Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Monday, September 2, 2024

அடிக்கத் தூண்டுதா ஆட்டுத்தாடி?


தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு சில வாரங்கள் அடக்கி வாசித்த ஆட்டுத்தாடி ஆரெஸெஸ்.ரெவி மீண்டும் விஷத்தை கக்க ஆரம்பித்து விட்டது. தமிழ்நாட்டின் மாநில கல்வித்திட்டம் மோசமாக இருப்பதாகவும் அதனால்தான் தமிழ்நாட்டு மாணவர்கள் போட்டித் தேர்வுகளில்  வெற்றி பெற முடிவதில்லை என்று ஒரு பொய்ப்பிரச்சாரத்தை துவக்கியுள்ளது ஆட்டுத்தாடி.

நீட், சிவில் சர்வீஸஸ் போன்ற பல போட்டித் தேர்வுகளில் வேறு மாநில மாணவர்கள் அதிக வெற்றி பெறுவதற்கு காரணம் அவர்கள் படிக்கும் கல்வித் திட்டம் கிடையாது. பயிற்சி மையங்கள் புரோக்கர்களாக மாறி முறைகேடான வழிகளில் தங்களுக்கு பணம் கொடுத்தவர்களை வெற்றி பெற வைக்கிறார்கள் என்ற அசிங்கமான உண்மை அம்பலப்பட்ட பின்பும் இந்த ஜந்து இப்படி பேசுகிறது.

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனகள் பட்டியலில் கிட்டத்தட்ட 35 % கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளது. கட்டமைப்பு வசதிகளால் அவை பெயர் பெறவில்லை. அங்கே பயின்ற மாணவர்களின் சாதனைகளால் பேசப் படுகின்றன. அந்த நிறுவனங்களில் பயின்று சாதிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டின் மாநில கல்வித் திட்டத்தில் பயின்றவர்கள்தான்.

இருப்பினும் ஏன் அது இப்படி பேசுகிறது?

தமிழ்நாட்டை மட்டம் தட்டும் இழி குணமும் தமிழ்நாட்டு மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதும் அதன் முக்கிய நோக்கமாகும்.

இன்னொரு காரணமும் இருக்கிறது.

“இந்த பஞ்சாயத்தில ஒரு கொலை விழனும்னே அவன் இப்படி பேசறான்” என்று தேவர் மகனில் நடிகர் திலகம் சொல்வது போல, இப்படியே பேசிக் கொண்டிருந்தால் தமிழ்நாட்டு மக்கள் கடுப்பாகி அந்தாளை அடித்து விடுவார்கள், அதை வைத்து அரசியல் செய்யலாம் என்பது அந்த ஜந்துவின் உள் நோக்கம்.

ஆனால் அந்த அளவிற்கு நீ வொர்த்தில்லை ரெவி.


Friday, April 1, 2022

படமும் செய்தியும் ஒன்றுதான் . . .

 


ஹிஜாப் கூடாதென்று சங்கிகள் கலவரம் செய்தது பெண்ணடிமைத்தனம் கூடாதென்பதற்காக அல்ல. 

அவர்களின் உள் நோக்கம் வேறு. இஸ்லாமியப் பெண்களின் கல்விக்கு எதிரானது.

அது துரதிர்ஷ்டவசமாக நிறைவேறி விட்டது என்பதுதான் துயரம். கீழே உள்ள செய்தி அதைத்தான் சொல்கிறது. 



Saturday, November 21, 2020

மார்க்சிஸ்ட் - திமுக - தமிழக அரசு

 


7.5 % உள் ஒதுக்கீட்டின் மூலமாக மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும் பல அரசுப்பள்ளி மாணவர்களால் தனியார் மருத்துவக் கல்லூரிக் கட்டணங்களை கட்ட இயலவில்லை.

அதனால் அவர்களின் செலவினத்தை அரசு ஏற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்தது.



அப்படிப்பட்ட மாணவர்களின் செலவினங்களை தங்கள் கட்சி ஏற்கும் என்று திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.



சுதாரித்துக் கொண்ட எடப்பாடி அச்செலவினத்தை தமிழக அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.



ஏழை மாணவர்களின் பிரச்சினைகளை உணர்ந்து சரியான நேரத்தில் சரியான கோரிக்கையை முன்வைத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கும் அதன் தீவிரத்தை உணர்ந்து அதனை ஏற்றுக் கொண்ட திமுக தலைவருக்கும் பாராட்டுக்கள்.

எங்கே அவர்கள் அரசியல் ஆதாயம் அடைந்து விடுவார்களோ என்று அஞ்சி வேறு வழியில்லாமல் வழிக்கு வந்த தமிழக முதல்வருக்கும் சின்னதாக வாழ்த்துக்கள்.

Monday, October 26, 2020

அண்ணா பல்கலைக்கழகத்தை சிதைக்க அனுமதியோம்

 

அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்!



அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்!

@ @ @

பாஜக அரசின்முன்வைப்புகளில் ஒன்றான இந்த “உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள்” (Institution of Eminence – IoE) எனப்படும் வரையறையின்கீழ் 10 அரசு பல்கலைக்கழகங்களையும் 10 தனியார் பல்கலைக் கழகங்களையும் தேர்ந்தெடுக்கும் அறிவிப்பை பா.ஜ.க அரசு 2017 முதல் கூறிவந்தது. அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் ஜவடேகர் முதன் முதலில் இந்தக் கருத்தை முன்வைத்தார்., பல்கலைக் கழக நல்கைக் குழு (UGC) அதற்கான நெறிமுறைகளை அதே ஆண்டில் வெளியிட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பத்து அரசு பல்கலைக் கழகங்களையும் பத்து தனியார் பல்கலைக் கழகங்களையும் இப்படி “உயர் சிறப்புப் பல்கலைக் கழகம்” எனப் பிற பல்கலைக் கழகங்களிலிருந்து தனியே பிரித்து உயர்நிலை நிறுவனங்களாக மாற்றப்படுவது குறித்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் நாள் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்தது. கல்வி உரிமைக்காகவும், அடித்தட்டு மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, பாஜக அரசின் கல்விக்கொள்கையை எதிர்க்கும் பல்வேறு இயக்கத்தினரும், கட்சியினரும் அப்போதே இப்படிப் பல்கலைக் கழகங்களில் உயர்வு – தாழ்வுத் தரவேறுபாடுகள் ஏற்படுத்தப்படுவதை எதிர்த்துக் குரல் எழுப்பினர். ஆனால் “உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களை உருவாக்கும் திட்டம்” எனக் கூறிக்கொண்டு பாஜக அரசு கல்வியாளர்களின் இந்த எதிர்ப்புகளை எல்லாம் புறந்தள்ளி தங்கள் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதிலேயே குறியாக இருந்து இறுதியில் அதை இன்று இப்படி நடைமுறைப் படுத்தவும் தொடங்கிவிட்டது.

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு பல்கலைக் கழகங்களுக்கும் நிதி ஆதாரத்தை கூடுதலாக ஒதுக்கி மேம்படுத்துவதற்குப் பதிலாக இப்படிப் 10 அரசு உயர் கல்வி நிறுவனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மட்டும் ஒவ்வொன்றுக்கும் 1000 கோடி அளிக்கப்படும் என இப்போது முடிவாக அறிவிக்கப் பட்டுவிட்டது. . இது தவிர மேலும் 10 தனியார் உயர் கல்வி நிறுவனக்களும் இப்படி உயர் சிறப்புக் கல்வி நிறுவனங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பு நிறுவனங்களில் 100 மாணவர்களைச் சேர்த்தால் அதில் 30 பேர்கள் வரை வெளிநாட்டு மாணவர்களாக இருக்கலாம் எனவும், தகுதி – தர அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படவேண்டும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. 30 பேர்கள் வெளிநாட்டு மாணவர்களாக இருக்கலாம் என்பதன் பொருள் நமது மாணவர்கள் 30 பேர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது என்பதுதான். அது மட்டுமல்ல ஆசிரியப் பணியில் 25 சதம்வரை வெளிநாட்டுப் பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு 20 சதம் வரை “ஆன் லைன்’ முறையில் கல்வி பயிற்றுவிக்கவும் இவற்றுக்கு அனுமதி உண்டு.

பாடத்திட்டத்தைப் பொருத்தமட்டில் இந்த நிறுவனங்கள் எவற்றை வேண்டுமானாலும் உள்ளடக்கிக் கொள்ளலாம். (complete flexibility in curriculum and syllabus). இது பொறியியற் கல்விக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதையையும் பாடமாகச் சேர்ப்பது போன்ற வேலைகளைச் செய்வதற்கு வழி செய்வதுதான் என்பதை விளக்க வேண்டியதில்லை. வரலாற்றுப் பாடங்களில் இது என்ன மாதிரித் தகிடுதத்தங்களுக்கு வாய்ப்பளிக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.

எல்லாவற்றையும் விடப் பெருங் கொடுமை என்னவெனில் கல்விக் கட்டணம் நிர்ணயிப்பது, மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் இந்நிறுவனங்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களாயினும் சரி, உள் நாட்டு மாணவர்களாயினும் சரி UGC, ACTE முதலானவற்றின் ஒப்புதல் எதுவும் பெற வேண்டிய அவசியம் இல்லை.

இவை எல்லாமே நம்மவர்களுக்கு பாதிப்பை விளைவிக்கக் கூடியதுதான். தகுதி, திறமை எனும் பெயரில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முடிவுகள் உயர் கல்வியில் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

இந்த ஆண்டு அக்டோபர் 20 அன்று பல்கலைக் கழக மான்யக் குழு (UGC) அனைத்துப் பல்கலைக் கழகத் துணை வேந்தர்களுக்கும் கடிதம் ஒன்றை [D.O.No. 1 – 18 / (CPP.II)] அனுப்பியுள்ளது. அதில், ”தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ’தேசிய கல்விக் கொள்கை (2020) இன் அடிப்படையில் உரிய சீர்திருத்தங்களைச் (governance reforms) செய்தாக வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் தற்போது இந்தமாதத் தொடக்கத்தில் அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா ஒரு அதிரடி நடவடிக்கையைச் செய்தார். அப்பல்கலைக் கழகம் IoE நிலை பெறுவதற்குத் தேவையான முதலீடான 1500 கோடி ரூபாய்களையும் தானே திரட்ட முடியும் எனவும், தொடர்ந்து ஆண்டுக்கு 314 கோடி ரூபாய்களையும் தன்னால் திரட்டமுடியும் எனவும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது அம்பலமானவுடன் இப்போது இந்த IoE பிரச்சினை பெரும் விவாதத்துக்குள்ளாகி இருக்கிறது,.

இந்தப் பெருந் தொகையை ஒரு பல்கலைக் கழகம் எப்படித் திரட்ட முடியும்? மாணவர் கட்டணம், தேர்வுக் கட்டணம் விண்ணப்பக் கட்டணம் ஆகிவற்றை எல்லாம் உயர்த்தாமல் இது எப்படிச் சாத்தியமாகும்?

இல்லை IoE க்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளைப் பயன்படுத்தி தொலைக் கல்வித் திட்டங்களை அறிவித்துக் காசு திரட்டப் போகிறார்களா? பின் எப்படி இந்த நிதியைத் திரட்டப் போகிறார்கள்? சூரப்பர் தன் திட்டத்தை வெளிப்படையாக அறிவிப்பாரா?

கல்வி இன்னும் மத்திய மாநிலப் பட்டியலில்தான் உள்ளது என்பதையும், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் இவ்வாறு கடிதம் எழுதுவது ஏற்புடையதல்ல என்பதையும் சூரப்பர் மறந்தாரா? இல்லை அதுவும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகளில் ஒன்று என நினைக்கிறாரா?

இப்படி அவர் மாநில அரசின் ஒப்புதல் எல்லாம் இல்லாமல் முடிவெடுப்பது இது முதல் முறையல்ல. தோல்வியுற்ற பாடங்களில் (arrears) மாணவர்கள் தேர்ச்சி பெறுவது குறித்து இதற்கு முன் அவர் AICTEக்கு கடிதம் எழுதினார். அதுவும்கூட மாநில உயர்கல்வி அமைச்சரை மீறிய செயல்தான்.

தனது திட்டங்களின் ஊடாக 69 சத இட ஒதுக்கீடு என்பது பாதிப்புக்கு உள்ளாகாது என சூரப்பர் இன்று கூறுவதும் ஏற்புடையதல்ல. அதற்கான சாத்தியமும் இவர்கள் திட்டத்தில் இல்லை. UGC உருவாக்கியுள்ள IoE வழிகாட்டும் நெறிமுறை பிரிவு 4.2.5 –இல், ” There should be a transparent merit based selection in admissions, so that the focus remains on getting meritorious students ” என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது தகுதி மிக்க மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதையே குறிக்கோளாகக் கொண்டு இந்த மாணவர் தேர்வு அமைய வேண்டுமாம். இதற்கெல்லாம் உரிய சட்டத் திருத்தம் இல்லாமல் IoE நிலை திணிக்கப்படுமானால் இட ஒதுக்கீடு எப்படிச் சாத்தியப்படும்?

சரி 69 சத ஒதுக்கீடு இருந்தால் மட்டும் போதும் என IoE நிலையை ஏற்றுக் கொள்ளமுடியுமா?

முடியாது. இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவோம். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துக் கல்விக் கட்டணங்களை உயர்த்தினால் எளிய மாணவர்கள் இந்தச் சிறப்பு நிறுவனங்களுக்குள் காலடி எடுத்து வைக்க முடியுமா?

இப்படி உயர் சிறப்புக் கல்வி நிறுவனம் என்றெல்லாம் அறிவித்து கல்விச் சந்தை ஒன்றை அரசே உருவாக்குவதை ஏற்க முடியாது.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தை IoE நிலைக்கு மாற்றுவது எங்களுக்கு உடன்பாடில்லை எனத் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கேட்கப்படும் எனச் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இதற்கெல்லாம் சூரப்பரிடம் எந்தப் பதிலும் இல்லை.

பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவர் முருகன் துணைவேந்தர் மேல் நடவடிக்கை எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என வரிந்து கட்டிக் கொண்டு வந்துள்ளதையும் காண்கிறோம். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. கல்வி என்பது இன்னும் மத்திய – மாநிலப் பட்டியலில்தான் உள்ளது. அப்படி இருக்கையில் அதெப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அனுமதி இன்றி ஒரு துணைவேந்தர் எதையும் செய்யலாம்? செய்வோம் என ஒரு ஆளும்கட்சியின் தலைவர் திமிர் பேசுவதன் பொருள் என்ன? இந்த நாடு எங்கே போய்க் கொண்டுள்ளது?

சில கேள்விகளைத் தமிழக முதலமைச்சர் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

1. IoE வேண்டாம் எனக் கூறும் மாநில அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை Anna Technical and Research University என்றும் Anna Affiliating University எனவும் இரண்டாகப் பிரித்ததன் பின்னணியும் நோக்கமும் என்ன? இது IoE எனவும் Affiliating University எனவும் இரண்டு தரங்களாகத் தொழிற் கல்வியைப் பிரிப்பதுதானே?

2. உயர் கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளது போல் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்தப்படும் என்றால் எஞ்சியுள்ள 20 பல்கலைக் கழகங்களின் நிலை என்ன? அவற்றின் நிதி ஆதாரங்களை மேம்படுத்த அரசிடம் ஏதும் திட்டமுள்ளதா? இல்லை அவை இரண்டாம்தர மூன்றாம்தரக் கல்வி நிறுவனங்களாகத் தொடர வேண்டியதுதான் அவற்றின் தலைவிதியா?

3.தேசிய கல்விக்கொள்கை 2020 அமலாக்கத்துக்குப்பின் UGC கலைக்கபடும் என்பதுதான் தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து நாம் புரிந்து கொள்வது. இனி நிதி மான்யம் வழங்குவதை கல்வி அதிகாரங்களை மிகத் தந்திரமாக சகுனித் தனத்துடன் மையப்படுத்தி வரும் பாஜக அரசு கையில் வைத்துக் கொள்ளப் போகிறது. அதை எதிர்க்காமல் மத்திய அரசின் நிதி ஆதாரம் பெற வாய்ப்புண்டா?

4. நிகர்நிலை பல்கலைக்கழகமான வேலூர் VITக்கு IoE நிலை அளிக்கப் பட்டுள்ளதைத் தமிழக அரசு ஏற்கிறதா?

5. தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் IoE நிலை வழங்குவது, பல்துறை வளாகங்களாக (Multidisciplinary University) பல்கலைக் கழகங்களை மாற்றுவது, மூன்று தரங்களில் தன்னாட்சி நிலையை (Graded Autonomy) கல்லூரிகளுக்கு வழங்குவது , UGC கலைக்கப்படுவது போன்ற திட்டங்களைத் தேசியக் கல்விக்கொள்கை 2020 முன் வைக்கிறதே அது பற்றி தமிழக அரசின் கருத்தென்ன? . தேசிய கல்விக் கொள்கை 2020 பற்றி ஆராயக் குழு ஒன்று அமைத்தீர்களே அதன் அறிக்கை என்னாயிற்று?

6. துணைவேந்தர் சூரப்பா அண்ணா பல்கலைக்கழகப் பேரவை மற்றும் ஆட்சிக்குழு, நிதிக்குழு முதலானவற்றின் ஒப்புதல் இல்லாமல் தானே நிதி திரட்டமுடியுமென அறிக்கை விடுகிறாரே அது குறித்துத் தமிழக அரசின் நடவடிக்கை என்ன?

7.அண்ணா பல்கலைக்கழகப் பாடதிட்டத்தில் பகவத் கீதை Credit course ல் வைக்கப்பட்டவுடன் எதிர்ப்பு வரவே அது நிறுத்தப்பட்டது போலப் பாவலா செய்து இப்போது அது Audit courseல் திணிக்கப் பட்டுள்ளது. இது அரசியல் சட்ட அடிப்படைகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கை. இதெல்லாம் தமிழக அரசுக்கு தெரியுமா? தெரிந்திருந்தால் அது குறித்துத் தமிழக அரசின் நிலைபாடு என்ன?

மக்களின் இந்த ஐயங்களுக்குத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.

இப்படிக் கல்வி முறையில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை அரசே உருவாக்கிப் பணமும் வாய்ப்பும் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என ஆக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்சால் உருவாக்கப்பட்ட அடிப்படைக் கல்விக் கொள்கை. மோடி தலைமையில் பா.ஜ.க அரசு உருவாக்கப்பட்ட கணத்திலிருந்து அந்தத் திசையிலேயே கல்விக் கொள்கை உருவாக்கங்கள் நகர்கின்றன. பெயருக்குத்தான் இன்று கல்வி என்பது மத்திய – மாநிலப் பட்டியலில் உள்ளது. மற்றபடி இப்போது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை (2020)-இன்படி கல்வி அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசின் பிடிக்குள் சென்றுவிட்டன, அதன் விளைவே இன்று இப்படி அண்ணா பல்கலைக் கழகம் சீரழிக்கப்படுவது. தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை எதிர்த்ததோடு நிறுத்திக் கொண்டது. மற்ற மாநில அரசுகள் அதையும் செய்யவில்லை. இதற்கிடையில் ஒரு நாள் தேசிய கல்விக் கொள்கை (2020) ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாக மத்திய அரசு அறிவித்துக் கொண்டது.

அதன் விளைவே இவை எல்லாம். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதுதான் இப்போது நடந்து கொண்டுள்ளது.

எனவே,

அண்ணா பல்கலைக் கழக நிர்வாகமே! தமிழகத்தின் பெருமைக்குரிய அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரித்துச் சீரழிக்கும் முயற்சியை நிறுத்து!

மத்திய அரசே! “உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள் (Institution of Eminence – IoE) என இந்திய அளவில் 20 பல்கலைக் கழகங்களை மட்டும் அறிவித்து மற்ற நூற்றுக் கணக்கான பல்கலைக் கழகங்களில் படிக்க நேரும் ஏழை எளிய மாணவர்களை இரண்டாம் தர மூன்றாம் தர மக்களாக ஆக்கும் கொடுமையை நிறுத்து!

மத்திய அரசே! இப்படி உயர்கல்வி நிறுவனங்களைத் தரம் பிரித்து ஏற்றத் தாழ்வான மூன்றடுக்கு நிலை ஏற்படுத்துவதைக் கைவிடு!

மாநில அரசே! இன்னும் கல்வி என்பது மத்திய – மாநிலப் பட்டியலில்தான் உள்ளது என்பதை மறவாதே! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைச் சூரப்பா போன்ற துணைவேந்தர்கள் அவமானப் படுத்துவதையும், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்கு உள்ளாக்குவதையும் உறுதியாக எதிர்த்து நில்!

பெற்றோர்களே! பொதுமக்களே! ஆசிரியர்களே! மாணவர்களே! பெருமைக்குரிய அண்ணா பல்கலைக் கழகம் இவ்வாறு இரண்டாகப் பிரிக்கப்படுவதை உறுதியாக நின்று எதிர்ப்பீர்!

#அண்ணா_பல்கலைக்கழகத்தைக்_காப்போம்!

இப்படிக்கு,

அக்கறையுள்ள கல்வியாளர்களும் தமிழ் மக்களும்

***********************************************************************************

வணக்கம்!

நமது “அண்ணாபல்கலைக் கழகத்தை இரு நிறுவனங்களாகப் பிளவுபடுத்துவதை அனுமதியோம்” எனும் அறிக்கையை ஒரு சிறு ஆங்கிலக் குறிப்புடன் நாடறிந்த கல்வியாளர்களுக்கு திரு. கஜேந்திர பாபு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் தம் பெயர்களையும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இது தவிர முனைவர் ப. சிவக்குமார், அ,மார்க்ஸ் ஆகியோரின் பதிவுகளிலும் நண்பர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
பலரின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை இரவுவரை ஒப்புதல் அளிப்பவர்களையும் கண்டனம் செய்பவர்களின் பட்டியலில் இணைத்துக் கொள்வது என முடிவு செய்துள்ளோம். இதுவரை கையொப்பம் இடாதவர்கள் உடன் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
ப.சிவக்குமார், அ.மார்கஸ்

பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் முக நூல் பதிவிலிருந்து . . . .



Tuesday, October 13, 2020

சூரப்பா, வாயை மூடப்பா



அண்ணா பல்கலைக்கழகத்தை சீரழித்து மாணவர்கள் தலையில் பெரும் சுமையை திணிக்க முயலும் பன்வாரிலால் புரோஹித் பொறுக்கி எடுத்து கூட்டி வந்த துணை வேந்தர் சூரப்பாவின் சதிச்செயல்கள் குறித்து இன்றைய தீக்கதிர் நாளிதழில் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களின் கட்டுரையும் தலையங்கமும் மிகவும் முக்கியமானது.

அவசியம் படிக்கவும்.

தமிழகத்தின் பெருமைகளை ஒழிப்பதற்கென்றே ஒரு கூட்டம் அலைகிறது. 



அண்ணா பல்கலைக்கழகத்தை காத்திடுவோம்...

 சென்னை:

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையில் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அண்ணா பல்கலைக் கழகம், தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு  சமூகநீதியின் அடிப்படையில் இயங்கி வரும் பல்கலைக்கழகம்.  பல்கலைக்கழகத்திற்கு மரணம் இல்லை என்பார்கள். டாக்டர் மு.அனந்தகிருஷ்ணன், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், டாக்டர் மயில்சாமிஅண்ணாதுரை, டாக்டர் சிவன்  உள்ளிட்டவர்களைப் போன்று பல்துறை  ஆளுமைகளை உருவாக்கி உலகிற்குத் தந்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.பல நாடுகளில் மிகச் சிறந்த  பங்களிப்பைச் செய்துவரும் இத்தகைய ஆளுமைகளின் சாதனையால் அண்ணா பல்கலைக்கழகம் உலகின் மிக முக்கியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.அண்ணா பல்கலைக்கழகம் இதற்கு மேல் தான் சிறப்புத்தகுதியைப் பெற  வேண்டும் என்ற நிலை இல்லை.

இந்தப் பல்கலைக்கழகம் மேலும் பல  சாதனையாளர்களை உருவாக்கி , சமூக மேம்பாட்டிற்குத் தன் பங்களிப்பைத்  தொடர்ந்து செய்திட, தேவைப்படும் நிதியையும், பிற வளங்களையும் தந்திட வேண்டியது, இதை உருவாக்கி நிர்வகிக்கும் தமிழ் நாடு அரசின் கடமையாகும்.பல்கலைக்கழகத்தை உருவாக்கி,  நிர்வகிக்கும் தமிழ் நாடு அரசிடம்,  பல்கலைக்கழ கத்தின் வளர்ச்சிக்குத்  தேவைப்படும் நிதி, பிற வளங்கள் ஆகியவற்றைக் குறித்த திட்ட அறிக்கைகளை  உருவாக்கித் தந்து, உரிய விவாதத்தை அனைத்து மட்டத்திலும் நிகழ்த்தி,  பல்கலைக்கழகம், ஏழ்மை நிலையில் இருந்து வரும் மாணவருக்குத் தொடர்ந்து  பயன்பட அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்வதே பல்கலைக்கழகத் துணைவேந்தர் செய்ய வேண்டிய மிகமுக்கியமான பணி. அதுவே தமிழ்நாடு  மக்களுக்குத்  துணை வேந்தர் ஒருவர்  செய்யும் மகத்தான சேவையாக இருக்க  முடியும்.

தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீடு  கொள்கையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட எவருக்கும்இடஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பு கிடையாது. ஆனால், மத்திய அரசின் கொள்கை யின்படி வருமான உச்சவரம்பு உண்டு.உயர்புகழ் நிறுவனம் (Institute of Eminence -IoE) என்ற விதிகளின்படி அண்ணா பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கினால் மத்திய அரசு இடஒதுக்கீடு கொள்கையின்படி தான் செயல்பட முடியும். அது மட்டுமல்லாமல் கல்விக் கட்டணம் பல மடங்கு உயரும்.ஒரு பல்கலைக்கழகத்தை உயர் புகழ் நிறுவனம் (IoE) என்று அறிவிப்பதனால் அந்தபல்கலைக்கழகம் உயர் புகழ் நிறுவனம் ஆகிவிடாது. பல்கலைக்கழக ஆய்வுகளின் தன்மையையும், உருவாகும் ஆளுமைகளின் அரிய சாதனைகளுமே ஒரு பல்கலைக்கழகத்தை உயர் புகழ் நிறுவனமாக உலகம் அங்கீகரிக்கும்.‌சென்னை, இந்தியத்  தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி) இடஒதுக்கீடு  சரியாகப் பின்பற்றப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச்  சட்டத்தின் மூலமும், நாடாளுமன்றத் தில்  எழுப்பப்பட்ட கேள்விகள் மூலமும்  அறியப்படுகிறது2014ஆம் ஆண்டில் ஐம்பதாயிரமாக இருந்த பட்டப்படிப்பிற்கான, கல்விக்கட்டணம்  2016முதல் ஆண்டொன்றுக்கு இரண்டு இலட்சமாக உயர்ந்தது அனைவரும் அறிந்ததே.பல்கலைக்கழகத்தை உருவாக்கி  நிர்வகிக்கும் தமிழ்நாடு அரசை மீறி நேரடியாக மத்திய அரசிற்குக் கடிதம்  எழுதுகிறார் தற்போதைய அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர்.அக்கடிதத்தில், மாநில அரசு ஒன்றும் கூடுதலாக நிதி தர வேண்டியது இல்லை, வழக்கமாக அவர்கள் தரும் நிதியைத் தொடர்ந்து தந்தால் போதும், மத்திய அரசின் திட்டத்தின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் நிறுவனம் (IoE) என்று அறிவித்தால், மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பல்கலைக் கழகம் வசூலிக்கும் கட்டணங்கள் மூலம் பல்கலைக் கழகத்தால் தானே வருடத்திற்கு ரூபாய் 314 கோடி,  ஐந்து வருடத்திற்கான ரூபாய் 1570 கோடியைத் திரட்டிக் கொள்ள இயலும் என்று  எழுதுகிறார்.

செலவு போக வருடத்திற்கு ரூபாய் 314 கோடி உபரி வருமானம் ஈட்டக் கூடிய  அளவிற்கு அண்ணா பல்கலைக்கழகம்  மாணவர்களிட மிருந்து கட்டணத்தை  வசூலிக்கிறது என்பது பல்கலைக் கழகத் துணை வேந்தர் கடிதத்தில் இருந்து  நமக்குத் தெரிகிறது. மக்கள் வரிப்பணத்தில்  உருவான மாநில அரசு நடத்தும்  பல்கலைக் கழகம் செய்யக்கூடிய    செயலா இது?.அண்ணா பல்கலைக்கழகம் உயர்புகழ் நிறுவனத் (I o E) தகுதியைப் பெற்றுவிட்டால் மத்திய அரசு சட்டத்தின்  படியான இட ஒதுக்கீடு தான் நடைமுறைப்படுத்தப்படும் என்பதோடு, செலவுகளை  ஈடுகட்ட கல்விக் கட்டணம் மிக அதிக  அளவில் உயரும் என்பது நிச்சயம்.சமூகநீதி அடிப்படையிலான தமிழ் நாடு  அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை  நிராகரித்து, கல்விக் கட்டணம் பல மடங்கு உயர வழி செய்வதுதான் ஒரு துணை  வேந்தர், பல்கலைக் கழகத்திற்கும், மாநில மக்களுக்கும் செய்யக்கூடிய சேவையா?மாநில அரசின் பல்கலைக்கழகத்திற்குத்  துணைவேந்தராக இருப்பவர், பல்கலைக் கழகத்தின் நிர்வாகச் செயல்பாட்டையே மாற்றக் கூடிய ஒரு திட்டத்தின் கீழ்  பல்கலைக்கழகத்தை கொண்டு வர, ஒரு  கடிதத்தை மத்திய அரசிற்கு எழுதும்  அதிகாரத்தை யார் தந்தது?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு  246ன் படி பல்கலைக்கழகத்தை  உருவாக்க, ஒழுங்குபடுத்த, கலைக்க  மாநில அரசிற்கே உரிமையுண்டு  என்பதைத்  துணை வேந்தர் ஒருவர்எவ்வாறு கவனிக்கத் தவறினார். ஒரு  துணைவேந்தரே கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்திய  அரசமைப்புச் சட்டத்தையும், மக்களாட்சி மாண்பையும் மதிக்கத் தவறினால் மாணவர்கள் எவ்வாறு மதிப்பார்கள்?

கோயம்புத்தூர், பொள்ளாச்சி பகுதியைச் சார்ந்த இஸ்ரோவின் தலை சிறந்த விஞ்ஞானியாகச் செயல்படும் தமிழர், தன் இளமைக் காலத்தை நினைவு கூரும் போது : அவர் தந்தை பள்ளி ஆசிரியராக இருந்த போதிலும் தங்களைப்படிக்க  வைக்க, கூடுதல் வருமானத்திற்காகத்  தையல் வேலை பார்த்தார். அவருக்கு  உதவியாக, பட்டன் தைத்துத் தருவோம்.  நான் ஒரு வகுப்பை முடித்த பிறகு, எனக்கு அடுத்த குழந்தைக்கு அந்த வகுப்புப் பாடநூல் பயன்பட வேண்டும் என்பதால், நான் எந்த குறிப்பும் அதில் எழுதக் கூடாது  என்று தந்தை கூறுவார், என்று பதிவு செய்கிறார். அத்தகைய ஏழ்மை நிலையில்  இருந்தவரை இந்தியாவின் தலைச்சிறந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்  மிகவும் அரிய சாதனைகளைப்  படைத்திடும் ஆற்றல் பெற்ற ஆளுமையாகவளர்த்தெடுத்திட முடிந்தது என்றால்  அதற்குக் காரணம் அரசு உதவியில் இயங்கிய உயர் கல்வி நிறுவனத்தில் மிகக்  குறைந்த கட்டணத்தில் அவரால்  பொறியியல் பட்டம் படிக்க முடிந்தது  என்பதே.வருங்காலங்களில் இவ்வாறான ஏழ்மைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள்  அண்ணாபல்கலைக்கழகத்தில் படிக்கும்  வாய்ப்பற்றவர் களாகப் போகும் நிலை  உருவாகும். என்னதான்  தகுதியும்,  திறமையும் இருந்தாலும் கல்விக் கட்டணத்திற்காகத்  தன் சுய கண்ணியத்தை  இழந்து பலரின் உதவியை நாடவேண்டிய நிர்பந்தத்திற்கு மாணவர்கள்  உள்ளாவார்கள்.

உலகின் மிகச் சிறந்த ஆளுமைகளை உருவாக்கித் தந்த அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் நிறுவனமாக (I o E) மாற்றுவது அல்லது அதைப் பிரித்து வெவ்வேறு பெயர்களில் செயல்பட  வைப்பது போன்ற  எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளக் கூடாது.ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும் சட்ட மசோதாவைத் தமிழ் நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்.‌அண்ணா பல்கலைக்கழகம் தற்போது  உள்ள நிர்வாக அமைப்பில் மாநில அரசுப் பல்கலைக்கழகமாக நீடிக்க வேண்டும்.  பல்கலைக்கழகம் மேலும் சிறப்புடன்  செயல்படத் தேவைப்படும் நிதி, உள்ளிட்ட அனைத்து வளங்களையும் தமிழ்நாடு அரசு தந்திட வேண்டும்.


சூரப்பா, இதைச் சொல்ல நீ யாரப்பா?


புகழ்மிக்க அண்ணா பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தராக சூரப்பாவை நியமித்தபோதே  கடும் ஆட்சேபணையும் சர்ச்சையும் எழுந்தது. பாஜகவின் நிர்ப்பந்தம் காரணமாகவே இவர் நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அவர் தற்போது தன்னுடைய வேலையை காட்டி வருகிறார். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் மாநிலஅரசின் கட்டுப்பாட்டிலிருந்து பறிப்பதற்காக உயர் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்போவதாக மத்திய அரசு கூறியது. இதற்கு பல்கலைக்கழகத்தை பிரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டுமென்றும், மாநில அரசின் நிதி ஒதுக்கீடுதேவையில்லை என்றும், ஐந்து ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1500 கோடியைதிரட்டி விட முடியும் என்றும் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறுவது மற்றும் அதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய மாநில அரசின் சார்பில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழு தன்னுடைய அறிக்கையைஇன்னமும் தரவில்லை. அண்ணா பல்கலைக்கழக விசயத்தில் மாநில அரசு எந்தவொரு கொள்கை முடிவையும் அறிவிக்கவில்லை. 

இந்த நிலையில், துணைவேந்தர் சூரப்பாவிற்கு முக்கியமான விசயத்தில் மத்திய அரசுக்குநேரடியாக கடிதம் எழுதும் அதிகாரத்தை அளித்தது யார்? என்ற கேள்வி எழுகிறது.தமிழக அரசு இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லையென்றால் உடனடியாக அவரை பணிநீக்கம் செய்வதுதான் நியாயமாக இருக்கும். 1500 கோடி ரூபாயை சூரப்பா எங்கிருந்து திரட்டுவார்? அனைத்து சுமைகளும் மாணவர்களின் தலையில்தான் சுமத்தப்படும், மாநில அரசின் நிதியுதவி இல்லாமல் கிட்டத்தட்ட மத்திய அரசின் கீழ் இயங்குகிற தனியார்பல்கலைக்கழகம் போல அண்ணா பல்கலைக்கழகத்தை மாற்ற முயல்வது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரும் துரோகமாகும்.அண்ணா பல்கலைக்கழகம் உயர் சிறப்பு அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனமாக மாற்றப்படுமானால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள69 சதவீத இடஒதுக்கீடு என்பது இல்லாமல் போகும். ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்படுவது இல்லை என்ற நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் அதே கதிதான் ஏற்படும். 

இடஒதுக்கீடு பாதிக்கப்படாது என்ற எந்தஉத்தரவாதத்தையும் வழங்க மோடி அரசு தயாராகயில்லை. இந்தநிலையில் இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்யவும் பல புகழ்பெற்ற நிபுணர்களை உருவாக்கி அண்ணா பல்கலைக்கழகத்தை சீரழிக்கவும், துணைவேந்தரின் துணையோடு மத்திய அரசு மேற்கொள்ளும் சதியை முறியடித்தாக வேண்டும்.

Friday, August 21, 2020

ஏன் வேண்டாம் NEP 2020?

 

ஏன் புதிய கல்விக்கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர் தோழர் பு.பா.பிரின்ஸ்.கஜேந்திர பாபு  விளக்கமாக சொல்வதை முழுமையாக படியுங்கள்.

 *புதிய கல்விக்கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும்... ஏன்?* 

 *பு.பா.பிரின்ஸ்.கஜேந்திர பாபு*

 மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் பள்ளி களுக்கும், உயர் கல்வி நிறுவனங்க ளுக்கும் மத்திய அரசு போதிய நிதியை வழங்கி அவற்றை வலுப்படுத்துவதற்கு பதிலாக,  இயங்கிவரும் மாநில அரசின் பொதுக் கல்வி நிறுவனங்களை பலவீனப்படுத்திட பல்வேறு கூறுகளை கொண்டதாக தேசியக் கல்விக் கொள்கை 2020 இருப்பதாலேயே இதை நிராகரிக்க வேண்டும் என்ற குரல் தமிழ் நாட்டில் வலுவாக எழுந்துள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் இன்று இயங்கும் பள்ளிக் கல்வி முறையை சிதைத்து, சந்தைக்கு தேவையான கட்டமைப்பை இக்கொள்கை உருவாக்குகிறது.

 அதன் விளைவு தான், பள்ளிக் கல்வியில் சுலபமாக முன்னேறிச் செல்ல ஏணி போன்ற 10 +2 அமைப்பை எத்தகைய ஆய்வும், காரணமும் இல்லாமல் சிதைத்து விட்டு, சிக்கலான 5+3+3+4 என்ற அமைப்பை  தேசியக் கல்விக் கொள்கை 2020 முன் வைக்கிறது. அத்துடன் பலவீனமான அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்து பலவீனங்களை களைந்து  பலப்படுத்துவதற்கு பதிலாக, 1966யிலேயே நடைமுறை சாத்தியம் இல்லை என்று நிராகரிக்கப்பட்ட “பள்ளி வளாக” அமைப்பை இந்த கல்விக் கொள்கை முன்வைக்கிறது.

 அதே வேளையில் தனியார் தங்கள் வசதிக்கு தகுந் தாற்போல் பள்ளியை நடத்திக் கொள்ளவும், பள்ளி தரும் வசதிக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூல் செய்யவும், உபரி வருமானத்தை கல்வித் துறையில் முதலீடு செய்யவும் வழி செய்கிறது இந்த கொள்கை. தற்போதுள்ள சமமற்ற கல்வி நிலையை நீடிக்கச் செய்வதுடன்,  மேலும் மேலும் தனியாரை ஊக்குவிப்பதுடன், அரசுப் பள்ளிகளுக்கு நெருக்கடியை உருவாக்குகிறது தேசியக் கல்விக் கொள்கை 2020. மாணவர்கள்  தாய்மொழியில் பயில்வது தான் அவர்களின் முழு கல்வி வளர்ச்சிக்கும் கற்றல் திறன் அதிகரிக்கவும் வாய்ப்பை தரும் என்பது ஆய்வு மூலமும் அனுபவ ரீதியாகவும் நிறுவப்பட்டது.

 21ஆம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கை என்று பெருமை பேசும் இந்த கொள்கையில், 2009 கல்வி உரிமைச் சட்டத்தில் சொல்லப்பட்ட அதே கருத்தை வேறு வார்த்தைகளில் இந்த கல்விக் கொள்கையில் சொல்லி இருக்கிறார்கள். அதாவது, எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் தாய் மொழி வழியில் கல்வி ஐந்தாம் வகுப்பு வரை, அது எட்டாம் வகுப்பும் அதற்கு மேல் வகுப்புகளிலும் வழங்குவது விரும்பப்படுகிறது. தற்போது உள்ள நிலையும் இது தான். இந்த கொள்கை அறுதியிட்டு அனைத்து வகை பள்ளிகளிலும் குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி வழி கல்வி என்ற திட்டவட்டமாக கூறவில்லை. அனைவருக்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் தாய்மொழி வழியில் கல்வி வழங்குவதை உத்தரவதப் படுத்த இயலாத இந்த கல்விக் கொள்கை கூடுதலாக, மூன்றாவதாக ஒரு மொழியை படி என்று மாணவரை கட்டாயப்படுத்துகிறது.

 தன்னை சுற்றியுள்ள சூழலில் பேசப்படும் மொழியை கற்பது ஒரு குழந்தைக்கு சுமையாக இருக்காது. சூழலியலில் இல்லாத ஒரு மொழியை கற்பது சுமை தான். தாய்மொழி‌ அல்லது மாநில மொழி ஒரு குழந்தைக்கு கற்பதில் சுமை இல்லாத ஒன்று. அதை தாண்டி ஆங்கிலம் கற்க வேண்டிய தேவையை அரசே உருவாக்கி வைத்துள்ளது. உயர் கல்விக்கும், வேலை வாய்பிற்கும் ஆங்கில அவசியம் என்ற நிலையில், ஆங்கிலம் தன் சூழலியல் மொழியாக இல்லாத போதும், குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியம் எழுகிறது.

 கடந்த மத்திய நிதி நிலை அறிக்கையில் தேசியக் கல்விக் கொள்கை அறிவிக்கப்பட உள்ளது என்று குறிப்பிட்டு, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கற்பிக்க தேவைப் படும் இந்தி ஆசிரியர்களை உருவாக்க ஐம்பது கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ் உள்ளிட்ட வேறு எந்த மொழிக்கும் நிதி ஒதுக்காமல் இந்திக்கு மட்டும் என்பதின் நோக்கமென்ன? இது குழந்தைகளின் விருப்பமா, குழந்தைகளின் மீது நடத்தப்படும் திணிப்பா? மரவேலை, மண்பாண்ட வேலை, மின்சார வேலை உள்ளிட்ட பல்வேறு வகையான தொழிலில் குழந்தை விரும்பும் தொழிலை கற்க வேண்டும். கற்றுத்தர குழந்தை உளவியல், குழந்தைகள் கற்கும் விதம் ஆகியவற்றில்‌ எந்த பயிற்சியோ அனுபவமோ இல்லாத உள்ளுரில் அந்த தொழில் செய்பவரே வகுப்பறையில் தொழில் கற்றுத் தருவார். அது மட்டுமல்லாமல் 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், அவர்கள் விரும்பும் தொழிலை அனுபவ ரீதியாக கற்றுணர பத்து நாட்கள் தொழில் நடக்கும் இடத்திற்கே சென்று பயிற்சி மேற்கொள்ள வேண்டுமாம். குழந்தை பருவத்தில் ஒரு தொழில மீது ஆர்வத்தை உருவாக்கிய பிறகு குழந்தைகளால் படிப்பின் மீது ஆர்வம் செலுத்த இயலுமா? மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும், தொழில் கல்வியிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குழந்தை பருவத்தில் எத்தகைய சுமை.

 அவ்வாறு 13 வயதிற்குள் தொழில் கற்க வேண்டிய அவசியத்தை ஏன் இந்த கல்விக் கொள்கை உருவாக்குகிறது? இத்துணை சவாலையும் அரசுப் பள்ளி மாணவர் எதிர் கொள்ள, இவர்கள் முன் வைக்கும் நிர்வாக ஏற்பாடு தான் பள்ளி வளாகம். ஒரு பள்ளியை மையமாக வைத்து சுற்றி உள்ள அரசுப் பள்ளிகளை அதனுடன் இணைத்து வளங்களை பகிர்ந்து அளிப்பார்களாம். ஒவ்வொரு பள்ளியிலும் அனைத்து வளங்களும் இல்லாமல், வளங்களை பகிர்ந்து பயன்படுத்தும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உள்ள வாய்ப்பும், சவாலும், அனைத்து வளங்களையும் தன் பள்ளி வளாகத்திலேயே கொண்ட ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்களின் வாய்ப்பும் சவாலும் ஒன்றா? ஆனால் கற்றல் திறன் வெளிப்பாடு மட்டும் இருவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது தேசியக் கல்விக் கொள்கை 2020.

 சமமான கற்றல் வாய்ப்பை அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்க மறுக்கும் தேசியக் கல்விக் கொள்கை 2020, கற்றல் திறன் வெளிப்பாடு மட்டும் அனைவருக்கும் சமமாக இருக்கும் வேண்டும் என்கிறது. 9 முதல் 12 வகுப்பு வரை இடைநிலைக் கல்வி. இரண்டு மொழி அல்லாமல் கூடுதலாக ஒரு மொழி பயில்வதும், தொழில் கல்வி பயில்வதும் கட்டாயம். பாடங்களிலும், தொழிலிலும் சம அளவில் தேர்ச்சி பெற வேண்டும்.

 ஒவ்வொரு பாடத்திலும் பொதுத் தேர்வு தாள்களில் பொது நிலை,  உயர் நிலை  என்று இரண்டு நிலைகளில் கேள்வித் தாள்கள்  இருக்கும். 14 வயதில் 9 ஆம் வகுப்பில் தொடங்கி தனக்கு எந்த பாடம் கடினமாக இருக்கிறதோ அதில் அவர் பொது நிலைத் தாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அப்படி என்றால் உயர் நிலை தாள் எடுக்காத மாணவர் அந்த பாடத்தில் உயர்கல்வி பெற இயலாது. ஒன்பதாவது வகுப்பு முடிக்கும் போதே ஒரு குழந்தையால் உயர் கல்வியில் தன் இந்த பாடம் தான் படிக்க போகிறோம் என்று முடிவு செய்ய இயலுமா? தேவையற்ற இந்த நெருக்க டியை குழந்தைகளுக்கு ஏன் தரவேண்டும்? நெகிழ்வான, முழுமையான பள்ளிக் கல்வி தருவதாக கூறிவிட்டு, மூன்று வயது தொடங்கி பதினெட்டு வயது வரை பதினைந்து வருட பள்ளி படிப்பு முடித்த மாணவரை “நீ படித்த பள்ளிப் படிப்பை வைத்து உயர்கல்வி செல்ல தகுதி இல்லை” என்று கூறுவது எந்த வகையில் நியாயம்.

 மாணவர் உயர் கல்வி எந்த பாடத்தில் படிக்கலாம் என்று அவர்  ஆர்வத்தை அறியவும், அந்த பாடத்தில் அவருக்கு  உள்ள அறிவை அறிய‌ அகில இந்திய அளவில் தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வில் பெறும் மதிப்பெண் வைத்தே கல்லூரிக் கல்வி. ஆக, பதினைந்து வருட பள்ளி படிப்பு கல்லூரி செல்ல பயன்படாது. பதினைந்து வருட பள்ளி படிப்பு மூலம் ஒரு மாணவர் தான் எந்த பாடத்தில் மேற்கொண்டு படிக்கலாம் என்று அறிய முடியாது,  பதினைந்து வருட பள்ளி படிப்பு மதிப்பீடு மூலம் எந்த பாடத்தை மாணவர் படிக்கலாம் என்று கல்லூரியால் தீர்மானிக்க முடியாது. ஒரு அகில இந்திய தேர்வில் பெறப்படும் மதிப்பெண் தான் கல்லூரி சேர்க்கைக் கான தகுதியை தீர்மானிக்கும் என்பது  அனைவரையும் உயர்கல்வி கொண்டு சேர்க்க உதவாது.  கல்வி முறையை விட்டு வெளியேற்றி அரைகுறை திரன் கொண்ட சந்தை எதிர்பார்க்கும் கூலித் தொழிலாளிகளையே உருவாக்க முற்படுகிறது தேசியக் கல்விக் கொள்கை 2020.

 கல்லூரிகளிலும் இதே நெருக்கடியை இக்கொள்கை   உருவாக்குகிறது. ஒவ்வொரு கல்லூரியும் பல்துறை கொண்ட, தானே பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொண்டு, பட்டம் வழங்கும் தகுதி பெற்ற தன்னாட்சி கல்லூரிகளாக பத்தாண்டுகளில் மாற வேண்டும். இல்லை‌ என்றால் கல்லூரிகள் பல்கலைக்கழகத்தின் பகுதியாகிவிட வேண்டும். அந்த கல்லூரி அதே பகுதியில் செயல்பட இயலாது. ஓவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அவ்வாறு மாற வேண்டும் என்றால் எவ்வளவு நிதி தேவைப்படும். நிதி தேவை குறித்து ஏதாவது ஆய்வு உண்டா? மாநில அரசால் போதுமான நிதியை ஒவ்வொரு கல்லூரிக்கும் வழங்க இயலுமா?  தேவையான நிதியும், பிற வசதிகளும் முதல் ஆண்டிலேயே வழங்கினால் தானே பத்தாண்டு கழித்து தேசியக் கல்விக் கொள்கை 2020 முன் வைக்கும் அளவுகளை அடைய முடியும். இல்லா விட்டால் இக் கல்லூரிகள் இயங்க முடியாது.

 தனியார் உயர் கல்வி நிறுவனங்களும், வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களும் ஈட்டிய இலாபத்தை, தங்கள் விருப்பப்படி வெவ்வேறு கல்வி நிறுவனங்களை வெவ்வேறு இடங்களில் திறப்பதற்கான முதலீடுகளை செய்ய தேசியக் கல்விக் கொள்கை 2020 வழி செய்கிறது. உயர் கல்வி கற்க வரும் மாணவரை, தன் படிப்பை எந்த நிலையிலும் நிறுத்திவிட்டு வெளியேற அனைத்து வழிகளை யும் காட்டுகிறது. எந்த ஆய்வும் இல்லாமல் மூன்று வருடப் பட்டப் படிப்பை நான்கு வருட பட்டப் படிப்பாக்குகிறது.  ஆழ மாக ஒரு பாடத்தை படித்து அறிஞர் ஆவதற்கு உருவாக்கப் பட்ட இரண்டாண்டு முதுகலைப் பட்டப் படிப்பை ஓராண்டாக சுருங்குகிறது.

 இட ஒதுக்கீடு குறித்து இந்த கொள்கையில் எங்கும் பேசப்படவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகையும் சமூக மற்றும் கல்வி பின்தங்கலை அடிப்படையாக கொண்டது. அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் இருந்து மாறு பட்டு,  வரலாற்றை மறைத்து, இந்திய சமூகத்தில் பெரும் பகுதி மக்களுக்கு பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப் பட்டதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், சமூக - பொரு ளாதார வாய்ப்பின்மை என்ற தலைப்பில் தான் கல்வி உதவித்தொகை குறித்து விவாதிக்கிறது தேசியக் கல்விக் கொள்கை 2020.

 ஏழ்மை, வசதியின்மையே கல்வி வளர்ச்சிக்கு தடை என்கின்ற வகையில் சிக்கலை திசை திருப்பி, எதிர்கா லத்தில் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் சமூக மற்றும் கல்வி பின்தங்கலை கணக்கில் எடுத்து  இட ஒதுக்கீடு இல்லா மல் செய்கிறது. சமூக நீதியின் விளைவாக பெறப்பட்ட உரி மைகள் பறிக்கப்பட தேசியக் கல்விக் கொள்கை 2020 வழி செய்கிறது. இக்கொள்கை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சி தத்துவத்தை புறம் தள்ளி, பொதுப் பட்டியலில் உள்ள  கல்வியை மத்திய பட்டியலுக்கு நகர்த்த வழி செய்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் தந்துள்ள அதிகாரத்தின் அடிப்படையில், தமிழ் நாடு சட்டப் பேரவை இதுவரை கல்வித் துறையில் இயற்றிய சட்டங்கள் செல்லாதவை ஆக்கப்படுவதுடன், இனி மாநில அரசு சுயமாக கல்வித் துறையில் கொள்கை வகுக்கவோ, சட்டம் இயற்றவோ இயலாது என்ற நிலையை இக் கொள்கை உருவாக்குகிறது. கல்வித் துறையில் எல்லா மாநிலங்களிலூம் சமச் சீரான வளர்ச்சி  இல்லை. இந்திய அளவில் உருவாக்கப் படும் கொள்கை மாநிலங்களுக்கு வழி காட்டுவதாக அமைய வேண்டுமே தவிர மாநிலங்கள் மீது ஒரே கட்ட மைப்பை திணிக்க கூடாது.

 “வேற்றுமையில் ஒற்றுமை” என்பதே இந்தியாவின் தனித் தன்மை. பல மொழி, பல வகையான பழக்க வழக்கங்கள் கொண்டு பன்முகப் பண்பாட்டின் பெட்டகமாக திகழும் இந்தியவின் இன்றைய தேவைகளை உணராமல் உலகச் சந்தையின் தேவைகளை கருத்தில் எடுத்து உரு வாக்கப்பட்டது தான் தேசியக் கல்விக் கொள்கை 2020. பல்வேறு மாநில அரசுகள் முடிவு செய்வது பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதனால் கொள்கை வகுக்கும், சட்டம் இயற்றும் அதிகாரங்களை மத்திய அரசு முழுமையாக எடுத்துக் கொள்ள வழி செய்யும் தேசியக் கல்விக் கொள்கை 2020 நடைமுறைக்கு வந்தால் அதிகாரம் மத்திய அரசிடம், பொறுப்பு மாநில அரசி டம் என்ற நிலை உருவாகும்.

 கல்வியில் சிறந்த தமிழ் நாடு மேலும் கல்வித் துறையில் வளர்ச்சி பெற  தமிழ் நாடு அரசு தன் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்தி சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் உருவாக்க வேண்டும். மாநில அரசின் உரிமையை பறிக்கின்ற, சமூக நீதிக்கு எதிராக அமைந்துள்ள, சமமான கற்றல் வாய்ப்பை அனை வருக்கும் உறுதிப்படுத்தாத தேசியக் கல்விக் கொள்கை 2020யை மக்களுடன் சேர்ந்து தமிழ் நாடு அரசு நிராகரிக்க வேண்டும்.

 கட்டுரையாளர் : பொதுச் செயலாளர்,  பொதுப் பள்ளிக்கான மாநில மேடை