Showing posts with label மதச்சார்பின்மை. Show all posts
Showing posts with label மதச்சார்பின்மை. Show all posts

Saturday, January 20, 2024

இதுதான்டா மதச்சார்பின்மை நாடு

 தமுஎகச அமைப்பின் துணைப் பொதுச்செயலாளரும் எங்கள் தஞ்சைக் கோட்டத் தோழருமான களப்பிரன் அவர்களின் அனுபவப் பகிர்வு, ஒரு மதச்சார்பற்ற நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முழுமையாக படியுங்கள்.

அவரிடம் இன்னொரு ஸ்பெசல் ஐட்டம் உள்ளது. அநேகமாக அதை அவர் நாளை வெளியிடுவார் என்று நம்புகிறேன்.

"இந்தியாவில் மட்டும் தான் மதச்சார்பின்மை பத்தி பேசுவீங்க. ஏதாவது ஒரு இஸ்லாமிய நாட்டில் பேசுங்களேன் பார்ப்போம்" என்று யாராவது ஒரு சங்கி கிளப்பிவிட்ட கேள்வியை, ஏன் எதற்கு என்று கூட கேட்காமல் அப்படியே நம்மிடம் வந்து ஒப்பிக்கும் அப்பாவிகளுக்காக...

கஜகஸ்தான் ஒரு இஸ்லாமிய பெரும்பான்மை நாடு. மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 71% கிருஸ்தவர்கள் 17% குறிப்பிட விரும்பாதோர் 9.5% நாத்திகர்கள் 2.3% இதர மதத்தினர் 0.2%

இஸ்லாமிய பெரும்பான்மை இருந்த போதும் கஜகஸ்தான் அரசியலமைப்பு தன்னை ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அறிவித்துக் கொண்டுள்ளது. சும்மா பெயருக்கல்ல. உண்மையாகவே மதச்சார்பற்ற நாடு தான்.

அந்நாட்டு சட்டம் மக்கள் அனைவரும் அவரவர் மத சுதந்திரத்தோடு வாழ உறுதி அளிக்கிறது. ஆனால் அரசு இயந்திரம் முழுவதும் மதச்சார்பின்மையை மட்டுமே கடைபிடிக்க வலியுறுத்துகிறது. அந்த நாட்டு சட்டப்படி அரசு விவகாரங்களில் மதம் தலையிடக்கூடாது. உதாரணத்திற்கு அங்குள்ள கல்விக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் உள்ளிட்ட எதிலும் எந்த மத சடங்குகளும் கூடவே கூடாது. ஆனால் அவரவர் வழிபடும் இடங்கள் முழு சுதந்திரத்துடன் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் நம்மூரில் மதச்சார்பின்மை அரசியல் சட்டத்தில் இருக்கிறது. இங்கே தான் கட்டிமுடிக்கப்படாத #இராமர் கோவில் திறப்புக்கு நாடு முழுவதும் விடுமுறை விடப்படுகிறது. என்னங்க சார் உங்க சட்டம்.

ஆனால் கஜகஸ்தானில் பார்த்த காட்சிகள் முற்றிலும் வேறானவை. இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் அல்மாட்டி நகரின் பிரபலமான சுற்றுலா தலம் ஒரு #தேவாலையம். அதற்கு அடுத்த நிலையில் தான் அங்குள்ள #மசூதி இருக்கிறது. தேவாலயம் முதன்மை பெறக் காரணம் அதன் கலாச்சாரப் பாரம்பரியம். அங்கு மதம் அடுத்த நிலை தான்.

#Zenkovs_Cathedral எனும் Ascension Cathedral இரஷ்ய பேரரசின் காலத்தில் (1904 - 1907) கட்டப்பட்டது. கட்டிடக் கலைஞர் #Andrei_Zenkov வால் இது கட்டப்பட்டதால் அவரின் பெயரிலேயே இன்றும் அழைக்கப்படுகிறது.

இந்த தேவாலயம் முழுவதும் மரத்தால் கோர்த்து கட்டப்பட்ட இரஷ்ய பாரம்பரிய கட்டிடக்கலையை கொண்டது. மரத்தால் கட்டப்பட்ட உயரமான தேவாலயங்களில் இது முதன்மையானதும் கூட. பனி சூழ்ந்த பகலில் அதன் அழகு சொற்களால் சொல்ல இயலாது. தேவாலயத்தின் உள்ளே எத்தனை எத்தனை வண்ணங்கள். பெரும் பெரும் சுவர் ஓவியங்களும், கண்ணாடி ஓவியங்களும், நேர்த்தியான வடிவமைப்புகளும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இதன் கட்டுமானம் பூகம்பத்தை தாங்கும் வகையில் தனித்துவமான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. ஒரு முறை அந்நகரத்தில் ஏற்பட்ட பூகம்பத்திலும் உயிர் பிழைத்து இன்றும் அதே கம்பீரத்தோடு நிற்கிறது தேவாலயம். இந்த ஆலயம் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் வழிபடும் இடமாக உள்ளது.

அதிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அவ்வூரின் பெரிய மசூதி. 1999ல் தான் கட்டப்பட்டுள்ளது. தேவாலயத்தை விட பிரம்மாண்டமாக புதிய தொழில் நுட்பத்தோடு கட்டியிருக்கலாம். ஆனால் அப்படி கட்டவில்லை. ஒப்பீட்டளவில் அந்த தேவாலயத்தை விட மசூதி சிறிய அளவிலேயே கட்டப்பட்டுள்ளது. அதோடு அதன் கட்டுமானமும் இஸ்லாமியர்களின் நிதி உதவியால் கட்டப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பெரும்பான்மை உள்ள நாட்டில் பார்க்கும் இடமெங்கும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. யார் #கிறிஸ்தவர், யார் #இஸ்லாமியர் என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு கலந்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் எல்லா குடிமக்களும் தங்கள் மதச்சார்பின்மையை அறிவிக்கலாம், நாத்திகர்களாக பதிவு செய்து கொள்ளலாம் எனும் வாய்ப்புகளும் உள்ளது. இதுவெல்லாம் அந்நாட்டில் எப்படி சாத்தியமானது. ஒன்றே ஒன்று தான். அது சோவியத் அந்நாட்டிற்கு கொடுத்த கொடை. அதன் மூலம் பரவலாக்கப்பட்ட கல்வி அதில் முக்கியப் பங்கு வகித்தது. கல்வி வந்தால் #சாதி, #மதம் எல்லாம் கொஞ்சம் தள்ளி நிற்கும்.

#அல்மாட்டி நகரில் மட்டும் 7000 இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள். அதில் 95% வட இந்திய மாநிலத்தவர். நம்மை விட GDPயில் குறைந்த நாடு, ஆனால் அங்கே கல்விக்கு அவ்வளவு வாய்ப்பு. ஆனால் நம்மூர் GDP சதவிகித அடிப்படையில் மிக அதிகம். ஆனால் அது அதானிக்கும் அம்பானிக்கும் மட்டும் தான் பெரிய வாய்ப்பாக உள்ளது.

இங்கே என்ன நடக்கிறது? பல லட்சம் கோடிகள் நகர் மேம்பாட்டிற்கு கொட்டப்பட்டு, தனி விமான நிலையம் வரை கட்டப்பட்டுள்ள #அயோத்தியில் இன்று வரை ஒரு நல்ல மருத்துவமனை கூட கிடையாது. உடல் நிலை சரியில்லை என்றால் #லக்னோ செல்லவேண்டும் என்று அம்மக்கள் சொல்கிறார்கள். நல்ல பள்ளிக்கூடமோ, ஒரு மருத்துவக்கல்லூரியோ, பொறியியல் கல்லூரியோ எதுவும் கிடையாது. படித்தால் நீ எப்படி மசூதியை இடிக்க வருவ... அங்கே எப்படி கோவில் கட்ட வருவ... என்று சொல்லாமல் சொல்வது போல் உள்ளது இன்றைய இந்தியாவின் நிலை
😢

Wednesday, January 4, 2023

ஆட்டுக்காரன் வீடியோ அருமை

 




எந்த உள் நோக்கமும் இல்லாமல் நிஜமாகவே ஆட்டுக்காரனை பாராட்டி எழுதுகிற பதிவு,

கீழே உள்ள காணொளியை பாருங்கள். ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முக நூல் பதிவில் பார்த்தது.


ஆட்டுக்காரன் காக்கிச்சட்டை போட்டிருந்த போது பேசிய பேச்சு. கன்னடமாக இருந்தாலும் புரிந்து கொள்ளலாம்.

"சிருங்கேரி சங்கர மடத்தின் மீது திப்பு சுல்தானின் படை தாக்குதல் நடத்தியது. குரு கடிதம் அனுப்புகிறார். எனக்கு தெரியாமல் நடந்த விஷயம் இது. நானே நேரில் வந்து மன்னிப்பு கேட்கிறேன் என்று போகிறார். குருவை பார்த்து மன்னிப்பு கேட்கிறார். 200 க்கும் மேற்பட்ட கிராமங்களை மடத்துக்கு எழுதி வைத்து அதன் மூலம் வரும் வருமானத்தை பயன்படுத்தச் சொல்கிறார். அது மட்டுமல்ல, ரூபி, மரகத மணி, டைமண்ட் வைத்த கிரிடத்தை தருகிறார். அதை இப்போதும் நவராத்திரியின் போது அம்மனுக்கு அணிவிக்கிறார்கள்.

அது மட்டுமல்ல கொல்லூர் மூகாம்பிகா கோயிலுக்கு தங்கம் நிறைய தானம் செய்துள்ளார்கள். இப்போதும் மாலை ஆறு மணிக்கு எடுக்கும் ஆரத்திக்கு திப்பு ஆரத்தி என்றே பெயர்.

இதெல்லாம் வரலாறு. வரலாற்றை மாற்ற விடக்கூடாது. இதுதான் மதச் சார்பின்மை, நம் இந்தியாவின் சிறப்பு."

இந்த உரையை யாரும் மோடிக்கோ, யெடியூரப்பாவிற்கோ, கர்னாடக பொறுக்கி என்.பி தேஜஸ்விக்கோ அனுப்பி ஆட்டுக்காரனை பிரியாணியாக்கி விடாதீர்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். 

Sunday, February 24, 2019

பிரியாணி, கேக், கொழுக்கட்டை


மதம் – நம்பிக்கை, வெறி, சார்பின்மை, நல்லிணக்கம் பற்றி



இது மிகவும் அடிப்படையான ஒரு விஷயம்தான். ஆனால் சிலர் அறைகுறையாக புரிந்து கொண்டுள்ளனர். சிலர் புரிந்து கொள்ளவே தயாராக இல்லை. சிலர் முற்றிலும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். சிலர் தவறான கருத்துக்களை வம்படியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மத நம்பிக்கை

இன்று உலகில் பல மதங்கள் நடைமுறையில் உள்ளன. ஏதோ ஒரு மதத்தை  பெரும்பாலான மக்கள் பின்பற்றுவது என்பது எந்த அளவு உண்மையோ அதை விட பெரிய உண்மை மதம் என்பதும் மனிதன் கண்டுபிடித்த அமைப்புதான் என்பது. இன்று மதம் நிறுவனமயமாக்கப் பட்டுள்ளது என்ற உண்மையைப் போலவே  மதத்தின் மீது நம்பிக்கை அற்றவர்களும் உள்ளார்கள் என்பதும் ஒரு மறுக்க முடியாத உண்மை.

தான் சார்ந்துள்ள மதத்தை பின்பற்றுவதும் அதற்கேற்றார்போல் அந்த மதத்தின் வழிபாட்டை கடைபிடிப்பதும் அவரவர்களின் உரிமை. தனிப்பட்ட விஷயம். அதை கேள்வி கேட்கவோ, தலையிடவோ யாருக்கும் உரிமை கிடையாது. வழிபாட்டுச் சுதந்திரத்தை அனைத்து இந்திய மக்களுக்கும் அரசியல் சாசனம் அளித்துள்ளது.

நீங்கள் இந்த மதத்தைத்தான் பின்பற்ற வேண்டுமென்றோ, அல்லது பின்பற்றக் கூடாது என்றோ கட்டளையிடும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

மத வாதம்

என் மதம்தான் சிறந்தது, மற்ற மதங்கள் எல்லாம் போலி என்று சொல்வது மத வாதம். இதுவே முற்றிப் போகிற போது அது மத அடிப்படை வாதமாக மாறுகிறது.

சில மாதங்கள் முன்பாக முக நூலில் ஒரு நண்பர் ஒரு பதிவிட்டிருந்தார். ஏதோ சில ஆழ்வார் பாசுரங்களை பதிவிட்டு அதற்கு விளக்கமும் சொல்லி இருந்தார். அதன் சாராம்சம் இதுதான்

“பெருமாளை கடவுளாக வழிபட்டவன் வேறு எந்த கடவுளையும் மதிக்க மாட்டான். பெருமாள் தவிர வேறு யாரையும் கடவுளாகவே கருதுவது கிடையாது”

நாத்தீகர்களை எப்போதும் வசைபாடும் அவரை

“நீங்கள் பெருமாளைத் தவிர வேறு யாரையும் கடவுளாக கருதுவது கிடையாது. நாத்திகர்கள் பெருமாளையும் கடவுளாகக் கருதுவது கிடையாது. உங்களுக்கும் நாத்தீகர்களுக்கும் பெருமாளைத் தவிர வேறு முரண்பாடு இல்லாத போது அவர்களை மட்டும் ஏன் திட்டுகிறீர்கள்?”

என்று நான்  கேள்வி கேட்க,  அவர் பதில் சொல்லாமல் நழுவி விட்டார்.

மத அடிப்படைவாதம் என்பது இதுதான்.

மத வெறி

மத அடிப்படைவாதத்தின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிதான் மத வெறி. அடுத்த மதத்தவர் மீது காழ்ப்புணர்வு கொள்வதும், இழிவு படுத்துவதும் மாற்று மதத்தவரை வம்புக்கு இழுப்பதும் கொலை, கலவரம் என்ற அளவிற்குச் செல்வதுமாகும். மனிதத் தன்மை என்பது மறந்து போன கட்டம் இது.

மதச் சார்பின்மை.

சார்பின்மை என்ற வார்த்தையே விளக்கம் சொல்லி விடுகிறது. மதச்சார்பின்மை என்பது தனி நபர் சார்ந்தது கிடையாது என்பதுதான் முதலில் சொல்ல வேண்டிய செய்தி.

எந்த ஒரு அரசும் மதத்தை சார்ந்திருக்கக் கூடாது என்பதுதான் மதச் சார்பின்மை.  மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதுதான் மதச்சார்பின்மையின் கோட்பாடு.

மதச் சார்பின்மை என்பது அரசுகளும் அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டிய ஒன்று.

மத உணர்வுகளைத் தூண்டுவதுதான் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் உத்தி என்பதால் அவர்களுக்கு மதச்சார்பின்மை என்ற வார்த்தையே பாகற்காயாக கசக்கிறது. மதச்சார்பின்மை கொள்கையை உயர்த்திப் பிடிக்கிற கட்சிகளை வசை பாடுகிறார்கள். சிறுபான்மை மக்கள் மீது இவர்கள் நிகழ்த்துகிற தாக்குதல்களை கண்டிப்பவர்களை போலி மதசார்பின்மைவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

பெரும்பான்மை அடிப்படைவாதம் தேசியமாக புகழப்படும், சிறுபான்மை அடிப்படைவாதம் தீவிரவாதமாக சித்தரிக்கப் படும் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.

காவிகளின் தேச பக்தி என்ன என்பதை “தேசத் துரோகி பேசுகிறேன்” பதிவில் விரிவாகவே எழுதியுள்ளதால் மீண்டும் அந்த விஷயத்திற்குள் செல்லவில்லை.  சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இவர்கள்தான் “போலி தேசியவாதிகள்”

ராமருக்கு கோயில் கட்டுவது என்பது வெறும் அரசியலுக்காக உணர்வை தூண்டுகிற வேலையைத் தவிர வேறொன்றும் இல்லை.  நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் சிவாஜி, குரு கோவிந்த்சிங் உள்ளிட்ட பலரின் படமெல்லாம் இருக்கிறது. ஆனால் ராமரின் படம் கிடையாது. மகாத்மா காந்தி ஒரு முறை அந்த அலுவலகத்திற்கு சென்ற போது “ராமரின் படத்தை வைக்கலாமே” என்று கேட்ட போது ராமர் ஒன்றும் முஸ்லீம்களுக்கு எதிராக சண்டை இடவில்லையே என்று பதில் வந்துள்ளது.

ஐந்தாண்டுகளுக்கு முன்பாக எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாடு நாக்பூரில் நடைபெற்ற போது இப்போதாவது ராமர் படம் அங்கே உள்ளதா என்று பார்ப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு எங்களின் தஞ்சைக் கோட்ட தோழர்கள் இருவர் சென்று வந்துள்ளனர். நாங்களும் ஆர்,எஸ்.எஸ் காரர்கள்தான் என்று அறிமுகம் செய்து கொண்ட அவர்களுக்கு நல்ல மரியாதை கொடுத்து சர்சங்சாலக் அறை வரை முழுதும் சுற்றிக் காட்டி உள்ளார்கள். எங்கேயும் ஒரு போஸ்ட் கார்ட் சைஸ் அளவில் கூட ராமர் படம் இல்லை.

ஆக ராமருக்கு கோயில் என்பது பக்தியினால் எழுப்பப்படும் முழக்கம் அல்ல, வெறும் அரசியல் கோஷம்தான் என்பதை பக்தர்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை

இந்த இரண்டும் பிரிக்க முடியாத இரட்டையர்.

ஒரு மதத்தவர் மாற்று மதத்தவரை மரியாதையோடு அணுகுவதும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதும் மத நல்லிணக்கமாகும்.

இது இந்தியாவில் காலம் காலமாக இருக்கத்தான் செய்கிறது. வரலாற்றில் எத்தனையோ உதாரணங்களை சொல்ல முடியும். 

இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல்  குரல்    எழுந்த எங்கள் வேலூர் மண் அதற்கான  சிறந்த உதாரணமாகும். இந்து முஸ்லீம் சிப்பாய்கள் ஒன்றிணைந்து வெள்ளையருக்கு எதிராய் போராடியதை சொல்ல முடியும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வாவர் மசூதிக்கு செல்வதும் ஒரு சிறந்த உதாரணம்.

அந்த நல்லிணக்கம் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. ரம்ஜான் பிரியாணியும் தீபாவளி பட்சணங்களும்   கிறிஸ்துமஸ் கேக்குகளும்   பரிமாறிக்கொள்ளப்படுவதும்    பகிர்ந்து கொள்ளப்படுவதும் நடந்து கொண்டுதானே இருக்கிறது!

உங்கள் வீட்டில் சாமிக்கு படைக்கப்பட்டதை நாங்கள் தொட மாட்டோம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது மத அடிப்படை வாதத்தின் வெளிப்பாடு, ஆனால் அவர்கள் சதவிதம் குறைவுதான். அப்படிப்பட்ட திரிபு வேலைகள் எப்படி தொடங்கின, அதன் பின்னணியில் இருந்தது யார் என்பதையெல்லாம் சமீபத்தில் படித்து முடித்த ஒரு நூலின் வாயிலாக அறிந்து கொண்டேன். நேரமிருப்பின் இன்றோ, நாளையோ அந்த நூல் விமர்சனம் மூலமாக அந்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்

இன்றைய தேவை என்பது மத நல்லிணக்கத்தை போற்றி பாதுகாப்பது. அனைத்து மதங்களிலும் உள்ள அடிப்படைவாதிகளின் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் பார்த்துக் கொள்வது. மத நம்பிக்கை கொண்டவர்கள்தான் இதை செய்திட வேண்டும்.      

அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தை பயன்படுத்துவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இனம் கண்டு ஒதுக்கி வைப்பதுதான் நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது.

இந்தியாவில் அதைச் செய்வது ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவாரங்கள் என்பதை நாங்கள் அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறோம்.

மதத்தின் பெயரால் மனிதத்தை குலைப்பவர்கள் அவசியம்தானா?

சிந்திப்பீர், நிதானமாக சிந்திப்பீர்.

பிரியாணியும் கேக்கும் கொழுக்கட்டையும் சுற்றி வலம் வரட்டும். நம்பிக்கை மலர்கள் பூக்கட்டும். அமைதி என்றும் நாட்டில் நிலைக்கட்டும்.


Sunday, March 25, 2018

மதச்சார்பின்மை என்றால் கெட்ட வார்த்தையா?



காவிகளை அம்பலப்படுத்தி எந்த பதிவு எழுதினாலும் ஒரு அதிமேதாவி அனாமதேயம் ஆங்கிலத்தில் வன்மமாக ஏதாவது உளரி விட்டு போகும்.

ராமராஜ்ய ரதயாத்திரை என்ற பெயரில் காவிகள் நடத்தும் கலவர யாத்திரையின் ரதமே விதிகளை மீறி வடிவமைக்கப் பட்டது என்ற பதிவில் அந்த அனாமதேயம் வழக்கம் போல மதச்சார்பின்மையை நேசிப்பவர்களை அசிங்கமாக திட்டி உள்ளது.

பதில் சொல்ல முடியாத போது ஆபாச வசையில் இறங்குவது என்பதுதான் அனாமதேயங்களின் வழக்கம் என்பது ஒரு புறம் இருக்க 

மதச்சார்பின்மை 

என்ற வார்த்தையே கேட்டாலே இவர்கள் இப்படி கதி கலங்குகிறார்கள்? பதட்டப்படுகிறார்கள்? வெறி தலைக்கேறி உளறுகிறார்கள்?

அப்படி அவ்வளவு கெட்ட வார்த்தையா மதச்சார்பின்மை?

அரசியல் நடவடிக்கைகளிலும் அரசின் நடவடிக்கைகளிலும் மதத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் 

அரசியல் லாபங்களுக்காக மத உணர்வுகளை தூண்டக் கூடாது

இதுதான் மதச்சார்பின்மை.

மத உணர்வுகளை தூண்டுவதை மட்டுமே தங்களின் ஒரே அரசியல் உத்தியாக வைத்திருக்கிற காவிகளால் எப்படி மதச்சார்பின்மையை சகித்துக் கொள்ள முடியும்?

அவர்களின் பிழைப்பே அடிபட்டு விடுமே!

அதனால்தான் காவிகளும் அவர்களை முட்டாள்தனமாக நம்புகிற வேறு சிலரும் கூட மதச்சார்பின்மையை வெறுக்கிறார்கள். 

இந்திய மக்களின் ஒற்றுமை நீடிப்பதற்கான ஒரே அடித்தளம் மதச்சார்பின்மையும் மத நல்லிணக்கமும்தான்.

அதனை சீரழிக்க முயலும் காவிகளை தொடர்ந்து விமர்சித்தும் அவர்களது கேவலமான நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருப்பேன்.

அனாமதேயங்கள் ஆங்கிலத்தில் ஆபாசமாக திட்டினாலும் கூட

Wednesday, April 12, 2017

ஒரு இஸ்லாமிய நாட்டிலும் இந்தியாவிலும்

விளக்கம் ஒன்றும் தேவையில்லை. இந்த படமே அனைத்தையும் விவரிக்கும்

 

Tuesday, September 20, 2016

இவ்ளோதாங்க மதச்சார்பின்மை

 இதை விட எளிமையாக மதச்சார்பின்மையை விளக்கி விட முடியாது. தோழர் சுனில் மைத்ரா பேசியதை அப்படியேயும் தமிழில் மொழிபெயர்த்தும் பதிவு செய்த அருமைத் தோழர் இ.எம்.ஜோசப் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி




What is secularism? – மதச்சார்பின்மை என்றால் என்ன? 





What is secularism ? Is it against religion? 


There was alround persecution of Christians by the Pagan religion around the first century AD. Christian youth were thrown to hungry lions It was reveled at by the Pagans of the Roman empire In the later years when Christians ascended to power, persecution of Pagans started. Pagans were burnt at the stakes by the Christians 


It is in this backdrop, the intelligentsia of Rome got divided into two schools of thought , the one,”sacred school” and the other “secular school”. 


It is important to note that those belonging to the secular school were however, very much believers .


They declared: 


We are not opposed to religion per se. Rather, we believe in religion
What we are opposed to, is infiltration of religion into the art of state craft
What we are opposed to, is religious fundamentalism
What we are opposed to, is religious obscurantism
What we are opposed to, is religious bigotry


One can be a believer of or not a believer of any religion. It is purely a right of the individual. It is a private affair in which the state has no right to intervene. 


(FROM THE SPEECH OF COM. SUNIL MAITRA - IN THE JAIPUR CONFERENCE OF AIIEA – 1988)//



(மதசார்பின்மை என்றால் என்ன? அது மதத்திற்கு எதிரானதா? 

கி.பி முதல் நூற்றாண்டு வாக்கில், அன்று புதிதாக உருவாகி எழுந்து வந்த கிறிஸ்துவ மதத்தினரை அன்றைய ரோமாபுரியின் புறச்சமய (பேகன் மதம்) ஆட்சியாளர்கள் கொடுமைப் படுத்தினர். கிறிஸ்தவ இளைஞர்களை பசித்த சிங்கங்களுக்கு இரையாக்கி ரசித்தனர். அடுத்த கட்டத்தில், கிறிஸ்தவர்கள் ஆட்சிக்கு வந்த நிலையில், புறச்சமயத்தினரை கொடுமைப்படுத்தினர். கழுவில் கட்டி வைத்து அவரகளை எரித்துக் கொன்றனர் 


இந்தக் கட்டத்தில் ரோமாபுரியில் உள்ள அறிஞர்கள் இரு கூறுகளாகப் பிரிந்தனர். “மதம் சார்ந்த சிந்தனையாளர்கள்” என்றும், “மத சார்பற்ற சிந்தனையாளர்கள்” என்றும் அவர்கள் பிரிந்தனர். மதம் சாராத சிந்தனையாளர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும் கூட மத நம்பிக்கையாளர்களே ஆவர். 


அவர்களின் முழக்கம் இதோ:


நாங்கள் மத எதிர்ப்பாளர்களர்கள் அல்லர் , மத நம்பிக்கை உள்ளவர்களே
அரசமைப்பில் மதம் ஊடுருவுவதை நாங்கள் எதிர்க்கிறோம்
மத அடிப்படைவாதத்தினை நாங்கள் எதிர்க்கிறோம்.
மதத்தின் பெயரால் கடைப்பிடிக்கப்படும் மூடப் பழக்கவழக்கங்களை எதிர்க்கிறோம்.
மத வெறியினை எதிர்க்கிறோம் 


ஒருவர் எந்த மதத்தினையும் நம்புவதோ, அல்லது எந்த மதத்தினையும் நம்பாதிருப்பதோ அவரவர் தனிப்பட்ட உரிமை. அத்தகைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதற்கு அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை. 


(தோழர் சுனில் மைத்ரா அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஜெய்ப்பூர் (1988) மாநாட்டில் பேசியதிலிருந்து )

Sunday, November 16, 2014

நேருவை பாஜக வெறுப்பது ஏன்?

ஜவஹர்லால் நேரு என்றால் பாரதீய ஜனதாவிற்கு வேப்பங்காய் கசக்கிறது. அதன் குரு பீடத்தினைச் சேர்ந்த ஒரு புண்ணியவான் கோட்சே காந்திக்குப் பதிலாக நேருவை சுட்டிருக்கலாம் என்றே எழுதி விட்டார். அந்த அளவிற்கு இவர்களை நேருவை வெறுப்பதன் காரணம் என்ன?



ஆர்.எஸ்.எஸ்  வெறுக்கிற மதச் சார்பின்மையை குழு தோண்டி புதைக்க விடாமல் தடுக்க நேரு உருவாக்கிய கருத்தோட்டம் ஒரு தடையாக இருக்கிறது. ஆகவேதான் அவர்கள் நேருவை எவ்வளவு தூரம் அசிங்கப் படுத்த முடியுமோ, அவ்வளவு தூரம் அசிங்கப்படுத்துகிறார்கள்.


Friday, June 13, 2014

மதநம்பிக்கைக்கு எதிரானதா மதச்சார்பின்மை?

                                                                                                                க. கனகராஜ்


 


மதச்சார்பின்மை கூடுதல் முக்கியத்துவம் பெறுவது சமீபத்திய நிகழ்வாக இருக்கலாம். ஆனால் மதச்சார்பின்மையின் வேர்கள்மதம் தோன்றிய காலம் தொட்டே உள்ளன. மதச்சார்பின்மை மத விரோதமான கொள்கையல்ல. தன் மதத்தை, தன் கடவுளை நேசிப்பதற்கு எதிரானதுமல்ல. மாறாக, பிற மதங்களை இழிவுபடுத்துவதற்கும், அவதூறு செய்வதற்கும் எதிரானது. பிற மதத்தினரை துன்புறுத்துவதை தடுப்பது. இது மதச்சார்பின்மையின் சமூகக் கொள்கை. அரசு எந்தவொரு குறிப்பிட்ட மதத்தின் அடிப்படையிலும் செயல்படாதிருப்பதே மதச்சார்பின்மையின் அரசியல் கொள்கை. ஷிவ் விஸ்வநாதன் (மோடியும் லிபரல்களின் தோல்வியும் - இந்து 23.5.2014) அவர்களும் மற்றும் சிலரும் திரிக்க முயல்வதுபோல எல்லாமதங்களின் அடிப்படையிலும் செயல்படுவதல்ல. அரசும், அரசியலும் பொதுவானது. மதநம்பிக்கையும், கடவுள் வழிபாடும் தனிநபர் சார்ந்தது. 

இந்திய அரசியல் சட்டப்படி தான் இந்தியர் வாழ வேண்டுமென்று சட்டம் நிர்ப்பந்திக்கும். ஆனால் ஒரு மதத்தின் அடிப்படையில் வாழ வேண்டுமென யாரும், யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. மதச்சார்பின்மை எந்தவொரு மத நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்குவதில்லை. கேலியும் செய்வதில்லை. எந்தவொருமதமும் அரசுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும் என்பதைத் தான் கேள்விக்குள்ளாக்குகிறது. அரசு நடவடிக்கையிலிருந்து ‘சற்றே விலகி இரும் பிள்ளாய்’ என்று கோரி நிற்கிறது.எந்த மதமும் ஒற்றைக் கடவுளையும், ஒரே மாதிரி சடங்கு சம்பிரதாயங்களையும் கொண்டதாக இல்லை. இந்து மதத்தில் சைவம், வைணவம் (அதிலும் கூட வடகலை, தென்கலை) நாட்டார் தெய்வங்கள் போல, இஸ்லாத்தில் சன்னி, ஷியா, அலவி, வஹாபி, சுஃபி போல,கிறிஸ்துவத்தில் கத்தோலிக்கர், புரோட்டஸ்டன்ட், பாப்திஸ்து, லுத்ரன், பெந்தகோஸ்தே போல ஏராளமான பிரிவுகள் உள்ளன. இதரமதங்களிலும் கூட இப்படித்தான் இருக்கிறது. 

தெய்வங்களும், வழிபடு முறைகளும் ஒரே மதத்தின் உட்பிரிவுகளுக்குள்ளேயே வேறுபாட்டுடன் இருப்பதை காண முடியும். ‘அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு’ என்று வலியுறுத்தினாலும் அரியை வணங்கி, சிவனை வெறுப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள். ‘அப்பனைப் பாடும் வாயால் சுப்பனைப் பாடமாட்டேன்’ என்பது கூட தமிழில் உள்ள வழக்குதான்.
சிலுவையை வணங்குவோர் - மறுப்போர், மேரி மாதாவை வணங்குவோர் - மறுப்போர், ஷியா, சன்னி முஸ்லீம்களுக்கிடையிலான வேறுபாடு இவையெல்லாம் நாம் அறியாததல்ல. பூணூல் போடுவோரும் இல்லாதோரும் இந்துக்கள்தான். தாலிகளிலும், சடங்குகளிலும் எத்தனை பன்மைத்தன்மை. ஒரே மதத்திற்குள்ளும் ஒரே சாதிக்குள்ளும் கூட ஏராளமான வேறுபாடுகள் இணங்கியும், முரண்பட்டும் நீடித்துக் கொண்டே தான் இருக்கின்றன. எல்லா பன்மைகளும் ஒற்றைகளின் சேர்க்கையே. எல்லா ஒற்றைகளும் பன்மைகளின் பகுதியே. இதை உணராதோர் மட்டுமே சகிப்புத் தன்மையற்றவராக இருக்கிறார்கள். மதநம்பிக்கையுடையவர் மதச்சார்பற்றவராக இருக்க முடியும். ஏனெனில் மதச்சார்பின்மை அரசு மற்றும் பொதுவெளி சார்ந்ததே அன்றி தனி மனித நம்பிக்கை பற்றியதல்ல. 


பாரதியைவிட காளி பக்தன், பராசக்தி பக்தன் உண்டா?, காந்தியை விட இந்து மதத்தின் மீதான பிடிப்பும், காதலும் கொண்டவர் உண்டா?, ஏன் விவேகானந்தர் இந்து துறவி தான். இவர்களை எவரேனும் மதவெறியர் என்று சொல்லத் துணிந்தது உண்டா? ஆனால் முகமது அலி ஜின்னா முஸ்லீம் மத பழக்கவழக்கங்களை கடைபிடித்தவரல்ல. சொல்லப்போனால் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கி திளைத்தவர். அவரது அரசியல்கொள்கை மதச்சார்பற்றது என்று சொல்ல முடியுமா?. எனவே அரசியல் நோக்கத்திற்காக மதத்தை பயன்படுத்துவதும், அரசியல் கொள்கைகளில் ஒரு மதத்திற்கு இடமளிப்பதுமே மதச்சார்பின்மைக்கு எதிரான கொள்கை. ஷிவ் விஸ்வநாதன் ராகு காலம் பார்த்து வேலைக்கு வரும் ஒரு விஞ்ஞானியை கேள்விகேட்கக் கூடாது என்கிறார்.
ஒருவர் விஞ்ஞானியோ, அரசு ஊழியரோ அவர் வீட்டு எந்தவிழாக்களையும் ‘நல்ல நேரத்தில்தான்’ கொண்டாடுவேன் என்று சொல்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது; இருக்கக் கூடாது. ஆனால், அலுவலகத்திற்கு ராகு காலம் கழித்து தான் வருவார் என்பதை எப்படி ஏற்க முடியும்?. ராகு காலத்தில் வேலைக்கான நேர்முகத் தேர்வு வந்தால் போகாமல் இருந்துவிடுவார்களா?, எனது கடவுளுக்கு இந்தக்கிழமைதான் உகந்த நாள். எனவே அந்த தினத்தில் நான் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்வதை அனுமதிக்க முடியுமா?. 

இப்போதைய ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பது கிறிஸ்தவர்களாக இருந்த ஆங்கிலேயர்களின் நடைமுறை. அதைத்தான் பின்பற்றி வருகிறோம். ராகு காலம் பார்ப்பதை பணிநிமித்தம் அனுமதிக்க முடியாது என்றால் அதனால் அவர் நிர்ப்பந்திக்கப்படுவதாக கருதினால் அவரை மாற்ற வேண்டுமே தவிர நடைமுறைகளை மாற்றிக் கொள்ள முடியாது. மதமாற்றம் குறித்து பேசப்புகுந்த ஷிவ்விஸ்வநாதன் கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் மட்டும் மதமாற்றம் செய்வது போலவும், அதன் காரணமாக மதநம்பிக்கை உள்ள மத்திய தர வர்க்க இந்துக்கள் மோடிக்கு ஆதரவாக நின்றதாகப் பேசுகிறார். இஸ்லாமும், கிறிஸ்தவமும் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே மதமாற்றம் துவங்கிவிட்டது. நாடு முழுவதும் புத்த மதம் பரவியிருந்ததும் நான்கு திசைகளிலும் சென்று மனிதர்களையும், மன்னர்களையும் இந்து மதத்திற்கு ஆதிசங்கரர் மாற்றியதையும் மதமாற்றக் கணக்கில் இல்லாமல் எப்படி பார்ப்பது? கூன் பாண்டியன் சமண மதத்தை துறந்துவிட்டு சைவத்திற்கு மாறியதற்கு கிறிஸ்தவரும், இஸ்லாமியருமா காரணம். 

எண்ணாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டது யாரால் என்பதை இலக்கியங்கள் பதிவு செய்துதானே வைத்திருக்கின்றன. ஒரு மதத்தை பின்பற்றுவதும், இன்னொரு மதத்திற்கு மாறுவதும் ஒருவரது தனிப்பட்ட உரிமை. அதை மறுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. மேலும் மதமாற்றத்தை தடுப்பது சட்டங்களால் ஆகாது.சனாதன இந்து மதத்தில் இருந்த கொடூரமான சாதிய பாகுபாடுகள்தான் அடித்தட்டு மக்கள் மதமாறுவதற்கு காரணமாக இருந்தது என்று சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார் போன்றவர்களே குறிப்பிட்டுள்ளனர். சாதியின் பெயரால் பெரும்பகுதி மக்கள் கல்வி பெறுவது கூட தடுக்கப்பட்ட பின்னணியில்தான் மதமாற்றங்கள் நிகழ்ந்தன.

இன்றைக்கும் கூட நீடிக்கும் கோயிலுக்குள்ளும், பொதுப்பாதைகளிலும் நுழைவதை கூட தடுக்கும் நந்திகள் உடைத்து நொறுக்கப்பட வேண்டும். ஆனால் மதம் மாறுவதால் மட்டுமே இழிவுகள் ஒன்றும் மாறிவிடவில்லை என்பதையே மீனாட்சிபுரங்களும், தலித் கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டு கோரிக்கையும் வலியுறுத்தி நிற்கின்றன. இந்து மதத்தின் மிகப்பெரிய அடையாளமாக விளங்கும் சுவாமி விவேகானந்தர் 1893 செப்டம்பர் 11 சிகாகோவில் உரையாற்றுகிற போது, “பிரிவினைவாதத்தாலும், மதவெறியாலும் இந்த அழகிய உலகு நீண்ட நாட்களாக திணறிக்கொண்டு இருக்கிறது. இந்த பூமி முழுவதும் மதவெறி நிரம்பிக் கிடக்கிறது. உலகை மீண்டும், மீண்டும் அது ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. நாகரிகத்தை அழித்தது. எத்தனையோ நாடுகளை சின்னாபின்னமாக்கிவிட்டது. இந்த கொடியஅரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்திருக்கும்.”ஷிவ் விஸ்வநாதன் மதச்சார்பற்றவர்கள் குறித்து சொல்லியிருப்பவை பலவும் மதவெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்படும் புளுகுமூட்டைகளே.
அதை அவரும் வழிமொழிந்திருப்பது வருத்தத்திற்குரியது. 

மதச்சார்பின்மையின் தோல்வி நிரந்தரமானால் அது மனித குலத்தின் தோல்வியாகவே முடியும். மதச்சார்பின்மை திரிக்கப்பட்டிருந்தால் அதை சரிபடுத்துவதும் வெற்றி பெற வைப்பதுமே மனித குல முன்னேற்றத்திற்கான பிரதானமான முன்நிபந்தனையாக இருக்கும்.

கட்டுரையாளர்: மாநில செயற்குழு உறுப்பினர் - சிபிஐ (எம்)

நன்றி - தீக்கதிர் நாளிதழ் 11.06.2014