Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

Friday, February 22, 2019

மத நம்பிக்கையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து மிகச்சிறப்பாக செயல்பட்டு அற்புதமான நாடாளுமன்றவாதி என்று பாரதீய ஜனதா கட்சி எம்.பிக்களாலேயே கூட பாராட்டப் பட்டவர் தோழர் பி.ராஜீவ்.

2017 ம் ஆண்டு எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 24 வது அகில இந்திய பொது மாநாடு எர்ணாகுளம் நகரில் நடைபெற்ற போது மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராக வழிகாட்டியவர்.

பிரதிநிதிகள் மாநாட்டின் போது தோழர் ராஜீவ் ஆற்றிய உரை அவரது ஆழ்ந்த ஞானத்தையும் மக்கள் மீதான அக்கறையையும் வெளிப்படுத்தி பிரமிக்க வைத்தது.

அந்த தெளிவும் ஞானமும் இக்கட்டுரையில் மிளிர்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி மீது செய்யப்படுகிற அவதூறு பிரச்சாரத்தை தகர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

சற்றே நீண்ட, ஆனால் முக்கியமான கட்டுரை. முழுமையாக படியுங்கள்


மத நம்பிக்கையும் கம்யூனிஸ்ட் கட்சியும்
பி.ராஜீவ்,

தேசாபிமானி முதன்மை ஆசிரியர்




கேரளத்தின் மூவாற்றுப்புழாவில் நடைபெற்றமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடைப்பயண நிறைவு மாநாட்டைத் துவக்கிவைப்பதற்கு நான் சென்றபோது மேடையிலேயே இரண்டு கிறிஸ்தவ மதக்குருமார் இருப்பதைப் பார்த்தேன். அவர்கள் விருந்தினர்களாக வந்திருப்பார்கள் என்று முதலில் நான் கருதினேன். ஆனால் அவர்கள் இருவரும் நடைப்பயணத்தில் முழுமையாகப் பங்கேற்றவர்கள் என்பதைத் தங்களை அறிமுகம் செய்து கொண்டபோது தெரிவித்தார்கள். அவர்கள் பாதிரியார் போள் தாமஸ் பீச்சியில் மற்றும் பாதிரியார் பிஜூ தாமஸ் சக்ரவேலி ஆகியோர் ஆவர். இந்த இருவரும் கூத்தாட்டுக் குளம் பகுதியின் பாலக்குழையைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். 

கட்சி உறுப்பினர்களாக மதக்குருமார்கள் இருக்கிறார்களே என்று பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இது சிறுபான்மையினர் விஷயத்தில் கட்சி பின்பற்றுகிற நெகிழ்ச்சியான அணுகுமுறையாக இருக்கலாம் என்று சிலர் குறிப்பிட்டதைக் கேட்டேன். 

பாலக்குழைக்கு பக்கத்தில் உள்ள கோலஞ்சேரிப் பகுதியைச் சேர்ந்த வெண்ணிக்குளம் உள்ளூர் கமிட்டிச்செயலாளராகிய சனல்குமார், அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முழுநேர ஊழியராக ஆகும்வரை அவர் தொழில் செய்து வந்தது ஒரு அர்ச்சகராகத்தான். சமஸ்கிருதக் கல்லூரியில் எம்.ஏ.சமஸ்கிருதம் படித்து வந்த காலத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினராக இருந்த சனல்குமார் அன்றும் பூசை நடத்தித்தான் தன் குடும்பத்திற்கும் தனக்கும் தேவையான வருமானம் சம்பாதித்தார். 

மதக்குருமாரும் அர்ச்சகரும் கட்சி உறுப்பினர் ஆக முடியுமா என்கிற கேள்வி மிகப் பழைய கேள்வியாகும். 

தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ‘சிந்தா’ வாரஇதழில் கேள்வி - பதில் பகுதியில் பலமுறை இதற்குப் பதிலளித்து வந்திருக்கிறார். ‘தி அட்டிட்யூட் ஆஃப் ஒர்க்கர்ஸ் பார்ட்டி டு ரிலிஜன்’ (மதம் தொடர்பான தொழிலாளர் வர்க்கக் கட்சியின் அணுகுமுறை) என்ற கட்டுரையில் லெனின் இதே கேள்வியையே எதிர்கொண்டிருக்கிறார். 

ஒரு மதகுரு பொதுவான அரசியல் பணிகளில் பங்கேற்று, உணர்வுப்பூர்வமாகக் கட்சியின் பொறுப்புகளை நிர்வகித்து, கட்சித் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் எந்தவொரு குருமாரும் கட்சியின் உறுப்பினராகலாம் என்று லெனின் பதிலளித்தார். (லெனின் தொகுப்பு நூல்கள் தொகுதி 15) மதத்திற்கு எதிராகப் போராடி அதை இல்லாமற் செய்ய முடியாது என்பதையும்; அதன் வேர்களைக் கண்டறியாமல் அணுகுவதையும், மதவெறுப்பு நிலைபாட்டையும், கடவுள் மறுப்பு வாதத்தையும் ஒரு முழக்கமாக ஆக்குகிற நிலைபாடு தொழிலாளி வர்க்கக் கட்சிக்கு இல்லை என்பதையும் லெனின் தெளிவாக்கியிருக்கிறார். 

‘மதம் ஒழியட்டும், கடவுள் மறுப்புவாதம் நீடுழி வாழட்டும்’ என்பது எதிர்ப்புரட்சி நிலைபாடாக இருக்கும் என்றும் லெனின் தெளிவாக்கியிருக்கிறார்.

வர்க்கப் போராட்டக் கலையும் விஞ்ஞானமும்

மதத்தைப் பற்றிய அணுகுமுறையைத் தெளிவாக்குகிற அறிக்கை ஒன்றை 1980 அக்டோபரில் கியூப கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது. வரலாற்றில் முதன் முறையாக அதிகாரத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிமதம் சம்பந்தமான ஓர் அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில் கியூப கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாறு தெளிவுப்படுத்தியது

.“மதம் என்பது மனிதனை அந்நியப்படுத்துவதையும், ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தைச் சுரண்டுவதையும் நியாயப்படுத்துகிற ஓர் ஏற்பாடாகும் என்று ஒரு பிரிவினர் கூறுகின்றனர். வரலாற்று ரீதியாக அது சரிதான். சில கட்டங்களில் மதம் அரசியல் ஆதிக்கத்தின் தத்துவார்த்தக் கருவியாக இருந்தது. 

இன்று எங்கள் அனுபவம் என்னவென்றால், மத நம்பிக்கையாளர்கள் அவர்களது நம்பிக்கையில் உறுதியாக இருந்துகொண்டே வரலாற்றின், சமூகத்தின் தேவைகளோடு தங்களை ஈடுபடுத்திக் கொண்டு புரட்சியாளர்களாக ஆகலாம் என்பதாகும். 

எங்களின் அனுபவத்தில் ஒருவர் ஒரே சமயத்தில் மதநம்பிக்கையாளராகவும் புரட்சியாளராகவும் ஆகலாம் என்பதாகும்.”இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஃப்ரெல் பெட்டோவின் கேள்விக்கு தோழர் பிடல் காஸ்ட்ரோ, மத நம்பிக்கையாளர்கள் கம்யூனிஸ்ட் ஆகமுடியும் என்றும், இந்த இரண்டு கூட்டாளிகளும் சேர்ந்து உலகை சுரண்டலிலிருந்து விடுவிக்க முடியும் என்றும் விளக்கினார். 

சுரண்டலுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்திற்கு முன் வருகிறவர்களைப் பொறுத்தவரை அவர்கள் மதநம்பிக்கை உள்ளவர்களா, இல்லாதவர்களா என்ற கேள்வி முக்கியமல்ல என்பதை பிடல் காஸ்ட்ரோ தெளிவுப்படுத்தினார். மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டே லெனினும் பிடல் காஸ்ட்ரோவும் அத்தகைய கண்ணோட்டத்தை முன்வைத்தனர். 

ஆனால், மதத்தைக்குறித்த மார்க்சின் கண்ணோட்டத்தை, ‘மதம் மனிதனுக்கு அபினி’ என்ற ஒரு வாசகத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு, பொதுவாக அது மதத்தை எதிர்ப்பதாக முன்வைக்கிறார்கள். மதத்தைப் பற்றிய மார்க்ஸின் கண்ணோட்டத்தை எதிர்மறையாகவே பலரும்அணுகுகிறார்கள் என்றும், அதில் தெளிவாகத் தெரியும் நல்ல அம்சங்களைக் காணாததுபோல் நடிக்கிறார்கள் என்றும் ஹரோல்டு ஸின் தெளிவாக்கியிருக்கிறார். 

அதுமட்டுமல்ல, ‘மனிதனைப் படைத்தது மதம் அல்ல; மனிதனே மதத்தைப் படைத்தான்’ என்ற ஹெகலின்தத்துவ விமர்சனத்தைக் குறிப்பிடுகிற மார்க்ஸ், மதம் என்பது இதயமில்லாத உலகின் இதயம் என்றும், ஆத்மா இல்லாத உலகின் ஆத்மா என்றும், ஒடுக்கப்படுவோரின் பெருமூச்சு என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதன் தொடர்ச்சியாகவே ‘மதம் என்பது மனிதனுக்கு அபினி’ என்ற வாசகத்தை மார்க்ஸ் சேர்க்கிறார். Opium of the people என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். 

கவலையை ஒழிப்பதாக மதம் எவ்வாறு செயல்படுகிறது என்று மார்க்ஸ் விளக்குகிறார். மதம்தற்காலிக நிம்மதியைத் தருகிறது. வாழ்க்கையின் யதார்த்தங்கள் முகத்தை வந்து தாக்கும்போது நிம்மதி காணாமல் போகும். மதத்தைச் சிருஷ்டிப்பது அத்தகைய சூழல்கள்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிலவுகிற அனைத்தும் விதிப்படிதான் என்ற உணர்வை ஏற்படுத்தும் மதம் உருவாக்குகிற பொதுபுத்தியை விமர்சிக்கிறபோதே மதநம்பிக்கையில் ஈடுபட மனிதனை நிர்ப்பந்திக்கிற சூழல் முக்கியமானது என்றும், இதன் வேரைப் பற்றி ஆராயாமல் செய்யப்படுகிற மதம் மீதான எத்தகைய விமர்சனமும் அறிவியல்பூர்வமானது அல்ல என்றும் மார்க்ஸ் பல கட்டங்களிலும் தெளிவாக்கியிருக்கிறார்.

மார்க்சியம் இயந்திரகதியிலான உலகவியல் வாதமோ, நாத்திகவாதமோ அல்ல. உலகவியலே முதன்மையானது என்று பார்க்கும் போதே அந்தக் கருத்தை அங்கீகரிப்பதற்கும், அதை நோக்கி இட்டுச் செல்வதற்கும் இயலுகிற செல்வாக்கைப் புரிந்து கொள்ளவும் வேண்டும். ஒரு கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டால் அது பௌதீக சக்தியாக மாறும்என்றும் மார்க்ஸ் தெளிவாக்கியிருக்கிறார். மார்க்சியமும் ஒரு கருத்து ஆகும். 

மதம், நடப்பில் உள்ளதைப் பாதுகாப்பதற்கான கருவியாக மாறுவதையே மார்க்ஸ் வலுவான விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளார். ஆனால், மத நம்பிக்கையாளர்களான மக்கள் அந்த நம்பிக்கைகளில் ஆறுதல் தேடும் யதார்த்தத்தை அங்கீகரிக்கிற மார்க்சியம், மதத்தை ஒதுக்கித் தள்ளவில்லை. மார்க்சியம் என்பது மதநம்பிக்கையாளர்களுக்கும் மதநம்பிக்கை இல்லாதவர்களுக்குமிடையேயான மோதலின் தத்துவம் அல்ல. மார்க்சியம், வர்க்கப் போராட்டத்தின் கலையும் விஞ்ஞானமும் ஆகும். சுரண்டப்படுகிற வர்க்கத்தில் மிகப் பெரும்பான்மை மக்கள் மதநம்பிக்கையாளர்கள்தான்.

மதவாதத்திற்கு எதிரான போராட்டம்

இந்தியாவில் எந்தவொரு குடிமகனுக்கும் அவரவர்க்கு இஷ்டப்பட்ட மதநம்பிக்கையைப் பின்பற்றுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் உறுதி வழங்குகிறது. இந்த உரிமைக்கு ஆதரவாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிற்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் ஜனநாயகப் புரட்சிக்காகப் பாடுபடுகிற கட்சியாகும். 

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில் கூறப்பட்டுள்ள மக்கள் ஜனநாயக அரசின் திட்டத்தில் மதநம்பிக்கைக்கும் வழிபாட்டுக்கும் உள்ள உரிமை உறுதிப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு குடிமகனும்-ஆணோ, பெண்ணோ தங்களுக்கு விருப்பமுள்ள மதநம்பிக்கையைப் பின்பற்றி வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். 

அதேசமயம், மதநம்பிக்கையும் மதவாதமும் ஒன்றல்ல. அவை இருவிதமானவை. 

மதத்தின் அரசியல் நடவடிக்கைதான் மதவாதம். இந்துமக்களின் மதநம்பிக்கையை மதவாத நலனுக்குப் பயன்படுத்தவே இந்துத்துவம் முயற்சி செய்கிறது. 

இந்துத்துவம் என்பது இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ள சிந்தனை அல்ல; இந்துத்துவம் என்பது சவர்க்காரின் உருவாக்கமாகும். 

பழங்காலத் தத்துவத்தில் கடவுள் மறுப்புவாதம் கூட வலுவான நிலையில் இருந்தது. கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் கம்யூனிஸ்ட்டுகளையும் இந்துத்துவம் எதிரிகளாக அறிவிக்கிறது. 

மகாத்மா காந்தியைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத சகிப்பின்மையைக் கொண்டது இந்துத்துவம். 

உண்மையில், இந்துத்துவத்தை எதிர்த்துத் தோல்வியுறச் செய்ய வேண்டியது சரியான மதநம்பிக்கையாளர்களின் கடமையும்கூட. மத நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டுச் சுதந்திரத்தையும் மதவாதிகளிடமிருந்து விடுவித்தாக வேண்டும். இதற்கு உதவியாக மதச்சார்பற்ற நிலைக்குப் போராடுகிற காலத்தில் நாம் வாழ்கிறோம். 

ஆனால், தங்களின் மதவாதத்தை, மத நம்பிக்கை என்று இந்து மதவாதக்கும்பல்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்தால் வழிபாட்டுச்சுதந்திரம் இல்லாமல் போகும் என்கிற பிரச்சார வேலையும் நடைபெறுகிறது. உலகில் பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக எதிரிகள் நடத்துகிற பிரச்சார வேலை இது. 

1957 ஏப்ரல் 5இல் கேரளத்தில் இ.எம்.எஸ். அமைச்சரவை அதிகாரத்திற்கு வந்த அன்று முதல் கடவுள்மறுப்புவாதம் வளர்க்கப்படுகிறது என்றும், வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படும் என்றும் அவதூறுப் பிரச்சாரம் செய்தார்கள். அதற்குப் பிறகு இன்று ஆறாவது இடதுசாரி அரசு கேரளத்தில் ஆட்சி செய்கிறது.

இந்த அரசுகள் எதுவுமே மத நம்பிக்கையைப் பலவீனப்படுத்துகிற நடவடிக்கை எதுவும் மேற்கொண்டதில்லை. 

கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசுகளின் காலத்தில் தேவஸ்வம் போர்டுகளும், வக்ஃப் போர்டுகளும் அதனதன் நம்பிக்கைச் சமூகத்தின் சரியானநலன்களைப் பாதுகாக்கிற முறையிலேயே செயல்பட்டிருக்கின்றன. 

சிதைந்து போயிருந்த மலபார் பகுதியைச் சேர்ந்த கோவில்களை தேவஸ்வம் போர்டுக்குக் கீழ் கொண்டுவந்து அவற்றைச் சீர்படுத்தி, அர்ச்சகர் முதலான அனைத்து கோவில் ஊழியர்களுக்கும் கௌரவமான சம்பளம் உறுதி செய்தது இடதுசாரி அரசுதான்.

சபரிமலை மண்டலக் காலத்தில் செய்ய வேண்டிய வசதிகளை மதிப்பீடு செய்வதற்காகக் கம்யூனிஸ்ட் முதலமைச்சர் பினராயி விஜயன் சபரிமலைக்கு வருகை தந்ததும் அப்போது அங்கு நடைமுறையில் இருந்த ஆச்சாரங்களுக்கு ஏற்பதான். 

நம்பிக்கைப் பிரச்சனையை வெறும் சாமர்த்தியத்தின், செயல்நுட்பத்தின் பேரில் அணுகுவதற்கு இந்த அரசுகள் முயற்சி செய்யவில்லை. 

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு சமர்ப்பித்த சத்தியவாக்கு மூலமே கூட இந்தக் கண்ணோட்டத்தை அனுசரித்தே இருந்தது.பாலினச் சமத்துவம் விஷயத்தில் தங்களின் நிலைபாட்டை உயர்த்திப் பிடிக்கும் போதே, மதநம்பிக்கைப் பிரச்சனை என்பதால் அத்தகைய விஷயங்களில் பாண்டித்தியம் உள்ளவர்கள் உறுப்பினர்களாக உள்ள அமைப்பின் கருத்தையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இந்த அணுகுமுறையின் தொடர்ச்சிதான். 

பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை என்று கட்சி பகிரங்கமாக அறிவித்தது. மதநம்பிக்கையின் ஒரு பகுதியான ஆச்சாரங்கள் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்ற சபரிமலை வழக்கின் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய அரசியல் சட்டரீதியான பொறுப்பை அரசு மேற்கொள்ளவும் செய்கிறது. மனிதர்களைச் சமத்துவமாகக் காணாத எல்லா ஆச்சாரங்களும் கட்டமைக்கப்பட்டவைதான் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது. 

எல்லாக் காலங்களிலும் தவறான வியாக்யானங்கள் மூலம் ஆணை மையமாகக் கொண்டுள்ள சமூகம் பெண்களின் உரிமைகளை மறுத்து விடுகிறது என்றும் உச்சநீதிமன்றம் கூறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரிக்கும் வாக்களிப்பவர்களில் மிகப் பெரும்பாலானவர்களும் மதநம்பிக்கை உள்ளவர்கள்தான். அவர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கிற அணுகுமுறையைத்தான் இடதுசாரி அரசு பின்பற்றுகிறது. 

மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சரியான நிலைபாட்டைப் பின்பற்றுகிற மதநம்பிக்கைச் சமூகத்தில் கருத்துக் குழப்பம் உண்டாக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். எல்லா மதப்பிரிவைச் சேர்ந்தவர்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கு அரசியல் சட்டத்தையும் சட்ட அமைப்பையும் பாதுகாப்பது தவிர்க்க முடியாத தேவையாகும். 

மனிதனுக்கும் தெய்வத்திற்குமிடையிலான முற்றிலும் ஏற்கத்தக்க விஷயம்தான் மதநம்பிக்கை என்று உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்டஅமர்வு தேர்தல் சட்டங்கள் சம்பந்தமான வழக்கில் தெளிவாக்கியது. மதநம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்டவிஷயமென்றும், அரசு இதைப் பரிசீலிக்க வேண்டும்என்றும் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தெளிவாக்கியிருக்கிறது. 

இது எதையும் வாசிக்காதவர்கள்தான் சபரிமலை ஏறியவர்கள் மதநம்பிக்கையாளர்களா என்பதை மாநில அரசு பரிசோதிக்க வேண்டுமென்று மற்றவர்களை நிந்திக்கும் விதத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மதநம்பிக்கையை தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்திற்குப் பயன்படுத்துகிறவர்கள் நடத்துகிற பொய்ப் பிரச்சாரங்களை அம்பலப்படுத்த வேண்டியது மதநம்பிக்கைச் சமூகத்திற்கும் அவசியமானதாகும். 

இதன் மூலம் மட்டுமே எல்லோருக்கும் அவரவர் நம்பிக்கையை அனுசரித்து வாழ்வதற்கான உரிமையையும் மதச்சார்பின்மையையும்  பாதுகாக்க முடியும்.



- தேசாபிமானியிலிருந்து தமிழில் : தி.வரதராசன்

நன்றி - தீக்கதிர் 21.02.2019

Friday, June 6, 2014

அடித்துக் கொண்டால் கோவிலின் புனிதம் போகாதா?

இன்று அமிர்தசரஸ் பொற்கோயிலில் இரு பிரிவினருக்கு இடையே
நடந்த மோதல்களின் போது எடுத்த புகைப்படங்களை யாஹூ 
இணையதளம் வெளியிட்டிருந்தது. அவை கீழே




















முப்பது ஆண்டுகள் முன்பாக இதே நாளில் இந்திய ராணுவம் 
பொற்கோயிலில் நுழைந்ததால் அதன் புனிதம் கெட்டுவிட்டது
என்பதற்காக கண்டன தினம் அனுசரித்தீர்கள். அதிலேதான்
இந்த அடிதடி.

அன்று ராணுவம் ஏன் உள்ளே நுழைந்தது என்பதற்கான காரணம்
எல்லோருக்கும் தெரியும். அகாலி தளக் கட்சியை ஓரம் கட்ட
பிந்தரன் வாலேயை ஊக்குவித்த இந்திரா காந்திக்கு பின்பு அவரே
எதிரியாக மாறிப்போனதும் பொற்கோயில் ஆயுதக்கிடங்காக
மாறியதும் ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டாரில் பிந்தரன் வாலே 
கொல்லப்பட எதிர்வினையாக இந்திராவின் உயிர் பறிக்கப்பட்டதும்
அனைவரும் அறிந்த ஒன்று.

இராணுவம் நுழைந்ததால் கெட்டுப் போன பொற்கோயிலின்
புனிதம் இன்றைய அடிதடியால் மீட்கப்பட்டு விட்டதா?

இன்று மீண்டும் பொற்கோயில் களங்கப்பட்டதாகவே நான்
உணர்கிறேன்.

கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விட்டது என்ற 
கலைஞரின் வசனம் இன்றைக்கும் பொருத்தமாக இருப்பது
ஒரு சோகம்.
 

Sunday, March 3, 2013

துறவறத்தில் ஆடம்பரம் - தொடரும் விவாதம்

ஆடம்பரமாக நடந்த ஒரு துறவற நிகழ்ச்சி குறித்து இரண்டு
தினங்கள் முன்பு எழுதியிருந்தேன். அது  பற்றி பின்னூட்டம்
எழுதிய மூத்த தோழர் காஷ்யபன், தனது வலைப்பக்கத்தில்
இன்னும் கொஞ்சம் செய்திகளோடு தனது வலைப்பக்கத்தில்
எழுதியிருந்தார்.

அந்தப் பதிவு இங்கே. 

மதம் என்றாலே முரண்பாடா என அவர் கேள்வி எழுப்பி
இருந்தார்.

ஆம் என்றுதான் நானும் கருதுகிறேன்.

ஆக்கபூர்வமான கருத்துக்கள் வருவதை வரவேற்கிறேன்.
 

Saturday, January 12, 2013

சுவாமி விவேகானந்தரும் அவரை முன்னிறுத்தும் போலிகளும்

 
 
சுவாமி விவேகானந்தர், தான் கண்ட இந்தியாவை, புரிந்து கொள்வது என்பதோடு மட்டுமல்லாது மாற்ற வேண்டுமென்று முயன்ற ஒரு அறிவுஜீவியும், தத்துவ ஞானியும் ஆவார். 
ஆனால் மாற்றம் என்றால் புத்தர் கனவு கண்டதுபோல் மீண்டும் புராதன குல சமூகத்திற்கு மாறுவதென்பதல்ல ஒரு நவீன, அறிவியல் சார்ந்த, ஜனநாயக, மதச்சார்பற்ற அரசியல் இந்தியாவை கட்டுகின்ற மாற்றம்தான். 
ஜாதிய சமூகத்தைக் கட்டுவதற்கு சங்கரர் எந்த வேதாந்தத்தை பயன்படுத்தினாரோ அதே வேதாந்தத்தை அதே ஜாதீய சமூக முறையை எதிர்பதற்கு மக்களைத் திரட்ட அவர் பயன்படுத்தினார். 
ஒரு இந்திய (இந்து) பாட்டாளி வர்க்க ஆட்சியின் வடிவத்தை சூத்திரர்களின் ஆட்சி என்கிற கோட்பாட்டில் அவர் முன்வைத்தார். சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான முழுமையான சமத்துவமே அவரது அறைகூவலாக இருந்தது. 
அவர் மார்க்சிய தத்துவங்களோடு தன்னைப் பரிச்சயப்படுத்திக் கொள்ளவும்மில்லை, அதைப் புரிந்து கொள்ளவுமில்லை. இருந்தாலும் அவர் ஒரு ஜனநாயகவாதி, சமூக கிளர்ச்சியாளர், இந்திய சமூகத்தை முழுமையாக மறு கட்டமைப்புச் செய்வதற்காக நின்றவர்.
 அவரும், அவருடைய தலைமுறை சகாக்களும் செய்த பணிகள் ஒரு நவீன உழைக்கும் வர்க்கமும் மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர சோஷலிச இயக்கமும் உருவாவதற்கான பாதையை அமைத்துக் கொடுத்தன.
 
தங்களை விவேகானந்தரின் சீடர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்களால் சுவாமி விவேகானந்தரின் சிறப்பம்சங்கள் மறுக்கப்படுவதுடன் அவர்கள் அவருடைய புரட்சிகரமான போதனைகளை மறக்கவே விரும்புகின்றார்கள்.

                                                     - தோழர் இ . எம். எஸ் . நம்பூதிரிபாட் -
 
ரியாதொரு ருத்தில் ரியாதொரு திவை 
 முநூலில் வெளியிட்ட  தோழர் கா.சின்னையா
(சின்னையா காசி)  அவர்ளுக்கு மார்ந்நன்றி   

Wednesday, September 19, 2012

பிள்ளையாரை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்கப்பா.....



எல்லா ஊர்களைப் போல வேலூரிலும் வினாயகர் சதுர்த்தி
பரபரப்பாக உள்ளது. அங்கங்கே குட்டியும் பெரிசுமாய் 
வினாயகர் சிலைகள். வசூலின் தன்மை மற்றும் வசூலித்தவர்கள்
நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் கீற்றுப் பந்தலிலும்
அலங்கார ஷாமியானாவிலும் வினாயகர் அமர்ந்து 
அருள் பாலிக்கிறார். வாய்ப்பு கிடைக்கிற இடங்களில் 
எல்லாம் இந்து முன்னணி காவிக்கொடியை பறக்க விட்டுள்ளது.

பொம்மைக் கலைஞர்கள், மண் பாண்டக் கலைஞர்கள், அழகாய்
குடை செய்யும் நாடோடி இனத்தவர், பூ, பழ வியாபாரிகள்,
பந்தல் போடுபவர்கள், மைக் செட் வைப்பவர்கள்,
ஆகியோருக்கு  சுமாரான வருமானம் கிடைக்கிறது என்ற
வகையில் வினாயகர் சதுர்த்தி ஓ.கே. பெரிய கடைகளில்
எந்நாளும் வாய் திறவாமல் கிரெடிட் கார்டை தேய்க்கக்
கொடுக்கிற பெரிய மனிதர்கள், இந்த சிறிய கலைஞர்களிடம்
மட்டும் பேரம் பேசுவது ஒரு கொடுமை.

 ஆனால் ஒரு விதத்தில் இந்த பக்தர்கள் வினாயகரைப் 
போட்டு படுத்தும் பாடுதான் தாங்க முடியவில்லை. 
சம்பிரதாயத்திற்கு ரெண்டு பக்தி பாட்டு போட்ட பிறகு
அதற்குப் பின்பு வெறும் குத்துப் பாட்டுதான். சாலையோரம்
செல்லும் நம்மாலேயே அந்த இரைச்சலைக் கேட்க 
சகிக்கவில்லை. 

அதிலும் சில பாடல்களை கேட்டால் வினாயகரின்
பிரம்மச்சரிய விரதத்தை கலைத்து அவரையும்
கல்யாணம் செய்ய வைத்து விடுவார்கள் போல.

நாள் முழுதும் பாவம் இந்த பாடல்களை கேட்க வேண்டிய
நிலையில் இருந்து கொஞ்சம் வினாயகரைக் 
காப்பாற்றுங்களேன். 

பி.கு : ஒரு தொழிற்சங்கமோ, அரசியல் கட்சியோ 
மக்கள் பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டத்திற்கு
ஒலி பெருக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டால்
ஆயிரம் நிபந்தனை போடும் காவல்துறை இந்த
ஒலி பெருக்கிகளை கண்டு கொண்டதே இல்லை.
நாயகனில் வேலு நாயக்கர் வைத்த ஒலி பெருக்கிகளை
அசிஸ்டன்ட் கமிஷனர் நாசர் கழட்டியதற்குப் பின்பு
யாரும் அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை.

ஒரு நல்ல விஷயமும் இன்று பார்த்தேன். வினாயகர்
சதுர்த்திக்கு  வாழ்த்து சொல்லி ரசூல் என்ற
இஸ்லாமியர் பேனர் வைத்திருந்தார்.

Thursday, September 13, 2012

எல்லையில் சிந்திய ரத்தம். , நடந்தது என்ன?

அஸ்ஸாம் கலவரம் தொடர்பாக எங்கள் அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாத இதழ் 
இன்சூரன்ஸ் வொர்க்கர் ஒரு ஆழமான ஆய்வினை
செப்டம்பர் மாத தலையங்கத்தில் அளித்துள்ளது.
அதை எங்கள் கோட்ட இதழ் சங்கச்சுடருக்காக
தமிழாக்கம் செய்துள்ளேன்.

அது உங்களுக்காகவும் இங்கே.

 
தெற்கே வரும் ரயில்

சில தினங்கள் முன்பு அஸ்ஸாமிலிருந்து பெங்களூர் நோக்கி புறப்பட்ட ஒரு சிறப்பு ரயில் இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானது. இந்தியாவின் ஒற்றுமையும் மக்கள் மீதான நம்பிக்கையும் இன்னமும் சீர்குலைந்து விடவில்லை என்பதை உணர்த்துகின்றது அந்த ரயில் பயணம். ஏனென்றால் சில தினங்கள் முன்புதான் பெங்களூர், ஹைதராபாத், சென்னை, மும்பை போன்ற மாநகரங்களுக்கு பணி செய்யவும் படிக்கவும் வட கிழக்கு மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் உயிருக்கு பயந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு  திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மீண்டும் பணிக்காகவும் கல்விக்காகவும் எங்கிருந்து அச்சத்துடன் புறப்பட்டார்களோ, அங்கேயே மீண்டும் திரும்பி வருவது என்பது ஒரு நல்ல செய்தி.

இந்த நிலை நீடிக்குமா? நீடிக்க வேண்டுமென்றால் அரசு என்ன செய்ய் வேண்டும்? மக்களின் கடமை என்ன? 


அதற்கு இப்பிரச்சினை குறித்த ஒரு சரியான புரிதல் வேண்டும். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போர் வாளான இன்சூரன்ஸ் வொர்க்கர் மாத இதழின் செப்டம்பர் 2012 மாத தலையங்கம், இப்பிரச்சினையை மிக ஆழமாக அலசியுள்ளது. தேச ஒற்றுமையை பாதுகாக்க வேண்டியது உழைக்கும் மக்களின் கடமை என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. தலையங்கத்தின் தமிழாக்கத்தை கீழே காண்போம்.

துடிப்பு மிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் லண்டன் ஒலிம்பிக்ஸ் 2012 ல் வெளிப்படுத்திய  அற்புதமான திறன் மூலம் பல லட்சம் உள்ளங்களை கொள்ளை கொண்டார். பதக்கம் வென்ற அவரது முயற்சி மணிப்பூரையும் வட கிழக்கு மாநிலங்களையும் இந்தியாவின் இதரப் பகுதிகளுக்கு நெருக்கமாக்கியது. தேச ஒற்றுமைக்கான புதிய வாய்ப்புக்கள் உருவாகியுள்ளதாக பார்க்கப்பட்ட சூழலிலேயே, அரசியல் சந்தர்ப்பவாத எண்ணத்தோடு சில தீய சக்திகள், தேச ஒற்றுமையை சிதைக்கும் அபாயகரமான விளையாட்டை துவக்கியுள்ளனர்.

அஸ்ஸாமை உலுக்கிய  இனக்கலவரங்களுக்கு  பதிலடியாக  மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், பூனா போன்ற பெரு நகரங்களில் உள்ள வட கிழக்கு மாநிலங்களை பிறப்பிடமாகக் கொண்ட மாணவர்களும் தொழிலாளர்களும் தாக்கப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டனர். சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்புணர்வு மிக்க செய்திகள் திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டு, இந்நகரங்களில் வாழும் வட கிழக்கு மாநிலத்தவர் மனதில் அச்சம் விதைக்கப்பட்டது. அவர்களுக்கு தங்கள் பாதுகாப்பு பற்றிய பயம் ஏற்பட்டது. ஜனநாயக முற்போக்கு சக்திகள் உறுதியளித்தாலும் இந்த மாணவர்களும் தொழிலாளர்களும் தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கினார்கள்.  தேச ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படக் கூடிய விதத்தில் இந்தியாவின் சமூக நல்லுறவுகளே பாதிக்கப்படுவதுதான் இதன் விளைவாக இருந்தது.

இப்பிரச்சினையின் ஆணி வேர் என்பது அஸ்ஸாம் மாநிலத்தின் போடோ இன மக்களுக்கும் போடா இனம் அல்லாத முஸ்லீம்களுக்கும் இடையேயான இனக்கலவரங்கள்தான். இந்த இனக்கலவரம் எண்பதிற்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலிவாங்கி நான்கு லட்சத்து எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வீடிழிந்தவர்களாக்கி விட்டது. இரு இனங்களையும் சேர்ந்த சாதாரண ஏழை மக்கள்தான்  பாதிப்புக்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளானவர்கள். கிராமம் கிராமமாக கொளுத்தப்பட்டு அங்கே வாழ்ந்தவர்கள் துரத்தப்பட்டது என்பது கற்பனை கூட செய்ய முடியாத காட்டுமிராண்டித்தனம்.  ஐயத்திற்கு இடமில்லாமல் நிச்சயமாக   இது ஒரு இன அழித்தல் நடவடிக்கை. மிகவும் மோசமான அவலமான நிலையில் அவர்கள் 278  நிவாரண முகாம்களில் அவர்கள் தங்கியுள்ளனர்.

போடோலாந்து எல்லைப்புறப் பகுதி மாவட்டங்கள் (பி.டி.ஏ.டி) என்பது அஸ்ஸாமின் கோக்ரஜார், சிராங்க், பக்ஸா, உதல்குரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த பி.டி.ஏ.டி மாவட்டங்கள் போடோலாந்து எல்லைப்புற கவுன்ஸில் (பி.டி.சி) என்ற அமைப்பால் நிர்வகிக்கப் படுகின்றது. அஸ்ஸாமின் மிகப் பெரிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் போடோக்கள். சமூக, பொருளாதார அடிப்படையில் மிகவும் பின் தங்கியவர்கள். அரசின் அலட்சியத்திற்கும்  பாரபட்சத்திற்கும் நெடுங்காலமாக பலியானவர்கள். பொருளாதாரப் பின்னடைவு, பிரிவினை வாத சக்திகளுக்கு ஊக்கம் அளித்தது. தனி போடோலாந்து வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலைமையை சமாளிக்க 2003 ல் மத்திய அரசிற்கும் போடோ விடுதலைப் புலிகள் என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பிற்கும் இடையே போடோ ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தின்படி போடோ மாவட்டங்களுக்கு பிராந்திய சுயேட்சை வழங்கப்பட்டது. இருப்பினும் இப்போது   பி.டி.ஏ.டி சுயேட்சை கவுன்ஸிலின்  ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அமைப்பு, அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கட்சியோடு கூட்டணையில் உள்ளது. ஆனால் அதனால் மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்றார் போல செயல்பட முடியாமல் தோல்வியடைந்து மக்களின் மிகப் பெரும் அதிருப்திக்கு உள்ளானது.

உண்மையான வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, இன வெறி மூட்டப்பட்டது. தனி போடோலாந்து கோரிக்கை மீண்டும் முன்னிருத்தப்பட்டது. தற்போதைய போடோ பகுதிகளில் இனக் குழுக்களுக்கிடையேயான பதட்ட நிலை என்பது சில காலமாகவே இருந்து வந்தது. எப்போது வேண்டுமானாலும் பற்றியெரியக் கூடிய பதட்ட நிலை இருந்தது என்பது மத்தியரசோ அல்லது மாநில அரசோ அறியாதது அல்ல. ஆனாலும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்து சட்டத்தின் ஆட்சியை நிலவச் செய்வதில் தவறி விட்டது. இன மோதல் வெடித்து ஐந்து நாட்களுக்குப் பின்பே சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த ராணுவம் சென்றது என்பது வருத்தத்திற்குரிய விஷயம். நிலைமை சிக்கலாக மத்திய, மாநில அரசுகள் அனுமதித்துவிட்டது.

அஸ்ஸாம் நிகழ்வுகளை சில தீய சக்திகள் தங்களுக்கான மிகப் பெரிய அரசியல் வாய்ப்பாகப்  பார்த்தன. இந்த இன மோதலுக்கு மதச்சாயம் பூசப்பட்டது.  பங்களாதேஷ் ஊடுருவாளர்கள் இந்தியர்கள் மீது நடத்திய ஆக்கிரமிப்புத் தாக்குதல் இந்த கலவரம் என்று இந்த தேசத்தின் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிற ஒரு முக்கிய அரசியல்வாதி   அறிவிக்கிறார். எந்தப் பகுதியில் ஊடுருவல் நிகழ்ந்தாலும் அங்கே மக்கட்தொகை பெருகும் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் போடோ மாவட்டங்களிலோ, ஏன் ஒட்டு மொத்த அஸ்ஸாம் மாநிலத்திலே கூட இவ்வாறு மக்கட்தொகை பெருகவில்லை என்பதுதான் உண்மை..

2011 மக்கட்தொகை கண்க்கெடுப்பு அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் அஸ்ஸாம் மாநிலத்தில் மக்கட்தொகை உயர்வான  16.93 % என்பது தேசிய அளவு உயர்வான 17.64 % ஐ விட குறைவானது. கோக்ரஜார் மாவட்டத்தில் உயர்வு என்பது 5.19 % தான். மற்ற போடோ மாவட்டங்களான சிராங், பக்ஸா, மற்றும் உதல்கிரியில் மக்கள் தொகை உயர்வு என்பது முறையே 11.26 %, 11.17%, மற்றும் 9.76 % மட்டுமே. இது அஸ்ஸாம் மாநில சராசரியை விடவும் தேசிய சராசரியையும் விட குறைவு. எனவே அஸ்ஸாமிலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் மத வெறியை ஊட்டி அரசியல் ஆதாயம் அடையவே, சட்ட விரோத ஊடுறுவல் என்ற பிரச்சினை எழுப்பப் படுகின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது.   

இதனால் ஊடுருவலே கிடையாது என்று நாம் சொல்லவில்லை. இந்தியாவின் பங்களாதேஷ் எல்லை என்பது பலவீனமான ஒன்று. ஊடுறுவல் என்பது நிச்சயமாய் நிகழ்கிறது. அதனை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். எல்லை  மூடப்பட வேண்டும். ஆனால் தற்போதைய இனக் கலவரத்தை  சட்டவிரோத பங்களாதேஷ் ஊடுருவாளர்கள் இந்தியர்கள் மீது நடத்திய ஆக்கிரமிப்புத் தாக்குதல் என்று கூறுவது முற்றிலுமாக உண்மைக்கு அப்பாற்பட்டது.

இனக்கலவரங்களும் மோதல்களும் போடோ மாவட்டங்களுக்கு 1996 க்கும் 1998 க்கும் இடையே போடோக்களுக்கும் ஆதிவாசிகளுக்கும் இடையேயான இனக் கலவரங்கள் 198 உயிர்களைக் குடித்து இரண்டு லட்சம் பேரை அவர்களது வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தியது.  புலம் பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதிவாசிகள்.  32,000 க்கும் மேற்பட்ட ஆதிவாசிக் குடும்பங்கள் இன்னமும் நிவாரண முகாம்களில்தான் வாழ்கின்றன. இந்த ஆதிவாசிகளை ஊடுருவாளர்கள் என்று எவராலும் கூற முடியுமா?

சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த அடிப்படைவாதிகளும் மதத்தின் அடிப்படையில் தங்களை வலிமைப் படுத்திக்க்கொள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். போடோலாந்து எல்லைப் பிரதேச கவுன்ஸிலை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை அபாயகரமானது. மாறாக ஊழல் களையப் படவேண்டும். கவுன்ஸில் மேலும் ஜனநாயக பூர்வமாக மாற்றப்பட்டு போடோக்கள், போடோக்கள் அல்லாதவர்கள் ஆகிய இரு பகுதி மக்களுடைய முன்னேற்றத்திற்காக செயல்பட வேண்டும்.

அஸ்ஸாமின்  அமைதியை நேசிக்கிற, சரியான சிந்தனை கொண்ட மக்கள் ஒன்றிணைந்து அங்கே நடைபெறும் நிகழ்வுகளுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது மகிழ்ச்சியான ஒன்று. மேற்கு அஸ்ஸாமில் நடைபெற்ற துயர சம்பவங்களும் இன மோதல்களும் மனித குலத்திற்கும் ஜனநாயக மாண்புகளுக்கும் பெருத்த அடி என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.   பரஸ்பர நம்பிக்கையின்மை, அச்ச உணர்வு, இனக்குழுக்களிடையேயான பயங்கரவாதம் என இன்று நிலவும் சூழலை மத அடிப்படைவாதிகளும் பிரிவினைவாத சக்திகளும்  முழுமையாக பயன்படுத்திக் கொள்வது,  அஸ்ஸாமின் வாழ்நிலைக்கே மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது என்று  அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சினையை கையாண்ட முறையினால் மிகக் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளன. அமைதியை உத்தரவாதப் படுத்தவும், நிவாரணப் பணிகளை வேகமாக மேற்கொள்ளவும் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அனைத்து சட்ட விரோத ஆயுதங்களையும் பறிமுதல் செய்ய தேவைப்படும் அரசியல் உறுதியையும் அரசாங்கம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வட கிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் ஒன்றிணைந்த பகுதி. இதர பகுதிகளில் உள்ளவர்களைப் போலவே வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தியா சொந்தமானதுதான். அவர்களுக்கு எவ்வித பாரபட்சமும் காண்பிக்கக் கூடாது. அவர்கள் தங்கள் பணியிடங்களுக்கும் கல்விச்சாலைகளுக்கும் திரும்புவதை ஊக்குவிக்க வேண்டும். வட கிழக்கு மாநில மக்களை இந்தியாவிற்கு எதிராக அணி திரட்ட பிரிவினைவாத சக்திகள்  இந்த சந்தர்ப்பத்தை  பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த முயற்சி முற்றிலுமாக முறியடிக்கப்பட வேண்டும்.

வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களிடத்தில் நம்பிக்கையை தோற்றுவிப்பதும், அவர்களது பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதும் உழைக்கும் மக்களுடைய, முற்போக்கு சக்திகளின் கடமை. மத வெறியூட்டி, தேச ஒற்றுமையை சீர் குலைக்கிற சுய நல சக்திகளின், சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளின் அபாயகர விளையாட்டு தோற்கடிக்கப்பட வேண்டும். உள்நாட்டில் உருவாகியுள்ள அதிருப்தியை பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலையை எல்லைக்கு அப்பால் உள்ள சக்திகள் செய்கின்றனர் என்பதில் சிறிதளவு உண்மையும் உண்டு.

நமது தேச ஒற்றுமை என்பது மகத்தானது. அதனோடு தங்களது அரசியல் ஆதாயங்களுக்காக  உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள சுய நல  சக்திகள் விளையாடுவது என்பதை அனுமதிக்க முடியாது. இந்தச் செய்தியை உழைக்கும் வர்க்கம், சுய நல சக்திகளுக்கு ஆணித்தரமாக உரத்த குரலில் கூறிட வேண்டும்.



  


Monday, August 20, 2012

ஆரம்பிச்சுட்டாங்கய்யா, புதுசா ஒரு பிரச்சினையை ஆரம்பிச்சுட்டாங்க...




அம்மன் கோயில் திருவிழாக்களில் இந்த ஆண்டு
இரண்டு இடங்களில் நான் கவனித்த ஒரு புது
விஷயம்.

இதுநாள் வரை ஆலயத்து அம்மன் தவிர,
மின் அலங்கார விளக்குகளிலும்,
ஃப்ளெக்ஸ் போர்டுகளிலும் 
அருள் பாலித்து வந்த அம்மன்
இந்த வருடம் ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ்
சிலை ரூபத்திலும் பக்தர்களுக்கு அருளுவதை
வேலூர் சத்துவாச்சாரியிலும் அரக்கோணத்திலும்
பார்த்தேன்.

பிள்ளையாருக்கு மட்டும் சிலைகள் 
வைக்கப்பட்ட ஏகபோகம் தகர்ந்துள்ளது.

காமெராவில் பாட்டரி சார்ஜ் இல்லாததால்
புகைப்படம் எடுக்க முடியவில்லை. இன்று
காலையில் சிலையை எடுத்து விட்டார்கள்.
என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.

விநாயகர் ஊர்வலம் போல கடலில் 
கரைக்கிறோம் என்று புதிய பிரச்சினைகளை
உருவாக்காமல் இருந்தால் சரி.

Monday, July 23, 2012

பதினேழு கோடி ரூபாய் எள்......




இதுவும் கர்னாடக அரசு பற்றிய செய்திதான்.

வறட்சியைப் போக்க புது வழி கண்டு பிடித்துள்ளார்கள்.

விவசாயிகளுக்கு ஏதேனும் உதவியா?

இல்லை.

குளம், கால்வாய் தூர் வாறுகின்றார்களா?

இல்லை, இல்லை

கால்நடைகளுக்கு வைக்கோல், தீவனம் அளிக்கப்
போகின்றார்களா?

இல்லை, இல்லை, இல்லை

தொலைநோக்குப் பார்வையில் மரங்களை வளர்க்கப்
போகின்றார்களா?

இல்லை, இல்லை, இல்லவே இல்லை....

பின் என்னத்தான் செய்யப் போகின்றார்கள்?

மழை வழங்காமல் சோதிக்கும் வருண பகவானின்
கோபத்தை தணித்து மழையை வரவழைக்க
கர்னாடக மாநிலத்தில் உள்ள முப்பத்தி நான்காயிரம்
கோயில்களுக்கு தலா ஐயாயிரம் ரூபாய் வீதம்
பதினேழு கோடி ரூபாய் அளித்து வருண ஜபம்
செய்யச் சொல்லப் போகின்றார்கள்.

பாஜக கஜானாவிலிருந்தா கொடுக்கப் போகின்றார்கள்!
மக்கள் பணம்தானே!
இந்த அலட்சியம்தான் பதினேழு கோடி ரூபாய்க்கு
வேட்டு வைத்துள்ளது.

Saturday, May 12, 2012

மதுரை ஆதீனம் - நித்தி - நாயன்மார்கள் -சில் உண்மைகள்

 தீக்கதிர் நாளிதழில் வெளியான தோழர் அருணன்,
கௌரவத்தலைவர், த.மு.எ.க.ச அவர்களின் ஆழமான
ஒரு கட்டுரை


ஆதீன விவகாரம் : சில வரலாற்றுத் திரிபுகள்
அருணன்



 
மதுரை ஆதீனகர்த்தராக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்து திருவாளர்கள் அர்ஜுன் சம்பத், பழ.கருப்பையா ஆகியோர் “தினமணி”யில் எழுதியிருக்கிறார்கள். இந்த நியமனத்தை “கேலிக்கூத்து” என்று வருணித்திருக்கிறார் முன்னவர் என்றால், பின்னவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். அவற்றில் சில பகுத்தறிவாளர்களும் பளிச்சென்று சொல்லக்கூச்சப்படக் கூடியவை.“ஒரு காலத்தில் பல்கலைக்கழகத்துணைவேந்தர் பதவிகள் ஏலம் விடப்பட்டது போல ஆதீன கர்த்தர் பதவிகளும் இப்போது ஏலம்விடப்படுகின்றன. பழைய ஆதீன கர்த்தருக்கு ஐந்து கோடி ரொக்கம், தங்கச் சிம்மாசனம், தங்கச் செங்கோல் - அடுத்தடுத்த தவணைகளில் இன்னும் என்னென்ன வழங்கப்படுமோ?”‘பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே’ என்று அவர் (சம்பந்தர் சிவபெருமான் பற்றி) மக்களுக்குச் சொன்னதை தங்களுக்குத்தான் பாடியதாக ஆதீனங்கள் சில கருதியதன் விளைவு மடத்தின் போக்கே மாறிவிட்டது”.


“இன்றைய ஆதீனத்திற்கு உதவியாளர்கள் எல்லாம் பெண்கள்தாம்! இன்ன புடவைக் கடையை இன்ன நடிகை திறந்து வைத்தார் என்று பெருமை பேசப் படுவது போல இன்ன ஆதீனம் பதவி ஏற்றுக்கொண்ட போது இன்ன நடிகை முன்னிலை வகித்தார் என்பதும் பெருமையாகப் பேசப்படுகிறதே இது காலக்கொடுமை!”- இப்படியெல்லாம் பழ.கருப்பையா (தினமணி 10.5.2012) தனது மனவேதனை யைக் கொட்டித் தீர்த்திருக்கிறார். இந்து மடாதிபதிகள் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பதை விட, சுயமத நோக்கிலிருந்து பேசாமடந்தையாக இருப்பதைவிட இப்படிப் பொங்கி எழுந்தது வரவேற்கத்தக்கதுதான்.ஆனால், மடாதிபதிகள் சிலரின் போக்கு இப்படி ஆனதற்கு என்ன காரணம் என்று ஆராய்ச்சி செய்யப்புகுந்து, மிக மோசமான வரலாற்றுத் திரிபுகளை இந்த பக்திமான்கள் முன் வைக்கிறார்கள்.“மதவெறி கொண்ட சமணர்கள் சம்பந்தரைக் கொலைசெய்யும் உள்நோக்கத் துடன் சம்பந்தர் தங்கியிருந்த இம்மடத்திற்கு தீ வைத்தனர்” என்கிறார் அர்ஜுன் சம்பத். ஆனால், இப்படியாக பெரியபுராணத்தில் சேக்கிழார் கூறவில்லை. “திருமடப்புறம்பு பழுது செய்வதோ” என்று மட்டுமே பாடியிருக்கிறார். ஆனால், எண்ணாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டது பற்றி விரிவாக விவரித்திருக் கிறார். இந்தக் கொடூரத்தைப் பாண்டிய மன்னன் செய்தபோது அதைத் தடுக் காமல் சம்பந்தர் வெறுமனே வேடிக்கை பார்த்தார் என்றும் சொல்லியிருக்கிறார்.“மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடாது” இருந்தார் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.மடத்திற்கு தீ வைக்கப்பட்டதைச் சொன்ன அர்ஜுன் சம்பத், எண்ணாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்ட அந்த உலகமகாக் கொடூரம் பற்றி மட்டும் ஏதும் சொல்லவில்லை! மடத்திற்கு தீ வைக்கப்பட்டது உண்மை என்றால் சமணர்கள் படுகொலை செய்யப்பட்டதும் உண்மைதானே? இரண்டும் அதே பெரிய புராணத்தில் இருப்பவைதானே? ஏன் பின்னதை மட்டும் சொல்லவில்லை? இங்குதான் புராணத்தைத் தங்களது வசதிக்கு ஏற்ப இந்துத்துவாவாதிகள் வாசிக்கும் தன்மை பளிச்சென வெளிப்படுகிறது.“சைவம் சாதிகளுக்கு அப்பாற்பட்டது என்பதை 63 நாயன்மார்களின் வாழ்க்கையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்” எனும் ஒரு பழைய துருப்பிடித்த பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கிறார் அர்ஜுன் சம்பத். மதுரை ஆதீனமாக ஒரு குறிப்பிட்ட சாதிக்காரர்தான் வரமுடியும் என்று இப்போதும் கூச்சமில்லாமல் வேறு சில ஆதீனங்கள் கூறுகிறார்கள் என்றால், அதுவெல்லாம் இடையில் வந்த சமாச்சாரம் என்பது போலச் சித்தரிக்கப் பார்க்கிறார்.


உண்மை என்னவென்றால் அப்பர் - சம்பந்தர் காலத்திலும், அதற்கு முன்பும் தமிழகத்தில் பெரிதும் தழைத்திருந்த மதம் சமணம், அடுத்து பௌத்தம். பெரும்பாலான தமிழர்கள் இந்த மதங்களில் இருந்ததால் அவர்களைத் தன் பக்கம் இழுக்க சைவம் சில சாகசங்களைச் செய்தது. அடித்தட்டு சாதிகளைச் சேர்ந்த சிலரையும் நாயன்மார்கள் பட்டியலில் சேர்த்துக் கொண்டது. ஆனால், அப்படிச் சேர்த்த பெரிய புராணமே அவர்கள் இந்த நிலையை அடையச் சில கொடூரமான தியாகங்களை அல்லது அவமானங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் உற்சாகத்தோடு சுட்டிக்காட்டியது.சிதம்பரத்தில் நந்தனாருக்கு ஏற்பட்ட கதியை அறிவோம். சம்பந்தர் தனது பாடல் களுக்கு இசையமைத்துப் பாட பாணர் குலத்தைச் சார்ந்த யாழ்ப்பாணரையும் அவரது மனையாளையும் பயன்படுத்திக் கொண்டார் எனப் பெருமையோடு கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதன் வாயிலில் நின்றுதான் பாடவைத்தார் சம்பந்தர். இதோ அந்த வரிகள் - “கோயிலினில் புறமுன்றில் கொடுபுக்குக் கும்பிடு வித்து/ ‘ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும்’/ என ஆய புகழ்ப்பிள்ளையார்”.இதுதான் “சைவம் சாதிகளுக்கு அப்பாற்பட்டது” என்பதன் சரிதம்! விஷயம் என்னவென்றால் சைவம் - வைணவம் என்பவை எல்லாம் அந்தக் காலத்திய சனாதன மதத்தின் பிரிவுகளே. அவற்றுக்கும் சாதியம் உண்டு. அன்றைய தமிழகத்தின் ஆளும் வர்க்கங்கள் அதைத் தங்களின் சமூகக் கட்டுமானமாக ஏற்றுக் கொண்டிருந்தன. இதற்கு ஆதாரமாக மூவர் தேவாரத்திலேயே நிறைய வரிகள் உள்ளன. சமஸ்கிருதத்தில் இருந்தால் சாதியம், தமிழில் இருந்தால் அது சாதியம் கிடையாது என்பது மெய்யான தமிழ்ப்பற்று ஆகாது, மாறாக இன்றைய நடப்புகளின் நேற்றைய மூலத்தை அறியவிடாமல் செய்துவிடும்.பழ.கருப்பையா எழுதுவதை நோக்குங்கள் - “தமிழனின் சமயங்கள் சைவம், வைணவம், முருக வழிபாடு, இயற்கை வழிபாடு, மூதாதையர் வழிபாடு என்றிவை தாம்” சமணம் - பௌத்தத்தை மட்டும் குறிப்பிடவில்லை; கவனமாகத் தவிர்த்து விடுகிறார். இந்தச் சைவம் - வைணவம் தழைத்தோங்குவதற்கு முன்பு தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருந்த மதங்கள் சமணம் - பௌத்தமே எனும் வரலாற்று உண்மையைச் சொல்லக்கூட மகாக் கூச்சம்! இவர்களால் மதுரை மடம் போன்றவற்றில் இன்று ஏற்பட்டுள்ள விவகாரங்களுக்கு நோய் முதல் நாடி சிகிச்சை அளிக்க முடியாது.பிற மத வெறுப்பு, சாதியம், பண ஆதிக்கம், மூடநம்பிக்கைகள் போன்றவை சைவத் திலும் புகுந்திருந்தன. அவை மெல்ல மெல்லப் பரவி ஆதீன கர்த்தாக்களின் தனி மனித ஒழுக்கவியலையும் அரித்துத் தின்றன. வெகு மக்களுக்கு இருக்கக்கூடிய மத நம்பிக்கையை, அதன் தோற்றுவாயை மார்க்சியர்கள் புரிந்து கொள்கிறார்கள். அதற்காக ஒரு மதமானது மேலே குறிப்பிடப்பட்ட கேடுகளைத் தழுவ வேண் டியதில்லை என்கிறார்கள். அப்படி அது செய்யும் போது அவற்றை எதிர்த்து பகுத் தறிவாளர்கள் மட்டுமல்ல பக்திமான்களும் போராட வேண்டும் என்கிறார்கள்.இங்கோ பழ.கருப்பையா போன்றோர் விஷயத்தைத் தனிமனித ஒழுக்கக் குறை வாகவே, துணிவின்மையாகவே பார்க்கிறார்கள். “ஞானசம்பந்தர் வாதுக்குப் போனார். அவரிடம் தோல்வியடைந்ததாகச் சொல்லப்பட்ட ஏழாயிரம் சமணர் களைக் கழுவிலேற்றினார். சமணம் ஒழிந்தது, சைவம் தழைத்தது. மெத்த சரி! திருமறைகளும், பிரபந்தங்களும், சிவலிங்கமும் பெரியாரால் கேலிக்குள்ளாக்கப் பட்ட போது எந்த ஆதீனமாவது பெரியாரை வாதுக்கு அழைத்ததுண்டா?” - என்று ஆத்திரத்தோடு கேட்கிறார்.இவர் ஆசையைப் பாருங்கள்! இதே மனிதர் கீதையைத் தமிழரின் தத்துவ நூலாக ஏற்க முடியாது என்கிறார். ஆனால் சைவர்களது திருமறைகளையும் வைணவர் களது பிரபந்தங்களையும் விமர்சித்தால் விடக்கூடாது என்கிறார்! சம்பந்தரைப் போல வாதுக்கு இழுத்து கழுவில் ஏற்ற வேண்டும் என்கிறார். பெரியாரை அப்படிச் செய்திருந்தால் தற்காலத்தில் சைவம் தழைத்திருக்கும் என்கிறார். அண்ணா பெயரால் உள்ள கட்சி சார்பாக நின்று இந்த மகானுபாவர் எம்எல்ஏ ஆகியிருக்கிறார்!
பெரியார் மட்டுமல்ல அண்ணாவும் பெரிய புராணம், தேவாரம், ஆழ்வார் பாசுரம் இத்யாதி இத்யாதிகளை விமர்சித்தவர் என்பதை இவர் அறியாரா?? அறிந்தேதான் இப்படி எழுதியிருக்கிறார்!அவருக்குச் சொல்லிக் கொள்வோம். சமஸ்கிருத கீதையானாலும் சரி, தமிழ்ச் சமய நூல்களானாலும் சரி விஷயம் மொழி பற்றியது அல்ல. அவற்றில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதுதான் முக்கியம். அது பிறமத வெறுப்பாக, சாதியமாக, ஆணாதிக்கமாக, பணஆதிக்கமாக, மூடநம்பிக்கைகளாக இருந்தால் நிச்சயம் மார்க்சியர்கள் எதிர்ப்பார்கள்.பெரியார் தனது எதிர்ப்பைச் சற்று முரட்டுத்தனமாகச் செய்திருக்கலாம். மார்க் சியர்களோ இன்னும் தர்க்கரீதியாக, இன்னும் சரித்திர ரீதியாகச் செய்வார்கள். அப்படியாக வாது செய்ய அவர்கள் தயார் - எதிராளிகள் கழுமரத்தோடு வந்தாலும் சரி, நவீன காலத்திற்கு ஏற்ப கடப்பாரையோடு வந்தாலும் சரி! 


--
அப்பர் - சம்பந்தர் காலத்திலும், அதற்கு முன்பும் தமிழகத்தில் பெரிதும் தழைத்திருந்த மதம் சமணம், அடுத்து பௌத்தம். பெரும்பாலான தமிழர்கள் இந்த மதங்களில் இருந்ததால் அவர்களைத் தன் பக்கம் இழுக்க சைவம் சில சாகசங்களைச் செய்தது.
--

நன்றி - தீக்கதிர்