Showing posts with label மார்க்ஸ். Show all posts
Showing posts with label மார்க்ஸ். Show all posts

Thursday, April 3, 2025

சென்னைக்கு வருகிறார் மார்க்ஸ்

 



 

ஆயிரமாண்டுகளின்
அதிசய மனிதன்.
வாக்களித்துச் சொன்னது
உலகம்.
 
நெருக்கடியில் சிக்கித்
தவித்தது
முதலாளித்துவ பொருளாதாரம்,
மீட்சிக்கான வழி தேடி
புரட்டிப் பார்த்தது
அதிசய மனிதன்
எழுதிய மூலதனத்தைத்தான்.
 
இழப்பதற்கு ஏதுமில்லை,
வெல்வதற்கோ
பொன்னுலகம் காத்திருக்கிறது.
 
இன்று வரை
தொழிலாளி வர்க்கம்
உயிர்த்திருக்கும்
உன்னத முழக்கம் இதுவன்றோ!
 
காரல் மார்க்ஸின்
வார்த்தைகள் கம்பீரம்.
வாழ்க்கை கம்பீரம்
உருவாக்கி உலகுக்குத் தந்த
கொள்கை கம்பீரம்.
 
உற்சாகமூட்ட,
உத்வேகமளிக்க
கம்பீரமாய்
சென்னை வருகிறார்
காரல் மார்க்ஸ்
சிலையின் வடிவிலே . . .

 


பிகு : மேலே உள்ள காரல் மார்க்ஸ் சிலை, மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

 

Monday, July 31, 2023

கழுதைக்கு தெரியாது காரல் மார்க்ஸ் பற்றி . . .

 


ஆட்டுத்தாடி ஆர்.எஸ்.எஸ் ரவி உதிர்த்த முத்து கீழே.

 


மார்க்ஸிற்கும் ஜென்னிக்கும் இடையிலான காதல், ஜென்னிக்கு எழுதிய கடிதங்கள் ஆகியயவை பற்றியெல்லாம் எழுதலாம் என்றுதான் நினைத்தேன்.

 

பிறகுதான் தோன்றியது, இந்த சங்கி முட்டாள் சொன்னதற்கெல்லாம் பெரிய விளக்கமெல்லாம் தேவையா என்று.

 

அதனால்

 

ஒரு வார்த்தையில் சொல்கிறேன்.

 சங்கிக் கழுதைக்கு தெரியாது காரல் மார்க்ஸ் பற்றி.

 

Monday, October 10, 2022

மார்க்ஸ் - சில தெறிப்புக்கள்

 



 

வாரம் ஒரு நூல் அறிமுகம்.

 

இந்த வாரம் 19.09.2022

 

நூல் : மார்க்ஸ் – சில தெறிப்புக்கள்

ஆசிரியர் : தோழர் இரா.இரமணன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,

                       சென்னை -18

விலை : ரூபாய்  35.00

 

அறிமுகம் செய்பவர் : எஸ்.ராமன், வேலூர்

 

பேராசான் காரல் மார்க்ஸின் பன்முகப் பரிமாணங்களை பதிவு செய்துள்ள சிறு நூல் இது. மார்க்ஸ் எழுதிய கவிதைகள், அவர் ரசித்த கவிதைகள், அவர் மேற்கோள் காட்டிய புராண சம்பவங்கள், மார்க்ஸின் இறுதிக் கால தருணங்கள் என நான்கு பகுதிகளாக இந்நூல் அமைந்துள்ளது.

 

ஜெர்மானிய மக்களைப் பற்றி அவர் எழுதிய

 

புயலுக்குப் பின்னே

 

இங்கும் அங்கும் இடிக்கும் புயலுடன்

கறுத்த சோகம் கப்பிய மேகங்கள்

வானத்தில் திரளும்.

முட்டாள்களாய் வாய் மூடி

நாற்காலியில் அமர்ந்து

அவதானிக்கும் ஜெர்மானிய மக்கள்,

 

சாரைப் பாம்பென சீறிச் செல்லும்

மின்னல் வெட்டுக்கள்,

ஆயினும் அடங்கிக் கிடக்கும்

அவர்கள் உணர்ச்சிகள்,

வாழ்த்துமுகமாய் சூரியனும்

தென்றலாய் காற்றும்

அடங்கும் புயலும்

கண்டு சற்றே உயிர்ப்புற்று

“முடிந்தது குழப்பம்” என்று

முடிவுரை எழுதுவர்.

 

என்ற கவிதை இன்றைய இந்திய மக்களின் நிலைக்கும் கச்சிதமாக பொருந்துகிறது என்று நூலாசிரியர் கச்சிதமாகவே குறிப்பிட்டுள்ளார்.

 

தன் மனைவி ஜென்னிக்கு அவர் எழுதிய

 

காதல் உன் காலடியில் சமர்ப்பிக்கும்

இந்த ஏழையின் பாடல்கள்

அனைத்தையும் எடுத்துக் கொள்.

அதில்

யாழின் முழு இனிமையுடன்

ஒளிரும் கதிர்களுடன்

தளையேதுமின்றி என் ஆத்மா

உன்னை நெருங்கிடும்.

 

என்ற கவிதை அவர் கவித்திறனுக்கோர் சான்று.

 

இலக்கிய புராண மேற்கோல்களை மார்கஸ் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை இரண்டாவது அத்தியாயம் எடுத்துரைக்கிறது.

 

“மத்தியக் காலத்தில் ஜெர்மனியின் ஆளும் வர்க்கத்தின் கொடுமைகளுக்கு பழி வாங்குவதற்காக “Vehngericht” என்ற பெயரிலொரு ரகசிய நீதிமன்றம் இருந்தது. ஒரு வீட்டுச்சுவரில் சிகப்பு நிறத்தில் சிலுவைக்குறி போடப்பட்டிருந்தால் அதன் உடைமையாளரை Vehm ஒழிக்கப்போகிற்து என்பதை மக்கள் அறிந்து கொண்டார்கள். ஐரோப்பாவில் இன்று எல்லா வீடுகளிலும் சிகப்புச் சிலுவைக்குறி போடப்பட்டிருக்கிறது.வரலாறுதான் நீதிபதி. தண்டனையை நிறைவேற்றுபவர் பாட்டாளி வர்க்கம்” என்று மார்க்ஸ் எழுதியுள்ளார்.

 

அதே போல

 

தாந்தேயின் “டிவைன் காமெடி” காப்பியத்தில் நரகத்தின் நுழைவாயிலில்

“இங்கே அவநம்பிக்கைகள் அனைத்தையும் விட்டொழியுங்கள்! கோழைத்தனம் அனைத்தையும் இங்கே மாய்த்தொழியுங்கள்!

என்று எழுதப்பட்டிருந்ததாம். அதைப் போல விஞ்ஞானத்தில் நுழைவாயிலிலும் எழுதப்பட வேண்டும் என்கிறார் மார்க்ஸ்.

 

மேலே சொன்னது போல சுவாரஸ்யமான மேற்கோள்களை ஆசிரியர் நூலில் தொகுத்துள்ளார்.

 

மார்க்ஸின் சமகாலத்திய இலக்கியவாதியும் சமூக சிந்தனையாளருமான ஹைன்ரிக் ஹைனாவிற்கும் மார்க்சிற்குமான நட்பு மற்றும் முரண்பாட்டை மூன்றாவது அத்தியாயம் விவரிக்கிறது. ஹைனாவின் நீண்ட கவிதையையும் மார்க்ஸ் பயன்படுத்தியுள்ளார். அந்த நீண்ட கவிதையை நூலைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

 

டேவிட் ரியாசினோவ் எழுதிய நூலில் மார்க்ஸின் கடைசி காலத்தைப் பற்றி எழுதப்பட்டதன் தமிழாக்கம் நான்காவது அத்தியாயமாக அமைந்துள்ளது. மூலதனத்தின் இரண்டாவது பாகத்தின் வேலைகள் மார்க்ஸின் உடல் நலன் காரணமாக பாதிக்கப்பட்ட போது “ விலங்குகளைப் போல இருக்க விரும்பாத எந்த மனிதனுக்கும் வேலை செய்ய முடியாமல் முடக்கப்பட்ட நிலை ஒரு மரண தண்டனைதான்” என்று மார்க்ஸ் சொன்னாராம். எப்பேற்பட்ட மகத்தான மனிதர் மார்க்ஸ் என்பதற்கு  இதைக்காட்டிலும் வேறு உதாரணம் வேண்டுமோ!

 மார்க்சின் பன்முக பரிமாணங்களை நாம் அறிய வாய்ப்பளித்த நூலாசிரியருக்கு மனமார்ந்த நன்றி.        

செவ்வானம்


Tuesday, May 5, 2020

பிறந்த நாள் வாழ்த்துக்கள்


அவதார புருஷருக்கு
இன்று   பிறந்த நாள்.
கொண்டாட்டங்கள்  இல்லை,
கோயில்களில்  அபிஷேகங்கள்  இல்லை,
வேறெங்கும் சிறப்புப்
பிரார்த்தனைகள் இல்லை.
கடவுளாய் தன்னை சொன்னவரில்லை
மனிதனாய்  வாழ வழி காட்டியவர் அவர்.

எல்லாம் அவன்  செயல்   என்று 
விதி மீது பழி போட்டு 
உபதேசங்களை  வாரி வாரி 
அள்ளி இறைத்த  தத்துவ 
வள்ளல்கள்  மத்தியில் 
ஏன், எதற்கு, எப்படி  என
தத்துவ ஆராய்ச்சி செய்தவர். 

எல்லோரும்  எல்லாமும் பெற வேண்டும்,
சாதரணமாய் சொல்லி விடவில்லை. 
முதலாளித்துவ வெறியின் 
கோர முகத்தை  வெளிச்சத்தில்
விலக்கிக்  காட்டியவர்.

ரத்தம் ஒழுகும் வாயோடு
மூலதனம்  உலகெங்கும் 
சுற்றி வரும் பேயென்ற  
உண்மையை உரைத்தவர்.

இனி இவர் படிக்க 
புத்தகங்கள்  இல்லை என்று 
வெட்கப்பட்டது 
லண்டன்  நூலகம்.

எதிரியின்  கருவிதான். 
வேறு வழியின்றி 
சொன்னது 
ஆயிரம்  ஆண்டுகளின் 
அற்புத மனிதர் 
இவர்தான்  என்று.

நிதி மூலதனம் பேராசைப்பட 
உலகப் பொருளாதாரம் 
சூறாவளியில், சுழலில், 
சிக்கித் தவிக்க 
வேக, வேகமாய் 
புரட்டியது  இவரது 
புத்தகத்தைத்தான். 

போப்பாண்டவர் கூட 
உபதேசித்தார், 
இவரின் மூலதனத்தை  
படிக்கச்சொல்லி. 

அறிவும், உழைப்பும், 
அடித்தட்டு மக்களை 
உய்த்திட கொண்ட 
வேட்கையும்தானே
மூலதனத்தின் 
மூலதனம்

உலகத் தொழிலாளரே, 
ஒன்று படுங்கள், 
அடிமை விலங்கை உடைத்தால்
பொன்னுலகம்  உங்கள் கைகளில்
என்று  பொதுவுடமைத் 
தத்துவம் தந்து 
சிந்தனைகளை  சிவப்பாக்கிய 
மார்க்ஸ் அன்றி 
வேறு யார் இங்கே 


அவதார புருஷர்?

(சிறிய மாறுதலோடு மீள் பதிவு)

Tuesday, November 20, 2018

நட்புக்கும் அவர்கள்தான் . . .





பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வெளியிடும் "காப்பீட்டு ஊழியர்'  மாத இதழின் நவம்பர் 2018 இதழில் பிரசுரமான எனது கட்டுரை


பொதுவுடமைக்கு மட்டும் இலக்கணம் படைத்தவர்கள் அல்ல . . .

அது ஒரு வறுமையான காலம். செல்லும் இடங்களிலெல்லாம் புரட்சியின் விதைகளை தூவிச்செல்கிறார் என்பதால் பல நாடுகளில் ஆட்சியாளர்கள் மார்க்ஸை தங்களுடைய எல்லைக்கு அப்பால் துரத்திக் கொண்டிருந்த நேரம். 1844 ல்  பாரீஸில் தங்கியிருந்த மார்க்ஸை முதல் முறையாக ஏங்கல்ஸ் சந்திக்கிறார். ஒரு செல்வந்தர் குடும்பத்தின் வாரிசாக இருந்தும் அந்த படோடபங்கள் மீது நாட்டமற்று பாட்டாளிகள் படும் துயரத்தின் மீது கவலை கொண்ட மனிதரான ஏங்கல்ஸ் பிறந்ததும் கூட மார்க்ஸ் பிறந்த அதே ரைன்லாந்து மாநிலத்தில்தான்.

முதல் சந்திப்பு

“தத்துவத்தின் வறுமை’ என்ற நூலை அப்போதுதான் மார்க்ஸ் எழுதியிருந்தார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் குடும்ப வணிகத்தை பார்த்துக் கொண்டிருந்த ஏங்கல்ஸ் தொழிலாளர்கள்தான் துயரப்படும் வர்க்கம் என்பதை முதன் முதலில் சொன்ன “இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர்கள் நிலை” என்ற நூலை எழுதி இருந்தார். இருவரின் சந்திப்பு உலக பாட்டாளி வர்க்கத்தின் வாழ்நிலையை புரட்டிப் போடக்கூடிய தத்துவங்களை உருவாக்கப் போகிறவர்களின் சந்திப்பு என்பதை அவர்கள் கூட அப்போது உணர்ந்திருக்கவில்லை.

முதல் நூல்

முதல் சந்திப்புக்குப் பிறகு தொடர்ச்சியாக தகவல் பரிமாற்றங்களைச் செய்து கொண்டிருந்த மார்க்ஸூம் ஏங்கெல்ஸும் இணைந்து 1945 ல் உருவாக்கிய முதல் நூல் “புனிதக் குடும்பம்” பாட்டாளி வர்க்கத்தை கருத்துமுதல் வாதக் கண்ணோட்டத்தில் கடுமையாக விமர்சித்து வந்த ஹெகலியவாதிகளுக்கு அவர்கள் அளித்த பதிலே இந்த நூல். “ஆபத்தான விமர்சனத்தைக் குறித்த விமர்சனம்’ (Critique of Critical Critique.)  என்று முதலில் பெயர் சூட்டப்பட்டிருந்த இந்த நூல் பாட்டாளி வர்க்கத்தை பொருள் முதல்வாத கண்ணோட்டத்தில் விளக்கியது. முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டும் வல்லமை பாட்டாளி வர்க்கத்திற்கே உள்ளது என்பதை முதன் முதலில் சொன்னதும் கூட இந்த நூலே.  

வெளியேற்றப்பட்டவரும் வெளியேறியவரும்

பிரெஷ்ய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மார்க்ஸ் பிரான்ஸை விட்டு வெளியேற்றப்படுகிறார். அவர் பாரீஸிலிருந்து பெல்ஜியம் நாட்டின் ப்ரஸ்ஸல்ஸ் நகருக்குச் செல்கிறார். அதே நேரம் ஏங்கெல்ஸும் தனது வீட்டிலிருந்து வெளியேறி ப்ரஸ்ஸல்ஸ் செல்கிறார். அந்த நகரின் நூலகங்கள் அவர்களின் அறிவுத் தேடலுக்கு போதுமானதாக இருக்கவில்லை. இருவரும் இங்கிலாந்து செல்கிறார்கள். மான்செஸ்டர் நூலகங்களில் பொழுதைச் செலவழித்து பின் லண்டன் செல்கின்றனர்.


அமைப்பினை உருவாக்கும் பணி

தொழிலாளர் புரட்சியை உருவாக்க அமைப்பு வேண்டும் என்பதை உணர்ந்து பல நாடுகளிலும் அமைப்புக்களை உருவாக்கும் பணியை இருவரும் செய்யத் தொடங்கினர். இங்கிலாந்தில் இருந்த அமைப்புக்களை ஒருங்கிணைக்கும் பணியை ஏங்கெல்ஸ் செய்தாரென்றால் பிரான்ஸிலும் ஜெர்மனியிலுமிருந்த அமைப்புக்களை ஒன்றினைக்கும் பணியை மார்க்ஸ் செய்தார்.

கம்யூனிஸ்ட் லீக் உருவாகிறது, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் கூட

இச்சூழலில்தான் 1847 ல் லண்டனில் செயல்பட்டு வந்த் நீதியாளர் சங்கம், மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும் தங்கள் அமைப்பில் இணைய வேண்டுமென்றும் தங்கள் சங்கத்தின் புதிய வேலைத்திட்டத்தையும் கூட உருவாக்கித் தர வேண்டுமென்றும் கோருகிறது. அதனை ஏற்று அந்த சங்கத்தின் காங்கிரஸில் ஏங்கெல்ஸ் பங்கேற்கிறார். நிதிப் பிரச்சினை காரணமாக அப்போது மார்க்ஸால் அக்கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. ஏங்கெல்ஸ் கலந்து கொள்கிறார். அந்த கூட்டத்தில்தான் அமைப்பின் பெயர் “கம்யூனிஸ்ட் லீக்” என மாறுகிறது.

கம்யூனிஸ்ட் லீகின் வேலைத்திட்டமாகத்தான் 1848 ல்  மார்க்ஸும் ஏங்கெல்ஸும் தயாரித்ததுதான் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”. இன்றளவும் உலகத்து உழைப்பாளி மக்களுக்கு வழிகாட்டி போராட்டத்திற்கு உற்சாகமளிப்பது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. இழப்பதற்கு அடிமைச்சங்கிலியைத் தவிர வேறெதுமில்லாத தொழிலாளர்கள்  அடுத்த எழுபது ஆண்டுகளிலேயே மண்ணுலக சொர்க்கமாக சோவியத் யூனியனைப் படைத்தார்கள்.

1848, 1849 ஆகிய ஆண்டுகளில் ஐரோப்பாவில் பல இடங்களில் நடைபெறும் புரட்சிகளை மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஆதரிக்கிறார்கள், உற்சாகப்படுத்துகின்றார்கள், தொழிலாளர்கள் மத்தியில் தங்கள் கருத்துக்களை எடுத்துச் செல்வதற்காக “புதிய ரைன்லாந்து கெஜட்’ என்ற பத்திரிக்கையை மார்க்ஸ் துவக்குகிறார். ஏங்கெல்ஸ் அதிலே கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி பொருளாதார உதவிகளையும் செய்கிறார்.

நண்பனுக்காக

உலகத்தின் மக்களின் வறுமைக்கான காரணம்  என்னவென்று ஆராய்ந்து அதைப் போக்குவதற்கான அருமருந்தை உருவாக்கும் ஆராய்ச்சிப் பணியை 1850 ல் மார்க்ஸ் துவங்குகிறார். ஆம், அதுதான் “மூலதனம்” எழுதும் பணி. உலக மக்களின் வறுமை பற்றி கவலைப்பட்ட மார்க்ஸ் அப்போது மிக மோசமான வறுமையால் பீடிக்கப்பட்டிருந்தார் என்பது ஒரு முரண் நகை.

அப்போது ஏங்கெல்ஸிற்கும் சில பொருளாதார நெருக்கடிகள் இருக்கத்தான் செய்தது. ஆனால் மார்க்ஸின் ஆய்வு எந்த தடங்கலாலும் பாதிக்கப்படாமல் பொருளாதார உதவி செய்வதற்காகவே மான்செஸ்டரில் இருந்த குடும்ப வணிகத்தை கவனிக்கத் தொடங்கினார். “நாய் வர்த்தகம்” என்று அதனை வெறுப்போடு வர்ணித்தாலும் நண்பனின் மகத்தான பணிக்காக அதிலே இருபது வருடம் ஈடுப்பட்டார். அது மட்டுமா,

நியுயார்க் டெய்லி டிரிப்யூனல் பத்திரிக்கைக்கு மார்க்ஸின் பெயரில் கட்டுரைகளை எழுதியனுப்பி, அதற்கான தொகையையும் கிடைக்கச் செய்திருந்தார். 

ஏங்கெல்ஸ் மட்டும் இல்லாதிருந்தால் மார்க்ஸால் “மூலதனம்’ நூலை முடித்திருக்கவே முடியாது. வறுமையின் கொடுமையில் மூழ்கி இருந்திருப்பார் என்ற லெனின் கூற்றிலிருந்தே மார்க்ஸிற்கு எந்த அளவு பாதுகாப்பு அரணாக ஏங்கெல்ஸ் இருந்தார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

1864 ல் பல நாட்டு தொழிற்சங்கங்கங்கள், தொழிலாளர் கட்சிகள் ஆகியவற்றை இணைத்து “முதல் அகிலம்” என்று அழைக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் சங்கம் உருவாக்கப்படுகிறது. அந்த அமைப்பின் பொறுப்பாளர்களாக, அதனை வழி நடத்துபவர்களாக மார்க்ஸும் ஏங்கெல்ஸும் செயல்பட்டனர்.

அஞ்சலி உரை

மூலதனம் நூல் எழுதும் பணி முடிவுற்றது. முதல் பாகம் அச்சுப்பிரதியாக வெளி வந்தது. இந்த நிலைமையில்தான் உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்த மார்க்ஸ் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த படியே 1883 மார்ச் மாதம் 14 ம் நாள் சிந்திப்பதை நிரந்தரமாக நிறுத்தி இருந்தார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு லண்டன் ஹைகேட் மயானத்தில் மார்க்ஸை அடக்கம் செய்கிற போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரையானது மிகவும் முக்கியமானது, அவர்கள் நட்பின் ஆழத்தை எடுத்துரைப்பதாக அமைந்திருந்தது.

“இதோ இந்த மார்ச் 14 ம் தேதி மதியம் 3 மணிக்கு இவர் சிந்தனையில் மூழ்கிக் கொண்டிருந்த போது இரண்டு நிமிடங்கள் தனிமையில் விட்டுச் சென்றோம். திரும்பி வந்து பார்க்கையில் இனி விழிப்பே வராத தூக்கத்தில் நாற்காலியிலேயே உறங்கிப் போயிருந்தார்.

இந்த மேதையின் மரணம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்கத்திற்கும் வரலாற்று விஞ்ஞானத்திற்கும் அளவிட முடியாத இழப்பை உருவாக்கியுள்ளது. இந்த மகத்தான மனிதருடைய பிரிவால் ஏற்பட்டுள்ள இடைவெளியை நாம் விரைவிலெயே உணர்வோம்.

உயிரியல் இயற்கையில் வளர்ச்சி விதியினை டார்வின் கண்டுபிடித்தது போல மனித சமூக வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.  அரசியல், மதம், அறிவியல், கலை இவற்றை அடையும் முன்பு உண்ண உணவு, உடுத்த உடை, குடிக்க நீர், வசிக்க வீடு ஆகிவற்றை மனிதன் பெற வேண்டும் என்ற எளிய உண்மையை மட்டும் இவர் உலகிற்கு சொல்லவில்லை. முதலாளித்துவ அடிப்படையிலான உற்பத்தி முறையும் அது யாருக்கு பணிந்து செல்கிறது என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியதுதான் மிகவும் முக்கியம். அவர் உபரி மதிப்பை கண்டுபிடித்தது அவரது வாழ்நாள் சாதனை.

மார்க்ஸ் ஒரு புரட்சிக்காரர். முதலாளித்துவ சமூகத்தை ஒழிப்பதற்கு, அது உருவாக்கியிருக்கிற நிறுவனங்களை ஒழிப்பதற்கு நவீன பாட்டாளி வர்க்கத்தின் சொந்த நிலைகளையும் அதன் தேவையையும் உணரும்படி, அதன் விடுதலையின் நிலைமைகளை உணரும்படி செய்த முதல் நபர் அவரே. போராட்டமே அவர் உயிர். அவரைப் போல  உணர்ச்சிகரமாக, வெற்றிகரமாக போராடுவதற்கு யாராலும் முடியாது. அவர் வேறு எதையாவது செய்யாதிருந்தால் கூட, சர்வதேச தொழிலாளர் சங்கத்தை நிறுவியது ஒன்று போதும், அவரது பெருமையைச் சொல்ல.

மார்க்ஸ் தன் காலத்தில் அதிகமாக வெறுக்கப்பட்ட, மிகவும் அவதூரு செய்யப்பட்ட மனிதராக இருந்தார். எதேச்சாதிகார நாடுகளும் சரி, குடியாட்சி நாடுகளும் சரி அவரை தங்களது நாடுகளிலிருந்து வெளியேற்றின. முதலாளி வர்க்கத்தினர், அவர்கள் பழமைவாதிகளோ அல்லது அதி தீவிர ஜனநாயகவாதிகளோ, மார்க்ஸ் மீது அவதூறுகளை குவிப்பதில் போட்டியிட்டனர்.  இவற்றையெல்லாம் சாதாரண ஒட்டடை போல அவர் ஒதுக்கித் தள்ளினார்.

அவருக்கு பல எதிரிகள் இருந்திருக்கலாம். ஆனால் தனிப்பட்ட விரோதி என்று ஒருவர் கூட கிடையாது. சைபீரியாவின் சுரங்கங்கள் முதல் கலிபோர்னியா வரை, ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டங்களின் அனைத்து பகுதிகளிலும் லட்சக்கணக்கான புரட்சிகர தொழிலாளர்களின் அன்புக்குப் பாத்திரமான அவர் மறைந்த போது அவர்கள் கண்ணீர் சொரிந்தனர்.

மார்க்ஸின் பெயரும் எழுத்துக்களும் உலகில் எப்போதும் நிலைத்து நிற்கும்”

ஒரு ஒப்பீடு

1943 ல் காரல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதிய வெ.சாமிநாத சர்மா மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும் ஒப்பிடுகிறார். 

அவர் தனது நூலில்

“சுபாவத்தில் மார்க்ஸ் மகா முன் கோபி. ஏங்கெல்ஸ் வெகு நிதானஸ்தன். மார்க்ஸை நெருங்குகிற போது ஓர் அச்சம் உண்டாகும். ஏங்கெல்ஸை அணுகுகிற போது ஓர் அன்பு உண்டாகும். எதிர்க்கட்சியினரை மார்க்ஸ் போராடி வெல்வார், ஏங்கெல்ஸ் அன்பினால் அணைத்துக் கொண்டு விடுவார். மார்க்ஸ் பிறவித் தலைவன். ஏங்கெல்ஸ் பிறவித் தோழன்.

இருவரிடத்திலும் மனோ உறுதி, விடா முயற்சி இருந்தன. சலிக்காத உழைப்பாளிகள், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சமாளித்துக் கொள்வார்கள். ஏழைகளுக்கு இரங்கும் மனம் படைத்தவர்கள், எடுத்துக் கொண்ட செயலை முடிக்கும் ஆர்வம் கொண்டவர்கள். பொது நல விஷயத்தில் சொந்த மதிப்பை பாராட்டாதவர்கள். பிறருடைய குற்றங்குறைகளை கண்டிப்பதில் எப்படி தயவு தாட்சண்யம் இல்லாதவர்களோ அது போல தங்களுடைய குறைகளையும் எடுத்துச் சொல்வதற்கு தயங்காதவர்கள்.”

இந்த குணாம்சங்கள்தான் இருவரையும் இணைத்தது. மார்க்ஸ் மறைந்த பின்பு அவருடைய பணிகளை ஏங்கெல்ஸ் முன்னெடுத்துச் சென்றார். மூலதனம் நூலின் இரண்டாவது, மூன்றாவது பகுதிகள் மார்க்ஸ் மறைந்த போது கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தது. அதை வெளியிட்டவர் ஏங்கெல்ஸே. முதலாவது அகிலத்தின் பணிகளையும் அவர் தொடர்ந்து செய்து வந்தவர். தன் வாழ்வின் இறுதி நாள் வரை மார்க்ஸின் புகழை உலகிற்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் பொதுவுடமைக் கொள்கைக்கு மட்டும் இலக்கணம் படைக்கவில்லை. நட்புக்கும் தோழமைக்கும் கூட இலக்கணமாய் வாழ்ந்தவர்கள்.

-    வேலூர் சுரா