Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Wednesday, January 1, 2025

புத்தாண்டு இனிதாய் அமையட்டும்

 


புத்தாண்டின் முதல் பதிவாய் என்ன எழுதலாம் என்று யோசித்தேன். எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த இரு தலைவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கத்தை அளிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.



வெறுப்பும் வன்முறையும் புதிய வாழ்வியல் நடைமுறைகளாக  மாறி வரும் இன்றைய சூழலில் அமைதியாய் ஒன்றிணைந்து வாழ்வது, உண்மை, நீதி, அனைவருக்குமான நலன் ஆகிய அழகிய விழுமியங்களுக்காக போராடுவது இன்றியமையாதது. இந்த அழகிய சித்தாந்தங்களை வளர்த்தெடுக்க அழிவு சக்திகளையும் இருளையும் பின்னுக்குத் தள்ள வேண்டியது அவசியமாகும்.

2025 ல்  இந்த உயரிய இலக்குகளை வென்றெடுப்பதற்காக முன்னேறுவதற்கான  பயணத்தை முன்னெடுத்துச் செல்வோம்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

                                                                               -        தோழர் அமானுல்லாகான்                                                                               முன்னாள் தலைவர்    அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

புத்தாண்டு புதிய நம்பிக்கைகளை கொண்டு வருகிறது. வெறுப்பை அன்பின் மூலம் அகற்றுகிற, பாகுபாட்டை சமத்துவம் மூலம் அகற்றுகிற, போர்களை அமைதி வென்றெடுக்கிற, வளர்ச்சியையும் செல்வத்தையும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிற மனிதத்திற்காக ஒன்றிணைகிற சிறப்பானதொரு உலகம் உருவாகும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. 

இவை ஒரு நாளில் நிகழாது. புத்தாண்டு அதற்கான பாதையை வழிகாட்டட்டும். 

அனைத்து தோழர்களுக்கும்  மகிழ்ச்சியான 2025  புத்தாண்டு அமைய எனது வாழ்த்துக்கள்

                                                        தோழர் கே.வேணுகோபால்,

                                                  முன்னாள் பொதுச்செயலாளர்,

                      அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

 அனைவருக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிகு: புத்தாண்டின் முதல் பதிவில் ஒரு இனிப்பு இருக்கட்டும் என்பதற்காக இன்று நான் தயாரித்த பீட்ரூட் அல்வா மேலே . . .

Thursday, April 9, 2020

செட்டி நாட்டு கும்மாயம் – WVA




ஊரடங்கு காலத்தில் வழக்கமான காபி கலக்கும் பணியைத் தவிர புதிய சமையலறை முயற்சிகள் எதுவும் செய்யவில்லை.

செட்டி நாட்டு சமையல் வகைகள் என்று ஒரு தோழர் பல்வேறு செட்டிநாட்டு சமையல்களுக்கான தயாரிப்பு முறைகளை பகிர்ந்து கொண்டிருந்தார்.

அதில் உடனடி சாத்தியமான “கும்மாயம்” என்ற இனிப்பைத்தான் தயார் செய்தேன்.

அரை டம்ப்ளர் வெள்ளை உளுந்து, கால் டம்ப்ளர் பாசிப்பருப்பு, ஒரு ஸ்பூன் பச்சரிசி ஆகியவற்றை தனித்தனியாக நல்ல வாசனை வரும் வறுத்து எடுத்துக் கொண்டேன். தனித்தனியாக வறுத்தாலும் அதன் பின்பு மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில்  பொடி செய்து கொண்டேன்.



ஒன்றரை டம்ப்ளர் வெல்லத்தை பொடி செய்து அதை கொஞ்சம் தண்ணீர் விட்டு அதில் பொடி செய்த மாவையும் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்தில் கலந்து கொண்டேன்.




பிறகு வாணலியில் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்துக் கொண்டேன். பிறகு அதே வாணலியில் இன்னும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அது சூடானதும் அதில் ஏற்கனவே தயாராக இருந்த மாவை சேர்த்து சிறிது நேரம் கிளற வேண்டும். மாவு வடிவம் மாறும் போது தேங்காய் துறுவலையும் சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு கிளறி, கடைசியில் ஏலக்காய் பொடி, முந்திரி கலந்து  எடுத்து வைத்தால் "செட்டி நாட்டு கும்மாயம்" தயார்.



கிட்டத்தட்ட அவல் புட்டின் ருசி, பாசிப்பருப்பின் வாசனையோடு இருந்தது.

நன்றாக இருந்ததா என்று கேட்கிறீர்களா?

"உன் மாப்பிள்ளை செய்த ஸ்வீட்" என்று என் மனைவி அவர்களின் அம்மாவின் கொடுத்ததே தரச்சான்றாக கருதுகிறேன்.

அதென்ன WVA என்ற கேள்வி வருகிறதல்லவா?

WITH VALUE ADDITION

எனக்கு வந்த சமையல் குறிப்பில் தேங்காய் துறுவல், முந்திரி எல்லாம் இல்லை. அது இரண்டும் நான் புதிதாக சேர்த்தது. 

செய்து பாருங்கள்.

சுலபமானது. சுவையானது. 



Sunday, October 20, 2019

அல்வா வேண்டாம். அப்படியே சாப்பிடுங்கள்





இன்று முயற்சி செய்த இனிப்பு ஆப்பிள் அல்வா

மூன்று ஆப்பிள்களை தோல் சீவிக் கொண்டு பிறகு துருவிக் கொண்டேன். 

முந்திரியை நெய் விட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொண்ட பின்பு அதே வாணலியில் துருவிய ஆப்பிளை போட்டு ஒரு ஏழு நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டிருந்தேன். பிறகு சர்க்கரை போட்டு இன்னும் ஒரு ஐந்து நிமிடம். நடுவில் கொஞ்சம் கொஞ்சமாய் நெய். கடைசியில் ஏலக்காய்ப் பொடி, முந்திரி போட்டு எடுத்து வைத்து விட்டேன்.

அல்வாவின் நிறத்தில் திடத்தில் வந்தாலும் ஆப்பிள் துண்டத்தை சர்க்கரை தொட்டுக் கொண்டு சாப்பிட்டது போலதான் சுவை இருந்தது. அளவும் அதிகமாக வரவில்லை. நான்கு சிறு கிண்ணங்கள் கூட வரவில்லை.

இவ்வளவு மெனக்கெட்டு அல்வா செய்ததற்கு பதிலாக ஆப்பிளை அப்படியே சாப்பிட்டிருக்கலாமே என்றுதான் தோன்றியது.

Monday, September 2, 2019

கொழுக்கட்டை இவ்ளோ ரூபாயா?


மேலே உள்ளது சென்னையில் உள்ள ஒரு உணவகத்தின் விளம்பரம்.

ஆறு இனிப்பு கொழுக்கட்டை,
ஆறு காரக் கொழுக்கட்டை,
நான்கு அப்பம்,
இரண்டு மெது வடை,
150 கிராம் சுண்டல்

இந்த காம்போ பார்சலின் விலை அறநூறு ரூபாயிலிருந்து அதிரடியாக நானூற்றி ஐம்பது ரூபாயாக குறைக்கப்பட்டு விட்டதாம்.

ஒரு கொழுக்கட்டையின் விலை ஐம்பது ரூபாய் வருகிறது. அவ்வளவு விலை விற்க அதில அப்படி என்னய்யா போடறீங்க?

பிகு: சமீபத்தில் ஒரு விழாவில் அந்த உணவகத்தின் உணவுதான் பறிமாறப்பட்டது. சுவை ரொம்பவே சுமார்தான்.  மொக்கை ஹோட்டல் இப்படி ஒரு பில்ட் அப் கொடுக்கிறதே என்ற எரிச்சல்தான் இந்த பதிவுக்குக் காரணம். "தளிகை" செய்யத் தெரிந்தவர்கள் ஏன் ஹோட்டலில் இவ்வளவு பணம் கொடுத்து கொழுக்கட்டை செய்யப் போகிறார்கள்? 

Tuesday, April 18, 2017

செய்முறை சொல்லுங்கப்பா



முக்கிய முன் குறிப்பு ; ஒரு சீரியஸான பதிவு ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். சங் பரிவாரக்கும்பல் கண்டிப்பாக தேச விரோதி என்று பட்டம் கொடுக்கும். 

அதற்கு முன்பாக சற்றே இளைப்பாற சின்னதாய் இந்த பதிவு.

ஏதோ ஒரு திருமண விருந்துக்கான மெனு என்று முக நூலில் பார்த்தேன். இவ்வளவு தடபுடல் தேவையா என்ற கேள்விக்குள் இப்போது செல்லவில்லை.





இதிலே கட்டம் கட்டியுள்ள உணவு வகைகளைப் பாருங்கள்.

வெஜ் ஈரல் குழம்பு
உருளை மீன் ரோஸ்ட்
வாழைப்பூ மீன் குழம்பு

இவையெல்லாம் சைவ உணவு என்று தெரிகிறது..ஆனால் பெயர்களில் எல்லாம் அசைவ வாடை அடிக்கிறது.

இவற்றையெல்லாம் செய்யத் தெரிந்தவர்கள் எப்படி தயாரிப்பது என்று செய்முறை சொல்லிக் கொடுங்களேன்.

ருசி பார்த்தவர்கள், குறைந்தபட்சம் இவை எப்படி இருக்கும் என்றாவது சொல்லுங்களேன்.


Thursday, March 26, 2015

ஓ ! அவரோட ஹோட்டல்தானே?



திங்கள் கிழமையன்று எனது அக்கா கணவரின் அறுபத்தி ஒன்றாவது பிறந்த நாள். சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகள் எதுவும் நடத்தவில்லை.

மிக நெருங்கிய உறவினர்களோடு ஒரு Get together ஆக சென்னையில் ஒரு பிரபல ஹோட்டலில் மதிய உணவிற்கு என் அக்கா பையன் ஏற்பாடு செய்திருந்தான். எந்த ஹோட்டல் என்பதை மட்டும் பிறகு உறுதிப்படுத்துவதாக சொல்லியிருந்தான்.

அது போல சென்னை டி,நகரில் உள்ள “அகார்ட் மெட்ரோபாலிடன்” என்று அவன் தகவல் சொன்னதும் நான் கேட்ட முதல் கேள்வி
 http://www.freevisuals4u.com/photos/2011/12/Accord-Metropolitan.jpg

“வெங்கடேஷ் பட் வேலை செய்யற ஹோட்டல்தானே?”

அவன் கடுப்பாகி விட்டான்.

“யாரந்த வெங்கடேஷ் பட்? எல்லோருமே இதே கேள்வியைக் கேட்கறீங்களே?”

எனக்கு முன்பாக அவன் யாருக்கெல்லாம் தகவல் சொன்னானோ, அவர்கள் அனைவரும் கூட இதே கேள்வியைத்தான் கேட்டுள்ளார்கள். (இதே போல வேறு ஒரு சூழலில் மற்றவர்கள் கேட்ட அதே கேள்வியை நானும் ஒருவரிடம் கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட சோகக் கதையை வேறொரு நாளில் பகிர்ந்து கொள்கிறேன்)

அவர் விஜய் டி.வி யில் சமையல் நிகழ்ச்சிக்கு வரும் சமையல் கலைஞர் என்று சொன்னதும் “ஓ, அவரா எனக்கும் தெரியுமே” என்றான்.
 http://www.thehindu.com/multimedia/dynamic/00134/26BGMBHAT1_134722f.jpg

ஒரு ஹோட்டல் அதன் உரிமையாளர்களை விட அதில் பணியாற்றும் சமையல் கலைஞர் மூலமாக அதிகம் அறியப் படுகிறது என்றால் அது ஒரு ஆரோக்கியமான அம்சம். அதற்கு ஊடக வெளிச்சமும் ஒரு காரணம்.

சும்மா சொல்லக் கூடாது.


உணவின் சுவை அற்புதமாகவே இருந்தது. வடக்கத்தி பாணி உடை அணிந்த ஒரு பையனின் சேவையும் சிறப்பாக இருந்தது. நாங்கள் அங்கே இருந்த போது திரு வெங்கடேஷ் பட்டும் அங்கே வந்தார். அவரது நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பவர்கள் என்று அறிமுகமும் செய்து கொண்டோம். உங்கள் சமையல் குறிப்புக்கள் புத்தகமாக வந்துள்ளதா என்று கேட்டதற்கு மே மாதம் வரவுள்ளது என்றார்.

வர வேண்டும், சீக்கிரமாகவே வர வேண்டும். அப்போதான் நாமும் அதிலிருந்து புதிது புதிதாக முயற்சி செய்து கொண்டே இருக்க முடியும்.

ஒரே ஒரு விஷயம் அவரிடம் சொல்ல நினைத்து பிறகு வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன். விஜய் டிவி யில் அவரது குறிப்புக்கள் எழுத்து வடிவில் ஒளிபரப்பாகும் போது எழுத்துப் பிழைகள் ஏராளமாக இருக்கும். 

தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத அவர் அதற்கு காரணமல்ல, தொலைக் காட்சியின் தவறுதான் என்பதால்தான் அதைச் சொல்லவில்லை. 

நூலாக வரும் போது தமிழ் நன்றாக அறிந்த ஒருவரிடம் கொடுத்து சரி பார்க்கச் சொல்ல வேண்டும். அந்த பணிக்கு மட்டும் அவர் விஜய் டிவி ஆட்களை நம்பக் கூடாது.





Sunday, December 15, 2013

வெற்றிகரமாக முடிந்த ஒரு முயற்சி

சமையல் அனுபவங்களை பதிவிட தொடங்கியது முதலே 
விஜிடபிள் பிரியாணி செய்ய வேண்டும் என்ற ஆசை 
இருந்து  கொண்டே இருந்தது. ஆனால் அதற்கான அவகாசம்
மட்டும் கிடைக்கவில்லை. 

அந்த வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது. வெற்றிகரமாகவே
வந்திருந்தது. எல்லோருக்கும் தெரிந்த உணவு என்பதால்
சமையல் குறிப்பு எழுத வேண்டிய தேவை இல்லை.

வெற்றிகரமாகவும் சுவையாகவும் வந்திருந்தது என்பதற்கு
சான்றாக புகைப்படங்கள் மட்டுமே இங்கே




அதே நேரம் மிகவும் சொதப்பலாக முடிந்த இன்னொரு 
முயற்சியும் உள்ளது. அந்த சோக அனுபவத்தை நாளை
பகிர்ந்து கொள்கிறேன்.
 

Sunday, December 8, 2013

மனம் போன போக்கில் ஒரு குருமா







இது வியாழக்கிழமை கதை. ஆனால் எழுத என்னமோ இன்றுதான் நேரம் கிடைத்தது. அன்று காலையிலேயே வாங்கி வந்த கறிகாய்களில் எஞ்சியிருந்த காலி ஃபளவரைப் பார்த்து  இதை நானே இரவு குருமா செய்து விடுகிறேன் என்று ஜம்பமாக கூறி விட்டேன்.

என் மகனும் சொன்ன வார்த்தையை நீ கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும் என்று மிரட்டலாக வேறு சொன்னான்.

மாலையில் மனைவியை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் அலுவலகம் வந்தேன். அப்போதும் என் மகன் சீக்கிரம் வா, குருமா செய்ய வேண்டும் என்று நினைவு படுத்தி அனுப்பினான். நீண்ட நாட்கள் பார்க்காத ஒரு தோழர் அலுவலகத்திற்கு வர அவரோடு பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

எட்டரை மணிக்கு மேல் வீட்டிற்கு போன் செய்து அலுவலகத்திலிருந்து புறப்பட்டு விட்டேன், ஏ.டி.எம் போய் விட்டு கறிகாய் வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன் என்று சொன்னால் இல்லையில்லை நீங்கள் வந்துதான் குருமா செய்ய வேண்டும், வீட்டிற்கே வந்து விடுங்கள் என்றதும் நிலைமை சிக்கலானது ஏனென்றால் குருமா செய்ய தெரியாது. ஏதாவது புத்தகத்தை பார்த்து சமாளிக்கலாம் என்றால் அதற்கும் அவகாசம் கிடையாது.

வீட்டிற்கு ஒன்பது மணியாவது பத்து நிமிஷம் முன்பு சென்றால் என் பையன் நேரே கிச்சனுக்கு அனுப்பி விட்டான்.

இனி வேறு வழியே இல்லை.

தக்காளி, வெங்காயம்  எல்லாம் வெட்டி வைக்கப் பட்டிருந்தது. காலி ஃப்ளவரை கொதிக்கும் தண்ணீரில் ஒரு பத்து நிமிடம் ஊற வைத்தேன். தக்காளி, வெங்காயம், தேங்காய் துறுவல், கொஞ்சம் பட்டை, பெருஞ்சீரகம், இரண்டு லவங்கம், கசகசா எல்லாவற்றையும் மிக்ஸியில்  போட்டு அறைத்து வைத்துக் கொண்டேன்.

பிறகு அடுப்பில் கொஞ்சமாக எண்ணெய் வைத்து கடுகு வெடிக்க வைத்து அதன் பின்பு கொஞ்சம் சீரகத்தைப் போட்டு வறுத்து அதன் பின்பு கடலைப் பருப்பையும் பொன் நிறமாக வறுத்த பின்பு வெங்காயம், தக்காளி, குட மிளகாய் என ஒவ்வொன்றாய் நன்றாக வதக்கிக் கொண்ட பின் காலி ஃப்ளவரையும் நன்றாக வதக்கி கொண்ட பின் அறைத்து  வைத்த கலவையையும் கலந்து கொதிக்க வைத்தேன். நன்றாக வாசம் வந்த போதுதான் காரத்திற்கு எதுவுமே சேர்க்கவில்லையே என்று ஞாபகம் வந்து அவசரமாக காரப் பொடியை கலந்தேன். நல்ல வேளையாக உப்பு சேர்க்க வில்லை என்பதும் அப்போது ஞாபகத்திற்கு வந்தது.

எல்லாம் நன்றாக வந்தாலும் குருமாவாக சேர்ந்து வரவில்லை. உடனே கடலை மாவை கறைத்து ஊற்றி கொதி வந்ததும் கொத்த மல்லி தூவி மறக்காமல் போட்டோவும் எடுத்து இறக்கி வைத்து விட்டேன்.

என் மகனும் மனைவியும் சப்பாத்திக்கு குருமா எடுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றார்கள். நான் கடைசியாக சென்றேன். குருமா எப்படி இருக்கிறது என்று கேட்டால்  இவர்கள் இருவரும் விழுந்து சிரிக்கிறார்கள். அதிர்ச்சியோடு பார்த்தால் சரியாக அந்த நேரத்தில்தான் தொலைக்காட்சியில் ஒரு நகைச்சுவைக் காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது.

வேலாயுதம் சினிமாவில் விஜயின் தங்கை சரண்யா மோகன் செய்த உப்புமாவை சாப்பிட்ட பிச்சைக்காரன் “ வாழ்க்கையில் இப்படி சாப்பாட்டை குடுத்து கொலை பண்ண பாக்கிறீங்களே “ என்று திட்டுகிற காட்சி அது.

நல்ல வேளை குருமாவை சாப்பிட்ட யாருக்கும் எதுவும் ஆகவில்லை. நன்றாக இருந்தது என்று நானே சொன்னால் சுய தம்பட்டம் என்று அனானி யாராவது பின்னூட்டம் எழுதுவார்கள். ஆனால் இனி நீங்களே
குருமா செய்யலாம் என்று மனைவி சொன்னது இந்த டி.வி போட்டிகளில் வரும் சூப்பர் செப் பட்டத்திற்கு இணையானது என்று கருதுகிறேன்.

ப்ளான் பண்ணி செஞ்சிருந்தா கொஞ்சம் சொதப்பியிருக்குமோ?