
இன்று சென்னை சென்று வந்தேன். வாஜ்பாயின் கனவுத் திட்டம் என்று சொல்லப்படுகிற தங்க நாற்கரச்சாலை முழுக்க முழுக்க பாழடைந்து ஒட்டு வேலைகளால் (Patch Work) நிரம்பியிருந்தது.
வெள்ளை கேட் என்ற இடத்திலிருந்து சாலையில் எத்தனை ஒட்டு வேலைகள் செய்யப்பட்டுள்ளது என்று எண்ணத் தொடங்கினேன். இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாக ஐம்பத்தி இரண்டு இடங்களில் ஒட்டு வேலை செய்யப்பட்டிருந்தது. வெறுப்பாகி எண்ணும் வேலையை நிறுத்தி விட்டேன்.
காசு கொடுத்து பயணம் செய்யும் சாலையின் லட்சணமே இப்படியென்றால் தமிழக சாலைகளின் நிலை எப்படி இருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமோ?
எனது வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனர் ஒரு விஷயத்தைச் சொன்னார்.
சி.எம்.சி மருத்துவமனையில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் பங்கேற்க ரஷ்யாவிலிருந்து வந்த ஒரு மருத்துவரை சென்னை விமான நிலையத்திலிருந்து அழைத்து வருகையில் அவர் இந்த ஒட்டு வேலைகளைப் பார்த்து இடியெனச் சிரித்தாராம். முக்கியமான ஒரு நெடுஞ்சாலையில் இப்படி மோசமாக வைத்துள்ள ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் என்றும் சொன்னாராம்.
ஒபாமாவோடு பேசுகையில் ஒரு நாளைக்கு மூன்று முறை உடை மாற்றுவதில் கவனம் எடுத்துக் கொள்கிற மோடியின் ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கிற நிதின் கட்காரி இது போன்ற விஷயங்கள் மீதும் கவனம் எடுத்துக் கொள்ளலாமே!