Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Monday, November 11, 2024

ஒரு மரணமும் மருத்துவரின் அறிவுரையும் - அவசியம் படியுங்கள்

 மருத்துவர்ஃபரூக் அப்துல்லா அவரளின் பதிவு. நீண்ட பதிவுதான். ஆனால் மிகவும் முக்கியமானது. அவசியம் முழுமையாய் படியுங்கள்.



பிரபல எழுத்தாளர் திரு. இந்திரா செளந்தர்ராஜன் அவர்கள்

கழிப்பறையில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கிறார்.

அன்னாரைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தார், உற்றார் உறவினர், அவரது நலம் விரும்பிகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக.

முதியோர்கள் வீட்டில் கீழே விழுவதும் தலையிலோ எலும்பு முறிவு ஏற்படும் வகையிலோ காயம் ஏற்படுவது என்பது முதியோர்களை வீடுகளில் பேணுபவர்களுக்கு எப்போதுமே கலக்கத்தை ஏற்படுத்தும் விசயமாக இருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு
கீழே விழுவது மற்றும் அது தொடர்பான மரணங்கள் மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஒருமுறை கீழே விழுந்து எலும்பு முறிவு, இடுப்பெலும்பு முறிவு , தலையில் மூளையில் பலத்த காயம் என்று ஏற்பட்ட பின் முதியோர்களால் பிறரது உதவியின்றி வாழ இயலாது எனும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதன்பொருட்டு நாம் அனைவரும்
கட்டாயம் முதுமையில் ஏற்படும் இந்த விழுதல் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

ஒருமுறை தவறி கீழே விழுந்த முதியோர் மீண்டும் தவறி விழுவதற்கு அத்தனை வாய்ப்பும் உள்ளது.

எனவே முதல் முறை வழுக்கிக் கீழே விழுந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து அதை சரிசெய்ய முற்படுவது அடுத்த முறை விழுவதைத் தடுக்கும் செயலாக அமையும்.

பொதுவாக முதியோர்கள் கீழே விழுவதற்கு மூன்று வகையான காரணங்கள் உள்ளன.

முதல் காரணம்
முதியோர்களிடம் தன்னகத்தே உள்ள முதுமை மற்றும் முதுமை சார்ந்த நோய்கள் மற்றும் அவற்றுக்கு உட்கொள்ளும் மருந்துகள் தொடர்பானவை

இரண்டாவது காரணம்
அவர்கள் வாழும் சூழல் சுற்றுப்புறம் சார்ந்த காரணங்கள்

மூன்றாவது காரணம்
சந்தர்ப்ப சூழ்நிலை சார்ந்த காரணங்கள்

முதல் காரணத்தைப் பற்றிப் பேசுகையில் முதியோர்களுக்கு அவர்களின் வயது மூப்பின் காரணமாக தள்ளாட்டம் இல்லாமல் நிலையாக நிற்பதும் நடப்பதும் என்பது சிறுகச் சிறுக சவாலாக மாறுகிறது.

கண்பார்வை மங்குதல் மற்றும் குறைபாடுகள் காரணமாக
நிறத்தின் வெளிர் அடர் பாகுபாடுகளை உணர இயலாமை, இரவு நேரப் பார்வைப் போதாமை

நடக்கும் போது நிலையாக இருப்பதற்கும் தள்ளாட்டம் இல்லாமல் இருப்பதற்கும் தேவையான செரிபெல்லம் எனும் மூளையின் பகுதியில் ஏற்படும் தேய்மானம்

நீரிழிவு ரத்தக் கொதிப்பு இதய, சிறுநீரக, நுரையீரல் , கல்லீரல் நோய்கள் மற்றும் அவற்றுக்கு எடுத்து வரும் மருந்துகள்

தூக்கமின்மை, மனத்தாழ்வு நிலை மற்றும் சோர்வுக்கு உட்கொண்டு வரும் மனநல மாத்திரைகள் ரத்த சோகை, இதயத் துடிப்பில் மாறுபாடு, நீரிழப்பு, தாது உப்புகள் மாறுபாடு, நுரையீரல் தொற்று , இதய வால்வுகளில் அடைப்பு, நினைவாற்றால் குறைபாடு, மூட்டுத்தேய்மானம், பக்கவாதம், கழுத்து மற்றும் குறுக்கு தண்டுவட எலும்பு தேய்மானம், பார்கின்சோனிசம், நீரிழிவினால் ஏற்படும் நியூரோபதி, உள்காதில் உள்ள லேபிரின்த் எனும் உறுப்பில் ஏற்படும் பிரச்சனை காரணமாக தலைசுற்றல், கண் புரை நோய், கண் அழுத்த நோய், நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விழிப்படலச் சிதைவு நோய் என்று

முதியோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பட்டியல் இடலாம்.

மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளும் ஒரு நபரை கீழே விழ வைக்க முடியும்.

எனவே இத்தகைய காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். இவையன்றி முதியோர்கள் மேற்கூறிய பல நோய்களுக்கு மாத்திரைகளை உட்கொள்வர்.

உடல் வலிக்குப் பயன்படும் மார்ஃபின் வகை மத்திய நரம்பு மண்டலத்தில் வேலை செய்யும் வலிநிவாரணிகள், இதயத் துடிப்பு சீராக்கும் மாத்திரைகள்,நீரிழிவுக்கான மாத்திரைகளால் ரத்த க்ளூகோஸ் மிகவும் குறைவது, சில ரத்தக் கொதிப்பு மாத்திரைகள், நீரை வெளியேற்றும் மாத்திரைகள் ஆகியவற்றால் தலை சுற்றல் , மயக்கநிலை ஏற்பட்டு கீழே விழும் நிலை ஏற்படலாம்.

இரண்டாவது காரணம்
தங்குமிடத்தில் முதியோர்களுக்குத் தேவையான
பாதுகாப்பு போதாமை -
போதிய வெளிச்சமின்மை,
வழுக்கும் தரைகள் போன்றவற்றால் முதியோர்கள் வழுக்கி விழும் வாய்ப்பு ஏற்படுவது

மூன்றாவது காரணம்
சந்தர்ப்ப சூழ்நிலை
இரவில் உறக்கத்தின்
போது சிறுநீர் கழிக்கும் இச்சை ஏற்பட்டு அதற்காக விரைந்து கழிப்பறை செல்ல எத்தனிக்கையில் விழுவது, அலைப்பேசியில் பேசிக் கொண்டே மாடிப்படிகளில் ஏறும் போது வழுக்கி விழுவது என சந்தர்ப்ப சூழ்நிலைகளும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கின்றன.

பொதுவாக கீழே விழுந்த முதியோர்களிடம்
"எப்படி விழுந்தீர்கள்?" என்று மருத்துவர் கேட்டால்
"தெரியாம தடுக்கி விழுந்தேன்.
மேஜை அல்லது நாற்காலி இடறி விழுந்தேன்..
பாத்ரூம்ல டைல்ஸ் வழுக்கி விழுந்தேன்" என்று கூறுவார்கள்

ஆனாலும் உண்மையில் தங்களுக்கு வரும் தலைசுற்றல் குறித்தோ...
படபடப்பு குறித்தோ.. கூறமாட்டார்கள். காரணம் இவையெல்லாம் பெரிய அறிகுறிகளல்ல என்று அசட்டை செய்வார்கள் அல்லது அத்தகைய அறிகுறிகள் தங்களுக்கு ஏற்படுகிறது என்பதையே உடனே மறந்து விடுவார்கள்.

ஒருவர் நடக்கும் போது கீழே விழுவதற்கான வாய்ப்பைக் கண்டறியும் எளிய பரிசோதனைகள் இரண்டு உள்ளன.
அவற்றை நரம்பியல் சிறப்பு மருத்துவர்கள் நோயாளிகளுக்கு செய்து பார்ப்பார்கள்.
அதைக் கூறுகிறேன்
அனைவருமே முயற்சி செய்து பார்க்கலாம்.
கை வைத்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள வேண்டும்.
நாற்காலியில் இருந்து எழுந்து
நேர்க்கோட்டில் பத்து அடி நடக்க வேண்டும்
மீண்டும் அதே நேர்க்கோட்டில் திரும்ப வேண்டும்
திரும்பி வந்து நாற்காலியில் அமர வேண்டும்.
இவ்வாறு முதியோர்கள் செய்யும் போது
அவர்கள் இதை எவ்வளவு வேகமாகவும் துல்லியமாகவும் செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.
இந்த செயல்முறையை நிறைவு செய்ய 12 நொடிகள் போதுமானது.
இந்தப் பரிசோதனைக்குப் பெயர் " கெட் அப் & கோ " (எழு & செல்) ஆகும்.
12 நொடிகளுக்கு மேல் ஒருவர் எடுத்துக் கொண்டால்
அவர் அடுத்தடுத்து விழுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எடுத்துக் கொண்டு அவரை மேலும் பாதுகாப்பாக கவனிக்க வேண்டும்
அவருக்கு நான் மேற்கூறிய பல காரணங்களுள் விடையைத் தேடி பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.
மூளை நரம்பியல் மருத்துவர், கண் நோய் சிறப்பு நிபுணர், இதய நோய் சிறப்பு நிபுணர், மனநல மருத்துவர் ஆகியோரிடம் அந்த முதியவரைக் காட்டி காரணத்தை அறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும்.
இன்னும் நாம் நடக்கும் போது நமக்கு சரிசம நிலையை வழங்கி தள்ளாட்டம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் மூளையின் "செரிபெல்லம்" சரியாக செயல்படுகிறதா என்பதை வைத்து ஒருவர் அடிக்கடி கீழே விழுவாரா என்பதை யூகிக்கலாம்.
முதியவர் ஒருவரை அவரது ஒரு காலில் பத்து நொடிகள் நிற்கக் கூறவும்
பிறகு உடனே கண்களைத் திறந்து கொண்டு நேர்க்கோட்டில் பத்து அடிகள் நடக்க வேண்டும்
இதை அவர் தள்ளாட்டம் ஏதுமில்லாமல் சரியாகச் செய்து விட்டால் மூளை சார்ந்த தள்ளாடப்பிரச்சனை இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தலாம்.
இவையன்றி முதியோர்கள் வாழும் இல்லங்களை அவர்கள் விழாத வண்ணம் பாதுகாப்பாக அமைக்க சில யோசனைகள் இதோ
1.வீடு முழுவதும் குறிப்பாக இரவில் கழிப்பறை செல்லும் வழி தோறும் ஒளிவிளக்குகளை அமைக்க வேண்டும். அதற்குண்டான ஸ்விட்ச்களை கைக்கெட்டும் தூரத்தில் வைக்க வேண்டும்
2. வீட்டில் எங்கெல்லாம் தண்ணீர் புழக்கம் உள்ளதோ அங்கெல்லாம் கால் உலர்த்தும் சாக்குகள் அல்லது கார்பெட்டுகளைப் போட்டு வைக்க வேண்டும்.
3. முதியோர்கள் வாழும் இடத்தில் போடப்படும் நாற்காலி மற்றும் மேஜை ஆகியவற்றை ப்ளாஸ்டிக்கில் இல்லாமல் மரத்தில் இரும்பினால் செய்யப்பட்டதாக வலிமையானதாக இருக்க வேண்டும். ஒருவேளை வழுக்கி விழுந்தாலும் இந்த மேஜை நாற்காலி மீது சாய்ந்து கொள்ள அல்லது பிடித்துக் கொள்ள உதவும்.
கட்டாயம் சர்க்கரங்கள் பூட்டப்பட்ட நாற்காலிகளைத் தவிர்க்க வேண்டும்.
4. வீட்டில் அங்குமிங்கும் காலில் மாட்டி விழுச் செய்யுமாறு வயர்கள் மற்றும் கயிறுகள் இருக்கக் கூடாது.

5. சமையலறையில் முதியோர்கள் கைக்கு எட்டும் தூரத்திலும் உயரத்திலும் அலமாரிகள் , அடுக்குகள் இருக்க வேண்டும்

6. பாத்திரம் கழுவும் இடத்துக்குக் கீழ் தரையில் ரப்பர் மேட் போடுவது நல்லது

7. கழிப்பறைகளில் வழுவழுப்பான டைல்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ரப்பர் மேட்களை விரிக்கலாம். கழிப்பறைக்குச் செல்லும் போது ரப்பர் செருப்புகளை அணிந்து செல்லலாம். பிடிமானம் நன்றாக இருக்கும்.

கழிப்பறையில் பிடித்துக் கொள்ள கைப்பிடிகளை சுவரில் அடித்து வைக்க வேண்டும்.
ஒருவேளை தலைசுற்றல் ஏற்பட்டாலும் அந்த பிடிமானக் கம்பிகள் காப்பாற்றும்.

8. மலம் கழிக்கும் கோப்பையை வெஸ்டர்ன் முறையில் உயரம் ஏற்றி வைப்பது நல்லது.

9. முதியோர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளில் இருபக்கம் இருந்தும் திறக்குமாறு தாழ்பாள்களை அமைப்பது நல்லது.

10. முதியோர்கள் படியேறும் போது சிரமம் இல்லாமல் இருக்கவும் வழுக்காமல் இருக்கவும் ஒரு படியின் உயரத்தை 15செண்ட்டிமீட்டருக்குள் அமைப்பது சிறந்தது. படியின் உயரம் அதிகமாக இருப்பின் இடறி விழும் வாய்ப்பு அதிகம்.

11. மாடிப் படிக்கட்டுகளில் சில படிகளுக்கு ஒருமுறை நிற்பதற்கு வசதியாக லேண்டிங் அமைப்பது சிறந்தது.

12. படிக்கட்டுகள் முழுமைக்கும் இருபுறமும் உருளை வடிவில் ஸ்டீல் கைப்பிடியை அமைக்க வேண்டும். அந்தக் கைப்பிடியானது சுவற்றில் இருந்து 2.5 முதல் 5 செண்ட்டீமீட்டர் இடைவெளி விட்டு இருக்க வேண்டும்.
13. படிக்கட்டுகளின் கைப்பிடிகள் ஏற்றத்திலும் சரி
இறக்கத்திலும் சரி
படியை விட ஒரு அடி அதிகமாக இருக்க வேண்டும். கைப்பிடி முடிவுறும் இடத்தில் உள்பக்கமாக வளைத்து விடப்பட்டிருக்க வேண்டும்.

14. படிக்கட்டுகளில் தண்ணீர் வடியுமாறு இயன்றவரை அமைக்கக் கூடாது. அவ்வாறு தண்ணீர் வழுக்கும் என்று தெரிந்தால் படிக்கட்டுகளில் தண்ணீர் உலர்த்தும் சாக்குகளைப் போட வேண்டும்

15. மாடிப்படிகளில் இரவு நேரங்களில் சரியான ஒளி கிடைக்குமாறு ஒளிவிளக்குகளை அமைக்க வேண்டும்.

16. நடக்க சிரமப்படும் முதியோர்கள் நடப்பதற்கு கைத்தடி மற்றும் வாக்கர்களை உபயோகப்படுத்துவது உபயோகப்படுத்துவது நல்லது.

17. தசைகளை வலுப்படுத்தவும், மூட்டுகளை பலப்படுத்தவும் உடல் பயிற்சிகளை இயன்முறை சிகிச்சையாளரின் பரிந்துரையில் பெற வேண்டும்.

"டாய் ச்சி" (TAI CHI) எனும் தற்காப்புக் கலை உடல் பயிற்சியை முதியோர்கள் செய்து வருவதென்பது அவர்களைக் கீழே விழுவதில் இருந்து தடுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதையும் முயன்று பார்க்கலாம்.

18. எலும்புகளுக்கு வலிமை கூட்டும் விட்டமின் டி சத்துக்காக தினமும் இருபது நிமிடங்கள் சூரியக்குளியல் எடுக்கலாம். விட்டமின் டி யை சப்ளிமெண்ட்டாகவும் உட்கொள்ளலாம்.
மேற்கூறிய பல விசயங்களையும் கருத்தில் கொண்டு
முதியோர்கள் கீழே விழுவதைத் தடுப்போம்
அதன் வழி ஆரோக்கியமான அமைதியான வாழ்க்கையை அவர்கள் வாழ வழிவகை செய்வோம்.
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

Thursday, June 9, 2022

கருமுட்டை வணிகம் -கைது செய்யுங்கள்

 


 

தன் தாயும் தன் தாயுடன் வாழ்பவரும் தன்னை பல முறை பல   மருத்துவமனைகளில் போலி ஆதார் அட்டைகளைக் கொண்டு கரு முட்டை கொடுக்க வைத்துள்ளனர் என்ற இளம் பெண்ணின் குற்றச்சாட்டு தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று.

 உடல் உறுப்புத் திருட்டுக்கு இணையான குற்றம் என்று சொன்னால் கூட தவறில்லை. அது மனிதன் இறந்து போனதற்கு பின்பு நடப்பது. இது மனிதன் பிறப்பிற்காக செய்யப்படுவது.

 அந்த பெண்ணின் குற்றச்சாட்டு ஆழ்கடலில் ஒளிந்துள்ள பெரும் பனிப்பாறையின் விளிம்பாகவே தோன்றுகிறது. எத்தனை பெண்கள் இது போல பாதிக்கப்பட்டனரோ என்று பதைக்க வைக்கிறது.

 ஆம்.

 இன்று மருத்துவத் தொழிலில் அதிலும் தனியார் மருத்துவ மனைகளில் கொடி கட்டி பறப்பது செயற்கை கருத்தரிப்பு நிலையங்கள்தான். புற்றீசல் போல பல செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்தான். பல மருத்துவமனைகள் ஊருக்கு ஊர் கிளை திறந்து கொண்டிருக்கிறார்கள்.

 எப்படியாவது குழந்தை வேண்டும் என்று தவித்துக் கொண்டிருக்கிறவர்கள், இவர்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை என்று பணத்தை கொட்டித் தர தயாராக இருக்கிறார்கள்.

 அந்த பலவீனத்தை இம்மையங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அதற்காக எப்படிப்பட்ட முறைகளையும் கையாள்வார்கள்.

 அதனால் தமிழ்நாட்டு அரசு இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து தவறிழைத்த  மருத்துவமனைகள் மூடப் பட வேண்டும்.

 

Thursday, March 15, 2018

ததும்பாத நிறைகுடம் - ஒரு அனுபவப் பகிர்வு




சமீபத்தில் சந்தித்த ஒரு அற்புதமான மனிதரைப் பற்றி அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 13.03.2018 அன்று ஒரு சிறப்புக் கூட்டத்தை எங்கள் கோட்ட அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தோம். மகளிர் உடல் நலன் குறித்த ஒரு விழிப்புணர்வு உரையும் அக்கூட்டத்தின் ஒரு பகுதியாக அமைத்திருந்தோம்.

அதற்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் மகளிர் கருப்பை புற்றுநோயியல் துறையை (Gynaecological Oncology)  அணுகிய போது அத்துறையின் தலைவர் பேராசிரியர் ஆப்ரஹாம் பீடிக்கயில் தானே வருவதாக இசைவு தெரிவித்து நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று காலையில் நினைவு படுத்துங்கள் என்றார். அப்படியே செய்தோம்.

ஐந்தரை மணி நிகழ்ச்சிக்கு அவரது செயலாளர் மற்றும் ஒரு உதவியாளரோடு முன்னதாகவே வந்து விட்டார்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் சார்பான அஜெண்டாவை முடித்த பிறகு அவர் பேசத் தொடங்கினார்.

மிகவும் எளிய முறையில் மகளிருக்கு வரக்கூடிய புற்று நோய், அவற்றை வரு முன் தவிர்ப்பதற்கான அறிகுறிகள், செய்து கொள்ள வேண்டிய சோதனைகள், பழக்க வழக்கங்களில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் ஆகியவற்றை அருமையாக, மிக முக்கியமாக கொஞ்சம் கூட அச்சுறுத்தாமல் சொன்னார்.

குடும்பத்தில் மற்றவர்கள் சாப்பிட்ட பிறகே சாப்பிட வேண்டும். மீதமுள்ள உணவு வீணாகக் கூடாது என்று அதையும் சாப்பிடுவது போன்ற அர்த்தமற்ற மரபுகள் மகளிரின் உடல் நலனை பாதிக்கிறது என்று அழுத்தமாகச் சொன்னார்.

அதன் பின்பு பங்கேற்றவர்கள்  எழுப்பிய எண்ணற்ற ஐயங்களுக்கும் சளைக்காமல் பதில் சொன்னார்.  தேவையில்லாமல் ஸ்கேன் எடுப்பதோ, அறுவை சிகிச்சை செய்வதோ மருத்துவ நெறிமுறைகள் கிடையாது என்பதையும் சில மருத்துவர்கள் அவ்வாறு செய்வது வருத்ததிற்குரியது என்பதை ஆணித்தரமாக சொன்னார்.

நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. கேள்விகளும் பதில்களும் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இத்தோடு நிறைவு செய்து கொள்ளலாம் என்று நாங்களாகவே நிறைவு செய்தோம்.

அவருக்கு மட்டுமல்லாது அவரோடு வந்தவர்களுக்கும் சால்வை போட்டு கௌரவித்தோம். அப்போது உற்சாகமாக கை தட்டிய அவரது முகத்தைப் பார்த்தேன். அவ்வளவு மகிழ்ச்சி. அது மட்டுமல்ல, அவரது செயலாளரை அறிமுகம் செய்து எங்கள் துறையை இயக்கும் சக்தி என்று வேறு குறிப்பிட்டார். அந்த அணுகுமுறை மிகவுமே பிடித்திருந்தது.

மகளிரை இழிவுபடுத்தி ஊடகங்களில் வெளிவருபவைக்கு தக்க எதிர்வினையாற்ற “ஊடக விமர்சனக்குழு”, பாலியல் கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக “பாலியல் சமத்துவ பாதுகாப்பு குழு” என இரண்டு குழுக்களை  அன்று அமைத்தோம். ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சமூகத்தின் முக்கியமான பிரச்சினைகளை கையில் எடுப்பது பாராட்டுதலுக்குரியது என்றும் குறிப்பிட்டார்.

உலகப் புகழ் பெற்ற மருத்துவர் அவர் என்பதை பிறகு இணையத்தில் அவரைப்பற்றி அலசிய போது அறிந்து கொண்டேன். மகளிர் கருப்பை புற்றுநோயியல் துறை மருத்துவர்களுக்கான ஆசிய அளவிலான அமைப்பின் தலைவர் என்று அறிந்தபோது பிரமித்தே போனேன்.

பந்தா என்பதே கொஞ்சம் கூட இல்லாமல் எங்களோடு மிகவும் இயல்பாக பழகிய அவரைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் “அற்புதமான மனிதர்”.

சில பழமொழிகள் உண்மைதான்.

நிறை குடங்கள் ததும்புவதில்லை.

Thursday, October 26, 2017

அவர் புகைப்படம் இங்கே . . .



ஏழு ரூபாய் டாக்டர் இங்கேயும் கூட      (இணைப்பின் மூலம் செல்லவும்)


என்ற நேற்றைய பதிவில் வேலூரில் குழந்தைகள் நல நிபுணராக திகழ்ந்த  டாக்டர் பிரகாசம் அவர்கள் பற்றிய என் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு அவரது புகைப்படம் இணையத்தில் கிடைக்கவில்லை என்றும் எழுதியிருந்தேன். 

முத்து என்ற ஒரு நண்பர் அவரது புகைப்படத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார். 

அந்த மின்னஞ்சலில் அவர் எழுதியிருந்ததை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.  

Read your message on Dr. Praskam...Thanks for sharing your experiences of the great man.

your search for Dr.'s picture if it has not yielded any lookout for his son normally puts up obituaries in tamizh newspapers in the month of August for his parents together.


Best Regards
Muthu

அது  மட்டுமல்லாது மருத்துவர் பிரகாசம் அவர்களின் மகனும் பின்னூட்டம் இட்டிருந்தார். 

Thanks for your acknowledgement sir...I'm really proud of my father..

உண்மையிலேயே மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. 

முந்தைய பதிவிலேயே அவர் புகைப்படத்தை இணைத்திருந்தாலும் கூட தனியாக இன்னொரு முறையும் பதிவு செய்ய வேண்டும் என்ற உணர்வை ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி தோழர் மரியா சிவானந்தம் அவர்கள் முகநூலில் இட்டிருந்த பின்னூட்டம் உருவாக்கியது.

 Yes . He has been an epitome of sincere medical service to the people of Vellore. Recalling with gratitude .


ஆம். உண்மையாக சேவை செய்தவர்களை மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். 

Wednesday, October 25, 2017

ஏழு ரூபாய் டாக்டர் இங்கேயும் கூட . . .





1993 அக்டோபரில் என் மகன்  கும்பகோணத்தில் பிறந்தான். 1994 ஜனவரியில் அவனை  வேலூருக்கு அழைத்து வந்தோம். அதன் பின்பு அவனுக்கு உடல் நலத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் வேலூர் தென்னமரத் தெருவில் இருந்த டாக்டர் பிரகாசம் என்ற குழந்தைகள் நல நிபுணரிடம்தான் அழைத்துச் செல்வோம்.

சின்ன இடத்தில்தான் அவரது கிளினிக் இருந்தது. மருத்துவர் பார்வையிட ஒரு அறை. அதற்கு முன்பாக நோயாளிகள் அமர ஒரு அறை அவ்வளவுதான். அதிகபட்சமாக ஒரு இருபது பேர் உட்காரலாம். எப்போதுமே கூட்டம் அலைமோதும். முன் கூட்டியே சென்று டோக்கன் வாங்கிக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளை பரிசோதனை செய்து விட்டு அவரே மூன்று வேளைக்கான மாத்திரைகளை அவரே கொடுத்து விடுவார். ஐந்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொள்வார். அவசியமேற்பட்டால் மட்டுமே ஊசி போடுவார். அதற்காக கூடுதல் பணமும் வாங்க மாட்டார்.

நாம் சொல்வதை முழுதாகக் கேட்பார். ஆனால் அவர் அதிகம் பேச மாட்டார்.  வெள்ளை சட்டை, வெள்ளை பேண்டோடுதான் எப்போதும் பார்த்திருக்கிறேன். வேலூரைப் பொறுத்தவரை குழந்தைகள் நிபுணர் என்றால் அவர்தான். தனியாக மருத்துவமனை எதுவும் அவர் நடத்தவில்லை. குழந்தைகளின் நிலைமை மோசமாவது போல தோன்றினால் சி.எம்.சி மருத்துவமனைக்குப் போகச் சொல்லி விடுவார்.

நீண்ட நாட்கள் வரை ஐந்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தார். 1995 மத்தியில் ஏழு ரூபாய் வாங்கத் தொடங்கி இருந்தார்.

ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

ஆம்.

வேலூர் கோட்டையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் ஒரு சுரங்கம் தோண்டி தப்பித்தார்கள் என்ற செய்தி நினைவுக்கு வருகிறதா?

அந்த நாள் 15.08.1995. அன்று இரவு வேலூர் முழுதும் மின் வெட்டு. இரவு பத்து மணி அளவில் போன மின்சாரம் மறு நாள் காலை ஏழு மணி அளவில்தான் வந்தது.

மின்சாரம் போன நிலையில் அவர் கையில் மெழுகுவர்த்தி வைத்துக் கொண்டு போர்ட்டபிள் ஜெனரேட்டரை இயக்கியுள்ளார். டீசல் அவர் மீது தெறித்து விழுந்து தீ பற்றிக் கொள்ள அந்த விபத்தில் அவர் காலமானார்.

வருடங்கள் பல உருண்டோடினாலும் அவரது சேவை மனப்பான்மை இன்னும் அவரை நினைக்க வைக்கிறது.

மருத்துவர்கள் நினைத்தால் எளிய கட்டணத்தில் சேவை செய்ய முடியும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.

பின் குறிப்பு : இணையத்தில் எவ்வளவோ தேடியும் அவரது புகைப்படம் கிடைக்கவில்லை. ஆனால் என்ன, என் மனதில் அவர் படம் பதிந்துள்ளது. 

பின் குறிப்பு 2


இந்த பதிவைப் பார்த்து ஒரு நண்பர் பின்னூட்டமிட்டது அல்லாமல் மருத்துவர் பிரகாசம் அவர்களின் புகைப்படத்தையும் அனுப்பி இருந்தார். அப்படத்தை மேலே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அவரது மகன் வேறு ஒரு பதிவில் பின்னூட்டமிட்டிருந்தார். அதனை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.