Wednesday, October 31, 2012

சென்னை – இணைந்தே வந்த ஏமாற்றம்




பள்ளிக் காலத்திலிருந்தே பல வருடக் கனவு சென்னை செல்வது. ஆனால் கல்லூரிப் படிப்பின் இறுதியாண்டு வரை அது நனவாகும் வாய்ப்பே கிடைக்கவில்லை. சென்னைப் பல்கலைக் கழகத்தின் எம்.பி.ஏ நுழைவுத் தேர்வு கனவு நிறைவேறுவதற்கான வாசலை திறந்தது.

சென்னையில் மட்டும்தான் நுழைவுத் தேர்வு எழுத முடியும் என்ற நிபந்தனை எனக்கும் அது போல அதுவரை சென்னை பார்த்திராத மற்ற நண்பர்களுக்கும் உற்சாகம் அளித்தது. நுழைவுத் தேர்வு என்பதால் ரயில் கட்டணத்தில் சலுகை உண்டு. முன்பதிவு செய்து விட்டு அந்த விபரங்களை என் அப்பாவிற்கு பொறுப்பாக கடிதம் எழுதி தெரிவித்தேன். கோச் எண், சீட் எண் தெரிவிக்கச் சொல்லி அவரிடமிருந்து வந்த கடிதத்திற்கும் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று பதிலெழுதிப் போட்டேன், அதுதான் என் கனவுகளை தகர்க்கப் போகின்றது என்று அறியாமலேயே.

சென்னை செல்வதற்கு பத்து நாட்கள் முன்பாகவே ஏராளமான திட்டங்கள், சென்னை சென்றதும் அன்று எந்தெந்த இடங்கள் பார்ப்பது, மறுநாள் தேர்வு முடிந்ததும் எங்கே செல்வது என்றெல்லாம் பேசிப் பேசி முடிவெடுத்தோம். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த எம்.காம் மாணவர் ஒருவர் எக்ஸாமுக்கு எப்போ படிக்கிறது பற்றியும் பேசுங்கப்பா என்றார்.

அந்த நாள் வந்தது. ஆறு மணிக்கு கிளம்பும் வைகை எக்ஸ்பிரஸை பிடிக்க ஐந்து மணிக்கெல்லாம் மதுரை நிலையத்தில் ஆஜரானோம். கிட்டத்தட்ட ஐந்தாம் வகுப்பிற்குப் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு ரயில் பயணம். பழைய கரி வண்டியாக இல்லாமல், கட்டை சீட்டுக்கள் இல்லாமல் குஷன் வைத்த வைகை எக்ஸ்பிரஸ் ஒரு அதிசயமாக இருந்தது. ஒரு கோச்சிலிருந்து இன்னொரு கோச்சிற்கு செல்லும் வெஸ்டிப்யூல் இணைப்போ மிகப் பெரிய அற்புதமாக தெரிந்தது.

ரயிலில் உட்கார்ந்ததை விட இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை நடந்த நேரம்தாம் அதிகம். மிகச்சரியாக 1.30 மணிக்கு எக்மோர் ரயில் நிலையம் வந்தது. அளவு கடந்த மகிழ்ச்சியோடு வண்டியில் இறங்கினோம். சென்னையைச் சேர்ந்த எங்கள் கல்லூரி மாணவன் முதல் நாளே சென்னை வந்து நாங்கள் தங்குவதற்காக எக்மோரிலேயே லாட்ஜில் ரூம் போட்டு விட்டு ரயில் நிலையத்தில் எங்களை எதிர் கொண்டான்.

அவனைப் பார்த்து உற்சாகமாக கையசைத்து நகரும் போது, “ராமா “ என்ற குரல் அழைத்தது. என் தோளின் மீது ஒரு கை விழுந்தது. அங்கே என் பெரியப்பாவின் பையன். “சித்தப்பாவிடமிருந்து லெட்டர் வந்திருந்தது, இது வரைக்கும் மெட்ராஸுக்கு வந்ததில்லையாமே, அதனால என்னை வீட்டுக்கு கூப்பிட்டு போகச் சொன்னார், வா போகலாம் “  என்று அழைக்க என வேறு வழியில்லை. பலியாடு போல அவர் பின்னே சென்றேன்.

நண்பர்கள் என்னை பரிதாபமாக பார்க்க நான் கிட்டத்தட்ட அழும் நிலையில் அவரைப் பின் தொடர்ந்தேன். டவுன் பஸ்ஸில் போகும் போதாவது எல்.ஐ.சி கட்டிடத்தை  பார்க்க முடியுமா என்ற நப்பாசையில் என் அண்ணனை கேட்கையில்  அதெல்லாம் இந்த ரூட்டில வராது என்று கூறி விட்டார். சாக்கடை போன்ற கூவம் ஆறு மட்டும் கடந்தது.

தண்ணீர் புரண்டோடிய காலத்தில் காவிரியை தினம்தோறும் பார்த்த எனக்கு கூவம் எரிச்சலூட்டியது.

அசோக்நகர் டெலிபோன் க்வார்ட்டர்ஸ் என் கண்களுக்கு சென்னை மத்திய சிறைச்சாலை போலவே தென்பட்டது. மதியம் சாப்பிட்டதும் டைமை வேஸ்ட் பண்ணாம படி என்று சொல்லி விட்டார். மாலை டி.வி போட்டதும் ஒரு சின்ன நிம்மதி. யப்பா, டி.வி பார்க்கும் அனுபவமாவது கிடைக்கிறதே என்று. ஆனால் ஒரு பழைய ஹிந்திப் படம்தான். புரியாத படத்தைப் பார்ப்பதற்கு படிப்பதே மேல் என்று அடுத்த அறைக்கே வந்து விட்டேன்.

புத்தகத்தில் எங்கே புத்தி போனது.. மற்ற நண்பர்கள் எங்கெல்லாம் போயிருப்பார்களோ, எதையெல்லாம் பார்த்திருப்பார்களோ என்றுதான் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. மறு நாள் காலை சிறையிலிருந்து விடுதலை பெற்று லயோலா காலேஜ் ஓடி வந்தேன். எல்.ஐ.சி கட்டிடத்தின் கீழே நின்று அண்ணாந்து பார்க்க வேண்டும் என்பது ஒரு மிகப் பெரிய ஆசை, மெரினா பீச்சில் அலைகளில் கால் நனைக்க வேண்டும் என்பது அடுத்த ஆசை, வி.ஜி.பி கோல்டன் பீச், வள்ளுவர் கோட்டம் பார்ப்பது என்பதெல்லாம் திட்டம் இருந்தது.

மற்ற நண்பர்கள் அன்றே வி.ஜி.பி கோல்டன் பீச் சென்று வந்து விட்டார்கள். தேர்வு முடிந்ததும் வள்ளுவர் கோட்டமும் மெரினா பீச்சும் போகலாம் என்பது திட்டம். ஒன்றுதான் முடியவில்லை, மற்றதாவது தப்பியதே என்று நிம்மதி இருந்தது.

மதிய உணவை முடித்து, லாட்ஜில் வேறு உடை மாற்றி புறப்பட்டால் பிடித்தது ஒரு மழை. மிகக் கடுமையான மழை, நான்கு மணியிலிருந்து ஏழரை மணி வரை மழை நிற்கவேயில்லை. ஒன்பது மணிக்கு மதுரை திரும்ப பேருந்து. ஆகவே எதற்கும் வாய்ப்பில்லாமல் போனது.

வீடியோ கோச் ஆம்னி பஸ். தாம்பரம் வரை திரைப்படம் போடவேயில்லை. அதற்குப் பிறகு ஏதோ ராணுவ ரகசியம் போல இந்த சினிமா நாங்கள் போட்டோம் என்று யாரிடம் சொல்லக்கூடாது என்று சூடம் அணைத்து சத்தியம் வாங்காத குறையாக வாக்குறுதி வாங்கி முதல் வாரம் வெளியான ஒரு கைதியின் டைரி படம் போட்டார்கள்.

அது ஒன்று மட்டும்தான் ஒரே ஒரு ஆறுதல்.

எல்.ஐ.சி கட்டிடத்தின் வாசலில் நின்று அண்ணாந்து பார்க்க வேண்டும் என்ற கனவு ஒரு வருடத்திற்குப் பின்பு நனவானது. அதுவும் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். அதனை பின்னர் ஒரு நாள் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆனால் இப்போதோ சென்னை ஒரு எரிச்சலூட்டும் இடம். அந்த நெரிசலும் நசநசப்பும் சென்னை மக்கள் மீது அனுதாபமே கொடுக்கும்.  எந்த பணிக்காக செல்கிறேனோ, அந்த பணி முடிந்த பின் ஒரு நொடி கூட அங்கே இருப்பதில்லை.

இளமைக் காலத்து கனவுகள் என்றும் அப்படியே நீடிப்பதில்லை.
மாறும் என்பதைத் தவிர உலகில் மாறாதது எதுவும் இல்லை.
இதுதான் யதார்த்தம்.

காங்கிரஸ்காரங்களுக்கு ரோஷம் வந்துடுச்சுங்கடோய்..... ஒரு காமெடிக் கடிதம்..

இளைஞர் காங்கிரஸ்காரர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் இது.
தமிழ்நாட்டின் சீர்கேட்டிற்காக ஜெ வை ஏராளமான கேள்விகள்
கேட்டுள்ளார். அதற்கு சிலர் பதிலளித்துள்ளதே மாபெரும் வெற்றி
என்று புளகாங்கிதம் அடைந்துள்ளார். 

ஜெ வை கேள்வி கேட்பது சரி,
ஆனால் அதற்கான அருகதை காங்கிரஸ் கட்சி ஆட்களுக்கு
உண்டா?

இந்தியாவை பெரும்பான்மையான காலம் ஆட்சி செய்து
நாசமாக்கிய பெருமை அதற்குத்தானே உண்டு.

இதே போன்ற கடிதம் மன்மோகன்சிங்கிற்கும் அந்த
நண்பர் அனுப்பி வைப்பாரா?

அன்னை சோனியா, இளைய தளபதி ராகுல் பற்றியெல்லாம்
எழுதியுள்ளது நல்ல நகைச்சுவையாக உள்ளதால் அந்த
மின்னஞ்சல் உங்கள் பார்வைக்கு கீழே.




பெரும் மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு,
தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஒரு திறந்த மடல்!
தமிழ்நாட்டின் முதல் குடிமகள் என்ற முறையில் எங்கள் மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.

நேற்று உங்கள் தலைமையில் நடக்கும் அலங்கோல தமிழக அரசு, அன்னை சோனியா வழி காட்டுதல் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங்க் தலைமையிலும் நடக்கும் சீரிய சிறப்பான ஆட்சி மீது சுப்ரீம் கோர்டில் மின்சாரம் கொடுக்க வழக்கு தொடர்ந்துள்ளது. உங்கள் நிர்வாகத்திறமையின்மையை மறைக்க வருங்கால மக்களவை தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பிக்க நீங்கள் நடத்தும் நாடகம் என்பது தமிழ்நாட்டில் கை சூப்பும் குழந்தைக்கு கூட புரியும்.
 
நியாயமாக பார்த்தால் தமிழ் நாட்டு மக்கள்தான் தமிழக அரசின் மீதுதான் வழக்கு போட வேண்டும்
 
1. தமிழகம் முழுவதும் ஒரே மின் கட்டணம்தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க சென்னைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேர மின் வெட்டும், இதர மாவட்டங்களுக்கு பத்து முதல் பதினைந்து மணி நேர மின் வேட்டை அமல்படுத்தும் தமிழக அரசின் மின் துறை மீது பொதுமக்கள் வழக்கு தொடுத்தால் என்ன தவறு? ஒரு மாநிலத்துக்குள் சரியான மின்பகிர்வை செய்யாத நீங்கள் இந்தியாவின் பிரதமர் ஆனால் என்ன கதி நடக்கும்?
 
2. தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் வாகன விபத்துக்கள். பள்ளி குழந்தைகள் அடிக்கடி விபத்தில் இறப்பது தினசரி செய்தி. உங்களுக்கு தெரியுமா? தமிழ் நாடுதான் சாலை விபத்தில் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. தமிழ் நாட்டை விட இரு மடங்கு வாகங்கள் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட இவ்வளவு விபத்துக்கள் இல்லை. கடந்த வருடம் சாலை விபத்தில் தமிழகத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 15, 000 பேர். கடந்த ஞாயிறு அன்று நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் நான்கு இளைஞர்கள் விபத்தில் இறந்தனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்த சுயம்பு மகன் ராஜா 22. லிங்கசாமி மகன் ராஜேஷ் 23 , நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் முத்துக்குமார் 27, ராஜகணேஷ் 29 ஆகியோர் தான் அந்த நால்வர். ஒரு மாவட்டத்தில் மட்டும் ஒரு நாளில் இத்தனை பேர் இறக்கிறார்கள் என்றால் தமிழகம் முழுவதும் என்ன நிலைமை என்று மக்கள் கணக்கு போட்டு கொள்வார்கள். இப்படி இளைஞர்கள், குழந்தைகள் கொத்து கொத்தாக இறப்பது தமிழக அரசின் போக்குவரத்து துரையின் அலட்சிய போக்கே காரணம். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் நன்றாக கல்லா கட்டி கொண்டுள்ளனர். இப்படி அலட்சியமாக மக்களை சாலை விபத்தில் சாகடிக்கும் தமிழக போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் மீது பொது மக்கள் வழக்கு தொடரலாமா?
 
3. இதே ஞாயிறன்று உங்கள் சுகாதார துறை அமைச்சர் சொந்த மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் மூன்று பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்கள். டெங்கு காய்ச்சல் பரவக்காரணமான சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறை மீதும், சுகாதரத்துறை அமைச்சர் விஜய் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் கே.பி முனுசாமி மீது வழக்கு தொடரலாமா?
 
எங்கள் அன்னை சோனியா பிரதமர் பதவியை தூக்கி எறிந்தவர். எங்கள் தலைவர் ராகுல் காந்தி பத்தாண்டுகளாக அமைச்சர் பதவி நாடாமல் கட்சி நலனை மனதில் கொண்டு உழைப்பவர். ஆனால் அரசியல் விபத்தில் பதவிக்கு வந்த நீங்கள் பதவி வெறி பிடித்து அலைவதுதான் உங்கள் வரலாறு. உங்கள் கொத்தடிமை அமைச்சர்கள் கூட்டம் (மன்னிக்கவும் இப்படித்தான் பல பத்திரிகைகள் சொல்கின்றன) ஏதாவது பதவி கிடைக்க எப்படி வேண்டுமானாலும் கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள். நேற்று மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்தது குறித்து பத்திரிகைகள் புகழ்ந்து எழுதியுள்ளன. எங்கள் தலைவர் ராகுல் காந்தி இளைஞர்களாக திறமையுள்ளவர்களாக தேடிக்கண்டுபிடித்து பல்லம் ராஜு, சிந்தியா, சச்சின் பைலட் ஊக்கம் செய்து இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்.
 
அடிக்கடி உங்கள் கட்சி பிரமுகர்கள் உங்களை பிரதமராக தானாகவே அறிவித்து அரசியல் வேடிக்கை செய்கிறார்கள். உங்கள் கதை புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதைதான். தமிழ்நாடு என்ற ஒரு மாநிலத்தை சரியாக நிர்வாகம் செய்ய முடியாத நீங்கள் இந்தியாவை ஆட்சி செய்ய நினைப்பது வேடிக்கை. சமச்சீர் கல்வியில் வழக்கு, திமுக அமைச்சர்கள் மீது பொய் வழக்கு என்று தொடரும் அதிமுக அரசு ஓட்டு போட்ட மக்கள் மீது வழக்கு தொடராதது ஒன்றுதான் பாக்கி. போகிற போக்கில் அதையும் நிறைவேற்றி விடுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
 
இளைஞர்கள் கட்சி சார்பில் நடக்கும் டிவிக்கள் வைத்தோ, பத்திரிக்கைகள் வைத்தோ அரசியல் தெரிந்து கொள்வதில்லை. இணைய தளத்தில் அரசியல் விவாதங்களில் கலந்து கொள்கிறார்கள். எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் அறிவுரைப்படி, இணைய தளத்தில் அரசியல் போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம். தமிழகத்தில் உள்ள இளைஞர்களை கவருவோம். அதிமுக அரசின் பொய் பிரச்சாரங்களை உடைப்போம்.

நன்றி! வணக்கம்!
 
லட்சக்கணக்கான தமிழக இளைஞர் காங்கிரஸ் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில்,
எஸ். கேசவன்



மின்னணு நகல்:

தமிழக காங்கிரஸ் மக்களவை மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள்
திமுக மக்களவை மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள்
தே.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள்
தமிழக பத்திரிகை நண்பர்கள்
தமிழ் சார்புள்ள இணைய தளங்கள்
தமிழக கல்லுரி மாணவர்கள்

பின்குறிப்பு:

இத்துடன் மின் வெட்டுக்கு டிவி பிரத்யேக பேட்டியில் மத்தியில் ஆளும் ஐக்கிய முன்னணி அரசை குறை சொன்னதற்கு சில கேள்விகளை உங்களுக்கு அனுப்பி இருந்தோம். அதன் மின்னணு நகல் தமிழ்நாடு முழுவதும் பல தரப்பட்ட மக்களுக்கு அனுப்பப்பட்டது. அதற்க்கு அவர்களின் அளித்த பதில்களின் தொகுப்பை இணைத்துள்ளோம். 500 மின்னனு அஞ்சலுக்கு 7 பதில்கள் கிடைத்தது எங்களுக்கு வெற்றிதான்.
 
" ஜெயலலிதாவுக்கு கட்சி நடத்தவும் தெரியாது. ஆட்சி நடத்தவும் தெரியாது. அதிமுக நடத்தும் நமது எம்.ஜி.ஆர் இணையதளம் பிச்சைகாரன் வாந்தி எடுத்தது போல் உள்ளது. இவர்களிடம் என்ன நல்ல ஆட்சியை எதிர்பார்க்க முடியும்? " - ஆர். முருகன், வேலூர்
" பரவயில்லையே, இளைஞர் காங்கிரஸ் ஆளுங்கட்சியை சரியான கேள்விகளை கேட்கிறது. சபாஷ் " - வி. பாண்டியன், நெல்லை
" அம்மா தப்பி தவறி தேசிய அரசியலுக்கு போனால், ஓ. பன்னீர் செல்வம் தான் முதல்வராம். ஓ.பி.எஸ் முதல்வரானால் 12  மணி நேர கரண்ட் கட் 24 மணி நேர கரண்ட் கட் ஆகும். இந்த ஒரு காரனத்துக்கே அதிமுகவுக்கு ஓட்டு இல்லை. இந்தம்மா அதிகாரிகளை மிரட்டி கொஞ்சம் வேலை வாங்குது. ஓ.பி.எஸ் முதல்வரானால் சர்வ நாசம் " - கே.வி. சக்திவேல், திருப்பூர்
" ஜெயலலிதா இலவச அரிசி கொடுக்கிறார். இலவச மளிகை கொடுக்கிறார். இலவச கிரைண்டர், மிக்சி கொடுக்கிறார். பேசாமல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இட்லியும் கெட்டி சட்னியும் கொடுத்து விட்டு போலாமே. அரசாங்கத்துக்கு செலவு மிஞ்சும் " - எஸ். பிரியா, சமயபுரம், திருச்சி
" Congress for centre and DMK for State is the better choice. DMK rule was better. We had power cut only for 2 hours " - PM Kannan, Chrompet, Chennai
இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியல, புரியல. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே எல்லாம் தரித்திரம்தான் " - என். அழகப்பன், காரைக்குடி
" This government did nothing. Jobs are moving to other States like Gujarat" - S Manoharan, Coimbatore Institute of Technology, Kovai
" ஆறாவது பெயில் ஆனவர் ஐ.டி. மினிஸ்டர். அப்புறம் எப்படி இந்த அரசாங்கம் உருப்படும்?" - டி. பூர்விகா, துரைப்பாக்கம், சென்னை
" I do not understand politics, but Jayalalithaa govt is anti-people administration. Youths like you should spread the message to youngsters to protest against this govt." - R. Kavitha, Ethiraj college Student, Chennai

Tuesday, October 30, 2012

முகநூல் கோழைகளின் புகலிடமா? பொய்யர்களின் சொர்க்கபுரியா?





சற்று வேதனையோடும் கோபத்துடனுமே இந்த பதிவை எழுதுகிறேன். நட்பை வளர்ப்பதற்கான முகநூலை சில மோசடிப் பேர்வழிகள் தங்களின் மோசமான நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர். தனிப்பட்ட காழ்ப்புணர்வையும் வன்மத்தையும் வக்கிரத்தையும் வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்துகின்றனர்.

நேர்மையற்றவர்கள், உண்மைகளைக் கண்டு அஞ்சுபவர்கள், தங்களது குறைகள் என்ன என்றே தெரியாமல் மாய உலகில் சஞ்சாரித்துக் கொண்டிருப்பவர்கள், நேரில் மோதுவதற்கு தைரியமற்றவர்கள், போலி முகநூல் முகவரியை உருவாக்கி அதிலே விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர்.

அவர்களால் நேரடியாக மோத முடியாது, ஏனென்றால் அவர்களிடம் உண்மை கிடையாது. அப்படி உண்மையான அடையாளத்துடன் வந்து இது போல பொய்களை அள்ளிக் கொட்டினால் அம்பலப்பட்டு அசிங்கப் படுவார்கள் என்ற பயத்தில் போலிப் பெயரில் புகலிடம் பெறுகின்றனர்.

அப்படி போலிப் பெயரில் வக்கிரத்தை, வன்மத்தை விதைப்பவர்கள் யார் என்பது பாதிக்கப்படுபவர்களுக்கு நன்றாக தெரியும்.  அப்படிப்பட்ட கோழைகளின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்க வெகு காலம் பிடிக்காது.

எப்போது உண்மையான பெயரை மறைத்து பொது வெளியில் போலிப் பெயரோடு உலா வந்தார்களோ, அவர்கள் நாகரீகமான மனிதர்களே அல்ல,  

இதைப் படிப்பவர்களில் யாராவது அப்படி போலிப் பெயரில் ஒளிந்து கொள்பவராக இருந்தால், அதிலிருந்து வெளி வந்து மனிதனாக உயிர் வாழுங்கள். அப்படி அநாகரீகமாகத் தான் நடந்து கொள்வீர்கள் என்றால் புனிதமான தலைவர்களின் பெயர்களை வைத்துக் கொண்டு அவர்களை களங்கப் படுத்தாதீர்கள்.

Monday, October 29, 2012

சிவகங்கைச் சீமான் சிந்திப்பாரா? பதிலளிப்பாரா?



இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன வரம்பை
உயர்த்த அனுமதிப்பது அறிவுபூர்வமானது அல்ல
தோழர் அமானுல்லாகான்,
தலைவர்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்


02.11.2012 தேதியிட்ட ப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவது தொடர்பாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் அமானுல்லாகான் அவர்களின் பேட்டியை வெளியிட்டிருந்தது. இந்தியப் பொருளாதாரத்தை சர்வதேச நிதி மூலதனத்திடம் ஒப்படைக்கும் அரசின் முடிவு எவ்வளவு மோசமானது என்பதை இப்பேட்டி அம்பலப்படுத்துகின்றது. அப்பேட்டியின் தமிழாக்கம் இங்கே கீழே தரப்பட்டுள்ளது.

ப்ரண்ட்லைன் : இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா 2008 ஐ நிறைவேற்றுவதன்  மூலம் இந்திய இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும் எந்த ஒரு முயற்சியையும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எதிர்க்கிறது என்பதை நீங்கள் தெளிவாக்கி விட்டீர்கள். இப்படி ஒரு நிலைப்பாடு ஏன் எடுக்கப்பட்டது என்பதை விளக்க முடியுமா?

தோழர் அமானுல்லா கான் : அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அன்னிய மூலதனத்தை உயர்த்துவதை கடுமையாக எதிர்க்கிறது, ஏனென்றால் அன்னிய மூலதனத்தை உயர்த்தும் இந்த முடிவு சர்வதேச நிதி மூலதனத்தினை திருப்திப்படுத்தவும் அதன் நம்பிக்கையை பெறுவதற்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரத்திற்கோ அல்லது காப்பீடு செய்யும் பொது மக்களுக்கோ எவ்வித பயனும் இல்லை. காப்பீடு, அதிலும் குறிப்பாக ஆயுள் காப்பீடு என்பது மக்கள் சிறுக சிறுக  சேமிக்கும் தொகையை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது. எனவே உள்நாட்டு சேமிப்பின் மீது அன்னிய மூலதனம் ஊடுருவதையோ, கட்டுப்படுத்துவதையோ  அதிக அளவில் அனுமதிப்பது என்பது புத்திசாலித்தனமல்ல.

மேற்குலக நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நிதித்துறையை தாராளமயமாக்கி சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டமைப்பிற்குள் உட்படுத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகின்றது. நிதித்துறை இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வருகின்றது. இன்சூரன்ஸ் சீர்திருத்தங்கள், பென்ஷன் வளர்ச்சி மற்றும் ஒழுங்காணைய மசோதா, மற்றும் வங்கிச் சட்ட திருத்த மசோதா ஆகியவை தேசத்தின் பொருளாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் என்று ஏ.ஐ.ஐ.இ.ஏ உறுதியாக நம்புகிறது. 2008 உலக நிதி நெருக்கடியினால் இந்தியா பாதிக்கப்படவில்லை என்றால் அதற்கு இங்கே இருந்த கட்டுப்பாடுகளும் டிரைவேட்டிவ்ஸ் போன்ற அபாயகரமான ஊக வணிகப் பத்திரங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படாததும்தான் காரணம். இந்திய நிதித்துறை சர்வதேச நிதி மூலதனத்தோடு முழுமையாக சங்கமிக்க அனுமதிக்கப்பட்டால், அது பாதுகாப்பாக இருக்காது.

ப்ரண்ட்லைன் : கூடுதல் மூலதனம் தேவைப்படுகிற தனியார் கம்பெனிகளுக்கு உதவ, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்த வேண்டிய தேவை இருப்பதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார். அவரது கூற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

தோழர் அமானுல்லாகான் : இல்லை, அவரது அறிக்கையை ஏற்றுக் கொள்ளவே முடியாது. தனியார் கம்பெனிகள் தங்களின் விரிவாக்கத்திற்கு மூலதனம் இல்லாமல் சிரமப்படுகின்றனர் என்பதில் கொஞ்சம் கூட உண்மையில்லை. ஆயுள் காப்பீட்டில் 23 தனியார் கம்பெனிகளும் பொதுக் காப்பீட்டில் 18 கம்பெனிகளும் கடந்த பத்தாண்டுகளாக நாடெங்கிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை எல்லாம் சேர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை விட அதிகமான அலுவலகங்களைக் கொண்டுள்ளன. இந்தக் கம்பெனிகளையெல்லாம் இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள்தான் நடத்துகின்றன. அவற்றின் வசம் ஏராளமான நிதியாதாரம் உண்டு. பங்குகளை வெளியிடுவதன் மூலம் மூலதனத்தை திரட்டிக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டு.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவதற்கான நியாயம் எதுவும் இல்லை என்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தங்களது மூலதனத் தேவைகளுக்கு உள்நாட்டுச் சந்தையில் இருந்து திரட்டுமாறு கூறியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிலைக்குழுவின் ஒருமனதான பரிந்துரையை மத்தியரசு ஏற்கவில்லை.

ப்ரண்ட்லைன் : இன்சூரன்ஸ்துறையை திறந்து விடுவதன் மூலம் அதிக அளவில் பிரிமிய வருமானம் இந்தியாவிற்குள் வரும் என்ற வாதம் பற்றி என்ன சொல்கின்றீர்கள் ?

இன்சூரன்ஸ்துறையை அன்னிய மூலதனத்திற்கு திறந்து விட்டால் தனியார் கம்பெனிகளின் வெளிநாட்டுக் கூட்டாளிகள் சர்வதேச அளவில் திரட்டும் பிரிமிய வருமானத்தின் ஒரு பகுதியை, இந்தியாவின் கட்டமைப்புத் தேவைகளுக்கு கொண்டு வருவார்கள் என்ற  வாதம் நிரூபிக்கப்படவில்லை. வெளிநாட்டுக் கூட்டாளிகள், தாங்கள் உலக அளவில் திரட்டும் பிரிமிய வருமானத்தை கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவிற்குக் கொண்டு வந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இப்போது அவர்கள் மூலதனத்தை கொண்டு வருவார்கள் என்று திடீரென சொல்வது பலவீனமான ஒரு வாதம். மார்ச் 2011 ன் இறுதியில் இன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டுக் கூட்டாளிகளின் மூலதனம் என்பது வெறும் 6,650 கோடி ரூபாய்தான். அதிகமான அளவில் அன்னிய நேரடி முதலீடு வரும் என்பதற்காக அன்னிய மூலதனத்தை உலவ விடுவதற்கு எந்த நியாயமும் இல்லை.  உள்நாட்டில் நிதியாதாரங்கள் இருக்கும் போது வளர்ச்சியை அன்னிய மூலதனத்திடம் பணயம் வைக்க முடியாது. அன்னியக் கம்பெனிகள் சிறிதளவு மூலதனம் கொண்டு வருவார்கள், அது கூட இங்கே உள்நாட்டு சேமிப்பை திரட்டுவதற்காகத்தான்.

கட்டமைப்புத் தேவைகளுக்காக இன்சூரன்ஸ்துறை நிறுவனங்களால் செய்யப்பட்டுள்ள முதலீட்டில் எல்.ஐ.சியின் பங்கு  மட்டுமே  90 % உள்ளதால் கட்டமைப்புத்துறைக்கான முதலீடுகளில் தனியார் கம்பெனிகள் குறிப்பிடத் தகுந்தவாறு எதுவுமே செய்யவில்லை என்று மத்தியரசே கவலை தெரிவித்துள்ளது. எந்த ஒரு அன்னியக் கம்பெனியும்  இங்கே நன்மை செய்வதற்காக இந்தியாவில் முதலீடு செய்ய வருவதில்லை என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. அவர்கள் எல்லோருமே தங்களின் லாபத்திற்காக மட்டுமே முதலீடு செய்கிறார்கள். என்வே அன்னிய மூலதன வருகை இந்திய இன்சூரன்ஸ்துறையையும் கட்டமைப்புத்துறையையும் வளர்ச்சியடையச் செய்யும் என்று எதிர்பார்ப்பது புத்திசாலித்தனமல்ல.உள்நாட்டு சேமிப்பிற்கு எந்த விதத்திலும் அன்னிய நேரடி முதலீடு மாற்றாக அமைய முடியாது.

அன்னிய மூலதன வர்ம்பை உயர்த்துவதற்கு ஆதரவான வாதங்களை முன்வைப்பவர்கள் அதன் மூலம்  இன்சூரன்ஸ்துறைக்கு மிகவும் தேவைப்படுகின்ற ஊக்கம், கிடைக்கும் என்று சொல்கின்றார்கள். மோசமான பொருளாதார சூழல்களுக்கு மத்தியில் இந்திய இன்சூரன்ஸ்துறை கடந்த சில ஆண்டுகளில் எவ்வாறு செயல்பட்டது என்ற கேள்வியை இத்தருணத்தில் எழுப்ப வேண்டியது முக்கியம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக உள்நாட்டு சேமிப்பில் வீழ்ச்சி ஏற்பட்ட போது  இந்திய இன்சூரன்ஸ்துறை  எப்படி சிறப்பாக செயல்பட்டதோ, அது போலவே சிரமமான பொருளாதார நிலைமையிலும் கூட சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.பென்ஷன் ஆணைய புள்ளிவிபரப்படி 2010 ல் இன்சூரன்ஸ் துறை இந்தியாவில் 4.4% வரை ஊடுறுவியுள்ளது.அமெரிக்கா, ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்த நிலவரம் எவ்வளவோ சிறப்பானது. இந்தியாவின்  குறைவான வருமான விகிதங்களைப் பார்க்கையில் இது மிகவும் மகத்தானது.

ஆயுள் காப்பீட்டு பிரிமிய வருவாயை திரட்டுவதில் உல்களவில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது. பொதுக்காப்பீட்டிலும் சிறப்பான செயல்பாட்டை காண முடிகிறது.  ஊடுறுவல் சதவிகிதத்திலும் முன்னேற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ப்ரண்ட்லைன் : இன்சூரன்ஸ்துறை 1999 ல் தனியார் பங்கேற்பிற்காக திறந்து விடப்பட்டது. உள்நாட்டுக் கம்பெனிகள், வெளிநாட்டுக் கம்பெனிகளின் கூட்டோடு இத்துறையில் நுழைய அனுமதிக்கப்பட்டது. அதன் பின் இந்தியாவின் பல பெரிய நிறுவனங்கள் இன்சூரன்ஸ் வணிகத்தில் புகுந்தன. கடந்த பத்தாண்டுகளில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளோடு எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களால் போட்டியிட்டு சந்தையில் தங்களது முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறதா?

தோழர் அமானுல்லாகான் : ஆயுள் காப்பீட்டுத்துறையின் வளர்ச்சியை இயக்குகின்ற சக்தியாக அரசு நிறுவனமான எல்.ஐ.சி தான் உள்ளது என்பதை அறியும்போது அது உங்களுக்கு சுவாரஸ்யமான செய்தியாக இருக்கும். பத்தாண்டுகள் போட்டிக்குப் பின்பும் ஆகஸ்ட் 2012 புள்ளி விபரங்கள் படி இன்சூரன்ஸ் சந்தையில் பிரிமிய வருமானத்தில் 76 % மும் பாலிஸிகள் எண்ணிக்கையில் 81 % மும் எல்.ஐ.சி யின் வசமே உள்ளது.

காப்பீடு செய்யும் மக்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற்றுள்ளதால் எல்.ஐ.சி யை பலவீனப்படுத்தும் முயற்சிகள் தகர்க்கப்பட்டுள்ளது. முப்பது கோடி தனி நபர் பாலிஸிதாரர்களுக்கு சேவை செய்கிற எல்.ஐ.சி, இன்னொரு பத்து கோடி குழுக்காப்பீட்டு பாலிஸிதாரர்களுக்கும் சேவை செய்கிறது. சேவை செய்யப்படும் பாலிஸிகள் எண்ணிக்கையிலும்  கேட்புரிமங்களை பட்டுவாடா செய்வதிலும் உலகிலேயே மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி தான். அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்துவது என்பது எல்.ஐ.சி யையும் பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களையும் பலவீனப்படுத்தும் மற்றொரு முயற்சிதான்.

ப்ரண்ட்லைன் : அன்னிய மூலதன உயர்வு பாலிஸிதாரர்களுக்கு நன்மை பயக்கும் என்று மசோதாவின்  ஆதரவாளர்கள் முன்வைக்கிற வாதம் பற்றி என்ன சொல்கிறீர்கள்? முன்னேறிய தொழில்நுட்பத்தை அது கொண்டு வருமா?

தோழர் அமானுல்லாகான் : அன்னிய மூலதன உயர்வு பாலிஸிதாரர்களுக்கு நன்மைகளை அளிக்கும் என்பது வெறும் மாயை. இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு மற்றும் ஒழுங்காணைய ஆவணங்கள் படியே தனியார் கம்பெனிகளின் செயல்பாடு என்ன? கேட்புரிமங்களை எல்.ஐ.சி 99.86 % என்ற அளவில் பட்டுவாடா செய்கையில் தனியார் கம்பெனிகளின் சராசரி பட்டுவாடா என்பது கிட்டத்தட்ட 80 % மட்டுமே. இறப்புக் கேட்புரிமங்களில் பத்து சதவிகிதம் வரை தனியார் கம்பெனிகள் நிராகரித்துள்ளன. ஆனால் எல்.ஐ.சி யோ ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான கேட்புரிமங்களையே நிராகரித்துள்ளது.

இரண்டாவதாக காலாவதியான பாலிஸிகள் விகிதம் என்பதும் தனியார் கம்பெனிகளில்  அபாயகரமான நிலையில் மிக அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட ஐம்பது சதவிகித அளவில் கூட காலாவதி சதவிகிதம் உள்ள சில கம்பெனிகள் உண்டு. எல்.ஐ.சி யின் காலாவதி விகிதம் என்பது கிட்டத்தட்ட ஐந்து சதவிகிதம்தான். காலாவதியான பாலிஸிகள் விகிதம் மிக அதிகமாக உள்ளதைக் கொண்டுதான் தனியார் கம்பெனிகள் லாபம் ஈட்டுகின்றனர் என்பதில் ஒருமித்த கருத்து உள்ளது. எனவே தனியார்மயமோ அன்னிய முதலீட்டு உயர்வோ பாலிஸிதாரர்களுக்கு நன்மை பயக்கும் என்பதில் முழுமையான பொய்.

மேலும் இந்தியாவில் உள்ள  தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் செல்வந்தர்கள், மிகப் பெரும் செல்வந்தர்கள் மீதே கவனம் செலுத்துகின்றன. பாலிஸிகளின் அளவையும் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரிமியங்களை ஒப்பிட்டுப் பார்த்தாலே இது புலப்படும்.

அதே போல முன்னேறிய தொழில்நுட்பம் பற்றிய கூற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நாட்டிலேயே மிக உயர்ந்த தொழில்நுட்பம் கொண்டுள்ளது எல்.ஐ.சி தான் என்ற  உண்மையை யாராலும் மறுக்க முடியாது. மக்களின் தேவைகளுக்கு ஏற்ற பொருளையோ தொழில்நுட்பத்தையோ இங்கேயே உருவாக்கிக் கொள்ள வேண்டும், முடியும். வெளிநாட்டுக் கம்பெனிகளால்தான் இந்தியாவிற்கான பாலிஸி திட்டங்களையோ தொழில்நுட்பத்தையோ உருவாக்க முடியும் என்று கருதுவது தவறானது.

ப்ரண்ட்லைன் : இன்சூரன்ஸ்துறையில் அன்னிய முதலீட்டு அளவை உயர்த்தும் முடிவோடு பென்ஷன் நிதியிலும் அன்னிய முதலீட்டை 49 % வரை அனுமதிக்க மத்தியரசு முடிவெடுத்துள்ளதே, இதிலே ஏ.ஐ.ஐ.இ.ஏ வின் நிலை என்ன?

தோழர் அமானுல்லாகான் : பென்ஷன் வளர்ச்சி மற்றும் ஒழுங்காணைய மசோதாவை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எதிர்க்கிறது. பென்ஷன் நிதிகளை அரசு தனியார்மயமாக்க விரும்புகின்றது. மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு எந்த சமூகப் பாதுகாப்பும் இல்லாத  இந்தியா போன்ற நாடுகளில் சமூகப் பாதுகாப்புத்  திட்டங்களை நடத்த வேண்டிய பொறுப்பு அரசினுடையது. பென்ஷன் நிதிகளில் அன்னியர்களின் பங்கேற்பு என்பது அபாயகரமானது.அமெரிக்காவிலும் மற்ற மேலை நாடுகளிலும் நிகழ்ந்தவற்றை நம்மால் புறக்கணிக்க முடியாது. அந்த நாடுகளில் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் பென்ஷன் நிதிக் கம்பெனிகளும் நடத்திய ஊக வணிக சூதாட்டங்கள், பென்ஷனர்களின் சேமிப்பில் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தியது. அதே வர்த்தக சூதாடிகளிடம் மக்களின் சமூகப் பாதுகாப்பிற்கான சேமிப்பை இந்தியா ஒப்படைப்பதை அனுமதிக்க முடியாது.

ப்ரண்ட்லைன் : பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் தங்களின் மூலதனத் தேவைகளுக்கு பங்குச்சந்தையை அணுக அனுமதிப்பது என்ற முன்மொழிவு ஒன்றும் உள்ளதே. இதைப்பற்றி ஏ.ஐ.ஐ.இ.ஏ என்ன கருதுகிறது?

தோழர் அமானுல்லாகான்: மூலதனத் தேவைகளுக்காக பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் பங்குச்சந்தையை அணுக அனுமதிக்கும் முன்மொழிவு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு ஏற்புடையது அல்ல. மிகச் சிறந்த, லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது என்பதுதான் இதன் பொருள். பொது இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனும் நான்கு பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும் ஒரு லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேலாக முதலீடுகளும் கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் கையிருப்பாகவும் உள்ளது.  அவைகள் போதுமான அளவு மூலதனத்தோடுதான் இயங்கி வருகின்றன. எதிர்வரும் காலத்திலும் கூட கூடுதல் மூலதனத்தை புகுத்த வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே தேவைப்பட்டாலும் கூட அவர்களால் உள்ளுக்குள்ளேயே மூலதனத்தை திரட்டிக் கொள்ள முடியும். இந்த நிறுவனங்களை தனியார்மயமாக்க எந்த வித அவசியமும் நிச்சயமாக இல்லை.

ப்ரண்ட்லைன் : இந்த முன்மொழிவுகள் எல்லாம், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு வரவுள்ளது.. இந்த முன்மொழிவுகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட ஏ.ஐ.ஐ.இ.ஏ என்ன செய்து கொண்டிருக்கிறது?

தோழர் அமானுல்லாகான் : அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முயற்சிகளால்தான் 1999 ல் அன்னிய மூலதன வரம்பு 26 % உடன் கட்டுப்படுத்தப் பட்டது. இந்த முறையும் கூட அரசின் முடிவை எதிர்ப்பதில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உறுதியாக உள்ளது. எங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தவுள்ளோம்.

இந்த முடிவுகளுக்கு எதிராக மக்களுடைய, அரசியல் கட்சிகளுடைய கருத்துக்களை திரட்ட ஏ.ஐ.ஐ.இ.ஏ முடிவு செய்துள்ளது. அரசு இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தால் நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்றும் முடிவு செய்துள்ளோம்.

எங்களது போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்  முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும்  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்  வேண்டுகோள் விடுக்கிறது. இந்த மசோதாவை நிறைவேற்றுவது மத்தியரசிற்கு அவ்வளவு எளிதானதாக இருக்கப் போவதில்லை என்பது மட்டும் தெளிவு.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வெளியீடு
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்
வேலூர் கோட்டம்