Sunday, June 30, 2013

ஹரி, சசிகுமார் போன்ற அரிவாள் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள்

கிட்டத்தட்ட ஓராண்டு கால இடைவெளிக்குப் பிறகு  நேற்று
ரத்த தானம் செய்தேன். நாற்பத்தி ஒன்பதாவது முறையாக
ரத்த தானம் செய்ததில் ஒரு மகிழ்ச்சி. கடந்த முறை ரத்த தானம்
செய்ய சென்ற போது ரத்த அழுத்தம் கூடுதலாக இருப்பதாக
நிராகரித்து விட்டார்கள். எனவே ஐம்பது என்ற இலக்கை அடைய
முடியுமோ என்ற அச்சம் இருந்தது. அதை அடைய முடியும்
என்ற நம்பிக்கை இப்போது  வந்து விட்டது.

இப்போது நான் எழுதப் போவது வேறு ஒரு விஷயம் பற்றி.

பொதுவாக ரத்த தானம் செய்யப் போனால் ஒரு மணி நேரத்தில்
திரும்பி விடுவேன். நேற்று கூட்டம் அதிகமாக இருந்ததால்
மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க நேர்ந்தது. அப்போது
கண்ணில் பட்ட காட்சிகளே இப்பதிவிற்குக் காரணம்.

விபத்தில் சிக்கிய நண்பனுக்காகவும் இதய அறுவை 
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நண்பனுக்காகவும்
ரத்தம் அளிக்க ஒரு இளைஞர் பட்டாளமே வந்திருந்தது.
அவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் தொலைபேசி செய்து
கொண்டிருந்தார்கள். 

இன்னும் கூட ரத்தம் தேவைப்படுது நண்பா, எப்படியாவது
வந்துடேன் என்று மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.

அது போல அஸ்ஸாமிலிருந்து வந்த ஒரு குடும்பம் 
ரத்த வங்கி பொறுப்பாளர்களிடம் எப்படியாவது ஒரு நாள்
அவகாசம் கொடுங்கள், இரண்டு உறவினர்கள் ட்ரெயினில்
வந்து கொண்டிருக்கிறார்கள், திங்கட்கிழமை காலை 
ரத்தம் கொடுத்து விடுவார்கள். ஆபரேஷனை தள்ளிப் போட
வேண்டாம் என்று டாக்டருக்கு சொல்லுங்கள் என்று
கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.  அஸ்ஸாமிலிருந்து வந்த
நாங்கள் இன்றைக்குள் எங்கே ஆட்களைக் கண்டு பிடிப்பது
என்று அவர்கள் கேட்டதிலும் நியாயம் உண்டு. 

நானும் இன்னொரு தோழரும் கூட அஸ்ஸாம் மாநிலம்,
ஜோர்ஹாட்டைச் சேர்ந்த ஒரு தோழருக்கு ரத்தம் அளிக்கத்தான்.
எல்.ஐ.சி ஊழியர் என்பதால் அவரது குடும்பமாக எங்கள்
சங்கம் உள்ளது. எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பது
இல்லையே.

உயிரின் உன்னதமும் அதைக் காக்க ரத்தத்தின் முக்கியத்துவமும்
மருத்துவமனையில் இருந்தால்தான் புரியும். 

அரிவாள் வீசி தலையை வெட்டியெடுத்து திரை முழுவதும்
ரத்தம் பீய்ச்சியெடுக்கிற காட்சியை படத்துக்கு படம் வைக்கிற
ஹரி, சசிகுமார் உள்ளிட்ட எண்ணற்ற இயக்குனர்களுக்கு
ஒரு வேண்டுகோள்.

இப்படி ரத்தம் விரயமாகிற காட்சிகளை கொஞ்சம் தவிர்க்கலாமே..

உயிரை சுலபமாக எடுக்கிற காட்சிகளுக்கு பதிலாக 
உயிரின் உன்னதத்தை போற்றுகிற காட்சிகளை அளிக்கலாமே...

ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை உங்கள் திரைப்படங்களில்
கொஞ்சம் சொல்லுங்களேன். உங்கள் திரைப்படங்களைப்
பார்த்து நான்கு பேர் ரத்த தானம் செய்தால் அது உங்களுக்கும்
பெருமைதானே...

ரத்த தானம் பற்றி குறும்படங்கள் கூட எடுக்கலாமே...

நான் கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

 

கல்கியா இது? நம்ப முடியவில்லை!

இந்த வார கல்கி கேள்வி பதில்களில்


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஐந்து சதவிகித பங்குகள
தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து>

கலகி பதில் : தமிழக முதல்வர் கடுமையாக எதிர்த்து பிரதமருக்கு
மறுமுறையும் கடிதம் எழுதியுள்ளார். தமிழகக் கட்சிகளும்
என்.எல்.சி தொழிலாளர் அமைப்புக்களும் இதை வன்மையாக
எதிர்க்கின்றன. அரசின் தவறான நிதிக் கொள்கையே இது போன்ற
அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்க வழி கோலுகிறது.
அரசியல் லாபம் பெறவே தமிழகக் கட்சிகள் பங்கு விற்பனையை 
எதிர்க்கின்றன என்று அபத்தமாகப் பேசியிருக்கிறார் நாராயணசாமி.
லாபம் ஈட்டும் அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்கும்
"புத்திசாலித்தனம்" தனது ஊதாரி செலவினங்களுக்காக 
மனைவியின் நகைகளை விற்கும் கணவனின் நடத்தைக்கு
சமமாகும்.

கல்கியின் இந்த நிலைப்பாடு உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

உலகமயக் கொள்கைகளை ஆதரிக்கிற, தொழிலாளர்
போராட்டங்களை சாடுகின்ற, தனியார்மயத்தை உயர்த்திப்
பிடிக்கிற கல்கி பத்திரிக்கையின் மனமாற்றம் நிரந்தரமானதுதானா?
 

Friday, June 28, 2013

ஓவர் பில்ட் அப்பால் அம்பலப்பட்டு நிற்கும் ராம்போ நரேந்திர மோடி




https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/p480x480/1016503_659614957386053_1211314604_n.jpg
அழிவில் அரசியல் ஆதாயம் தேடுவது என்பது முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை. வெள்ளச் சேதத்தை மடித்து கட்டிய வேட்டியோடு பார்வையிடும் அமைச்சர்களை எத்தனை முறை பார்த்திருக்கிறோம்.

அதே போல ஸ்டண்ட் அடிக்க நரேந்திர மோடியும் உத்தர்கண்ட் வந்தார். சென்றார். ஆனால் அறிக்கைகள் வந்தன. 15,000 குஜராத்திகளை அவர் மீட்டுச் சென்றார் என்பது அந்த அறிக்கைகளின் சாராம்சம். சங் பரிவார கும்பல்களின் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் “ பார்த்தாயா எங்கள் தலைவரின் புஜபல பராக்கிரமத்தை என்று விசில் அடித்து உற்சாகக்குரல் எழுப்பி “ எங்கள் தலைவரை விட வேறு யார் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் இருக்கிறார்கள் “ என்று முழங்கோ முழங்கு என்று முழங்கினார்கள். எங்கே அந்த சோம்பேறி ராகுல் காந்தி என்று கேட்கவும் அவர்கள் தவறவில்லை.

15,000 பேரைக் காப்பாற்றிய நரேந்திர மோடி பிரதமரானது போலவே சங் பரிவார அடிப்பொடிகள் எழுதிக் கொண்டிருந்த போது அவர்கள் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

ராணுவமும் விமானப்படையுமே மீட்புப் பணிகளில் மிகவும் சிரமப் படும்போது நரேந்திர மோடி எப்படி ஐயா 15,000 பேரைக் காப்பாற்றினார் என்ற கேள்வி முதலில் வந்தது. கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் ஏன்யா இப்படி கதை  விடங்கறீங்க என்ற கேள்விக்கு பதிலே இல்லை.

அடுத்த கேள்வி தேசிய ஜனநாயகக் கூட்டணியில்க் மிஞ்சியிருக்கிற சிவசேனை “ அதெப்படி குஜராத்திகளை மட்டும் நரேந்திர மோடி காப்பாற்றலாம், பிரதமர் பதவிக்கு ஆசைப்படுபவர் மற்ற மாநில மக்களை கண்டு கொள்ளாமால் இருப்பது  தகுமா “ என்று கேட்டது

பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் மிகவும் புத்திசாலித்தனமாக அப்படியா? நிஜமாகவா? என்று கேட்டு தப்பித்து விட்டார்.

நான் ஒன்னும் பதினைந்தாயிரம் பேரை காப்பாத்தினதா சொல்லவே இல்லையே என்று இப்போது  மோடியும் பல்டி அடித்து விட்டார். நான் சும்மா டீயும் ரொட்டியும் கொடுக்கப் போனேன் என்ற ரீதியில் அவர் சமாளித்து விட்டார். ஆனால் முதலில் இந்த செய்தியை வெளியிட்ட ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை மட்டும் நிசமாவே நரேந்திர மோடி அவ்வளவு பேரை காப்பாத்தான் செஞ்சாரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கொஞ்சம் அளவா பொய் சொல்லியிருந்தா, இப்படி அசிங்கப் பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஓவரா பில்ட் அப் செஞ்சதால இப்ப அசடு வழிய வேண்டியிருக்கிறது.

இதிலே முக்கியமான செய்தி என்னவென்றால்

குஜராத்தின் வளர்ச்சி பற்றி இவர்கள் பீற்றிக் கொள்வதில் எவ்வளவு சதவிகிதம் உண்மை? எவ்வளவு சதவிகிதம் பில்ட் அப் ?

இவ்வளவு பொய் சொல்பவர் பிரதமரானால் நாடு தாங்குமா?

பின் குறிப்பு : போட்டோவுக்கு ஸ்டைலாக போஸ் கொடுப்பதில்
ராம்போ மோடியை மிஞ்ச யாருமில்லை



Thursday, June 27, 2013

எப்படித்தான் இது சாத்தியமோ?

சமீபத்தில் நான் மிகவும் ரசித்த
ஒரு கவிதை.


சாம்பல் நிற புறா
 பச்சைநிற பொன்வண்டு 
சன்னலில்வந்தமரும் சிட்டுக்குருவி
மாதுளைப்பூவின் தேன்சிட்டு 
தோகைநிறைந்த மயில் 
ஒரேஒரு பச்சைக்கிளி 
எந்த ஒன்றை 
பரிசாகதருவேன் 
என்பிரியமான தோழி பட்டாம்பூச்சிக்கு?


இந்த கவிதையை எழுதியது
யார் தெரியுமா?

சற்று கீழே வாருங்கள்




























இதோ இவர்தான்



மார்க்சிஸ்ட் கட்சியின்
சட்டமன்ற உறுப்பினர்
தோழர் பாலபாரதி
எழுதிய கவிதை அது.

கட்சிப்பணி, சட்டமன்ற உறுப்பினர் பணி
இதற்கு மத்தியில் கவிதைப் பணிக்கும்
எப்படித்தான் நேரமிருக்கிறதோ!

பிரமிக்க வைக்கிறீர்கள் தோழர்

 








Wednesday, June 26, 2013

தந்தையாக கலைஞருக்கு வெற்றி, தலைவராக ?????


 http://www.theunrealtimes.com/wp-content/uploads/2012/09/sonia-karuna-300x293.jpg

மகள் கனிமொழியை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக்குவதில்
அவர் தந்தை கலைஞர் கருணாநிதிக்கு வெற்றி கிடைத்து விட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருக்கு?

இல்லை என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறி சில மாதங்கள் கூட
ஆகவில்லை. எந்த காரணத்தை சொன்னாரோ, அந்த காரணம்
இன்னும் அப்படியே இருக்கிறது. இலங்கை தமிழர் பிரச்சினையில்
காங்கிரஸ் காண்பிக்கும் அலட்சியம் அப்படியே தொடர்கிறது. 
அப்படி இருக்கையில் மீண்டும் காங்கிரஸின் காலடியில் சரணாகதி
அடைந்தது  கட்சியை விட குடும்பம்தான் முக்கியம் என்று 
செயல்படுபவர் என்ற குற்றச்சாட்டை நிரூபித்து விட்டார்.

எந்த ஒரு முடிவிலும் உறுதியாக இருக்க முடியாமல் தடுமாறும்
நிலையில் இருப்பவர் என்ற குற்றச்சாட்டும் இப்போது
உறுதியாகி விட்டது.

எந்த ஒரு முடிவும் ஜனநாயக பூர்வமாக பொதுக்குழுவில் 
விவாதிக்கப்படும் என்ற தோற்றத்தையாவது இதுநாள் வரை
திமுகவில் பார்க்கலாம். கனிமொழியை போட்டியிட வைப்பதோ,
இல்லை அவர் வெற்றி பெற காங்கிரஸ்  கட்சிக்கு காவடி தூக்குவது
என்ற முடிவோ எந்த பொதுக்குழுவிலும் எடுக்கப்பட்டதாக
தெரியவில்லை.

காங்கிரஸ் கூட்டணி உறவை முறித்ததும் பட்டாசு வெடித்து,
இனிப்பு அளித்து கொண்டாடிய திமுக உடன்பிறப்பின் நிலை
இப்போது எப்படி இருக்கும்?

கனிமொழி வெற்றிக்காகவும் இனிப்பு கொடுத்து பட்டாசு 
வெடிப்பார்களா அல்லது தங்கள் மானத்தை தலைவர் இப்படி
வாங்கி விட்டாரே என்று நொந்து கொள்வார்களா?

திமுகவையெல்லாம் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று 
வீரம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இப்போது என்ன
சொல்லப் போகிறார்?

" காங்கிரஸ், திமுக இரண்டு கட்சிகளுக்கும் வெட்கமும் 
கிடையாது, விவஸ்தையும் கிடையாது. ஆகவே நாங்கள்தான்
இயல்பான கூட்டணி"   என்று சொல்வாரா அவர்?

தென்னைய பெத்தா இளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு
என்ற பாடல் வரிகளை கலைஞருக்கு டெடிகேட் செய்கிறேன்.

ராஜ்யசபா தேர்தல் முடிந்த பின் அண்ணன் அழகிரி குடைச்சல்
ஆரம்பமாகுமோ?
 

Tuesday, June 25, 2013

எப்படி மனம் வந்தது அந்த பெரிய மனிதருக்கு?

மறைந்த நடிகர் மணிவண்ணன் பற்றி நடிகர் இயக்குனர்
பார்த்திபன் கூறியது பற்றி இப்போதுதான் முகநூலில்
பார்த்தேன். உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து போனது.

இப்படிப்பட்ட ஒரு மனிதரைப் பற்றி தரக்குறைவாக,
அதுவும் ஆயிரக்கணக்கானவர்கள் படிக்கும் ஒரு
வார இதழில் எழுத அந்த பெரிய மனிதர் பாரதிராஜாவிற்கு
எப்படித்தான் மனம் வந்ததோ?

இதோ பார்த்திபன் எழுதியது...

"நான் டப்பிங் பேசிக் கொண்டிருந்த காலத்தில்...

ஒரு கதாபாத்திரத்திற்கு என் குரல் பொருத்தம் என முடிவு செய்து ரூ 500 முன் பணம் கொடுத்தார்கள். அதற்கு 10% கமிஷன் யாருக்கோ கொடுக்க வேண்டும் என்ற சூட்சமம் அறியாத நான், டீ கடன்,பன் கடன்,டிபன் கடன் இப்படி எல்லாக் கடன்களையும் அடைத்து விட்டு டப்பிங் அரங்கிற்கு சென்றேன். இன்றே அந்த கேரக்டருக்கு பேசி முடித்து விட்டால் மீதி 1500 கிடைக்கும் அதில் தீபாவளியை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்ற 1000 கற்பனையில் உதடு தானாய் விசிலியது.

ஆனால் எனக்கு பதில் அந்த கேரக்டருக்கு வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். கேட்டால் என் குரல் பொருந்த வில்லையாம்(10%)!
கலங்கிய படி வாசலில் நின்றிருந்தேன்.

அப்படத்தின் இயக்குனர் வந்தார். விஷயம் அறிந்து என்னை சமாதானப் படுத்தினார். அடுத்த படத்தில் டப்பிங் வாய்ப்பு தருவதாக சொன்னார். நான் சொன்னேன் அதற்காக நான் அழவில்லை நீங்கள் கொடுத்த முன் பணத்தை நான் செலவழித்து விட்டேன், உடனே என்னால் திருப்பி தர முடியாது நான் என்ன செய்வேன் என்றேன்.

என் தோளைத் தட்டி கொடுத்து "பரவாயில்ல போங்க" என்று சிரித்தார். அந்த சிரிப்பு மட்டும் இன்னமும் என் எண்ணத்தில் மறையவே இல்லை. அந்த இயக்குனர் சற்று முன் மறைந்த மணிவண்ணன்!

- நடிகர் பார்த்திபன்.

Monday, June 24, 2013

எவ்வளவு அழகு கொட்டிக் கிடந்தால் என்ன?

கீழ்க்காணும் புகைப்படங்களை கண்டு ரசியுங்கள்,

மாலத்தீவின் அழகை வெளிப்படுத்தும் படங்கள் இவை.
மாலத்தீவு இயற்கை அளித்த ஒரு கொடை,
சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம்,

ஆனால் ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் 
நோ பீஸ் ஆப் மைன்ட் என்பது போல
அரசியல் ஸ்திரத் தன்மை இல்லாத 
ஒரு நாடு மாலத்தீவு.

ஒரே ஒருவர் மட்டும் தேர்தலில் நின்று 
வெற்றி பெற்று ஜனாதிபதியானவர்.

அவருக்குப் பின் வேறு ஒருவர் வந்தார்.
கலகம் செய்து அந்த ஆட்சியைக் கலைத்து
விட்டார்கள்.

இனி அடுத்த மாதம் அடுத்த தேர்தல்,
பார்ப்போம் இனியாவது ஒரு நிலையான
ஆட்சி வருமா? மக்களுக்கு நல்லது நடக்குமா என்று....

சரி படத்தை பார்த்து ரசியுங்கள்






























 

Sunday, June 23, 2013

இவர்களால் மட்டும் எப்படி இவ்வளவு பேரை அடிக்க முடிகிறது?

சினிமா பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்து  இருக்கும் சந்தேகம் இது.
 

கதாநாயகர்களால் மட்டும் எப்படி இவ்வளவு பேரை அடிக்க முடிகிறது?

கதாநாயகர்களை விட வில்லனும் வில்லனின் அடியாள் கூட்டமும்
வலிமையானவர்களாகவே உள்ளார்கள். பயிற்சி எடுத்தவர்களாகவும்
மாமிச மலைகளாகவும் கூட இருக்கிறார்கள்.

ஆனால் அத்தனை பேரும் சேர்ந்து கதாநாயகர்களிடம் அடி வாங்கி
வீழ்கிறார்கள், பலர் செத்தும் போய் விடுகிறார்கள்.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொடங்கி இன்றைய சசிகுமார் வரை 
இதுதான் நடைமுறை. 

ஹீரோக்களுக்கு மட்டும் எப்படிப்பா இவ்வளவு சக்தி இருக்கு?

Saturday, June 22, 2013

வினோதமான ஊருய்யா இது!

இது எனது நேற்றைய அனுபவம்.

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி பின் இரவு எட்டு மணி
போல வீட்டிற்கு தேவையான சில பொருட்கள் வாங்க
வெளியே கிளம்பினேன்.

என்ன புழுக்கம் என்று புலம்பிக் கொண்டே வண்டியைக்
கிளப்பினேன். 

கிட்டத்தட்ட  அரை கிலோ மீட்டர்தான் போயிருப்பேன்.
சாலையின் நடுவே ஸ்கேல் வைத்து கோடு போட்டது
போல  மழை பெய்த அடையாளம் தொடங்கியது. அந்தப்
பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் வரை அரை மணி நேரம்
நன்றாக மழை பெய்துள்ளது. இன்னொரு பகுதியிலோ
அந்த சுவடே இல்லை.

இது போன்ற நிலையை  வேலூரில் மட்டும் அடிக்கடி 
பார்க்கலாம். 

சில வருடங்கள் முன்பாக வேலூரில் இசையமைப்பாளர்
(சங்கர்) கணேஷ் அவர்களின் இசை நிகழ்ச்சி ஒன்றை 
நடத்தினோம். திறந்த வெளி அரங்கு நிகழ்ச்சி அது. 
ஒன்றரை மணி நேரம் நிகழ்ச்சி நடந்து களை கட்டிய
நேரத்தில் கடுமையான மழை வந்து நிகழ்ச்சியை 
பாதியிலேயே நிறுத்த வேண்டியிருந்தது.

இதிலே மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் அரங்கிற்கு
அந்தப்பக்கம் அரை கிலோ மீட்டர், இந்தப்பக்கம் அரை கிலோ
மீட்டர் வரைதான் மழை பெய்திருந்தது. 

நிகழ்ச்சிக்கு வந்து மழையில் தொப்பமாக நனைந்து 
போனவர்கள்  அரை கிலோ மீட்டருக்கு  அப்பால் இருந்த
ஹோட்டல்களில் நுழைந்த போது அவர்களை அங்கிருந்தவர்கள்
பார்த்த பார்வை இருக்கிறதே, அது வேறு கதை....

அழிவிலிருந்து பாடம் கற்கத் தவறினால் அழிவுகள் தொடரும்

 http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/06_2013/uttarakhand_floods_rains.jpg


 http://static.sify.com/cms/image//miep4ebjjbf.jpg



 http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/06_2013/uttarakhand-floods-three-including-indore-bjp-leader-killed_210613021720.jpg

 http://img.amarujala.com/2013/06/17/floods-hit-uttarakhand-51bea40c2b8ba_g.jpg

 http://d2yhexj5rb8c94.cloudfront.net/sites/default/files/styles/sliderimage_crop/public/mediaimages/gallery/2013/Jun/India%20Floods_Kand%20(1).jpg

மீண்டும் ஒரு பேரழிவு நிகழ்ந்திருக்கிறது. இயற்கையின் வலிமை மீண்டும் வெளிப்பட்டுள்ளது. மனிதர்களின் பேராசைக்கு இயற்கையை
பலி கொடுக்க நினைத்தால் இயற்கை தனது ஆக்ரோஷத்தையும்
ஆவேசத்தையும் பதிலாய் கொடுக்கும் என்பதும் நிரூபணமாகியுள்ளது.

உத்தர்காண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது பெருந்துயரம். வெள்ளப்
பெருக்கிலும் நிலச்சரிவிலும் பல நூறு மனிதர்கள் இறந்துள்ளதாய்
இதுவரை வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கிறது. ஆற்றிலே அடித்துப்
செல்லப்பட்டவர்கள், இடிபாடுகளில் சிக்கித் தவிப்பவர்கள் , 
உணவின்றி, நீரின்றி பட்டினியில் பரிதவிப்பவர்கள், இவர்களில்
எத்தனை பேர் உயிரோடு வரப் போகிறார்கள், சடலங்களாக மீட்கப்
படப் போகின்றார்கள் என்பது இன்னும் தெரியாது.

கட்டிடங்கள் சீட்டுக்கட்டு மாளிகைகளாக சரிவதையும், வாகனங்கள்
மலைப்பாதைகளில் உருண்டோடுவதையும் திரைப்படக் காட்சிகளில்
பார்க்கும் போதே பதறும் உள்ளங்கள், உண்மைச் சம்பவங்களாய்
தொலைக்காட்சியில் பார்ப்பவர்களின் உள்ளம் ஒரு கணம் உரைந்து
போயிருக்கும்.

இயற்கையின்  சீற்றம் ஏன் நிகழ்ந்தது.

மனிதனின் தவறு, பேராசை, அரசுகளின் அலட்சியம், லஞ்ச ஊழல்,
பன்னாட்டுக் கம்பெனிகளின் லாப வெறி என்று பல காரணங்களை
அடுக்கிக் கொண்டே போக முடியும்.

மலைகளை உடைப்பது, வெடிகுண்டு வைத்து பாறைகளை தகர்ப்பது,
ஆற்றின் கரைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவது, பல நூறு
வருட பழமையான மரங்களை வெட்டி பணப்பயிர்கள் வளர்ப்பது,
ஆற்றின் பாதையை திருப்பி விடுவது,  என்று ஏராளமான தவறுகள்
எங்கெங்கும் நடந்து கொண்டிருக்கிறது.

உத்தர்கண்ட் மாநிலத்தில் சில ஆண்டுகள் முன்பு நிகழ்ந்த நில
நடுக்கங்கள் மூலம் இயற்கை அன்னை அளித்த எச்சரிக்கையை
அலட்சியப்படுத்தியதன் விளைவு இன்றைய பேரழிவிற்கும்
பெரும் துயரத்துக்கும் முக்கியக் காரணம். உத்தர்கண்ட் மாநில
அரசின்  பொறுப்பற்ற தன்மையும் மிக முக்கியக் காரணம்.

இமயமலைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க
வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதை ஏற்க அந்த
மாநில அரசு மறுத்து வருகிறது. 

வளர்ச்சி பாதிக்கும் என்பது அது சொல்லும் ஒரு காரணம். அது
மக்களுக்கான வளர்ச்சி அல்ல, சுற்றுலாவிற்காகவும் ஆன்மீகப் 
பயணத்திற்காகவும் வரும் பக்தர்களை மூலதனமாக்கி காசு பார்க்க,
பெரிய சுற்றுலா விடுதிகளை கட்ட நினைக்கும் பெரும் செல்வந்தர்கள்,
பன்னாட்டுக் கம்பெனிகளின் வளர்ச்சி மீதுள்ள அதிக அக்கறை அது.

இந்த பேரழிவு அந்தப்பகுதியில் இயல்பு வாழ்க்கை திரும்ப 
பல்லாண்டுகள் பிடிக்கும் என்ற நிலைமையைத் தான் உருவாக்கி
உள்ளது. லாப வெறியால் வாழ்விழந்து தவிப்பது என்னமோ ஏழை
மக்கள்தான்.

இந்த அழிவில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களில் 
ஆன்மீகப் பயணம் வந்த பக்தர்களும் அடக்கம். கார்ப்பரேட் 
சாமியார்களின் வருகை கைலாச யாத்திரை, மானசரோவர்
யாத்திரை போன்ற யாத்திரைகள் அதிகமாவதற்கு ஒரு காரணம்.
காசி, கயா என்று நடந்த பேக்கேஜ் டூர்கள் இப்போது விரிவடைந்து
விட்டது. அமர்நாத் யாத்திரைக்கு அதிகக் கூட்டத்தை சேர்ப்பதில் சங் பரிவார அரசியலும் இணைந்தே இருக்கிறது.

இறைவன்  தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று
புராணம் சொல்லியது.  உன் உள்ளத்திலேயே இறைவன் இருப்பதாய்
தமிழ் இலக்கியம் சொல்லியது. ஏழைகளின் சிரிப்பில் இறைவன்
உள்ளதாய் தமிழக அரசியல் சொல்லியது.

ஆனால் தொலைதூர பயணம் சென்றால் மட்டுமே பிறப்பின் பயனை
அடையலாம் என்று உருவாக்கப்பட்ட கருத்தாக்கத்திற்கு இரையான
மக்கள் இன்று எப்போது வீடு திரும்புவோம் என்று ஏங்கிக் கொண்டு
இருக்கிறார்கள்.

மனிதனுக்கும் இயற்கைக்கும் நடக்கும்  மோதலில் எப்போதுமே
வெல்லப் போவது இயற்கைதான்.

இதை உணர்ந்து பொறுப்பாய் நடந்து கொண்டால் அழிவுகள் நிற்கும்.

இல்லையென்றால்

இந்தியாவின் வடக்கு எல்லையாய் ஒரு காலத்தில் இமய மலை 
இருந்தது என்று எதிர்கால மாணவர்கள் பாடப்புத்தகத்தில்
படிப்பார்கள்.

Thursday, June 20, 2013

ஊழல் பேர்வழிகளுக்கு அனுமதி இல்லை


 இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான அற்புதமான ஒரு
கட்டுரை. 

ஊழலற்ற ஆட்சியை யார் அளிக்க முடியும் என்று மிகத் தெளிவாக
சொல்கிற கட்டுரை.

ஊழல் நெருப்பு வளையத்தில் உருகாத கற்பூரமாக  மார்க்சிஸ்ட்
கட்சி திகழ்கிறது என்பதை நிதானமாக படியுங்கள்.

மார்க்சிஸ்டுகளை ஆதரிக்க இனியும் தயக்கம் ஏன்?




மாசற்ற மார்க்சிஸ்ட்டுகள் க.ராஜ்குமார்

 


நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை சந்தித்துவரும் ஊழல் நட வடிக்கைகள் பட்டியல் போட்டு முடிக்க முடி யாது. 1948ம் ஆண்டிலிருந்தே ஊழல் புகார்கள் எழுந்து விட்டன. முதல் புகாரே இராணுவத்திற்கு ஜீப் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சியில் நடை பெற்ற, பிரச்சித்தமான, சில ஊழல்கள்,
முந்திரா ஊழல் (1957)
3 கோடி ரூபாய்கைரோன் வழக்கு (1964)
நகர்வாலா வழக்கு (1971)
60 இலட்சம்தல்மோகன்ராவ் வழக்கு (1974)
அந்துலே ஊழல் (1982)
சிமென்ட் ஊழல்சூரத் லாட்டரி (1982)
5.4கோடிவெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர்போபர்ஸ் வழக்கு (1987)
ஹவாலா வழக்கு (1995)
உர இறக்குமதி ஊழல் (1995
)இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகும். காங்கிரஸ் தலைவர்கள், இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், அர்ஜூன் சிங், அருண்நேரு, ப+ட்டாசிங், பல்ராம் ஜாக்கர், சுக்ராம், சிதம்பரம் என எண்ணற்ற தலைவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு சிலர் மீது வழக்குகளும் நடைபெற்றன.


ஐக்கிய முன்னணி அரசின் சாதனையாக நடைபெற்ற மெகா ஊழல்கள்காமன்வெல்த் விளையாட்டு போட்டி - சுரேஷ் கல்மாடி (காங்கிரஸ்) ஊழல் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசா (திமுக) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில் குறுக்கிட்டதற்காக சட்டத் துறை அமைச்சர், அஸ்விணி குமார் (காங் கிரஸ்) பதவி விலகல்ரயில்வேயில் பணி நியமனம் செய்ய தனது வீட்டில், மருமகன் மூலம் பேரம் பேசி கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு இரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் (காங்கிரஸ்) பதவி விலகல்.கோதாவரி கிருஷ்ணா நதிப்படுகை யில் எரிவாயு எடுப்பதற்கான அனுமதி வழங்குவதில்கோடிக்கான ஊழல்கார்கில்போரில் மரணமடைந்த தியாகி களுக்கு கட்டப்பட்ட வீடுகள் ஒதுக்கியதில் ஊழல்இத்தாலி நிறுவனம் ஒன்றில் ஹெலிகாப் டர் வாங்கியதில் லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுவால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழை வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு தரப்பட்ட லஞ்சம்எல்லாவற்றிற்கும் மேலாக பிரதமர் மன் மோகன்சிங் மீதே ஊழல் புகார்.
நிலக்கரி சுரங்க ஓதுக்கீடு 2004 முதல் 2009ம் ஆண்டு உட்பட்ட காலத்தில் நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் அந்த துறைக்கு மன்மோகன் சிங்தான் பொறுப்பாக இருந்தார். ஏல முறை யில் ஒதுக்கீடு செய்யாத காரணத்தினால் அர சிற்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்கு தணிக் கை ஆணையம் தெரிவித்துள்ளது.


சிபிஐ இது குறித்து விசாரித்து வருகிறது. சிபிஐ நட வடிக்கையில் பிரதமர் அலுவலகமும் சட்டத் துறையும் தலையிட்டதை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.இந்திய நாட்டுமக்கள் இனி காங்கிரஸை நம்ப முடியாது என்ற முடிவிற்கு வந்துவிட் டனர். இதை தெரிந்துகொண்டுதான் காங்கிர சார், இன்று மத்தியில் மைனாரிட்டி அரசாக இருந்தாலும், எதிலும் ஊழல் எல்லாவற்றி லும் ஊழல் என மூழ்கிவிட்டனர். மத்திய அமைச்சர்கள் ஊழலில் சிக்கி பதவி விலகு வதும், மத்திய அமைச்சர்கள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்படுவதும், பெயி லில் வெளியே வருவதும் இன்று அன்றாட நிகழ்ச்சியாக மாறிவிட்டது. 


காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் ஊழலில் சாதனை புரிந்து வருகின்றனர்.


ஊழலுக்கு பெயர் பெற்ற பிஜேபிகார்கில் போர் நடைபெற்ற நேரத்தில் சவப் பெட்டிகள் வாங்கியதில் கூட ஊழல் புரிந்து சாதனைப் படைத்தவர்கள் பிஜேபியினர்.பிஜேபியின் முன்னாள் அகில இந்திய தலைவர், பங்காரு இலட்சுமணன், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நான்கு ஆண்டு கள் சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் வழங்கப்பட்டு தற்போது பெயிலில் உள்ளார்.பிஜேபியின் மற்றும் ஒரு முன்னாள் தலைவர் நிதின் கட்கரிக்கு சொந்தமான புர்த்தி என்ற மின்சாரம் மற்றும் சர்க்கரை நிறு வனம் 7 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய் திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு வருமான வரித்துறையினரால் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே அவரது கட்சி தலைமை பதவி பறிபோனது.


கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர், எடியூரப்பா (பிஜேபியிலிருந்து தற்போது விலகி தனி கட்சி துவக்கியுள்ளார்) நில முறை கேடு மற்றும் சட்ட விரோத சுரங்க பணி களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற படிகள் ஏறி வருகின்றார். முன்னாள் முதல்வர்கள்பீகார் மாநிலத்தில் ரூ.950 கோடி மாட்டுத் தீவன ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளி களாக முன்னாள் முதலமைச்சர்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஜெகநாத் மிஸ்ரா ஆகி யோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் மொத்தம் உள்ள 53 வழக்குகளில் 44வது வழக்கில் தற் போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முன் னாள் எம்எல்ஏ துரவ் பகத் மற்றும் முன்னாள் எம்.பி. ஆர்.கே.ராணா ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ராணா ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியையும், துரவ் பிஜேபி கட்சியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரின் மகள் அஜய்க்கு 10 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 199 மற்றும் 2000 ஆண்டுகளில் 3,206 ஆசிரியர்களை நிய மனம் செய்ய போலி ஆவணங்களைத் தயாரித்தது, சுமார் 150 கோடி ரூபாய் அள வுக்கு லஞ்சம் பெற்று பணி நியமனம் செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டது. 


இந்திய தேசிய லோக்தள் என்ற கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் சவுதாலா முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் மகனாவார். இப்படி சுதந்திர இந்தியாவை கடந்த 65 ஆண்டுகளில் ஆண்டவர்கள் கொள்ளை யடித்து வெளிநாட்டில் கொண்டுபோய் குவித்து வைத்துள்ள கருப்பு பணத்தின் மதிப்பு சுமார் 400 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் நாடாளு மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி தற்போது சுமார் 75 லட்சம் கோடி அள விற்கான கருப்பும் பணம் கண்டறியப்பட்டுள் ளது. 200 ஆண்டுகாலம் இந்தியாவை அடி மைப்படுத்தி வைத்து சுரண்டிய ஏகாதிபத்திய சக்திகளை விஞ்சும் அளவிற்கு இந்திய அரசி யல்வாதிகளின் கைவரிசை ஓங்கி விட்டது. இன்றைய உலகமய கொள்கைகளின் காரணமாக ஊழல் தலைவிரித்தாடி வருகின் றது. 


ஊழலின் உச்சக்கட்டத்தை இந்தியா இன்று சந்தித்துக் கொண்டுள்ளது.இதற்கு மத்தியில்தான் மேற்குவங்கத் திலும், கேரளாவிலும், திரிபுராவிலும் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்து மார்க் சிஸ்ட்டுகள் ஊழல்களுக்கு அப்பாற்பட்டு நின்று தூய்மையான ஆட்சியைத் தந்துள்ள னர்.
மார்க்சிஸ்ட்டுகள் மாசற்றவர்கள் என நிருபித்துள்ளனர்.மாசற்ற மார்க்சிஸ்ட்டுகள்மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலை வர்கள் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், இ.கே. நாயனார், வி.எஸ்.அச்சுதானந்தன், ஜோதி பாசு, புத்ததேவ், நிருபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், மாணிக்சர்க்கார் என 8 முதலமைச் சர்கள் இந்த 65 ஆண்டுகாலத்தில் இந்தியா வின் மூன்று மாநிலங்களில் முதல்வர்களாக இருந்துள்ளனர். இவர்கள் தூய்மையானவர் கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் மட்டு மல்ல திறம்பட நிர்வாகித்து மாநிலத்தின் நலன்களை பாதுகாத்தவர்கள்.


மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலை வர் இ.எம்.எஸ் அவர்கள்; 5-4-1957 முதல் 31-07-1959; வரையிலும், 6-03-1967 முதல் 1-11-1969 வரையிலும் 2 முறை கேரளத்தின் முதலமைச்சராக இருந்தார்.
இந்தியாவி லேயே முதன் முதலில் நிலச்சீர்திருத்தத்தை நிறைவேற்றி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 செண்ட் நிலத்தை வழங்கியவர். தனக்கு சொந்தமான சொத்துக்களை கட்சிக்கு கொடுத்தவர் இ.எம்.எஸ.அவரை தொடர்ந்து தோழர் இ.கே.நாயனார், கேரளத்தின் முதலமைச்சராக 25-01-1980 முதல் 20-10-1981 வரையிலும், 26-03-1987 முதல் 17-06-1991 வரையிலும், 20-05-1996 முதல் 13-05-2001 வரையிலும் மூன்று முறை இருந்தார். கேரளத்தை முழுமையான கல்வியறிவு கொண்ட மாநிலமாக மாற்றி காட்டியவர்.தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் 18-05-2006 முதல் 14-05-2011 வரை முதலமைச்ச ராக இருந்தார்.தோழர் ஜோதிபாசு மேற்கு வங்கத்தில் 21-06-1977 முதல் 6-11-2000 வரை 23 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார். இருண்டு கிடந்த மேற்குவங்கத்தில் மின்சார உற்பத்தியை பெருக்கி மின் மிகை மாநிலமாக மாற்றியவர். கேரளத்தை தொடர்ந்து நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்தி வெற்றி கண்டவர்.


தோழர் புத்ததேவ் 6-11-2000 முதல் 13-05-2011 வரை 2 முறை மேற்கு வங்கத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.திரிபுராவில் தோழர் நிருபன் சக்கரவர்த்தி 5-01-1978 முதல் 5-02-1988 வரை 2 முறை முதலமைச்சராக இருந்தார். முதலமைச்சர் பதவியிலிருந்து வெளியேறியபோது இரண்டு தகர பெட்டிகளுடன் மட்டும் சென்றவர் என்று ஊடகங்கள் வியந்து பாராட்டிய பெருமைக்குரியவர்.தோழர் தசரத் தேப் 10-04-1993 முதல் 11-03-1998 வரை திரிபுராவின் முதலமைச்ச ராக இருந்தார்.தோழர் மாணிக் சர்க்கார் 11-03-1998 முதல் இன்று வரை 4 வது முறையாக திரிபுரா வின் முதலமைச்சராக இருந்து வருகிறார். 


வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் திரிபுரா வை அமைதி மாநிலமாக மாற்றிக்காட்டி மாற்றாரும் புகழும் சாதனையாளர்.இவர்களது அமைச்சரவைகளில் நூற் றுக்கணக்கான அமைச்சர்கள் பணியாற்றியுள் ளனர். ஆயிரக்கணக்கான சட்டமன்ற உறுப் பினர்கள் பணியாற்றியுள்ளனர். இவை மட்டும் இல்லாமல் நூற்றுக்கணக்கான தோழர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன் றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு நாடளுமன்ற உறுப்பினர்களாக பணிபுரிந்துள்ளனர், பணிபுரிந்து வருகின்றனர். மாநிலங்களவை யிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்தனர், பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் யாராவது ஊழல் செய்தார்கள் என்று ஏதாவது புகார் உண்டா? யாராவது சொல்ல முடியுமா?சுதந்திர இந்தியாவின் 65 ஆண்டுகளில் அரசு மட்டத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றிய மார்க்சிஸ்ட்டு கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ப தற்கு வேறு என்ன சாட்சி வேண்டும்? பிரதமர் பதவியைக் கூட வேண்டாம் என்று சொல்ல யாருக்கு துணிவு வரும் மார்க் சிஸ்ட்டுகளை தவிர. மார்க்சிஸ்ட்டுகளின் ஆதரவு இருந்தால்தான் மன்மோகன் சிங்கின் தலைமையிலான முதல் ஐக்கிய முன்னணி ஆட்சி தொடரும் என்ற நிலை யிலும் கூட, கவர்னர் பதவிக்கோ அரசு நியமனங்களுக்கோ ஆளாக பறக்காமல் மக்கள் நலன் ஒன்றையே முன்னிறுத்தி அரசியல் களத்தில் தூய்மையுடன் செயல் பட்டவர்கள்தானே மார்க்சிஸ்ட்கள்.


இவர்கள் தானே ஊழலில் சிக்கி தத்தளித்துக் கொண் டிருக்கும் இன்றைய இந்தியாவிற்கு மாற்று வழியைக் காட்டமுடியும்.
 

Tuesday, June 18, 2013

பாரதிராஜாவிற்கு சூடாய் சில கேள்விகள்

கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வருகின்றேன்.

நேற்றும்  நேற்று முன் தினமும் எங்கள் வேலூர் கோட்டத்தின்
வெள்ளி விழா ஆண்டு  நிறைவு இருபத்தி ஆறாவது பொது மாநாடு.

வெள்ளி விழா ஆண்டை ஒட்டி எங்களது கோட்டத்தின் இயக்கங்கள்
குறித்த ஒரு நூல் ஒன்று எழுதினேன். அதன் வெளியீடும் 
இம்மாநாட்டில் நிகழ்ந்தது. மீண்டும் பொதுச்செயலாளராக 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.

புத்தக வெளியீட்டு நிகழ்வின் புகைப்படம் கீழே



புத்தகப் பணிகள், மாநாட்டுப் பணிகள் காரணமாக வலைப்பக்கம்
வர முடியவில்லை. எழுத வேண்டும் என்று நினைத்தும் நேரம்
இன்மையால் சில விஷயங்களை எழுத முடியவில்லை.

விரிவாக எழுதுவது இப்போது பொருத்தமாக இருக்காது என்றாலும்
மனதில் தோன்றிய கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை.

கடந்த வியாழன் அன்று ஆனந்த விகடனில் பாரதிராஜா 
கேள்வி பதில்களில் மணிவண்ணன் பற்றி மிகவும் தரக்குறைவாக
எழுதியிருந்தார். 

அப்போது கேட்க நினைத்த கேள்விகள் இப்போது.

காதல் ஓவியம் படத்திற்கு வசனம் எழுதும் போதே சொல்லாமல்
கொள்ளாமல் தனியாக இயக்கப் போன மணிவண்ணனை 
எதற்காக மீண்டும் கொடி பறக்குது படத்தில் நடிக்க கூட்டிக்
கொண்டு வந்தீர்கள்? அரண்மனை ஒப்புக்கொள்ளாத ஒருவரை
ஏன் மீண்டும் அரண்மனைக்கு அழைத்து வந்தீர்கள்? உங்கள்
அரண்மனை பாழடைந்து போகாமல் இருக்கத்தானே?

பொதுவாகவே  கொள்கை தடுமாற்றம் கொண்டவர் என்று
உங்களுக்கு ஒரு "நல்ல " பெயர் உண்டு.  உங்கள் கதாநாயகன்,
கதாநாயகி களை அடித்து வேறு " நல்ல " பெயர் வாங்கியவர்.
இந்த பதில் மூலம் ரசிகர்கள் மனதில் கீழிறங்கி போய்விட்டீர்கள்
என்பது தெரியுமா உங்களுக்கு?

மணிவண்ணன் இறப்புச்செய்தி அறிந்த பின்பு மனதிற்குள்ளாவது
உங்களின் தகாத பதிலுக்காக வருத்தம் கொண்டீர்களா?
 

 

Sunday, June 9, 2013

தொடரும் வாக்கிங் கொலைகள்

மர்ம தேசமாக மாறிப்போய் வருகிற, மம்தாவின் ராஜ்யத்தில்
இன்று காலை ஒரு வாக்கிங் கொலை  நடந்துள்ளது.

பர்தமான் மாவட்ட சி.ஐ.டி.யு செயலாளரும் 
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட்
கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான 
தோழர் திலீப் சர்க்கார், இன்று காலை நடைப் பயிற்சி
செல்லும் போது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால்
கொல்லப்பட்டுள்ளார்.

காலை நடைப்பயிற்சி செல்லும் மார்க்சிஸ்ட் கட்சித்
தலைவர்களை குறிவைத்து தாக்கும் பழக்கம் 
தொடங்கியுள்ளது.

பர்த்மான் மாவட்டத்தில் மட்டும் இது மூன்றாவது கொலை.

குற்றவாளிகளை லாக்கப்பிலிருந்து வெளியே எடுத்துச்
செல்லும் முதலமைச்சர் உள்ள மாநிலத்தில் வேறு என்ன
நடக்கும்?

பேயரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரம்தானே?
 

Friday, June 7, 2013

கரெக்டாதான் சொல்லியிருக்காரு கண்ணதாசன்

முகநூலில் நான் பார்த்து ரசித்த
கவியரசு கண்ணதாசன் அவர்களின்
கவிதை. என் அபிமான நடிகர்
சிவாஜி கணேசன் பற்றி எழுதியது.

கண்டறிந்து பதிவிட்டதற்கு 
நண்பர் ஷாகூல் ஹமீது 
அவர்களுக்கு நன்றி



எதை எழுதுவது ;
எதை விடுவது ?
இமய மலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா ?
அவரைப்போல் இதுவரை
ஒருவர் பிறந்த தில்லை;
இனி பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை !
இது உண்மை
உலகறிந்ததே !

–கவியரசு கண்ணதாசன்

Thursday, June 6, 2013

இரட்டை உள்ளம் ஏனோ எனக்கு?

சூரியன் உக்கிரமாய் 
கொதிக்கும் வேளையில்,

வியர்வை ஆறு
பெருக்கெடுத்து ஓடுகையில்,

தாகத்தில் தவிக்கும்
ஒவ்வொரு நொடியும்

வாராதா மழை என்று
ஏங்கிய உள்ளம்,

வீட்டில் வசதியாய்
அமரும் நேரம்,
சில்லென்ற காற்றோடு
பெய்திடும் மழையை
வேண்டும், வேண்டும் என

உற்சாகமாய்  ரசித்து
அனுபவித்த உள்ளம்,

கால்கடுக்க காத்திருந்து,
பணிகளெல்லாம் பாதிக்கையில்
ஏன் இந்த மழை என்று
எரிச்சல்படும் 
இரட்டை உள்ளம்
ஏனோ எனக்கு?
 
 

Tuesday, June 4, 2013

இந்த வயதில் இப்படி ஒரு விளம்பரம் கலைஞருக்கு அவசியமா?





வயதான காலத்தில் ஏராளமான குடும்பப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் ஒரு முதியவர் பற்றி எதற்கு எழுத வேண்டும் என்று சமீப காலமாக நான் கலைஞர் பற்றி எழுதவில்லை.

ஆனால் இந்த செய்தி என்னை எழுத வைத்து விட்டது. அவரது பிறந்த நாளுக்கு போப்பாண்டவர் வாழ்த்து தெரிவித்தார் என்று மீண்டும் மீண்டும் கலைஞர் டி.வி யில் செய்தி வெளியிட்டார்கள். போப்பாண்டவர் என்ன இந்திய நாட்டைச் சேர்ந்தவரா? ஏதோ ஒரு லத்தீன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் எதற்கு வாழ்த்து அனுப்ப வேண்டும்.

ஒரு வேளை இப்படி இருக்கலாம்.

சில கோயில்களுக்கு பணத்தை மணி ஆர்டர் அனுப்பினால், ரசீதோடு விபூதி, குங்குமம் அனுப்பி வைப்பார்கள். அது போல பணம் கட்டி வாழ்த்து வரவைத்திருக்கலாம், அல்லது பேராயர் எஸ்ரா சற்குணம் போன்ற இவரது ஆதரவாளர்களை வைத்து வரவழைத்திருக்கலாம்.

ஜெயேந்திர சரஸ்வதியிடமிருந்து வாழ்த்துச் செய்தி வந்திருந்தால் அது இயல்பானது. அவர் மீதான வழக்கை நீர்த்துப் போகச்செய்ததற்கு நன்றியோடு நடந்து கொள்ள வேண்டுமல்லவா?

தொன்னூறு வயதில் கலைஞருக்கு எதற்கு இந்த தேவையில்லாத விளம்பரம்? ஒபாமாவோடு பேசுவேன், ஹில்லாரியோடு பேசுவேன், பில் கேட்ஸோடு பேசுவேன் என்று அண்புமணி ராமதாஸ் பேசிய உடாண்ஸைப் போலவே இந்த போப்பாண்டவர் வாழ்த்தும் உள்ளது.