Thursday, November 4, 2010

சுனாமி நினைவலைகள் - மூன்றாம் பகுதி

29  டிசம்பர் 2004 ம்  நாள் காலையில் மதுரைக் கோட்டத் தோழர்களும் சேலம்
கோட்டத் தோழர்களும் வந்து சேர்ந்தார்கள், வேன் முழுதும் பொருட்களோடு.
தென் மண்டலப் பொறுப்பாளர்கள் தோழர்கள் சுவாமிநாதன் மற்றும் கிரிஜா
ஆகியோரும் வந்திருந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக் குழு
அலுவலகம் சென்று அங்கிருந்து கடலூர் மாவட்டச்செயலாளர் தோழர் எஸ்.
தனசேகரன் அவர்களை அழைத்துக் கொண்டு செல்வதாக ஏற்பாடு. கட்சி
அலுவலகத்தில் அனைத்து தோழர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான
ஏற்பாட்டினை செய்திருந்தனர். நாங்கள் அன்று செல்வதாக திட்டமிட்டிருந்த
இடங்கள் எல்லாமே பெரிய அளவில் உயிரிழப்பு நடந்த இடங்கள் என்றும்
கடற்கரை முழுதும் இன்னமும் துர்வாசம் கடுமையாக வீசிக் கொண்டிருப்பதால்
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று தோழர் எஸ்.டி.எஸ் விளக்கினார்.
அதே போல் முகத்தை மூடிக் கொள்ளும் துணியும் வரவழைக்கப்பட்டிருந்தது.
தடுப்பூசி மற்றும் துணிக்கான ஏற்பாட்டை மருத்துவப் பிரதிநிதிகள் சங்கத்
தோழர்கள் செய்திருந்தனர்.

கடலூரில் இருந்த திருமண மண்டபங்களிலேயே பலரும் தங்க வைக்கப்
பட்டிருந்தனர். சொந்த வீடு இருந்தும் இப்படி அனாதைகளாய் நிற்கிறோமே
என்ற கதறல் எல்லா இடங்களிலும் கேட்க முடிந்தது.  உணவு என்பது
ஒரு பிரச்சினையாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அரசோ
அல்லது மற்ற அமைப்புகளோ ஏற்பாடு செய்த உணவு என்பது அடிப்படையாக  சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம்
என்றுதான் இருந்தது. கடலிலே வாழ்க்கை நடத்தியவர்களுக்கு மீன்
இல்லாமல் உணவு மிகவும் அந்நியமாய் இருந்தது. இதனை சரியாக
உணர்ந்து கொண்டது மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான். சமைக்கப்பட்ட
உணவாக வழங்குவதற்குப்  பதிலாக  பொருட்களை அளித்து விட்டால்
அவர்களின் ருசிக்கேற்ப சமைத்துக் கொள்வார்கள் என்று மாவட்ட
நிர்வாகத்திடம் ஆலோசனை அளிக்க அதுவும் பின்பு அமுலானது.
இந்த நிலவரம் தெரியாமல் ஒரு மார்வாடி ஆயிரக்கணக்கில் சப்பாத்தி
செய்து கொண்டு வர அவை சீண்டுவாரில்லாமல் போயிற்றே என்று
புலம்பிய கதையும் நடந்தது.

அப்படி ஒரு மண்டபத்தில் நாங்கள் சந்தித்த பெண் தாழங்குடா என்ற
கிராமத்தைச்சேர்ந்த பாக்கிய லட்சுமி. அப்பெண்ணின் தந்தை சுனாமியில்
இறந்து போயிருந்தார். எதிர் காலத்தை பற்றிய கவலையை பத்தாவது
படித்துக் கொண்டிருந்த அப்பெண் வாய் விட்டு அழுதே வெளிப்படுத்தினாள்
எனக்கு உணவோ, உடையோ வேண்டாம், நான் படிப்பை தொடர்வதற்கு
மட்டும் உதவி செய்யுங்கள் என்ற கோரிக்கை வைத்தாள். இன்று அந்தப்
பெண் ஒரு பட்டதாரி. பதினொன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான  அனைத்து கல்விச்செலவுகளையும் காப்பிட்டுக் கழக
ஊழியர் சங்கம் வேலூர் கோட்டம் தான் ஏற்றுக் கொண்டது. அதற்காக
நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியே தனியாக எழுத வேண்டும்.

சுனாமி உருவாக்கிய பாதிப்புக்கள் பற்றி அன்றைய பயணத்தின் போது
நன்றாக அறிந்து கொள்ள முடியும். கனமான படகுகள் உருக்குலைந்து
போயிருந்தன. தென்னை மரங்கள் உடைந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டு  இருந்தன. கேக்கை கத்தியால் வெட்டி எடுத்தால் எவ்வளவு
கச்சிதமாக இருக்குமோ அது போல வீட்டின் சுற்றுச்சுவர்கள்,  சிறிய
கல்வெர்டுகள்  ஆகியவை துண்டிக்கப்பட்டிருந்தன. எவ்வளவு உயரம் வரை
தண்ணீர் வந்ததற்கு அடையாளமாக வீடுகளில் ஈரமான கோடுகள் இருந்தன.

ஒரு சுற்றுலா தளமாக உருவாக்கப் பட்டிருந்த கடலூர் வெள்ளிக் கடற்கரையில் செய்யப்பட்டிருந்த அழகுப் பணிகள் எல்லாமே அழிந்து
போயிருந்தது. ஒரு வீட்டில் திருமணத்திற்கு காத்திருந்த பெண்ணையும்
திருமணத்திற்காக பாடுபட்டு சேர்த்த நகைகளையும் கடல் கொண்டு போக
அந்தப் பெண் வாழ்ந்ததற்கு சாட்சியாக இருந்த ஒரே ஒரு புகைப்படத்தைக்  காட்டி காட்டி ஒரு தாய் அழுது கொண்டிருந்தார். இது போல
எத்தனையோ கதறல்கள், சோகங்கள்.

கொண்டு போயிருந்த அனைத்துப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு 
பெரியகுப்பம் என்ற கிராமத்தில்  அமர்ந்து அடுத்து என்ன செய்வது  என்று 
விவாதித்தோம்.  உணவு, உடை போன்ற கட்டங்களுக்குப் பிறகு அடுத்த 
கட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் உருவாக்கி விட்டது என்பதால் 
அடுத்த கட்ட நிவாரணப் பணியை வீட்டு உபயோகப் பொருட்களாக வழங்குவது , முறையாக திட்டமிட்டு அமுலாக்குவது என்ற 
முடிவோடு அவரவர் ஊர் திரும்பினோம். 

கடைசியாக வாகனத்திலிருந்து எனது வீட்டில் இறங்கி ஓட்டுனருக்கு 
கணக்கு பார்த்து பணம் கொடுக்கையில்  அவர் ஒரு ஐநூறு ரூபாயை 
திருப்பி அளித்தார். நீங்கள் செய்யப்போகும் அடுத்த கட்ட பணிக்கு 
எனது பங்காக இருக்கட்டும் என்று கூறி. 

அடுத்த கட்ட பணி  ?  இன்றும் மலைக்க வைக்கும் வாழ்நாள் பணி !

                                                                                                நினைவலைகள் ஓயாது 

Monday, November 1, 2010

சுனாமி நினைவலைகள் - இரண்டாம் பகுதி

27  ம் தேதி மாலை புதுவை சென்று முதலில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச
செயலாளர் தோழர் பெருமாள் அவர்களை சந்தித்தோம். நாங்கள் சென்ற போது
மாலை ஏழு மணிக்கு மேல் இருக்கும். அப்போது அவர் பாதிப்புக்கள் பற்றிய
விபரங்களைச்சொல்லி அந்த நேரத்திற்கு மேல் கடற்கரை பக்கம் செல்ல  வேண்டாம்  என்றும் மறுநாள் காலையில் சென்னையில் இருந்து தோழர்
என்.வி தலைமையில் ஒரு குழு வருகின்றது என்றும் அவர்களோடு
இணைந்து கொண்டு வந்த பொருட்களை மக்களிடம் அளிக்கலாம் என்று
அவர் வழி காட்டினார். தோழர் ஆர்.பி.எஸ் மற்றும் ராம்ஜி ஆகியோர்
எங்களோடு இணைந்து கொண்டனர்.

இருபத்தி எட்டாம் தேதி காலையில் சென்னையில் இருந்து வந்த குழுவில்
தோழர்கள் என்.வி, கே.பி, ஜி.ஆர், நன்மாறன், பாலபாரதி எஸ்.கே.மகேந்திரன்,  சுதா சுந்தரராமன் ஆகியோர் இருந்தனர். அவரவர்கள் தங்கள் குடும்பத்தில் 
ஏற்பட்ட இழப்புக்கள், பொருட்சேதம் ஆகியவற்றைப் பற்றி ஒரு குடும்பத்தின்  மூத்த பெரியவரிடம் கூறுவது போல தோழர் என்.வி யிடம் சொல்லி அழுதனர். பிள்ளைச்சாவடி, காலடிப்பட்டு ஆகிய இரண்டு இடங்களில்  நாங்கள்  எடுத்துக் கொண்டு போயிருந்த பொருட்களை 
தோழர் என். வி கையால் வழங்க வைத்தோம்.  நாங்களும் மக்களிடம் 
நேரடியாய் பொருட்களை தர வேண்டும் என்பதில் அவர் மிகவும் கறாராய் 
இருந்தார். அதுதான் தலைமைப் பண்போ ! 

புதுவைப் பல்கலைக் கழக வளாகத்திற்குப் போன போது அங்கே ஒரு 
தம்பதியின் அழுகை மிகவும் பாதித்தது. அவர்களின் இரண்டாவது குழந்தை 
ஒரு வருடக் கைக்குழந்தை. ஒரு முள் புதரில் அக்குழந்தையின் உடலைக் 
கண்டெடுத்து அப்போதுதான் அடக்கம் செய்து விட்டு வந்திருந்தார்கள். 
தேவர் மகன் படத்தில் ஒரு காட்சி வரும். ஏரி உடைபட்ட வெள்ளத்தில் 
ஒரு குழந்தை இறந்து போய் முள் செடிகளுக்குள் சிக்க கமலஹாசன் 
அதை பார்த்துக் கதறுவார். திரைப்படம் பார்த்தவர்கள் ஒரு கணம் 
அதிர்ச்சிக்குள்ளாவார்கள்.  அக்காட்சியை  தங்கள் சொந்த வாழ்வில் அனுபவித்த பெற்றோர், அதிலும் அந்த தாயின் கதறல் எனது பல நாள்
தூக்கத்தை தொலைக்க வைத்தது.

புதுவையில் பார்த்த காட்சிகளே எவ்வளவு மோசமான அழிவை சுனாமி
உருவாக்கி இருந்தது என்பதை உணர்த்தியது. கூடுதல் உதவி செய்ய வேண்டிய கடமை உள்ளது என்பதும் புரிந்தது. தாராளமாக உதவி
செய்யுங்கள் என்று முதல் சுற்றறிக்கையில் உறுப்பினர்களுக்கு  வேண்டுகோள்  விடுத்திருந்தோம். அதனை மாற்றினால் 
சரியாக இருக்கும் எனக் கருதி புதுவை அலுவலகத்திலேயே அமர்ந்து 
ஒரு நாள் ஊதியம் தாரீர் என்று புதிய சுற்றறிக்கை அனுப்பினோம். கோட்ட
மாநாடு அப்போதுதான் புதுவையில் நடைபெற்றிருந்தது. மாநாட்டு நிதி 
கொஞ்சம் பாக்கி இருந்தது. ஊழியர் பங்களிப்பு வரும்வரை காத்திராமல் 
இந்த நிதியை  தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து 
போர்வைகள் வாங்கி காரைக்காலுக்கு எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்தோம்.

தமிழகத்தில் எட்டு எல்.ஐ.சி கோட்டங்கள் உண்டு. சென்னையில் இரண்டு கோட்டங்கள்,  வேலூர், கோவை, சேலம், மதுரை, தஞ்சை, திருநெல்வேலி ஆக மொத்தம் எட்டு. இவற்றிலே கோவை, சேலம், மதுரை கோட்டப் பகுதிகளில்   கடல் கிடையாது. மற்ற ஐந்து கோட்டங்களும் தங்களால் இயன்ற பணிகளை உடனடியாக துவக்கியிருந்தோம். கோவைக் கோட்ட மகளிர் துணைக்குழு எங்களுக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் அனுப்பி உடனடிப் பணிகளுக்கு இத்தொகையைபயன்படுத்தி கொள்ளுங்கள் என்றிருந்தார்கள். மதுரை மற்றும் சேலம் கோட்டத் தோழர்கள் தொலைபேசியில் கூப்பிட்டு தாங்கள் மறுநாள் நிவாரணப்பொருட்களோடு  வருகின்றோம் என்று சொல்லி நீங்களும் அங்கேயே இருக்க வேண்டும்  என்று அன்புக் கட்டளையிட்டனர்.  ஆக அன்று ஊர் திரும்புவதாக
போட்டிருந்த திட்டத்தை கைவிட்டோம்.


கடலூரில் சில பகுதிகளைப் பார்த்து விட்டு பொருட்களை அளித்து விட்டு
சிதம்பரம் தாண்டி கிள்ளை சென்றோம். பல பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள்  கிள்ளையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். சிதம்பரம்
கிளைச்செயலாளரும் எங்கள் கோட்ட இணைச செயலாளருமான
தோழர் சி.வெங்கடேசன் சுனாமி நிகழந்ததிலிருந்தே அங்கேதான் இருந்தார்.
(இவரது பணிகள் பற்றி மட்டுமே தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும். அவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்றிய அற்புதத் தோழர் )

சென்னையிலிருந்து வந்த தலைவர்களும் அப்போது கிள்ளை வந்திருந்தனர்.  புடவை போன்றவை ஏதேனும் கையிலிருந்தால் எடுத்து
வாருங்கள் என்று தோழர் கே.பி சொல்ல உள்ளே நுழைவதற்குள்
அப்படியே கூட்டம் மொய்த்துக் கொண்டு விட்டது. மூச்சு விடக்கூட
முடியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச்செயலாளர்
தோழர் எஸ்.தனசேகரனும் தோழர் மூசாவும் கூட்டத்தை ஒழுங்கு படுத்த
ஒரு வழியாக தப்பி வெளியே வந்தோம்.  இனி இந்த ஊர் பக்கமே
வரக்கூடாது என்று பேசிக்கொண்டே கடலூர் நோக்கிப் புறப்பட்டோம்.
கிள்ளை அவ்வளவு சுலபமாக எங்களை விடப்போவதில்லை என்பது
யாருக்கும் அப்போதும் தெரியாது.
                                                                                                   நினைவலைகள் தொடரும்