சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Friday, March 21, 2025
கலவரத்தை தூண்டும் காவி சினிமாக்கள்
Thursday, December 26, 2024
"விடுதலை" பார்க்க வச்சுடுவாங்க போலிருக்கே
வெற்றிமாறன் இயக்கமாக இருந்தும் பு.மா ஆஜான் ஜெமோவின் கதை வஜனம் என்பதால் விடுதலை முதல் பாகம் கூட பார்க்கவில்லை.
ஆனால் இப்போது சங்கிகள் இரண்டாம் பாகத்தை பார்க்க வைத்து விடுவார்கள் போல . . .
கீழே இருக்கிறது தகவல்
Thursday, November 28, 2024
சூர்யா - நீங்கள் வொர்த்தில்லை சங்கிகளே!
சூர்யாவும் ஜோதிகாவும் நேற்று திருப்பதி கோயிலுக்கு போய் விட்டார்களாம். எட்டு மணிக்கு பாடத்துவங்கும் வெள்ளியங்கிரி போல சங்கிகளும் ஆரம்பித்து விட்டார்கள்.
கங்குவா தோல்வியால் அடிபட்டதால் புத்தி வந்து சனாதனத்திடம் அடிபணிந்து விட்டார்கள் என்றும் கோயிலுக்கு செலவழிக்காதே என்று சொன்னதற்கு ஜோதிகா மன்னிப்பு கேட்காவிட்டால் கங்குவா போல எல்லா படங்களையும் தோல்வியடைய வைப்போம் என்று பீற்றல் பெருமித மிரட்டல் வேறு.
ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொல்லி அதை உண்மையாக முயலும் சங்கிகளின் உத்தி இது.
ஜோதிகா சொன்னது என்ன? அந்த காணொளியை நான் முழுமையாக பார்த்தேன்.
“தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்றிருந்தேன். அது மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டிருந்தது. மறுநாள் அதே தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு. மிகவும் மோசமான முறையில் புதர் மண்டிப் போய் பாம்புகள் உலாவும் இடமாக அது இருந்தது. கோயிலை பராமரிப்பதில் காண்பிக்கும் அதே அக்கறையை மருத்துவமனையை பராமரிப்பதிலும் காண்பிக்க வேண்டும்.”
இதில் என்ன தவறு உள்ளது?
கோயிலுக்கு போகாதே என்று சொன்னாரா அல்லது கோயிலுக்கு பணம் கொடுக்காதே என்று சொன்னாரா?
ஆனால் சங்கிகள் சொல்லாத ஒன்றை சொன்னதாக மீண்டும் மீண்டும் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். மோடியை நல்லவர், வல்லவர் என்று சொல்லும் கூட்டத்திடம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா என்ன? அவர்கள் சொல்வது பொய்,பொய்யைத் தவிர வேறில்லை.
நாங்கள் கோயிலுக்கு போக மாட்டோம் என்றோ அல்லது கடவுள் நம்பிக்கை கிடையாது என்றோ எப்போதுமே சொல்லாதவர்கள் கோயிலுக்கு சென்றதை ஏளனம் செய்வது வன்மம் இன்றி வேறில்லை.
நிற்க
கங்குவா சங்கிகளால்தான் தோற்றதா?
படம் வெளிவருவதற்கு முன்பு ஓவர் ஹைப்பை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்திருந்தார். வாயை பிளந்து பார்ப்பீர்கள் என்று சூர்யா சொன்னார். எனக்கு சிரிப்புதான் வந்தது.
ஏனென்றால் அஜித்தின் சில மொக்கைப் படங்களையும் ரஜினிகாந்தின் மோசமான மொக்கைப்படமான அண்ணாத்தை யும் இயக்கிய சிறுத்தை சிவா இப்படத்தின் இயக்குனர் என்பதுதான் காரணம்.
அஜித், ரஜினி போல சூர்யாவையும் வச்சு செய்திட்டார் சிவா.
கொடுத்த பில்ட் அப் போல படம் இல்லாததால் கங்குவா தோற்றது.
சரியில்லாத படம் என்பதால் மட்டுமே தோல்வியே தவிர சங்கிகள் காரணமல்ல, அதே போல பாமக வகையறாக்களும் காரணமில்லை. அப்படி அவர்களால் ஒரு படத்தை தோல்வியடையச் செய்ய முடியுமென்றால் வெற்றி பெறச் செய்யவும் முடியுமல்லவா? ஏன் சங்கி, பாமக கருத்தியலை கொண்டு வெளிவந்த மோகன்.ஜி யின் அனைத்து படங்களும் மரண அடி வாங்கியது?
ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய இடத்தில் சங்கிகளோ பாமகவோ இல்லை.
அந்த அளவுக்கு அவர்கள் வொர்த் இல்லை.
பிகு : எட்டு மணிக்கு வெள்ளைச்சாமிதானே பேசுவாரு, இதென்ன வெள்ளியங்கிரி என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். “வைதேகி காத்திருந்தாள்” வெள்ளைச்சாமி விஜயகாந்த் பாடலை மக்கள் ரசிப்பார்கள். ஆனால் “பூவே உனக்காக” வெள்ளியங்கிரி மீசை முருகேஷ் பாட வாய் திறந்தால் மக்கள் தெறித்து ஓடுவார்கள். அவர் பாடல் போலத்தான் சங்கிகளின் பதிவுகளையும் சகிக்க முடியாது.
Thursday, August 24, 2023
நர்கிஸ் விருதுக்கு மன்னிப்பு கிடையாது
Sunday, February 12, 2023
அந்த திரைப்படங்கள் போலவே . . .
ஹைதராபாத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற வெங்கட்பூர் எனும் கிராமம். ஜனவரி 9 ம் தேதி காலை வழக்கம் போல பணிக்கு வருகிற துப்புறவுத் தொழிலாளர்கள் ஒரு கார் எரிந்து போயும் அதில் ஒரு ஆண் கால்கள் தவிர கருகிய நிலையில் இருப்பதையும் பார்க்கிறார்.
தகவல் பறக்கிறது. ஊரார் வருகின்றனர். போலீசும் வருகிறது. எரிந்த காருக்குப் பக்கத்தில் ஒரு பையில் ஒருவரின் ஆதார் கார்ட், ரேஷன் கார்ட், ஊழியர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் நகல்கள்.
அவர் தெலுங்கானா தலைமைச்செயலகத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். ஆசிரியராக வேலை பார்த்தவருக்கு அரசு அதிகாரியாக வேலை கிடைக்கிறது.
அவருடைய கார்தான் என்று ஊரே சொல்கிது. இறந்த்து என் கணவர்தான் என்று மனைவி அடையாளம் காட்ட தகனமும் முடிந்தது.
ஆனாலும் போலீசுக்கு கொஞ்சம் நெருடல்.
Thursday, December 15, 2022
முதல் சீனை மறந்துட்டீங்க டைரக்டர்
நேற்று முன் தினம் மாலை கையில் காபி டம்ப்ளரோடு டி.வி முன் அமர்ந்திருந்த போது ஏதோ ஒரு தொலைக்காட்சியில் ரஜினிகாந்தின் எஜமான் திரைப்படம் துவங்கியிருந்தது. அபத்தமான கதையம்சம் கொண்ட படம் அது என்றாலும் காபி டம்ப்ளர் கையில் இருந்ததால் ரிமோட்டை தேடவில்லை.
இதற்கு
முந்தைய சீனை பாவம் இயக்குனர் மறந்து விட்டார். அந்த கிராமவாசியும் கூட.
ரஜினி நடந்த காலடியின் மீது நாம் நடக்கக்கூடாது என்ற சம்பிரதாயம் அப்போது அந்த மக்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லையா இல்லை அப்படி ஒரு சீன் முன்பு வைத்ததை டைரக்டர் மறந்து விட்டாரா என்று தான் தெரியவில்லை/
என்ன
ஆர்.வி.உதயகுமார் இயக்கிக் கொண்டிருந்த காலத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லை. அதனால்
அவர் தப்பித்தார்.
பிற்போக்குத்தனமான
நிலவுடமையாளர்களான ஜமீன்தார்கள், பண்ணையார்களை புனிதப்படுத்தும் வேலையைத்தான் அவரது
பெரும்பாலான திரைப்படங்கள் செய்து கொண்டிருந்தது என்பதால்தான் இந்த பதிவு எழுத வேண்டும்
என்றே தோன்றியது.
பிகு:
காலடி மண்ணை திருநூறாக பூசிக் கொள்வது கூட அவரது கற்பனை இல்லை. அக்னிசாட்சி படத்தின்
“கனா காணும் கண்கள் மெல்ல” பாடலில் வாலி எழுதிய
நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
உன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால் தான் உன் நிழல் விழுந்த
நிலத்தின் மண்ணைக் கூட
என் நெற்றியில் நீறு போல் திருநீறு போல்
இட்டுக் கொள்கிறேன்
என்ற வரிகளைத்தான் அவர் சீனாக்கி விட்டார்.
Wednesday, November 30, 2022
மாத்தியாவது சொல்லுங்கடா !!!
கோவா சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக்குழுவினர் மோடி விளம்பரம் செய்த “காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்தை கழுவி கழுவி ஊற்றியதற்கு சங்கிகள் தரப்பிலிருந்தும் மோடிக்கு ஆதரவாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதரும் எதிர்வினை ஆற்றியுள்ளார்கள்.
தேர்வுக்குழு தலைவர் இஸ்ரேல் நாட்டின் இயக்குனர் என்பதால் எல்லா எதிர்வினைகளும் “ஹிட்லர் காலத்தில் யூதர்கள் பட்ட இன்னல்களை வெளிப்படுத்திய ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் திரைப்படத்துக்கு இணையானதல்லவா காஷ்மீர் ஃபைல்ஸ்! இதைப் போய் விமர்சிக்கலாமா” என்ற ரீதியில்தான் அமைந்துள்ளது. தூதரும் அதைத்தான் சொல்கிறார்.
இதைக் கேள்விப்பட்டால் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தற்கொலை செய்வார் என்பது வேறு விஷயம்.
சங்கிகளுக்கும் சரி, தூதருக்கும் சரி, சுய புத்தியே கிடையாதா? பாஜக ஐ.டி விங் எழுதித் தருவதை அப்படியே ட்வீட்டுவார்களா? சின்ன மாற்றம் கூட செய்ய மாட்டார்களா! ஒரே ஸ்க்ரிப்டை எத்தனை முறை படிப்பது!
அனுபம் கேர் கொஞ்சம் பரவாயில்லை. கூடுதலாக, சித்தி வினாயகர் அவரை தண்டிப்பார் என்று சபித்துள்ளார். சித்தி வினாயகருக்கு வேறு வேலையே கிடையாதா! பண்டிட்டுகளை வெளியேற்ற முயற்சிகள் நடந்த போதே அதற்கு காரணமாக இருந்தவர்களை அப்போதே தண்டித்திருந்தால் “காஷ்மீர் ஃபைல்ஸ்” ப்டத்துக்கே அவசியம் வந்திருக்காதே. அப்பட இயக்குனர் 18 கோடியில் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்க முடியாதே!
பிகு : ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தை இயக்க ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஊதியமே பெறவில்லை என்றும் இந்த இயக்குனர் அக்னிஹோத்ரி 18 கோடி ரூபாயில் மும்பையில் அபார்ட்மெண்ட் வாங்கினார் என்ற தகவலை சொன்னது யார் தெரியுமா?
சுமந்து
. . .
Tuesday, November 22, 2022
கலகத் தலைவன் – பார்க்கலாம்
ஞாயிறன்று திரை அரங்கில்
பார்த்த படம்.
கார்ப்பரேட்டுகளின்
அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்த முனைவோர்களுக்கும் கார்ப்பரேட் ஏவி விடும் ஹைடெக் அடியாட்களுக்கும்
இடையிலான போராட்டமே திரைப்படம்.
கார்ப்பரேட் நிறுவனங்களின்
முறைகேடுகளை அம்பலப்படுத்தி பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த படம்தான்
முதல் முறையாக CRONY CAPITALISM என்றழைக்கப்படுகிற கார்ப்பரேட் – அரசு கூட்டுக் களவாணித்தனத்தை
அம்பலப்படுத்திய படமாக அமைகிறது. பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கும்
கார்ப்பரேட் நிறுவனம் அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, சங்கிலித் தொடராக எங்கேயெல்லாம்
பாதிப்பு வருகிறது என்பதை ஒரு கதாபாத்திரம் வாயிலாக தெளிவாக சொல்கிறது படம்.
எரிபொருள் பயன்பாட்டை
50 % குறைக்கும் லாரியை அறிமுகம் செய்யப் போவதாக வஜ்ரா எனும் நிறுவனம் அறிவிக்க, அதன்
பங்கு விலை கன்னாபின்னாவென்று உயர்கிறது. ஆனால் அது வெளிப்படுத்தும் மாசு அளவு , அனுமதிக்கப்பட்டதை
விட பல மடங்கு அதிகமாக உள்ளது என்பது தெரியவந்தாலும் அதனை மூடி மறைக்கப்பார்க்கிறது.
அந்த ரகசியம் வெளியாகி நிறுவனம் சிக்கலில் மூழ்கிறது.
ரகசியத்தை வெளியிட்டது
யார் என்று கண்டுபிடிக்க நிறுவனம் ஈவு இரக்கமற்ற தலைவன் கொண்ட ஒரு குழுவிடம் வேலையை
ஒப்படைக்கிறது. வில்லன் ஆரவ், ரகசியங்களை அம்பலப்படுத்தும் உதயநிதி ஸ்டாலினை திட்டமிட்ட,
துல்லியமான முறையில் கண்டுபிடிப்பதுதான் படம்.
உதயநிதி ஸ்டாலினின்
காதல் சொல்ல நினைக்கும் காட்சிகள (படு டீஸண்டான)
வேகமாக நகரும் படத்திற்கு ஸ்பீட் பிரேக்கர். வஜ்ராவின் ஒரு ரசாயன ஆலையால் பாதிக்கப்பட்டவர்கள்தான்
உதயநிதி ஸ்டாலின், கலையரசன் ஆகியோர் என்பது கடைசியில் சொல்லப்படுகிறது. அந்த ரசாயன
ஆலை தூத்துக்குடி ஸ்டெரிலைட்டை நினைவு படுத்தும் விதத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக விறுவிறுப்பாக
செல்லும் படம். மூடப்பட்ட ரசாயன ஆலையில் நடக்கும் க்ளைமேக்ஸ் சண்டையின் நீளத்தை வெட்டியிருக்க
வேண்டும். நாயகனோடு செல்வதைக் காட்டிலும் ஏழை மக்களுக்கு மருத்துவம் செய்யும் என் கனவுதான்
முக்கியம் என்று நாயகி முடிவெடுப்பது நல்ல காட்சி. ஆமாம், யார் அவர்?
அதென்ன கலையரசனை புக்
செய்யும் போதே உன் கேரக்டரை நடுவில் கொன்று விடுவோம் என்று சொல்லித்தான் புக் செய்வார்களோ!
வில்லன் ஆரவ் பட்
மிரட்டல். உதயநிதி ஸ்டாலின், நான் இதற்கு முன்பு பார்த்த அவரது “மனிதன்” படத்தை விட நடிப்பில் முன்னேறியுள்ளார்.
மகிழ் திருமேனியின்
இன்னுமொரு பரபரப்பான, புத்திசாலித்தனமான படம் “கலகத்தலைவன்”
தைரியமாக பார்க்கலாம்.
Saturday, July 9, 2022
PS-I, பயமா இருக்கு
Sunday, June 5, 2022
விக்ரம் - என் பார்வையில்
புதிய விக்ரம் இன்னும் பார்க்கவில்லை. இன்று 6.30 மணி காட்சிக்கு முன்பதிவு செய்துள்ளேன்.
புதிய விக்ரம் வந்துள்ள சூழலில் பழைய விக்ரமை ஆகா, ஒகோ என பலரும் புகழ்ந்து கொண்டுள்ளார்கள். நிஜமாகவே பழைய விக்ரம் சூப்பர் படமா?
நினைவுகளை ஓட விட்டு எழுதுகிறேன்.
குமுதத்தில் தொடராக வந்து ஆவலை உருவாக்கிய படம்.
அதற்கு சில வருடங்கள் முன்பாக அது போல குமுதத்தில் தொடராக வந்த படம் பாக்யராஜ் எழுதி இயக்கிய "மௌன கீதங்கள்" அந்த சமயம் திருக்காட்டுப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். திருக்காட்டுப்பள்ளி பெரிய அக்கா வீட்டிலிருந்து புதுக்கோட்டை இரண்டாவது அக்கா வீட்டுக்கு தஞ்சாவூர் வழியாக சென்று தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகிலிருந்த தியேட்டரில் வீட்டுக்குச் சொல்லாமல் கருப்பில் பார்த்த படம் அது. பிடிக்கவே பிடிக்காத வாத்தியாரும் அந்த காட்சிக்கு வர அவர் கண்ணில் படக்கூடாது என்பதற்காக எல்லோரும் வெளியேறும் வரை காத்திருந்து கடைசியாக வெளியே போனது நினைவுக்கு வந்தது.
விக்ரம் வந்த போது எல்.ஐ.சி பணியில் நெய்வேலியில் சேர்ந்திருந்தேன். அங்கே அப்போதிருந்த அமராவதி தியேட்டரில் எந்த ஒரு புது படமும் ஆறு மாதத்திற்குப் பிறகே வரும்.
விக்ரம் வெளியான சமயம் கும்பகோணத்தில் என் கடைசி அக்காவின் திருமணம் நடந்தது. மண்டபத்தை சுற்றி சுற்றி விக்ரம் பட போஸ்டர்கள்தான். ஆனால் திருமண வேலைகள் காரணமாக திரைப்படம் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.
ஆகவே அமராவதி தியேட்டரில் வரும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
மூன்றே மாதத்தில் வந்து விட்டது. அதுவே அப்படம் பெரிதாக ஓடவில்லை என்பதற்கான சான்று.
கடுமையான தண்டனை அறிவிக்கப்பட்டதைக் கூட காது கொடுத்து கேட்காமல் ஆடுபுலி ஆட்டம் விளையாடும் குற்றவாளிகள், அந்த குற்றவாளிகள் மூன்று மதங்களையும் சார்ந்தவர்களாக காண்பித்தது, அக்னிபுத்திரன் ஏவுகணையை சுகிர்தராஜா எனும் சத்யராஜ் கடத்துவது, அதை கண்டுபிடிக்க விக்ரமை கேட்பது, வில்லன் ஆட்கள் விக்ரமின் மனைவியைக் கொல்வது, உளவுத்துறை அலுவலகத்திலேயே வில்லனின் உளவாளி இருப்பது, அவன் மூலமாக வில்லன் யார் என்பதை அறிவது, பரபரப்பான சேஸிங் காட்சிக்குப் பின் சினிமா தியேட்டர் நியூஸ் ரீல் மூலமாக வில்லன் இருப்பது சலாமியா என்று கண்டறிவது வரை தீயாய், பரபரப்பாய் படம் செல்லும்.
அதன் பிறகு சலாமியாவுக்குப் போன பிறகு படம் படுத்து விடும். ஜனகராஜ் திருநங்கையாக செய்யும் காமெடிகள் எரிச்சலூட்டும். டிம்பிள் கபாடியை எவ்வளவு தூரம் கவர்ச்சியாக காண்பிக்க முடியுமோ, அந்த அளவு காண்பிப்பது, ஷோலே வில் நடுங்க வைத்த அம்ஜத்கானை காமெடியனாகக் காண்பித்த பரிதாபம் என்றெல்லாம் இரண்டாவது பாகம் மிகவுமே சோதித்து விடும்.
அதிலும் கிளைமேக்ஸ் கொடூரம். சத்யராஜ் செல்லும் விமானத்தின் மீது தாவி, அவர் கீழே குதிக்கையில் அவர் மீது பாய்ந்து அவரது பாராசூட்டைப் பறித்து அந்தரத்தில் பறந்த கதாநாயகியையும் சேர்த்துக் கொண்டு கீழே வருவதெல்லாம் மிகப் பெரிய காமெடி. அதிலும் பாவம் அப்போது கிராபிக்ஸ் தொழில் நுட்பம் வேறு சரியாக வராமல் ஒழுங்காக ஒட்டாமல் பிசிறு பிசிறாக இருக்கும். உதாரணம் கீழே உள்ளது.
இரண்டாவது பாதியில் கதையை விட கவர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்ததால் சொதப்பலாகிப் போன படம்தான் விக்ரம்.
இளையராஜாவின் இசை, சில வசனங்கள், சத்யராஜ், ராஜஸ்தான் அரண்மனைகளின் அழகு ஆகிய நல்ல அம்சங்கள் இரண்டாவது பகுதியின் சொதப்பலை தாங்க வைத்தது.
பார்ப்போம் புதிய விக்ரம் எப்படி இருக்கிறதென்று . . .
கைதி தந்த நம்பிக்கையில் செல்கிறேன்...
முடிந்தால் நாளை அது பற்றி எழுதுவேன்.
Saturday, December 4, 2021
மோகன்லால் படமும் முந்தைய நினைவும்
மோகன்லால் நடித்த "மரைக்காயர்" படம் வெளிவந்துள்ளது. அந்த படம் குறித்த விமர்சனங்களைப் படித்த போது
குஞ்ஞாலி மரைக்காயர் குறித்து ஒரு முறை கேரள பயணம் சென்று வந்த பின்பு எழுதியது நினைவுக்கு வந்தது.
அந்த பதிவை அப்படியே மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரே ஊர்ல இரண்டு வரலாறு !!!???
Sunday, October 17, 2021
“டாக்டர்” பார்க்கலாம்.
திரைப்படம் வெளியான முதல் நாளே, திரை அரங்கில் பார்த்த படம்.
ஆனாலும் எழுத இன்றுதான் அவகாசம் கிடைத்தது.
Thursday, October 14, 2021
அவர் வில்லன் மட்டுமல்ல
இரண்டு நாட்கள் முன்பு மறைந்த நடிகர் ஸ்ரீகாந்த், சக்தியான வில்லன் நடிகர்களில் ஒருவர்.
வில்லன் மொக்கையாக இருந்தால் நாயகர்களுக்கு அங்கே மதிப்பில்லை. நம்பியார், பி.எஸ்.வீரப்பா, அசோகன், ஆர்.எஸ். மனோகர் தலைமுறைக்குப் பிறகு வந்த வில்லன் நடிகர்களில் ரஜினிகாந்த் வரும் வரை கோலோச்சியவர் இவர்.
துல்லியமான தமிழ் உச்சரிப்பு உடையவர். பின் வரும் காணொளியில் நடிகர் திலகம் "Now let me talk like a police man" என்ற இடம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த இடம் வருவதற்கு முன்பு ஸ்ரீகாந்த் வெறுப்பேற்றாவிட்டால் நடிகர் திலகத்தின் மிடுக்கு அங்கே எடுபட்டிருக்காது.
அவர் வில்லன் மட்டுமல்ல. நகைச்சுவை வேடங்களில் கூட கலக்கியவர்.
எதிர் நீச்சல் கிட்டு மாமாவை மறக்க முடியுமா?
ஒரு பழைய தலைமுறை மறைந்து கொண்டே இருக்கிறது. இதுதான் இயற்கை என்றாலும் வருத்தம் வருவதும் இயற்கைதான்.
Sunday, August 8, 2021
திரைப்படத் தணிக்கை அல்ல முடக்க மசோதா
சார்பட்டா பரம்பரை திரைப்படம் பற்றிய
பதிவிலும் பின்னர் மணிரத்தினம் தொடர்பான பதிவிலும் திரைப்பட தணிக்கை சட்டங்களை திருத்த நடக்கும்
முயற்சி பற்றி குறிப்பிட்டிருந்தேன். அது பற்றிய விரிவான பதிவை பகிர்ந்து
கொண்டுள்ளேன்.
இரத்தம் தோய்ந்த சிந்தனை சிறகுகள்
*நாளொரு கேள்வி: 14.07.2021*
வரிசை எண் : *409*
இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *ஆர். தர்மலிங்கம்*
#########################
*இரத்தம் தோய்ந்த சிந்தனை சிறகுகள்*
கேள்வி
அண்மையில் மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள திரைப்பட தணிக்கை திருத்த வரைவு மசோதா கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளதே? மசோதாவின் நோக்கம்தான் என்ன?
*ஆர். தர்மலிங்கம்*
ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தால் திரைப்பட தணிக்கை திருத்த வரைவு மசோதா சமீபத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
திரைப்பட தணிக்கை வரைவு மசோதா கருத்துரிமைக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்டி திரைப்பட கலைஞர்கள், அரசியல் கட்சிகள், பல சனநாயக அமைப்புகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
சினிமா கனவுகளை காட்சிப்படுத்துகிற மிகப்பெரிய தொழிற்சாலையாகும்.
பிற கலைகளுக்கு இல்லாத வெளிச்சமும், புகழும் சினிமாவிற்கு இருக்கிறது. அதனால்தான் சினிமா *வெகுசன ஊடகம்* என அழைக்கப்படுகிறது.
கடந்தகால, நிகழ்கால
சமூக யதார்த்தங்கள், கலை, இலக்கியங்கள், அரசியலை, எதிர்கால எதிர்பார்ப்புகளை சினிமா எதிரொலித்து கொண்டிருக்கிறது.
இருபதாவது நூற்றாண்டின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சினிமா உடனடியாக இந்தியாவிற்குள் வந்து விட்டது.
முதல் பேசும் படமாக *"ஆலம் ஆரா"* 1931 ல் வெளிவந்தது.
இன்று சினிமா பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் மிகப்பெரிய வர்த்தகமாக, வருமானம் ஈட்டும் துறையாக, சமூகத்தில் செல்வாக்கு பெற்ற துறையாக உள்ளது. *2022 ல் சினிமா வர்த்தகம் ரூ.18300 கோடியாக இருக்கும்* என மதிப்பிடப்பட்டுள்ளது.
நவீன சமூகத்தில் பிரபலமாகவும், மக்களின் மீது செல்வாக்கு செலுத்தக் கூடியதாகவும் உள்ள திரைப்படத் துறை தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்டே வருகிறது. குறிப்பாக *கண்களுக்கு தெரியாத கரங்கள்* சினிமாவின் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தியே வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் முன்மொழியப்பட்டுள்ள வரைவு சட்டம் திரைப்பட கருத்துரிமையின் மீது தாக்குதல்களை தொடுத்துள்ளன.
*"கருத்து திருட்டை"* (Piracy) தடுத்திடும் பெயரால் முன்மொழிந்ததாக சொல்லப்படும் சட்டம், தணிக்கைக்குப் பிறகு கூட ஒரு திரைப்படத்தை *"மறு பரிசீலனைக்கு"* உட்படுத்தவும், புதிய சான்றிதழ் வழங்கவும், அபராதம் விதிக்கும் உரிமையையும் ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. புதிய சட்டம் திரைப்படத்தை தணிக்கை செய்வதோடு ஏற்கனவே உள்ள விதிகளை திருத்தவும்,திரைப்படம் மீதான ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டையும் அதிகரித்துள்ளது.
தனிமனித சுதந்திரத்தை கட்டுபடுத்துவது, அதிகாரத்தை மையப்படுத்தும் முயற்சி புதிய சட்ட திருத்தத்தில் உள்ளது. இந்திய அரசியலைமைப்பு சட்டப் பிரிவு 19(1)(a) உறுதியளித்துள்ள "பேச்சுரிமைக்கு" எதிராக வரைவு சட்டம் உள்ளது.
1952 ல் கொண்டுவரப்பட்ட திரைப்பட சட்டத்தின் மூலம் *"இந்திய மத்திய திரைப்பட தணிக்கை குழு"* (Central
Board of Film Censorship of India) உருவாக்கப்பட்டது. பின்னர் *"மத்திய திரைப்பட சான்றிதழ் குழு"*
(Central Board of Film Certification- CBFC) என பெயர் மாற்றப்பட்டது. இந்த குழு திரைப்படத்தை தணிக்கை செய்யும் தன்னாட்சி அதிகாரம் கொண்டது. குழுவிற்கு தலைவரும்,12 முதல் 25 பேர் வரை உறுப்பினர்கள் கொண்ட அமைப்பாக செயல் படுகிறது. குழுவின் தலைவரையும், உறுப்பினர்களையும் ஒன்றிய அரசே நியமிக்கிறது. தணிக்கை சான்றிதழ் மீதான மேல் முறையீட்டுக்கென தனியாக *"சான்றிதழ் மேல் தீர்ப்பாயம்"*
(FCAT - Film certificate Appellate Tribunal) என்ற அமைப்பும் இருந்தது. சமீபத்தில் இந்த தீர்ப்பாயம் கலைக்கப்பட்டு அதன் அதிகாரத்தை ஒன்றிய அரசே எடுத்துக்கொண்டது.
சட்டப்பிரிவு 16 ன் படி ஒன்றிய அரசு புதிய விதிகளை உருவாக்க, ஒழுங்குபடுத்த, நிபந்தனைகள் விதிக்க, காட்சிப்படுத்துவதை தடைசெய்ய அதிகாரம் பெறுகிறது. திரைப்படத்திற்கு வழங்கும் சான்றிதழ்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.
*"U"* அனைவரும் பார்ப்பது,
*"U/A"* பெற்றோர் அனுமதியோடு 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் பார்ப்பது,
*"A"* வயது வந்தோர் மட்டுமே,
*"S"* குறிப்பிட்டவர்கள் மட்டுமே பார்ப்பது.
தற்போது வரைவு மசோதாவில் *"U/A"* என்பதை மேலும் வயது வாரியாக பிரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
சட்டப் பிரிவு 5B ன் படி *"இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமை, தேச பாதுகாப்பு, அந்நிய நாடுகளுடன் நல்லுறவு, பொது ஆணை, கண்ணியம் அல்லது அறநெறி, அவதூறு அல்லது அவமதிப்பு, நீதிமன்ற அவமதிப்பு அல்லது குற்றம் செய்ய தூண்டுதல்"* போன்றவை குறித்து திரைப்படத்தின் கதையோ, கருத்துக்களோ, வசனங்களோ இருப்பின் சான்றிதழ் வழங்க மறுப்பதோடு இதில் ஏதாவது ஒன்று மீறப்பட்டாலும் திரைப்படத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்த ஒன்றிய அரசிற்கு அனைத்து அதிகாரமும் வழங்குகிறது. இது தனிமனித கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரான உச்சபட்ச தாக்குதலாகும்.
திரைப்பட சட்டத்தின் படி ஒரு திரைப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டால் அதில் அரசு தலையிடக் கூடாது என *"இந்திய அரசு எதிர் K.M.சங்கரப்பா"* வழக்கில் 2001 ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை மாற்றவே பிரிவு 5B சட்ட திருத்தம் மசோதாவில் கொண்டு வரப்பட்டுள்ளது. *திரைப்பட தணிக்கையில் அரசு தலையிடுவது, மறு தணிக்கைக்கு உட்படுத்துவது* போன்ற செயல்கள் அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமை மீதான தாக்குதலாகும்.
திரைப்படத்தை இயக்கும் போதோ, தயாரிக்கும் போதோ காட்சிகளும், கருத்துக்களும் வெட்டப்படும், மறு தணிக்கைக்கு உள்ளாகும் என்ற நிலை இருந்தால் ஒரு கலைஞனால் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட முடியுமா? இது தனிமனிதனின் சிந்தனையை முடமாக்கி விடாதா?
சட்டம் நிறைவேற்றப்பட்டால் திரைப்படத்தில் என்ன கருத்துக்கள் இடம் பெற வேண்டும் என அரசு விரும்புகிறதோ அதுதான் அனுமதிக்கப்படும். அரசின் கருத்துக்களையும், விருப்பத்தையும் மட்டுமே திரைப்படமாக எடுக்க முடியும். அரசின் விருப்பத்திற்கு எதிராக அல்லது அரசின் கொள்கையை கேள்வி கேட்கும், விமர்சிக்கும் கலைஞர்களின் திரைப்படமும், கருத்துக்களும் தடை செய்யப்படும். மக்களுக்கும் எந்த தெரிவும் இருக்காது. *அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமையின் மீதான நேரடி தாக்குதலாக திரைப்பட திருத்த வரைவு சட்டம் அமைந்துள்ளது.*
தனிமனித சிந்தனையை, எழுத்தை, கலையை கூட சகித்து கொள்ள முடியாத அரசை சனநாயக அரசு என்று சொல்ல முடியுமா???