Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts

Saturday, August 10, 2019

மம்தா-காளகேயா : பொருத்தமா இருக்கே!


மம்தா பேசிய தமிழ், பாகுபலி காளகேய மொழிக்கு இணையாக இருந்ததாக இந்த காணொளி நக்கலடிக்கிறது.

மொழி எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். மம்தாவின் தமிழ் குறித்து நான் எதுவும் சொல்லப் போவதில்லை. 

ஆனால் திரையில் தோன்றிய காளகேயனின் கொடூரத்திற்கும் மம்தா மேற்கு வங்கத்தில் நடத்தும் கொடூர ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

ஆகவே இந்த ஒப்பீடு அவ்வகையில் பொருத்தமே


Sunday, October 21, 2018

கலங்க வைத்த சின்னக்குயில் சித்ரா




ஒரு தோழர் அனுப்பிய காணொளி இது.

பல முறை கேட்டு ரசித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பாடல் வரிகள் புரியவில்லை. ஆனால் சித்ராவின் குரலும் பாடலில் அவர் வெளிப்படுத்திய உணர்வுகளும் மனதை என்னமோ செய்கிறது. அப்படியே உள்ளத்தை உருக்குகிறது.  வெறும் குரல் ஜாலம் அல்ல. பாடலின் அர்த்தத்தை அப்படியே உள்வாங்கி குரல் வழியாக அல்லாமல் மனதின் வழியே பிரதிபலிக்கிற அற்புதம்.

நேரில் கேட்டவர்களும் வேறு ஏதோ உலகிற்கு போய் விட்டார்கள் என்பதை அவர்களின் முகக்குறிப்புகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. எஸ்.பி.ஷைலஜா அப்படியே உறைந்து போய் அமர்ந்திருக்கிறார். கே.விஸ்வநாத், யேசுதாஸ், எஸ்.பி.பி, பி.சுசீலா, இன்னும் பலர் அப்படியே பாடலோடு ஐக்கியமாகி விட்டார்கள் என்பது புரிகிறது. மனோவின் கண்களிலோ கண்ணீர் வடிகிறது. 

இசை மொழிகளைக் கடந்தது என்பது மிகப் பெரிய உண்மை.

அதே நேரம் மொழி மட்டும் புரிந்திருந்தால் இப்பாடல் இன்னும் பெரிய சுகானுபவமாகக் கூட  இருந்திருக்கும்.

மொழி புரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.
புரியாதவர்களும் பாருங்கள், ரசியுங்கள் . . .





Thursday, March 16, 2017

கோம்ரேட் ரொமன் - அழைத்தது யாரோ?





மேலே உள்ள படத்தை எங்கள் தோழர் ஒருவர் முகநூலில் பகிர்ந்திருந்தார். அதை பார்த்தவுடன் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

அது லேண்ட்லைன் காலம்.

அன்றொரு நாள் இரவு நான் வீட்டிற்குப் போனதும் உங்களுக்கு தோழர் ரவீந்திரநாதனிடமிருந்து தொலைபேசி வந்தது என்று சொன்னார்கள். தோழர் ரவீந்திரநாதன் அப்போது எங்கள் தென் மண்டலத் தலைவர். எர்ணாகுளத்தில் இருந்தார். என்ன சொன்னார் என்று கேட்டதற்கு பிறகு அழைப்பதாக சொல்லி விட்டார் என்றார்கள்.

தென் மண்டலத்தலைவர் அழைத்துள்ளதால் முக்கியமான விஷயமாக இருக்கும். அவர் மீண்டும் கூப்பிடும்வரை நாம் காத்திருக்க வேண்டாம், நாமே அழைப்போம் என்று பார்த்தால் ஒரு சிக்கல்.

டிஜிட்டல் டைரி நினைவில் உள்ளதா? தொலைபேசி எண்களை அதில்தான் சேமித்து வைத்திருந்தேன். பேட்டரி மாற்ற வேண்டிய நிலையில் அது உயிரை விட்டிருந்தது. முன்னொரு காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட எண்கள் நினைவிலேயே இருக்கும். அந்த நினைவுத் திறனின் அழிவு டிஜிட்டல் டைரியிலிருந்துதான் தொடங்கியது. மொபைல் காலத்தில் சுத்தமாக அழிந்து விட்டது.

அப்போதைய தென் மண்டல இணைச்செயலாளர் தோழர் தரணிபதி அவர்களின் எண் நினைவில் இருந்தது. அவரிடமிருந்து தோழர் ரவீந்திரநாதன் அவர்களின் எண்ணை வாங்கி தொலைபேசி செய்தால் நான் அழைக்கவில்லையே என்று சொல்லி விட்டு பொதுவாக இயக்கங்கள் பற்றி விசாரித்து விட்டு போனை வைத்து விட்டார்.

என் மனைவியிடம் கேட்டேன்.

கோம்ரேட் ரொமன் இருக்கிறாரா என்று கேட்டார். கொஞ்ச நாள் முன்பு திருப்பத்தூரில் நடந்த மாநாட்டில் தோழர் ரவீந்திரநாதன் பேசுகிற போது அவர்தான் மூன்று நான்கு முறை கோம்ரேட் ரொமன் என்று குறிப்பிட்டார். அதனால் அவராகத்தான் இருக்கும் என்று நினைத்தேன் என அவர் சொல்லிவிட்டார்.  

அப்படியென்றால் அழைத்தது யார்?

அடுத்த அரை மணி நேரத்தில் விடை கிடைத்தது.

அப்போதும் என் மனைவிதான் தொலைபேசியை எடுத்தார்கள்.

மீண்டும் கோம்ரேட்  ரொமன் என்று அழைத்த குரல்

அப்போதைய கோட்டயம் கோட்டப் பொதுச்செயலாளரும் தற்போதைய தலைவருமான தோழர் பேபி ஜோசப்.

ஒருத்தர் பெயரை தப்பா உச்சரிச்சா பரவாயில்லை. ஒரு மாநிலத்தைச் சேர்ந்த எல்லாரும் அப்படியே உச்சரிச்சா, குழப்பம் வரத்தானே செய்யும். 


மேலே உள்ள படத்தில் தோழர் ரவீந்திரநாதனும் தோழர் பேபி ஜோசப்பும் உள்ளார்கள். 

இப்போதெல்லாம் கேரளத்தோழர்கள் ராமன் என்றுதான் அழைக்கிறார்கள். ஆனால் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு அப்போதும் இப்போதும் எப்போதும் “ரமான்”தான். .

Friday, February 17, 2017

மாதா கோயிலில் மணியடித்துக் கொண்டு . . . .




ஒரு பழைய கதை.

அந்த மாதா கோயிலுக்கு புதிதாக ஒரு பாதிரியார் வந்திருந்தார். அங்கே மணியடிக்கும் ஊழியம் செய்து கொண்டிருந்த ஒருவருக்கு எழுதப் படிக்க தெரியாது. ஊதியத்தைக் கூட கைநாட்டு வைத்துதான் வாங்குவார். அது அந்த பாதிரியாருக்கு பிடிக்கவில்லை. எழுதப்படிக்க கற்றுக்கொடுத்தார். ஆனால் அந்த ஊழியரால் அது முடியவில்லை. ஆகவே பாதிரியார் ஒரு நூறு ரூபாய் கொடுத்து வேலையிலிருந்து அனுப்பி விட்டார்.

அந்த நூறு ரூபாயை வைத்து சந்தையில் கறிகாய் வாங்கி வீடு வீடாக விற்க ஆரம்பிக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கடைசியில் சூப்பர் மார்க்கெட் வைக்குமளவு முன்னேறுகிறார். கையில் உள்ள லாபத்தை வங்கியில் போட கணக்கு ஆரம்பிக்கிறார். கணக்கு ஆரம்பிக்கையில் படிவத்தில் கைநாட்டு வைக்கிறார்.

வங்கி மேலாளர் அதிசயத்தோடு கேட்கிறார்.

எழுதப் படிக்க தெரியாமலேயே இவ்வளவு முன்னேறியுள்ளீர்களே, ஒரு வேளை நீங்கள் படித்திருந்தால் என்னவாகியிருப்பீர்கள்?

அந்த முன்னாள் ஊழியர் சொன்னார்.

மாதா கோயிலில் மணியடித்துக் கொண்டிருப்பேன்.

பின் குறிப்பு : ஆங்கிலம் தெரியாவிட்டால் கேவலம் என்று சொல்பவர்கள் அனைவருக்கும் இக்கதை சமர்ப்பணம்.

செங்கோட்டையனை திட்டவோ, விமர்சிக்கவோ  ஊழல், சந்தர்ப்பவாதம், முறைகேடு, பதவி மோகம், இன்னும் இன்னும் என்று ஆயிரம் காரணம் உள்ளது.  அதை விட்டு விட்டு ஆங்கிலம் பேசத்தெரியாததையெல்லாம் நக்கல் செய்யாதீர். 

நல்லவேளை காமராஜர் இப்போது உயிரோடு இல்லை. 

பின் குறிப்பு 2 : மாதா கோயில் மணி என்பதால் மட்டுமே ஞான ஒளி படத்து காட்சி. மற்றபடி வேறு எந்த தொடர்பும் கிடையாது.