Showing posts with label தீண்டாமை. Show all posts
Showing posts with label தீண்டாமை. Show all posts

Thursday, April 17, 2025

நெல்லை - கொடுமை ஏன் தொடருது?

 


கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான் சின்னத்துரை மீது கொலைத் தாக்குதல் சக மாணவர்களால் நிகழ்த்தப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

இந்த மாணவனைப் போல் நன்றாக படியுங்கள் என்று ஆசிரியர் அறிவுரை கூறியதுதான் முதல் தாக்குதலுக்குக் காரணம்.

உயிர் பிழைத்ததும் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றதும் இப்போதைய தாக்குதலுக்குக் காரணமா?

சில நாட்கள் முன்பாகத்தான் நெல்லை மாவட்டத்தில் காதியப் பிரச்சினை இல்லை என்று சபாநாயகர் சொன்னார். ஜாதி வெறி கொடி கட்டிப் பறக்கிறது என்றும் தீண்டாமை வெறி ஊறிப்போயிருக்கிறது என்பதும்தான் இந்த தாக்குதலுக்குக் காரணம்.

நெல்லைக்கு வந்திருப்பது புற்று நோய்.. அறுவை சிகிச்சை, கீமோ தெர்பி, ரேடியோதெரபி என எல்லா சிகிச்சைகளும் தேவை. அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும். அரசு தவறவிட்டால் ....... நிலைமை சரி செய்ய முடியாத அளவுக்கு மிகவும் கேவலமாகி விடும். 

பிகு : இப்பதிவை முதலில் நேற்று இரவு எழுதினேன். காலையில் பார்த்தால் காவல்துறை தன் வழக்கமான கட்டுக்கதையை பரப்பி பாதிக்கப்பட்டவர் மீது பழி போடும் கீழ்த்தர உத்தியை கையாண்டுள்ளது தெரிகிறது. தீவிர சிகிச்சை தர வேண்டிய பிரச்சினைக்கு பாரசிட்டமால் கொடுத்தால் போதும் என்று அரசு கருதுகிறது. இந்த அறிக்கையெல்லாம் முதல்வருக்கு தெரியுமா?

திரு மு.க.ஸ்டாலின் அவர்களே, 2026 ல் நீங்கள் ஆட்சியை இழந்தால் அதற்குக் காரணம் உங்களால் கட்டுப்படுத்த முடியாத உங்களின் கட்சி பெரும் தலைவர்கள், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளில் இருந்து கான்ஸ்டபிள், கடை நிலை ஊழியர்கள் வரை ஊடுறுவி தங்களின் செயல்திட்டத்தை அமலாக்கிக் கொண்டிருக்கும் காவிகள். விழித்துக் கொண்டால் உங்களுக்கு நலம். 

Friday, August 23, 2024

ஆட்டுக்காரனுக்கு ஜமுக்காளம். எல்.முருகனுக்கோ ????

 


விஜயேந்திர சரஸ்வதியை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதாக ஆட்டுக்காரன் புளகாங்கிதத்துடன்  பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை ஆட்டுக்காரனின் ட்விட்டர் பக்கத்தில் பார்த்தேன்.

 அந்த புகைப்படங்களை பார்க்கையில் ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது. ஆட்டுக்காரனுக்கு சரியாசனம் தரப்படவில்லை என்பதை விட மடத்திலோ அல்லது வீட்டிற்குள்ளோ ஆட்டுக்காரனுக்கு தரிசனம் தரப்படவில்லை. கொல்லைப்புறத்தில் வைத்துத்தான் ஆட்டுக்காரனுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டுள்ளது. உள்ளே நுழையும் அளவிற்குமான தகுதிகளோ, அருகதையோ  ஆட்டுக்காரனுக்கு இல்லை போல . . .

 


ஆட்டுக்காரனுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை போலவேதான் எல்.முருகனும் கொல்லைப்புறத்தில் உட்கார வைக்கப்பட்டார். அந்த புகைப்படத்தை தேடி  எடுத்து பார்த்தேன்.

 அப்போதுதான் ஒரு முக்கியமான விஷயத்தை கவனித்தேன்.

 ஆட்டுக்காரன்,எல்.முருகன் இருவரும் வீட்டிற்குள்  அனுமதிக்கப்படவில்லை. இருவரும் கொல்லைப்புறத்தில்   அமர வைக்கப்பட்டாலும்  ஆட்டுக்காரன் உட்கார ஒரு ஜமுக்காளம் போடப்ப்ட்டுள்ளது. ஆனால் பாவம் எல்.முருகனோ தரையில்தான் உட்கார்ந்துள்ளார்.



 ஒரு ஜமுக்காளத்தில்  உட்காரும் அளவிற்குக்கூட எல்.முருகனுக்கு தகுதி கிடையாதா?

 இது தீண்டாமையன்றி வேறில்லை . . .

 

Monday, September 11, 2023

மறக்க முடியாத செப்டம்பர் பதினொன்று

 கடந்த 2014 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் எங்கள் வேலூர் கோட்ட இதழான சங்கச்சுடர் நான்கு பக்க வடிவிலிருந்து பதினாறு பக்க புத்தக வடிவிற்கு மாறியது. அதிலே ஒரு பகுதி “பொதுச்செயலாளர் பக்கங்கள்”. அதற்காக அப்போது எழுதியது இன்றும் பொருத்தமாக இருப்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


வரலாற்றில் செப்டம்பர் பதினொன்று

அன்பார்ந்த தோழர்களே,

புதுப் பொலிவோடு புத்தக வடிவில் வரும் சங்கச்சுடர் மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சங்கசுடர் இதழை புத்தக வடிவில் வெளியிடுவது என புதிதாக அமைக்கப்பட்ட ஆசிரியர் குழு முடிவெடுத்த நாள் செப்டம்பர் பதினொன்று. யதேச்சையாக அமைந்தாலும் கூட செப்டம்பர் பதினொன்று மிக முக்கியமான நாளாகவே உலக வரலாற்றில் அமைந்துள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அஹிம்சை வடிவிலான சத்யாகிரஹ போராட்ட இயக்கத்தை மகாத்மா காந்தி அறிவித்தது 1906  ம் வருடம் செப்டம்பர் 11 அன்றுதான். “பொழுதெல்லாம் என் செல்வம் கொள்ளை போவதோ? நாங்கள் சாவதோ?” என்று கண்டனக்குரல் எழுப்பிய பாரதியின் நினைவுநாளும் இந்த நாள்தான். இந்திய செல்வாதாரங்களை சுரண்டிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் பார்த்து பாரதி பாடிய வரிகளை இன்றும் நாம் பயன்படுத்த வேண்டியிருப்பது பெரும் துயரம். பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இந்தியாவின் செல்வங்களை அடகு வைப்பவர்களாக இந்திய ஆட்சியாளர்கள் மாறுவார்கள் என்பதை முன்பே அறிந்துதான் “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்” என்றும் பாடினார் போலும். “பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என நினைத்தாயா?” என்று எந்த சக்திக்கும் அடிபணியாமல் இருப்பதற்கான உறுதியையும் லட்சியத்தையும்  நமக்கு பாரதி அளித்துள்ளார்.

ஊடகங்கள்  செப்டம்பர் பதினொன்று என்றால் ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் மக்களுக்கு நினைவு படுத்திக்கொண்டிருக்கும். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்து இரட்டை கோபுரமும் பெண்டகன் அலுவலகமும் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட  சம்பவத்தை அவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆப்கானிஸ்தானில் அமைந்த சோஷலிஸ அரசாங்கத்தை வீழ்த்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட  தாலிபன், அல் கொய்தா, ஒசாமா பின் லேடன் ஆகியோர் பின்பு  அதே அமெரிக்காவிற்கு எதிராக திரும்பியதன் விளைவுதான் செப்டம்பர் பதினொன்று சம்பவம். உலகெங்கிலும் பல பேரழிவுத் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிற, நிகழ்த்தும் இஸ்ரேல் போன்றவர்களுக்கு ஆதரவளிக்கிற அமெரிக்கா தனது மண்ணில் சந்தித்த மிகப் பெரிய அழிவு இது. இரண்டாம் உலகப் போரில் கூட சோவியத் செஞ்சேனைதான் மிகப் பெரிய இழப்பை சந்தித்து பாசிச ஹிட்லரை முறியடித்தது. ஆனால் பியர்ல் ஹார்பர் தாக்குதல் நீங்கலாக அமெரிக்கா பத்திரமாகவே இருந்தது.

இரட்டைக் கோபுர தாக்குதல் என்ற மோசமான நிகழ்வு மட்டும் வரலாற்றில் கறுப்பு தினமாக செப்டம்பர் பதினொன்றை சித்தரிக்கவில்லை. இரட்டை கோபுர தாக்குதலுக்கு முப்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இதே நாளில்தான்  அமெரிக்கா நிகழ்த்திய ஒரு பயங்கர அரசியல் படுகொலையும் நடைபெற்றது. சோஷலிச ஆட்சி முறையைக் கொண்டு வந்ததாலும் அமெரிக்க கம்பெனிகள் இயற்கை வளங்களை கொள்ளையடித்ததை தடுத்து நிறுத்தியதாலும் மக்கள் சார்ந்த திட்டங்களை அமலாக்கியதாலும் அமெரிக்காவின் வெறுப்பை சம்பாதித்த சிலி நாட்டு அதிபர் சால்வடார் ஆலண்டே ,சி.ஐ.ஏ அமைப்பின் சதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசியல் படுகொலைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வாடிக்கை என்பதை பனாமா கால்வாயைக் கைப்பற்ற பனாமா அதிபர் டோரிஜாஸ், இரானின் எண்ணெய் வளத்தை சுரண்ட மொகமது மொசாதக் என்று கடந்த கால கொலைகள் நீளும் என்றால் சதாம் ஹூசேன், முகமது கடாபி என்று அண்மைக் காலப் பட்டியல்கள் சொல்லும். சால்வடார் ஆலண்டே கொல்லப்பட்ட செப்டம்பர் 11 அன்றே இரட்டைக் கோபுரத் தாக்குதல் நிகழ்ந்த்து ஒரு வரலாற்று நகைமுரண்.

பாரதி மட்டும் செப்டம்பர் பதினோராம் நாள் மறையவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளுக்காக போராடி வந்த தலைவர் இமானுவேல் சேகரன் வெட்டிக் கொல்லப்பட்ட்தும் செப்டம்பர் 11 அன்றுதான். 1957 ல் முகவை மாவட்ட கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியர் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆதிக்க சக்திகளுக்கு நிகராக நாற்காலியில் அமர்ந்து பேசினார் என்ற காரணத்திற்காகவே வெட்டப்பட்டார் இமானுவேல் சேகரன். பாரதி நினைவுநாள் கூட்டமொன்றில் பள்ளி மாணவர்களிடம் உரையாற்றி வீட்டுக்கு வரும் வழியில் கொல்லப்பட்டார்.

ஆதிக்க சக்திகளாக வாழ்ந்தவர்களின் நினைவு நாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு செல்கிற பல பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக விளங்கிய இமானுவேல் சேகரனின் நினைவுநாளை கண்டுகொள்வதில்லை என்பது மட்டுமல்ல, அங்கே சொல்பவர்களுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதன் விளைவாகத்தான் 2011 ம் வருடம் செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் பிரச்சினை ஏற்பட்டு காவல்துறையின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஆறு அப்பாவி உயிர்கள் பலியாகின.

ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளையான காவல்துறையை காப்பாற்றும் விதத்தில் அவர்கள் மீது எந்த தவறுமே இல்லை என்று ஒரு பூசணித் தோட்டத்தையே ஒரு பிடிச் சோற்றில் மறைத்து அறிக்கை கொடுத்தது நீதிபதி சம்பத் கமிஷன். அரசுக்கும் நீதிக்கும் மாறாத களங்கமாக செப்டம்பர் 11  பரமகுடி துப்பாக்கிச் சூட்டின் மூலமாய் தமிழக வரலாற்றில்  இடம் பெற்றிருக்கும்.


Thursday, June 8, 2023

சறுக்கல் தொடரலாமா முதல்வரே?

 


ஆட்சிக்கு வந்த போது சிக்ஸர், சிக்ஸர் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது சிக்ஸர்களை காணவில்லை. விக்கெட்டுக்கள்தான் விழுந்து கொண்டிருக்கிறது.

 

வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகளைக் கலந்த அயோக்கியர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. அந்த மேல்நிலை குடிநீர் தொட்டி தகர்க்கப்பட்டதா என்பது கூட தெரியவில்லை.   பாதிக்கப் பட்டவர்களையே குற்றவாளியாக்கும் முயற்சிதான் நடக்கிறது.

 

அரசு தீவிரம் காண்பித்திருந்தால் வேங்கைவயல்    குற்றவாளிகள் இந்நேரம்   பிடிபட்டிருப்பார்கள். ஆனால் மாநில அரசு அலட்சியம் காண்பிக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

 

வேங்கைவயல் பிரச்சினை முடியும் முன்னே மேல்பாதி  திரௌஅதியம்மன் கோயில்  பிரச்சினை வந்து விட்டது                                                                                                                                                                                                                        

 

தலித் மக்கள் அங்கே அனுமதிக்கப்படக்கூடாது என்று ஆதிக்கசாதியினர் அடாவடி செய்கின்றனர். துவக்கத்தில் என்னமோ அரசு உறுதியாகத்தான் இருக்கிறது போன்ற தோற்ற மயக்கத்தை அமைச்சர் பொன்முடியின் பேச்சு அளித்தது.

 

ஆனால் இப்போது என்ன நடந்துள்ளது?

 

பேச்சுவார்த்தையில் தீர்வு வராத காரணத்தால்  கோயிலை சீல் வைத்து மூடி விட்டார்கள்.

 

பேச்சுவார்த்தையில் உடன்பாடு வராவ்விட்டால் கோயில் நுழைவை தடுக்கும் ஆதிக்க ஜாதியினர்  மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்து வீட்டிற்கும் கோர்ட்டிற்கும் அலைய விட்டிருக்க வேண்டுமே தவிர கோயிலை சீல் வைப்பதல்ல  தீர்வு.

 

தீண்டாமை பிரச்சினைகளில் அரசு தனது பலவீனத்தை இரண்டாவது முறையாக வெளிப்படுத்தியுள்ளது.

 

இந்த சறுக்கல் சரியல்ல முதல்வரே, உடனடியாக இரண்டு பிரச்சினைகளிலும் தலையிட்டு தீர்வு காணுங்கள்.

Monday, January 2, 2023

ஆட்டுக்காரன் கள்ள மௌனம் ஏன்?

 


புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த இரண்டு தீண்டாமை கொடுமைகளில் ஒரு பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

ஒரு அற்ப விஷயத்துக்குக் கூட குதிகுதி என்று குதிக்கும் ஆட்டுக்காரனோ எச்.ராசா வகையறாக்களோ, இப்பிரச்சினை குறித்து வாய் திறக்கவே இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே இந்துக்கள்தானே! பின் ஏன் இவர்கள்  ஏன் மௌனமாகவே இருக்கிறார்கள்?

காரணம் மிகவும் எளிமையானது.

பாஜகவின் கொள்கை அதுதான். உள்ளூர மகிழ்ந்திருப்பார்கள். அதனால்தான் கள்ள மௌனம் காக்கிறார்கள்.

Wednesday, December 28, 2022

நல்லது. உறுதியாய் தொடரட்டும்

 



புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ்ந்த இரண்டு தீண்டாமைக் கொடுமைகள் பற்றி நேற்று எழுதியிருந்தேன்.

அதிலே வேங்கை வயல் கிராமத்து கோயிலுக்கு தலித் மக்களை மாவட்ட ஆட்சியரே அழைத்துச் சென்றுள்ளார். சாமி வந்தது போன்ற போர்வையில் தலித் மக்களை இழிவாக பேசிய பூசாரியும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை சிறப்பு. இன்னொரு பிரச்சினையிலும் குற்றவாளிகளை கைது செய்வார்கள் என்று நம்புவோம்.

இது போன்ற தீண்டாமைக் குற்றங்களில் அரசு எடுக்கிற உறுதியான நடவடிக்கைகள்தான் இனியொரு குற்றம் நிகழாமல் தடுக்கும். 

வழக்கறிஞர் தோழர் பிரதாபன் சொல்வது போல குற்றவாளிகளின் சொத்துக்களை பறித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கலாம்.

ஆனால் அது எந்த அளவு சாத்தியமென்று தெரியவில்லை. ஆண்ட பரம்பரை என்று பீற்றிக் கொண்டாலும் குற்றங்களை நிகழ்த்துபவர்களும் பாதிக்கப் பட்டவர்கள் போல அன்றாடங்காய்ச்சிகளே. வெட்டி ஜாதிப் பெருமைதான் அவர்களின் சொத்து. 

Tuesday, December 27, 2022

கயவர்களை கைது செய்

 




இன்று காலையில் பார்த்த இரண்டு செய்திகள் மிகவும் கோபத்தைக் கொடுத்த்து

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் என்ற கிராமத்தில் தலித் மக்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய மேல்நிலை குடிநீர் தொட்டியில் சில கயவர்கள் மனிதக் கழிவை கலந்துள்ளனர். சில குழந்தைகளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அதற்கு காரணம் மாசுபட்ட தண்ணீர் என்று மருத்துவர் கூறியதால் இந்த அராஜகம் தெரிய வந்துள்ளது. . 

சேலம் மாவட்டம் விருதசம்பட்டி என்ற கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆதிக்க சக்திகள் பேச்சு வார்த்தைக்கு ஒத்து வராததால் கோயில் இப்போது சீலிடப்பட்டுள்ளது.

இந்தியாவை காட்டுமிராண்டிக் காலத்திற்கு கொண்டு போக முயற்சிக்கும் இக்கயவர்களை கைது செய்ய வேண்டும், கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

தமிழக அரசு ஊசலாட்டம் இல்லாமல் செயல்பட வேண்டும். 

Thursday, June 23, 2022

திரைப்படத்திலும் நிஜத்திலும் . . .

 


மேலே உள்ளது பேராண்மை திரைப்படக் காட்சி. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கதாநாயகன் துருவன் திட்டமிட்டு இழிவு படுத்துவதாக காட்சி அமைந்திருக்கும். 


இந்தப் படம் என்னவென்று அதில் உள்ள குறிப்புக்களே சொல்கிறது. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

முதலாவது நேரடியாக திணிக்கப்பட்டது. இரண்டாவதோ திணிப்பை ஏற்றுக் கொள்வது இயல்பாக்கப்பட்டது. ஒரு வேளை விஷமூர்த்தி ஜனாதிபதி வேட்பாளரென்றால் இது நடந்திருக்காது.

பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஜனாதிபதியானால் அவர்களுக்கு எந்த விடியலும் கிடைக்காது. ஏனென்றால் தலைமை பீடத்தின் கொள்கை அதற்கு முரணானது. 

Friday, December 24, 2021

பகத்சிங்கின் கடைசி ரொட்டி

 


உத்தர்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு தீண்டாமைக் கொடுமை பற்றி நேற்று எழுதியிருந்தேன்.

இப்போதே இந்த நிலைமை என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும்!

தான் வாழ்ந்த காலத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக சமத்துவத்தைப் பேசியவன் புரட்சியாளன் பகத்சிங்.

பேசியது மட்டுமல்ல வாழ்ந்தும் காட்டியவன்.

ஆம்,

தன் இறுதி உணவை லாகூர் சிறையில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பேபியின் கையால் தயாரிக்கப்பட்ட ரொட்டிதான் வேண்டும் என்று கேட்டு உண்டவன் பகத்சிங்.

மோடி போன்ற நடிகன் அல்ல பகத்சிங், சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாத மாமனிதன்.

பிகு: பேபி என்பதற்குப் பதிலாக போகா என்ற தலித் கைதி ரொட்டி செய்து கொடுத்ததாகவும் இணையத்தில் ஒரு தகவல் உள்ளது. 

Thursday, December 23, 2021

பாஜக மாநிலத்து தீண்டாமைக் கொடுமை

 


பாஜக ஆளும் உத்தர்கண்ட் மாநிலத்தில் சம்பவாத் என்ற மாவட்டத்தில் சுகிதாங் என்ற ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் ஒரு தலித் பெண்மணி சமையலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் சமைத்ததை சாப்பிட 65 குழந்தைகளில் 44 குழந்தைகள் மறுத்துள்ளன. வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்துள்ளனர். எங்கள் குழந்தைகள் அந்த பெண்மணி சமைக்கும் உணவை சாப்பிட மாட்டார்கள் என்று பெற்றோரும் தகராறு செய்துள்ளனர்.

மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்தது தெரியுமா?

பாஜக அரசு என்ன செய்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

அந்த பெண்மணியை பணி நீக்கம் செய்து விட்டது.

தமிழ்நாடாக இருந்தால்தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி களத்தில் இறங்கியிருக்கும்!

காவிகள் ராஜ்ஜியத்தில் ?????????

பிகு" இந்த சந்தர்ப்பத்தில் மாவீரன் பகத்சிங் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

ஏன்?

நாளை காலை காண்போம்.

Monday, October 12, 2020

இதையும் கண்டிக்கனும் கேடி.ராகவா!

 


 

சிதம்பரம் தெற்கு திட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர வைக்கப்பட்டதை பாஜகவின் கேடி.ராகவன் கண்டித்துள்ளார்.



தந்தை பெரியார் பிறந்த நாளுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் வாழ்த்து சொன்னது போல இதுவும் நல்ல விஷயம்தான்.

 அந்த ஊராட்சியில் நடந்தது போன்றதொரு தீண்டாமைக் கொடுமை, ஜாதியின் அடிப்படையில் பாகுபாடு சங்கர மடத்திலும் நடந்துள்ளது என்பதை கீழே உள்ள புகைப்படங்கள் உணர்த்தும்.




 

அப்பட்டமான ஜாதி மேலாதிக்கம் என்பதைத் தாண்டி வேறொன்றும் இல்லை. இந்த அணுகுமுறை இப்போதும் மாறவில்லை

 சிதம்பரம் ஊராட்சி பிரச்சினையில் கண்டித்த அதே உணர்வோடு  ஜனநாயக முறைப்படி  தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளில் சிலரை மட்டும் ஜாதிய பாகுபாட்டோடு தரையில் அமர வைக்கும் அராஜகத்தை நடத்தும் சங்கர மடத்தையும் கேடி.ராகவன் கண்டிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

 நீதி, நேர்மை, நியாயம் எல்லாம் நிரம்பிய உத்தமர் கேடி.ராகவன்  என்று அவரது கட்சிக்காரர் சிப்பு சேகரே சொல்லியுள்ளாரே!

 எப்போ கண்டன அறிக்கை விடப் போறீங்க கேடி.ராகவன்?

 பிகு: இதே கேள்வியை கேடி.ராகவனின் முக நூல் பக்கத்தில் கேட்டதற்காக வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களை சங்கிகள் ஆபாச வார்த்தைகளால் திட்டி தங்களின் தரத்தை நிரூபித்துக் கொண்டது மட்டுமல்ல, தரையில் அமர வைக்கப் படும் இழிவை அவர்கள் மனமுவந்து ஏற்கும் அடிமை புத்தியையும் வெளிப்படுத்திக் கொண்டு விட்டார்கள்.

Sunday, October 11, 2020

குற்றமும் தண்டனையும்

 


சிதம்பரம் தெற்குத் திட்டை பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் திரு இராஜேஸ்வரி அவர்களை ஊராட்சி மன்றத் அலுவலகத்தில் தரையில் அமர வைக்கப்பட்டார்.

தீக்கதிரில் வெளியான செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய பின்னணியில்

ஊராட்சி மன்றச் செயலர் சிந்துஜா, துணைத் தலைவர் மோகன்ராஜ் ஆகியோர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. துணைத்தலைவர் தலை மறைவாகி விட செயலாளர் கைது செய்யப்பட்டு விட்டார்.

இந்த தீண்டாமை குற்றத்திற்கு கடுமையான தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

அப்போதுதான் ஜாதித்திமிர் கொண்டவர்கள் அடங்குவார்கள்.

Tuesday, December 3, 2019

எல்லாமும் சேர்ந்தே எரியட்டும் . . .


தீண்டாமைச்சுவர் கட்டி
ஆணவக் கொலை புரிந்த முதலாளி,

அராஜகத்தை கண்டுகொள்ளாமல்
அலட்சியமாய் இருந்த அதிகார வர்க்கம்,

முதலாளி வீசிய எலும்புத்துண்டுக்காய்
வாலை ஆட்டிச் சென்ற காவலர்கள்,

இறந்தவர் தலித் என்பதால் கள்ள மௌனம்
காக்கும் ஊடகங்கள்,

தீண்டாமைச் சுவர் என்பதை
திசை திருப்பும் அறிவுஜீவிகள்,

"சக்கிலிய நாய்களிடம் கெஞ்ச வேண்டுமா?
முஸ்லீம்களுக்கு இங்கே என்ன வேலை?"

என்று வெறி கொண்டு பேசிய 
மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி மணி

எல்லோரும் எரியட்டும்
பதினேழு பேர் சிதை துயரம்.
இவர்கள் எரிந்தால்
அதுதான்  நீதி . . .

இனிப்புக்களும் மரணங்களும் பரிசாக . . .



மேட்டுப்பாளையத்தில் நேற்று நடந்தது அப்பட்டமான ஆணவக் கொலைகள்.

தனது வீட்டிற்கு அருகில் உள்ள தலித் மக்களின் வீடுகள் கண்ணில் படக் கூடாது என்ற ஆணவத்தில் இருபது அடிக்கு கருங்கல்லில் எழுப்பப்பட்ட தீண்டாமைச்சுவர் பதினேழு உயிர்களை பலி வாங்கி விட்டது.

தீண்டாமைச் சுவர் கட்டிய சக்கரவர்த்தி துகில் மாளிகை முதலாளியை கைது செய்ய வக்கில்லாத காவல்துறை

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் மீது தடியடி நடத்தி  எலும்புத்துண்டுகளின் ருசிக்கு விசுவாசமாக இருந்து விட்டது.

இந்த முதலாளியின் முக நூல் பக்கத்தில் தீபாவளிக்கு தன் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக வாங்கி வைத்துள்ள இனிப்பு பொட்டலங்களை அடுக்கி வைத்து படம் போட்டுள்ளான்.

தன் அண்டை வீட்டாருக்கு மரணத்தை பரிசாக அளித்துள்ளான் அயோக்கியன் . . .

Thursday, August 22, 2019

இவ்வளவு கேவலமான மனிதர்கள் உள்ளவரை . . .






வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் வெட்கக்கேடானது. ஜாதிய வெறி தலைக்கேறிப் போன மனிதர்கள் உள்ளவரை இந்தியா எந்நாளும் உருப்படப் போவதே இல்லை. 

Thursday, June 20, 2019

முன்னுரிமை இதற்குத்தான் மோடி



இந்த படத்தை முழுமையாக (காயம் மறைக்கப்பட்டுள்ளது)  பார்க்கும் போதே பதறியது.

 செய்தியை  படிக்கும் போது இன்னும் அதிகமாக பதறியது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் வார்தா வில் ஒரு ஆலயத்துக்குள் நுழைந்த ஒரு தலித் சிறுவனின் ஆடைகளை அகற்றி வெறும் தரையில் வெயிலில் உட்கார வைத்ததில் அச்சிறுவனின் பின் பக்கம் வெந்து போய் விட்டது.

காட்டுமிராண்டித்தனம் என்பதைத் தவிர வேறென்ன சொல்வது?

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்று ஜனநாயக விரோதமான ஒரு நடவடிக்கைக்காக நேரத்தை வெட்டியாக விரயம் செய்வதற்குப் பதிலாக

"அனைவருக்குமான நாடு, அனைவருக்குமான உரிமைகள்"

என்று சிந்தித்து அதனை அமலாக்க முயற்சி செய்யவும் மோடி. 

இதுதான் உடனடித் தேவை

Wednesday, May 30, 2018

யதார்த்தம் புரிகிறதா டாக்டர் கி.சாமி ?


தீக்கதிர் நாளிதழில் இன்று வந்த செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளேன். மருத்துவர் கிருஷ்ணசாமி இச்செய்தியை அறிந்திருப்பார் என்று நம்புகிறேன்.

பாஜகவின் சதிக்கு இரையாகி நாங்கள் பட்டியலினத்தவர் இல்லை என்று நீங்கள் சொல்லிக் கொண்டாலும் தீண்டாமைக் கொடுமை இன்னும் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். 

தீண்டாமைக்கொடுமைக்கு எதிரான போராட்ட களத்திலிருந்து விலகி ஓடாதீர்கள்.




பட்டியலினத்தவர் மீது சாதி ஆதிக்கச்சக்தியினர் கொடூரத் தாக்குதல்
சிவகங்கை அருகே 2 பேர் படுகொலை

சென்னை, மே 29-

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் சாதி ஆதிக்கச்சக்தியினரின் சாதி வெறித்தாக்குதலில் பட்டியலினத்தவர் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர். பி.சம்பத், பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் 50 தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்களும் சாதிஆதிக்கச் சமூகத்தின் 5 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இதில் சாதி ஆதிக்கச் சமூகத்தின் சுமன் என்பவரின் குடும்பம் மட்டும் கஞ்சாவியாபாரம் செய்து வருகிறது. இதனை எதிர்த்து அங்கு வாழும் பட்டியலின மக்கள் காவல்துறைக்கு புகார் கொடுப்பதும் , காவல்துறை இதில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் நிலையும் இருந்துள்ளது. 

இதன் காரணமாக கடந்த நான்கு வருடத்துக்கு மேலாக சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டுள்ளன.இந்நிலையில் திங்களன்று கச்சநத்தம் கிராமத்தில் திருவிழா முடிந்த நிலையில் சாதி ஆதிக்கச் சக்தியினர் வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து பட்டியலினமக்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அறிவழகன் மகன் சண்முகநாதன் (39), கோனான் மகன் ஆறுமுகம் (65) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் சுகுமாறன், தனசேகர், மலைச்சாமி உள்ளிட்ட ஆறு பேர் படுகாயம்அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இறந்தவர்களின் உடல்களும் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இக்கொடூர, கொலைவெறித் தாக்குதலை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்து சாதிய ரீதியான வன் கொடுமை தாக்குதல்கள் அதிகரித்து வருவதையும், பட்டியலின மக்களை படுகொலை செய்வதையும் தமிழகஅரசு தடுத்து நிறுத்த வேண்டும். கச்சநத்தம் கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளுக்கு காரணமானவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டும் . பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியும்,நிவாரணமும், அரசு வேலையும் வழங்கிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

படுகொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களை வாங்க மறுத்துஅவர்களது உறவினர்கள் 300-க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்டஆட்சியர் அலுவலகம் அருகே அண்ணா பேருந்து நிலைய சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கைமாவட்டச் செயலாளர் மு.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்கபூபதி, வீரையா, வீரபாண்டி,திருப்புவனம் ஒன்றிய செயலாளர் அய்யம் பாண்டி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச் செயலாளர்செல்லக்கண்ணு, சிவகங்கை மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, மதுரை மாவட்டத்துணைத் தலைவர் மீனாட்சிசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

5 பேர் நீதிமன்றத்தில் சரண்


இச்சம்பவத்தில் தொடர்புடைய5 பேர் மதுரை நீதிமன்றத்தில் செவ்வாயன்று சரணடைந்தனர்.இக்கொலை சம்பவத்தில் சுமன், அருண்குமார், ராஜேஷ், அஜய் தேவன், அக்னி ஆகிய 5 பேர் மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர்(ஜேஎம் கோர்ட் 4) கௌதமன் முன்பாக சரணடைந்தனர்.

Thursday, May 3, 2018

அம்மையார் அங்க சாப்பிடுவாங்களா?


இவ்வளவு ஆணவமாக, ஜாதிய வெறியோடு பேசுகிற உமா பாரதியிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க வேண்டியுள்ளது.

இந்திய குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி மாளிகையில் மத்திய அமைச்சர்களுக்கு விருந்து கொடுத்தால் அப்போது சாப்பிடுவீர்களா? உங்கள் வரையறை அவருக்கும் பொருந்துமல்லவா?



நாட்டின் முதல் குடிமகனை ஜாதிய சிமிழுக்குள் அடைக்க மனம் மிகவும் சங்கடப்படுகிறது. "தலித்"தாக இருந்தாலும் அவர் திறமையானவர் என்று "நீட்" நிர்மலா அம்மையார் சொன்னதை விட மோசமில்லை என்பதால் இளைப்பாறிக் கொள்கிறேன்.


Tuesday, November 28, 2017

நாளை அவசியம் வாருங்கள்

நீதி கேட்டு நாளை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு வேலூர் மற்றும் அருகாமை ஊரில் உள்ள அனைவரையும் அவசியம் வருமாறு அழைக்கிறேன்.


 

Monday, April 3, 2017

அவன் நாயென்றதால் . . . .இவன் பன்றி



ரவீந்திர சவான் என்ற மஹாராஷ்டிர மாநில எம்.எல்.ஏ ரவீந்திர சவான் என்பவன் தலித் மக்களை பன்றி என்று வர்ணித்துள்ளான். அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் ஒரு விழாவில் "சாக்கடையில் கிடக்கும் பன்றிகளைப் போன்ற தலித்களை முன்னேற்ற பிரதமரும் முதல்வரும் பாடுபடுகிறார்கள்"  என்று பேசியுள்ளான். இதனை அந்த முதல்வரும் கேட்டு ரசித்துள்ளார்.

ஹரியானாவில் இரண்டு தலித் குழந்தைகள் கொளுத்தப்பட்ட போது "நாய்களின் மீது கல்லடி படுவதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா?" என்று திமிரோடு பேசிய சர்ச்சைக்குரிய முன்னாள் ராணுவ தளபதியும் இந்நாள் அமைச்சருமான வி.கே.சிங் இன்னும் மத்திய அமைச்சராகவே தொடர்வதால் ரவீந்திர சவானுக்கு இவ்வளவு வாய்க்கொழுப்பு வந்துள்ளது. 

ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதையே காரின் சக்கரத்தில் சிக்கிய நாயின் மகன் என்று வர்ணித்த மோடியின் கட்சிக்காரர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

வி,கே.சிங்கிற்கு எதிராக அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறு யாரும் குரல் கொடுக்கவில்லை. அன்று தேசம் தழுவிய எதிர்ப்பு இருந்து அந்த மனிதனின் பதவியைப் பறித்திருந்தால் இன்று ரவீந்திர சவானுக்கு இவ்வளவு திமிர் வந்திருக்காது. 

ரவீந்திர சவானுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுத்து அவனது எம்.எல்.ஏ பதவியைப் பறித்திட வேண்டும். மன்னிப்பிற்கெல்லாம் தகுதியானவன் அல்ல. 

மாட்டை மட்டுமே பிரதானமாகக் கருதுகிற பாஜக கட்சியில் மனிதர்களுக்கு மதிப்பு கிடையாது. 

பின் குறிப்பு : ஒரு மத்திய அமைச்சரையும் எம்.எல்.ஏ வையும் ஒருமையில் அழைப்பது சரியல்ல என்று மொட்டைக் கடிதாசு தம்பி ஒன்று அனாமதேயமாக நாகரீகம் சொல்லிக் கொடுக்க வந்து விடும். மனிதர்களை இழிவுபடுத்தும் அவர்களிடமோ, மொட்டைக் கடிதாசு பேர்வழிகளிடமோ நாகரீகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை முன் கூட்டியே சொல்லிக் கொள்கிறேன்.