Showing posts with label தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. Show all posts
Showing posts with label தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. Show all posts

Monday, November 17, 2025

சபாஷ், சரியான தீர்ப்பு

 தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் பொதுச்செயலாளரும் தற்போதைய துணைத்தலைவருமான தோழர் கே.சாமுவேல்ராஜ் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நீதித்துறை மீது அவ்வப்போது நம்பிக்கை இது போன்ற தீர்ப்புக்கள் அளிக்கிறது. 






சாதி வெறியன் தண்டபாணிக்கு

மற்றும் 10 ஆண்டுகள் தண்டனை!
அனுசுயா என்கிற தலித் பெண்ணை
வாழ்க்கை துணையாக தெரிவு செய்து கொண்டதற்காக 14.04.2023 அன்று
தான் பெற்ற மகன் சுபாசையும்,
தன்னை பெற்ற தாய் கண்ணம்மாவையும்
படுகொலை செய்து
அனுசுயாவையும் கொடுங்காயப்படுத்திய
சாதி வெறியன் தண்டபாணிக்கு
இரட்டை ஆயுள் மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

அனுசுயாவிற்கு மாவட்ட நிர்வாகம் இரண்டரை லட்சம் ரூயாய் வழங்கிட
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை
அமர்வு நீதிமன்றம் 10 நிமிடங்களுக்கு முன்பு உத்தரவு!

கொலை பாதகன் வெறி கொண்டு வீசிய ஒவ்வொரு அரிவாள் வீச்சையும்
தனது கைகளால் தாங்கி
விரல்கள் அனைத்தும் சேதாரமாகி
முகத்திலும் தலையிலும்
கொடுங்காயங்களைத் தாங்கி
உடலில்,மனதில் தீராத வடுக்களுடன்
மகள் அனுசுயா மன உறுதியால் நம்முன் கம்பீரமாக நிர்கிறார்.

உடலில் 10 அறுவை சிகிச்சைகள்
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அனுசுயாவிற்கு மருத்துவத்தோடு அன்பையும் கலந்து கொடுத்தனர்.அவர்கள்
போற்றதலுக்குறியவர்கள்.

நிறைய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தார்கள்.உளப்பூர்வமாக ஆறுதலை பகிர்ந்தார்கள்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆறுதலுடன் நிதியும் அனுசுயாவிற்கு வழங்கியது நினைவு கொள்ளத்தக்கது.

இந்த படுபாதகம் நிகழ்ந்தப்பட்ட நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளது.வழக்கின் ஒவ்வொரு திருப்பத்திலும் உடன் பயணம் செய்தோம்.

போராட்டங்கள்,பயணங்கள்,வழக்கறிஞர் சந்திப்புகள்,விவாதங்கள் நம் கண் முன்னால் வானமாக விரிகிறது.

மருத்துவர்கள்,மருத்துவ மனையில் உதவிய சேலம் தோழர்கள்,கல்விக்கு உதவிய இன்சூரன்ஸ் சங்கத்தின் தோழர்கள்,ஒவ்வொரு வாய்தாவிலும் அணிவகுத்து வருகை தந்து வழி செலவுகளையும்,வயிற்றுக்கு உணவும் வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்டத் தோழர்கள்,மாநில மையத் தோழர்கள் எல்லோருக்கும் இயதபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

சி.பி.எம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மேற்கொண்டு வரும் ஆற்றல் மிகுந்த எங்களது பயணம் தொடரும்...

பிகு: இந்தப் பெண்ணின் கல்விக்கு உதவ ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அது பற்றி தனியாக எழுதுகிறேன்.

Tuesday, November 4, 2025

பெருமிதமாக உள்ளது சுவாமி

 














மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டக் குழு வெளியிட்ட அறிக்கையையும் அதன் பின் ஒரு காணொளியையும் முதலில் பாருங்கள்.

புழுதிவாக்கம் நியூ இந்து காலனியில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த தனலட்சுமி - சுரேஷ் இணையரின் மகள் நித்திஷா (11 வயது) புழுதிவாக்கம் சென்னை மாநாகராட்சி ஆரம்பப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
09.10.2025 அன்று மாணவி நித்திஷா பேனாவிலிருந்து இங்க் தரையில் தெளித்ததை பார்த்து கோபம் அடைந்த தலைமை ஆசிரியை இந்திராகாந்தி தரை துடைக்கும் மாப் கட்டையால் மாணவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மாணவியின் கை, கால் வீக்கமடைந்தது. கடுமையான தலைவலி இருந்தது. முதலில் புழுதிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் (பிரதீப் மருத்துவமனை) அனுமதிக்கப்பட்டிருந்தார். சி.டி ஸ்கேன் எடுத்ததில் தலையில் உள் பகுதியில் இரத்தக்கசிவு இருந்தது தெரியவந்துள்ளது. அதனால் மடிப்பாக்கம் S7 காவல் நிலையத்தல் பெற்றோர்கள் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பின்னர் 23.10.2025 முதல் 26.10.2025 வரை கிண்டி கலைஞர் பல்நோக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கலைஞர் மருத்துவமனையிலிருந்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் செய்து பின்னர் அது மடிப்பாக்கம் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னரும் புகாரின் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பின்னரே குற்ற எண்ணில் - 1105 / 2025 முதல் தகவல் அறிக்கை (FIR) 26.10.2025 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (BNS) சட்டத்தின் பிரிவு 118(1)(b) மற்றும் சிறார் நீதி (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம், 2015 (JJ Act) பிரிவு 75 ஆகியவற்றின் கீழ் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை. நாம் வலியுறுத்தியும் காவல்துறை மறுத்துவிட்டது.
எனவே இவ்வன்கொடுமையைக் கண்டித்தும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரியும் 30.10.2025 அன்று கண்டன கூட்டம் நடத்த அனுமதி கோரிய போது, குறிப்பிட்ட இடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதாக கூறி காவல்துறை அனுமதி மறுத்தது. வேறொரு இடத்தில் 03.11.2025 அன்று கண்டன கூட்டம் நடத்த மீண்டும் கோரிய போது அற்பத்தனமான காரணத்தை கூறி மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது. யாருக்கோ விசுவாசமாக நடந்து கொண்ட காவல்துறை இயக்கம் நடத்த அனுமதி மறுத்ததையடுத்து, தடையை மீறி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் க.சுவாமிநாதன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை அராஜகமாக இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக கைது செய்துனர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் ச.லெனின், செயலாளர் கே.மணிகண்டன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சித்ரா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில பொருளாளர் தீ.சந்துரு, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ச.ஆனந்த் சிபிஐ எம் மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இரவு 8 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுவிக்கும்போது, வேறொரு நாளில் அனுமதி கோரியிருந்தால் நாங்கள் அனுமதி கொடுத்திருப்போம். இவ்வளவு சிக்கல் ஏற்பட்டிருக்காது என்று காவல்துறை துணை ஆணையர் கூறினார். வேறொரு தேதியில் மீண்டும் அனுமதி கோருவோம், நீங்கள் அனுமதி கொடுங்கள் என்று கூறினோம். (மைக் வைத்து மக்களுக்கு இவர்களின் லட்சனத்தை சொல்லவேண்டாமா).
அய்யோ, அதெல்லாம் முடியாது. அதுதான் இன்று மறியலே செய்துவிட்டீர்களே. பெரிய போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திவிட்டீர்களே என்றார். நாங்கள் மறியல் செய்ய வரவில்லை. சாலையின் ஓரமாக மக்களுக்கு பாதகம் இல்லாமல் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது வகையில் கூடிய எங்களை சாலைக்கு விரட்டியது உங்களின் அணுகுமுறைதான் என்று கூறிவிட்டு வந்துள்ளோம்.
எஸ்சி/எஸ்டி ஆணையத்திற்கு கடிதம் அனுப்புங்கள், அவர்கள் சொல்லட்டும் அதன் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம் என்றார். ஆணையங்களுக்கு மனு கொடுப்பது உங்கள் உரிமை என்றார். மனு போடுவது மட்டுமல்ல போராடுவதும் எங்கள் உரிமைதான் என்று தெரிவித்தோம்.
#மடிப்பாக்கம் காவல்துறையின் இத்தகைய அராஜகத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியை இந்திராகாந்தி மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.


இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியதும் காவல்துறையோடு களத்தில் மோதியதும் எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் (முதல் இரண்டு படங்களில் போலீஸுடன் மோதுபவர்) என்பது ஒரு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினராக எனக்கு மிகவும் பெருமிதம் அளிக்கிறது.

வார்த்தைகளோடு நிற்காமல் களத்திலும் . . .

இச்சம்பவம் காவல்துறையை நோக்கி சில கேள்விகளை எழுப்பத் தூண்டியது. அக்கேள்விகள் தனி பதிவாக . . .

Thursday, October 20, 2022

நம்மூர் ஆட்டுத்தாடியின் அசிங்கமிது.

 



நேற்று முன் தினம் கேரள ஆட்டுத்தாடி அசிங்கப்படுவது பற்றி எழுதியிருந்தேன். இது நம்ம ஊர் ஆட்டுத்தாடி அசிங்கப்பட்ட கதை இது.

 

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தகவல் பலகையிலிருந்து.

 

*தகவல் பலகை (61): 18.10.2022*

#########################

 

*கோட்டை கனவில் கணக்கில் கோட்டை விட்ட கவர்னர்*

 

தமிழ்நாட்டின் பட்டியல் இனத்தவர்  கல்வி விகிதம் பற்றிய உண்மைக்கு மாறான தகவல்களுடன் தமிழ்நாடு கவர்னர் பேசியுள்ளார்.  பட்டியலின மக்களை ஏமாற்றத் துடிக்கும் கவர்னரின் செயல்

கடும் விமர்சனத்திற்கு உரியது.

 

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது 

 

"தமிழகத்தின் பள்ளிக் கல்வியில் மொத்த நுழைவு விகிதம் (GER) 51 சதவீதமாக இருக்கிறது. இது தேசிய சராசரியான 28 சதவீதத்தை விட அதிகம் ஆகும். ஆனால் பட்டியல் சாதியினர் மத்தியில் இது 13 அல்லது 14 சதவீதமாகவே உள்ளது. இது தேச சராசரியில் பாதிதான்... நாம் சமூக நீதி பற்றி பேசுகிறோம். நாம் வளர்ச்சி மாடல் பற்றி பேசுகிறோம். எல்லாம் வெறும் கூச்சல்தான்."

 

என்று பேசியுள்ளார். ( "இந்து" நாளிதழ் அக்டோபர் 18, 2022)

 

உண்மையிலேயே கவர்னருக்கு அக்கறை இருக்குமேயானால் சமூக நீதியைப் பேசாத வட மாநிலங்களுடன் ஒப்பிட்டு சொல்லி இருப்பார். இது சமூக நீதி கருத்தாக்கத்திற்கு அவர் வைக்கும் குறி. அரசியல் விளையாட்டுக்கு அவர் போடும் அச்சாரம். அவ்வளவுதான். 

 

ஆனால் அவர் அவசரத்தில் கணக்கில் கோட்டை விட்டு விட்டார். இந்து இதழ் நிருபர் பொன் வசந்த் செய்தியிலேயே அதை குறிப்பிட்டுள்ளார்.  

 

*முதல் கோட்டை,* இந்த 51 சதவீதம், 28 சதவீதம் என்கிற மொத்த நுழைவு விகிதம் (GER) பள்ளிக் கல்வி குறித்ததல்ல. அது 2019 - 20 உயர் கல்வி குறித்த ஆய்வின் புள்ளி விவரங்கள். அதில் தமிழ்நாடு விகிதம் 51.4 சதவீதம். தேசிய அளவு 27.1 சதவீதம். 

 

*இரண்டாவது கோட்டை,* தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் மத்தியில் உயர் கல்வி விகிதம் (GER) 13 அல்லது 14 சதவீதம் அல்ல. அது 39.6 சதவீதம். அதற்கான தேசிய சராசரி 23.4 சதவீதம். தமிழகம் அதிலும் தேசிய சராசரியை விட அதிகம்தான். 

 

யாருக்காகவோ கோட்டையில் கண் வைத்தால், இப்படி கோட்டை விடுவது இயல்புதான். அரசியல் கணக்கு தப்பாக இருந்தால் இப்படி கூட்டல் கழித்தல்களும் தப்பாகத்தான் வரும் கவர்னர் அவர்களே! 

 

கல்வியில் "சாதிய   இடைவெளி" இருப்பது உண்மை. ஆனால் அதற்காக கவர்னர் கண்களில் இருந்து வழிகிற "கண்ணீரில்"  உண்மை இல்லை. உண்மை உள்ளத்தில் இருந்தால் அவர் என்ன பேசியிருக்க வேண்டும்? 

 

சமூக நீதி பேசும் மண்ணிலும் சனாதனம் இன்னும் அலைக் கழிக்கிறது என்றல்லவா பேச வேண்டும்! சமூக நீதியைப் பேசாத மாநிலங்களில் சனாதனம் எப்படி இன்னும் மோசமாக, குரூரமாக ஆட்டம் போடுகிறது என்பதையும் சேர்த்து அல்லவா சொல்ல வேண்டும்! இதற்கு தீர்வு, நிலவுடைமை உள்ளிட்ட அடிப்படை அம்சங்களில் தேவைப்படும் மாற்றங்கள் என்பதை அல்லவா சொல்ல வேண்டும்! 

 

ஆனால் கவர்னர் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. 

 

ஏற முடியவில்லை என்றால் ஏணியை சரி செய்யலாம். ஆனால் பரிதாபப்படுவது போல ஏணியைத் தட்டி விடும் சூட்சுமம் இது. ஏமாறமாட்டார்கள் போலி முகங்களை காலமெல்லாம் பார்த்துப் பழகிய பட்டியல் சாதி மக்கள். 

 

*த.செல்லக்கண்ணு*

தலைவர்

 

*கே.சாமுவேல்ராஜ்* 

பொதுச்செயலாளர்

 

தீண்டாமை ஒழிப்பு முன்னணி