தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் இன்று வேலூரில் தோழர் ஐ.மா.பா அவர்களுக்கு நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெறவுள்ளது. மதுரை கிழக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மேடைக் கலைவாணர் தோழர் என்.நன்மாறன் அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார். ஹோட்டல் மவுண்ட் பாரடைஸ் பின்பாக உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு கூட்டம். இதைப் படிக்கிற வேலூர்வாசிகளை அவசியம் வருமாறு அழைக்கிறேன்.
இன்றைய நிகழ்விற்கான அழைப்பிதழ்களை தோழர்களிடம் கொடுத்த போது தோழர் நன்மாறன் பற்றி இரண்டு தோழர்கள் பகிர்ந்து கொண்டதை இங்கே பகிர்ந்து கொள்வதுதான் இந்த பதிவின் நோக்கம.
எங்கள் வேலூர் கோட்ட மாநாட்டின் ஒரு பகுதியாக பொது வெளியில் மக்கள் ஒற்றுமை கலை விழா நடைபெறும். அதில் தமிழகத்தின் சிறந்த முற்போக்கு பேச்சாளர்களின் உரைவீச்சு நடைபெறும். இரண்டாண்டுகள் தோழர் என்.நன்மாறன் அவர்கள் எங்கள் கலை இரவில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
வாணியம்பாடியில் மாநாடு. இரவு கலை இரவு. காலை பொது மாநாட்டிலும் தோழர் நன்மாறன் பங்கேற்றார். அவர் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் தோழர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்கிறேன் என்று பிரதிநிதிகள் மாநாட்டிலும் வெகு நேரம் கலந்து கொண்டார். இரவு அவரை கலை இரவு நடக்கும் இடத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை அதாவூர் ரஹ்மான் என்ற தோழருக்கு அளித்திருந்தோம்.
தோழர் அதாவூர் ரஹ்மான் வார்த்தைகள் கீழே.
" கலை இரவு நடக்கும் இடம் ஒரு ஒன்றரை கிலோ மீட்டர் இருக்கும். ஒரு ஆட்டோ பிடித்து வருகிறேன் என்றேன். எதுக்கு தோழர் ஆட்டோவிற்கு தேவையில்லாமல் செலவு செஞ்சுகிட்டு? வாங்க காலாற நடந்து போகலாம் என்று சொன்னார். மொத்த தூரமும் நடந்தே போனோம். போகும் வழியில் வாணியம்பாடி பற்றிய மொத்த விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஒரு டீக்கடையில் நின்றபடியே டீ சாப்பிட்டு விட்டு மேடைக்கு வந்தோம். அவருடைய எளிமையையும் பழகிய விதத்தையும் பார்த்த யாரும் அவரை எம்.எல்.ஏ என்றே நமப மாட்டார்கள்"
தோழர் நன்மாறன் அடுத்து கலந்து கொண்டது விழுப்புரம் மாநாட்டு கலை இரவில்.
சென்னையிலிருந்து நேரடியாக பேருந்தில் வந்து இறங்கியவரை கலை இரவு மேடைக்கு அழைத்து வரும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டவர்கள் கங்காதரன், கணேசன் என்ற தோழர்கள்.
இப்போது தோழர் யு.கங்காதரன் சொன்னதை படியுங்கள்.
"கலை இரவு மேடைக்கு போறதுக்கு முன்னாடி மண்டபத்துக்கு போய் அவரு சாப்பிடட்டும் என்று அங்கே அழைத்துப் போனால் அங்கே உணவு தீர்ந்து போயிருந்தது. ஆனால் அதற்காக அவர் கோபப்படலை. அந்த தெருக் கோடியில ஒரு தள்ளு வண்டியில இட்லி விக்கறாங்க. அதில ஒரு ரெண்டு இட்லி சாப்பிட்டுப் போயிடலாம் என்றார். சரி ரூமுக்கு வந்து முகம் கழுவி ட்ரெஸ் மாத்திக்குங்க என்று சொன்னேன். மண்டபத்தின் வாசலிலேயே ஒரு பைப் இருந்தது. அதைத் திறந்தார். குனிந்த படியே அதில் முகம் கழுவினார். சட்டையை கையாலேயே இழுத்து விட்டுக் கொண்டு சீப்பு இருக்கா என்று கேட்டார். கொடுத்தவுடன் தலை வாரி போகலாம் தோழர் என்று கிளம்பி விட்டார். எம்.எல்.ஏ ங்கற பந்தா கொஞ்சம் கூட இல்லாத மனிதர்"
இந்த இரண்டு நிகழ்வுகளின் போதும் அவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
நேரடியாக அனுபவித்ததால் அந்த தோழர்கள் இன்றும் அதனை மெய் சிலிர்க்கும் அனுபவமாக உண்ர்கின்றனர்.
தோழர் நன்மாறன் மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் எல்லோருமே இந்த எளிமையோடுதான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள்.
பத்து லட்ச ரூபாய் கோட்டு போடவோ, எழவு வீட்டில் கூட மூன்று முறை உடை மாற்றவோ அவர்கள் நரேந்திர மோடியா என்ன?
