Saturday, May 2, 2026

2, மே, 1986/2025 -அனுபவப் பகிர்வு

 


மன்னிக்கவும். இந்த பதிவும் சொந்த அனுபவம், வசந்த அனுபவம் மற்றும் நொந்த அனுபவம்.

16.04.1986 அன்று பயிற்சி உதவியாளராக எல்.ஐ.சி யில் இணைந்தேன். 15 நாள் பயிற்சி வகுப்பு சென்னையில் நடந்து 30.04.1986 அன்று நெய்வேலி கிளையில் போய் வேலை பார் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

02.05.1986 அன்று பதற்றத்தோடு நெய்வேலி கிளை அலுவலகத்திற்குள் காலடி எடுத்து வைத்தேன். 

அன்று நாங்கள் ஒன்பது பேர் நெய்வேலியில் பணியில் இணைந்தோம். ஆனந்தன், பாஸ்கரன், ஜவஹர்,நரசிம்மன், ராமன், செல்வராஜ் என்று ஆறு ஆண் ஊழியர்களும் சித்ரா, நீலாயதாட்சி,உஷாராணி என்று மூன்று பெண் ஊழியர்களும் சேர்ந்தோம்.

ஒன்பது பேர் என்பதால் எங்களை நவ ரத்தினங்கள் என்று சொன்னவர்களும் உண்டு. நவக் கிரகங்கள் என்று கலாய்த்தோரும் உண்டு. 

அனைத்து ஊழியர்களோடும் அறிமுகம், கிளை பற்றிய விபரங்கள் பகிர்தல், தற்காலிகமாக என்ன பணி செய்வது என்று காலைப் பொழுது முடிந்தது. மதியத்திலிருந்தே வேலை தொடங்கி விட்டது. லெட்ஜர் போஸ்டிங் என்ற வேலைதான் முதலில் கொடுக்கப்பட்டது. பாலிசிதாரர் பிரிமியம் செலுத்திய ரசீதை அவருடைய லெட்ஜர் ஷீட்டில் குறிப்பது. கொஞ்சம் அலுப்பூட்டும் வேலைதான். பெரிய பெரிய லெட்ஜர்களை எடுப்பதில் கொஞ்சம் கை வலி கூட வரும். பிறகு நிரந்தரமாக அக்கவுண்ட்ஸ் பிரிவு தரப்பட்டது. ஐந்தாண்டுகள் அங்கேயேதான் இருந்தேன்.

மதிய வேளையில் புதிதாக சேர்ந்த ஆண் தோழர்களை அன்றைய முன்னணி சங்கப் பொறுப்பாளரும் பின்னாளில் எங்கள் கோட்டத்தின் முதுநிலை கோட்ட மேலாளருமான தோழர் சுப்பராயன் அருகில் உள்ள டீக்கடைக்கு அழைத்துச் சென்று டீ வாங்கிக் கொடுத்து அனைவரையும் இயல்பாக பழக வைத்தார்.

02.05.1986 அன்று நெய்வேலி அலுவலகத்திற்கு சென்ற போது விரைவில் சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றி பெற்றோ அல்லது எல்.ஐ.சி முதல் நிலை அதிகாரிக்கான நேரடித் தேர்வில் வெற்றி பெற்றோ இந்த அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான் உள்ளே நுழைந்தேன்.

சங்கம் எனக்கு மாற்றுப் பாதையை காண்பித்தது.  மனதிற்கு மிகவும் பிடித்த பாதையாகவும் அமைந்திருந்தது. நெய்வேலி கிளையில் கிடைத்த அனுபவங்கள் பின்னாளில் கோட்டச்சங்கப் பணிகளை செய்வதற்கான அடித்தளமாக அமைந்திருந்தது. வாழ்வின் வசந்த காலத்திற்கான துவக்கப் பள்ளி 02.05.1986.

ஆனால்

02.05.2025????

முதல் நாள் மே தினம். அன்றைக்கு மே தினப் பொதுக்கூட்டத்தில் குறைவான எண்ணிக்கையில்தான் தோழர்கள் பேசினார்கள். நானும் அவர்களில் ஒருவன். எனக்கே என் உரை நிறைவாக இருந்தது. பல தோழர்கள் பாராட்டினார்கள். இரு சக்கர வாகனத்தை கிளப்பும் போது ஒரு போலீஸ்காரர் "நல்லா பேசினீங்க சார்" என்று கை கொடுத்தார். மறுநாள் காத்திருக்கும் அபாயம் தெரியாமல் வீடு வந்து சேர்ந்தேன்.

மறு நாள் அலுவலகம் செல்லும் வழியில் எப்போதும் போல நிதானமாக சாலையின் ஓரத்தில்தான் இரு சக்கரஃ வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன்பாக பின்னே வந்து கொண்டிருந்த ஒரு வேன் மோதியது. சற்று சுதாரிப்பதற்கு முன்பாக இரண்டாவது முறையாகவும் மோத ஸ்கூட்டர் ஒரு புறம் கீழே விழ, நான் உருண்டு கொண்டும், சருக்கிக் கொண்டும் செல்கிறேன். நம் கதை இத்தோடு முடிந்தது என்று அந்த நொடியில் நினைத்தேன்.

இடது பக்கத்தில் உருண்டதற்கு பதிலாக வலது பக்கம் உருண்டிருந்தால் நிஜமாகவே கதை முடிந்திருக்கும்.   வாழ்க்கைக்கும் சரி, சாலைக்கும் சரி இடதே பாதுகாப்பு.

என் பின்னாடியே வந்து கொண்டிருந்த கோட்ட அலுவலகக் கிளைச்சங்கத் தலைவர் தோழர் ஜெயகாந்தம் மற்ற தோழர்களுக்கு தகவல் சொல்ல அப்படியே ஒரு காரில் தூக்கி வைத்து நறுவி மருத்துவமனையில் சேர்த்தார்கள். பேண்டும் சட்டையும் கிழிந்து போயிருந்தது. முழங்காலில் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. இடுப்பிலும் தோளிலும் தாங்க முடியாத வலி.

மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சரில் மாற்றியது, பின்பு ஸ்கேன் செய்ய, எக்ஸ்ரே எடுக்க என ஸ்ட்ரெச்சரிலிருந்து மேஜைக்கு மாற்றி பின்பு ஸ்டெரெச்சருக்கு மாற்றியது எல்லாம் மரண அவஸ்தையாக இருந்தது. இடுப்பு எலும்பு முறிவு, காலர் எலும்பு நொறுங்கி விட்டது என்பது சோதனைகளின் முடிவு. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். அறுவை சிகிச்சை காரணமாக கதீட்டர் வைத்து சிறுநீர் பை வைக்க முடிவு செய்தார்கள். கதீட்டர் நுழைப்பதில் பிரச்சினை இருந்ததால் ஒரு மைனர் அறுவை சிகிச்சையும் நடந்தது. 

ஒரு வழியாக மறுநாள் 03.05.2025 அன்று அறுவை சிகிச்சை நடந்தது. காலர் எலும்பிற்கு பதிலாக ப்ளேட் வைக்கப்பட்டது. இடுப்பு எலும்புகளில் மூன்று ஸ்க்ரூ போட்டு முடக்கப்பட்டது. ஆறு நாட்களிலேயே  டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். இந்த காலகட்டத்தில் மருத்துவமனைக்கு வந்து பார்த்த ஏராளமான தோழர்கள் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று நம்பிக்கை அளித்தார்கள்.

டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வருவதற்கு முன்பே மருத்துவமனைக்கான அமைப்பை என் மனைவி வீட்டிலேயே செய்து வைத்திருந்தார். ஒரு செவிலியரையும் ஏற்பாடு செய்திருந்தார். என் மனைவியும் மகனும் அளித்த பராமரிப்பின் காரணமாகவே நாற்பத்தைந்து நாட்களில் வாக்கர் துணையுடன் அலுவலகம் செல்ல முடிந்தது. பணி ஓய்வு நாளன்று ஸ்ட்ரெச்சரிலோ அல்லது வீல் சேரிலோ அலுவலகம் செல்ல வேண்டியிருக்குமோ என்று அச்சப்பட்டதற்கு மாறாக வாக்கர் துணையுடன் நடந்து செல்ல முடிந்தது.

ஆனால் பாதிப்புக்கள் இன்னும் தொடர்கிறது. காலர் போன் வைத்ததால் தசை இறுகிப் போய் அவ்வப்போது வலி எட்டிப்பார்க்கிறது. அதன் காரணமாக இரு சக்கர வாகனம் ஓட்டக்கூடாது என்றும் இடுப்பில் ஸ்க்ரூக்கள் இருப்பதால் பின்னேயும் உட்காரக்கூடாது என்றி மருத்துவர் சொல்லி விட்டார். அதனால் 02.05.2025 க்குப் பிறகு வேன் ஓட்டுனர் முனீஷ்காந்த் புண்ணியத்தில் இரு சக்கர வாகனத்தைப் பற்றி நினைக்கவே முடியவில்லை.

ஆனாலும் அவசியமான பணிகளுக்கு ஆட்டோவில் செல்கிறேன். நேற்று கூட மே தினக் கொடியேற்று விழாவிற்கும் எங்கள் அலுவலகத்திலிருந்து பொதுக்கூட்டத்திற்கும் ஆட்டோவில்தான் சென்றேன். கூட்டத்தில் பேசி முடித்து விட்டு பின் அமர்ந்திருந்த போது வந்த நினைவலைகள் இங்கே பதிவாக.

விபத்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதை மட்டும்தான் முடக்கியது. மற்ற பணிகளையோ சிந்தனைகளோ அல்ல. எப்போதும் போல் இயங்குவேன் என்ற நம்பிக்கையோடு பயணிக்கிறேன்.



பிகு 1 : மேலே உள்ள படம் 01.11.2025 அன்று நெய்வேலியில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற போது நெய்வேலி அலுவலக வாயிலில் வரையப்பட்டிருந்த கோலம்.

பிகு 2 : நேற்று இரவு தட்டச்சு செய்யப்பட்ட பதிவு. எங்கள் கோட்ட மகளிர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளராக இருக்கிற கோட்டச்சங்க இணைச்செயலாளராக, துணைத்தலைவராக செயல்பட்ட தோழர் எஸ்.ஜெயஸ்ரீ அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்க கடலூர் செல்லும் வழியில் பயணத்தின் நடுவே பகிர்ந்து கொள்கிறேன்.

பயணம் தொடரும். 

Friday, May 1, 2026

தைலாபுரம் தோட்டத்தின் முன்னே - மறக்க நினைத்தாலும் முடியவில்லை.

 சில மோசமான சம்பவங்களை நாம் மறக்க நினைத்தாலும்  முகநூல் நினைவு படுத்திவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் 30.04.2013 அன்று நடைபெற்றது.  01.05.2013 அன்று எழுதிய பதிவை கீழே அளித்துள்ளேன். பாமக கட்சியில் அப்பா-மகன் மோதல் என்பது உட்கட்சிப் பிரச்சினை என்றாலும் ஜாதிவெறியை தூண்டி மக்களுக்கிடையே மோதலை உண்டாக்கியவர்கள் அவர்களுக்குள்ளேயே மோதிக் கொள்கிறார்களே என்பது  அற்ப சந்தோஷத்தை அளித்தது. 

இந்த சம்பவம் வேறொரு நெகிழ்ச்சியான பாடத்தையும் கொடுத்தது. அதனை வேறொரு பதிவில் முன்பே குறிப்பிட்டுள்ளேன்.

இதோ அந்த பாடம்.

அவர் என்னிடம் கடிந்து கொண்ட அனுபவமும் உண்டு. பாமக அராஜகக் கும்பலிடமிருந்து தப்பிய அனுபவத்தை ஏற்கனவே பகிர்ந்துள்ளேன். இந்த ஏப்ரலில் கூட மீள் பதிவு செய்துள்ளேன். தைலாபுரம் தோட்டத்திலிருந்து தப்பித்தவுடன் அந்த நிகழ்வை ஓரிரு வார்த்தைகளில் முகநூலில் பதிவு செய்திருந்தேன். “Take Care” என அங்கே பின்னூட்டம் இட்டு விட்டு உடனடியாக அழைக்கவும் செய்தார். பிறகு இன்னொரு இடத்தில் மரம் வெட்டப்பட்டதால் பயணம் தடைபட்டு விட்டது என்றும் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.அதிகாலை 3 மணிக்கு வீடடைந்து உறங்கியும் விட்டேன்.

 காலை 7 மணிக்கு  தொலைபேசியில் அழைத்த தோழர் சன்யால், எத்தனை மணிக்கு வீட்டிற்கு வந்தேன் என்பதை கேட்டு விட்டு, “பிரச்சினையில் சிக்கிக் கொண்டதை பதிவு போட்ட நீங்கள், ஜாக்கிரதையாக வீடு திரும்பியதை ஏன் எழுதவில்லை, எவ்வளவு கவலையாக இருந்தது தெரியுமா? இனி இது போல செய்யாதீர்கள்என்று உரிமையோடு கண்டிக்க என் தவறு புரிந்தது.

இதிலே குறிப்பிட்டுள்ள அவர் மறைந்த தோழர் பி.சன்யால், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவராக, இணைச்செயலாளராக, மத்திய மண்டலக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த வேகமும் உற்சாகமும் நிறைந்த தலைவர். 

அதன் பின்பான பயணங்களின் போது தைலாபுரம் தோட்டத்தை கடக்கும் போதெல்லாம் தூங்க முயற்சிப்பேன். பெரும்பாலும் முடிவதில்லை.  அங்கே நடந்த சம்பவத்தையும் தாண்டி எனக்கு எரிச்சலூட்டும் விஷயம் கீழே உள்ளது.

பாமகவின் கொள்கைகளுக்கும் செயல்பாட்டிற்கும் கொஞ்சமும் பொருந்தாத அந்த மூவரின் சிலைகள் எதற்கு அங்கே? 



இப்போது பழைய பதிவை பாருங்கள்.


பாமக அராஜகக் கும்பலிடமிருந்து நொடிகளில் உயிர் தப்பினேன், புல்லரிக்கும் நேரடி அனுபவம்


நேற்று காலை நன்றாகவே தொடங்கியது. மாலையில் கடலூரில்  இன்சூரன்ஸ் துறையில்   அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும்  முடிவிற்கு எதிராக பொதுக் கூட்டம். திருவண்ணாமலையிலும்  திருக்கோயிலூரிலும் இரண்டு முன்னணி தோழர்களின் பணி நிறைவு.  வேறு ஒரு கிளையில்   தோழர்களோடு பேச வேண்டிய அவசியம்  இருந்தது.


திருவண்ணாமலையிலும் திருக்கோயிலூரிலும் ஓய்வு பெற்ற
  தோழர்களை வாழ்த்தி சங்கத்தின் சார்பில் கௌரவித்து விட்டு  இன்னொரு கிளையிலும் பணி முடித்து விட்டு கடலூர் உழவர் சந்தை அருகே பொதுக்கூட்டத்திற்கு நேரடியாக ஐந்தரை மணிக்கு வந்தேன். காவலர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. என்னவென்று விசாரித்தால் மருத்துவரை கைது செய்ததால் போடப்பட்டுள்ள பாதுகாப்பு என்றார்கள்.


கூட்டம் சிறப்பாகவே நடந்து முடிந்தது. வேலூர் திரும்ப வேண்டும்.
   எனது சொந்த வாகனத்தில் ஒரு டிரைவரோடு வந்திருந்தேன். புதுவை, திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு சாலை  நன்றாக உள்ளதால் அந்த வழியில் திரும்ப முடிவு செய்தோம்.

புதுச்சேரியிலிருந்து ஒரு இருபது கிலோ மீட்டர் தூரத்திற்கு
   எந்த பிரச்சினையும் இல்லை. மருத்துவரின் தைலாபுரம்  தோட்டம் நெருங்கும் போது பார்த்தால் சாலையில் ஏதோ  எரிந்து கொண்டிருந்தது. கொஞ்சம் வேகத்தை குறைத்து  அருகில் நெருங்கினால் ஒரு இருபது வாலிபர்கள் இருப்பார்கள்.
அவர்கள் எனது காரின் மீது கல்லெறியத் தொடங்கினார்கள்.
தூரம் ஒரு முப்பது நாற்பது அடிதான் இருக்கும். ஒருவன் ஒரு பெரிய பாறையை தூக்கிக் கொண்டு ஓடி வந்தான்.  இருள்  நேரத்திலும் அவன் முகத்தில் பார்த்த வெறியை வாழ்வில்
என்னால் என்றும் மறக்க முடியாது. மற்றவர்களும் காரை
நோக்கி ஓடி வந்தார்கள். அங்கே எரிந்து கொண்டிருந்தது  ஒரு இரு சக்கர வாகனம்.


டிரைவர் திரு வெங்கடேஷ் சமயோசிதமாக ரிவர்ஸ் கியர்
  போட்டு பின்னாலே ஓட்டி வந்தார். நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் ரிவர்ஸ் கியர். நல்ல வேளையாக பின்னால் வேறு எந்த வாகனமும் வரவில்லை. ஒரு அரை கிலோ மீட்டர் சென்ற பின்பு மயிலம் செல்வதற்கான மாற்றுப் பாதை வந்தது.

பாதையின் துவக்கத்தில் இருந்த கிராமத்திலோ திருவிழா
நடந்து கொண்டிருந்தது. வாண வேடிக்கை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். அருகில் நடந்து கொண்டிருந்த அராஜகத்தின் நிழல் அந்த கிராமத்தின் மீது படியவில்லை.

மயிலம் வழியாக திண்டிவனம் வந்தால் மேம்பாலம் அருகே
  ஒரு போர் நடந்ததன்  அடையாளங்களாக கற்களும் கண்ணாடி  துகள்களும் சாலையெங்கும் கிடந்தன. காவலர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப் பட்டிருந்தனர். ஆனால் திண்டிவனம் பஜாரில் எந்த பாதிப்பும் இருந்ததாக தெரியவில்லை. பதினோரு  மணிக்குக் கூட காய்கறி கடைகள் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தன.


சரி இனி எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைத்தால் 
செய்யாறு தாண்டியவுடன் சாலையில் ஒரு இடத்தில் போக்குவரத்து தடைபட்டிருந்தது. பாமக காரர்கள் வழக்கம் போல் மரத்தை வெட்டி சாலையை அடைத்திருந்தார்கள். காவல்துறைக்கு தகவல்  வந்திருந்ததால் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வழி உருவாக்கிக் கொடுத்தார்கள். 

ஆனால் இந்த நிம்மதி நிலைக்கவில்லை. ஒரு பத்து கிலோமீட்டர்
  கடந்திருப்போம். ஆற்காடிற்கு இருபத்தி ஐந்து கிலோ மீட்டர்கள்  முன்பாக மரம் வெட்டிகள் மீண்டும் கைவரிசையை காண்பித்து விட்டார்கள். ஒரே ஒரு கான்ஸ்டபிள் இருந்தார். இப்போதான் சார் வெட்டிட்டு ஓடிட்டாங்க, நான் யதேச்சையா வீடு திரும்பும் போது  பார்த்தேன். ஸ்டேசனுக்கு   சொல்லியிருக்கேன். ஜேசிபி வர நேரமாகும்.  வேறு வழியில் போயிடுங்க என்று வழிகாட்ட ஒரு பத்து கிலோ மீட்டர் சுற்றி ஆற்காடு சாலையையே மீண்டும் பிடித்தோம்

சென்னை- பெங்களூர் நாற்கர சாலையை அடைந்ததும்தான் இனி 
சிக்கல் கிடையாது என்று நம்பிக்கை வந்தது. மரம் வெட்டிகளுக்கு வாய்ப்பு தராமல் சாலை அமைக்கும்போதே எல்லா மரங்களையும் அரசே வெட்டி விட்டது.


பாமக காரர்களுக்கு சில கேள்விகள்.

கைது செய்யப்பட்டது உங்கள் தலைவர். அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ஜாமீன் போடுங்கள், சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகுங்கள். சம்பந்தமே இல்லாதவர்களை தாக்குவது என்ன போராட்ட வடிவம்?


மரக்காணம் கலவரங்கள், தர்மபுரி கலவரங்களுக்கும் உங்களுக்கும்
  எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். தைலாபுரம் தோட்டத்தின் வாசலில் கலவரம் நடத்த மற்ற கட்சிக்காரர்களுக்கோ, ஜாதிக்காரர்களுக்கோ தைரியம் உள்ளதா என்ன?

மரம் வெட்டி என்றால் கோபம் வருகிறது. இப்படி மரத்தை வெட்டி
போக்குவரத்தை தடை செய்பவர்களை வேறு எப்படி அழைப்பது?

உங்கள் குடும்பத்தவர்களே உயிர் போகும் நிலையில் ஆம்புலன்ஸில் சென்றாலும் இப்படித்தான் வழியை அடைப்பீர்களா?
உங்கள் ஐயாவும் சின்னய்யாவும் உயிர் காக்கும் மருத்துவத்தை படித்தார்களா? அல்லது உயிரெடுக்கும் படிப்பா?


குடிக்கக் கற்றுக் கொடுத்து இளைய சமுதாயத்தை கழகங்கள்

சீரழித்துள்ளதாக குற்றம் சுமத்த என்ன யோக்கியதை உங்களுக்கு
உள்ளது? ஜாதிய வெறியையும் வன்முறைக் கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுத்து சீரழிப்பது நீங்கள் அல்லவா?


அசம்பாவிதம் எதுவும் நிகழாததால் என்னால் ப்படி பதிவு  எழுதி கேள்வி கேட்க முடிகிறது. திகிலான அனுபவம் என்று சொல்ல முடிகிறது.

ஏதேனும் நிகழ்ந்திருந்தால்?????????

நாம் வெல்லுவோம், நாம் வெல்லுவோம்

 We shall Overcome என்ற பாடலின் தமிழ் வடிவம் கீழே உள்ளது.  இறுதி வெற்றி என்றும் உழைக்கும் மக்களுக்கே என்ற நம்பிக்கையை அளிக்கும் பாடலை மே தினத்தன்று பகிர்ந்து கொள்வது பொறுத்தமாக இருக்கும்.

கரத்தாலும் கருத்தாலும் உழைக்கும் அனைவருக்கும்

மே தின வாழ்த்துக்கள்.



நாம் வெல்லுவோம் நாம் வெல்லுவோம்

 

நாம் வெல்லுவோம் நாம் வெல்லுவோம்

 

நாம் வெல்லுவோம், நாம் வெல்லுவோம்

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

என் நெஞ்சமெல்லாம்

முழு நம்பிக்கை

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

ஒருவரல்ல,

நாம் ஒருவரல்ல,

நாம் ஒருவரல்ல, இந்நாள்

என் நெஞ்சமெல்லாம்

முழு நம்பிக்கை

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

வாழ்வோம் அமைதியாய்,

வாழ்வோம் அமைதியாய்,

வாழ்வோம் அமைதியாய் ஓர் நாள்

என் நெஞ்சமெல்லாம்

முழு நம்பிக்கை

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

விடுதலை வரும்

விடுதலை வரும்

விடுதலை வரும் உண்மையாய்

என் நெஞ்சமெல்லாம்

முழு நம்பிக்கை

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

அஞ்சவில்லை

நாம் அஞ்சவில்லை

நாம் அஞ்சவில்லை இந்நாள்

என் நெஞ்சமெல்லாம்

முழு நம்பிக்கை

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

நாம் வெல்லுவோம் நாம் வெல்லுவோம்

நாம் வெல்லுவோம் ஓர் நாள்

நாம் வெல்லுவோம் ஓர் நாள்

 


 

Thursday, April 30, 2026

கருத்துக் கணிப்பு எனும் கொசுத்தொல்லை

 


நேற்றைய கருத்துக் கணிப்பு ஆராய்ச்சி முடிவுகளை பார்த்த போது மனதில் தோன்றிய வார்த்தை "கொசுத் தொல்லை"

தேர்தல் நடக்கும் எல்லா மாநிலங்களிலும் ஒரே நாளில் தேர்தலை நடத்தி மறு நாளே வாக்கு எண்ணிக்கையை நடத்தினால் மட்டுமே இந்த கொசுத்தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். 

Wednesday, April 29, 2026

யார் சிறந்த கலைஞர் மோடி?

 


கீழேயுள்ள இரண்டு நொடி காணொளியை அவசியம் பாருங்கள்.


படகில் கஷ்டப்பட்டு உட்கார்ந்து கொண்டு படமெடுக்கிற மோடி சிறந்த புகைப்படக் கலைஞரா?

அவரை அவர் விரும்பும் கோணங்களில் புகைப்படமும் காணொளியும் எடுத்தவர் சிறந்த புகைப்படக் கலைஞரா?

மோடியிடம் வேலை பார்க்கும் புகைப்படக் கலைஞர்கள் வேறு இடங்களில் வேலை பார்க்கப் போனால் மிக நல்ல பெயர் எடுப்பார்கள். மோடியால் அவர்களின் உழைப்பு காமெடியாகி வீணாகி விடுகிறது. 

இதுவும் திமுக சதிதானே விஜய்?

 


சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் சி.சி.டிவி மையம் அமைத்துள்ள ஒப்பந்ததாரரின் பதிவை முகநூலில் யாரோ பகிர்ந்திருந்தார்கள்.


இது மிகப் பெரிய விதி மீறலாயிற்றே! கைது கூட செய்வார்களே என்று நினைத்தேன்.

கைது செய்யப்பட்டு விட்டார் என்று இன்றைய நாளிதழ் செய்தி சொன்னது. பார்க்கும் பணியின் தீவிரத்தன்மை கூட புரியாமல் அதன் விளைவுகளைப் பற்றிக் கூட கவலைப்படாதவர்களாகத்தான் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் இந்த சம்பவம்.

இந்த கைதைக் கூட விஜய்யும் அவர் கட்சி தொண்டர்களும் "என்ன ஸ்டாலின் சார் பயமா? வாக்கு எண்ணும் மையத்திலிருந்து என் கட்சிக்காரரை வெளியே அனுப்ப சதி செய்யறீங்களா?" என்று வீர வஜனம் பேசுவார்களே என்பதுதான் என் கவலை.

Tuesday, April 28, 2026

மாட்டுச்சாணத்திற்கு வெங்காயம் மேல்

 


கோடை வெப்பத்தை சமாளிக்க மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்றை காங்கிரஸ் கட்சியிலிருந்து தன் கோஷ்டியோடு தாவி ம.பி யில் பாஜக அமைச்சகத்தை உருவாக்கிக் கொடுத்தமைக்காக மத்திய அமைச்சர் பதவியென்ற எலும்புத்துண்டை  ருசித்துக் கொண்டிருக்கும் ராஜ வம்சத்து வாரிசு ஜோதிராதித்யா சிந்தியா சொல்லியுள்ளார்.


இப்படி ஒரு சுலபமான வழி இருப்பது தெரியாமல் நான் வீட்டிற்கு ஏ.சி போட்டு பணத்தை விரயம் செய்து விட்டேன்.

கடந்த வருடம் ஒரு கல்லூரி முதல்வர் இன்னொரு அறிவியல் கண்டுபிடிப்பை தன் கல்லூரியில் அமலாக்கினார்.


வகுப்பறைகளின் சுவரில் மாட்டுச்சாணம் பூசினார் அவர். அந்த காலத்தில் வீடுகளின் தரைகளில் சாணி மொழுகினார்களே என்று நியாயப்படுத்தினார்கள் பலர். அவர்கள் எல்லாம் தங்கள் வீட்டின் சுவர்களில் மாட்டுச்சாணத்தை பூசிக் கொண்டார்களா என்பதுதான் தெரியவில்லை.

மாட்டுச்சாண தொழில் நுட்பத்திற்கு வெங்காய தொழில் நுட்பம் பரவாயில்லை என்று தோன்றுகிறது. வெங்காயத்தின் விலை உயர்வு, வெங்காயம் அழுக அழுக புதிதாய் வைப்பது ஆகியவற்றுக்கு ஆகும் செலவு, மாட்டுச்சாண நாற்றத்தில் வாழ்வதை விட மேல். 

வெங்காயத்தை கக்கத்தில் வைத்து காய்ச்சல் வரவழைக்கிற டெக்னிக் எங்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்த வெங்காய விஞ்ஞானி சொல்றதை பிரதமர் அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் ஆகிய இடங்களிலும் அங்கிருப்பவர்களிடமும் சோதித்துப் பார்க்கவும்.

மேலே நீல நிறத்தில் இருப்பது தமுஎகச தலைவர் தோழர் ஆதவன் தீட்சண்யா எழுதிய பதிவு.

என்னுடைய ஆலோசனை மாறானது.

வெங்காய தொழில் நுட்பத்திற்கு மாறாக மாட்டுச்சாண தொழில் நுட்பத்தை மாட்டுக்குண்டர்கள் சூழ் பிரதமர் அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பயன்படுத்துவதுதான் பொருத்தமாக இருக்கும்.

அப்படியென்றால் வெங்காய தொழில் நுட்பத்தை எங்கே பயன்படுத்துவது?

கண்டிப்பாக நிதியமைச்சர் நிர்மலா அம்மையாரின் வீட்டிலும் அலுவலகத்திலும்  . . .

அப்போதாவது அவர் வெங்காயத்தின் அவசியத்தை புரிந்து கொள்வார் என்று எதிர்பார்ப்போம். 

Monday, April 27, 2026

அத்வானி, நிதீஷ்குமார் அடுத்து நாயுடு

 


வளர்த்த கடா மார்பில் பாயும் என்ற பாடத்தை முதலில் அத்வானிக்கு மோடி கற்றுக் கொடுத்தார்.


அந்த பாடத்தை நிதீஷ்குமாருக்கு சாம்ராட் சவுத்ரி கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.


முதல் பாடம் பாஜகவிற்குள்ளேயே நடந்தது.
இரண்டாவது பாடத்தை பாஜக, கூட்டணிக் கட்சிக்கு கற்றுக் கொடுத்தது.

அடுத்த பாடத்தை கற்றுக் கொள்ளப் போகிறவர்

சந்திரபாபு நாயுடு.

நேரடியாக பாஜக உறுப்பினராக இல்லாவிட்டாலும்  ஆர்.எஸ்.எஸ் சங்கிக்கான அத்துணை குணாம்சங்களும் கொண்ட பவன் கல்யாண்தான் அந்த பாடத்தை நாயுடுவிற்கு கற்றுக் கொடுப்பார்.


அது எப்போது என்பதுதான் கேள்வி . . .

மோடி நண்பன் ட்ரம்பை சுட்டுட்டாங்களாம்

 


அமெரிக்கத் தலைநகர் வாஷிங்க்டனில் உள்ள ஒரு விடுதியில் பத்திரிக்கையாளர்களுக்கான விருந்தில் ட்ரம்பை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்ததாம். 

தாக்குதலை நடத்திய டாமஸ் ஆலன் கைவசம் இரண்டு துப்பாக்கிகளும் எண்ணற்ற கத்திகளும் இருந்ததாம். அவன் சுட்டது புல்லட் ப்ரூஃப் உடை அணிந்த ஒரு அதிகாரி மீது பட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையாம்.

அதெப்படி ட்ரம்பின் நண்பன் முதலமைச்சராக இருந்த போது எப்போதெல்லாம் செல்வாக்கு குறைகிறதோ, அப்போதெல்லாம் அவரை கொல்ல தீவிரவாதிகள் வந்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்களோ, அது போலவே ட்ரம்பின் செல்வாக்கு குறையும் போது அவரை கொல்லவும் முயற்சிகள் நடக்கிறது?

ஆயிரக்கணக்கான பாதுகாப்பு சோதனைகளை தாண்டி செல்ல முடிகிற துப்பாக்கி ஏந்திய கொலை காரர்களால் ஏன் இலக்கை நோக்கி கச்சிதமாக சுட முடிவதில்லை?

இதுதான் உதைக்கிறது.

இங்கேயும் அங்கேயும் ...

நாடகம் என்றே நினைக்க வைக்கிறது. 

Sunday, April 26, 2026

கேஜ்ரிவால் பகைத்துக் கொண்ட இருவர்

 


கேஜ்ரிவால் எடுத்த ஒரு முயற்சி அவரை பலி வாங்கும் என்று அச்சப்படுவதாக நேற்று நான் எழுதியிருந்தேன்.

கீழேயுள்ள நியூஸ் கார்டை படியுங்கள்.


ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் அதே நேரம் ஆர்.எஸ்.எஸ் ஸால் காவி மயமாக்கப்பட்ட நீதிபதிகளையும் குறை சொன்னால் விடுவார்களா?

மாநிலங்களவையின் ஏழு எம்.பி க்களோடு பாஜக திருப்தி அடையாது.

பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க இப்போது கட்சி மாறிய கருங்காலிகளை பயன்படுத்தி கலகம் செய்ய கண்டிப்பாக முயற்சி எடுப்பார்கள். இப்போதாவது அரவிந்த் கேஜ்ரிவால் விழித்துக் கொள்ளட்டும். தன்னைப் பற்றிய அதீத மதிப்பீட்டிலிருந்து வெளியே வரட்டும். 


Saturday, April 25, 2026

கட்டை விரல் கவிதையை காப்பியடிக்கும் துரோணர் கூட்டம்

 


தேர்தலுக்கு முன்பாக கவிஞர் பழனிபாரதி முகநூலில் பகிர்ந்து கொண்ட கவிதை கீழே . . .


இந்த கவிதையை பலரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால் ஏகலைவனின் கட்டை விரலை காவு கேட்ட துரோணர் கூட்டத்து வாரிசான பாஜக சங்கி ஒருவரும் அந்த கவிதையை பகிர்ந்து கொண்டு பாஜகவிற்கு ஓட்டு கேட்டதுதான்.




இவர்களுக்கெல்லாம் வெட்கம் என்பது கொஞ்சம் கூட இருக்காதா!


AAP - பிய்ந்த துடைப்பம்


 
அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பத்து பேரில் ஏழு பேர் அங்கிருந்து பாஜகவிற்கு தாவி தங்களை மோடி வாஷிங் மெஷின் மூலமாக புனிதமாக்கிக் கொள்கிறார்கள். 

ஆம் ஆத்மி கட்சி ஊழல் கட்சியாகி விட்டது என்று அவர்கள் குற்றம் சுமத்துவது உண்மையாக இருக்கலாம். அதற்காக அவர்கள் சென்று சேருமிடம் பாஜக என்பதுதான் காமெடியாக இருக்கிறது.

கட்சித்தாவல் தடைச்சட்டம் என்பது இன்னொரு காமெடி.

யாரும் தனியாக கட்சி மாறக்கூடாது. மூன்றில் ஒரு பங்கு ஆட்களோடுதான் கட்சி மாற வேண்டும் என்ற விதி பாஜகவிற்கு மட்டுமே உதவிக் கொண்டிருக்கிறது.

இந்த கட்சித்தாவல் சில உண்மைகளை உணர்த்தி விட்டு போயுள்ளது.

எந்த வித கொள்கையும் இல்லாமல் வெற்று முழக்கங்கள் மூலம் உருவாகும் கட்சி கண்ணாடி போன்றது. எப்போது வேண்டுமானாலும் சர்வ சாதாரணமாக நொறுங்கிப் போகும். எதிர்கால தவெக நிலைக்கு இது ஒரு முன்னோட்டம்.

கொள்கைகள் அற்ற கட்சியின் உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது பாஜகவிற்கு மிகவும் சுலபம் என்று தெரிகிறது.

இப்போது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் எதிர்காலத்தில் பாஜக என்ன செய்யும் என்பதற்கான முன்னோட்டம் இந்த சம்பவம்.

ராகவ் சாதா என்ற அந்த சின்ன பையனுக்கு ராஜ்ய சபை துணைத்தலைவர் பதவி கொடுத்தது கேஜ்ரிவாலின் முதல் தவறு. அதை பறித்த முறை இன்னொரு தவறு. ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபை உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி அங்கே பதவியை பறிப்பதற்கு பதிலாக ராஜ்யசபை தலைவருக்கு கடிதம் அனுப்பியது ஜனநாயக நடைமுறை அல்ல. அப்போதே சிக்கல் வரும் என்று நினைத்தேன். 

அதை விட கேஜ்ரிவால் எடுத்த இன்னொரு முயற்சி அவரை பலி வாங்கும் என்று அச்சப்பட்டேன். அதுதான் நடந்துள்ளது. 

அது என்ன முயற்சி?

நாளை பார்ப்போம். 

Friday, April 24, 2026

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா?



 உலகத்தில் உள்ள,

ஏன் தமிழ்நாட்டில் உள்ள

தமிழர்கள் யாருக்குமே தெரியாத ஊரில்தானா

1972 முதல் 1982 வரை எங்கள் குடும்பம் வாழ்ந்திருந்தது!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா, அழகப்பா ஆரம்பப்பள்ளியில் மூன்றாவது முதல் ஐந்தாவது வரையிலும் அழகப்பா மாதிரி மேல் நிலைப் பள்ளியில் ஆறாவது முதல் எட்டாவது வரையிலும் படித்தேன்!

யாருக்குமே தெரியாத அந்த ஊழில்தான் என் இரண்டு அக்காக்கள் அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் B.ED  படித்தார்கள்! 

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் அவர்கள் இருவரின் திருமணமும் நடந்தது!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் அழகப்பர் கலைக் கல்லூரியில் வள்ளல் அழகப்பர் சிலை திறந்து வைக்க திறந்த ஜீப்பில் வந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை சாலையோரத்தில் நின்று பார்த்தேன்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரிலா 1977 மக்களவைத் தேர்தலின் போதும் சட்டமன்றத் தேர்தலின் போதும் கலைஞர், எம்.ஜி.ஆர், சோ, ஆகியோரின் பொதுக்கூட்டங்களுக்கு என் அப்பா அழைத்துச் சென்றார்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் ஜனதா கட்சியின் மாநாடு நடக்க, அந்த மாநாட்டிற்கு வந்த அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், பின்னாளில் அவரைக் கவிழ்த்து பிரதமரான சரண்சிங், பிரதமராகும் கனவில் இருந்த ஜகஜீவன் ராம், பல வருடங்கள் கழித்து வி.பி,.சிங்கை கவிழ்த்து பிரதமரான சந்திரசேகர் ஆகியோரை பார்க்க குடும்பத்தோடு சென்றோம்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா ராமவிலாசம், அருணாச்சலா, நடராஜா, நியூ சினிமா ஆகிய தியேட்டர்களில் குடும்பத்துடனும் பின்பு நண்பர்களோடும் தனியாகவும் திரைப்படங்களை பார்க்கப் போயிருந்தேன்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் பூச்சொரிதல் விழாவின் போது அங்கங்கே இசை நிகழ்ச்சிகள் நடக்கும்! கொப்புடையம்மன் கோயில் பக்கத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஐயப்பன் பாடல்கள் புகழ் கே.வீரமணி, பைலட் பிரேம்நாத் படத்தில் வரும் "ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்?" பாடலை டி.எம்.எஸ் ஸை விட கொடூரமாக பாட  நண்பர்கள் நாங்கள் தெறித்து ஓடி வந்தோமே! 

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானே சுப்ரமணியபுரம் ஒன்பதாவது வீதியில் நாங்கள் வசித்த வீட்டிற்கு எதிர் வரிசை வீட்டில் ஒரு குடும்பத்தை வசிக்க வைத்திருந்த நெடிதுயர்ந்த உருவம் கொண்ட கவியரசு கண்ணதாசன், காலை வேளையில் அந்த மனைவியின் கரம் கோர்த்து நடைப் பயிற்சி செய்வதை பார்த்து பிரமித்துள்ளேனே!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா கோடைக்காலத்தில் நடைபெறும் ராமாயண, மகாபாரத உபன்யாசங்களை கேட்டிருக்கிறேன்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான், உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆர் தொப்பியும் பஞ்சு மிட்டாய் கலரில் சட்டையும் பச்சை கலர் பேண்டும் , கிட்டத்தட்ட எப்போதுமே அதே விந்தையான கலர் காம்பினேஷனில் உடை அணிந்து எங்கள் நண்பர்கள் குழாமால் காமெடியனாக கருதப்பட்ட  அந்த பயிற்சிக் கல்லூரி விளையாட்டுத்துறை ஆசிரியர் ஹரிஹர சர்மா (இந்நாள் கலவர சங்கி எச்.ராசாவின் தந்தை) சைக்கிளில் உலவியது நினைவில் உள்ளதே!

யாருக்குமே தெரியாத  அந்த ஊரில்தானே அரச நர்த்தகியாக இருந்த சொர்ணமுகியின் நடனத்தையும் குறிப்பாக பாம்பு நடனத்தையும் கங்கை அமரன், எஸ்.பி.பி இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்துள்ளேனே!

யாருக்குமே தெரியாத அந்த ஊரை காலி செய்து விட்டு நெய்வேலி புறப்படும் நாளின் முதல் நாளன்று நண்பன் பி.ரமேஷுடன் "ஆனந்த ராகம்" திரைப்படம் பார்த்து விட்டு சோகமாக வந்ததன் காரணம், திரைப்படம் கொடுத்த சோகமா இல்லை ஊரை பிரியும் சோகமா என்று இன்று வரை புரியாமல் இருக்கிறதே!

சரி, மேலே சொன்னதெல்லாம் சொந்தக்கதை.

இனி பொது விஷயங்களுக்கு வருவோம்.

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா 1948 லேயே பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (Central Electro Chemical Research Institute,) ஐ துவக்கினார்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் வள்ளல் அழகப்பர், கலைக்கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளி ஆகியவற்றை உருவாக்கி இன்று  பல்கலைக்கழகமாக உருவெடுக்க வைத்தார்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் 1977 சட்டமன்றத்  தேர்தலில் அதிமுகவின் பொ.காளியப்பனிடம் பின்னாளில் நிதியமைச்சரான ப.சிதம்பரம் 450 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போக, ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பல கட்சி மாறிய பழ.கருப்பையா தோற்றுப் போனதும் நடந்ததே!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் 1939 லேயே கம்பன் அடிப் பொடி சா.கணேசன், கம்பன் விழாவை நடத்தத் தொடங்கினார்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரை, தோற்பதற்காகவே இந்த வருடம் சட்டமன்றத் தேர்தலில் நின்று பிரபலமாக்கிய சீமான் அவர்களுக்கு நன்றி. 

அவர் மட்டும் சொல்லாவிட்டால் யாருக்குமே அந்த ஊரைப் பற்றி தெரிந்திருக்காது. 

ஆமாம்.

யாருக்குமே தெரியாத அந்த ஊரின் பெயர் காரைக்குடி,

காரைக்குடி என்றொரு ஊர் இருப்பதே இப்போதுதான் மக்களுக்கு தெரிந்துள்ளது.

நன்றி சீமான் அவர்களே!

அடுத்த முறை எங்கள் வேலூரில் நின்று தோற்று எங்களூரையும் பிரபலமாக்கவும்.