Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Tuesday, July 16, 2024

பத்ரிநாதரும் பாஜகவை கைவிட்டார்

 


தெய்வங்கள், அவர்களுக்கான கோயில்கள் ஆகியவற்றை வைத்து அரசியல் செய்யும் பாஜகவிற்கு முக்கியமான கோயில்கள் அமைந்துள்ள தொகுதிகளிலேயே தோல்விதான் கிடைத்து வருகிறது. முந்தைய சம்பவம் அயோத்தியில். தற்போதைய சம்பவம் உத்தர்கண்டில் உள்ள பத்ரிநாத்தில்.

13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் 11 தொகுதிகளில் இப்போது பாஜக தோற்றதல்லவா! அதில் ஒன்று பத்ரிநாத்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு ராஜேந்திரசிங் பண்டாரி என்பவர் தாவினார். அதனால் அங்கே இடைத்தேர்தல். இப்போது பாஜக சார்பாக நின்ற பண்டாரியை வாக்காளர்கள் தோற்கடித்து காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்துள்ளார்கள்.

மக்கள் அருள் மட்டுமல்ல, கடவுள் அருள் கூட பாஜகவிற்கு குறைந்து கொண்டே வருகிறதே!


Saturday, December 16, 2023

தந்தை பெரியாரை கடவுளாக்கும் காவிகள் ...

 


காவிச்சங்கிகள் தந்தை பெரியாரை இழிவு படுத்துவதாக நினைத்து ஒரு படத்தை உலவ விட்டுள்ளார்கள்.

பன்றியின் வடிவத்தில் அவரை வரைந்து கையில் யூரின் பேக்கேடு நிற்பது போல வரைந்துள்ளார்கள்.

சங்கிகளைப் பொறுத்தவரை எலி வினாயகரின் வாகனம், நாய் பைரவரின் வடிவம், பசு மாடு கோமாதா. அதே வரிசையில் பன்றி மகாவிஷ்ணுவின் வராக அவதாரம். ஆக சங்கிகள் தந்தை பெரியாரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதியுள்ளார்கள்.

அப்படியெல்லாம் இல்லை, இழிவுபடுத்தத்தான் வரைந்தோம் என்று சொல்வார்களா?

அப்படி சொன்னால் அது மகா விஷ்ணுவை இழிவு படுத்துவதாக அமைந்து விடாதா?

தசாவதாரம் படத்து பாட்டு நினைவுக்கு வருகிறதே!

"கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது"

சங்கிகள்தான் சொல்ல வேண்டும்.

உங்களுக்கு தெரிவது என்ன?

பன்றியா? வராக அவதாரக் கடவுளா?

பிகு : தந்தை பெரியாரை இழிவு படுத்துவதாக நினைத்து அவர் கையில் யூரின் பேக் பிடித்திருப்பதாக படம் போட்டுள்ளார்கள். சிறு நீரகக் கோளாறு உள்ளவர்களையெல்லாம் அசிங்கப்படுத்துகிறார்கள். ஆயிரக் கணக்கானவர்கள் இன்று சிறுநீர் பை பயன்படுத்தும் தேவை உள்ளவர்கள்தான். என் தந்தைக்குக் கூட பக்க வாதம் வந்த பின்பு அவர் வாழ்வின் கடைசி ஆறு மாதங்கள் சிறுநீர் பையுடன் தான் இருந்தார். இதில் வெட்கப்பட ஏதுமில்லை.

ஏபிவிபி யின் அகில இந்தியத் தலைவன் டாக்டர் சுப்பையா, பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததும் மத்தியப் பிரதேசத்தில் பாஜக பண்டிட் ஒருவன் ஒரு பழங்குடி மீது சிறுநீர் கழித்ததும்தான் அசிங்கம்.

Tuesday, August 12, 2014

பிள்ளையாருக்கு சக்தி கொடுத்து பறிக்கும் மனிதர்கள்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEic35adI7xl45fiB6pJXbJVFrdRD2Y4Kn50SLgwyr_W0UxHUaAxiiilaYxmzk0ZCMEgnrCk0e8RO-IFbPOG1OVrFRHKa8r7PEsAUyYxxDmqz2Xvtmbo3aqGz6xilqA5vSuDjteOzCETS0fk/s1600/police.jpg

நேற்று விருத்தாச்சலம் போய் திரும்பி வந்து கொண்டிருந்தோம். நாங்கள் சென்ற வாகனத்திற்கு முன்பாக ஒரு குட்டி யானை லாரி  நான்கைந்து  பிள்ளையார் சிலைகளை ஏற்றிக் கொண்டு  போய்க்கொண்டிருந்தது. அதிலே இரண்டு பிள்ளையார்களை தலைகீழாக வேறு வைத்திருந்தார்கள். அடிமாடுகளை லாரியில் மூச்சுவிடக் முடியாமல் அவஸ்தை செய்து கூட்டிப் போவார்களே அது போன்ற நிலைதான் பிள்ளையார் சிலைகளுக்கும்.

விழுப்புரம் வெளியே ஒரு விடுதியில் உணவு எடுத்துக் கொள்ளச் சென்ற போது "பாவம் பிள்ளையார் இவங்க கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப் படறாரு, அவர்தான் சக்தியுள்ளவராச்சே. போக வேண்டிய இடத்திற்கு அவரே போயிடலாமே" என்றேன் நான்.

பக்கத்தில் நின்று கொன்டிருந்த ஒரு பெரியவர் " பந்தலுக்கு கொண்டு வந்து பூஜை செய்து கண் திறந்த பின்புதான் அவருக்கு சக்தி வரும்" என்றார்.

"சரி சார், அவ்வளவு சக்தியுள்ளவரை கட்டையால் அடிச்சு ஏன் கடலில் தள்ளனும்" என்ற கேள்விக்கும் அவரிடம் பதிலளித்தார்.

"விஸ்ர்ஜன பூஜை முடிந்ததும் அவருக்கு சக்தி இருக்காது. அதனால் தவறில்லை"

அதற்கு பிறகு நான் ஹோட்டலுக்கு  உள்ளே போய் விட்டேன். அவரும் கிளம்பி விட்டார்.

ஆனால் அவர் ஒரு உண்மையை அழகாக சொல்லி விட்டார்.

கடவுளை படைத்தது மனிதன்தான். கடவுளுக்கு சக்தி இருப்பதாய் கதை செய்வதும் மனிதன்தான். 


Tuesday, September 17, 2013

வெள்ளிப் பிள்ளையாரை வீசியவர்களையும் கடலில் வீசினால் என்ன?




விடுதலைப் போரின்
வரலாறு சொல்கின்ற
கம்பீரக் கோட்டை,

தலைவர்கள் முதல்
தற்குறிகள் வரை
அடைபட்ட
வதைபட்ட 
சிறைச்சாலை,

உறவு இல்லாத
ஊரானாலும் 
நம்பிக்கையை
மனதிலேந்தி 
வந்து குவியும்
மருத்துவ மனை,

இவைதான் 
எங்கள் ஊரின்
அடையாளமாய்
கொண்டிருந்தோம்.

புதிதாய் முளைத்தது
தங்கத்தகடுகள் வேய்ந்த
கோயில் ஒன்று.
மனிதரே  கடவுளாய் 
மாறி நிற்கும்
அதிசயங்கள் 
இங்கும் உண்டு.

அங்கிருக்கும் அகழியில்
அன்றொரு நாள் பார்த்தேன்
ஆயிரம் ரூபாய் கட்டு
மிதக்கின்ற கொடுமைதனை.

ரூபாயின் மதிப்பு ஏன்
குறையாது?
அதை உணராத 
மாக்களிடம் புழங்கும்போது.

இன்றும் கூட 
ஒரு செய்தி.
பத்து லட்சத்தில்
வெள்ளிச் சிலை செய்து
ஆழ்கடலில் மூழ்க
வைத்த மூடர்கள் பற்றி.

வறுமையைப் புரியாத,
ஏழை மக்கள் 
ஏக்கத்தை அறியாத
அவர்களின் இதயம்
என்ன இரும்பால் செய்ததா?

தாலி வாங்கித் தந்திருந்தால்
சில பெண்களின் 
தவிப்பு தீர்ந்திருக்கும்

பால் வாங்கித் தந்திருந்தால்
பல குழந்தைகளின்
பசி அடங்கியிருக்கும்.

பாழும் கடலில்
வீசினீரே,
உம்மையும் அதிலே
வீசினால் என்ன?
 
 

 

Wednesday, September 26, 2012

பணக்கார சாமியானதால் ! பறிபோன தலித் சாமி !

 -தோழர் பி.சம்பத்,
தலைவர்,
தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி.






வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை நகரத்தில் உள்ளது அம்பேத்கர் காலனி (இப்பகுதியின் முந்தைய பெயர் பாக்குப் பேட்டை) இங்கு பல நூற்றுக்கணக்கான தலித் குடும்பங்கள் 5 தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு நூற்றாண் டுக்கு முன்னதாக இவர்கள் வழிபடுவதற்கு என்று தங்கள் கால னியின் முன்பகுதியில் சோளிங்கர் பிரதான சாலையை யொட்டி ஒரு வழிபாட்டு தலத்தை உருவாக்கினர். முதலில் சில செங்கல்களை மட்டும் அடுக்கி வைத்து வழிபட்ட அவர் கள் பிறகு சிறிய மேடை கட்டி அதன் மேல் சாமியை வைத்து வழிபட்டனர். தாங்கள் வழிபடும் சாமிக்கு அம்மாவட்டத்தில் பிரபலமான சாமியான படவேட்டம்மன் என பெயரிட்டனர். அந்த பிரதான சாலை வழியாக செல்லும் லாரி டிரைவர் கள் அங்கு வண்டிகளை நிறுத்தி வழிபட்டு காணிக்கையாக நிதியளித்துவிட்டுச் சென்றனர். ஏராளமான லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டு ஏராளமான நிதிய ளித்ததால் சிறிய அக்கோவிலின் வருமானம் பெருகியது. இதனால் கோவிலும் சற்று விஸ்தரிக்கப்பட்டு அம்மன் சிலை யும் பெரிதாக வைக்கப்பட்டது. காலப்போக்கில் வருடந் தோறும் பல லட்சம் ரூபாய் வருமானம் வரும் கோவிலாக மாறி விட்டது. வருடத்திற்கு 50 முதல் 60 லட்சம் வரை நிதி திரள்வ தாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இதனை தலித் மக்கள் நிர்வகிக்கப் பொறுத்துக் கொள்வார்களா ஆதிக்க சக்திகள்?, கோவிலுக்கு கொடை நடத்துவது என்ற பெயரால் ஆதிக்க சக்திகள் தலித்துகளிடமிருந்து தந்திரமாக வும், படிப்படியாகவும் கோவில் நிர்வாகத்தை கைப்பற்றிக் கொண்டு விட்டனர். தலித்துகள் வழிபடும் சாமி பணக்கார சாமியானதால் அவர்களின் சாமியையும் கைப்பற்றிக் கொண்டார்கள் ஆதிக்க சக்திகள். இவ்வளவிற்கும் இக் கோவிலைச் சுற்றிலும் தலித் மக்கள் தான் மிகக் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.ஆதிக்க சக்திகள் சார்பாக தற்போது இக்கோவிலை நிர்வகிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர் துரைவேல் என்பவர். இவர் ஒரு லாரி உரிமையாளர், அஇஅதிமுகவின் பிரமுகரும் கூட. கோவிலுக்கு வருடம் தோறும் கிடைக்கும் பல லட்சக்கணக்கான ரூபாய் வரு மானத்தை சுயநலத்தோடு நிர்வகித்து வருகிறார்.


இதுமட்டுமல்ல. காலம் சென்ற திரு. நாராயணசாமி என்பவர் தனக்குச் சொந்தமான கோவிலைச் சுற்றியுள்ள 5 ஏக்கர் நிலத்தில் 2 /2 ஏக்கர் நிலத்தை அம்பேத்கர் நகர் தலித் மக்களுக்கும், எஞ்சியுள்ள 2 1/2 ஏக்கர் நிலத்தை இக்கோவி லுக்கும் எழுதி வைத்துள்ளார். தலித் மக்களுக்கு எழுதி வைக் கப்பட்ட 2 1/2 ஏக்கர் நிலம் 50 தலித் குடும்பங்களுக்கு குடி மனைப்பட்டாக்களாக வழங்கப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி யுள்ள மற்றொரு 2/2 ஏக்கர் நிலம் தற்போது தலித் மக்களின் பயன்பாட்டில் உள்ள நிலமாகவும் அவர்களின் நடைபாதை யாகவும் பயன்பட்டு வருகிறது. இந்நிலத்தில் உள்ளடங்கி தலித் மக்களின் 3 வீடுகளும் உள்ளன. இவர்கள் 40 ஆண்டு களுக்கும் மேலாக அங்கு குடியிருந்து வருகின்றனர். கோவி லுக்குச் சொந்தமான இந்நிலத்தின் தற்போதைய மதிப்பு பல கோடி ரூபாயாகும். தற்போது துரைவேல் உள்ளிட்ட ஆதிக்க சக்திகள் இந்நிலத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.படவேட்டம்மன் கோவிலைச் சுற்றி ஏற்கனவே காம்ப வுண்டு சுவர் உள்ளது. தற்போது கோவிலைச் சுற்றியுள்ள தலித் மக்களின் பயன்பாட்டையும் நடைபாதையாகவும் பறிக்கும் வகையில் ஆதிக்க சக்திகள் 15 அடி உயரத்தில் மற்றொரு சுற்றுச் சுவரைக் கட்டி நிலத்தை தமது கட்டுப் பாட்டிற்குள் வளைத் துப்போட்டுள்ளனர். இந்நிலத்தில் தீர்வை ரசீது, மின்கட்டண ரசீது, ரேஷன் கார்டு உள்பட தக்க ஆதாரங்களுடன் வாழ்ந்து வரும் 3 தலித் குடும் பங்களின் வீடுகளையும் காலி செய்யவும் இடித்து தரை மட்டமாக்கவும் மிரட்டி வருகின்றனர். கோவி லுக்கும், தலித் மக்களின் பயன்பாட்டிற்கும் சொந்தமான நிலத்தில் துரை வேலுவும் இதர சில லாரி உரிமையாளர் களும் தங்களது லாரிகளை கழுவி விடவும் நிறுத்திக் கொள்ளவும் முடிவு செய்து இந்த அடாவடித்தனமான செயலில் இறங்கியுள்ள னர். சுற்றுச் சுவரின் பல முனைகளில் லாரிகளை கழுவ உதவும் குழாய் இணைப்புக்களையும் பொருத்தியுள்ளனர். ராட்சத பம்பு செட் வைத்து இந்நிலத்தடி நீரையும் கொள்ளை யடிக்கத் திட்டமிட்டுள்ளனர். காலம் காலமாக தலித் மக்கள் நடந்து வந்த நிலத்திற்குள் ஆதிக்க சக்திகள் அத்துமீறி நுழைந்து தங்கள் சொந்த லாபத்திற்காக கட்டிக் கொண்ட இந்த சுவரில் ஒரு பாதை ஏற்படுத்திக் கொண்டதற்காக தலித் மக்கள் கடுமையாக மிரட்டப்படுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வாறு மிரட்டி அடாவடித்தனம் செய்வது ஆதிக்க சக்திகள் மட்டுமல்ல அரசு நிர்வாகமும், காவல்துறையும் சேர்ந்து தான்.கோவில் சொத்தை கொள்ளை யடித்து நிலத்தையும் ஆக்கிரமித்து சுவர் எழுப்பியதை வேடிக்கை பார்த்த அரசு அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் இதனால் பாதிக் கப்பட்ட தலித் மக்கள் மீதே பொய் வழக்கு போட்டுள்ளனர்.


அத்து மீறல்கள் செய்து கட்டப் பட்டுள்ள அக்கிரமமான தீண்டாமைச் சுவருக்கு காவல்துறை யினரே பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ள வெட்கக் கேடும் அரங்கேறியுள்ளது. மொத்தத்தில் 300 ஆண்டுகாலமாக கோவில் நிலத்தைச் சார்ந்து வாழ்ந்து வரும் அம்பேத்கர் நகர் தலித் மக்களின் வாழ்வுரிமையும், பாதை உரிமை யையும் சில தனி நபர்கள் தங்கள் சொந்த ஆதாயத்திற்காக பறித்துள்ள போது ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் வேடிக்கை பார்த்துள்ளது. ஊழல் அதிகாரிகள் சுயநல ஆதிக்க சக்திகளின் கைப்பாவை யாக மாறியுள்ளது கண்டு தலித் மக்களும் ஜனநாயக சக்திகளும் கொதிப்படைந்துள்ளனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ஆகிய அமைப்புகள் இப்பிரச்சனைகள் குறித்து மாவட்ட நிர்வாகத் தின் கவனத்திற்கு கொண்டு சென்று கடிதங்கள் கொடுத்த பிறகும் எந்த மாற்றமும் இல்லை. இம்மக்களின் பிரச்சனைக ளுக்காக இந்த அமைப்புகள் ஒரு கண்டன இயக்கத்தையும் நடத்தியுள்ளன. சுயநல சக்திகளின் அத்துமீறல் கண்கூடாக நடந்துள்ள நிலையில் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அப்பாவி மக்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டுவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தை என இழுத்தடிக்கும் நிலைபாட்டிலேயே அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தீண்டாமை, வன்கொடுமை தமிழகத்தில் இல்லை என வெட் டிச் சவடால் பேசிய அதிமுக அமைச்சர் பெருமக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வுகள் இவை.22.9.2012 அன்று அம்பேத்கர் நகர் பகுதிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி. சம்பத், சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினர் என். குண சேகரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ. நாராயணன், விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கவிதா சம்பத், மாவட்ட நிர்வாகி சம்பத், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளர் தினகரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் சக்திவேல், மாநிலத் துணைத் தலைவர் லதா, மாதர் சங்க மாநில நிர்வாகி சங்கரி, வாலாஜாபேட்டை சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ஊர் நாட்டாமை பெரியவர் மணி, துணை நாட்டாமை பிரகாஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சென்றனர்.ஆக்கிரமிக்கப்பட்ட நிலம், நடைபாதை அத்துமீறலால் கட்டப்பட்டுள்ள சாதிச் சுவர், சிறைச்சாலைக்குள் அமைந்தது போல உள்ள 3 தலித் வீடுகள் போன்றவற்றை நேரில் கண்ட னர். மக்கள் நெஞ்சம் கொதிப்போடும், ஆவேசத்தோடும் தங்க ளது பாதிப்பை விவரித்தனர். தலைவர்கள் மக்களுக்கு ஆறுத லும் நம்பக்கையும் அளித்ததோடு செப்டம்பர் 29ம் தேக்குள் மாவட்ட அரசு நிர்வாகம் அந்த சுவரை அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.


அரசு நிர்வாகம் அவ்வாறு செய்யத் தவறினால் செப்டம்பர் 30ல் மேற்கண்ட அமைப்புகள் சார்பாக நேரடி நடவடிக்கையில் இறங்குவதென தீர்மானிக்கப்பட்டது. சுவர் அப்புறப்படுத்தப் படுவதோடு மிகுந்த வருமானம் வரும் கோவில் நிர்வாகத்தை தலித் மக்க ளிடம் ஒப்படைக்குமாறும் இல்லையேல் தமிழக அரசின் அறங் காவலர் துறையே இக்கோவிலை ஏற்று நடத்துமாறும், தலித் மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகிற நடைபாதையில் அப்புறப்படுத்தித் தருமாறும், கோவில் நிலத்தில் வாழும் 3 தலித் குடும்பங்களின் வீடுகளையும் பாதுகாக்குமாறும், தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெறு மாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில அளவில் அறைகூவல் விடுத்துள்ள செப்டம்பர் 30ல் ஆதிக்க சக்திகளுக்கும், அவர்களுக்குத் துணைபோகும் அரசு நிர்வாகத்திற்கும் எதி ராக பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மட்டுமல்ல வேலூர் மாவட் டம் முழுவதுமிருந்து சாதிபேதமற்ற முறையில் உழைப்பாளி மக்களும், ஜனநாயக சக்திகளும் வாலாஜாபேட்டையில் ஆவேசமாக அணி திரளப் போகிறார்கள். தமிழக அரசு தாமதமின்றி தலையிடுமா?

 நன்றி - தீக்கதிர் 

பின் குறிப்பு ;  மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள்
மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள்
நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்தபோது பிடி கொடுக்காமலே
பேசியுள்ளார்.  ஆதிக்க சக்திகளில் சிலரையும் பாதிக்கப்பட்ட
மக்களில் சிலரையும்  நேற்று நள்ளிரவு முதல் இன்று
அதிகாலை வரை கைது செய்துள்ளனர். போராட்டத்தை
பலவீனப்படுத்தும் முயற்சி இது. ஆனாலும் மக்கள் 
உறுதியாக உள்ளனர். போராட்டத்திற்கான தயாரிப்புக்கள்
நடந்து கொண்டிருக்கிறது, வேகமாகவே. 


Tuesday, September 25, 2012

பக்தி எனும் போதையா அல்லது போதையால் பக்தியா?





இந்தத் தலைப்பை படிக்கும் போதே ஆன்மீகவாதிகள் சிலருக்கு சுருசுருவென்று கோபம் வரும். ஆனால் வேறு வழியில்லை. நான் பார்த்த காட்சிகளை இங்கே கண்டிப்பாக பதிவு செய்தாக வேண்டும். அதற்கு இதைத்தவிர வேறு பொருத்தமான தலைப்பு கிடையாது என்பதை படிப்பவர்களின் மனசாட்சி கண்டிப்பாக ஒப்புக்கொள்ளும்.

வட நாட்டிலிருந்து இறக்குமதியான பிள்ளையார் பெரு உருவச்சிலை, அதைக் கடலிலோ அல்லது ஆற்றிலோ அல்லது குளம் ஏரியிலோ கொண்டு சேர்க்கும் விஸர்ஜன ஊர்வலம் இது எல்லாமே பக்தியின் அடிப்படையிலானது அல்ல, சங் பரிவார அமைப்புக்களின் அரசியல் நாடகம் என்பதும் அதற்கு அப்பாவிகள் பலர் இரையாகி வருகின்றனர் என்பது எனது உறுதியான நிலைப்பாடு. இதுதான் உண்மையும் கூட.

இந்த ஆண்டு இருபத்தி ஒன்றாம் தேதி கடலூர் சென்றேன். வேலூர், திருக்கோயிலூர், பண்ருட்டி, கடலூர் ஆகிய இடங்களில் அன்றுதான் வினாயகர் ஊர்வலம். குட்டி யானை லாரிகளிலும் ட்ராக்டர்களிலும் வினாயகர் ஏற்றிக் கொண்டு வரப்படுகின்றார். அந்த வாகனம் முழுதும் இளைஞர்கள். அத்தனை இளைஞர்களும் குடி போதையில்தான் உள்ளனர். போதையில் வெறிக் கூச்சல் எழுப்பிக் கொண்டே இருந்தார்கள்.

அத்தனை ஊர்களிலும் அத்தனை பிள்ளையார்களோடும் நான் பார்த்த காட்சி இது. பக்தி உச்சத்திற்கு ஏறி நிச்சயமாக இப்படி நடந்து கொள்ளவில்லை. இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு போதையேற்றப்படுபவர்கள்.

இவர்கள் மற்ற நாளெல்லாம் கோயில்களுக்குச் செல்வார்களா என்பது கூட  சந்தேகம். ஏற்கனவே தமிழக இளைஞர்கள் டாஸ்மாக் ஆக்கிரமிப்பிற்கு சென்று கொண்டுள்ள வேளையில் இது போன்ற உசுப்பேற்றும் வேலைகள் நிச்சயம் தமிழகத்திற்கு ஆரோக்கியமான ஒரு போக்கு அல்ல.

உண்மையான கடவுள் நம்பிக்கையாளர்கள் இதனை முறைப்படுத்துவார்களா?

Wednesday, September 19, 2012

பிள்ளையாரை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்கப்பா.....



எல்லா ஊர்களைப் போல வேலூரிலும் வினாயகர் சதுர்த்தி
பரபரப்பாக உள்ளது. அங்கங்கே குட்டியும் பெரிசுமாய் 
வினாயகர் சிலைகள். வசூலின் தன்மை மற்றும் வசூலித்தவர்கள்
நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் கீற்றுப் பந்தலிலும்
அலங்கார ஷாமியானாவிலும் வினாயகர் அமர்ந்து 
அருள் பாலிக்கிறார். வாய்ப்பு கிடைக்கிற இடங்களில் 
எல்லாம் இந்து முன்னணி காவிக்கொடியை பறக்க விட்டுள்ளது.

பொம்மைக் கலைஞர்கள், மண் பாண்டக் கலைஞர்கள், அழகாய்
குடை செய்யும் நாடோடி இனத்தவர், பூ, பழ வியாபாரிகள்,
பந்தல் போடுபவர்கள், மைக் செட் வைப்பவர்கள்,
ஆகியோருக்கு  சுமாரான வருமானம் கிடைக்கிறது என்ற
வகையில் வினாயகர் சதுர்த்தி ஓ.கே. பெரிய கடைகளில்
எந்நாளும் வாய் திறவாமல் கிரெடிட் கார்டை தேய்க்கக்
கொடுக்கிற பெரிய மனிதர்கள், இந்த சிறிய கலைஞர்களிடம்
மட்டும் பேரம் பேசுவது ஒரு கொடுமை.

 ஆனால் ஒரு விதத்தில் இந்த பக்தர்கள் வினாயகரைப் 
போட்டு படுத்தும் பாடுதான் தாங்க முடியவில்லை. 
சம்பிரதாயத்திற்கு ரெண்டு பக்தி பாட்டு போட்ட பிறகு
அதற்குப் பின்பு வெறும் குத்துப் பாட்டுதான். சாலையோரம்
செல்லும் நம்மாலேயே அந்த இரைச்சலைக் கேட்க 
சகிக்கவில்லை. 

அதிலும் சில பாடல்களை கேட்டால் வினாயகரின்
பிரம்மச்சரிய விரதத்தை கலைத்து அவரையும்
கல்யாணம் செய்ய வைத்து விடுவார்கள் போல.

நாள் முழுதும் பாவம் இந்த பாடல்களை கேட்க வேண்டிய
நிலையில் இருந்து கொஞ்சம் வினாயகரைக் 
காப்பாற்றுங்களேன். 

பி.கு : ஒரு தொழிற்சங்கமோ, அரசியல் கட்சியோ 
மக்கள் பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டத்திற்கு
ஒலி பெருக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டால்
ஆயிரம் நிபந்தனை போடும் காவல்துறை இந்த
ஒலி பெருக்கிகளை கண்டு கொண்டதே இல்லை.
நாயகனில் வேலு நாயக்கர் வைத்த ஒலி பெருக்கிகளை
அசிஸ்டன்ட் கமிஷனர் நாசர் கழட்டியதற்குப் பின்பு
யாரும் அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை.

ஒரு நல்ல விஷயமும் இன்று பார்த்தேன். வினாயகர்
சதுர்த்திக்கு  வாழ்த்து சொல்லி ரசூல் என்ற
இஸ்லாமியர் பேனர் வைத்திருந்தார்.

Saturday, September 8, 2012

பகுத்தறிவு பாசறை திமுகவின் பக்திமான்கள்




வினாயகர் சதுர்த்தி சீஸன் தொடங்கி விட்டது. பெரிய பெரிய சிலைகள் வைக்க, அதற்கு பணம் வசூலிக்க மும்முரமாய் பணிகளும் தொடங்கி விட்டது.

வசூல் செய்பவர்கள் படையெடுப்பு எங்கள் பகுதியில் ஒரு வாரம் முன்பே தொடங்கி விட்டது. பெரியவர்கள் வந்தால் நம்பிக்கை கிடையாது என்று சொல்லி அனுப்பி விடுவேன். சிறுவர்கள் வந்தால் பத்து ரூபாய் கொடுத்து அனுப்பி விடுவேன்.

அப்படி வசூலுக்கு வந்தவர்கள் கொடுத்த ஒரு நோட்டீஸை பார்க்க சிரிப்புதான் வந்தது. இதோ அந்த நோட்டீஸ் உங்களுக்காக படம் எடுத்து கீழே போட்டுள்ளேன்.



எங்கள் பகுதி வினாயகர் சதுர்த்தி விழாவிற்கு தலைமை சத்துவாச்சாரி நகர திமுக துணைச் செயலாளர்.

முன்னிலை வகிப்பதோ சத்துவாச்சாரி நகர முன்னாள் செயலாளர்.

சிறப்பு விருந்தினர்கள் திமுகவின் வேலூர் ஒன்றியச் செயலாளர்.

இன்னொரு சிறப்பு விருந்தினர் ஒன்றியச் செயலாளரின் மனைவியும் திமுக சார்பில் சத்துவாச்சாரி நகராட்சியின் சேர்மனாக இருந்தவர்.

விழாவை நடத்துவது திமுக என்று போடவில்லையே தவிர எல்லோரும் திமுகவைச் சேர்ந்தவர்கள்.

திமுகவின் பகுத்தறிவுக் கொள்கைகளை அதன் உடன்பிறப்புக்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதற்கு வேறு சான்று வேண்டுமா என்ன?

ஆனால் உடன்பிறப்புக்களை குறை சொல்வதும் நியாயமில்லை. குங்குமம் அணிந்து வந்த ஆதி சங்கரை இது என்ன ரத்தமா என்று கேட்டு நையாண்டி செய்த தமிழினத் தலைவரால் மஞ்சள் துண்டிற்கு விளக்கம் அளிக்க முடியவில்லையே?

சத்ய சாய் பாபா காற்றிலிருந்து வரவழைத்த மோதிரங்களை பெற்றுக் கொள்ள அவர் முன்னே கோபாலபுரம் வீட்டில் நடந்த போட்டியை அவரும் ரசித்துக் கொண்டுதானே இருந்தார்!

மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் அஞ்சா நெஞ்சன் தேர்தல் பிரச்சாரத்திற்கு அடிதடி, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டுக்கள் ஆகியவற்றை மட்டும் நம்பாமல் நரசிம்மர் ஆலயத்தில் சிறப்புப் பூஜை செய்த பின்புதானே புறப்பட்டார்!

எத்தனையோ கொள்கைகளில் நீர்த்துப் போனது போல பகுத்தறிவு என்பதிலும் திமுக நீர்த்துப் போய் விட்டது.

இனியாவது பழம் பெருமை டயலாக் பேசுவதை கலைஞர் நிறுத்தினால் கேலிப் பொருள் ஆவதிலிருந்து தப்பிக்கலாம்.

Thursday, August 30, 2012

ஏமாற்று வேலை செய்ய எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்?



இரண்டு தினங்கள் முன்பாக கர்னாடக மாநிலம் குக்கே சுப்ரமணியர் கோயிலுக்கு விஜய் மல்லய்யா எண்பது லட்சம் ரூபாய் செலவில் தங்கக் கதவுகள் காணிக்கை என்ற பெயரில் கையூட்டு அளித்தது பற்றி எழுதியிருந்தேன். அந்தப் பதிவிற்காக அந்த கோயில் கடவுளின் படத்தையும் இணைத்து வெளியிடலாம் என்று கூகிளில் தேடிய போது கிடைத்த தகவல்கள் மற்றும் படங்கள் கீழே காண்பீர்.

ஐந்து தலை நாகத்தைப் பார்த்து பயப்படாதவர்கள் மற்றும் படங்களைப் பார்க்கவும்.











என்ன படங்களைப் பார்த்தீர்களா? சூர பத்மனை அழித்த பிறகு முருகன் இந்த இடத்தில்தான் தெய்வசேனையை திருமணம் செய்து கொண்டதாகவும் பாம்பின அரசி வாசுகியின் வேண்டுகோள்படி இங்கே முருகப் பெருமான் பாம்பு ரூபத்தில் அருள் பாலிப்பதாக ஸ்தல புராணம் கூறுகிறது.

சரி முருகன் தெய்வசேனையை திருத்தணியில் திருமணம் செய்து கொண்டதாக தமிழ்நாட்டு தகவல்கள் சொல்கிறதே, குக்கேயா? திருத்தணியா ? முருகன் தெய்வசேனையை எங்கே திருமணம் செய்து கொண்டார்? சரி சரி அப்துல் கலாம் சொன்னது போல கோயிலுக்கான அக்ரஸிவ் மார்க்கெட்டிங் உத்தி போல.

நம் பிரச்சினை திருமணம் அல்லவே, விஷயத்திற்கு வருவோம்.

படத்தில் பார்த்த ஐந்து தலை நாகம் குக்கே சுப்ரமணியர் கோயிலில் உலா வரும் ஐந்து தலை நாகம் என்றும் அது சாட்சாத் முருகப் பெருமானேதான் என்று உருகி உருகி எழுதியிருந்தார்கள்.

இது என்ன கேள்விப் படாத கதையாக இருக்கிறதே என்று மெனக்கெட்டு தேடினால் சில நிமிடங்களிலேயே உண்மை புலப்பட்டு விட்டது.

ஐந்து தலை நாகம் என்பது பொய் என்பதும் ஒற்றை தலை மட்டுமே உள்ள நாகத்திற்கு போட்டோ ஷாபில் கூடுதலாக நான்கு தலைகளை இணைத்து உலவ விட்ட போலிப்படம் என்பது தெரிந்து விட்டது. இதிலே இன்னும் சிறப்பு என்னவென்றால், அந்த ஒற்றைத் தலை நாகம் கூட குக்கே கோயில் உள்ள நாகம் அல்ல.

கொரியாவில் உள்ள ஒரு பாம்புப் பண்ணையில் உலவும் ஒரு பாம்பின் படம் அது. அதிலே ஒட்டு வேலை செய்து ஐந்து தலை நாகமாக்கி விட்டார்கள். ஒரிஜினல் ஒற்றைத் தலை நாகத்தின் புகைப் படங்களையும் கீழே பாருங்கள்.














பிள்ளையார் பால் குடித்தது போல வேப்ப மரங்களிலிருந்து அவ்வப்போது பால் கசிவது போல ஐந்து தலை நாகமும் வெறும் கட்டுக்கதைதான்.

மனிதர்களின் பக்தியை எப்படியெல்லாம் தங்களின் ஏமாற்று வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று பாருங்கள்..

இதிலே இன்னும் ஒரு கூடுதல் தகவல். குக்கே சுப்ரமணியர் ஆலயத்தில் மட்டுமல்ல, இன்போசீஸ் நிறுவனத்தின் மங்களூர் அலுவலகத்தில் இதே ஐந்து தலை நாகம் இருப்பதாகவும்  ஒரு கதை பார்த்தேன்.

எப்படியெல்லாம் திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகின்றார்கள் என்று பாருங்கள்.