்தால் உண்மை விளங்கும் )

10, இதற்கு இடையில் தன்னை புகழ் படுத்திகொள்ள புரட்சி கலைஞர் கேப்டன் ஆரம்பித்த தேமுதிகவில் 2006 தேர்தலில் பணியாற்றியவர் ( முக்கிய குறிப்பு அப்போது விஜயகாந்த் தமிழர்)

11, பிரபாகரன் உயிருடன் இருந்த வரை தமிழ் அமைப்பாக இருந்த கட்சி மறைவு( நான் நம்பவில்லை) பிறகு ஈழமக்களுக்கு குவியும் ஆதரவையும் உதவிகளையும் தனதாக்க அரசியல் கட்சியாக்கினார். சிபா ஆதித்தனார் ஆத்மா கூட மண்ணிக்காது....

12, நாடாளுமன்ற தேர்தல் இலை மலர்ந்தால் ஈழம் மலரும்
தற்போது தமிழனே தமிழ்நாட்டை ஆளவேண்டும்( 2014 ஜெயலலிதா தமிழர்)

13, பெரியார் என் தந்தை தற்போது பெரியார் வந்தேறி வடுகரு

14, பெரியார் கொள்கைதான் நாம்தமிழர் அமைப்பின் முன்னோடி ஆனால் திராவிடம் ஒழிக முப்பாட்டன் முருகன் ( சிரிக்காமல் படிக்கவும்)

15, தற்போது நான் மட்டும் தான் தமிழன் யாரெல்லாம் செலவுக்கு பணம் கொடுத்தாலும் தமிழர் பட்டியலில் இடம்பெறலாம் ( காரிதுப்பகூடாது)

16 நாம் தமிழர் கட்சி தேர்தல் செலவுக்கு கூட மக்களிடம் தான் கையேந்துகிறது ஆனால் அண்ணனுக்கு மட்டும் விலை உயர்ந்த கார் வாங்க காசு?!???

17, தமிழ்நாட்டுக்கு நான்கு தலைநகரம் உருவாக்கப்படும் ( அண்ணே இன்னும் தூக்கத்துல இருக்காரு)

18, தனது மாமனார் காளிமுத்து படம் தலைவர்கள் புகைப்படத்துடன் இணைத்து தமிழராக்கினார்( ஏன் எதுக்குனு கேட்க கூடாது

19, தன் கட்சிக்கு யாரு ஆதரவு தந்தாலும் அனைவரும் தமிழர்கள் இல்லைனா வந்தேறிகள்

20 யாரெல்லாம் தமிழர்கள் என தெரிய அண்ணனை அணுகவும் ஏன்னா அண்ணகிட்டதான் தமிழன் காப்புரிமை மற்றும் பதிப்புரிமை உள்ளது

21, சோழர்கள் தமிழர்கள் ஆனால் அவர்கள் வணங்கிய சிவன் வந்தேறி

22, முருகன் முப்பாட்டன் சிவன் வந்தேறி பார்வதி முப்பாத்தாள்

100% நகைச்சுவை ...
தொகுப்பு - கூகுள் மற்றும் பத்திரிகை செய்திகள்
பின் குறிப்பு 
சீமான் மார்க்சிஸ்ட் கட்சியில் எப்போதும் இருந்ததில்லை. வேறு கம்யூனிஸ்ட் கட்சி எதிலாவது இருந்தாரா என்று தெரியாது. தமுஎச மேடைகளில் ஏற்றியதன் தண்டனையாக தோழர் அருணனை வசை பாடினார் இந்த  அறிவாளி.

Monday, April 25, 2016

கண்ணீர் துடைத்து சாட்டையெடுங்கள் யுவர் ஹானர்





“நீதித்துறையை செயல்பட அனுமதியுங்கள்” என்று கண்ணீர் பொங்க கதறியுள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு டி.எஸ்.தாகூர். நீதிபதிகளின் காலியிடங்களை நிரப்ப முடியாத நிலையை மாற்றிட ஒத்துழையுங்கள் என்று மத்தியரசிடம் மன்றாடியுள்ளார். நானூற்றுக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதென்றும் நூற்றி அறுபத்தி ஒன்பது காலியிடங்களுக்கு மத்தியரசு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர் பேசினார்.

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் மத்தியரசு எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறது என்றும் குற்றம் சுமத்திய தாகூர், அதனால் ஆயிரக்கணக்கான ஏழைகள் சிறைகளில் வாடுகின்றனர் என்றும் வருத்தப்பட்டுள்ளார்.

“சோதனை மேல் சோதனை” பாட்டின் இடையே “காய்ஞ்சு போன நதியெல்லாம் கங்கையைப் பார்த்து ஆறுதல் கொள்ளும். அந்த கங்கையே வற்றிப் போனா?” என்று வருகிற வசனம் போல் உள்ளது தலைமை நீதிபதியின் பேச்சு.

மத்திய அரசையும் கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளது உச்ச நீதிமன்றம். தேவைப்பட்டால் அவதூறு வழக்கு கூட தொடுக்க முடியும். மத்தியரசை கண்டிக்கவும் அதனால் முடியும். அப்படி அதிகாரம் இருக்கையில் கண்ணீர் எதற்கு யுவர் ஹானர்?

நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்றும் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்ற உங்களின் நியாயமான எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

அதே நேரம் மக்களாகிய எங்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வீர்களா யுவர் ஹானர்?

நீதிபதிகளை நீதிபதிகளே தேர்ந்தெடுக்கும் கொலோஜியம் முறையை ஏன் பிடிவாதமாக பின்பற்ற விரும்புகிறீர்கள்? நீதிபதிகள் நியமனத்தில் ஏன் வெளிப்படைத்தன்மை இருப்பதை மறுக்க நினைக்கிறீர்கள்?

நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால்தான் ஒரு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்ற அளவிற்கு பாதுகாப்பு ஏன் தேவைப்படுகிறது?

நீதித்துறையிலும் ஊழல் மலிந்து வருகிறது என்ற குற்றச்சாட்டைப் போக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

மரியாதைக்குரிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களே, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சாட்டையை கையிலெடுங்கள். உங்கள் நடவடிக்கைகள் நீதிபதிகளின் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும், புல்லுருவிகளை அகற்றி நீதித்துறையின் மாண்பையும் மக்கள் அதன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாக்கவும் வழி வகுக்கட்டும்.