Showing posts with label சாதனை. Show all posts
Showing posts with label சாதனை. Show all posts

Wednesday, July 31, 2024

இந்தியாவில் முதல் முறையாக . . .

 


இந்தியாவில் முதல் முறையாக . . .

துப்பாக்கி சுடும் போட்டியில் ஏர் பிஸ்டல் 10 மீட்டர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவை பதக்கப்பட்டியலில் இடம் பெற வைத்த பதக்க மங்கை மனு பாக்கர், அதே பிரிவில் கலப்பு இரட்டையருக்கான போட்டியில் சரப்ஜோத்சிங்குடன் இணைந்து இன்னொரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

ஒரே ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் யாரும் இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றதில்லை.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று "ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர்" என்ற சாதனையை படைத்த மனு பாக்கருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். 

Wednesday, August 23, 2023

அனைவரையும் வாழ்த்துவோம் . . .

 




சந்திராயன்  3 வெற்றிகரமாக நிலவில் இறங்கி விட்டது.

இச்சாதனைக்கு காரணமான இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)  வின் அறிவியலாளர்கள், தொழில் நுட்பப் பணியாளர்கள், திட்டப் பணியில்   ஈடுபட்டோர், உதவிகளைச் செய்தோர் என அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் . . .

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு,

இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் விக்ரம் சாராபாய்,

இந்திய விண்வெளித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுத்த சோஷலிச சோவியத் யூனியன்

ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வோம். அவர்கள் போட்ட விதை இன்று ஆல மரமாகியுள்ளது. 

பிகு : ROSCOSMOS என்பது சோவியத் யூனியனின் விண்வெளி அமைப்பின் பெயர்..

Monday, July 10, 2023

எவரெஸ்டில் முதல் தமிழ்ப்பென்

 ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் 2 மணி நேரம் தாக்குப்பிடித்தேன் ஜெ. பொன்மாறன்



விருதுநகர் மாவட்டம் ஜோயில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்செல்விக்கு (34 வயது) திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள மண்ணிவாக்கத்தில் வசித்துவருகிறார். அங்கு ஜப்பான் மொழி பயிற்றுவிப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்தான் முத்தமிழ்செல்வி தானும் சாதிக்க வேண்டும் என்று பல்வேறு மலையேறும் பயிற்சி மற்றும் வில்வித்தை பயிற்சிகளில் ஈடுபட்டும் வந்தார்.

இதனைத் தொடர்ந்து, எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கான பயிற்சி மேற்கொண்டார். ஆனால் பொருளாதார வசதியில்லாமல் தவித்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து ரூ.10 லட்சம் அரசு சார்பில் உதவி வழங்கினார். மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.15 லட்சத்தை தன் சார்பாகக் கொடுத்து உதவினார்.

இதனையடுத்து, எவரெஸ்ட் மலையில் ஏறிய முத்தமிழ் செல்வி, வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தின் 8,848.86 மீட்டர் உயரத்தை அடைந்தார். தமிழ்நாட்டிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்ணாக முத்தமிழ்செல்வி சாதனை படைத்துள்ளார்.

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மகளிர் துணைக்குழு 37ஆவது மாநாட்டு கௌரவித்தது. மாநாட்டில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தன்னுடைய அனுபவங்களை கூறிய போது நமக்கே மூச்சு சற்று நின்று வருவது போல் இருந்தது. எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் முத்தமிழ்செல்வி.

“எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு நான் ஒரு முயற்சியினை செய்தேன். அதற்கு பக்க பலமாகஎன்னுடைய கணவர் இருந்தார். இந்த விஷயத்தை அவரிடம் சொல்லும் போது முதலில் ஏற்றுக்கொள்ள வில்லை என்னுடைய தொடர்முயற்சியின் காரணமாக எனக்கு சம்மதம் கிடைத்தது. இதேபோல் தான் அனைவரும் தங்களுடைய முயற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு தேவையானது கிடைக்கும். அந்த வகையில் நான் முயற்சி செய்தேன். அதற்கு என்னு டைய குடும்பத்தில் சம்மதம் கிடைத்தது. எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு பதிவு செய்தேன். அதில் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் இருந்து பலர் விண்ணப்பித்திருந்தார்கள். பின்னர் தான் தமிழகத்தில் இருந்து நாம் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஒரு பெரும் முயற்சியினை எடுத்தேன். ஒரு ஜாப்பனிய பள்ளியில் ஒரு லட்ச ரூபாய் ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். என்னுடைய லட்சியத்திற்காக அந்த வேலையையும் விட்டுவிட்டேன்.

எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு விண்ணப்பித்து விட்டு, பயிற்சி மற்றும் எவரெஸ்ட் சிகரம் சென்று வரும் செலவு என்று ரூ, 46 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. ஓராண்டு பணிக்கு செல்லாத நிலையில் இந்த பயிற்சிக்கு மிகப் பெரிய நிதி உதவி தேவைப்பட்டது. அதை பலரிடம் நான் கேட்டபோது என்னைக் கேவலமாகப் பார்த்தார்கள். ஆனால் நான் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியோடு உதவிகளை நாடினேன். ஒன்றரை ஆண்டுகள் இதற்காக நான் மிகவும் சிரமப்பட்டு பல்வேறு அசிங்கங்களை ஏற்றுக் கொண்டேன். ஒரு ஆண் சாதனை செய்யப் போகிறார் என்றால் ஏற்றுக்கொள்ளும் உலகம், ஒரு பெண்ணாகிய என்னை எப்படி ஏற்றுக்கொள்ள நினைப்பார்கள்? அப்போதுதான் நினைத்தேன். நான் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் என்று. ஏனென்றால் எப்போது ஒருவர் அடிபடுகிறாரோ அப்போதுதான் அவர் வெற்றி பெற நினைப்பார். என்னை அசிங்கப்படுத்தியவர்கள் முன் நாம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற லட்சியத்தை முன்வைத்து ஓராண்டாக உதவிகளை நாடினேன். அதில் ரூ.4 லட்சத்திற்கும் மேல் என்னால் நிதியினை பெற முடிய வில்லை.

என்னுடைய வீட்டில் கூட எதற்கு இந்த முயற்சி. வேலைக்கு செல்லலாமே என்று கூறினார்கள். அப்போது நான் கூறினேன் ஒரு முயற்சியை நான் எடுத்துவிட்டேன். அதை முடிக்காமல் வேறு எந்த பணியும் செய்ய மாட்டேன் என்று முடிவாகச் சொல்லிவிட்டேன். பின்னர் என்னுடைய உறவினர்களிடம் என்னுடைய லட்சியத்தை எடுத்துக் கூறிய பின் அவர்கள் உதவி செய்ய ஆரம்பித்தார் கள். அதில் ரூ. 20 லட்சம் வரை எனக்கு நிதியாக கிடைத்தது.

இல்லாத அரசாணையை புதிதாக உருவாக்கி நிதி உதவியது

அரசிடம் நான் உதவி கேட்கலாம் என்று நினைத்து கேட்டபோது மலையேறும் பயிற்சிக்கு என்று நிதி உதவி கிடையாது என்று கூறினார்கள் பின்னர் நான் தமிழகத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்லும் முதல் பெண். என்னால் எவரெஸ்ட் சிகரம் சென்று வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறினேன். பின்னர் எனக்காக புது அரசாணையை உருவாக்கி அதிலிருந்து ரூ. 10 லட்சம் நிதியாக வழங்கு வதற்கு உத்தரவிட்டார்கள். அந்த நிதியைப் பெறுவதற்கு செல்லும்போது போக்குவரத்து நெருக்கடியில் மாட்டிக் கொண்டதால் பணம் கொடுக்க காத்திருந்த முதல்வர் சென்றுவிட்டார். மிகவும் மன வேதனையோடு நான் திரும்பி வந்தேன். மூன்று தினங்கள் தான் இருக்கின்றது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. பின்னர் ஏதோ ஒரு செயலுக்காக தான் நம்மால் வாங்கப் போக முடிய வில்லை. மீண்டும் நாம் வாங்கச் செல்லும்போது அவர் களிடமே மீதமுள்ள 15 லட்சத்தை கேட்போம் என்று முடிவு எடுத்துச் சென்றேன். ரூ.10 லட்சத்திற்கான காசோலை வாங்கும்போது கூறினேன். எனக்கு இன்னும் 15 லட்சம் தேவைப்படுகிறது. நீங்கள் தான் உதவிட வேண்டும் என்று கூறினேன். அன்று மாலையே விளையாட்டுத்துறை அமைச்சரால் என்னுடைய வங்கிக் கணக்கிற்கு ரூ. 15 லட்சம் வந்து சேர்ந்தது.

உயிர்பிழைத்து வந்த வெற்றிப் பயணம்

இரண்டு மாதப் பயணம். அதில் கடைசி கட்டப்பயணம் மிகவும் கடினமான பயணம். முகாம் நான்கு. 34 மணி நேர பயணம். இது எவரெஸ்ட் சிகரத்திற்கு முன் உள்ள கடைசி முகாம். இங்கு ஆக்சிஜன் இல்லாமல் செல்ல முடியாது, நாங்கள் செல்லும் நேரத்தில் பனிப்புயல் அதிகமாக இருந்தது, இதனால் 30 மணி நேரத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு 36 மணி நேரம் செலவாகியது. நம்மைக் கூட்டிச் செல்வதற்கு வழிகாட்டியாக (கைடு) ஒருவர் கூட வருவார். அவர் கூறினார், நாம் 36 மணி நேரத்தில் சென்று திரும்பி இருக்க வேண்டும். கூடுதலான நேரம் நமக்கு செலவாகிவிட்டது. இலக்கை எட்டி விடலாம். ஆனால் திரும்பி வர முடியாது என்று கூறினார். ஏனென்றால் போதிய அளவு ஆக்சிஜன் இல்லை. என் கண்முன்னே கூட ஒரு பெண் இறந்து போனார். அவ்வளவு பனிமூட்டம். மூச்சு விடுவதற்கு மிக கடினமான ஒரு சூழ்நிலை. நான் சென்ற இடத்தில் சிறிது தூரத்தில் பார்த்தால் நூற்றுக்கணக்கான உடல்கள் இறந்த நிலையில் கிடந்தன. அதிலும் பல ஆண்டுகள் ஆன
அடுத்தவருக்கு கொடுத்துவிட்டேன்

நான் எல்லையை தொட்டு திரும்பும் நேரத்தில் என்னுடன் வந்த ஒரு காவல்துறை சேர்ந்த ஒருவர் ஆக்சிஜன் இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தார். என்னிடமும் ஆக்ஸிஜன் குறைவாகவே இருந்தது. என்னிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை வைத்து தான் நான் கீழே செல்ல வேண்டும். இருந்தாலும் தமிழ் மக்களுக்கு என்று ஒரு உதவும் மனநிலை இருக்கும். எனக்கு அவரைப் பார்த்தவுடன் மிகவும் வேதனை யாக இருந்தது. உடனடியாக என்னிடம் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரை நான் அவருக்கு கொடுத்து விட்டேன். அந்த நேரத்தில் நான் எந்தவித பலனையும் எதிர்பார்க்க வில்லை. அவருக்கு உதவிட வேண்டும் என்ற மனநிலை மட்டும் தான் என்னிடம் இருந்தது. எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுவிட்டு மீண்டும் முகாம் நான்கிற்கு திரும்பி விட்டேன். இதில் என்னுடன் வந்த நான்கு பேரின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. ஒருத்தருக்கு பனிக்காற்று சேராமல் கண் பார்வை தெரியாமல் போய்விட்டது. மற்றொருவருக்கு கை கால்கள் மரத்துப் போய்விட்டது, நான் ஆக்சிஜன் கொடுத்து உதவிய போலீஸ்காரர் சுயநினைவை இழந்துவிட்டார். இந்த நிலையில் என்னுடைய ஆக்சிஜன் சிலிண்டர் பத்து நிமிடத்தில் முடிந்து விட்டது.

நினைவிலாடிய “அம்மா திரும்பி வந்துவிடுவேன்” வாக்கியம்

மீண்டும் நாங்கள் கீழே செல்ல வேண்டுமென்றால் 10 மணி நேரம் ஆகும் ஏற்கனவே எங்களுக்கு 48 மணி நேரம் ஆகிவிட்டது. இந்த 48 மணி நேரத்தில் தண்ணீர், உணவு, ஓய்வு எதுவுமே இன்றி நடந்து கொண்டே தான் இருந்தோம். இது போன்ற கடின உழைப்பு இருந்தால் மட்டும் தான் நாம் வெற்றி பெற முடியும். நான் வெற்றி பெற்று விட்டேன். ஆனால் என்னால் பேச முடிய வில்லை. நம்முடைய நாட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் என்னுடைய மூளையில், என்னுடைய குழந்தைகளுக்கு அம்மா திரும்பி வந்து விடுவேன் என்று சொன்ன வாக்கியம் மட்டும் எனக்கு உறுதியாக நின்றது.

மீண்டும் நான் செல்ல வேண்டும் என்றால் எனக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுகிறது. அப்போது முகாமில் தேவைக்கென்று இரண்டு சிலிண்டர்கள் வைத்திருப்பார்கள் அதில் ஒன்றை எனக்கு வழங்கி னார்கள். அந்த சிலிண்டரின் மூலமாக தான் இரவு நான் தூங்கினேன். காலையில் எழுந்தவுடன் கீழே இறங்கு வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய சிலிண்டர் இன்னும் ஒரு மணி நேரம்தான் தாக்கு பிடிக்கும் என்ற சூழ்நிலையில் நான் கீழே இறங்க வேண்டும். கீழே இறங்குவதற்கு 10 மணி நேரம் ஆகும். அப்போது ஒரு பெரும் முயற்சியை நான் எடுத்துள்ளேன்.

வழிகாட்டியில்லாமல் தனியாக இறங்கினேன்

என்னுடன் வந்துள்ள வழிகாட்டி உதவி இல்லாமல் நான் கீழே இறங்க முடியாது. நான் கீழே இவர்களுடன் இறங்க வேண்டும் என்றால் எப்படியும் கூடாரங்களைப் பிரித்து எடுத்துக் கொண்டு போக வேண்டும். முகாம் நான்கு என்பது அவ்வளவு கடினமான இடம். ஆனால் என்னிடம் இருக்கும் சிலிண்டர் என்பது ஒரு மணி நேரம்தான் உள்ளது. முகாம் நான்கிலேயே நான் இருந்திருந்தால் கண்டிப்பாக உயிரிழந்திருப்பேன். என்னுடைய உடலைக் கூட கீழே எடுத்து வர முடியாது. முகாம் மூன்றிற்கு சென்று விட்டால் ஏதாவது உதவி கிடைக்கும் என்ற அடிப்படையில் நான் ஒரு முடிவு செய்து என்னுடைய பயிற்சியாளரிடம் நீங்கள் கூடாரத்தை காலி செய்து எடுத்துக் கொண்டு வாருங்கள். நான் கீழே செல்கிறேன் என்றேன். அவர் உங்களால் தனியாக செல்ல முடியாது என்றார். பரவாயில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஒரு தன்னம்பிக்கையில் கீழே இறங்கி விட்டேன்.

10 நிமிடம் அப்படியே அமர்ந்துவிட்டேன்

கீழே சிறிது தூரம் வந்து மேலே பார்த்தபோது எனக்கு பயம் வந்துவிட்டது. ஒரு பத்து நிமிடம் நான் அந்த இடத்திலேயே அமர்ந்து விட்டேன். பின்னர் ஒரு மணி நேரத்தில் என்னுடைய ஆக்சிஜன் சிலிண்டர் காலியாகிவிட்டது. எனக்கு இருந்த நம்பிக்கையில் இறைவன் ஒரு முறை நம்மைக் காப்பாற்றி விட்டார். மீண்டும் ஒருமுறை காப்பாற்றுவாரா என்று தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டே எவரெஸ்ட் சிகரத்தை பொருத்தவரை யாரும் யாருக்கும் உதவி செய்ய மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் உயிரே அவர்கள் கையில் இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் என்பது அவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். வேறு யாருக்கும் உதவிட முடியாது. அந்த அடிப்படையில் அவரவர்கள் உயிரை அவரவர்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே ஒரு மணி நேரம் ஆக்சிஜன் இல்லாமல் நான் இருந்திருக்கின்றேன். ஆனால் மற்றவர்கள் 30 நிமிடம் 15 நிமிடம் இருப்பதே மிகப்பெரிய கடினம். மீண்டும் நான் ஒரு மணி நேரம் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் இருந்தேன்

உதவிய மெக்சிகோ நாட்டு சிறுவன்

இறங்கும் வழியில் என்னைப் பார்த்த மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஒரு 19 வயது பையன் என்ன ஆனது என்று கேட்டான். அப்போது நான் என்னுடைய ஆக்சிஜன் சிலிண்டர் முடிந்துவிட்டது என்று சொன்னேன். (I Will Save You) நான் உங்களை பாதுகாக்கிறேன் என்று கூறினான். எப்படி என்னை பாதுகாப்பீர்கள் என்று கூறினேன் மீண்டும் அந்தப் பையன் Will Save You என்று கூறினார். அவருடன் வந்த பயிற்சியாளர் இல்லை. அப்படி செய்யக்கூடாது என்று கூறினார். ஏனென்றால் உங்களை நான் பாதுகாக்க வேண்டும். என்னுடைய நிறுவனத்திற்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் என்று அந்த பையனிடம் கூறினார். அந்தப் பையன் ஒரு உயிரை நாம் இழந்து விடக்கூடாது என்று நினைத்தான்.

பின்னர் அந்தப் பையன் எனக்கு ஆக்சிஜன் மாஸ்கினை கொடுத்தான். மூன்று முறை நான் சுவாசித்து அந்த இடத்திலிருந்து எழுந்து நின்றேன். முதல் நாள் இரவு ஒரு மணி நேரம் மறுநாள் பகல் ஒரு மணி நேரம் என்று இரண்டு மணி நேரம் ஆக்ஸிஜன் இல்லாமல் இருந்துள்ளேன்.

எடுத்துக்காட்டாக நம்மை ஒருவர் தலையணையை வைத்து மூச்சை அழுத்துகிறார் என்றால் நம்மால் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க முடியும்? அதிகபட்சம் ஒரு 15 நிமிடம், நம்மால் தாக்க பிடிக்க முடியும். ஆனால் அந்த சூழ்நிலை தான் எவரெஸ்ட் சிகரத்தில் இருக்கின்றது. அந்த இடத்தில் இரண்டு மணி நேரம் ஆக்ஸிஜன் இல்லாமல் இருந்திருக்கின்றேன். ஏனென்றால் நாம் கொடுத்த நம்பிக்கையை காத்திட வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் நான் இருந்தேன். அந்த மெக்சிகோ நாட்டு பையன் எனக்கு ஆக்சிஜன் மாஸ்கு கொடுத்தது பத்தவில்லை. பின்னர் அவன் சிலிண்டரையே கழட்டி கொடுத்து விட்டான்.

15 நிமிடத்தில் மயங்கிவிட்டான் அப்போது

நான் கூறினேன். இல்லை வேண்டாம் உங்களுடைய உயிரும் முக்கியம் எனவே நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்றேன். இல்லை இல்லை நீங்கள் மாட்டிக் கொள்ளுங்கள் என்று எனக்கு கொடுத்துவிட்டு 15 நிமிடத்தில் அந்தப் பையன் மயக்கமடைந்து விட்டான். நான் இரண்டு மணி நேரம் தாக்குப்பிடித்தேன். ஆனால் அந்தப் பையனால் 15 நிமிடம் தாக்குப் பிடிக்க முடிவில்லை. இதுதான் அங்கு உள்ள சூழ்நிலை. பின்னர் இரண்டு பேரும் ஆக்சிஜன் மாஸ்கினை பகிர்ந்து சுவாசித்துக் கொண்டே கீழே வந்து விட்டோம். எதற்காக நான் கூறுகிறேன் என்றால் நான் ஒரு இடத்தில் எதையும் எதிர்பாராமல் உதவி செய்தேன். அந்த உதவியின் பலன் எனக்கு இரட்டிப்பாகக் கிடைத்தது. ஏன் சொல்கிறேன் என்றால், எங்களுடைய குழுவில் வந்த 18 பேர் இறந்து விட்டார்கள். எந்த ஒரு சின்ன காயமும் கூட இல்லாமல் நான் பாதுகாப்புடன் கீழே வந்து விட்டேன், இப்படி என்னுடன் வந்த பலருக்கும் பல சிரமங்கள் ஏற்பட்டது. ஆனால் நான் மிகவும் பாதுகாப்பாக வந்தேன் என்றால், அதற்கு என்னு டைய தன்னம்பிக்கை தான் காரணம். எனவே எந்த ஒரு விஷயம் செய்தாலும் தன்னம்பிக்கையுடன் செய்யுங்கள். எல்லோருக்குமே ஒரு திறமை இருக்கும். அதற்கான முயற்சியை நீங்களும் செய்யுங்கள். நிச்சயமாக வெற்றி கிடைக்கும். முயற்சிகள் செய்யாமல் நாம் யாரையும் குறை சொல்லக்கூடாது. நாம் ஒரு விஷயத்தை சொல்கிறோம் என்றால் முதலில் கேட்க மாட்டார்கள். மறுபடியும் சொன்னால் கேட்க மாட்டார்கள். அதை திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். அவர்கள் யோசிக்க ஆரம்பிப்பார்கள். தொடரும் முயற்சியால்தான் வெற்றியை எட்ட முடியும் என்றார்.

பகிர்வுப் பதிவு

Saturday, June 25, 2022

சாதனைப் பெண்மணிக்கு வாழ்த்துக்கள்

 


நேற்று ஒரு தோழர் கீழே உள்ள புகைப்படத்தை மட்டும் அனுப்பி இருந்தார்.


யார் இவர் என்று கேட்டதற்கு இவர் பெயர் பிரதிக்சா டோண்ட்வாக்கர் என்றும் இந்த வருடம் ஸ்டேட் வங்கியில் உதவி பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்று சொன்னார்.

அதானிக்கு கடன் கொடுத்து இன்று அம்பானி கம்பெனியில் வேலை பார்க்கும் அருந்ததி பட்டாச்சார்யா ஸ்டேட் வங்கியின் சேர்மனாகவே இருந்திருக்கிறாரே, இவருக்கென்ன  சிறப்பு என்று வினவினேன்.

அப்போதுதான் இந்த தகவலை அனுப்பினார்.


ஏழாம் வகுப்பு படிப்போடு பகுதி நேர துப்புறவாளராக ஸ்டேட் வங்கியில் பணியில் சேர்ந்து கல்வித்தகுதியை வளர்த்துக் கொண்டு சார் பணியாளர், கிளார்க், அதிகாரி என்று தன் முயற்சியால் படிப்படியாக முன்னேறியது என்பது மிகப் பெரிய சாதனை.

சாதனைப் பெண்மணிக்கு வாழ்த்துக்கள். 

Thursday, April 25, 2019

வாழ்த்துக்கள் சித்ரா, பாராட்டுக்கள்




டோஹாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய தட களப் போட்டிகளில் 1500 ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற எளிய தொழிலாளர் வீட்டு வீராங்கனை சித்ராவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Monday, December 17, 2018

இந்தியாவின் பெருமிதம் . . .


ஒலிம்பிக்கில் இழந்தது,
உலகக் கோப்பையில் கிடைத்தது.

இந்தியாவின் பெருமிதம்,
உறுதியின் அடையாளம்,
முயற்சியின் சின்னம்

பி.வி.சிந்து

மேலும் மேலும்
வெற்றிகளைக் குவிக்க
வாழ்த்துக்கள் பல . . .

Saturday, April 7, 2018

எங்க ஊர் பையன் - இரண்டாவது தங்கம் . . .



ஆஸ்திரேலியாவின் கோல்டன் கோஸ்ட் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கான மூன்றாவது தங்கப் பதக்கம் பளு தூக்கும் போட்டிகளில் சதிஷ்குமார் சிவலிங்கத்தின் மூலமாக கிடைத்தது.

2014 ம் ஆண்டு க்ளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் பெற்றுள்ள இரண்டாவது தங்கம் இது.

எங்களின் வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் என்பதில் எல்லோருக்கும் பெருமை.

மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்ற சதீஷ்குமாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

எதிர்காலத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்று சாதனை படைக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.


Friday, August 19, 2016

இது போதும் பெண்ணே




நீ வென்றது வெள்ளியாய் இருக்கலாம்,
எங்களுக்கு அளித்தது தங்கமான தருணங்கள்.
இறுதி வரை நீ நடத்திய போராட்டத்தால்
எங்கள் உள்ளங்களை வென்றாய்.

தங்கம் இல்லாவிட்டால் என்ன?
தங்கம் வென்ற பெண்ணை
பல முறை தடுமாற வைத்தாயே!
இது போதும் பெண்ணே!

மானம் காத்த மங்கை நீ!
இந்திய வரலாற்றில் 
உனக்கான இடம் என்றும் நிரந்தரம்.

வாழ்த்துக்கள் சிந்து.

Sunday, January 10, 2016

ஆறு அதிரடி ஆறு




1968 ம் வருடம் கேரி சோபர்ஸ் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த வரலாற்றுச் சாதனையின் காணொளியை ஒரு தோழர் அனுப்பியிருந்தார். 

அந்த காணொளியை பாருங்கள்

 


கிரிக்கெட் வணிகமாகாத, சூதாட்டமாக மாறாத காலத்தில் நிகழ்ந்த சாதனை என்பதால் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

Sunday, March 29, 2015

வாழ்த்துக்கள் சாய்னா, இந்த இடம் நிலைக்கட்டும்



பேட்மிண்டன் விளையாட்டில் பெண்களுக்கான  உலகத் தர வரிசையில்  சாய்னா நேஹ்வால் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பாராட்டுக்கள் சாய்னா, மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சதுரங்கத்தில் விஸ்வநாதன் ஆனந்த், பில்லியர்ட்ஸ் விளையாட்டில் கீத் சேத்தி, மைக்கேல் பெரைரா, பங்கஜ் அத்வானி, கேரம் போர்டில் எண்ணற்ற வீரர்கள் என்று உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்றுள்ளனர்,

அந்த விளையாட்டுக்களை விட கூடுதல் உடலுழைப்பை கோருகிற பேட்மிண்டன் விளையாட்டில் முதலிடம் பெற்றுள்ளது ஒரு சிறப்பம்சம். 

இந்திய விளையாட்டு ரசிகர்களே, உலகக் கோப்பை தோல்விக்கான சோகத்தை ஒதுக்கி வைத்து விட்டு இந்த மகத்தான சாதனையை கொண்டாட வாருங்கள்.

மீண்டும் வாழ்த்துக்கள் சாய்னா, உங்கள் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் வாழ்த்துக்கள்

 

Wednesday, August 6, 2014

இவருக்கு நீங்களும் வாழ்த்து சொல்லுங்கள்

தற்போதைய காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற பதக்கங்களில் ஒரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தவர் இவர்.

பிறக்கும் போதே போலியோவால் பாதிக்கப்பட்டவர். ஆனால் அந்த குறைபாடு உடலில் இருந்ததே தவிர உள்ளத்தால் பாதிக்கப்படவில்லை.  மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில்  பவர் லிப்டிங்  பிரிவில் பதக்கம் பெற்ற இவர் இந்த முறை காமன்வெல்த் போட்டிகளில் மற்ற இயல்பான உடல் வலிமை உள்ளவர்களோடு போட்டி போட்டு வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

அந்த பெருமைக்குரிய வாகையாளர் ராஜீந்தர் ரஹூஜா
.


அவர் முகத்திலேயே தன்னம்பிக்கை தெரிகிறதல்லவா...

நீங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

Tuesday, July 29, 2014

வேலூர் வீரனுக்கு வாழ்த்துக்கள்



இங்கிலாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 77 கிலோ பளு தூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள சதீஷ் சிவலிங்கம் எங்கள் வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் என்பது மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது.

சத்துவாச்சாரி பகுதி பளு தூக்கும்  போட்டிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளில் வெற்றி வீரர்களை உருவாக்கியுள்ளது.

எளிய குடும்பத்தில் பிறந்தாலும் கடினமான உழைப்பால் வெற்றிகளை ஈட்ட முடியும் என்பதை நிரூபித்துள்ள சதீஷிற்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். 


Friday, September 13, 2013

மோடி வேண்டாம் என்றால் ராகுல் வேண்டும் என்றா அர்த்தம்? நோ நோ





பாஜக உள்கட்சி குடுமிபிடி சண்டை பற்றி நேற்று எழுதியிருந்த பதிவிற்கு வந்த சில பின்னூட்டங்களில், ஏதோ காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வர நான் விரும்புவது போல எழுதியிருந்தார்கள். அதனாலேயே விரிவான இந்த பதிவிற்கு அவசியம் ஏற்பட்டது.

2014 ல் நடைபெறப் போவது நாடாளுமன்றத் தேர்தல். எந்த கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறுகிறதோ அக்கட்சியின் நாடாளுமன்ற  உறுப்பினர்கள்தான் பிரதமர் யார் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க இது ஒன்றும் ஜனாதிபதி தேர்தல் இல்லை. ஆனாலும் மோடியா, ராகுலா என்ற விவாதத்திலேயே தேர்தலின் போது மக்கள் முன்பாக வைக்க வேண்டிய கொள்கைகளை மூடி மறைக்க பெரிய கட்சிகளும் சரி முதலாளித்துவ ஊடகங்களும் சரி முயல்கின்றன.

மக்கள் மீது தாக்குதல் நடத்துவதில், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அலட்சியம் செய்வது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வால் பிடிப்பது. பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு வெண் சாமரம் வீசுவது போன்ற எந்த விஷயத்திலும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக விற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. சில மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்ற இருவரும் கை கோர்த்து இருக்கிறார்கள். இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதிக்க பாஜக கொண்டு வந்த சட்டத்தை காங்கிரஸ் ஆதரித்தது. பென்சன் துறையில் அன்னியரை அனுமதிக்க இப்போது காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்திற்கு பாஜக ஆதரவளித்தது. ஊழல்களிலும் ஒருவருக்கு இன்னொருவர் சளைத்தவர்கள் இல்லை.  ஆக இரு கட்சிகளும் அவசியமில்லை, தேவையில்லை. இருவருமே நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்.

பிறகு யார் என்ற கேள்விக்கு

எங்களால் நெஞ்சுயர்த்தி, பெருமிதத்தோடு சொல்ல முடியும்.

தேசத்திற்கு தேவையான மாற்றத்தை இடதுசாரிகளால் மட்டுமே தர முடியும். மக்களுக்கு நல்லாட்சி அளிப்பதற்கான தகுதியும் அனுபவமும் இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகளுக்கு மட்டுமே உண்டு.

ஏராளமான உதாரணங்களை எங்களால் சொல்ல முடியும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச்சட்டத்தைப் பற்றி காங்கிரஸ் கட்சி பீற்றிக் கொள்கிறதே! அவர்களா மனமுவந்து கொண்டு வந்தார்கள்? இடதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சி நடந்த காலத்தில் அவர்கள் அளித்த அழுத்தத்தால் வந்தது அந்த சட்டம். தகவல் அறியும் சட்டமும் பேடண்ட் சட்டத்தின் திருத்தங்களும் இந்த தேசத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த கொடை.

நிர்வாகத்திலும் ஈடு இணையற்ற ஆட்சி அளித்தவர்கள் மார்க்சிஸ்டுகள் மட்டுமே. கேரளத்தில் தோழர்கள் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஈ.கே.நாயனார், வி.எஸ்.அச்சுதானந்தன், வங்கத்தில் தோழர்கள் ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, திரிபுராவில் தோழர்கள் நிருபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், மாணிக் சர்க்கார் – இத்தனை முதல்வர்களைக் கொண்டது மார்க்சிஸ்ட் கட்சி. இவர்கள் மீதோ, இவர்களின் அமைச்சர்கள் மீதோ இன்றுவரை யாராலும் சிறு துரும்பளவு ஊழல் புகாரைக் கூட சொல்ல முடியவில்லையே. கேரள மாநிலச் செயலாளர் தோழர் பினராயி விஜயன் மீதான புகார் கூட ஜோடிக்கப்பட்ட வழக்குதானே.

ஏழை விவசாயக் கூலித் தொழிலாளி வசம் நிலத்தைக் கொடுத்த பாரம்பரியம் வேறு எந்த கட்சிக்கு உண்டு?

உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உண்மையான அதிகாரங்களையும் நிதியையும் கொடுத்தது மார்க்சிஸ்ட் அரசுகள்தானே!

இருண்ட தமிழகம் என இன்று பேசிக்கொண்டிருக்கிறோம். வங்கமும் ஒரு காலத்தில் இருண்டுதான் போயிருந்தது. எங்களிடம் சட்டர்ஜி உண்டு, முகர்ஜி உண்டு, பானர்ஜி உண்டு, ஆனால் எனர்ஜிதான் கிடையாது என்று நகைச்சுவையே உண்டு. அந்த மாநிலத்தை இன்று மின் மிகை மாநிலமாக மாற்றியது யார்?

நூறு சதவிகித கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையை முதலில் பெற்ற மாநிலம் கேரளாதானே! இன்று அந்த சாதனையை திரிபுரா அரசு நிகழ்த்தியுள்ளதே!

மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் கலவரங்கள், மசூதியை இடித்ததால் கலவரங்கள், இந்திரா காந்தி இறந்ததால் கலவரங்கள் என்று இந்தியா முழுதும் கலவர பூமியாய் காட்சியளித்த காலத்திலும் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்தது வங்கம்தானே. கோவையிலும் சென்னையிலும் கூட தாக்கப்பட்ட சீக்கியர்கள், பாதுகாப்பாய் உணர்ந்தது தோழர் ஜோதிபாசுவின் ஆட்சியில்தானே!

இறந்த பின்பு அடக்கம் செய்யக் கூட எட்டடி நிலம் கூட தேவையில்லை என்று தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு எழுதி வைத்த தோழர் ஜோதி பாசு, தோழர் அனில் பிஸ்வாஸ் போன்ற தலைவர்கள் வாழ்வது மார்க்சிஸ்ட் கட்சியில்தானே!

சிங்கூர், நந்திகிராம் என்று சிலர் கதைக்கக் கூடும்.

தொழில் வளர்ச்சி வேண்டும் என்பதற்காக சிங்கூர் திட்டம் வந்தது. தொழிற்சாலைக்கு மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட் வணிகத்திற்காகவும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை காங்கிரஸ் கட்சியும் பாஜக வும் தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. அடிமாட்டு விலையை விட கேவலமான சொற்பத்தொகை மட்டுமே இழப்பீடாக அளிக்கப்படுகிறது. காடுகளை வழங்குவதிலும் கூட ஊழல் செய்துள்ளதாய் சமீபத்திய அறிக்கைகள் சொல்கிறது. நிலக்கரி சுரங்கத்திற்குள் கோப்புக்களை புதைத்து வைத்த பெருமை மன்மோகன் சிங்கிற்கு உண்டு.

ஆனால் சிங்கூரில் அளிக்கப்பட்டது வெறும் 990 ஏக்கர் நிலம் மட்டுமே.

அரசு மதிப்பல்ல, சந்தை மதிப்பு போல ஒன்றரை மடங்கு இழப்பீடு அளிக்கப்பட்டது.

குத்தகைதாரர்களுக்கும் இழப்பீடு அளிக்கப்பட்டது.

தகுதியான நில உரிமையாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டது.

நானோ தொழிற்சாலை ஊழியர்களுக்கான சீருடை தைக்கும் பணி, அவர்களுக்கான கேண்டீன் போன்றவைகளுக்கான பொறுப்பு அங்கே இருந்த பெண்கள் வசம் அளிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 90 சதவிகித நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்தை அளிக்க மனமுவந்து விருப்பக் கடிதம் அளித்தார்கள்.

சிங்கூரிலும் அதைத் தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் தொழிற்சாலைகள் வந்தால் மேற்கு வங்க இடது முன்னணி அரசை அசைக்க முடியாது என்ற அச்சம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் வந்தது. அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் மம்தா பானர்ஜி. மம்தாவிற்கு எடுபிடி வேலை பார்த்தது மாவோயிஸ்டுகள். நந்திகிராம் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த பின்னும் அவர்கள் அங்கே அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டனர். சிங்கூர் தொழிற்சாலை குஜராத்திற்கு போனது.

நெருப்பை விட தூய்மையானவர்கள்,
காந்தியை விட எளிமையானவர்கள்.
மக்களை எப்போதும் நேசிப்பவர்கள்

அறிவில் சிறந்த தலைவர்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே மக்களுக்கு நன்மை செய்ய முடியும். உலகில் எங்கெல்லாம் செங்கொடி பறக்கிறதோ, அங்கேயெல்லாம் மக்களுக்கு நன்மைகள் நடந்து கொண்டிருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சி பிரகடனத்தை பேராசான்கள் மார்க்ஸும் ஏங்கல்ஸும் வெளியிட்ட போது “ ஐரோப்பாவை கம்யூனிச பூதம் ஆட்டி வைக்கிறது “ என்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்றும் கம்யூனிசம் மீது சிலருக்கு அச்சம் இருக்கிறது. அப்படி அச்சப்படுபவர்கள் ஊரை அடித்து உலையில் போடும் மோசடி முதலாளிகளாக இருப்பார்கள். இல்லை எதுவுமே தெரியாத அப்பாவிகளாக இருப்பார்கள் 

சிவப்பைப் பார்த்து படியாத சில  மாடுகள் வேண்டுமானால்  அச்சப்படலாம். மனிதர்கள்  அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. 

Tuesday, April 9, 2013

படிக்கும் போதே மெய் சிலிர்த்துப்போனேன் - நல்லதும் இந்த நாட்டில் நடக்கும்






மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் 5வது கி.மீ தொலைவில் காரமடை, சிறுமுகை நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் உள்ள இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி  பற்றி திரு ஈரோடு கதிர் அவரது வலைப்பக்கம் 
www.maruthal.blogspot.in ல்  எழுதிய விரிவான கட்டுரை படித்து
மிகவும் மெய் சிலிர்த்துப் போனேன்.

உண்மையிலேயே மிகச் சிறந்த உதாரணம் இது. ஒரு சரித்திர சாதனையை
படைத்த தலைமை ஆசிரியர் ஃப்ராங்க்ளின், ஆசிரியை சரஸ்வதி
ஆகியோரை மனதார பாராட்டுகிறேன். உதவிகள் செய்து வரும்
கிராமத்துத் தலைவர் மற்றும் ஊர் மக்களுக்கும் கூட.

இந்த பள்ளியை ஊக்குவித்தது போல மற்ற பள்ளிகள் மீதும்
அரசும் ஆட்சித் தலைவரும்  கவனம் செலுத்தினால் ஒரு
இனிய உதயம் நிச்சயம் வரும்.

இந்த கட்டுரையின் இணைப்பை இங்கே  அளித்துள்ளேன்.

நீங்களும் அவசியம் படியுங்கள்.

ஒரு அற்புதத்தை பகிர்ந்து கொண்டதற்கு திரு ஈரோடு கதிர்
அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.