Tuesday, May 31, 2011

சுடுகாட்டில் குடியேறிய தலித் மக்கள்

வேலூர் வட்டத்தில்  வேலூரிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இலவம்பாடி புளிமேடு காலனி.  அங்கே  உள்ள மக்களுக்கு 
சொந்தமானது  மாரியம்மன் கோயில். மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமாக நான்கரை சென்ட் நிலம். அந்த நிலத்தை கோயிலுக்கு 
அருகாமையில்  உள்ள ஒரு குடும்பம் ஆக்கிரமிப்பு  செய்து விட்டது. 


கோயிலுக்கு பின் உள்ள இடத்தையோ,  பக்கத்தில்  உள்ள இடத்தையோ
ஊர் மக்கள் பயன்படுத்த அக்குடும்பம் அனுமதிக்கவில்லை. பொங்கல் வைக்க அல்ல, கற்பூரம் கொளுத்தக் கூட அனுமதி கிடைக்காது. மீறி
பொங்கல் வைத்த போது  பானைகளை உடைத்து தாக்கி விட்டார்கள். 

 முப்பது ஆண்டுகளாக இக்கொடுமை தொடர்கிறதாம். காவல்துறையும்,
அரசு நிர்வாகமும் அக்குடும்பத்திற்கு  ஆதரவாக இருப்பதால் வெறுத்துப் 
போய் இந்த ஊரே இனி தேவையில்லை என்று சுடுகாட்டில் போய் 
குடியேறி விட்டார்கள். 

செய்தியறிந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 
அக்கிராமம் சென்று  அம்மக்களை  சந்தித்தோம்.  மாநில துணைத்தலைவர் முன்னாள் குடியாத்தம் எம்.எல்.ஏ  தோழர் ஜி.லதா
அவர்கள் தலைமையில் சென்றோம். 

தாசில்தார்  முதல் நாள் வந்து பேசி விட்டுப் போன பின்னணியில் 
அவர்கள் வீடுகளுக்கு திரும்பியிருந்தனர்.  அவர்களின் கோரிக்கை மிகவும்  எளிமையானது. கோயில் ஊருக்கு சொந்தம். நிலம் கோயிலுக்கு
சொந்தம். அதை ஒருவர் அபகரிப்பது  நியாயமா? 
இதிலே கொடுமையானது  என்னவென்றால் தாக்கப்பட்ட மக்களும் சரி,
தாக்கும்  குடும்பமும் சரி, எல்லோருமே தலித் மக்கள்தான். பணமும்
அரசியல் பின்புலமும்  கிடைத்தால்  ஆதிக்க வெறியும் தானாகவே 
வரும் போல. கோயிலுக்கு பின் உள்ள இடம் சாணிக்கிடங்காக 
மாற்றப்பட்டுள்ளது.  இதுதான் கடவுளுக்கு மரியாதை போல.


மாவட்ட ஆட்சியர்  பொறுப்பில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலரிடம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இப்பிரச்சினை  எடுத்துச்செல்லப் 
பட்டுள்ளது. நிலத்தை அளந்து மீட்டுத் தருவதாக அவரும் உறுதியளித்துள்ளார்.  


ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதிகாரிகளின் அணுகுமுறையில்  
மாற்றம் ஏற்பட்டுள்ளதா  என்று பொறுத்திருந்து பார்ப்போம்.  


 
Monday, May 30, 2011

தந்தைகளுக்கு ஒரு எச்சரிக்கை

ரிசல்ட் 

முயற்சி செய்திருந்தால் 
மூன்று மார்க் 
கிடைத்திருக்காதா? 
செண்டத்தை
கோட்டை விட்ட
மகனிடம் 
கடிந்து கொண்டார் 
ஜஸ்ட் பாஸில்
படிப்பை முடித்த
தந்தை .....  


            - - - கவிதைக்கு சொந்தக்காரர் 
                   மதுரை பாரதி  என்ற 
                   சி.சந்திரசேகரன்.  

சிரிப்பா சிரிக்காதீங்க !

இன்று வந்த மின்னஞ்சல்  படங்கள்.
சிரிப்பதோடு நின்று விடாதீர்கள். 
சிந்திக்க  வேண்டிய விஷயங்களுக்காக
சில  வினாடிகளையாவது
செலவிடுங்க. 
 

Sunday, May 29, 2011

பெண்களின் ராஜ்ஜியம் நடக்கிறதாம்! என்ன ஒரு அயோக்கியத்தனம்!
தமிழகத்தில்  அம்மா - ஜெயலலிதா

உத்தர பிரதேசத்தில் பெஹன்ஜி - மாயாவதி

மேற்கு வங்கத்தில் தீதி  - மம்தா

டெல்லியில்  ஆண்டி -  ஷீலா தீட்சித்

மத்தியில்  மேடம்  - சோனியா காந்தி

உச்சத்தில்  நானி - பிரதீபா படீல்

வீட்டில் மனைவி 

இனியும் நடப்பது  ஆண்களின் ராஜ்ஜியம்  என்று  சொல்லாதீர்கள்! 


இது  இப்போது பரபரப்பாக  உலாவிக் கொண்டிருக்கிற  ஒரு மின்னஞ்சல். 
உண்மையிலேயே  பெண்களின்  ஆட்சி வந்து விட்டதா? அந்த கேள்விக்கு 
சொல்வதற்கு முன்பாக  மேலே  சொல்லபபட்டவர்களைப்  பற்றி
பார்ப்போம். 

இதிலே  யாரெல்லாம்  தங்கள்  சுயத்தில்  முன்னுக்கு வந்தவர்கள்? 

பிரதீபா படீல் முதல் சுற்றிலேயே  அடிபட்டுப் போய் விடுவார். 


நேரு குடும்பம்  என்ற பிம்பத்தை பாதுகாக்க,  ராஜீவ் காந்தியின் கொடூர 
மரணம்  உருவாக்கியுள்ள  அனுதாபத்தை  தொடர்ந்து தக்க வைக்க, 
தலைமைப் பொறுப்பில் முன்னிறுத்தப்பட்டவர் சொக்கத்தங்கம் என்று 
முன்பு கலைஞரால்  வர்ணிக்கப்பட்ட சோனியா காந்தி.   


காங்கிரசின் கோஷ்டிக் கலாசாரத்தில்  வலுவான காலை வாருபவர் 
இன்னும்  வராததால் பிழைத்திருப்பவர் ஷீலா தீட்சித். 


எம்.ஜி.ஆரும்  கன்ஷி ராமும்  உருவாக்கித்தந்த  அடித்தளத்தை  இறுக்கமாக  பற்றிக் கொண்டு முன்னேறியவர்கள்  ஜெயலலிதாவும்,
மாயாவதியும்.   ஆனால்  அவர்கள்  நிலைத்து நிற்பது என்னமோ சுயமான
செல்வாக்கால்தான். 

சந்தர்ப்பவாத, வன்முறை, எதிர்மறை, பொய்ப்பிரச்சார அரசியலால் மட்டுமே  முன்னுக்கு வந்து கலவர அரசியலினை உருவாக்கி ஆட்சியை 
கைப்பற்றியவர் மம்தா. அழிவு பூர்வ அரசியல்வாதி அவர். 


நாடாளுமன்ற சபாநாயகர்  மீரா குமாரை  மின்னஞ்சல் பிரம்மாக்கள் ஏன்
மறந்து விட்டனர்  என்று தெரிவியவில்லை.   


இந்த மின்னஞ்சலுக்கு  உண்மையிலேயே  ஒரு உள்நோக்கம் உள்ளது. 
இவ்வளவு தூரம் வந்து விட்டோம்,  இனிமேல்  தனியாக  33 % இட ஒதுக்கீடு  என்று தனியாக  நமக்கு தேவையா  என்று  பெண்களையே நினைக்க வைக்கிற விஷமத்தனமான  வேலை. 


 சமீபத்திய  மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்திய மக்கட்தொகையில்  பெண்கள்   51 .54     % உள்ளனர்.  அனைத்து  தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசியல்  பதவிகளிலும்  அதே அளவு இருந்தால் கூட  பெண்கள் ராஜ்ஜியம்  என்று சொல்ல முடியாது. 


ஆண்களை விட அதிகமான பெண் பிரதிநிதிகள்  அனைத்து அரசியல் 
சாசன பதவிகள் நாடாளுமன்றம் தொடங்கி  கிராமப் பஞ்சாயத்து வரை
இருந்தால் வேண்டுமானால்  பெண்களின் ராஜ்ஜியம்தான் நடக்கிறது 
என்பதை  ஒப்புக் கொள்ளலாம். ஆனால்  அப்படியா உள்ளது உண்மையான  நிலை? 


இந்தியாவில்  இது வரை தற்போதைய  பதினைந்தாவது மக்களவை வரை 
8303  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிலே 
பெண்களின்  எண்ணிக்கை  என்பது  559 மட்டும்தான்.  அதாவது  வெறும் 
6 .8    %  மட்டுமே. 


33 %   இட ஒதுக்கீடு  அமுலில் இருந்தால்  தற்போதைய மக்களவையில் 178  பெண் உறுப்பினர்கள்  இருந்திருப்பார்கள்.  ஆனால்  இப்போது இருப்பது   என்னவோ  வெறும் 59  மட்டும்தான்.அதாவது 10 .8 % மட்டுமே.  15  வது மக்களவையில்தான்  அதிகபட்சமாக  59  பெண் உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கு முந்தைய மக்களவையில் இன்னும் குறைவு. 


1977 ல் அமைக்கப்பட்ட ஆறாவது மக்களவையில்தான்  மிகக் குறைவாக
21  பெண் உறுப்பினர்கள்  இருந்திருக்கின்றனர். மேலும் ஒரு நான்கு 
மக்களவைகளில்  இருந்த பெண் உறுப்பினர்கள்  நிலை முப்பதிற்கும் 
குறைவு.  சட்ட மன்றங்களில்  நிலைமை  இன்னும் மோசம். இப்போது 
சொல்லுங்கள்!  பெண்களின் ராஜ்ஜியமா நடக்கிறது. 


உலக  அளவில்  சில நாடுகளின் நிலை பரவாயில்லை  என்று சொல்ல முடியும். ருவாண்டாவில்  மட்டும் பெண்களின் பிரதிநிதித்துவம்  ஐம்பது 
சதவிகிதத்திற்கும்  மேல்.  56 .3  %. ஸ்வீடன், கியூபா, தென் ஆப்பிரிக்கா,
ஐஸ்லாந்து, நெதர்லாந்து, ஃ பின்லாந்து ஆகிய ஆறு நாடுகளில்  நாற்பது
சதவிகிதத்திற்கும்  மேல். பதினேழு நாடுகளில் முப்பது சதவிகிதத்திற்கு
மேலும். நாற்பத்தியேழு நாடுகளில்  இருபது சதவிகிதத்திற்கு  மேலும்
உள்ளனர். 

 
ஒரு முறை மகளிர் மசோதாவை  நிறைவேற்ற வேண்டும் என்று  வலியுறுத்துகின்ற   மனு ஒன்றை  வேலூர் மக்களவை உறுப்பினராக 
இருந்த திரு  காதர் மொய்தீன்   ( அவர் பெயரே  சட்டென்று நினைவிற்கு  வரவில்லை. தொகுதிப்பக்கம்  அவ்வப்போது வந்திருந்தால்தானே  நினைவுக்கு   வந்திருக்கும்!)    சொன்னது நினைவிற்கு  வருகின்றது."மகளிர் மசோதா வந்து விட்டால்  பல ஆண்களுக்கு  மீண்டும் வாய்ப்பு 
கிடையாது. லாலு ராப்ரி தேவியை  முதல்வராக்கியது  போல எல்லா 
எம்பிக்களாலும்  தங்கள் குடும்ப உறுப்பினர்களை  எம்பி யாக்க முடியாது. 
ஆகவே பழம் தின்று  கோட்டை போட்ட பெரும்பாலான ஆண் எம்பிக்கள் 
ஏதாவது முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள் " என்றார் 
திரு காதர் மொய்தீன்.  
உண்மைதான். அதனால்தான் 12 .09 .1996  அன்று  அறிமுகமான மகளிர் 
மசோதா ராஜ்யசபாவில் பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 09 . 03 . 2010  அன்று  நிறைவேறியது.  மக்களவையில் எப்போது நிறைவேறி எப்போது சட்டமாகி எப்போது அமுலாவது? இப்படியெல்லாம் உண்மை நிலை இருக்கையில்  பெண்கள் ராஜ்ஜியம் வந்து விட்டதாய் கூறுவது  அப்பட்டமான  ஆணாதிக்கவாதம், அயோக்கியத்தனம்.
 

Saturday, May 28, 2011

அழகை பாதுகாக்க அற்புத ஆலோசனைகள் பரபரப்பாக  சூப்பர் ஷாப்பிங் மாலுக்குள்  நுழைந்து கொண்டிருந்தேன். அப்போது  நாற்பது வயதுப் பெண்மணி ஒருத்தி  வழி மறித்து  மேடம்
சாப்பிட்டு இரண்டு நாளாச்சு, ஒரு அம்பது ரூபா கொடுத்தா  வயிறு 
ரொம்ப சாப்பிடுவேன்  என்றாள்.


அவளை கொஞ்சம் மேலும் கீழுமாய் பார்த்தேன். கிட்டத்தட்ட  அவளுக்கும்
என் வயசுதான்  இருக்கும், ஆனாலும் வறுமையில் வாடிப் போன தேகம், 
குளித்தும் இரண்டு நாளாயிருக்குமோ  என்ற சந்தேகம்  அவளது புடவையை  பார்க்கும் போதும், மெலிதாக வந்த நெடியிலிருந்தும் தோன்றியது. தலைமுடி எண்ணெய்  பட்டு பல நாள் கடந்திருக்கும் போல,
அவ்வளவு  செம்பட்டையாக  இருந்தது.  


என்ன மேடம்  யோசிக்கிறீங்க, நானும்  ஒரு காலத்துல உங்களைப் போல
இந்த இடங்களுக்கு ஷாப்பிங் வந்தவதான். எதோ விதி, இன்னிக்கு ஒரு 
வேளை  சாப்பாட்டுக்கு கூட கையேந்த வேண்டிய நிலை வந்திருச்சு என்றாள்.


பர்சைத் திறந்து பார்த்தேன்.  நூறு ரூபாய் நோட்டுக்களாக  இருந்தது.  ஒரு  நோட்டை  கையிலெடுத்து  அவளிடம் அளிக்க கையை நீட்டினேன். 


திடீரென  ஒரு சந்தேகம் வந்து  கையை  மடக்கி  சற்று  உன்னிப்பாக 
அவளை  கவனித்தேன்.  அவளது முகத்தில்  எரிச்சல் படர்வதைப் 
பார்த்து  ஒரு அடி பின்னே  சென்று  முதல் கேள்வியை  கேட்டேன். 


இந்த நூறு ரூபாய்க்கு  நீ சாப்பாடுதான் சாப்பிடுவியா இல்ல சாக்லேட் 
வாங்கிடுவியா? 


ஏம்மா  சாக்லேட் சாப்பிட்டா என் பசி அடங்கிடுமா?  என எதிர் கேள்வி 
கேட்டாள்  


ஐஸ்கிரீம் கூட வாங்க மாட்டியா ? இது அடுத்த கேள்வி 


அவளின் பதிலும் கூட " ஐஸ்கிரீம் சாப்பிடற நிலையிலா நான் இருக்கேன்" என்று  கேள்வியாகவே  வந்தது.  அதெல்லாம் சாப்பிட்டு 
பத்து வருஷம் ஆச்சு  என்று இன்னொரு  பதிலையும்  சொன்னாள்.


ஷாப்பிங் மால் வாசலில நிற்கிற, ஏதாவது பர்சேஸ் செய்வியா 
சளைக்காமல்  அடுத்த கேள்வியை கேட்டேன். 


சலிப்போடு பதில் சொன்னாள் " இந்த நூறு ரூபாய்க்கு  இந்த மாலிலா?" 


கடைசியாகக் கேட்டேன்,"  பியூட்டி பார்லர் போய் முடிய அலங்காரம் 
செய்துக்குவியா"  என்று.
எரிச்சல் போங்க சூடாக பதில் வந்தது.
 
"அந்த பக்கம் கால் வைச்சும் பத்து வருஷம் ஆச்சு. "

அடுத்த கேள்வி கேட்டால்  போம்மா, நீயும் உன் காசும் என்று முகத்தில் 
அடித்தது போல் சொல்லி விடுவாள்  என்று அச்சமாக இருந்ததால்
அவசரம் அவசரமாக சொன்னேன்.  

" இரு என் கணவரை  வரச்சொல்றேன்.  நீ, நான், அவர் மூணு பேருமே 
ஹோட்டல் போய் சாப்பிடலாம் " என்றேன். 

அவர் என்னைப் பார்த்தா  கடுப்பாக மாட்டாரா என்று கேட்டாள்.

நான் நிதானமாக  பதில் சொன்னேன். 

"சாக்லேட் சாப்பிடாத, ஐஸ்கிரீம் சாப்பிடாத, ஷாப்பிங் போகாத,
பியூட்டி பார்லர் போகாத ஒரு பொண்ணு  எப்படி  இருப்பா  என்று 
அவர் கண்டிப்பா பார்க்கனும்"

கண்டிப்பாக படிக்க வேண்டிய பின் குறிப்பு

ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சலை தமிழாக்கியுள்ளேன். அவ்வளவுதான்.  பெண்கள் அதிக செலவு செய்கின்றார்கள்  என்று  சொல்லப்படுகின்ற  கருத்துக்களில்  எனக்கு கண்டிப்பாக உடன்பாடில்லை. பெண்கள் கையில் 
ஏற்கனவே ஆட்சி வந்து விட்டது  என்பது போல இன்னொரு விஷமப் 
பிரச்சாரம்  நடைபெறுகின்றது.  அது பற்றி  நாளை.  

Friday, May 27, 2011

ஜாதிய வெறியில் பணி நீக்கம் செய்யப்பட்ட தலித் நீதிபதிகள்

இந்தக் கொடுமை சட்டிஸ்கர் மாநிலத்தில்  நடந்துள்ளது. மாவட்ட துணை 
நீதிபதிகள் மட்டத்தில்  பதினேழு பேர்  கட்டாய ஒய்வு கொடுத்து அனுப்பி 
வைக்கப்பட்டுள்ளனர்.  பதினேழு பேரில்  மூன்று பேர் தாழ்த்தப்பட்ட 
சமுதாயத்தையும்  பதினான்கு பேர் பழங்குடி இனத்தையும் சேர்ந்தவர்கள். 
சட்டிஸ்கர் உயர் நீதி மன்றம் கூறியபடி மாநில சட்ட வாரியம் பரிந்துரைக்க பாஜக அரசு இந்த பதினேழு பேரையும்  கட்டாய ஒய்வு 
என்ற பெயரில் பணி நீக்கம் செய்துள்ளது.  


இந்த நடவடிக்கைக்கு  என்ன காரணம்? 
இவர்களின்  செயல்பாடு திருப்திகரமாக  இல்லை  என்று  சொல்லி  பதவியை  பறித்துள்ளனர்.  இவர்களில் பலருக்கும் ஐந்தாண்டுக்கும் 
மேற்பட்ட பணிககாலம்  உள்ளது.  சிலர்  சமீபத்தில்தான்  பதவி உயர்வு 
பெற்றார்கள். 


பதவி உயர்வு அளிக்கும் போது  தகுதியாக  இருந்த நாங்கள்  எப்படி 
திடீரென்று  தகுதி இல்லாதவர்களாக  மாறினோம்  என்று நியாயமாகவே 
கேட்கிறார்கள். ஆனால் பதில்தான் கிடைக்கவில்லை. 


இதிலே மேலும்  ஒரு கொடுமை என்னவென்றால்  இந்த பதினேழு பேரையும்  தவிர  வேறு  யாரும்  பணி நீக்கம் செய்யப்படவில்லை. 
அப்படிஎன்றால்  தலித் நீதிபதிகளைத் தவிர மற்ற ஜாதி நீதிபதிகள் 
எல்லாம் மிகச்சரியாக  பணி செய்வதாய்  சட்டிஸ்கர் உயர் நீதி மன்றமும் 
மாநில பாஜக அரசும்  கருதுகின்றது போலும்! 


பாஜக  ஆட்சிக்காலத்தில்  நீதித்துறை  காவிமயமாகி  விட்டது  என்ற 
குற்றச்சாட்டை  இந்த பணி நீக்கங்கள்  நிரூபித்து விட்டது.  இதிலே 
சட்டிஸ்கர் உயர்நீதி மன்றத்தின்  திறமை பினாயக் சென் விவகாரத்திலேயே  பல்லிளித்து விட்டது  என்பதை யாரும் மறந்திருக்க
முடியாது. 
அப்பட்டமான  ஜாதிய வெறியால் மட்டுமே  நிகழ்ந்துள்ள  இந்த 
பணி நீக்கங்களை  கண்டிப்போம்.  அவர்களை மீண்டும் பணியில் 
அமர்த்தச்சொல்லி  சட்டிஸ்கர் மாநில அரசை வலியுறுத்துவோம். 
கடிதங்கள் அனுப்புவோம், தந்திகள் அனுப்புவோம், நம்மால் 
என்னவெல்லாம் இயலுமோ  அனைத்தையும்  செய்வோம்.  

Thursday, May 26, 2011

பாருங்கள், பாராட்டுங்கள்
இவை இன்று எனக்கு மின்னஞ்சலில்  வந்த படங்கள்.  எதோ புகைப்படம்
போல இந்த ஓவியங்கள்  தத்ரூபமாக உள்ளதல்லவா?  இவற்றை 
வரைந்த அந்த கலைஞன் யாரென்று  தெரியவில்லை.  யாராக இருந்தாலும்  எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். நீங்களும் 
பாராட்டுவீர்கள்தானே! அந்த கலைஞன் யார் என்று தெரிந்தால்
சொல்லுங்களேன்....
 

Wednesday, May 25, 2011

அட்ராட்ரா! நாக்கு முக்க!!

தமிழக அரசின் வேலை கிடைத்தது 

நாவன்மையால் அல்ல,

நா (இன்) வின்மையால் .... 

குவிந்தன சான்றிதழ்களோடு 

 அறுபட்ட  நாக்குகளும் 

 எம்ப்ளாய்ன்மென்ட்   எக்ஸ்சேஞ்சில் ..... 

 ****************************************
கவிதைக்கு  சொந்தக்காரர் 
தோழர் சி. சந்திரசேகரன்,
துணைத்தலைவர்,
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
மதுரைக் கோட்டம் 

கலைஞரை பார்த்தால் பாவமாகத்தான் உள்ளது

  ஆட்சியை மிக மோசமான முறையில் பறிகொடுத்த கலைஞருக்கு உடனடியாக வந்த சோதனை கனிமொழியின் கைது. மந்திரி பதவி வேண்டும்  என்று முன்பு தள்ளாத வயதிலும் டெல்லி சென்றவர் , இப்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகளைப் பார்க்க இன்னும் சோகத்தோடு டெல்லி சென்றார் .

    அடுத்த சோகம் பேரன் தயாநிதி மாறன் வடிவில் வந்துள்ளது.குடும்பச் சண்டையில் ஒதுக்கி வைக்கப்பட்ட நேரத்தில் விரக்தியின் உச்சத்தில் தயாநிதி மாறன் அமெரிக்க தூதரக அதிகாரியிடம் புலம்பியது விக்கி லீக்ஸ் வாயிலாக ஹிந்து பத்திரிக்கையில் அம்பலமாகியுள்ளது. 

     இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம் தேவையற்றது ,ஆட்சியில்    ஊழல் அதிகமாகி விட்டது , இலங்கை பிரச்சனைக்காக எம்பிக்கள் ராஜினாமா என்பது மின்வெட்டு பிரச்சனையை சமாளிக்க செய்த நாடகம் , உண்ணா விரதமும் நாடகம் , அதனால் திமுக மீது சோனியா கசப்பாக உள்ளார் .......

          இது எல்லாம் தயாநிதி மாறன் உதிர்த்த முத்துக்கள். எதிர் கட்சிகள் இதே குற்றச் சாட்டுகளை சொன்னால் ஜாதிய முலாம் பூசும் கலைஞரால் பேரனின் புலம்பல்களுக்கு எதுவும் பதில் சொல்ல முடிய வில்லை.
                              பாவம்    கலைஞர்

Monday, May 23, 2011

பரிதவிக்கும் பால்கார முனியம்மா செய்த தவறென்ன? நல்ல காங்கிரஸ் கலாச்சாரம் இது!
இன்றைய ஆங்கில நாளிதழ் ஒன்றில் படித்த விஷயம் இது. கோட்ட மேலாளரோடு  பேசுவதற்காக சென்ற போது அவர் அறை முன்பாக 
இருந்த செய்தித்தாள். அது எக்ஸ்பிரஸா அல்லது டைம்ஸ் ஆப் 
இந்தியாவா என்று நினைவில்லை. 

ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய சிவராசனை காட்டிக் கொடுத்ததற்காக  அளிப்பதாக  உறுதி அளிக்கப்பட்ட  பத்து 
லட்சம் ரூபாய்  பரிசுத்தொகையில்   அறுபதாயிரம் மட்டுமே  கொடுத்து
மீதத்தை இன்னமும் கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றார்கள் 
என்பது அவர் குற்றச்சாட்டு. 


பெங்களூரில்  சிவராசனும் கூட்டாளிகளும் தங்கியிருந்த வீட்டைப் 
பற்றியும் பால் ஊற்ற போன போது  அவர்கள் பேசிக்கொண்ட விபரங்கள்
பற்றி கூறியதால்தான் அதிரடிப்படை  வளைத்தது என்று சொல்கின்ற 
பால்கார முனியம்மா பத்து லட்சம் ரூபாய் தருவதாக சொல்லி விட்டு 
ஏமாற்றி விட்டார்களே  என்று புலம்பியுள்ளார். 


காவல் நிலையம், நீதி மன்றம் என்றெல்லாம் அலைந்ததால் தனது 
தொழிலை கவனிக்க முடியவில்லை, மாடுகள் இறந்து போய் விட்டது, 
மகனை காவலர் பணியில் சேர்க்க கேட்கப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய்
லஞ்சத்தை அளிக்க முடியவில்லை, மிரட்டல்கள் வேறெல்லாம் வந்தது
என்றெல்லாம் கூறுகின்ற  அவர்  இறுதியாக பிரியங்கா காந்தி நளினியை
சந்தித்தது பற்றி கூறும் போது சிவராசன் தங்கிய வீட்டை அடையாளம் 
காட்டியதுதான் தான் வாழ்க்கையில் செய்த தவறு என்று முடிக்கிறார்.


இதிலிருந்து தெரிவது ஒன்றுதான். காங்கிரஸ் கட்சிக்கு ராஜீவ் காந்தி
வெறும் ஒரு பிம்பம் மட்டுமே. தேவைக்கு  மட்டுமே பயன்படுத்தக் 
கூடிய பிம்பம் . ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி இலங்கையில்
தமிழ் இனத்தையே அழிப்பார்கள். ஆனால் அக்கொலைக்கு காரணமான
ஆட்களை அடையாளம் காட்டியவருக்கு நியாயமாக அளிக்க வேண்டிய 
பரிசையும் அளிக்க மாட்டார்கள். 
\
இதுதான் காங்கிரஸ் கலாசாரம். 

    

Saturday, May 21, 2011

சற்று நிதானமாக பாருங்கள் சிதம்பரம் ! உங்கள் பெயரும் இருக்கப்போகிறது.இந்தியாவில்  தேடப்படும் ஐம்பது   முக்கியக்   குற்றவாளிகள், தீவிரவாதிகள்  பாகிஸ்தானில்  பதுங்கியிருப்பதாக  உள்துறை 
அமைச்சகம் பாகிஸ்தான் அரசிற்கு பட்டியல் ஒன்றை அளித்தது. 
அதிலே  இருவர்  இந்தியாவில்தான் இருப்பதாக  அம்பலமாகி 
விட்டது.  வாசூல் கமார் கான்  தானேவில்    வீட்டில் இருப்பதாகவும் 
ஃ பெரோஸ் அப்துல் ரஷீத் கான் மும்பையின் சிறைச்சாலையில் 
இருப்பதாகவும்  செய்திகள் வந்துவிட்டது. அவைதான்  உண்மையும் 
கூட. 

அண்டை நாட்டுக்கு  அனுப்பிய   ஒரு பட்டியல், அதுவும் தீவிரவாதிகள் 
குறித்த  ஒன்றை  சரியாக தயாரிக்க துப்பில்லாத  உள்துறை அமைச்சகத்தால்   எந்த பணியைத்தான்  ஒழுங்காக செய்ய முடியும்? 

இந்த தவறை  வைத்துக் கொண்டே  பாகிஸ்தான்  நமக்கு ஆட்டம் 
காட்டி விடாதா?  மற்றவர்கள்  கூட எங்கள் நாட்டில்  இல்லை  என்று 
சொல்வதற்கான வாய்ப்பை  பாகிஸ்தானுக்கு  அளித்து  விட்டார்கள். 

தவறுக்கு வருந்துகின்றோம். ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது 
என்று பசி சொல்லி விட்டார். அவர்கள்  இருவரும் தீவிரவாதிகள்,
அவர்களிடம்  மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை  என்று சொல்லி
விட்டார். 

இந்தியாவில் இருப்பவர்களை  பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் 
கூறியதற்கு , தவறான தகவலை  அளித்ததற்கு  இந்திய மக்களிடம் 
கண்டிப்பாக  அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால்  அந்த நேர்மையை  பசி யிடம்  எதிர்பார்க்க முடியாது. 

பசி அவர்களே  அந்த பட்டியலை  நிதானமாக  பாருங்கள். உங்கள் 
அமைச்சகம் உங்கள் பெயரையும்  மன்மோகன், மாண்டேக் சிங் 
பெயர்களையும் செர்த்திருக்கப் போகின்றது.  இந்தியப் 
பொருளாதாரத்தை நாசம் செய்த தீவிரவாதிகள் அல்லவா நீங்கள்? 
 
     

Friday, May 20, 2011

அம்மா ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்கடோய்!
அம்மாவின் அதிரடி ஆட்டம் தொடங்கி விட்டது.  நம்பிக்கை துரோகி
என்று புதுவை முதல்வர் ரங்கசாமியை  போட்டு தாக்கி விட்டார். 

இனி அடுத்த குறி யார்? 


விஜயகாந்தா இல்லை  இடதுசாரிகளா? 

ஜெ விற்கு இப்போதாவது பணிவு வருமா என்று சில நாட்கள் முன்பு
எழுதியிருந்தேன். இடதுசாரிகள் கொடி பிடித்து போராட வேண்டிய 
அவசரம் விரைவில் வரும் என்று தோழர் ஹரிஹரன் பின்னூட்டம்
இட்டிருந்தார்.  அதற்கு நூறு நாட்களாவது அவகாசம் தரலாமே 
என்று நண்பர் ராஜ நடராசன்  சொல்லியிருந்தார்.  போகிற போக்கை பார்த்தால்  ஒரு மாதம் கூட 
தாங்காது போலிருக்கிறதே! 
நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற பழமொழி சரிதானோ?

Thursday, May 19, 2011

உலகின் கேவலமான புகைப்படம்

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக  கலைஞரும்  மருத்துவர் ஐயாவும் 
தொகுதி உடன்பாடு ஏற்பட்டு  சிரித்த முகத்தோடு காட்சியளிக்கிற  
புகைப்படத்தை   உலகின்  மோசமான படம் என்று  விடுதலை  என்ற 
தோழர் தனது வலைப்பக்கத்தில்  வெளியிட்டிருந்தார். 
சந்தர்ப்பவாதிகள்  பரத்வாஜும், எட்டியூரப்பாவும்  இன்று இழைந்து 
இழைந்து காட்சியளிக்கிற இப்படத்தை  கேவலமான  புகைப்படம் 
என்று நான் கருதுகிறேன்.

 

தூ. . . வெட்கம் கெட்டவர்களே!

 சம்பவம்  1 

கர்நாடக சட்ட மன்றத் தேர்தலில்  எந்த கட்சிக்கும் பெரும்பான்மை 
கிடையாது. சுயேட்சைகளுக்கு    கோடிகளை  அள்ளிக் கொடுத்து 
பாஜக ஆட்சி அமைக்கிறது. 

சம்பவம் 2 

காங்கிரஸ் உறுப்பினர்கள் தாவுகின்றார்கள். ராஜினாமா செய்து 
பாஜக வேட்பாளராகி இடைத்தேர்தலில்  வெற்றி பெறுகின்றனர். 
எட்டியூரப்பா தலை தப்பிக்கிறது. 

சம்பவம் 3 

சுரங்கப் புகழ் ரெட்டி சகோதரர்களால் அவ்வப்போது எட்டியூரப்பா
நாற்காலி தடுமாறுகின்றது.  உள்ளே புகுந்து தாம் நாற்காலியை 
தட்டிசசெல்லலாமா என்று காங்கிரஸ் நாவில் எச்சில் ஒழுக 
பரத்வாஜை கவர்னராக அனுப்புகின்றது. 

சம்பவம் 4 

எட்டியூரப்பாவை ஆதரித்த சுயேட்சைகள்  ஆதரவை வாபஸ் 
பெறுகின்றார். 

சம்பவம் 5 

நம்பிக்கை வாக்கு பெற கவர்னர் சொல்கின்றார். ஆதரவு வாபஸ் 
பெற்ற சுயேட்சைகளின் பதவியை சபாநாயகர் பறிக்கிறார். எட்டியூரப்பா பதவி மீண்டும் பிழைக்கிறது. 

சம்பவம் 6 

சுயேட்சைகளை சபாநாயகர் போட்டுத்தள்ளியது சரியல்ல, பதவியில் 
அமர்த்து என்று  உச்ச நீதிமன்றம் சொல்கின்றது. 

சம்பவம் 7 

எட்டியூரப்பவிற்கு ஆதரவை வாபஸ் பெற்ற சுயேட்சைகள் மீண்டும் 
பதவி பெறுவதால் அவருக்கு பெரும்பான்மை கிடையாது. ஜனாதிபதி
ஆட்சியை அமுலாக்கு என்று கவர்னர் பரத்வாஜ் பரிந்துரை. 

சம்பவம் 8 

ஆதரவு வாபஸ் பெற்ற சுயேட்சைகள் மீண்டும் பல்டி. எத்தனை கோடிகள்
நடுவில் விளையாடியது என்ற தகவல் இல்லை. 

சம்பவம் 9 

பரத்வாஜை திரும்பப்பெறு, எட்டியூரப்பாவை நீக்காதே என பாஜக
போர்க்கொடி, டெல்லிக்கு காவடி, ஒன்னு,ரெண்டு, மூணு என 
ஜனாதிபதி முன்பு தலை எண்ணுதல். 

இறுதியாக இப்போது.

எட்டியூரப்பாவிற்கு முழுமையான  பெரும்பான்மை உள்ளது. அவரது
நல்லாட்சி தொடரும் - இது பரத்வாஜ் 

ஆளுநர் நல்ல மனிதர், எனது இனிய நண்பர் - இது எட்டியூரப்பா 

மொத்தத்தில்  எட்டியூரப்பா, அவரது சகாக்கள், கவர்னர் எனும் ஆட்டுத்தாடி பரத்வாஜ், 
சபாநாயகர், சுயேட்சை எம்.எல்.ஏ க்கள், 
காங்கிரஸ் கட்சி, பாஜக, சீச்சீ இந்த பழம் 
புளிக்கும் என்பதால் யோக்கிய அவதாரம் 
எடுத்த மத்தியரசு என எல்லோருமே

வெட்கம்கெட்டவர்கள்...தூ... 


                  

Tuesday, May 17, 2011

கட்சி மாறிகளுக்கு செம அடி

கடந்த மார்ச்  மாதம்   தாவி வா, தாவி வா சீட் பெற தாவி வா என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன்.  திமுகவில்  இம்முறை  சேகர்பாபு, கம்பம் ராமகிருஷ்ணன், அனிதா ராமகிருஷ்ணன், மு.கண்ணப்பன், திருப்பூர் கோவிந்தசாமி,  ஆகிய  சமீபத்து கட்சி மாறிகளுக்கும்  எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் . ராமச்சந்திரன், திருச்சி செல்வராஜ், மைதீன்கான் ஆகியோருக்கு  சீட் கொடுத்தது பற்றி  எழுதியிருந்தேன். ஈரோடு முத்துசாமி, கடலாடி சத்தியமூர்த்தி  ஆகியவர்களை  விட்டுவிட்டதாக அனானி ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார். 

இந்த பதினோரு கடசிமாறிகளில்  எட்டு பேரை  மக்கள் புரட்டி புரட்டி 
துவைத்து விட்டனர். அதிலும் திருப்பூர் ஆசாமிக்கு மரண அடி. அனிதா ராதாகிருஷ்ணன் மட்டும்தான் கௌரவமான  வெற்றி பெற்றவர். மைதீன்கானும், வேலுவும் தோல்வியின்  விளிம்பு வரை சென்று  பிழைத்தவர்கள்.  

ஆக  கட்சி மாறிகளை  மக்கள்  ஏற்றுக் கொள்வதில்லை  என்று நிரூபணமாகி  விட்டது. 
இப்படி முடிக்கத்தான்  ஆசைப்பட்டேன். 

ஆனால் வீசிய அலையில்  சி.பி.ஐ. கட்சியின்  கட்சி மாறி வேட்பாளர்கள் குடியாத்தம்  லிங்கமுத்துவும்  தளி ராமச்சந்திரனும்  வெற்றிக் கரையேறியது   கொஞ்சம்  நெருடலாகவே, ஏன்  உண்மையில் மிகவும் 
வருத்தமாகவே  உள்ளது.
 

பரவசமூட்டும் ரயில் பயணங்கள்


இன்று  மின்னஞ்சலில்  வந்த புகைப்படங்கள்  இவை. இந்த தடங்களில் 
பயணம் செய்வது நிச்சயம் பரவசமூட்டும்  அனுபவம்தான்Monday, May 16, 2011

பண மாற்றம் இல்லாததால் ஆட்சி மாற்றமா?
தமிழக தேர்தல்கள் குறித்து  எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ்  ஊழியர் 
சங்கத்தின் மதுரைக் கோட்டத் துணைத்தலைவர்  தோழர் சி.சந்திரசேகரன் எழுதிய  அற்புதமான கவிதைகள்  இங்கே  உங்களுக்காக, அவரின் அனுமதியோடு
பணமென்றால் 
பிணம்தான் 
வாய் திறக்கும், 
தமிழனுக்குத் 
தெரிந்தது,
தலைவருக்குத் 
தெரியவில்லை. 

**************************************
கலைந்தது 
ஆட்சிக்கனவு மட்டுமல்ல,
திருமங்கலம் 
ஃ பார்முலா  கூடத்தான் 

**************************************
குடும்பத்திற்கு 
உழைத்தவருக்கு 
ஒய்வு எட்டு மணி நேரம்,
குடும்பங்களுக்கு 
உழைத்தவருக்கு
ஐந்து வருடங்கள் 
**************************************

ஐந்து வருட
ஓய்விற்குப் பின்
மிதக்க வருகின்றேன் ,
கட்டைக்குரலில் 
சொன்னது 
கடலில் 
தூக்கியெறியப்பட்ட
கட்டை 


***************************************

பணம் பத்தும் செய்யும் 
பிரவீன் குமார், சகாயம்,
சங்கீதா இல்லாதவரை. 

****************************************

பணம் மாறுவதில் 
சிக்கல் - 
ஆட்சி மாற்றம்

**************************************** 


ஓவருக்கு 
ஆறு பந்துகள் 
அதுவும் 
ஒவ்வொன்றாக 
பேட்ஸ்மேனுக்கு. 
கல்கத்தா 
பிரிமியர் லீக்கில் மட்டும் 
அறுபது பந்துகள் 
ஒரே நேரத்தில்.
புத்தா விக்கெட் 
வெளியேறியதில்
வியப்பென்ன? 

******************************