Thursday, October 31, 2013

ராகுல் காந்திக்கு பேச சொல்லிக் கொடுங்கப்பா.....

காங்கிரஸ் கட்சியில் பேச்சாளர்களுக்கு வகுப்பு எடுத்தார்களாம்.
எனக்கென்னமோ ராகுல் காந்திக்குத்தான் முதலில் வகுப்பு
தேவைப்படுகின்றது என்று நினைக்கிறேன்.

எல்லா பேச்சும் ஒரே சொதப்பல்தான்.

முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களோடு பாகிஸ்தான்
உளவுத்துறை பேசிக் கொண்டிருக்கிறது என்று சொல்லி
வாங்கிக் கட்டிக் கொண்டார்.

எங்களிடம் ஆட்சியைக் கொடுத்தால் புந்தல்கண்ட் பகுதியை
மாற்றிக் காட்டுவோம் என்று நேற்று பேசியுள்ளார்.

இந்தியாவே உங்கள் ஆட்சியில்தானே உள்ளது. என்னத்தை
கிழித்தீர்கள் என்ற கேள்விக்கு பாவம் அவரால் பதில்
சொல்ல முடியவில்லை.

தம்பீ நீ ரொம்ப வீக்கா இருக்க!
உனக்கு அரசியல் எல்லாம் சரிப்பட்டு வராது.
அதனால குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தரேன்.
சாப்பிட்டு சமத்தா இரு
 

Wednesday, October 30, 2013

ரகசிய ஆசை


கால் மீது கால் போட்டு
சுழலும் நாற்காலியில்
ஒய்யாரமாய் அமர,

அருகே நிற்கும்
காரின் தூசியில்
கைவிரல் கொண்டு
ஓவியம் தீட்ட,

மீசையை மழித்து
கண்ணாடியில்
முகம் பார்க்க,

கண்ணாடிக் கூண்டு
பொம்மையின் ஆடையை
தானும் அணிந்து பார்க்க,    

வேகமாய் விரையும்
வண்டியை நிறுத்தி
அப்படி என்ன
தலை போகிற வேலை
என்று ஆர்வமாய் விசாரிக்க,

பிரம்மாண்ட மாளிகைகளை
பார்க்கப் பார்க்க
இவ்வளவு பணம்
எங்கிருந்து வந்ததென்று
கேள்விகள் கேட்க,

பொய்யாய் பேசி
போலியாய் பழகுவோரை
பக்கத்தில் அழைத்து
பளீரென்று அறைய,

இதையும் தாண்டி
இன்னமும் கூட
எல்லோருக்குள்ளும்
ஒளிந்திருக்கிறது
ஏராளமான ஆசைகள்
ரகசியமாக.

நரேந்திர மோடியும் ஒரு கல்லூரி மாணவனும்தன்னை ஒரு சூப்பர் மேனாக சித்தரிக்க தொடர்ந்து மோசடி விளம்பரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் நரவேட்டை மோடி இப்போது புதிதாக இறந்து போனவர்களைப் பற்றிய பொய்ப் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.

முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் இறந்த போது அவருக்கு பிரதமர் ஜவஹர்லால் நேரு இறுதி அஞ்சலி செலுத்தவில்லை என்பது மோடியின் குற்றச்சாட்டு. வல்லபாய் படேல் மீது இப்போது தனிப்பாசம் செலுத்த தொடங்கியுள்ளார் மோடி. கோடிக்கணக்கில் செலவு செய்து இரும்பில் சிலை வைப்பதால் அதன் மூலம் சில ஆயிரம் வோட்டுக்களை பெற முடியுமா என்று பார்க்கும் தேர்தல் உத்திதான் அது.

ஆனால் சர்தார் வல்லபாய் படேல் மீது  இவர்கள் பாசத்தில் உருக உருக, மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பின்பு தேசத்தின் ஒற்றுமையை குலைக்க சதி செய்யும் அமைப்பு என்று கூறி ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்தது படேல்தான் என்பதுதான் இயல்பாக நினைவிற்கு வருகிறது.

படேலை உயர்வாக சித்தரிக்கும்  வேளையில் அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூட ஜவஹர்லால் நேரு வரவில்லை என்று கூறுவதன் மூலம் அவரை இழிவுபடுத்த முயன்றிருக்கிறார்.

கெட்டிக்காரன் புளுகு எட்டே நாள்தான் என்பார்கள். ஆனால் இவரது புளுகோ ஒரே நாளில் அம்பலமாகி விட்டது. முன்னாள் இந்தியப் பிரதமர்  மொரார்ஜி தேசாய் எழுதிய சுயசரிதையில் படேல் அவர்கள் இறந்த போது அவரது இறுதி ஊர்வலத்தில் அன்றைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தும் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவும் கலந்து கொண்டார்கள் என்று எழுதியதை புனியா என்பவர் வெளியிட அண்ணன் மோடியின் அடுத்த பொய்யும் சந்தி சிரித்து விட்டது.

“ சந்திப்பு”  திரைப்படத்தைப் பற்றி இரு தினங்கள் முன்பு நான் எழுதும்போதே என் பையன் சண்டை போட்டான். இறந்து போன ஒரு மனிதரை விமர்சனம் செய்து எழுதுவது சரியில்லை என்பது அவனது வாதம். அது திரைப்பட விமர்சனமாக இருந்தாலும் அது நியாயமான விமர்சனமாக இருந்தாலும் அவசியமில்லை என்று அழுத்தமாக வாதிட்டான். அதன் பின்பு ஏற்கனவே எழுதிய தலைப்பை மாற்றி, வேறு சில வாசகங்களையும் மாற்றி பதிவிட்டேன்.

இறந்து போன ஒருவரைப் பற்றிய விமர்சனம் நியாயமாகவே இருந்தாலும் அதைச் சொல்வது சரியில்லை என்ற உணர்வு ஒரு கல்லூரி மாணவனுக்கு இருக்கிறது.

ஆனால் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிற ஒரு மனிதன் இறந்து போன முன்னாள் பிரதமர் பற்றி பொய் சொல்லுகிறார். தான் சொன்னது பொய் என்பது அம்பலமான பின்பும் கூட சொன்னதை திரும்பப் பெறவில்லை. அதற்காக வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

மன்மோகன்சிங் பேசாமல் கழுத்தறுக்கிறார்.
நரேந்திர மோடி பொய் பேசி கழுத்தறுக்கிறார்.

இந்த மனிதரை பிரதமராக்க, பொய் பேசாமல் வாழ்ந்து காட்டிய மகாத்மா காந்தியின் பெயரில் இயக்கம் நடத்திக் கொண்டிருப்பவர் தமிழை அருவியாக பொழியவுள்ளார். என்ன கொடுமை சார் இது?

Tuesday, October 29, 2013

15 ஆயிரம் குஜராத்தியர்களும் 15 சதவிகித தமிழர்களும்!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின்
பொதுச்செயலாளர் தோழர் சு. வெங்கடேசன் எழுதிய அற்புதமான
கட்டுரை இது.  மோடி பஜனை பாடுபவர்களுக்கு சவுக்கடிசு. வெங்கடேசன்


முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1991-ம் ஆண்டு முதல், கலை இலக்கிய இரவுகளை தமிழ கத்தில் நடத்தி வருகிறது. அன்று தொட்டு இன்றுவரை பல்லாயிரம் மக்கள் சங்கமிக்கும் மாபெரும் பண்பாட்டு நிகழ்வான கலைஇலக்கிய இரவில் அதிகம் பங்கெடுத்த ஆளுமைகளில் ஒருவர் தமிழருவி மணியன். அதற்குக் கார ணம், அவரது பேச்சின் மையச்சரடாக இருக்கும் மனிதநேயமும், மதவெறி எதிர்ப்பும்தான். ஆனால் இன்று, தமிழருவி மணியன் எடுத் துள்ள அரசியல் நிலைப்பாடு எம்மைப் போன்றவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நரேந்திர மோடியை அவர் அணுகும்விதமும், மோடியின் கடந்த காலம் குறித்து அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடும், மோடியின் மீது அவர் கொள்ளும் நம்பிக்கையும், நம்மைத் திகைப் பில் ஆழ்த்துகிறது.

 மோடியை, தமிழருவி மணியன் இரண்டாகப் பிரிக்கிறார். அவர் மட்டுமல்ல, மோடியை நம்பிக்கை நட்சத்திரமாகக் காட்டுபவர்கள் அனைவருமே அவரை இரண்டாகப் பிரித்துதான் பார்க்கின் றனர். நிர்வாகத்திறன் கொண்ட நம்பிக்கை நாயகன் மோடி என்பது ஒரு பக்கம். கோரப்படுகொலையை அரங்கேற்றிய வில்லன் மோடி இன்னொரு பக்கம். இந்த வில்லன் மோடியை நம்பி காங்கிரஸ் இருப்பதாக சொல்லும் தமிழருவி மணியன், நம்பிக்கை நாயகன் மோடியை நம்பி தான் களமிறங்கியுள்ளதைப் பல்வேறு வார்த்தைகளில் சொல்கிறார். இந்தியா, மோடியின் குஜராத் ஆக மாற வேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். குஜராத் மாதிரி என்பது சமூகத்தை இந்துத்துவா பாணியில் பிளவுபடுத்துவதையும், பெருவர்த்தக நிறுவனங்களுக்கு அளவற்ற சலுகைகளை அள்ளி வழங்குவதும்தான். ரிசர்வ் வங்கியின் கவர்னர் தலைமையிலான ஆய்வுக்குழு, இப்போது வெளியிட்டுள்ள அட்டவணையில் குஜராத் 12-வது இடத்தில் இருக்கிறது என்றால் குஜராத்தில் வளர்ச்சி என்று சொல்வது எல்லாம் பம்மாத்துதான் என்பது புரிய வேண்டியவர்களுக்குப் புரியும்.

'வகுப்புவாதத்தில் ஈடுபடாத நிலையில் மோடி பிரதமராவதை தயக்கமின்றி வரவேற்கலாம்’ என்பது இவர்களது நிலைப்பாடாக இருக்கிறது. இந்த வாக்கியம் எவ்வளவு அபாயகரமானதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். இது, எதிர்காலத்தில் நிகழவிருக்கும் வகுப்புவாதத்தை மட்டுமே மோடியோடு தொடர்பு படுத்துகிறது. குஜராத்தில் நடந்து முடிந்த வகுப்புக்கலவரத்தையும் மோடியையும் நயவஞ்சகத்தோடு பிரிக்கிறது. வகுப்புவாதத்தை திட்டமிட்டு செயல்படுத்திய இடத்திலிருந்து, அவரைக் கீழிறக்கி சாதாரண நிலையில் பத்தோடு பதினொன்றாக ஈடு பட்டதாக அவரைக் காட்டத் துணிகிறது. இந்தத் தப்பித்தல் வாதத்தைத்தான் ராஜ பக்ஷே இலங்கையில் செய்கிறார். 'வடகிழக்கு மாகாணத்தின் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே பேசலாம்’ பழைய கொலைகளைப் பற்றிப் பேசக்கூடாது என்று ராஜபக்ஷே சொல்வதை ஏற்போமானால் மோடி சொல்வதையும் அல்லவா ஏற்றுக் கொள்ள வேண்டும்? எவ்வளவு பெரிய ஆபத்தான அரசியல் நிலைப்பாடு இது!

மோடியை தனிமனிதராக, குஜராத் முதல்வராக மட்டும் தனித்துப் பிரித்து பார்க்க முடியாது. 1925 முதல் தொடங்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொடர்ச்சி.  வி.ஹெச்.பி., பஜ்ரங்தள் அமைப்பின் நீட்சி அவர்.  பட்டப்பகலில் பாபர் மசூதியை இடித்து விட்டு, அதைத் தனது கட்சியின் சாதனையாகச் சொன்ன பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளர். இந்த வகுப்புவாத அமைப்புகளின் வலைப்பின்னல்களையும், அரசியல் திட்டங்களையும், அகண்டபாரத நோக்கத்தையும் முழுமையாக மறைத்து மோடியைத் தனித்த மனிதனாக முன்னிறுத்துவதே அபத்தம். இன்று நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சிப் போக்குகளில் மோடிக்கும், அவரது கட்சிக்கும் இருக்கும் தொடர்பை அப்பட்டமாக இது மறைக்கப் பார்க்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வேலையை கவனிப்பதற்காக குஜராத்தில் நரேந்திர மோடியின் வலதுகரமாக விளங்கி வரும் அமித் ஷா அனுப்பி வைக்கப்பட்டார். அவர், இராமர் கோயில் கட்டுவதற்காக தற்காலிகமாக ஒதுக் கப்பட்ட இடத்திலிருந்து தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லத் தொடங்கினார். அடுத்த சில நாட்களில் முசாபர் நகர் பற்றி எரியத் தொடங்கியது. 32 பேர் கொல்லப்பட்டனர். வீடுவாசலை இழந்து எண்ணற்றோர் வெளியேறியுள்ளனர். உ.பி-யில் முசாபர் நகர், பீகாரில் நவாடா மற்றும் பெட்டியா, ஜம்மு காஷ்மீரில் கிஸ்வார் ஆகிய இடங்களில் வகுப்புக்கலவரங்களை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கட்டவிழ்த்து விட்டுள்ளதை ஊடகங்களில் பார்க்கிறோம். பெட்டியா மற்றும் நவாடா மாவட்டங்களில் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் 'நரேந்திர மோடி வாழ்க’ என்று கோஷமிட்டதாக ஊடகங்கள் தெரிவிக் கின்றன. தேர்தல் நெருங்கநெருங்க உமிழப்படும் வெறுப்பின் அரசியலுக்கு நம் சமூகம் கொடுக் கப்போகும் விலை எவ்வளவோ? அந்தப் பதற் றத்தின் பிரதிநிதியாகத்தான் மோடியைப் பார்க்க வேண்டும்.

1992-ல் பாபர் மசூதி இடிப்பு, 1999-ல் ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிப்பு, 2003-ல் குஜராத் பயங்கரம், 2008-ல் ஒரிஸ்ஸா படுகொலைகள்... இப்போது மீண்டும் உ.பி. பீகார், ஜம்முகாஷ்மீர்  என தொடர்கிறது துயரத்தின் பெருங்கதை. இவை எல்லாம் சமூகவிரோதிகள் செய்த கண்மூடித்தனமான அட்டூழியங்கள் அல்ல, ஒரு தத்துவத்தால் வழி நடத்தப்படும் கூட்டத்தினர் செய்துள்ள அழித்தொழிப்பு.

சாதாரண மக்களை ரத்தம் குடிப்பவர்களாக மாற்றும் மதவாத ரசவாதம் இது. சமூக உளவியலில் பாசிசம் உருவாக்கும் பயங்கரத்தன்மையின் விளைவு. ஒன்றின் மீதான வெறுப்பை திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை நம்பவைப்பது. அன்றாட வாழ்வு சார்ந்த பிரச்னையைத் தவிர்த்து, கலாசாரம் சார்ந்த பிரச்னையை தொடர்ந்து பேசுபொருளாக்குவது. மாயைகளின் மீதும், கற்பிதங்களின் மீதுமான உரிமையைக் கோரி குரோதத்தை விஷம்போல் ஏற்றுவது. இதன் விளைவாக இஸ்லாமிய பயங்கரவாதத்தை மேலெழுப்புவது. அது பெரும்பான்மை மத வாதத்துக்கு எண்ணிலடங்கா வாய்ப்புகளை திறந்துவிடுவது. ஒரு ஜனநாயக சமூகத்தின் நிகழ்ச்சிநிரலையே மனிதமாண்புகளுக்கு எதிரான செயல்களமாக மாற்றுவது.  இதுதான் இந்துத்துவாவின் செயல்பாடு. இதுதான் மோடியின் செயல்பாடு.

அண்ணல் காந்தியின் படுகொலை தொடங்கி இன்றைய முசாபர் நகர் படுகொலை வரை நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தையும் ஒற்றை வரியில் யாரால் கடந்து போக முடியும்?

உத்ரகாண்ட் பேரழிவைக்கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்த நேரத்தில், திடீரென்று ஒரு செய்தியை ஊடகங்கள் பிளிறித் தள்ளின. மழை வெள்ளத்தில் சிக்கிய 15 ஆயிரம் குஜராத்தியர்களை மோடி மீட்டுவிட்டார் என்று. இது எப்படி நடந்தது? பாதிக்கப்பட்ட பகுதிக்குள் மாநில அரசால் நுழைய முடியவில்லை. மத்திய அரசால் நுழைய முடியவில்லை, ஆனால், குஜராத் அரசு எப்படிப் போனது?   மத்தியப் பாதுகாப்புப் படை வீரர்களும், ராணுவ விமானமும் தரையிறங்க முடியாத பகுதிக்குள் மோடி அனுப்பி வைத்த ஆட்கள் மட்டும் எப்படி தரையிறங்கினர்? அதிலும் குஜராத்தியர்களை மட்டும் தனியாகக் கண்டறிந்து, 15 ஆயிரம் பேரை எப்படி மீட்டனர்?  வெள்ளம், கேதாரிநாத் சிவபெருமானை வாரிச்சுருட்டிக் கொண்டிருந்த போது கூட இவர்கள் மோடி புகழைப் பெருக்கும் குதர்க்க வழிகளைத்தான் யோசித்தனர். அத்தனை ஆயிரம் மக்கள் கதறிவடித்த கண்ணீரைக் கூட, அரசியலுக்கான விற்பனைச் சரக்காகத்தான் பார்த்தனர். இப்போது அடுத்த விற்பனை சரக்குத் தயார். மோடிக்கு ஆதர வாக தமிழகத்தில் 15 சதவிகித வாக்குகள் உருவாகி விட்டன என்பதுதான் அந்தச் சரக்கு.

எங்கிருந்து உருவானது இந்த 15 சதவிகிதம்? எந்தக் கணக்கெடுப்பில் இந்த முடிவு எட்டப்பட்டது? கணக்கெடுப்பை நடத்திய நிறுவனம் எது? என்று கேள்விகள் எழுப்பினால் பூனை தமிழருவியின் பைகளில் இருந்து தவ்விக்குதித்து வெளியே ஓடுகிறது. தமிழருவி அவர்களே, நீங்கள் யார் குரலில், யாருக்காகப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? மக்களின் வாழ்வை செழிப்புற வைத்திருக்கும் உயிர்சக்தி பண்பாட்டு வேற்றுமைகளுக்கு உண்டு. அதை ஒற்றைப் பண்பாடாக மாற்றத்துடிக்கும் இந்துத்துவாவாதிகளுக்காக நீங்களா குரல் கொடுப்பது?  இத்தனை ஆண்டுகால பொது வாழ்வின் மூலம், தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைக்கு நீங்கள் முன்வைத்த கருத்துக்களின் மீது, உங்களுக்கு இருக்கும் மரியாதை இவ்வளவுதானா?

''உயர்ந்த லட்சியங்களுக்கு குறுக்கு வழி கிடையாது. குறுக்கு வழியில் செல்லத் தீர்மானித்தவர்களுக்கு கூச்சநாச்சம் கிடையாது'. இது, ஒரு கூட்டத்தில் நீங்கள் பேசி நான் கேட்டதாக ஞாபகம்.


(கட்டுரையாளர்: பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்)

(ஜூனியர் விகடன் 3-11-2013 இதழில் வந்துள்ள கட்டுரை)

Monday, October 28, 2013

இதெல்லாம் உண்மையா ?இந்த பதிவும் “ காந்தி கணக்கு “ நூலில் நான் படித்த சர்ச்சைக்குரிய விஷயம்தான்.

முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், தன்னுடைய மாணவர் ஒருவருடைய ஆய்வுக் கட்டுரையை தன்னுடைய கட்டுரையாக சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றதாக ஓஷோ எழுதியதாய் இந்த நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

அப்படியா?

இதைப் பற்றி யாராவது கேள்விப் பட்டுள்ளீர்களா? அல்லது ஓஷோ எழுதியதை படித்துள்ளீர்களா?

இந்த நூலாசிரியர் மிகவும் போற்றும் வேதியன் பிள்ளை என்பவர் தான் நடத்தி வந்த பள்ளியில் நாற்பது மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி வந்தாராம். இதை வ.உ.சி காமராஜரிடம் சொன்னாராம். இதை அப்படியே மனதிற்குள் உள் வாங்கிக் கொண்ட காமராஜர் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சரான பின்பு மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தாராம்.

மதிய உணவு திட்டத்தை காமராஜர் எந்த சூழலில் கொண்டு வந்தார் என்று நான் படித்ததிற்கும் இந்த நூல் சொல்வதற்கும் பெருத்த முரண்பாடு உள்ளது.

விஷயம் தெரிந்தவர்கள் யாராவது  இருந்தால் சொல்லுங்களேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சோதனைக்காலம்
நேற்று சிறிது நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து ரிமோட்டில் சேனல்களை மாற்றி வருகையில் ஏதோ ஒரு சேனலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த சந்திப்பு திரைப்படம் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அது கொஞ்சம் நினைவுகளை கிளறி விட்டது.

கல்லூரி இரண்டாம் ஆண்டின் முதல் நாள் அது. விடுதி வாழ்வின் முதல் நாளும் கூட. ஏனென்றால் முதல் வருடம் என் அக்காவின் மாமனார் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்திருந்தேன். காலையில் நெய்வேலியிலிருந்து மதுரை திருவள்ளுவர் பஸ் நிலையத்தில் இறங்கி டீ சாப்பிடும்போதே தினத்தந்தி கடைசி பக்கம் முழுவதுமே சந்திப்பு திரைப்படத்தின் விளம்பரம்தான். பிரம்மாண்டமான செட்டிங்கின் வண்ணப்படம் ஆவலைத் தூண்டியது.

வகுப்பு முடிந்ததும் அவசரம் அவசரமாக சினிப்ரியா தியேட்டர் நோக்கி புறப்பட்டோம். அந்த ப்ரியா காம்ப்ளெக்ஸ் கோன் ஐஸ் நன்றாகவே இருக்கும். ஒவ்வொரு நாளுக்கு ஒரு சுவை. இன்று என்ன ஃப்ளேவர் ஐஸ்க்ரீம் என்று பார்த்தெல்லாம் அந்த தியேட்டருக்கு சினிமா பார்க்க போன காலம் அது. (இப்போதும் அந்த சுவை உள்ளதா என்பதை மதுரைக்காரர்கள்தான் சொல்ல வேண்டும்)

“ஆனந்தம் விளையாடும் வீடு, நான்கு அன்பில்கள் குடி கொண்ட கூடு” என்ற அருமையான பாடலோடு ஆரம்பம் என்னமோ நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகுதான் சோதனை தொடங்கியது. ஸ்ரீதேவி டிஸ்கோ ஆட, அதற்கு நட்சத்திர ஹோட்டல் சர்வரான சிவாஜி கணேசனும் டிஸ்கோ மூவ்மெண்ட் கொடுத்துக் கொண்டே சர்வ் செய்ய சிக்கிக் கொண்டோம் என்பது மட்டும் புரிந்தது. உத்தம புத்திரன் யாரடி மோகினி பாட்டுக்கான அவரது நடன அசைவுகளை இன்னும் ரசிக்க முடிகிறது. ஆனால் சந்திப்பு? அதிலும் க்ளைமேக்ஸில் சிவாஜி, பிரபு, சரத்பாபு, ஸ்ரீதேவி, ராதா, மனோரமா ஆடும் “ஷோலாபூர் ராஜா” பாட்டை முழுமையாக பார்க்க முடிந்ததென்றால் நீங்கள் நிச்சயம் பொறுமைசாலி, தைரியசாலி.

அந்த காலக்கட்டத்தில் இரு மேதைகள், தராசு, சிம்ம சொப்பனம் என்று சோதனை தந்த இன்னும் சில படங்கள் கூட உண்டு. மற்ற நண்பர்கள் ப்ரூஸ் லீ யின் பிக் பாஸ் படம் பார்க்க நானும் இன்னொரு நண்பனும் மட்டும் எதிரில் இருந்த லட்சுமி தியேட்டரில் தராசு படத்திற்கு போய் மாட்டிக் கொண்டோம். அது சிவாஜி கணேசனுக்கான சரியான பாத்திரங்களை தராத இயக்குனரின் தவறா இல்லை தவறான பாத்திரங்களை தேர்ந்தெடுத்த சிவாஜி அவர்களின் தவறா என்று பட்டிமன்றமே நடத்தலாம்.

ஆனாலும் அது சோதனைக் காலம்தான். அவருக்கும் ரசிகர்களுக்கும்.
(தோழர் சாய் ஜெயராமனும் இதை ஒப்புக் கொள்வார் என்று நம்புகிறேன்)

Sunday, October 27, 2013

நெருங்கி விட்டது தீபாவளி

அங்கங்கே கேட்கத்
துவங்கி விட்டது
வெடிச்சத்தங்கள்,

இரு கைகளிலும்
உற்சாகமாய்
வண்ண வண்ணப் பைகளில்
புத்தாடைகள்.

கையிருப்பு என்னவென்று,
கடன் பாக்கி என்னவென்று
மனக் கணக்கு போட்டு வரும்
குடும்பத் தலைவர்கள்/ தலைவிகள்.

முதலில் பார்த்த
சேலையே நன்றாக உள்ளதோ-
தீராத குழப்பத்தில்
சில பெண்மணிகள்.

திரைப்படத்தின் நேரத்தை
விளம்பரங்களால் நீட்டிக்க
தயாராகும் தொலைக்காட்சிகள்.

ஒன்றுக்கும் உதவாத
பரிசுப் பொருட்களோடு
சிறப்பு இதழ்கள்.

மரணத்திற்கு நாள் 
குறிக்கப்பட்டது அறியாமல்
இலையையும் தழையையும்
அசை போடும் ஆடுகள்.

நெருங்கி விட்டது 
தீபாவளி
 

மோடிக்கு அனுதாபத்தை உருவாக்காதீர்கள்


 


நரேந்திர மோடி கலந்து கொண்ட பாட்னா பொதுக்கூட்டத்தில்
இன்று வெடிகுண்டு வெடித்து ஐந்து பேர் இறந்திருக்கிறார்கள்.
இந்த வன்செயல் கண்டிக்கத் தக்கது.

இங்கே வெடிகுண்டு வைத்தவர்கள் யார் என்று தெரியவில்லை.

யாராக இருந்தாலும் அது தவறு.
நரேந்திர மோடி மீது  கோபமும் வெறுப்பும் இருந்தாலும்
அதை  வோட்டின் மூலமே கணக்கு தீர்க்க வேண்டுமே தவிர
வேட்டின் மூலம் அல்ல.

இந்திய வரலாற்றில் இதுவரை வைக்கப்பட்ட குண்டுகள்
குறி வைக்கப்பட்டவர்களுக்கு அரசியல் ஆதாயம் தேடித்
தந்துள்ளது என்பதுதான் யதார்த்தம். இறந்து போனவர்களின்
தவறுகள் எல்லாம் மறைந்து போய் அவர்கள் தியாகியாகி
உள்ளனர்.  தப்பித்தவர்கள் அனுதாப அலையால் உயர்வு
பெற்றுள்ளார்கள்.

நரேந்திர மோடியின் தவறுகளை, மோசடிகளை மக்கள்
மத்தியில் விரிவாக எடுத்துப் போய் அவரை அரசியல்
ரீதியாக தோற்கடிப்பது என்பதுதான் சரியான வழிமுறை.

மாறாக வெடிகுண்டுகள் அவருக்கு அனுதாபத்தை உருவாக்கி
அவருக்கு ஆதாயத்தைத்தான் ஏற்படுத்தும்.