Showing posts with label துரோகம். Show all posts
Showing posts with label துரோகம். Show all posts

Wednesday, May 6, 2026

அப்போதே ஒழிந்து போயிருக்கலாமே ராகுல்

 


இந்திய அரசியல் எத்தனையோ கேவலமான காட்சிகளை பார்த்துள்ளது. புதிதாக பார்த்த கேவலம் காங்கிரஸ் கட்சி, தவெக கூட்டணிக்கு தாவியது.

திமுக கூட்டணியில் பல வருடங்கள் இடம் பெற்று, அக்கூட்டணியின் பலத்தால் மக்களவையில் எம்.பி, க்களை பெற்றீர்கள். உங்கள் கட்சித் தலைவர்களே உங்களை பிரதமர் வேட்பாளர் என்று கருத தயாராக இல்லாத போது மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இந்த சட்டசபைத் தேர்தலில் இந்த கூட்டணியில் இடம் பெற உங்களுக்கு ஏனோ விருப்பமில்லை.  குரங்கு குட்டியை வைத்து ஆழம் பார்த்தது போல உங்கள் நண்பர் மாணிக்கம் தாகூரை  கலகம் செய்ய வைத்தீர்கள். மேலிடச் சில்லறைகள் பிரவீண் மற்றும் கோவா டுபாக்கூரை வைத்து சீன் போட்டீர்கள்.

ஆட்சியதிகாரத்தில் பங்கு தருவதாக விஜய் சொன்னதால் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்தீர்கள். 

கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலிருந்தும் உங்கள் கட்சி துடைக்கப்பட்டு விட்டது. கர்னாடகத்தில் நடக்கும் கோஷ்டி மோதலால் அடுத்த தேர்தலில் ஆட்சியை பறி கொடுப்பீர்கள்.

பாஜகவுடன் வைத்துக் கொண்டுள்ள கள்ள உறவால் கேரளாவில் ஜெயித்துள்ளீர்கள். முதலமைச்சர் போட்டியே உங்களை வீழ்த்தும்.

இப்படிப்பட்ட நிலைமை உள்ள போது உங்கள் வலிமைக்கு மீறி சீட்டுக்களை கேட்டீர்கள், அதிலே வெற்றியும் பெற்றும் 28 சீட்டுக்களை பெற்றீர்கள். கூட்டணி இல்லாமல் உங்கள் கட்சியால் அந்த ஐந்து எம்.எல்.ஏ க்களை பெற்றிருக்க மாட்டீர்கள். 

கூட்டணியின் தயவால் பெற்ற அந்த ஐந்து எம்.எல்.ஏ க்களை இப்போது விஜய்க்கு கை மாற்றிக் கொடுப்பது மிகவும் கேவலம். கொஞ்சம் கூட நெறிமுறையற்ற செயல்.

தேர்தலில் வாக்காளர்களின் விரல்களில் வைத்த மையை அவர்களின் முகத்தில் பூசியுள்ளீர்கள். அவர்கள் அளித்த வாக்குக்கு எதிராக செயல்பட்டுள்ளீர்கள். 

ஒன்றும் தெரியாத பப்பு என்று உங்களை சொல்வார்கள். நீங்கள் பப்பு அல்ல, அமித்ஷா போல ஆபத்தான கிரிமினல்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களை இப்போது விஜய்யிடம் விற்பதற்கு பதிலாக அப்போதே கூட்டணியை விட்டு வெளியேறி விஜய் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கலாம். 

அப்படி செய்திருந்தால் முடிவுகளே கூட மாறி இருக்கலாம்.

உங்களை தமிழ்நாடு இனி துரோகி என்றே பார்க்கும்.

Thursday, March 12, 2026

நன்றி கெட்ட, துரோக மோடி அரசு . . .

 


சங்கிகள் பீற்றிக் கொண்டிருக்கிற ஒரு செய்தி கீழே உள்ளது.



இந்த செய்தியின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

அதை உண்மை என்றே எடுத்துக் கொள்வோம்.

இரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமெனியின் மறைவிற்கு மோடி ஒரு இரங்கல் செய்தி கூட விடுக்கவில்லை.

இரானின் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அமெரிக்காவை கண்டிக்கவில்லை, கண்டிப்பதற்கான தைரியம் மோடிக்கு கிடையாது என்பது நாமறிந்த உண்மைதான். போரை நிறுத்துங்களேன் என்று ஒரு சின்ன வேண்டுகோள் கூட விடுக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழலில் இந்தியக் கப்பல்களுக்கு இரான் அனுமதி கொடுத்தது என்றால் அது இரானின் பெருந்தன்மை. பாரம்பரியமாக நட்பு பாராட்டும் இந்திய மக்கள் மீது கொண்டுள்ள மரியாதை.

இந்திய அரசின்  சிக்கலுக்கு தீர்வு கொடுத்த இரானுக்கு இந்தியா செய்த பதில் மரியாதை என்ன?

இரான் மீதான கண்டனத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் வழிமொழிந்து இஸ்ரேல்-அமெரிக்கக் களவாணிகள் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் மோடி. இதையும் கூட ராஜதந்திரம் என்று  வெட்கமே இல்லாமல் பீற்றிக் கொள்வார்கள் சங்கி மூடர்கள்.

உதவிக்கரம் நீட்டுபவரின் முதுகில் குத்தும் நன்றி கெட்டவர்களின் ஆட்சியில் வாழ்கிறோம் என்று நினைக்கவே கடுப்பாக இருக்கிறது.

ஆட்சியாளர்களின் துரோகத்தால் நாம் என்னென்ன பிரச்சினைகளை அனுபவிக்கப்போகிறோமோ? 

Sunday, December 7, 2025

காங்கிரஸ் கட்சியின் கருங்காலி

 


ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு மோடி ஒரு விருந்து கொடுக்கிறார். தாமோதர் தாஸ் சேர்த்து வைத்த சொத்திலிருந்து அல்ல, பிரதமராக இந்திய கஜானாவிலிருந்துதான்.

நாடாளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு  அழைப்பு கிடையாது.

மாநிலங்களவையின் எதிர்க்கட்சித்தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவிற்கும் அழைப்பு கிடையாது.

ஆனால் ஏதோ ஒரு நாடாளுமன்ற ஜும்லா குழுவின் தலைவராக உள்ள சசி தரூருக்கும் மட்டும் அழைப்பு உண்டு.

தன் கட்சியில் தன்னௌ விட உயர்ந்த பொறுப்புக்களில் உள்ளவர்களை அவமானப்படுத்து விட்டு தன்னை மட்டும் அழைப்பது கட்சிக்குள் சிண்டு முடிக்கும் வேலை என்று சசி தரூர் கண்டித்திருக்க வேண்டும். விருந்தை புறக்கணித்திருக்க வேண்டும்.

ஆனால் . . .


எனக்கான அழைப்பு,  எனக்கான கௌரவம் என்று சொல்லிக் கொண்டு விருந்தில் கலந்து கொண்டு விட்டார், கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் . . .

என்ன இருந்தாலும் அவரது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க மோடிதானே உதவினார்!

எல்லா காலங்களிலும் எட்டப்பர்கள் வாழ்கிறார்கள். 

Wednesday, August 27, 2025

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் காதல் திருமணம் புதிதல்ல . . .

 


காதல் திருமணங்களை எங்கள் கட்சி அலுவலகங்களில் நடத்திக் கொள்ளலாம் என்று மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் சொன்னது முதல் பலரும் பதறிக் கொண்டிருக்கிறார்கள். 

திருமண மண்டபம் போல பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னது போல மார்க்சிஸ்ட் கட்சியின் எதிரிகள் வழக்கம் போல திசை திருப்பி மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்கள். காதல் திருமணம் நடத்த எங்களின் ஆதரவு முழுமையாக இருக்கும் என்பதுதான் தோழர் பெ.சண்முகம் சொன்னதன் அர்த்தம்  என்பது அவர்களுக்கு புரியும் என்பதுதான் அர்த்தம்.

காதல் திருமணங்களை, ஜாதி, மத மறுப்புத் திருமணங்களை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் பலரும்  செய்துள்ளனர், நடத்தியும் வைத்துள்ளனர். கட்சி மாநாடுகளில் திருமணம் நடந்துள்ளது. ஏன் வெண்மணி நினைவு நாளில் வெண்மணி தியாகிகள் அஞ்சலிக் கூட்டத்திலே கூட திருமணம் நடந்துள்ளது.

ஜாதி மறுப்பு திருமணத்திற்கு ஆதரவாக நின்றதால் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு அலுவலகத்தை சில ஜாதிய சகதிகள் அடித்து நொற்க்கினார்கள். 

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு திருமணம் நினைவுக்கு வந்தது, கசப்பான மனிதர்களையும் சேர்த்து. ஒரு காதல் ஜோடிக்கு அவசர திருமணம் செய்ய சில கோயில்களில் விசாரிக்கிறோம். அவர்கள் சொன்ன விதிகளை பின்பற்றினால் நாங்கள் நினைத்த காலத்திற்குள் திருமணம் செய்ய இயலாது.

கட்சி அலுவலகம் சென்று யோசிப்போம் என்று கட்சி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது எனக்கு தோன்றிய யோசனைதான் ஏன் இன்றைக்கே கட்சி அலுவலகத்திலேயே திருமணம் செய்யக்கூடாது என்பது. 

அன்று ஞாயிற்றுக் கிழமை. மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மதிய உணவுக்காக செயற்குழுத் தோழர்கள் இறங்கி வந்த போது அந்த யோசனையை சொன்ன போது அப்போதைய மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஆர்.புருஷோத்தமன், நாங்கள் முதலில் சாப்பிட்டு வருகிறோம். பிறகு பேசிக் கொள்வோம் என்றார்.

பிறகு அவர் இருவரிடமும் "நீங்கள் இருவரும் மேஜர்தானே, இங்கே இன்றே திருமணம் செய்து கொள்ள விருப்பம்தானே, உங்களை யாரும் நிர்ப்பந்திக்கவில்லையல்லவா?" என்றெல்லாம் கேட்டு பதில்களில் திருப்தி அடைந்த பிறகு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். இருவரின் கிளைச் செயலாளர்களுக்கும் தகவல் கூறுமாறு எங்கள் சங்கத்தின் முதல் பொதுச்செயலாளரும் அன்றைய மாவட்ட செயற்குழு உறுப்பினருமான தோழர் ஆர்.ஜெகதீசன் சொன்னார்.

உடனடியாக என்னுடைய டி.வி.எஸ் பிப்டியில் சென்று புத்தாடைகள், மாலைகள், தங்கத்தாலி, இனிப்புக்கள் எல்லாம் வாங்கி வந்தோம். முன்னாள் எம்.எல்.ஏ வும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான தோழர் கே.ஆர்.சுந்தரம் அவர்களின் தலைமையில் திருமணம் நடந்தது. 

அப்போதே ஒரு நெருடல். இறுதியில் நன்றி சொன்ன மணமகன், அங்கே இருந்தவர்கள், எட்டிப் பார்த்தவர்கள் என அத்தனை பேருக்கும் நன்றி சொன்னாரே தவிர, திருமணம் நடத்த ஆலோசனை சொன்ன, அனைத்து பொருட்களையும் அலைந்து திரிந்து வாங்கி வந்த என் பெயரை மட்டும் ஞாபகமாக தவிர்த்து விட்டார்.

அவர் பின்னாளில் சங்கத்திற்கு ஏராளமான பிரச்சினைகளை கொடுத்து விட்டு சங்கத்திலிருந்தும், கட்சியிலிருந்தும் முதலில் விலகிப் போனார். பின்பு எல்.ஐ.சி யிலிருந்தே ஓடிப் போய் விட்டார்.

துரோகம் அன்று எனக்கு புதிதாக இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு அது அதிர்ச்சியாய் இருந்திருக்காது. எத்தனை துரோகிகளை இந்த நூறாண்டு காலத்தில் பார்த்திருக்கும்!

பிகு: பாஜக அலுவலகங்களுக்கு வாருங்கள் என்று ஆட்டுக்காரனும் அழைத்துள்ளாரே என்று யாராவது நினைக்கலாம். அது தனி பதிவாக எழுத வேண்டிய ஒன்று.

பிகு 2 : மேலே உள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவகத்தின் புகைப்படம். 


Thursday, October 24, 2024

கொல்லப்பட்ட கடைசி தருணத்திலும் கம்பீரம்

 பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து எடுத்தது. இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹமாஸ் இயக்கத்தலைவர் யாஹ்யா சின்வர் அவர்களின் இறுதி உயில். தமிழாக்கம் செய்தவர் தோழர் ராஜ சங்கீதன்.

LAST MOMENTS OF YAHYA SINVAR என்ற இந்த காணொளியை யூடூயுபில் பாருங்கள். ஒரு கை வெட்டப்பட்டு வாழ்வின்  இறுதித்தருணத்தில் இருக்கையில் பறந்து வரும் ட்ரோன் மீது ஒற்றைக் கையால் தடியை வீசி எரியும் தீரத்தை பார்க்க மறவாதீர். கீழேயுள்ள படத்தில் சொல்லப்பட்டது போல அமெரிக்க அடிமையாக பாலஸ்தீனத்திற்கு எதிரான சவுதி அரேபிய மன்னரின் அரியணையை விட சின்வரின் சோபா கம்பீரமானது. 

பாலஸ்தீனத்தின் வரலாற்றில் அம்மக்களின் துரோகியாக, எதிரியாக மோடியும்  பதிவு செய்யப்படுவார். 



ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் எழுதியிருந்த இறுதி உயில் சுருக்கம்:

இந்த வார்த்தைகளை எழுதுகையில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் எண்ணி பார்க்கிறேன். சந்துகளில் திரிந்திருந்த பால்யகாலம் தொடங்கி பல வருட சிறைவாசம் வரையான வாழ்க்கையையும் இந்த நிலத்தில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நினைவுகூருகிறேன்.
1962ம் ஆண்டில் நான் கான் யூனிஸ் முகாமில் பிறந்தேன். பாலஸ்தீனம் கிழித்தெடுக்கப்பட்டு நினைவாக மட்டுமே எஞ்சியிருந்த காலக்கட்டம் அது. அரசியல்வாதிகளின் மேஜைகளில் மறக்கப்பட்ட வரைபடமாக பாலஸ்தீனம் கிடந்தது.
நெருப்புக்கும் சாம்பலுக்கும் இடையில் வளர்ந்தவன் நான். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வாழ்வது, நிரந்தர சிறைவாசம் என்பதை வாழ்க்கையின் தொடக்கத்திலேயே புரிந்திருந்தேன்.
இங்கு பிறக்கும் ஒவ்வொருவரும் தன் நெஞ்சில் உடையாத ஓர் ஆயுதத்தை ஏந்தியிருக்க வேண்டும். விடுதலைக்கான தூரம் நெடியது என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
முதன்முறையாக 1988ம் ஆண்டில் சிறைக்கு சென்றேன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இருள் நிறைந்த அந்த சிறைகளின் ஒவ்வொரு சுவரிலும் தூரத்து அடிவானத்துக்கான ஒரு ஜன்னலை நான் கண்டேன். ஒவ்வொரு சிறையிலும் விடுதலைக்கான வழி காட்டும் வெளிச்சம் தெரிந்தது,.
பொறுமை என்பது பண்பல்ல, ஆயுதம் என்பதை சிறையில் கற்றுக் கொண்டேன். மிகவும் கடுமையான ஆயுதம் அது. ஒவ்வொரு துளியாக மொத்த கடலையும் குடிக்க முனையும் ஒருவரின் முயற்சிக்கு நிகரான ஆயுதம்!
என்னுடைய அறிவுரை இதுதான்: சிறைகளுக்கு அஞ்சாதீர்கள். விடுதலைக்கான நெடும்பாதையின் அங்கங்கள் அவை.
விடுதலை என்பது வலியில் பிறப்பது; பொறுமையில் பக்குவப்படுவது! 2011ம் ஆண்டு “வஃபா அல் அஹ்ரார்” ஒப்பந்தத்தில் நான் விடுவிக்கப்பட்ட போது, போராட்டத்தை விட்டுச் சென்றுவிட வில்லை. வலிமை பெற்றிருந்தேன். நம்பிக்கை அதிகமாகி இருந்தது. நாம் முன்னெடுப்பது சாதாரண போராட்டமல்ல என்பதையும் நம் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாம் சுமக்கும் விதி போராட்டம்தான் என்பதையும் புரிந்து கொண்டேன்.
என்னுடைய அறிவுரை, துப்பாக்கியையும் வழுவாத சுயமரியாதையயும் அழிவுறா நம் கனவையும் கைவிட்டு விடாதீர்கள் என்பதுதான். நம் போராட்டத்தை நாம் கைவிட்டுவிட வேண்டுமென எதிரி விரும்புகிறான். நம் நோக்கத்தை நெடிய பேச்சுவார்த்தை மூலம் நீர்த்துப் போக வைக்க விரும்புகிறான்.
ஆனால் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் உரிமை பெற்றிருக்கும் ஒரு விஷயத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தாதீர்கள். உங்களின் ஆயுதங்களை விட, உங்களின் உறுதி அவர்களை அச்சுறுத்துகிறது.
போராட்டவுணர்வு என்பது நமக்கான ஆயுதம் மட்டுமில்லை, நம் சுவாசத்தில் பாலஸ்தீனத்தின்பால் நாம் கொண்டிருக்கும் அன்பு அது; ஆக்கிரமிப்பும் படையெடுப்பும் தாக்குதலும் தொடர்ந்தாலும் இங்கு நாம் தொடர்ந்து நீடிப்பதற்கான பற்று அது!
உயிரிழந்த ஈகியரின் ரத்தத்துக்கு உண்மையாக இருங்கள். முட்களாலான பாதையில் நமக்கான விடுதலைப் பாதையை தங்களின் ரத்தம் கொண்டு போட்டவர்கள் அவர்கள்தான். அரசியல்வாதிகள் தரும் கணக்குகளுக்காகவும் அரசப் பிரதிநிதிகள் காட்டும் ஆட்டத்துக்காகவும் அவர்களின் ஈகையை விரயமாக்கி விடாதீர்கள்.
முன்னவர்கள் தொடங்கியதை முடிக்கத்தான் நாம் இங்கு இருக்கிறோம். என்ன விலை கொடுக்க நேர்ந்தாலும் இந்த பாதையிலிருந்து நாம் விலகிடக் கூடாது. பூமியே நம்மை குறுக்கினாலும் உறுதிப்பாட்டின் தலைநகரமாகவும், தொடர்ந்து துடிக்கும் பாலத்தீன இதயமாகவும் காசா இருக்கும்.
2017ம் ஆண்டில் ஹமாசின் தலைவராக நான் ஆனபோது, வெறும் அதிகாரப் பரிமாற்றமாக அதை நான் பார்க்கவில்லை. கற்களால் தொடங்கி துப்பாக்கிகளால் தொடரும் ஒரு பெரும் போராட்டத்தின் தொடர்ச்சியாகதான் பார்த்தேன்.
விடுதலையை நோக்கி நாம் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு விலையை கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்திருந்தேன். ஆனால் ஒன்றை மறந்து விடாதீர்கள். சரணடைவதால் நாம் கொடுக்கும் விலை இவற்றை விட மிக அதிகமாக இருக்கும். எனவே வேர், மண்ணை பிடித்திருப்பது போல், இந்த நிலத்தை பிடித்திருங்கள். வாழ வேண்டுமென முடிவெடுத்து விட்ட மக்களை எந்தக் காற்றாலும் பெயர்த்தெடுக்க முடியாது.
அல் அக்ஸா போர், உடல்களுக்கு எதிரான ஆன்மாக்களின் போர்; ஆயுதங்களுக்கு எதிரான உறுதியின் போர்!
நான் விட்டுச் செல்வது என் தனிப்பட்ட மரபு அல்ல, ஒரு கூட்டு மரபு! விடுதலைக் கனவு கொண்ட ஒவ்வொரு பாலஸ்தீனருக்கும், உயிர் துறந்த மகனை தோளில் சுமந்த ஒவ்வொரு தாய்க்கும், தோட்டா உயிர் குடித்த மகளை சுமந்த ஒவ்வொரு தந்தைக்கும் அந்த மரபை நான் விட்டுச் செல்கிறேன்.
போராட்டம் வீண் போகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். போராட்டம் என்பது துப்பாக்கியின் தோட்டா மட்டும் அல்ல, நாம் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கான அடிப்படையும் அதுதான்.
உலகம் நீதி வழங்கும் என எதிர்பார்க்காதீர்கள். நம் வலியை வெறுமனே உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தற்கு நானே சாட்சி. நீதியை எதிர்பார்க்காதீர்கள்; வழங்குங்கள்! பாலஸ்தீனர்களின் கனவை நெஞ்சில் ஏந்துங்கள். ஒவ்வொரு காயத்தையும் ஆயுதம் ஆக்குங்கள். ஒவ்வொரு கண்ணீரிலும் நம்பிக்கையை பெற்றெடுங்கள்.
இதுவே என் உயில். உங்களின் ஆயுதங்களை ஒப்படைக்காதீர்கள். கற்களை கீழே போடாதீர்கள். ஈகியரை மறந்திடாதீர்கள். நீங்கள் உரிமை கொண்டிருக்கும் கனவை காவு கொடுத்து விடாதீர்கள்.
நாம் இங்குதான் இருப்போம். நம் நிலத்தில், நம் நெஞ்சங்களில், நம் குழந்தைகளின் எதிர்காலத்தில் நாம் இருப்போம்.
இறுதி வரை நான் நேசித்த நிலத்தையும் பெருமலை போல் என் தோள்களில் சுமந்த கனவையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
நான் வீழ்ந்தால், நீங்களும் வீழ்ந்திடாதீர்கள். என்றுமே வீழாத பதாகையை எனக்காக ஏந்துங்கள். என் ரத்தத்தை, ஒரு தலைமுறை வலிமை பெறுவதற்கான பாலமாக மாற்றுங்கள்.
சொந்த நிலம் என்பது சொல்வற்கான கதையல்ல, வாழ்வதற்கான யதார்த்தம் என்பதை மறந்து விடாதீர்கள்.
உயிரை ஈகை செய்த ஒவ்வொருவரிடமிருந்தும் ஆயிரக்கணக்கான போராளிகள் பிறப்பார்கள்.
மீண்டும் போர் வருகையில் நான் உங்களுடன் இல்லாது போயிருந்தால், விடுதலைக்கான அலைகளின் முதல் துளி நான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Sunday, October 29, 2023

இந்திய அரசின் துரோகம் ...

 


பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் அராஜக தாக்குதல்கள், ஆக்கிரமிப்பு, அத்து மீறல்கள் ஆகியவற்றுக்கு எதிராக நேற்று ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா ஓடி ஓளிந்திருக்கிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் பற்றி தீர்மானத்தில் எதுவும் இல்லாததால் வாக்களிக்கவில்லை என்றொரு விளக்கம் வேறு கொடுத்துள்ளது.

ஹமாஸ் நடத்திய தாக்குதலா இஸ்ரேலின் அராஜகத்திற்கு துவக்கப்புள்ளி?

பல்லாண்டுகளாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்திக் கொண்டிருக்கிற அராஜகம், இஸ்ரேலால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள், பாலஸ்தீனக்குழந்தைகள், அழிக்கப்பட்ட சொத்துக்கள் ஆகியவை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஹமாஸின் மீது மட்டும் பழி சொல்வது அயோக்கியத்தனமானது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நிற்பது என்ற இந்தியாவின் பாரம்பரியத்தை குழி தோண்டி புதைக்க ஆரம்பித்தவர் வாஜ்பாய்.

இப்போது அதனை டிமோ செய்து முடித்து விட்டார்.

இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்கள் வாங்குகிறார். அனைவரையும் உளவு செய்வதற்கான கருவிகள் வாங்குகிறார். கோடிக்கணக்கான ரூபாய் இந்திய கஜானாவிலிருந்து போகிறது. அதிலே எத்தனை சதவிகிதம் தரகர்கள் மூலம் பாஜகவிற்கு வருகிறதோ!

அந்த எலும்புத்துண்டுகளுக்காக இந்திய அரசு பாலஸ்தீன மக்களுக்கும் உலக அமைதிக்கும் செய்துள்ள துரோகம் இந்திய நாட்டிற்குத்தான் களங்கம் . ..