Showing posts with label இட ஒதுக்கீடு. Show all posts
Showing posts with label இட ஒதுக்கீடு. Show all posts

Wednesday, May 8, 2024

சங்கிகள் கேவலமானவர்கள் - இதனால்தான்

 


சங்கிகள் பார்வையில் இடஒதுக்கீடு பெறுபவர்கள்.

 இட ஒதுக்கீடு பெறுபவர்களை சங்கிகள் எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கு கீழே உள்ள பதிவே சான்று.

 


இந்த கேவலமான பதிவை மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில்தான் பார்த்தேன். இதற்கு பதிலளித்த சங்கிகள் அனைவருமே இந்த அம்மையாரின் நிலைக்கு ஆதரவாக அதே போலத்தான் கேவலமான மன நிலையை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

 அந்த விதத்தில் சங்கிகளின் ஒற்றுமையை பாராட்டத்தான் வேண்டும். கேவலத்திற்குத்தான் எப்போதும் துணை கிடைக்கும்,

Tuesday, May 7, 2024

அதான் விக்கறீங்களா மோடி

 


முக நூலில் பார்த்த பதிவொன்று கீழே உள்ளது.

 


பொதுத்துறை இல்லாவிட்டால் இட ஒதுக்கீடு ஏது என்ற கேள்வியை எழுப்பும் வேளையில் இங்கே ஒரு சங்கி, இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பொதுத்துறை நிறுவனங்கள் ஒழிக்கப்படுகிறது என்று தன்னிலை விளக்கம் அளிக்கிறார்.

 அப்படியா மோடி? அதுக்குத்தான் விக்கறீங்களா?  

 பிகு: இட ஒதுக்கீடு பெறுபவர்களை சங்கிகள் எப்படி பார்க்கிறார்கள் என்று பிறகு எழுதுகிறேன்.

Friday, December 15, 2023

முற்றிய வெறியின் உச்சம்

 


தென் ஆப்பிரிக்கா அரை இறுதி ஆட்டத்தில் தோற்றதும் சங்கிகள் பகிர்ந்து கொண்ட படம் இது.

 


இட ஒதுக்கீட்டின் மூலம் டெம்பா பவுமா தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் பொறுப்பிற்கு வந்த காரணத்தால்தான் தென் ஆப்பிரிக்கா அரை இறுதியில் தோற்றுப் போனது என்று வசை பாடுகிறார்கள். மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் கூச்சல் அதிகமாகவே உள்ளது. மகன் தொலைக்காட்சியில் ஆட்டத்தை பார்க்கையில் காதில் விழுந்த வர்ணனையில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தும் பவுமாவை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

 தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு உள்ளதா?

 ஆம். இருக்கிறது.

 ஏன்?

 நெல்சன் மாண்டேலா ஜனாதிபதியாகும் வரை தென் ஆப்பிரிக்க நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு  அனைத்து நாடுகளும் தடை விதித்திருந்தது. அவர் பதவிக்கு வந்து வேண்டுகோள் விடுத்த பின்பே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மற்ற நாடுகளுக்கு செல்லத் தொடங்கியது. ஆனால் அந்த அணியின் வீரர்கள் என்னமோ வெள்ளை இனத்தவர்களாக மட்டுமே இருந்தார்களே தவிர கருப்பின மக்கள் ஒதுக்கித்தான் வைக்கப்பட்டனர். அவர்களின் திறமைகள் முடக்கப்பட்டன.

 மக்கள் இயக்கங்களுக்குப் பின்பே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் மற்றவர்களும் பங்கேற்க தொடங்கினர். வெள்ளையர் இல்லாதவர்களும் அணியில் இணைக்க்கப்படுவார்கள், போட்டியில் விளையாடும் பதினோரு பேரில் கருப்பின வீரர்கள் இருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற விதி உருவானது.

 இட ஒதுக்கீடு வந்ததன் பின்னணி இதுதான். ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் முன்னேறி மேலே வர செய்யப்பட்ட ஏற்பாடு அது.

 டெம்போ பவுமா அரை இறுதியில் தோற்றுப் போனதுக்காக வசை பாடப்படுகின்றார். அவரை தென் ஆப்பிரிக்காவில் யாரும் வசை பாடுவதாகவோ, கோட்டா என்று இழிவு படுத்தவோ இல்லை. செய்வதெல்லாம் நம்ம ஊரு சங்கிகள்தான்.

 பவுமா கேப்டனாவதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா தான் பங்கேற்ற அனைத்து உலகக் கோப்பைகளையும் வென்று விட்டதா அல்லது இறுதிப் போட்டிக்காவது தகுதியானதா?

 இல்லை. நிச்சயமாக இல்லை.

 அரை இறுதியில் தோற்றுப் போவதை தங்களின் பாரம்பரியமாகவே மாற்றிக் கொண்டுவ்ளது, அப்படி தோற்றுப் போன போட்டிகளை கேப்டனாக வழி நடத்தியவர்கள் எல்லோருமே கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள்தானா?

 இல்லை என்பதை அழுத்தமாக சொல்ல முடியும்.

 ஆக சங்கிகளுக்கு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்  அணியை பவுமா எனும் கருப்பினத்தைச் சேர்ந்தவர் கேப்டனாக வழி நடத்துவது மட்டுமே பிரச்சினை. எந்த திறமையும் இல்லாமலா அவர் தன் அணியை அரை இறுதி வரை கொண்டு வந்தார்! போன வருடம் கோப்பையை வென்ற இங்கிலாந்து மிக மோசமாக ஆடி பட்டியலில் கீழே எங்கேயோ போய் விட்டதே! அதற்கு என்ன காரணம்?

 சங்கிகளின் இன வெறி, ஜாதி வெறி, மத வெறி மற்றும் ஜாதி வெறிதான் காரணம், வேறொன்றுமில்லை. அதை அடுத்த நாட்டுக்காரர்கள் மேலும் காண்பிக்கிறார்கள் என்பது  அவர்களின் நோய் முற்றி விட்டதையே காண்பிக்கிறது.

 பிகு: இது ரொம்பவே பழைய பதிவுதான். பகிரத்தான் தாமதமாகி விட்டது.

Wednesday, November 9, 2022

வறுமைக் கோட்டை அபத்தமாக்கிய . . . .

 


பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது தேவையில்லாத ஆணி. பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்டவர் ஆகியோரை விடவும் குறைவான மதிப்பெண் பெற்றால் கூட வேலை வாய்ப்பு கிடைக்கிற அபத்தம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

 இந்த பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் பிரிவில் இட ஒதுக்கீடு பெற என்ன தகுதி இருக்க வேண்டும்?

 ஏற்கனவே இட ஒதுக்கீட்டிற்கு தகுதியுடைய பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப் பட்டோர் ஆகியோராக இருக்கக் கூடாது.

 ஆண்டு வருமானம் எட்டு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது 66,000 ரூபாய் வரை உங்கள் மாத வருமானம் இருக்கலாம்.

 999 சதுர அடி அளவில் வீடு இருக்கலாம். அதை விட ஒரு சதுர அடி கூட இருந்தாலும் கிடையாது. ஆமாம். அவங்க அவ்ளோ ஸ்ட்ரிக்ட்டு.

 ஐந்து ஏக்கர் நிலத்துக்கு மேல ஒரு இன்ச் கூட நிலம் இருக்கக்கூடாது. ஆமாம்.

 ஆக 66,000 ரூபாய் சம்பளம் 999 சதுர அடி வீடு, நாலே முக்கால் ஏக்கர் நிலம் ஆகியவற்றில் ஏதோ இல்லை அனைத்துமோ வைத்திருந்தால் கூட நீங்கள் பொருளாதார நலிவற்றோருக்கான இட ஒதுக்கீட்டை பெறலாம்..

 இதே நேரம் இந்தியாவில் வறுமைக் கோடு என்றொன்று உண்டு.  அதற்கான வரையறை என்ன?

 ஒருவரின் தினசரி வருமானம் கிராமப்புறத்தில் ஒரு நாளைக்கு ரூபாய் 32 க்கு குறைவாகவும் நகர்ப்புறத்தில் ரூபாய் 47 க்கு குறைவாகவும்  இருந்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பதாக அர்த்தம். அப்படி வறுமைக் கோட்டிற்கு மேல் இருப்பவர்களுக்கு இலவச அரிசி உட்பட பல சலுகைகளை ரத்து செய்ய ஏராளமான பரிந்துரைகள் உள்ளது.

 47 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால் உங்களுடைய பல சலுகைகள் பறி போகும் அபாயம் உள்ள நிலையில் ஒரு நாளைக்கு 2,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்தவராக கருதப்பட்டு அவர் குடும்பத்திற்கு இட ஒதுக்கீடு கிடைக்கும்.

 சமூக நீதிக்கு முரணான இந்த இட ஒதுக்கீடு தொடர்வது எவ்விதத்திலும் நியாயமில்லை. ஆதரித்தோர் கூட  தங்கள் நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்வது நல்லது.

 

Tuesday, May 4, 2021

ஏன் வெளியேறவில்லை கிச்சா?

 


தான் சார்ந்திருக்கிற தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியலின சமூகம் என்ற வரையறையிலிருந்து  நீக்க வேண்டும் என்பதுதான் டாக்டர் கிருஷ்ணசாமியின் நீண்ட நாள் கோரிக்கை.

 


இட ஒதுக்கீடு எங்கள் சமூகத்திற்கு அவசியமில்லை என்று சொல்லும் டாக்டர் கிச்சா ஏன் பொதுத்தொகுதி எதிலும் போட்டியிடாமல் எப்போதும் போல ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் போட்டியிட்டார்?

 அவரே பட்டியலினத்திலிருந்து வெளியேற தயாராக இல்லாத போது தன்னுடைய சமுதாய மக்களை மட்டும் வெளியேற வேண்டும் என்று சொல்லி அவர்களுடைய இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்க முயல்வது நியாயமா?

Thursday, January 10, 2019

ஆயிரம் விவசாயிகளும் நயன்தாராவும்




எப்போதோ படித்த கதை இப்போது நினைவுக்கு வந்தது.

காவல்துறை அதிகாரிகளின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. உயர் அதிகாரி கூறுகிறார்.

“நாளை தலைநகரில் போராட்டம் நடத்த வரும் ஆயிரம் விவசாயிகளோடு நடிகை நயன்தாராவையும்  நாம் சுட்டுக் கொன்று விட வேண்டும்”

கூட்டத்தில் பதற்றத்தோடு பல குரல்கள் எழுகிறது

“ஏன் நயன்தாராவை கொல்ல வேண்டும்?”  என்று அந்த குரல்கள் கேட்கிறது.

உயர் அதிகாரி தனக்கு அடுத்த நிலையில் இருந்த அதிகாரியைப் பார்த்துச் சொல்கிறார்.

“பார்த்தாயா? நான் சொன்னது சரியாகி விட்டதா? அந்த ஆயிரம் விவசாயிகள் பற்றி யாருமே கவலைப்படவில்லை பார்.

இப்போது நடந்து கொண்டிருக்கும் பல விவாதங்கள் இக்கதையை நினைவுபடுத்தின.

“இட ஒதுக்கீடு” என்பதை கொண்டு வந்ததன் அடிப்படை என்ன?

சமூக ரீதியாக பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்கள் வாழ்வில் மேலே வர வேண்டும் என்பதற்கான ஏற்பாடுதான் இட ஒதுக்கீடு.  ஏன் ஜாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதற்கு அரசியல் சாசனம் சொன்ன பதில் “ஜாதிய ரீதியில் அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்பதால்தான் இட ஒதுக்கீடும் அதே அடிப்படையில் அமைகிறது”

அதனால்தான் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியை நிலை நாட்டும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் சிலர் பொருளாதார ரீதியில் பின் தங்கியிருந்தால்  அதற்கு சமூக ரீதியிலான ஒடுக்குமுறை என்பது நிச்சயம் காரணம் கிடையாது.

அதற்கான காரணிகள் என்ன என்பதை கண்டறிந்து அதை போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமே தவிர சமூக ரீதியிலான ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை விரிவு படுத்துவது என்பது எவ்விதத்திலும் நியாயம் இல்லை.  இந்த மசோதா நிறைவேறுவதை அனுமதித்திருக்கக் கூடாது.  யார் ஆதரவளித்திருந்தாலும் அது தவறு.

முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீடு என்பது சரியா தவறா என்ற அடிப்படையில் விவாதங்கள் அமைந்திருக்க வேண்டும்.

ஆனால் நயன்தாராவை  ஏன் கொல்ல வேண்டும் என்று எழுந்த கேள்விகள் போல

எட்டு லட்ச ரூபாய் ஊதிய வரம்பு,
ஆயிரம் சதுர அடி வீடு,
ஐந்து ஏக்கர் நிலம்,
தேர்தல் கால விளம்பர உத்தி,
பணி நியமனமே இல்லாத போது சாத்தியமில்லாத இட ஒதுக்கீடு,
நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு விடும்.

என்றெல்லாம் விவாதங்கள் நடைபெறுகிறது.

மோடியின் சூழ்ச்சி வலை இதுதான்.

அடிப்படையான கருத்து பின்னுக்குப் போய் விட்டது.  அது மட்டுமா இந்த ஆட்சி மீதான அனைத்து பிரச்சினைகளும் விமர்சனங்களும் தோல்விகளும் கூட.

இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தினை ஒட்டி எங்கள் சங்கத்தின் மாத இதழான “இன்சூரன்ஸ் வொர்க்கர்” இதழின் தலையங்கத்தின் தமிழாக்கத்தை  சில நாட்கள் முன்பாக பகிர்ந்து கொண்டிருந்தேன். அதன் ஒரு பகுதியை மட்டும் இங்கே மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு தயாராகும் வேளையில் எதிரிகளும் கூட எதிர்வினையாற்ற திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜாதிய, மத உணர்வுகளை தூண்டி விட்டு தொழிலாளர்கள், பாட்டாளிகளின் ஒற்றுமையைக் குலைப்பதே அவர்களின் எதிர்வினையாக நிச்சயம் இருக்கும். ஒரு தொழிலாளியை இன்னொரு தொழிலாளியோடு மோத வைக்க எந்த அளவிற்கும் கீழிறங்குவார்கள். 

அழிவுபூர்வமான விளைவுகளை உண்டாக்கக் கூடிய  “அவர்களுக்கு எதிராக நாம்” என்ற உத்திகளை கையாள்வார்கள். ஜாதிய, மத ரீதியான திரட்டல் என்பது பிராந்திய ரீதியிலான திரட்டல் என்ற புது வடிவத்திற்கு மாறி வருகிறது. பீஹார், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது குஜராத்தில் நிகழ்ந்த தாக்குதன் ஒட்டு மொத்த தொழிலாளர்களின் ஒற்றுமையை சிதைக்கக் கூடிய அளவிற்கு மோசமான விளைவுகளை தருவதாகும்.

பதினான்கு  மாதக்குழந்தையை பாலியல் வன் கொடுமை செய்வது என்பது மிகக் கொடூரமான ஒன்று. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அந்த கொடிய குற்றத்தை இழைத்தவன் சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.  ஒருவனின் குற்றச்செயலுக்காக இந்தி பேசும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் தண்டித்தல் தகாது. இங்கே தாக்குதல் நடத்தியவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இரு தரப்புமே தொழிலாளர்கள்தான்.

மிக மோசமான வேலையின்மை பிரச்சினையும் அதனால் ஏற்பட்டுள்ள விரக்தியுமே இந்த கலவரத்தின் பின்னே ஒளிந்திருக்கிற காரணம்.. இப்படிப்பட்ட சூழல் மற்ற பகுதிகளில் கூட உருவாகலாம். இப்படிப்ட்ட நடவடிக்கைகள் பரந்த, விரிவுபட்ட இயக்கங்களை  பலவீனப்படுத்தும் என்பதையும் அதனால் நம் உண்மையான எதிரிகளான ஆளும் வர்க்கத்தை அதன் பொறுப்பிலிருந்து விலகி திரிய வைக்கும் என்பதை தொழிலாளர் வர்க்கம்  உணர வேண்டும்.,

பிரச்சினைகளும் துயரங்களும் அனைவருக்கும் பொதுவானது என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்குமான பொது எதிரி நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளும் ஆளும் வர்க்கங்களின் பிரிவினைக் கொள்கைகளும்தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தங்களை அவர்கள் ஏய்க்க அனுமதிக்கக் கூடாது. 

பேரழிவை ஏற்படுத்தும் பொருளாதார, மத வெறிக் கொள்கைகளை எதிர்த்து போராடுவதிலேயே கவனத்தை குவிக்க வேண்டும். பொதுவான இயக்கங்கள் மூலம் இதுவரை உருவாகியுள்ள ஒற்றுமையை பாதுகாத்திட வேண்டும், மேலும் வலிமைப்படுத்திட  வேண்டும்.  

துரதிர்ஷ்டவசமாக அதுதான் நடந்துள்ளது. 




Friday, August 28, 2015

இட ஒதுக்கீடு – குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் குரங்காக....



http://wallpapersshd.com/wp-content/uploads/2013/04/monkey-with-his-children-wallpapers.jpg

மோடியின் சொந்த மாநிலமான குஜராத் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த கொந்தளிப்பான சூழலில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் துணைத்தலைவரான சுரேந்திர ஜெயின் என்பவர் “இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற இதுதான் சரியான காலம். வேண்டுமென்றால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று சொல்லியுள்ளார்.

அதையே பாஜக எம்.பி ஒருவரும் வழி மொழிந்துள்ளார்.

பாஜக அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஒரு கட்சி. ஆனால் அதனை அது நேரடியாக சொல்லாது.

மண்டல் கமிஷன் பரிந்துரையை வி.பி.சிங் ஏற்ற போது அக்கட்சி நேரடியாக எந்த போராட்டமும் நடத்தவில்லை. மாறாக அதன் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் மூலம் வட இந்தியா முழுதும் மிகப் பெரிய வன்முறைக் கலவரங்களை நடத்தியது.

குரங்கு குட்டியை வைத்து ஆழம் பார்ப்பது போல, பாஜக வி.ஹெச்.பி மூலம் ஆழம் பார்க்கிறதா என்று சந்தேகம் வருகிறது.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஒரு சிறிய அமைப்பை தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று அமித் ஷா முன்னிலையில் சொல்ல வைத்த கூத்தையும் நாம் மறந்து விடக் கூடாது.

சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.

பின் குறிப்பு ; காலையில் பதிவேற்றுவோம் என நேற்று இரவு எழுதியது.
இப்போது பார்த்தால் குஜராத் போராட்டமே இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் என்று அம்பலமாகிவிட்டது. இவர் யாரால் ஏவி விடப்பட்டவர்?
 


 

Friday, February 27, 2015

பட்டியலினத்தவர் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தோழர் டி.கே.ஆர்

 https://c2.staticflickr.com/4/3203/3012840328_ecc7cd7f41.jpg

பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் புதிதாக சில ஜாதிகளை இணைப்பது பற்றியும் திட்டக் கமிஷன் ஒழிக்கப்பட்டு விட்டதால் எஸ்.சி/எஸ்.டி துணைத் திட்ட நிதி என்ன ஆகும் என்பது பற்றியும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் டி.கே.ரங்கராஜன் பேசியுள்ளதின் இணைப்பை இங்கே அளித்துள்ளேன்.

ஆக்கபூர்வமாக தோழர் டி.கே.ஆர் முன்வைத்த கருத்துக்களை மோடி அரசு பரிசீலிக்குமா? 

Wednesday, June 25, 2014

அவர்களுக்குத்தான் அதிக ஊதியம் அளிக்கப்பட வேண்டும்



கடந்த வாரத்தில் ஒரு நாள் துயர நிகழ்வு. ஒரு அகால மரணம். இறந்தவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயம். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சடலம் வைக்கப்பட்டிருந்தது. பிரேதப் பரிசோதனை தொடங்கும் முன்பு சடலத்தை அடையாளம் காட்ட உறவினர்கள் அழைக்கப்பட்ட போது நானும் உடன் சென்றேன்.

முப்பது வினாடிகள் கூட அங்கே இல்லை. மேஜையில் கிடத்தப்பட்ட சடலங்கள், தரையில் கிடத்தப்பட்ட சடலங்கள் என்று அங்கே வீசிக் கொண்டிருந்த துர்நாற்றத்தை அந்த முப்பது நொடிகள் கூட என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. அன்று முழுதுமே உணவு எடுத்துக் கொள்ள முடியாதபடி அதன் தாக்கம் இருந்தது.

ஆனால் நாள் முழுதுமே இந்த பிணவறையில் இருந்து கொண்டு, பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவர்களுக்கு உதவுவது, அறுப்பது, தைப்பது, சுமந்து கொண்டு அமரர் ஊர்தியில் ஏற்றுவது போன்ற பணிகளை எல்லாம் மருத்துவமனையின் கடைநிலை ஊழியர்கள்தான் செய்கின்றனர்.

இந்த பணி என்பது மட்டுமல்ல, பொதுவாக துப்புறவுப் பணிகள் அதிலும் குறிப்பாக கழிவறை சுத்தம் ஆகியவற்றை செய்வது ஒடுக்கப்பட்ட மக்களில் அடி மூட்டையாக இருக்கிற அருந்ததிய இன மக்கள்தான். வேறு யாரும் செய்ய முன் வராத, செய்ய தயாராக இல்லாத இந்த வேலைகளை செய்பவர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்கிறதா?

சொல்லப்போனால் நாற்றத்திலும் அசுத்தத்திலும் நாள் முழுதும் உழன்று கொண்டிருக்கிற இந்த உழைப்பாளிகளுக்கு மற்றவர்களுக்கு அளிப்பதை விட கூடுதலான ஊதியம் அளிக்க வேண்டும். ஆனால் மிகக் குறைவாக ஊதியம் பெறுவது என்னமோ இவர்கள்தான். இந்த நிலை மாறிட வேண்டும்.

இவர்களின் வாழ்நிலையை மாற்றிட உள் ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மற்ற அருந்ததியர் அமைப்புக்களோடு இணைந்து நடத்தியதால் மட்டுமே 3 % உள் ஒதுக்கீடு என்பது வந்தது. மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் இந்த சமுதாயத்தினரும் படிப்பதற்கான வாசலை இந்த உள் ஒதுக்கீடே உருவாக்கியது.

கைகளால் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கான சட்டம் வந்துள்ளது. அதன் அமலாக்கம் தேவைப்படுகிறது. இந்த தேசத்தின் மிகப் பெரிய திறந்த வெளி கழிவறையாக ரயில்வே பாதைகள் இருப்பது மிகப்பெரிய அவலம். செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் அளவிற்கு முன்னேறிய தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நாட்டில் இன்னும் பாதாள சாக்கடையில் இறங்கிய துப்புறவாளர்கள் இறந்து போகும் கொடுமையும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

வைர நாற்கர ரயில்பாதையை உருவாக்கும் முன்னம் மத்தியரசு முன்னுரிமை அளிக்க வேண்டிய பிரச்சினை ரயில்பாதையில் உள்ள கழிவுகளை அகற்றுவதுதான்.

ஆனால் துப்புறவுப் பணி கடவுளுக்கு செய்கிற பணி என்று பாறாங்கல் ஐஸ்ஸை தலையில் வைத்து விட்டு பிரச்சினையை திசை திருப்புகிற மோடி போன்றவர்கள் இதிலெல்லாம் அக்கறை செலுத்துவார்களா என்ன?





Monday, November 4, 2013

மதம் மாறினால் மட்டுமல்ல மாநிலம் மாறினாலும் சலுகை பறி போய் விடும்!!!!!!!



சமீபத்தில் உச்ச நீதி மன்றத்திற்கு வந்த வழக்கு இது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பட்டியிலினத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருமணமாகி கணவன் வாழும் உத்தராஞ்சல் மாநிலத்திற்கு சென்று விடுகிறார். அங்கே அந்தப் பெண் அரசுப் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றார். ஆனால் அந்தப் பெண் பஞ்சாப் மாநிலத்தின் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று காரணம் சொல்லப்பட்டது. இதிலே அந்தப் பெண் எந்த இனத்தைச் சேர்ந்தவரோ, அந்த இனம் உத்தராஞ்சல் மாநில பட்டியிலின அட்டவணையிலும் இடம் பெற்றுள்ளது. அந்தப் பெண்ணின் கணவரும் அதே இனத்தைச் சேர்ந்தவர்தான். ஆனாலும் அப்பெண்ணிற்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ஒரு மாநிலத்தில்  எஸ்.சி பட்டியலிலோ அல்லது எஸ்.டி பட்டியலிலோ இணைந்துள்ள ஒரு இனம் இன்னொரு மாநிலத்தின் பட்டியலில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது போல இல்லாமலும் உள்ளது. அதனால் ஒரு மாநிலத்தில் பெற்ற எஸ்.சி சான்றிதழ் கொண்டு இன்னொரு மாநிலத்தில் கல்வியிலோ, வேலை வாய்ப்பிலோ இட ஒதுக்கீட்டுச் சலுகையை பெற முடியாமல் போவதற்கான நிலைமை உள்ளது. ஆனால் இரு மாநிலங்களிலும் பட்டியலில் இருக்கும்போது சலுகைகளை மறுப்பது சரியாக இருக்குமா?

மதம் மாறுகிற போது சலுகைகள் பறிக்கப்படுகின்றன. ஆனால் மதம் மாறினாலும் சமூக சூழல் மாறவில்லை என்பதால் தலித் கிறிஸ்துவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்னுக்கு வரும் வேலையில் மாநிலம் மாறினால் மட்டும் சமூக அந்தஸ்து மாறி விடவா போகிறது?.

ஆனால் உச்ச நீதிமன்றத்தால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என்பதும் கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு ஆலோசனை சொல்லியுள்ளது என்பதே இப்பிரச்சினையின் சிக்கலை காண்பிக்கிறது.

பார்ப்போம் இறுதி முடிவு எப்படி வருகிறது என்று.