தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் முக்கியமான பதிவு இது. வளர்ச்சியின் அடையாளமென்று சொல்லப்படுகிற சிங்கப்பூர் பற்றிய மாயைகளை தகர்க்கும் பதிவிது.
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவரை சிங்கப்பூர் அரசு நாடுகடத்தியதோடு மட்டுமல்லாமல் சிங்கப்பூருக்கு நுழைய அவருக்கு வாழ்நாள் தடைவிதித்ததாகவும் நேற்று செய்தி வெளியானது. இதேபோல இதுவரை 400 பேரை நாடுகடத்தியதாக சீமானும் நேற்றைய பேட்டியில் தெரிவித்திருக்கிறார். தேவையில்லாமல் உசுப்பேத்திவிட்டு, இத்தனைத் தமிழர்களின் வாழ்க்கையை சீமான் பாழாக்கிவிட்டாரே என்று பலரும் இங்கே பகிர்ந்திருந்ததைப் பார்த்தேன்.
நிற்க! இதனை மற்றொரு கோணத்தில் நான் பார்க்கிறேன்…
கடந்த 30-40 ஆண்டுகளாக ‘நாங்கள் மட்டும் வெற்றிபெற்றால் இம்மாநிலத்தை சிங்கப்பூர் போல் ஆக்குவோம்’ என்று இந்தியாவில் அதுவும் மிகக்குறிப்பாக தென்னிந்தியாவில் தேர்தல் காலத்தில் பல அரசியல் கட்சிகளால் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. தனி ஈழம் கிடைத்தால் ஈழத்தையும் சிங்கப்பூர் ஆக்குவோம் என்று யாரோ சொன்னதாகக் கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், கள அரசியல் நிலவரம் என்ன தெரியுமா? சிங்கப்பூர் ஒன்றும், மக்களுக்கு அன்பான நாடோ கருத்துரிமைக்கு ஆதரவான நாடோ கிடையாது.
ஒரு முதலாளித்துவ சர்வாதிகார நாடு எப்படி இருக்கும் என்பதற்கான முற்று முழு உதாரணமாக சிங்கப்பூர் திகழ்கிறது. அங்கே ஜனநாயகமென்கிற பேச்சுக்கெல்லாம் இடமே இல்லை. சிங்கப்பூர் அரசுக்கு எதிராகவோ ஆட்சிமுறைக்கு எதிராக எந்தக் கருத்தையும் எங்கேயும் சொல்லிவிடமுடியாது.
எந்தக் கேள்வியும் கேட்காமல் அந்நாடு தரும் வேலையை செய்துகொண்டு நவீன அடிமைகளாக வாழும்வரையிலும் தான் சிங்கப்பூரில் பிரச்சனை இல்லை. அங்கே இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தையோ, புதிதாக போடப்படும் சட்டங்களையோ எந்தக் கேள்வியும் கேட்டுவிடமுடியாது. அதிலும் அகதிகளாக வேலை பார்ப்பவர்களின் துயரமோ சொல்லி மாளாது. சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களின் இணையர்களை நிரந்தரமாக அழைத்துக்கொண்டு சென்று சிங்கப்பூரில் தங்கவைக்கக் கூட முடியாது. 6000 டாலர் மாதவருமானம் பெறமுடியாத கூலித்தொழிலாளிகள் தங்களது குடும்பத்தைவிட்டுவிட்டே வாழ வேண்டும். அதாவது அகதிகளின் உழைப்பு வேண்டும், ஆனால் உழைப்பைக் கொடுக்கமுடியாத அவர்களது குடும்பத்தினர் வேண்டாம். இதனை நவீன அடிமைத்தனம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்லமுடியும்?
ஒரேயொரு உதாரணத்தை சொல்கிறேன். 1966 ஆம் ஆண்டு சிங்கப்பூர் எம்பியாக இருந்த சியா தை போ என்பவரை எவ்விதக் காரணமும் சொல்லாமல் சிங்கப்பூர் அரசு கைது செய்தது. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி, ஜனநாயக முறைகளை அறிமுகப்படுத்தவேண்டும் என்று கேட்டதைத் தவிர வேறொன்றும் செய்யாதவர். ஆனால் எவ்வித விசாரணையும் குற்றச்சாட்டும் இல்லாமல், அவரை தொடர்ந்து சிறையில் வைத்தது சிங்கப்பூர் அரசு. அதுவும் ஓராண்டல்ல, ஈராண்டல்ல. 23 ஆண்டுகள் சிறையில் வைத்தது. அதன்பின்னர் அதற்கடுத்த 9 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைத்தது. ஆக, நெல்சன் மண்டேலாவின் சிறைக்காலத்தையே விஞ்சும் அளவிற்கு அவரை 32 ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தது சிங்கப்பூர் அரசு.
இன்றைக்கும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியோ, சுதந்திரமற்ற வாழ்க்கையை எதிர்த்துக் கேள்விகேட்டாலோ, தெருவில் இறங்கிப் போராடினாலோ, சிங்கப்பூர் குடிமகனாக இருந்தால் சியா தை போ வுக்கு நடந்தது தான் எவருக்கும் நடக்கும். வேற்று நாட்டவராக இருந்தால் உடனடியாக நாடுகடத்தப்படுவார். அவ்வளவு தான் சிங்கப்பூர் ஜனநாயகம்.
எங்கு பார்த்தாலும் மிகப்பெரிய கட்டிடங்களையும் பாலங்களையும் மால்களையும் கட்டிவைத்துவிட்டால் அதனை சுதந்திர நாடு என்று சொல்லிவிடமுடியாது. நாட்டின் எல்லைக்குள்ளே வாழும் ஒவ்வொரு மனிதரின் உரிமைகளையும் பறிக்காமல் அவர்களின் பிரச்சனைகளைக் காதுகொடுத்துக் கேட்பது தான் சுதந்திரம்…