Showing posts with label கூட்டம். Show all posts
Showing posts with label கூட்டம். Show all posts

Friday, August 9, 2019

முன்பும் முடியும் முட்டாள்களே!!!!


காஷ்மீர் மக்களுக்கு மோடி அரசு செய்த துரோகத்திற்குப் பின்பு கேடி.ராகவன் போன்ற மோசடி சங்கிகள் காஷ்மீரில் ஒரு செண்ட்  நிலமாவது வாங்க வேண்டும் என்று உமிழ்நீர் வடிக்கும் வேளையில்

பாரதீய ஜொள்ளு பார்ட்டி என்றும் அழைக்கப்படுவதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் 

பல சங்கிகள்

"அழகான காஷ்மீர் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பை மோடிஜியும் அமித்ஷாஜியும் உருவாக்கிக் கொடுத்துள்ளனர். வாருங்கள் காஷ்மீர் செல்வோம்"

என்று உமிழ்நீர் வெள்ளத்தில் மிதக்கிறார்கள்.

பாவம், பெரும் நிறுவனங்களின் தரகரான மோடியையும் அமித் ஷாவையும் கல்யாணத் தரகர் ரேஞ்சிற்கு கீழிறக்கி விட்டார்கள் 

என்பதும்

காஷ்மீர் பெண்களை திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று சொல்லும் இந்த மூஞ்சிகளை உள்ளூர் பெண்களே திரும்பிப் பார்க்க மாட்டார்கள்

என்பதும்

ஒரு புறம் இருக்கட்டும்.

காஷ்மீர் மாநிலப் பெண்களை மற்ற மாநில ஆண்கள் திருமணம் செய்து கொள்ள எந்த காலத்திலும் எந்த விதமான தடையும் இருந்ததே கிடையாது. காஷ்மீர் மாநிலப் பெண்கள் வேறு மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் சொத்துரிமை கிடையாது (இது எனக்கு ஏற்புடையது அல்ல) என்று மட்டும்தான் உள்ளது.

காஷ்மீர் மாநிலப் பெண்களை திருமணம் செய்து கொள்ள கிளம்பும் கோஷ்டிகளின் உள்நோக்கம் புரிகிறதா?

திருமணம் 
அல்ல
சொத்துதான்

அவர்களின் குறிக்கோள்.

பாஜககாரர்கள் வேறெப்படி இருப்பார்கள்?

Tuesday, May 12, 2015

மோடி ஒரு பூஜ்ஜியம் - இந்து முன்னணி சேம் சைட் கோல்




எங்கள் சத்துவாச்சாரி பகுதியில் இந்து முன்னணியின் கூட்டம் ஒன்று ஒரு முப்பது பேரோடு பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்கிறது.

காய்கறி வாங்கும் நேரத்தில் ஒரு பேச்சாளர் வீராவேசமாக முழங்கிக் கொண்டிருந்ததை கேட்க வேண்டிய நிர்ப்பந்தம். மேடைக்குப் பின்னாலே காய்கறிக்கடை என்பதால் முகத்தைப் பார்க்கவில்லை. அதனால் அந்த உணர்ச்சி மிக்க பேச்சாளர் யார் என்று தெரியவில்லை. திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை நிமிடத்திற்கு ஒரு "டேய்" போட்டு அழைத்து சவால் விடுத்த அந்த பேச்சாளர் கூறியது பின்வருமாறு.

"டேய், நாங்களா பெண்களை மதிப்பதில்லை? நாங்கள் படிக்கும் புத்தகத்தை சரஸ்வதியாக பார்க்கிறோம். எண்ணும் பணத்தை லட்சுமியாக பார்க்கிறோம். குடிக்கும் நீரை கங்கையாக பார்க்கிறோம். ஆண் பாதி, பெண் பாதி என்று அர்த்தனாரியாக வைத்திருக்கிறோம். டேய் மனைவி இல்லையென்றால் எங்களைப் பொறுத்தவரை கடவுளே பூஜ்ஜியம்தான். தெரியுமாடா?"

வாஸ்தவமான பேச்சு.

மனைவி இல்லாத பிரம்மச்சாரி கடவுள்களான வினாயகரும் அனுமனும் கூட அந்த இந்து முன்னணி தலைவர் பார்வையில் பூஜ்ஜியம்தான் போலும்.

கடவுளே பூஜ்ஜியமென்றால் மனைவியில்லாத மனிதர்களும் கூட பூஜ்ஜியம்தானே!

மனைவியை ஒதுக்கி வைத்த மோடியும் கூடத்தானே?

அட, அந்த கூட்டத்திற்கான பேனர்களில் காட்சியளிக்கும் வீரத்துறவியார் ராம கோபாலன் கூட அந்த வரையறைக்குள் அடங்குவார்தானே!

இதையெல்லாம் நான் சொல்லலீங்க.

இந்து முன்னணி கூட்டத்தில் இந்து முன்னணி பேச்சாளர் சொன்னதுதான்.