Saturday, April 30, 2011

ஐயா தங்கம் தென்னரசு, உங்க போட்டிக்கு நாங்கதான் மாட்டினோமா?

மாண்புமிகு  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஐயா 
அவர்களுக்கு,  உங்களின்  இன்றைய  பெருமித அறிவிப்பினால் பாதிக்கப்
பட்டுள்ள  பனிரெண்டாம் வகுப்பு மாணவனின்  வருத்தமும் வேதனையுமான கடிதம் இது.  மே மாதம் பதினான்காம் தேதி  எங்கள் 
தேர்வு  முடிவுகள் வரும் என்ற அறிவிப்பை  இது நாள் வரை உங்களுக்கு 
கட்டுப்பட்டு நடந்த  அதிகாரி  அறிவித்த போது  மகிழ்ச்சியடைந்தோம். 
அமைச்சரைக் கலக்காமல் அதிகாரிகள்  தன்னிச்சையாக  தேர்வு முடிவுகள் வரும்  தேதியை  அறிவித்து விட்டார்கள்  என்று நீங்கள் அறிக்கை விட்ட போதே  ஏதோ  வில்லங்கம்  வரப்போகிறது  என்று 
நினைத்தேன்.  அதன்படியே   எதிர்பார்த்த    வில்லங்கம்  வந்தே விட்டது. 

நீங்கள்  பதட்டமாக  இருக்க வேண்டிய நாட்கள் குறைந்துதானே போயுள்ளது.  முன்பு சொன்ன நாளை விட முன்பாகவே  வரப்போகிறதே, 
இதிலே  உங்களுக்கு என்ன பிரச்சினை என கேட்கலாம்.  என்ன பிரச்சினை
என்பதை பிறகு  சொல்கிறேன். 

நாங்கள்  எங்கள் முடிவுகளை  முன்கூட்டியே  அறிந்து கொள்வதற்காகவா 
நீங்கள் ஒன்பதாம் தேதி  முடிவுகளை  அறிவிக்கப்போகின்றீர்கள்? அதிகாரிகளுக்கும்  உங்களுக்குமான  மோதலில்  நீங்கள்தான் மேல்  
என்பதை  நிருபிக்கத்தானே  அதிகாரி சொன்ன தேதிக்கு முந்தைய 
தேதியை  அறிவித்துள்ளீர்கள். வேறு  என்ன நோக்கம் இருக்கிறது? 
சொல்லுங்களேன் பார்ப்போம்.  

தேர்வு முடிவு அறிவிப்பதில்  உங்கள்  அதிகாரத்தை  நிலை நாட்டி விட்டீர்கள்.  வாழ்த்துக்கள். ஆனால்  நீங்கள்தானே  எங்களது கட்டணத்தை
முறைப்படுத்துவதற்காக கோவிந்தராஜன்  கமிட்டியை அமைத்தீர்கள். அந்த  கமிட்டி  நிர்ணயித்த  கட்டணத்தைப் போல  மூன்று, நான்கு மடங்கு 
கட்டணத்தை எங்கள் பள்ளிகள் வசூலித்தார்கள்.  நாங்களும் வேறு 
வழியின்றி  கட்டினோம். அப்போது  எங்கே போனது  உங்கள் அதிகாரம்? 

இப்போது உங்கள் அதிகாரத்தைக் காண்பிக்க ஐந்து நாட்கள் முன்பாக 
முடிவுகள்  வரப்போகின்றது. ஆனால்  அதற்கான பணிகள் முடிந்து 
விட்டதா?  உங்கள் அவசரத்தில்  எங்கள் மதிப்பெண் பட்டியலை தயார் 
செய்வதில்  குளறுபடிகள் நடந்தால்  யார் பொறுப்பு?  பாதிப்பு எங்களுக்குத்தானே!  
இப்போது  உங்கள் அதிகாரம் நிலை நாட்டப்பட்டுள்ளதால் கடுப்பாகியுள்ள   அதிகாரிகள் உள்குத்து  எதுவும்  செய்து  அவர்களின் 
சக்தியை காண்பிக்க மாட்டார்களா? 

ஒரு தேதியை முடிவு செய்வதிலேயே  இத்தனை குழப்பம்  என்றால் 
உங்கள்  ஆட்சியின்  லட்சணம்  இதுதானா?  

தேர்தல் முடிந்த பிறகு  இந்த குழப்பம். இதை முன்னமே செய்திருந்தால் 
நாங்கள் மாணவர்களே  உங்களுக்கு  எதிராக களத்திற்கு  வந்து 
உங்களை  தோல்வி அடைய வைத்திருப்போம்.  

பதினான்காம் தேதிதான்  முடிவு வரப்போகின்றது  என்று சொல்லி, 
அதற்கு முன்பாக  எங்காவது போய்விட்டு வரலாம்  என்று 
கெஞ்சிக் கூத்தாடி  கூர்க்  சுற்றுலா செல்ல என் பெற்றோரை  ஏற்பாடு 
செய்ய வைத்திருந்தேன்.  ஒன்பதாம் தேதி முடிவு வருவதால்  எல்லா 
திட்டமும்  இப்போது பணால்.  என் சாபம் உங்களை சும்மாவே விடாது. 

உங்கள் அவசரத்தால்  என்ன குளறுபடி வரப்போகின்றதோ  என்று 
அஞ்சிக் கொண்டே  இருக்கும்

பனிரெண்டாம்  வகுப்பு மாணவன். 
பின்குறிப்பு : என் மகனின் கோபத்தையும் எரிச்சலையும் கடிதமாக்கியுள்ளேன்.  உடன்பிறப்புக்கள்  யாராவது படித்தால் 
உங்கள் மாண்புமிகுவிடம்  சொல்லுங்களேன் . 


 


  

Friday, April 29, 2011

அடப்பாவிகளா! இதுவா காதல் ?


நேற்று  மின்னஞ்சலில்  வந்த இந்த படம் பார்த்து மிகவும் நொந்து 
போனேன்.  காதலர்கள் போலத்தான் தோன்றுகிறது.  முகங்களை
நான் மறைத்து விட்டேன்.   சாதாரணமாக  ஒரு மொபெட்டை 
தள்ளுவதே  சிரமம். பைக் என்பது கடினம். பங்க்சர் ஆன  பைக் 
என்றால்  அது மிக மிகக் கடினம். அதிலே  ஒருவரை  உட்கார 
வைத்து தள்ளுவது  என்பது ????

அந்தப் பெண் சிரமப்படக்கூடாது  என்றால் அதைத் தவிர்க்க 
எத்தனையோ வழிகள் உள்ளது. இது தீவிரக் காதல் என்று சிலர்
சொல்லலாம். பைத்தியக்காரத்தனம்   என்றுதான்  எனக்குத் 
தோன்றுகின்றது. 

   

Wednesday, April 27, 2011

மரியாதையாய் கூப்பிடு


 
என் மகனின் கோபம் 

நேற்று அலுவலகம் முடிந்து வந்ததும்  என் மகன் அப்படியே  கோபத்தில் 
 கொந்தளித்து விட்டான்." இந்த ஹர்ஷ வர்த்தனுக்கு  எவ்வளவு  கொழுப்பு பார் " என்று  புலம்பிக் கொண்டே இருந்தான்.   விஷயம் மிகவும்  பெரிதாக இல்லை. 

அவனுடைய  ஒன்று விட்ட தம்பி ஹர்ஷ வர்த்தன் யு.கே.ஜி படிப்பவன். இவனோ  பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி  காத்திருப்பவன். 
பனிரெண்டு வயது வித்தியாசம் இருந்த போதும் ஒரு நாளும் அண்ணா என்று  அழைத்தது கிடையாது.  நந்து என்றும்  வாடா, போடா என்றும் தான்
அழைப்பான். 
அதுவல்ல பிரச்சினை. ஹர்ஷவர்த்தனது  வீட்டிற்கு ரகுநந்தன் சென்றுள்ளான். கிரிக்கெட் விளையாடியுள்ளார்கள்.  பக்கத்தில் உள்ள
சிறுவர்களும் விளையாடியுள்ளனர்.  அப்போது ஒருவன் அண்ணா நீங்கள் 
பந்து போடுங்கள்  என்று  சொன்னதும்  ஹர்ஷவர்த்தன் உடனே தலையிட்டு

" எதற்கு அண்ணா என்று கூப்பிடுகிறாய். நந்து என்றே கூப்பிடு "   

என்று  சொன்னதும்  இவன் கடுப்பாகி விட்டான். இவன் என்னை அண்ணா 
என்று கூப்பிடாதது மட்டுமல்ல மற்றவர்கள்  கூப்பிட்டாலும் தடுக்கிறானே  என்பதுதான்  புலம்பலுக்கு காரணம். 

மரியாதை வேண்டும் என்ற ஆசை  எல்லோருடைய உள்ளுணர்விலும் 
ஒளிந்து  கொண்டுதான்  இருக்கிறது.  

என்ன கலைஞர் போன்ற சிலர் தாங்களே அதைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் 

Tuesday, April 26, 2011

சாலைகளை சீரமைக்க வேலூர் சத்துவாச்சாரி நகராட்சித் தலைவரின் கணவர் ஜப்பான் பயணம்

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானில்  எவ்வளவு வேகமாக சாலைகளை  சீரமைத்துள்ளார்கள்  என்பதைக் காண்பிக்கும் 
புகைப்படங்கள் கீழே  உள்ளது. ஆறு நாட்களுக்குள்  நடந்துள்ள 
அற்புதப்பணி  உண்மையிலேயே பாராட்டத்தக்கது.  பொறாமை வரவில்லை  என்றால்  நாம் மனிதர்களே  இல்லை. 

 






ஆனால்  நம் ஊர்களில் என்ன நிலை? ஒன்று சாலை போடவே மாட்டார்கள்.  போட்டாலும் ஒரு மழைக்குக் கூட தாங்காத 
பாடாவதி சாலைகளாகத்தான்  இருக்கும்.  

வேலூரின் ஒரு பகுதியான சத்துவாச்சாரி நகராட்சியில்  பிப்ரவரி
மாதம் புதிய சாலைகள் போடத்தொடங்கினார்கள்.  மாதங்கள் சில
ஆன போதும்  பல சாலைகள் போடும் பனி இன்னும் முடியவே 
இல்லை.  இப்போதும்  எப்படி உள்ளது என்று பாருங்கள். 





 

 இது   வெறும் ஒரு சோற்றுப் பதம்தான். நகராட்சி முழுதும்  இது 
போன்ற சாலைகள்  வாகனங்களின் டயர்களை பதம் பார்த்துக் 
கொண்டுள்ளது.  இதிலே மண் மூடியிருப்பது என் வீட்டின் முன்பு 
உள்ள சாலை.  கொத்திப் போடப்பட்ட சாலை, கற்கள் நிரவப்பட்ட 
சாலை என்ற நிலையிலிருந்து  மண் மூடிக் கிடக்கும் சாலை என்ற
நிலைக்கு வர மூன்று மாதங்கள்  ஆகியுள்ளது. முழுமையான சாலை
என்றாகும் என்பது தெரியவில்லை. 

சத்துவாச்சாரி நகராட்சியின் தலைவர் திமுக வைச்சேர்ந்த பெண்மணி. 
அவரது கணவர் மாவீரன் பட்டம் பெற்ற ஒன்றியச்செயலாளர்தான் 
நடைமுறையில்  தலைவர். ஒரு வேளை காங்கிரஸ் வேட்பாளர் 
ஞானசேகரனை  தோற்கடிக்க உள்குத்து வேலையா என்று தெரியவில்லை.  

ஆனால் ஒன்று ஜப்பானில் ஆறு நாட்களில் சாலை போட்டு முடித்து
விட்டார்கள்  என்பதை மட்டும் யாரும் தயவு செய்து அவரிடம் சொல்லி விடாதீர்கள். ஏனென்றால்  எப்படி விரைவாக சாலை போடுவது என்று
ஜப்பான் போய் பார்த்து விட்டு வருகின்றேன் என அவர் கிளம்பினாலும் 
கிளம்பி விடுவார். 


 

Monday, April 25, 2011

இவ்வளவிற்கும் பணம் எங்கே இருக்கிறது?

வேலூரின் முகம் கடந்த மூன்றாண்டுகளில்  மிகவும் மாறியுள்ளது. 
விவேக், கிரேசி மோகன் ஆகியோரின் சுவாரஸ்யமான விளம்பரத்துடன் 
நாதெள்ளா நகைக்கடை சில  நாட்களுக்கு முன்பாக வேலூருக்கு 
வந்து விட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக டாடா கோல்ட் ப்ளஸ் 
நகைக்கடை துவக்கப்பட்டபோது  இதற்கான தேவை என்ன உள்ளது 
என்ற கேள்வியை வேலூர் மக்கள் எழுப்பினார்கள். 
கடந்தாண்டு சிநேகா, மாதவன், பிரபு  வின் விளம்பரங்களோடு அவர்களின்  வருகையோடு  ஜாய் ஆலுக்காஸ், ஜோஸ் ஆலுக்காஸ், 
கல்யாண் ஜ்வல்லர்ஸ்  ஆகிய நிறுவனங்கள்  பிரம்மாணடமான 
கிளைகளைத் திறந்த போது  எத்தனை நாட்கள் இவை நடக்கும் என்று 
பார்க்கலாம் என சவால் விட்டவர்கள் ஏராளம். 

ஏனென்றால்  சென்னையின் சரவணபவன் உணவகம் வேலூரில் துவக்கப்பட்ட போது ஈ ஓட்டிக்கொண்டிருந்தது . மாபெரும் அதிரடி 
விலைக் குறைப்பு என்று உள்ளூர் கேபிள் டிவியில் விளம்பரம் 
கொடுத்தும் பெரும்பாலான வேலூர் மக்கள் அந்தப்பக்கம் கால் வைக்கவேயில்லை. வேலூரின் புதிய சுற்றுலாத் தளமாக 
பொற்கோயில் உதித்த பின்புதான் சரவணபவன் பிழைத்தது. 
இப்போது பல மடங்கு விலையை உயர்த்தி விட்டார்கள். வேலூர்காரர்கள்   வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?
பொற்கோயில்  பக்தர்கள்  வருவார்கள் என்ற  தெனாவெட்டுதான். 

தங்கம் ஒரு சவரனின் விலை பதினாறாயிரத்திற்கு மேலே சென்ற 
பின்பும்  இத்தனைக் கடைகளிலும் கூட்டம் அலைமோதுகின்றது.
வேலூரின் நகைக்கடைகாரர்களும்  இப்போது பிரம்மாண்டமான 
ஷோரூம்  கட்டத்துவங்கி விட்டார்கள். 

நகைக்கடைகள் மட்டுமல்ல, நடுத்தர மக்கள் கால் வைக்க முடியாத  பிரம்மாண்டமான  ஃபர்னிச்சர் கடைகளும்  வந்து விட்டது. மற்ற 
கடைகளை விட விலை அதிகம் என்று தெரிந்தும் "மோர்" போன்ற 
பல் பொருள் அங்காடிகளும்  எப்போதும் நல்ல கூட்டத்துடனே 
வியாபாரம் செய்கின்றன. 

இதனை வியாபாரம் பெறுகிற அளவிற்கு  மிகப் பெரிய தொழில் வளர்ச்சி
ஒன்றும் வேலூருக்கு வந்து விடவில்லை. விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைப்பதில்லை. மாவட்டத்தின்  அடிப்படை தொழில்களான
பீடி, கைத்தறி, தீப்பெட்டி, தோல் ஆகியவையும் நலிந்தே உள்ளது. 
ஆனாலும்  எப்படி இங்கே இவ்வளவு வணிகம்? 

வேறு  சில தகவல்கள்  கிடைத்தன. புதிதாக நகை வாங்குபவர்கள் ஐம்பது சதவிகிதம் என்றால் பழைய நகையை மாற்றுபவர்கள் மீதம். புதிய நகை விற்பதை விட பழைய நகையை மாற்றுவது என்பதில் 
எப்போதும் நுகர்வோருக்கு  இழப்பு, கடைக்காரர்களுக்கு கூடுதல் 
லாபம். 

கடந்து முடிந்த நிதியாண்டில்  எந்த ஒரு வங்கியும் தங்களது வைப்புத் தொகைக்கான இலக்கை அடையவில்லை. அதே போல் எல்.ஐ.சி 
உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்களாலும்  இலக்கை அடைய முடியவில்லை.  அஞ்சல் சேமிப்பிற்கும் அதே கதி என்ற தகவலை 
ஒரு அஞ்சல் தோழர் பகிர்ந்து கொண்டார். 

ஆனால் வங்கிகளைப் பொறுத்தவரை கடன் அட்டைகள் மூலமான 
பரிமாற்றங்கள் என்பது அதிகரித்துள்ளது. 

ஆக  எதிர்கால வாழ்விற்கு சேமிக்கப்பட வேண்டிய தொகை என்பது 
நுகர் பொருட்களாக மாறியுள்ளது. சேமிப்பை விட கூடுதலாய் கடன் 
பெறப்பட்டுள்ளது. 

இந்த நிலை ஆரோக்கியமானதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல 
வேண்டும். அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் ஆட்டி வைத்த 
1930  மிகப் பெரிய மந்தத்திற்கும் சரி, தற்போதைய சர்வதேச பொருளாதார  நெருக்கடிக்கும் சரி  சேமிப்பை விட கடன் அதிகரித்தது
என்பதும் ஒரு காரணம். 

நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற சர்வ தேச நிதி 
மூலதனத்தின் ஆசைக்கு நம்மை அறியாமல் நாமே  பலியாகிக் கொண்டிருக்கிறோம்  என்பதுதான் வருத்தமான உண்மை. 
      

 

Sunday, April 24, 2011

சாய் பாபா - சர்ச்சைகளின் சகாப்தம் , தகர்ந்த நம்பிக்கை


புட்டபர்த்தி சத்ய சாய் பாபா மறைந்து விட்டார். அப்படிச்சொல்வதா? அல்லது முக்தியடைந்து விட்டார் என்று சொல்வதா?  அல்லது அவரது 
அவதாரம் முடிந்து விட்டதா என்று சொல்வதா? 


உலகெங்கும் உள்ள அவரது பக்தர்கள் சோகத்தில் இருக்கும் போது இந்த
இடுகை அவசியமா, நாம் எழுதுவது அவர்களின் ரணங்களை மேலும் 
கீறுமா என்ற கேள்வி எழுந்தாலும்  இப்போது எழுதாவிட்டால் வேறு 
எப்போது  எழுதுவது என்ற கேள்வி  வந்ததால் சில கருத்துக்களையும் 
கேள்விகளையும் முன் வைக்கிறேன். 



இன்று ஊடகங்களில் சத்ய சாய் பாபா பற்றி பேசுகையில்  இரண்டு விஷயங்கள்  மட்டுமே முன் வைக்கப்படுகின்றது.  



ஒன்று  அவரது நிறுவனம் செய்து வரும் பல்வேறு சேவைகள், அதிலும் 
பிரசாந்தி மருத்துவமனை பற்றியும் தெலுங்கு கங்கை திட்டத்திற்காக 
தமிழகத்திற்கு  200  கோடி ரூபாய் கொடுத்தது, 


வாரிசு என்று யாரையும் அவர் அடையாளம் காட்டாததால்  சொத்துக்கள்
யாருக்கு செல்லும்? அரசாங்கம்  எடுத்துக் கொள்ளுமா ? 


ஆனால்  சத்ய சாய் பாபாவின் அடையாளமாக இவை என்றுமே  
இருந்தது கிடையாது.  சர்வ சக்தி படைத்த கடவுளின் அவதாரம். அவர் கையிலிருந்து விபூதி கொட்டும். அவரது பக்தர்கள் வீட்டில் உள்ள 
அவரது படங்களில் இருந்து விபூதி கொட்டும். காற்றில் இருந்து 
பரிசுப் பொருட்களை வரவைப்பார். பக்தர்களின் நோய்களை அவர் 
குணப்படுத்துவார்.  அறுவை சிகிச்சையால் கூட இயலாது என்று 
சொல்லப்படுகின்ற  நோய்களெல்லாம்  அவரது அருளால் குணமாகி 
விடும். இது எப்படி என்று மருத்துவர்களே ஆச்சர்யத்தில் மூழ்கிப் 
போவார்கள்.  கூடு விட்டு கூடு பாய்வது போல அவர் எங்கும் 
தோன்றுவார்.  


இதுதான் அவரைப் பற்றிய பிம்பம். அவரது பல வேலைகள்  பயிற்சியால்
செய்யக் கூடியது என்பதை பல அமைப்புக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளன. 
ஆன்மீகவாதிகளில்  ஒரு பிரிவினர் அவரை ஏற்றுக் கொண்டதேயில்லை. 
காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகர சரஸ்வதியின் பக்தர்கள் அவர்கள் 
தரப்பு கதையாக  ஒரு விஷயம் சொல்வார்கள். 


இவர்கள் இருவரும் சந்தித்த போது  சாய்பாபா காற்றிலிருந்து ஒரு மாலை  வரவழைத்தாகவும்  இவர் கை காட்டியதும் அந்த மாலை மறைந்து  போய் விட்டதாகவும் சொல்லி சாய்பாபாவை விட சங்கராச்சாரியாரே  சக்தி வாய்ந்தவர்கள்  என்று சொல்வார்கள். 


ஆனால் இவரது பிம்பம் தகர்ந்து போனது இவரைக் கொல்ல நடைபெற்ற 
முயற்சியின் போது இவர் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்ட போதுதான்.  சர்வ சக்தி படைத்தவர் ஏன் அறைக்குள் ஓடிப்போக வேண்டும்,  அவரால் கொலைகாரர்களை தடுத்திருக்க முடியாதா என்ற 
கேள்விக்கு இன்று வரை  சரியான பதில் கிடைக்கவில்லை. 


இப்போதும் கூட அவரது பக்தர்கள் நம்பிக்கையாக இருந்தார்கள். 96 வயதில்தான் தனக்கு முக்தி என்று சொல்லியுள்ளார். ஆகவே அவருக்கு 
இப்போது மரணம் சம்பவிக்காது  என்று உறுதியாக இருந்தார்கள். இன்னும்  சிலர் அவர் உடல் நலனுக்கு எதுவுமே கிடையாது, யாரோ ஒரு 
பக்தரின்  வேதனையை  இவர் தாங்கிக் கொண்டுள்ளார், அந்த பக்தர் 
குணமான பின்பு சாய்பாபாவும்  இயல்பு நிலைக்கு வந்ந்து விடுவார் 
என்றார்கள். 


அவர்கள் அனைவரும் இப்போது உண்மையிலேயே வருத்தத்தில் 
இருப்பார்கள்.  மரணம் என்பது எப்போதுமே  வருத்தமானது. கருத்து
முரண்பாடுகள்  இருந்தாலும் எனக்கும் வருத்தமாகவே உள்ளது. 


வருத்தத்தில் மூழ்கியுள்ள அவரது பக்தர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.  உங்கள் துக்கம் ஓய்ந்ததும் சற்று சிந்தியுங்கள். 
சத்ய சாய் பாபா உங்களை ஆன்மீக வழியில் நடத்திய ஒரு மனிதர் 
என்ற தெளிவு வந்தால்  உங்களுக்கு எதிர்காலத்தில் குழப்பம் 
இருக்காது.  கடவுளின் மறு அவதாரம் என்றே நினைத்துக் கொண்டிருந்தால்   அப்போது  உங்களின் நம்பிக்கைகள் தகர்ந்து போன
சோகமே  உங்களை  மூழ்கடித்து விடும். 


ஆனால் சொத்துக்கள் என்ன ஆகும் என்பதுதான் சத்ய சாய் பாபாவின் 
வாழ்வை விட மிகப் பெரிய சர்ச்சையாகும் என்று தோன்றுகிறது. 

 
  

    
 

Saturday, April 23, 2011

வாக்கு எண்ணிக்கையில் மோசடி

வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது 
என்று நான் முன்பு 13  மார்ச்  அன்று   எழுதியிருந்தேன். பெட்டியில் 
வரும் எண்ணிக்கையை காகிதத்தில்  எழுதும் போது முகவர்கள் 
எச்சரிக்கையாக இல்லையென்றால்  ஒரு வேட்பாளருக்கு விழும் 
வாக்குகளை வேறொருவருக்கோ அல்லது கூடவோ குறைத்து 
எழுத முடியும் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். 

இப்போது அந்த வாய்ப்பை தேர்தல் ஆணையம்  தடுத்து விட்டது. 
ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மேசைக்கும் ஒரு  வெப் காமரா
வைக்கப்படும் என்றும்  ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு 
வேட்பாளருக்கும்  விழும் வாக்குகள் காமராவில் பதிவு செய்யப்படும்
என்றும்  தற்போது  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
உண்மையிலேயே தேர்தல் ஆணையம் உட்கார்ந்து யோசிக்கிறது
என்பதற்கு இது ஒரு உதாரணம்.  வாழ்த்துக்கள்.
சாமானியனின்  இரு சந்தேகங்கள் :

இந்த அறிவிப்பைக் கண்டித்து கலைஞர்  ஏன்  இன்னும்  அறிக்கை 
விடவில்லை. உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதவில்லை? 

இப்படியெல்லாம் செய்தால் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம்
எப்படி வெற்றி பெற முடியும்?  


பின் குறிப்பு : என் மகன் என்னிடம் பகிர்ந்து கொண்ட தகவல். மைக்ரோ 
அப்சர்வராக பணியாற்ற போய் விட்டதால் தேர்தல் தினத்தன்று நான் 
வீட்டில் இல்லை. எங்களுக்கான வாக்குச்சாவடி எங்கள் வீட்டிற்கு 
எதிரில் உள்ள பள்ளிக்கூடம். நடப்பதற்கு மிகவும் சிரமப்படும் 
எனது மாமியாரால் சாலையை கடந்து வாக்குச்சாவடிக்கு போவது 
என்பது மிகவும் கஷ்டம். ஆகவே எனது மாமனார் ஒரு ஆட்டோவை
ஏற்பாடு செய்து சாலையை கடக்க வைத்து வாக்களிக்க வைத்தார். அதற்கு அவர் இருபது ரூபாய் செலவு செய்தார். 

இவ்வளவு சிரமததோடும் எதிர்பார்ப்போடும் வாக்களிக்கும் 
மக்களை எதிர்கால ஆட்சியாளர்களாவது ஏமாற்றாமல் 
இருக்க வேண்டும்.  
   

படியுங்கள், படியுங்கள்

இன்று  உலக புத்தக தினம்.  படிக்கும் வழக்கம்
குறைந்து போய்க் கொண்டுள்ளது  என்ற 
வருத்தம்  ஒரு புறம் உள்ளது. இல்லை, அது 
மீண்டும் எழுச்சி கொண்டு வருகின்றது என்பதை
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வருடமும்
நடைபெறுகின்ற புத்தகக் கண்காட்சிகளுக்கு 
வருகின்ற மக்கள் திரளும் விற்பனையாகிற 
புத்தகங்களின் எண்ணிக்கையும்  காண்பிக்கிறது. 

வாங்கப்பட்ட புத்தகங்களில்  எவ்வளவு படிக்கப்
படுகின்றது என்ற கேள்வியும் இயல்பாகவே 
வந்தாலும்  யாரும் தங்களின் பணத்தை விரயம் 
செய்வார்களா  என்று சமாதானம் செய்து கொள்கிறோம்.  

அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களின் மீது
பரவியுள்ள தூசியை துடைத்து  படியுங்கள். 

அறிவிற்கான திறவுகோல் என்பது நிச்சயம்
புத்தகங்களாக மட்டுமே இருக்க முடியும். இன்று 
உலக புத்தக தினம். உலக மாமியார் தினம், 
மைத்துனி தினம் என்றெல்லாம் சொல்லி 
சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தும் உலகத் தொலைக்காட்சி நிறுவனங்கள்  உலக புத்தக தினம் பற்றியெல்லாம் வாய் திறக்க மாட்டார்கள். 

அனைவரும் படிக்கத் தொடங்கி விட்டால் அவர்கள்  எப்படி பிழைப்பு நடத்துவார்கள். 

ஆக இன்று ஒரு நாள் தொலைக்காட்சிக்கு விடுப்பு 
அளித்து விட்டு புத்தகங்களைப் படிக்கலாமே! 

பாரதி புத்தகாலயம் இன்றைக்கு ஒரு அருமையான  திட்டத்தை அறிவித்துள்ளது. 500 
ரூபாய்க்கு  750 ரூபாய் மதிப்பிலான   புத்தகங்கள்
வாங்கலாம்.  பொருளாதார சிரமத்துடன் நடந்து கொண்டிருக்கும் பாரதி புத்தகாலயம் புத்தகம் படிக்கும் வழக்கம் முன்னேற வேண்டும் என்ற 
நோக்கோடு இத்திட்டத்தை அறிவித்துள்ளது. 
பல அற்புதமான புத்தகங்களும் உங்களுக்காக 
காத்திருக்கிறது.  

புத்தகங்களை வாங்கிடுவீர்! அதைப் படித்துடுவீர்!!
அது மிகவும் முக்கியம். 



   

Friday, April 22, 2011

அமெரிக்காவின் புதிய காதலி

இந்தியாவின்  உள் விவகாரங்களில்  அமெரிக்கா காண்பிக்கும் ஆர்வம், 
எந்தெந்த மாநிலங்களில் யார் ஆட்சி செய்ய வேண்டும்  என்ற அதன் 
விருப்பம், அதற்காக எதையும் செய்ய தயாராக உள்ள அதன் துடிப்பு 
எல்லாம் மீண்டும் அம்பலமாகி உள்ளது. 
இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் அரசான கேரள இ.எம்.எஸ் ஆட்சியை 
கவிழ்க்க அமெரிக்க உளவு அமைப்பான  சி.ஐ.ஏ  நடத்திய சதி வேலைகள், 
அதைச்செய்ய  அவர்கள் கண்டு பிடித்த எடுபிடிகள், வீசப்பட்ட எலும்புத் துண்டுகள் குறித்தெல்லாம்  கேரளா நிதியமைச்சர் தோழர் தாமஸ் ஐசக் 
தனது புத்தகத்தில்  ஆதாரங்களோடு  அம்பலப் படுத்தியிருப்பார். கேரள
அரசைக் கவிழ்க்க அமெரிக்கா  ஆர்வம் காட்டியதை  அம்பலப்படுத்த 
நாற்பது ஆண்டுகள் தேவைப்பட்டது. எதற்கெடுத்தாலும் துள்ளிக் குதிக்கும்  ரமேஷ் சென்னித்தலா, ஆண்டனி, ஓமன் சாண்டி வகையறாக்கள்  தோழர் தாமஸ் ஐசக் புத்தகத்திற்கு மட்டும் பதில் 
சொல்லாமல்  வாயில் கொழுக்கட்டை வைத்திருந்தார்கள். 

ஆனால்  மேற்கு வங்கத்தில்  அமெரிக்கா ஏற்படுத்த நினைக்கும் மாற்றம்
குறித்து அம்பலப்படுத்த நாற்பது ஆண்டுகள் தேவைப்படவில்லை. நான்கு
சுற்று வாக்கு பதிவு பாக்கி   இருக்கும் போதே  உண்மைகள் அம்பலமாகி 
உள்ளன. 

கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் செய்யும் பல வேலைகள்  சந்தேகத்திற்கு இடமானது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வாங்க மாநிலச்செயலாளர் தோழர் பிமன் போஸ் ஏற்கனவே 
குற்றம் சாட்டியுள்ளார்  என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். 

இப்போது விக்கிலீக்ஸ்  கொல்கத்தா அமெரிக்க துணை தூதரகம் அமெரிக்க  அரசிற்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட்டு அம்பலப் படுத்தி
விட்டது.  மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராக வருவதுதான் 
அமெரிக்க நலன்களுக்கு நல்லது. இடதுசாரிக் கட்சிகளின் ஆட்சியை 
அகற்ற இதுவே தருணம். எனவே அமெரிக்கா அவருக்கு முழுமையான 
ஆதரவு அளிக்க வேண்டும் என்பதுதான் அக்கடிதத்தின் சாராம்சம். 

இந்தியாவை அமெரிக்காவின் காலனியாக மாற்றத் துடிக்கும் அமெரிக்க
முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் மார்க்சிஸ்ட் கட்சியை பலவீனப்படுத்த நடைபெறும்  சதிச்செயலில்  இப்போது அமெரிக்காவிற்கு கிடைத்துள்ள எடுபிடி மம்தா பானர்ஜி. அவருக்கு வீசப்பட்ட எலும்புத் துண்டுகள்தான்  இப்போது மேற்கு வங்க மாநிலத்தில் உலாவிக் கொண்டுள்ளது  என்பதும் தெளிவு. 

மம்தா பானர்ஜி முதல்வரானால் ஒழுங்காக இருப்பாரா அல்லது ரவுடியாகவே தொடர்வாரா? முதலாளிகளுக்கு நன்மை கிடைக்குமா?
என்றெல்லாம் பல சந்தேகங்களை அக்கடிதத்திலேயே எழுப்பியிருந்தாலும்  மம்தாவிற்கு உதவி செய்யுங்கள் என்று முடித்துள்ளது  மார்க்சிஸ்ட் கட்சி மீது அமெரிக்கா கொண்டுள்ள 
துவேஷத்தையே  காண்பிக்கிறது. 

ஆனால் இந்த சதிகளைஎல்லாம் மேற்கு வங்க மக்கள் கண்டிப்பாக 
முறியடிப்பார்கள். 



 
 

Thursday, April 21, 2011

உற்ற நண்பரின் பெயரையே மறந்த கலைஞர்

குடும்ப முன்னேற்ற கழகம்  என்று  தோழர் பிரகாஷ் காரத் கூறியதற்காக கலைஞர் முரசொலியில்  புலம்பியுள்ளார்.  வழக்கமான வாய்ச்சொல்லான  நானும் ஒரு கம்யூனிஸ்ட் என்பது தொடங்கி  ஜீவா, மணலி, இ.எம்.எஸ் உடனான  தனது பரிச்சயம்  பற்றியெல்லாம் எழுதி விட்டு " என்னைப் போய்  இப்படி எழுதி விட்டாரே, இவரது மனைவி  கட்சியில் இல்லையா " என்ற  கேள்வியோடு முடித்து விட்டார். இதற்கிடையில் தீக்கதிருக்கு திட்டு, தாபா விற்கு திட்டு, ஜி.ராமகிருஷ்ணனுக்கு  திட்டு  எல்லாம் உண்டு. நரகல் நடை, நச்சு குணம் என்ற அர்ச்சனைகள் வேறு. இதிலே என்னைப் போல கண்ணியமானவன் உண்டா என்ற சுய தம்பட்டம் வேறு.  இவரது பழைய உரைகளும் எழுத்துக்களுமே  இவரது கண்ணியத்தின்  அளவு  என்ன  என்பதை  புரிய வைத்திடுமே! இவரது கடிதத்திற்கு நான் பதில் சொல்லப்போவதில்லை. என்னை இன்னுமா நம்பிக் கொண்டுள்ளீர்கள் என்று புதிய கூட்டாளி வடிவேலுவின் பாணியில் உடன் பிறப்புக்களுக்கு எழுதிய கடிதத்திற்கு  தீக்கதிர் தக்க பதில் அளித்து விட்டது.

நான் சொல்லப்போவது  வேலூர் பொதுக்கூட்ட நிகழ்வு பற்றி. வேடிக்கை 
பார்க்கப்போன ஒரு தோழர்  சொன்னதுதான்.   
அக்கூட்டத்தில்  மார்க்சிஸ்ட் கட்சியை கடுமையாக விமர்சித்து விட்டு 
அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்று நிறுத்தி பின்னால் திரும்பி 
" அவர் பெயர் என்ன? " என்று கேட்டுள்ளார். பின்னால் நின்றவர்களுக்கும் 
உடனடியாக சொல்லத் தெரியவில்லை. அதற்குள் இன்னும் மூன்று முறை  கேட்டு விட்டாராம். அதன் பின்பே விஷய ஞானம்  உள்ள  ஒரு 
உடன் பிறப்பு  பிரகாஷ் காரத் என சொல்ல அதன் பின்பு தொடர்ந்து 
திட்டியுள்ளார். 

பாவம் உற்ற நண்பரின் பெயரைக் கூட நினைவு கொள்ள முடியாத 
அளவிற்கு சிரமப்படும்  கலைஞர்  ஒய்வு எடுத்துக் கொள்வதுதான் 
அவரது உடல்நலத்திற்கு  நல்லது. கழகக் கண்மணிகள் கவனிக்க!
 
 

Wednesday, April 20, 2011

மேதகு ஆளுனரை கைகழுவிய காங்கிரஸ் கட்சி

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர்  இக்பால்சிங் சரியான மனிதரல்ல, ஒரு ஊழல் பேர்வழி என்ற குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கட்சிதான் முதன் முதலில் வைத்தது. இவர்களுக்கு  வேறு வேலை இல்லை என்று அப்போது புறம் தள்ளியவர்கள்  இப்போது வாயடைத்து நிற்கின்றார்கள். 

ஒரு கொடுங்கோல் அரசன் இறக்கும் தருவாயில் தனது மகனிடம் மக்கள் என்னை நல்லவர்கள்  என்று கூறும்படி  ஏதாவது செய் என்று சொல்லி விட்டு செத்தானாம். அவனை விட இவனது அராஜகம் மிக அதிகாமாகப் போக மக்கள் சொல்லத் தொடங்கினார்கள் - " இவனை விட இவன் அப்பா எவ்வளவோ நல்லவன் " என்று.
அது போல முன்பிருந்தவர்களுக்கு  நல்ல பெயர் வாங்கித்தருவதில் நமது ஆட்சியாளர்களுக்கு ஈடு இணையே கிடையாது. அருணாசலப் பிரதேச மாநில அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டி அம்மாநில முன்னாள் முதல்வர் முகுந்த் மிதாயை  புதுச்சேரி கவர்னராக்கினார்கள். ஆட்டம், பாட்டம் ,கொண்டாட்டம் என்று கேளிக்கைகளில் மட்டுமே 
திளைத்துக் கிடந்த முகுந்த் மித்தாய் எவ்வளவோ மேல் என்று புதுவை மக்களை பேச வைத்த பெருமை இக்பால்சிங்கிற்கே உண்டு. 

குருத்வாராவிற்கு  இடம் ஒதுக்குவதில்  முறைகேடு,

தனது அறக்கட்டளைக்கு மருத்துவக் கல்லூரி துவக்க அனுமதி பெறுவதில் முறைகேடு,
ராஜ்நிவாஸ் அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தல்  

ஆகிய முறைகேடுகளை  மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டிய போது,
இதெல்லாம் ஒரு மேட்டரா என்று பார்த்தவர்கள்  அசன் அலி கான் 
பாஸ்போர்ட் வாங்க இவர் செய்த வேலை பற்றி அம்பலமானதும்தான் இந்த ஆள் சரியான தில்லாலங்கடி பேர்வழி என்று உணர்ந்து கொண்டார்கள்.  

இவரது நண்பர்  ஒரு காலி விண்ணப்பத்தை கொடுப்பாராம், அந்த காலி விண்ணப்பத்திற்கு இவர் பரிந்துரை செய்வாராம், யாருக்கு பாஸ்போர்ட் என்பதே இவருக்கு தெரியாதாம். இந்தியர்கள் எல்லாம் காதில் முழம் முழமாய் பூமாலைகளை சுற்றி வைத்துக் கொண்டிருப்பதாக இவருக்கு 
எண்ணம். பிறகு அந்த பாஸ்போர்ட்டை இவரது காவல் அதிகாரி பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து ஏன்  பெற்றுக்கொண்டாராம்? 

பிரச்சினை வெடித்த பின்பு வழக்கம் போல் எங்களுக்கு இதில் தொடர்பு 
கிடையாது என்று பரம யோக்கியர்கள் போல காங்கிரஸ் கட்சி கைகழுவி விட்டு விட்டது. ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகிய உத்தமர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வந்தால் மட்டும்தான் காங்கிரஸ் கட்சி வீறு கொண்டு 
எழும் என்பதை காங்கிரசின் ஊழல் பெருச்சாளிகளே  கவனத்தில் கொள்ளுங்கள். அ.ராசாவை  பாதுகாக்கும் கலைஞரின் திமுக அல்ல 
உங்கள் காங்கிரஸ் கட்சி.


 

Tuesday, April 19, 2011

பிறந்த குழந்தையின் எடை 80 கிலோ

அதிசயம்  ஆனால் உண்மை 




இச்சம்பவம்  நடைபெற்றது  நியுசிலாந்து நாட்டில் 
பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில்.





பிறந்த குழந்தையின்  எடை 80 கிலோ. 
அது மட்டுமல்ல  








ஆச்சர்யம்  தொடருகின்றது!!!
ஒரு மாத காலத்தில்  அக்குழந்தையின் எடை 
200  கிலோவாக  உயர்ந்து விட்டது. 
நம்ப முடியவில்லையா ?








அந்த குழந்தையின் புகைப்படத்தை 
பார்க்க ஆவலாக  இருக்கிறதா???






இன்னும் கீழே  செல்லுங்கள் 








































அடிக்க வேண்டும்  என்று நினைத்தால்
என்னை தேடாதீர்கள். 
இன்று காலை  எனக்கு இதனை 
குறுஞ்செய்தியாய் அனுப்பிய தோழரின் 
செல் நம்பரை தருகிறேன். 

அவரை வேண்டுமானால் திட்டுங்கள். 
(ஒரே ஒரு நாள் மாறுதலாக எழுதலாம் 
என்ற ஆசைதான். இதுக்கு பேருதான மொக்கை? )  

Monday, April 18, 2011

லேட்டஸ்ட் விருதுகள் - நல்லா இருக்கா?

இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்த படங்கள் 

ஏற்கனவே இது போல விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது. இது லேட்டஸ்ட்









  
இதில்  சிங்கம் என்பது இன்று  சகாயம், அமுதா, சங்கீதா என்று  இவர்களுக்கும் பொருந்தும்.
என்ன சரிதானே!

Sunday, April 17, 2011

மைக்ரோ அப்சர்வர்கள் பட்ட அவஸ்தைகள்

நேற்றைய பதிவின் தொடர்ச்சி 

மாலை நான்கு மணிக்கு  புதிய ஆணைகள்  தருகிறோம், நிறுவனத்திற்கு ஒருவர் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்  என்று  சொன்னார்கள். எங்கள் 
அலுவலகத்தில்  ஒருவரை நேர்ந்து விட்டோம். தான் ஒரு பலியாடு 
என்று புரியாமல் அவரும் அப்பாவியாய் ஒப்புக்கொண்டார். நான்கு மணிக்கு சென்ற அவரை எட்டு மணி வரை காத்திருக்க வைத்து பிறகு 
அனைவருக்குமான ஆணைகளை கொடுத்தார்களாம். காலை நடந்த 
கூட்டத்தில்  டீ அல்ல தண்ணீர் கூட கொடுக்காமல்  அனுப்பி வைத்தார்கள்.  எட்டு மணி வரை காத்திருந்தவர்களுக்கும் அதே கதிதான். எங்களை கண்காணிக்கவா வரப்போகின்றீர்கள், சோறு, தண்ணீர் இல்லாமல்   உங்களுக்கெல்லாம்  இருக்குடா பிரச்சினை என்று சொல்லாமல்  சொல்லியுள்ளார்கள்.  அது எங்களுக்குத்தான் புரியவில்லை.  

ஆணைகளைப் பார்த்தால் அத்தனையும் மாறிப்போயிருந்தது.  யாருக்கும்  வேலூர் தொகுதி கிடையாது. பலருக்கு குடியாத்தம், அணைக்கட்டு, சிலருக்கு மட்டும்  காட்பாடி தொகுதி. நீ வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம் என்பது போல பார்த்தார்கள். கோட்டப் பொதுச்செயலாளரை  எப்படி திட்டுவது என்ற மரியாதையில் மௌனமாக இருந்து விட்டார்கள். 

அந்த வார ஞாயிறு அன்றே தொகுதி வாரியாக வகுப்பு. மாவட்ட ஆட்சியர் சொன்னதின் மறு ஒலிபரப்பு மட்டுமே. அடையாள அட்டை அளித்ததற்கு மேல் எதுவும் இல்லை. எங்களுக்காவது பரவாயில்லை. வேலூரில்தான் வகுப்பு, மற்றவர்கள் வெளியூருக்கு போக வேண்டியிருந்தது. மொத்தத்தில்  ஒரு ஞாயிற்றுக்கிழமை வீணானது. 

அடுத்த ஞாயிற்றுக்கிழமை அடுத்த வகுப்பு. பதினோரு மணிக்கு வரச்சொன்னார்கள்.  பனிரெண்டு மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. அப்போது வாருங்கள். அப்போது போனால்  கே.வி.குப்பம் வகுப்பே முடியவில்லை.  ஒரு வழியாக ஒரு மணிக்கு துவக்கினார்கள். அந்த 
வகுப்பும்  மறு ஒலிபரப்புதான். பட்டினியாய் இருப்பது எப்படி என்பதற்கான  வகுப்பு என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். காட்பாடி தொகுதியில் எந்த வாக்குச்சாவடி என்பதற்கான ஆணை கொடுத்து விட்டார்கள். ஆனால் இவர்களோ அப்படி கொடுக்கவேயில்லை என்று சாதித்துக் கொண்டிருந்தார்கள். 

பனிரெண்டாம் தேதி ஒரு வழியாக வாக்குச்சாவடி எது என்பதற்கான ஆணையை கொடுத்து விட்டார்கள். பெட்டியை எடுத்துச்சென்ற பிறகு 
வாக்குப் பெட்டிகள் வைக்கும் மையத்திற்கே  வந்து அறிக்கையை அளித்து விட்டு போக வேண்டும் என்று சொன்னார்கள். உணவுக்கான 
ஏற்பாடு என்ன என்று சிலர்   கேட்ட போது கிராம நிர்வாக அதிகாரி 
பார்த்துக் கொள்வார் என்றார்கள். 

மூன்று வகுப்புக்கள் கொடுத்த நம்பிக்கையில் காலை உணவிற்கு பிரெட் டோஸ்டுகள், மதிய உணவிற்கு சப்பாத்தி, தக்காளி ஊறுகாய், இரண்டு 
தண்ணீர் பாட்டில்கள் என்ற தயாரிப்போடு போனதால் நான் தப்பித்தேன். 
ரொம்ப நல்லவர்களாக போனவர்கள்தான் மாட்டிக்கொண்டார்கள். கிராம நிர்வாக அதிகாரி கண்டு கொள்ளாமல் போன இடங்களில் கட்சிகளின் ஏஜெண்டுகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. உப்பிட்டவரை  உள்ளவரை நினை என்ற தமிழ்ப்பழமொழிக்கு ஏற்ப ஏஜெண்டுகளின்  தெனாவேட்டுக்கு  பதில் பேச முடியாமல் அமைதியாக 
இருக்க வேண்டிய நிலை, மைக்ரோ அப்சர்வர்களுக்கு மட்டுமல்ல 
தேர்தல் அலுவலர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 

மற்ற விஷயங்களில் கறாராக இருந்த தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் மட்டும் கோட்டை விட்டு விட்டது. நானிருந்த வாக்குச்சாவடியிலும் அனைவருக்குமான உணவை கட்சிக்காரர்கள்தான் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதனுடைய விளைவு என்னவென்றால் 
மாலை நான்கு மணிக்கு மெதுவாக, ஆளுக்கு பத்து வோட்டுக்கள் போடலாமே என்று ஆரம்பித்தார்.  தேர்தல் அலுவலர்கள் அப்படியே 
நெளிந்தார்கள். ஒருவர் மட்டும் அப்சர்வர் சார் இருக்கார், சென்ட்ரல்
கவர்ன்மென்ட் என்றார். வேண்டுமானால் போட்டுக்கொள்ளுங்கள், நான் என் அறிக்கையில் எழுதி விடுவேன், என்ன இந்த சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடக்கும் என்று சிரித்துக் கொண்டே சொன்னதிற்குப் பிறகு அப்படியே அடங்கிப் போய்விட்டது. 

ஆறே கால் மணிக்கெல்லாம் பெட்டியை எடுக்க வந்து விட்டார்கள். ஏழு மணிக்கெல்லாம் சடங்குகள் முடிந்து பெட்டிகள் லாரிக்கு போய்விட்டது. 
தேர்தல் அலுவலர்களுக்கேல்லாம் சுடசுட அங்கேயே பணம் கொடுத்து விட்டு பை பை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். உங்களுக்கெல்லாம்  கொடுக்கச்சொல்லி எங்களுக்கு உத்தரவு இல்லை 
என்று சொல்லி லாரியை கிளப்பிக் கொண்டு பெட்டியோடு போயி விட்டார்கள். 

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு நான் வரும்போது  ஏழரை மணி. மைக்ரோ அப்சர்வர் அறிக்கையை வாங்க யாரும் தயாராக இல்லை. தொகுதி தேர்தல் அதிகாரிக்கு தொலைபேசி செய்ய அவருக்கு கீழே 
பணியாற்றும் யாருக்கும் தைரியமில்லை. நான் தொலைபேசி செய்த போது பதினைந்து நிமிடங்களில் வந்து விடுவேன். காத்திருங்கள் 
என்றார். சரியாக எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தார். Indian Punctuality.
இதற்குள்ளாக பல மைக்ரோ அப்சர்வர்களும் அங்கே வந்து சேர்ந்திருந்தார்கள். 

தேர்தலுக்கு முன்பாக இவர்கள் அறிக்கைக்கான படிவம் எதுவும் அளிக்கவில்லை. கொடுத்த ஒரு புத்தகத்தில் மாதிரி படிவம் ஒன்று 
இருந்தது. அதை நாங்கள் தட்டச்சு செய்து படிவம் தயார் செய்து அதிலே 
அறிக்கை தயார் செய்திருந்தோம். தேர்தல் அதிகாரி அந்த சமயத்தில் 
ஒரு படிவம் தயார் செய்து அதை நிரப்புங்கள் என்று சொன்னார். வாங்கிப் பார்த்தால் அதே கேள்விகள்தான். படிவத்தின் வடிவம் மட்டும்தான் வேறு. இதிலே எழுதிக் கொடுங்கள் என்ற போது   எங்களுக்கு வேறு பிழைப்பில்லையா என்று   நாம் கோபமாக மறுத்து விட்டேன்.

எங்களுக்கு எப்போது பணம் தருவீர்கள்  என்று எல்லோரும் கேட்டார்கள். எனக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்ததும்  பலரும் பொங்கி எழுந்து விட்டார்கள். ஏப்ரல் முதல் தேதி முதல் பட்ட அவஸ்தை அப்படியே வெடித்தது. தினசரி லட்சக்கணக்கான ரூபாயோடு புழ்ல்கிற வங்கி ஊழியர்களை என்ன பிச்சைக்காரர் என்று நினைக்கிறாயா என ஒருவர் 
கேட்க,  நீங்க வங்கி ஊழியருனா ரொம்ப ஒசத்தியா என்று மாநில 
அரசு ஊழியர் சண்டைக்கு வர இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை 
என்பது போல தொகுதி தேர்தல் அதிகாரி ஏதேதோ தாள்களில் 
முகத்தை புதைத்துக் கொண்டிருந்தார்.  

மைக்ரோ அப்சர்வர் போட வேண்டும் என்று மத்திய தேர்தல் ஆணையம்தானே சொன்னது, அவர்களே பணம் தருவார்கள் என்று 
ஒருவர் நக்கல் செய்ய, நிலைமை மேலும் சூடானது. அதன் பின்பு எங்கெங்கோ  தேர்தல் அதிகாரி யார் யாருக்கோ போன் செய்தார். அது என்னவோ தெரியல, யாருமே போன எடுக்கல. பணம் குடுக்க எங்களுக்கு  அதிகாரம் இல்லை, தாலுகா அலுவலகத்திற்குத்தான் 
உண்டு என்று சொல்லி சமாதானம் செய்யப்பார்த்தார். தாசில்தாரே 
அங்கே வர அவர் யாருக்கோ போன் போட்டு உடனே பணத்தோடு வா 
என்று உத்தரவிட்டார். இன்னும் ஐந்து நிமிடங்கள் காத்திருங்கள் என்றார். தேர்தல் அலுவலர்களுக்கு மட்டும் வாக்குச்சாவடியிலேயே பணம் 
தர முடிந்த நீங்கள் மைக்ரோ அப்சர்வர்களை மட்டும் ஏன் அலைக்கழிக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவே இல்லை.

அரை மணி நேரம் ஆனா போதும் யாரும் வரவில்லை. இதற்கு மேலும் காத்திருப்பது வீண் என்று கருதி, ஒன்பதரை மணிக்கு புறப்பட்டேன். 
இரண்டு நாட்கள் கழித்து தாலுகா அலுவலகத்திற்குப் போய் பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். போனவுடன் கொடுத்து விட்டார்கள். 

வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து புறப்படும் முன்பாக தேர்தல் 
அதிகாரியிடம் கீழ் வருமாறு கூறினேன். 

" வாக்குப்பதிவிற்கும்  எங்களைக் கூப்பிடுவீங்க இல்ல, கலெக்டர் கூட்டம் நடத்துவார் இல்ல, அன்னிக்கு வச்சுக்கிறோம் எங்க கச்சேரிய" 

ஆம் கச்சேரி காத்திருக்கின்றது.