Friday, September 30, 2011

விஜய் டி.வி யின் அநாகரீகம். - வாக்களித்த மக்களுக்கு அசிங்கம்



விஜய் டி.வி யின் சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டி முடிந்து
மக்களும் தங்கள் காசுகளை கொட்டி எஸ்.எம்.எஸ் அனுப்பி
வெற்றி பெற்றது யார் என்று  அறிவித்து எல்லா கொண்டாட்டமும்
முடிந்து விட்டது. 

இப்போது இசைத்துறை  நடுவர்கள் யார் யார் எவ்வளவு 
வாக்கு போட்டார்கள்  என்று  நிகழ்ச்சி நடத்தி  மீண்டும்
நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன தோற்றம் கிடைக்கிறது  என்றால் நடுவர்கள் 
தேர்வு  என்னவோ மூன்றாம் இடத்தைப் பிடித்த 
நபர் என்றும் இசை ஞானம் இல்லாத மக்கள்  வேறு
ஒருவருக்கு கூடுதல் வாக்கு போட்டு விட்டார்கள் 
என்பதுதான். 

ஒன்று நடுவர்கள் மட்டும் தேர்நதெடுத்திருக்கலாம்.
மக்கள் வாக்களித்த பின்பு நடுவர்கள் அதை 
குறைகூறுவது போல பேசுவது அநாகரீகம். 

வாக்களித்த மக்களையும் முதல் பரிசு 
பெற்றவரையும் அசிங்கப்படுத்தும்  செயல்.
விஜய் டி.வியின் அநாகரீகம் 
கண்டனத்திற்குரியது.
   

வாச்சாத்தி - மார்க்சிஸ்ட் கட்சிப் போராட்டத்திற்கு வெற்றி





வாச்சாத்தியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளில் 
  ஈடுபட்டவர்கள் , சாட்சிகளை மறைத்தவர்கள்  என 
215  பேருக்கு சிறைத்தண்டனை கிடைத்துள்ளது.
வீரப்பன் வேட்டை என்ற பெயரில் காவல்துறையும்
வனத்துறையும் நடத்திய அராஜகத்திற்கு  கடுமையான
தண்டனை கிடைத்துள்ளது. 


என்னத்தான் காலம் தாழ்த்தினாலும்  நியாயம்  ஒரு நாள்
நிச்சயம் கிடைக்கும்  என்பதற்கும்  உறுதியான 
போராட்டம் வெற்றியைத் தரும் என்பதற்கு 
வாச்சாத்தி ஒரு உதாரணம்.


தொடர்ந்து போராடிய மார்க்சிஸ்ட் கட்சி, அதன் 
தலைவர்கள் குறிப்பாக தோழர்கள் பெ.சண்முகம்,   
டெல்லி பாபு எம்.எல்.ஏ, வைகை, சம்கிராஜ் 
போன்ற வழக்கறிஞர்கள்  ஆகியோருக்கு 
வாழ்த்துக்கள்.


இந்தத் தருணத்தில் நன்றியோடு ஒருவரை
நினைத்துப் பார்க்க வேண்டும். வாச்சாத்தி
அராஜகத்தை வெளியில் கொண்டு வந்து
நீதிக்கான போராட்டத்தை துவக்கிய 
மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் 
மாநிலச்செயலாளர்
அமரர் தோழர் ஏ. நல்லசிவன்  .  

Sunday, September 25, 2011

சுதந்திர பாலஸ்தீனம் - காலத்தின் தேவை



காலம் காலமாக அமெரிக்காவின்  துணை கொண்டு  இஸ்ரேலின்
தாக்குதல்களை , அராஜகத்தை  சந்தித்து  வருகின்றனர்  பாலஸ்தீன
மக்கள். யாசர் அராபத் மறைவிற்குப் பின்  அவரது கட்சிக்கும்  ஹமாஸ் 
இயக்கத்திற்கும்  இடையேயான  மோதலில் குளிர் காய்ந்தது இஸ்ரேல். 


தீவிரவாத தற்கொலைப்படைத்  தாக்குதல்களை  தவிர்க்க என்று 
சொல்லி, பாலஸ்தீன பகுதிகளுக்குள்ளாக  சுவர்களையும் 
முள் வேலிகளையும்  எழுப்பி மக்களின் நடமாட்டத்தை  
தடுத்தது  இஸ்ரேல். 


விமானத்தாக்குதல்கள்  மூலமாக  வீடுகளை இடித்து தள்ளியது. 
எண்ணெய்  வளம் மிக்க  நாடுகளில் ஏதாவது நடந்தால் 
மனித உரிமை மீறல் என்று கூச்சலிட்டு அங்கே உள்ளே 
நுழையும்  அமெரிக்கா, இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு 
மட்டும் ஆதரவு  தருகின்றது. ஐ.நா வில் இஸ்ரேலுக்கு  எதிரான
தீர்மானங்கள் வராமல்  தனது வீட்டோ  அதிகாரத்தை 
பயன்படுத்துகின்றது. 


இத்தகைய சூழலில்தான் பாலஸ்தீன  அதிபர் முகமது அப்பாஸ்
பாலஸ்தீனத்தை  தனி நாடாக ஐ.நா அங்கீகரிக்க வேண்டும் என
ஐ.நா பொது சபைக் கூட்டத்தில்  அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.


தனது நியாயங்களை, அமைதியின் தேவையை  அவர் 
வலியுறித்திப் பேசிய அதே நேரம்   இஸ்ரேல் பிரதமர் 
நெதன்யாஹு  வின் உரை  அராஜகத்திற்கு  எடுத்துக்காட்டு.
இவர், ராஜபக்க்ஷே  ஆகியோரெல்லாம்  எப்போதும் 
ரத்தம் வழியும் வாயோடுதான்  அலைவார்கள் போலும். 


அதிசயக்கத்தக்க  வகையில்  அமெரிக்க எஜமானர்களின் 
விருப்பத்திற்கு மாறாக  இந்தியா  பாலஸ்தீன  கோரிக்கைக்கு 
ஆதரவாக பேசியுள்ளது. 


பாதுகாப்பு கவுன்சிலில்  அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை
பயன்படுத்தலாம். ஆனால் பாலஸ்தீன மக்களின் குரல் 
உலகெங்கும்  எதிரொலித்து விட்டது. அந்த விடுதலை 
முழக்கத்தை கட்டுப்படுத்துவது  இனி இஸ்ரேல் அமெரிக்க 
கூட்டணியால் முடியாத  ஒன்று.

Saturday, September 24, 2011

பாவம் சச்சின் டெண்டுல்கர்! ஒய்வு கொடுங்களேன்


 பூஸ்ட் விளம்பரத்தில்  உடற்பயிற்சி செய்யும் 
சிறுவனோடு போட்டி போட முடியாமல் 
மூச்சிறைக்கிறார்.


முட்டை சாப்பிடும் சிறுவனின் கை குலுக்கலை
தாங்க முடியாமல் வலியில்  கதறுகின்றார்.


பாவம்  சச்சின்!


நாட்டுக்காகவும் காசுக்காகவும் 
விளையாடி விளையாடி
கலைத்து விட்டார் போலும்!


பேசாமல் கிரிக்கெட் வாரியம் 
அவருக்கு ஒய்வு கொடுக்கலாமே? 

Friday, September 23, 2011

தந்தை பெரியாருக்கு பாரத ரத்னா, நோபல் பரிசு!



சேலம் பெரியார்  பலகலைக்கழக துணைவேந்தர்
திரு இளம்செழியன்  தந்தை பெரியார்  அவர்களுக்கு 
நோபல் பரிசு  தர வேண்டும்  என்று பேசியுள்ளார். 
இது மிகவும்  சரியான  கருத்துதான்.  வெறும் 
பேச்சுக்கே பாரக்  ஒபாமாவிற்கு  நோபல் பரிசு 
வழங்கியுள்ள போது  தந்தை பெரியார் ஆற்றிய 
பணிகளுக்கு  கண்டிப்பாக  நோபல் பரிசு தரலாம்.


உயிரோடு  உள்ளவர்களுக்கே  நோபல் பரிசு என்ற 
கொள்கை ஒன்று  இருப்பதால்  அதை வலியுறுத்துவதை
விட  அவருக்கு பாரத ரத்னா தரவேண்டும்  என்று 
வலியுறுத்தினால்  அது பொருத்தமாக  இருக்கும். 



11  பேருக்கு இறப்பிற்குப் பின்னே  பாரத் ரத்னா வழங்கப்
பட்டுள்ளது. அதிலும் அண்ணல்  அம்பேத்கார், ஜெயப்பிரகாஷ்
நாராயண், அபுல் கலாம் ஆசாத்  ஆகியோருக்கு  அவர்களின் 
இறப்பிற்கு  பல ஆண்டுகள் பின்பே அளிக்கப்பட்டது. 


ராஜீவ் காந்திக்கெல்லாம் பாரத ரத்னா தருகின்ற மத்திய
அரசு தந்தை பெரியாரின் பெயரை என் பரிசீலிக்கவில்லை?
அவரது வாரிசுகள்  இது  பற்றி குரல் கொடுக்குமா?


அதே போல் பாரத ரத்னா விருதுக்கு தகுதியான  இன்னொரு
தலைவர் தோழர் ஜோதி பாசு. 


இவர்களுக்கெல்லாம் விருது கொடுத்தால்தான் அந்த 
விருதுக்கு பெருமை. விருது வேண்டும் என்ற பெருமைக்கோ,
எதிர்பார்ப்போ இல்லாத தலைவர்கள் அவர்கள் என்ற போதும். 

Thursday, September 22, 2011

காவியும் நானே! கறுப்பும் நானே!!

நேற்று  வேலூரில்  வீரத்துறவி ராமகோபாலனுக்கு
பிறந்த நாள் விழா. இந்து முன்னணியும் பாஜகவும் 
இணைந்து நடத்தியது.

நாளை மறுநாள் வேலூர் தமிழ்சங்கத்தில்  
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா. 




ராம கோபாலன் விழாவிற்கு  சிறப்பு அழைப்பாளர்
வி.ஐ.டி வேந்தர் திரு ஜி.விஸ்வநாதன்.


தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவிற்கு
தலைமையே  அவர்தான். 




இதை போலித்தனம்  என்பதா?
முரண்பாடு என்பதா?
பிழைப்பு வாதமா?
புத்திசாலித்தனமான வணிகமா?

சிதம்பரமும் கூட்டுக் களவானிதான் - நிதியமைச்சகமே சொல்கிறது.



அலைக்கற்றை ஊழலில்  நடந்தது  எல்லாம் ப.சிதம்பரத்திற்கு 
தெரியும்  என  அ.ராசா கூறுவது உண்மை என நிரூபணம் ஆகி
உள்ளது. 
அலைக்கற்றைகளை  ஏலம் விட வேண்டும் என்பதில் ப.சி 
உறுதியாக  இருந்திருந்தால்  சரியாக இருந்திருக்கும். ஆனால்
அவர் அ.ராசாவோடு  இருந்து விட்டார். தொலை தொடர்புத்துறை
கூட  ஒதுக்கீடுகளை   ரத்து  செய்திருக்க முடியும். ஆனால்
செய்யவில்லை. 


மேலே சொன்னது நிதியமைச்சகத்திடமிருந்து  பிரதமருடைய 
அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட குறிப்பு. 
ஆம், இப்படி ஒரு குறிப்பு  அனுப்பப்பட்டது  உண்மைதான்  என 
இன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புக்கொண்டுள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு  உள்ளதால்  வாய் திறக்க மாட்டேன் என
அவர் ஒடி விட்டார்.


பிரதமர் அலுவலகத்திற்கு  அனுப்பப்பட்ட குறிப்பை மன்மோகன் 
பார்த்திருக்க மாட்டாரோ, அவர் அலுவலகத்து பெருச்சாளிகள்
தின்றிருக்குமோ! 
ஆக அலைக்கற்றை  வலையில் திமிங்கலங்களும் 
சிக்கப்போகின்றது.

Wednesday, September 21, 2011

அமெரிக்காவிடம் இந்திய அரசு பாடம் கற்க வேண்டும்



கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை அமைச்சர்
டக்லஸ் தேவானாந்தா மீது  எந்த நடவடிக்கையும் 
எடுக்க முடியாது. அமைச்சர் என்பதால் ராஜீய 
ரீதியில் ஆன  பாதுகாப்பு  (Diplomatic Immunity)
உள்ளது  என்று  உள்துறை அமைச்சகம்
கூறியுள்ளது.


இலங்கைத்  தமிழர்களுக்கு எதிரான ஆட்களுக்கு
ரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கும்  பசி
வகையறாக்கள், ராஜீய உறவுகளை எப்படி
மதிப்பது  என்று  அமெரிக்காவிடம் பாடம்
கற்க வேண்டும்.


ஏனென்றால்  அவர்கள்தான்  இந்தியாவின்
பாதுகாப்பு அமைச்சரை நிர்வாணப்படுத்தி 
சோதித்தவர்கள். உள்துறை அமைச்சர் 
அத்வானி மட்டுமல்ல  முன்னாள் 
ஜனாதிபதி  அப்துல் கலாமையே 
தடவிப் பார்த்து  சோதனை செய்தவர்கள்.


புடவை கட்டியதால் துணைத் தூதருக்கும்
இதே கதிதான். 


ராஜீய பாதுகாப்பு என்று சிதம்பரத்தின்
அமைச்சகம் மட்டும் கொலைகாரனுக்கு
ஆதரவாய் நிற்கிறது!


புடலங்காய் ராஜீய உறவு. . . .       
 

Tuesday, September 20, 2011

தந்தை பெரியாரும் நரேந்திர மோடியும் - யாரிடம் உள்ளது நாகரீகம்?



தந்தை பெரியார் மிகப்பெரிய கடவுள் மறுப்பாளர் என்பது
உலகம் அறிந்த உண்மை.  ஆனால்  அவரை  சந்தித்த  ஒரு
ஆன்மீகவாதி  அவருக்கு விபூதி  அளித்தபோது  அவர் 
அதனை மறுக்கவில்லை. ஏன்  எனக் கேட்டதற்கு  அந்த
மனிதரை புண்படுத்த விரும்பவில்லை  என்று தந்தை
பெரியார் கூறியதாக  படித்துள்ளேன். 


மத நல்லிணக்கத்தை  வலியுறுத்த என்று  சொல்லி மூன்று
நாட்கள்  உண்ணா விரத நாடகம்  நடத்திய நரேந்திர 
மோடியிடம்  ஒரு முஸ்லீம் பெரியவர் ஒரு தொப்பி 
அளிக்க அதனைப் பெற்றுக் கொள்ள  முரட்டுத்தனமாக
மறுத்து விட்டார். 


மத நல்லிணக்க உண்ணா விரதத்திலேயே  ரத்தம் 
கடைவாயில் ஒழுக, கோரப் பற்களுடன்  மோடி 
தனது மத வெறி முகத்தை காட்டி விட்டார்.


நாத்தீகவாதி பெரியாரின் நாகரீகம்  எங்கே?
பக்திமான் நரேந்திர மோடியின் வெறித்தனம் எங்கே?


உண்ணாவிரதத்திற்கு  ஆள் அனுப்பிய ஜெயலலிதா 
பதில் சொல்வாரா?


 

Monday, September 19, 2011

உண்ணாவிரதமா? புதுசா ஏதாவது பண்ணுங்கப்பா!



வர வர உண்ணாவிரதப் போராட்டங்கள்  அர்த்தமிழந்து
போய்க்கொண்டிருக்கிறது. 

அண்ணா ஹசாராவின்  உண்ணாவிரதங்கள் பிரதமரை
லோக் பால் மசோதாவில் சேர்க்கவில்லை. ஆனால் அது
வெற்றி என பேசப்படுகின்றது.   


பாபா ராம்தேவின் உண்ணா விரதம் அவரை சுடிதார்
அணியவைத்தது.


ஏர்கண்டிஷன் அறையில்  உத்தமர் வேடம் போட 
இப்போது  மோடி உண்ணா விரதம்.


அதற்கு போட்டியாய்  காங்கிரசார் உண்ணாவிரதம்.


இந்த பரபரப்பு உண்ணாவிரதங்கள் நியாயமான 
கோரிக்கைகளுக்காக  உண்ணாவிரதப் 
போராட்டம் மேற்கொள்ளும்  பலரை 
பல அமைப்புக்களை  கவனிப்பு  கிடைக்காத
வண்ணம் செய்து விடுகின்றது.  


அப்படி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என
அரசியல் பிரபலங்கள் ஆசைப்பட்டால் கலைஞர் 
போல காலை உணவுக்கும் மதிய உணவிற்கும்
இடைப்பட்ட நேரத்தில் ஏர்கூலர்கள் வசதியோடு
மூன்று மணி நேரத்தில் முடித்து விடுங்கள். 
 

Sunday, September 18, 2011

திருந்தாத ஜென்மம் ஜெயலலிதா,


சமச்சீர்  கல்வி  தொடங்கி 
சட்ட மன்ற வளாகம் வரை
தொடரும் ஜெயலலிதாவின்
தன்னிச்சையான போக்கு
இப்போது  உள்ளாட்சித்
தேர்தலிலும் தொடர்கின்றது.




படுகொலை செய்து விட்டு
யோக்கிய வேஷம் போடும்
நரேந்திர மோடிக்கு
ஆதரவு தெரிவிக்க
ஆட்களை  அனுப்பியதிலும்
தெரிகின்றது.



முன்பு தனது சொந்தக்
கட்சிக்காரர்களை
உதிர்ந்த ரோமம்  என்று
கூறினார்.



கூட்டணிக் கட்சிகளை
என்ன சொல்லப்
போகின்றாரோ?



நினைத்துப் பார்த்தால்
வேதனையாக உள்ளது.

Thursday, September 15, 2011

தீவிரவாதிகள் அழகாகவே இருப்பார்கள்

நேற்று  இரவு அன்பே சிவம் திரைப்படம் வீடியோவில் 
பார்த்தேன். திருட்டு வீடியோ அல்ல, கம்பெனி வெளியீடுதான்.
அதிலே கமல் மாதவ்னைப்  பார்த்து  தீவிரவாதிகள் 
பயங்கரமாக இருக்க மாட்டார்கள். அழகாகவே 
இருப்பார்கள் என்பார். என்னைப் போல என மாதவன்
முடிப்பார்.


அதைப்  பார்த்தபோது  நினைவுக்கு  வந்த ஒரு சம்பவம்
கீழே.    


1990 ல் கட்டாக் நகரில்  எங்கள்  சங்க அகில இந்திய 
மாநாடு. மாநாடு முடிந்து  கல்கத்தா  சென்று  வர 
திட்டமிட்டிருந்தோம்.  எந்த ஒரு புகை வண்டியிலும் 
முன் பதிவு கிடைக்கவில்லை. 


அதனால் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில்  காத்திருந்து
கல்கத்தா  செல்லும்  ஒரு புகைவண்டியில்  முன்பதிவு
செய்யாத ஒரு பெட்டியில்  ஏற முயற்சித்தோம். 
மூடியிருந்த  பெட்டியின்   கதவுகளை திறக்க 
தட்டி, தட்டி ஒரு வழியாக உள்ளே நுழைந்தோம்.


உள்ளே போனால் அதிர்ச்சி, காவல் துறையினரும்
ராணுவத்தினரும்  கையில் துப்பாக்கிகளோடு 
கடு கடு முகத்தோடு ஹிந்தியில்  திட்டிக் கொண்டே
உள்ளே  எங்களை அனுமதித்தார்கள்.


நடுவே  ஒரு இளைஞன்  25 வயது கூட  இருக்காது.
திரைப்பட நடிகர் அப்பாஸ் போல நல்ல வெள்ளை
நிறம், கண்களில் தீட்சண்யம், கதா நாயகன் 
போன்ற தோற்றம்.


என்ன அந்த இளைஞன் கையில் விலங்கு, கால்களில்
விலங்கு, இடுப்பில் இரும்புப் பட்டை கட்டி சங்கிலியை
ரயிலோடு இணைத்திருந்தார்கள். 


யார் எந்த இளைஞன் என்று ஆங்கிலம்  தெரிந்த ஒரு
ராணுவ வீரரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்
அதிர்ச்சி அளித்தது. 


உல்ஃபா  அமைப்பினைச் சேர்ந்த தீவிரவாதி 
அந்த இளைஞன் என்றும்  ஐந்து இடங்களில் 
வெடிகுண்டு வைத்தவன், நான்கு பேரை  
துப்பாக்கியால்  சுட்டுக் கொன்றவன்  என்றும்
விசாகப்பட்டினத்தில்  தலைமறைவாக  இருந்தவனை
மடக்கி கைது செய்து  கவுகாத்தி கூட்டிச் செல்கிறோம்
என்று  தெரிவித்தார். 


அந்த பால் வடியும் முகம் இன்னமும் நினைவில்
உள்ளது. 


ஆக தீவிரவாதிகள்  அழகாகவே  இருப்பார்கள்.  
     

Wednesday, September 14, 2011

சிறு மீன்கள் சிறையிலே, திமிங்கலங்கள் உல்லாசமாகவே




அவதியுறும்  அம்புகள்


அம்புகளுக்கு தண்டனை  தரும் 
அற்புத நாடு,
பாருக்குள்ளே நல்ல நாடு
தொடர்புகளைத் தொலைத்ததில்
காமன்வெல்த்  திருவிளையாடல்களில்
எண்ண முடியாத கோடிகள் .....
ஏழுமலையான்  மொட்டை 
கார்கில் குடும்பத்தினருக்கு .... ஆதர்ஷில் 


நம்பிக்கையைப் பெற 
நாணயம் தேவையில்லை
நோட்டுக்களே  போதும் என்ற
செய்வினை  ஜெயிலில்
செயப்பாட்டு வினை  நாற்காலியில் 


திக்கு  தெரிந்த  திகாரில் 
அம்புகளுக்கு  இலையுதிர்காலம்
வசந்த காலம்  என்றுமே 
எய்தவனுக்கா? 
  
கவிதை ஆக்கம் 
மதுரை பாரதி



  

Tuesday, September 13, 2011

என்ன தேசம் இது?




சென்ற வாரம் டெல்லி போயிருந்த போது
நடைபெற்ற ஒரு விவாதம் இங்கே.

தமிழ் நாடு எக்ஸ்பிரசில் சென்றிருந்தேன்.
டெல்லி  நெருங்கும் முன்பாக ஒக்லா 
ஸ்டேஷன் தொடங்கி நியு டெல்லி
 ஸ்டேஷன் வரை தண்டவாளத்தின்
ஓரம் எண்ணற்ற ஆண்கள்  காலைக்கடனுக்காக
அமர்ந்திருந்தார்கள்.


இது  புதிதான காட்சியல்ல. டெல்லி மட்டும்
அல்ல, தமிழகம் உட்பட இந்தியா முழுதும்
காணுகின்ற அவலமான காட்சிதான். டெல்லியில்
என்ன   மாற்றம் என்றால் சொம்பு, பிளாஸ்டிக்
குவளை என்பதிலிருந்து மினரல் வாட்டர் பாட்டில்
என்பது முன்னேற்றம்.


என் எதிரில் இருந்த பெரியவர் " என்ன 
இது   வெட்கமே இல்லாமல் இப்படி 
உட்கார்ந்துள்ளார்கள்  என முகம் 
சுளித்தார்.


அவரை சூடாகவே கேட்டேன்,"உங்களுக்கு
உள்ள வெட்கம் அவர்களுக்கு இருக்காதா,
வேறு வழியில்லாமல்தானே  இப்படி  
வருகின்றார்கள். பெண்களின் நிலைமை 
எப்படி மோசமாக இருக்கும் என்று
யோசியுங்கள் என"



அதன் பின்பு அவர் அமைதியாகி விட்டார். 



டெல்லிக்கு   ஒவ்வொரு முறை செல்கிற போதும் 
ஏராளமான மாற்றங்களை பார்க்க முடிகின்றது.
பிரம்மாண்டமான கட்டிடங்கள், அதி வேக சாலைகள்,
புதுப்புது மேம்பாலங்கள்  என எத்தனையோ
 மாற்றங்களை  பார்க்க  முடிகின்றது.


புது டெல்லி ரயில்வே ஸ்டேஷனில்  சாதா
கட்டண கழிப்பறையைத்தவிர டீலக்ஸ் 
டாய்லெட் என்று வேறு ஒன்று புதிதாய்
இருந்தது.  


 பள பளக்கின்ற  பகட்டான இந்தியாவில் ,
தேசத்தின் தலைநகரத்தில் சொகுசு கார்கள்
காற்றைக் கிழித்து வேகமாய் விரைய
வழி செய்து கொள்ளும் அரசுகள், 
ஏழை மக்களை கையில் பாட்டிலோடு
காலைக் கடன் கழிக்க ரயில் தண்டவாளத்திற்கும்
புதர்களுக்கும்  அனுப்புகின்றது.


கட்டிடங்கள் , அதி   வேக  ஆறு வழிச்சாலைகள்
நவீன மேம்பாலங்கள், கண் கவர் பூங்காக்கள் என
கட்டுவோம். ஆனால்  அதற்கு முன்பாக 
சாமானிய மக்களின் மானத்தை காப்பாற்ற
போதுமான கழிப்பறைகள் கட்டுவோம் .


ஊழல்களிலும், முறைகேடுகளிலும், ஆடம்பர
விழாக்களிலும்  விரயமாகும் நிதியின் ஒரு பகுதியை
மக்களின்  அத்தியாவசியத் தேவைக்கு அரசு 
செலவிட வேண்டும். 


இதுதான் முக்கியம்.

Monday, September 12, 2011

யானை, யானை, எங்கெங்கும் யானை











சென்ற வாரம்  டெல்லி போயிருந்தேன்.  டெல்லியின் 
எல்லையும் உத்திரப் பிரதேசப் பகுதியுமான 
நோய்டாவில் தங்கியிருந்தேன். 


அங்கே மாயாவதி கட்டி வரும் பிரம்மாண்ட 
பூங்காவை  வெளியிலிருந்து பார்க்க 
நேர்ந்தது.  


685  கோடி ரூபாய் மதிப்பில் அண்ணல் 
அம்பேத்கார் பெயரில் கட்டி வரும்
அப்பூங்காவில்  எங்கெங்கு நோக்கினும் 
யானை, யானை, யானை சிலைகள்தான்.


நுழைவாயிலில் யானை , ஸ்தூபிகளில்
யானை , நீரூற்றுக்களில்  யானை
என எங்கே பார்த்தாலும் யானைகள்தான் 
அம்பேத்கர் பெயரில் பூங்கா எனச்
சொல்லி அதிலே தனது தேர்தல் 
சின்னத்தை  பிரபலப்படுத்தும் 
சாமர்த்தியசாலி மாயாவதி. 

மக்கள் பணத்தில் இப்படியெல்லாம்
சுயநலமாக  நடக்கும் அரசியல்வாதிகளை
என்ன செய்யலாம்?  

Monday, September 5, 2011

இந்திய அமைதிப் ( அழிவு) படையின் அராஜகமும் தோல்வியும் - சிப்பாய்களின் பார்வையில்










அமைதிப்படையில் மொழி பெயர்ப்பாளராக  எங்களது 
தோழர் தர்மராஜ் சென்றது  பற்றி நேற்று  எழுதியிருந்தேன். 


அமைதிப்படையில்   சென்ற  இரண்டு ராணுவ வீரர்கள் 
தங்களின் ஓய்வுக்குப் பின்பு  எல்.ஐ.சி யில்  சார் பணியாளர்களாக
பனி நியமனம்  செய்யப்பட்டார்கள்.  அவர்களோடு  பல முறை
அவர்கள் அனுபவம் பற்றி  நீண்ட காலம் பேசியதன்  
தொகுப்பாக  பின் வரும் விஷயங்களை  எழுதுகின்றேன்.


பொதுவாக நாம் அறிந்த தகவல்களும் உண்டு, மக்கள் முன்
.மறைக்கப்பட்ட  தகவல்களும்   உண்டு.


தோழர்கள்  பகிர்ந்து கொண்ட தகவல்கள் இதோ


தமிழ் மக்கள் அமைதிப்படையை துவக்கத்தில் உற்சாகமாகவே
வரவேற்றார்கள். விடுதலைப் புலிகளும் கூட.


புலேந்திரன் , குமரப்பா ஆகிய போராளிகளின் மரணமும்
திலீபனின்  உண்ணா விரதமும் அமைதிப்படை மீது 
சந்தேகத்தை  உருவாக்கியது. 


வரதராஜப் பெருமாளை முதல்வராக்க காண்பித்த ஆர்வம்
புலிகளை துப்பாக்கி தூக்க வைத்தது. 
பிரபாகரனை  உயிருடனோ, பிணமாகவோ பிடிப்போம்
என ராணுவ அதிகாரிகள்  பேசியது புலிகளின் காதுகளுக்கு
சென்றது. ஆகவே அவர்கள்  உக்கிரமானார்கள். 


இந்திய அமைதிப்படையின் பல பிரிவினர்களுக்கு இடையே
ஒருங்கிணைப்பே  கிடையாது. 


கூட  சென்ற இலங்கை வீரர்களும் வரதராஜப்  பெருமாள் 
ஆட்களும்  பயந்தாங்கொள்ளிகள்.


அதிகமான  இந்திய  வீரர்கள் இறந்தது கண்ணி வெடியில்தான்
அதனை கண்டு பிடிக்கும் சரியான கருவிகள் நம்மிடம் 
கிடையாது. 


 இந்திய  வீரர்கள்  இறந்து போக இறந்து போக  உயர் அதிகாரிகள்
கோபமாகி என்ன வேண்டுமானால் செய்து கொள்ள அனுமதி
கிடைத்தார்கள்.


 விடுதலைப்  புலிகள் கிடைக்காத போது கண்ணில் கண்டவர்களை
எல்லாம் கொன்றார்கள். பெண்கள் என்றால்  பாலியல் கொடுமை.
தமிழ் ராணுவ  வீரர்கள்  ஒதுங்கிய போது  வட இந்திய
வீரர்கள்   அவர்களை  பெட்டை  என்று கேலி பேசினார்கள்.


கள அனுபவம் இல்லாதது, ஒருங்கிணைப்பின்மை,  
போதுமான ஆயுதங்கள் இன்மை, வழி காட்ட ஆட்கள் 
இல்லாதது, வட கிழக்கு பகுதிகளின் அடர்ந்த காடுகள்
 இவையெல்லாம்தான்  அமைதிப்படையின்  தோல்விக்கு
காரணம். 
தோல்வியின் விரக்தியில்  அப்பாவிகளை தாக்க 
அதற்காகவும்  புலிகளிடம்  வாங்கிக் கட்டிக் கொண்டனர்.


அம்புகள்  போட்ட ஆட்டமே எய்தவனின்  உயிரைப் 
பறித்தது. 








Sunday, September 4, 2011

இந்திய அழிவுப்படை - சில எதிர்பாராத தகவல்கள்



ராஜீவ் காந்தி கொலை நியாயமென்று  ஒரு சி.பி.ஐ அதிகாரி
தெரிவித்தது பற்றி நேற்று எழுதியிருந்தேன். இந்திய 
அமைதிப்படை  நிகழ்த்திய அராஜகங்கள் பற்றியது 
அப்பதிவு. அதன் தொடர்ச்சியாகவே  இப்பதிவு.


நாம் எல்லோரும் அப்பாவியாக  நினைத்துக் கொண்டிருப்பது
 என்ன? 


1983 வெலிக்கடை சிறை கலவரத்திற்கு பின்பு இலங்கையில் 
நெருக்கடி முற்றியது. அகதிகள் அதிகமாக இந்தியா வரத் 
தொடங்கினார்கள். 1987 ல் நிலைமை மிகவும் மோசமாக
போனது. யாழப்பாண  மக்கள்  உணவு கூட இல்லாமல் 
சிரமப்பட்டனர். தமிழகத்தில் இருந்து ராமேஸ்வரத்தில் 
இருந்து   படகுகளில்  உதவிப் பொருட்களை அனுப்ப 
ஏற்பாடு நடந்தது. அப்போது மத்திய அரசு தலையிட்டு 
ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்களை  
யாழ்ப்பணத்தில் போட்டு விட்டு வந்தது. எங்கள் 
நாட்டு எல்லைக்குள் எப்படி வரலாம் என இலங்கை 
அரசு  சீறியது.  கலைஞரோ  நக்கல் செய்தார். இதன்
தொடர்ச்சியாக மத்தியரசு ஆர்வம் காட்ட
ராஜீவ்  ஜெயவர்த்தனே  ஒப்பந்தம் உருவானது,
அமைதிப்படை  சென்றது. 


இப்படித்தான்  நாம்  நினைத்துக் கொண்டிருக்கிறோம். 
1983   கலவரத்திற்கு முன்பே இலங்கைக்கு  இந்தியப்
படையை அனுப்புவது  என்று  இந்திய  அரசு  
முடிவு செய்து விட்டது. 

 1992 ல்   நெய்வேலியில் இருந்து   குடியாத்தம் கிளைக்கு
பதவி உயர்வில் சென்றேன். அங்கே தர்மராஜ் என்ற 
தோழர், கப்பற்படையில் பணியாற்றியவர். அவரை 
 அறிமுகம் செய்து  வைத்தபோது  என்னை இதற்கு 
 முன்பாக பார்த்த நினைவு உள்ளதா என  கேட்க
 நான் பதில் சொல்லுமுன்னரே  தோழர்  வந்த 
உடனேயே உன் கதை வேணாம், பிறகு
பார்த்துக்கலாம் என்று   குடியாத்தம்  கிளைச் 
செயலாளர் அடுத்த தோழரது இருக்கைக்கு 
கூட்டி போய்விட்டார்.


 பிறகு  அவரோடு பேசுகின்ற போது  அவர்
சொன்ன தகவல் இதுதான். 1980 களின்  
துவக்கத்திலேயே  முப்படைகளிளிருந்தும்  
முப்பது பேரை தேர்ந்தெடுத்து  புது டெல்லி 
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் 
சிங்கள மொழி கற்றுக் கொள்ள வைத்திருக்கிறார்கள். 


சிங்கள  மொழி  கற்பது என்றால் ஓரிரு மாதங்கள்
அல்ல, மூன்று வருடங்கள் முழுமையாக அவர்கள்
 பயின்றுள்ளார்கள். 1985 ல்   அவர்களின் படிப்பு 
முடிந்து விட்டது. ஒரு  ஆபரேஷன் நிகழ்த்தப் 
போகின்றோம். அதிலே உங்களுக்கு பணி உள்ளது
என்று  சொல்லி அனுப்பி விட்டார்கள்.


ராஜீவ்  ஜெயவர்த்தனே  ஒப்பந்தத்தின் போது  
இருவருக்கும் இடையே மொழி பெயர்ப்பாளராக
தோழர்  தர்மராஜ்  செயல்பட்டுள்ளார். அக்காட்சி
தொலைகாட்சியில் பல முறை காண்பிக்கப்பட்டுள்ளது,
 என்னை  பார்த்தீர்களா என்பதுதான் அவர் 
ஒவ்வொருவரையும் கேட்கும் கேள்வி.


சிங்கள  மொழி  படித்த அனைவருமே 
அமைதிப்படையில்  இணைக்கப்பட்டு  சிங்கள
படை வீரர்களுக்கும் இந்திய  வீரர்களுக்கும்
இடையே   மொழ பெயர்ப்பாளர்களாக  பல
இடங்களில்  செயல்பட்டுள்ளனர்.


சிங்கள்  மொழியை கற்றுக் கொடுப்பது 
என்பதிலிருந்தே  இந்திய  அரசு  இலங்கை
பிரச்சினையில் நேரடியாக தலையிட 
முன்னரே திட்டமிட்டது என்பதை  புரிந்து
 கொள்ள  முடிகின்றது. ஆனால் அத்தலையீடு
தமிழர்களுக்கு சாதகமாக இல்லை என்பதுதான்
வருத்தமான உண்மை.


அமைதிப்படையின் அராஜகமும் தோல்வியும் 
பற்றி  நாளை

மன்மோகன் புத்திசாலி, மக்கள்தான் முட்டாள்கள்



பிரதமர் மன்மோகன்சிங்கின் சொத்துக் கணக்கு
வெளியிடப்பட்டுள்ளது. அவர் இரண்டு கோடியே
எழுபத்தாறு லட்ச ரூபாயை ஸ்டேட் வங்கியில் 
வைப்புதொகையாய்  வைத்துள்ளார்.


அரசு வங்கியில்  அவர்  தனது பணத்தை 
வைத்திருப்பது நல்ல விஷயம். பாராட்டுக்கள்
 மன்மோகன்சிங். அரசு  வங்கிகள்தான் பாதுகாப்பானது
என்பதை உணர்ந்ததால்தான்  உங்கள் பணம் 
  ஸ்டேட்  வங்கியில்  உள்ளது.


ஆனால்  வெளி நாட்டு வங்கிகள் வளர வேண்டும் 
என்று வங்கிச்சட்ட திருத்த மசோதா கொண்டு 
  வந்துள்ளீர்களே? உங்கள்  பணம்  பாதுகாப்பாக
 இருக்க வேண்டும், ஆனால்  மக்கள் பணத்தை
பறிகொடுத்து நடுத்தெருவில் நிற்க வேண்டும் !


 நல்ல  எண்ணமய்யா  உங்களுக்கு!


 நீங்கள் புத்திசாலி, உங்களுக்கு  வாக்களித்த
 மக்கள்தான்   முட்டாள்கள்.....

Saturday, September 3, 2011

ராஜீவ் கொலை நியாயமென்று சொன்ன சி.பி.ஐ இன்ஸ்பெக்டர்


 1992 ம்  வருடம் துவக்கம் அது. அப்போது naan நெய்வேலியில் 
பணி புரிந்து கொண்டிருந்தேன்.  மத்திய மின்சாரத்துறையின்
 ஒரு அதிகாரி  நெய்வேலியில்  உள்ள ஒரு  மத்தியரசு பயிற்சி
நிறுவனத்தில்  டெபுடேஷனில்  வந்திருந்தார். அவர் கைகள் 
மிக அதிகமாக நீள  காசு புரண்டது. கறுப்பாய்  வாங்கிய 
பணத்தை  வெள்ளையாக்க  அவரது மனைவி பெயரில் 
எல்.ஐ.சி   ஏஜென்சி  எடுத்தார். அவரது  ஊழல்கள் அம்பலமாக
 .சி.பி.ஐ   விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

  அவரது  மனைவி  எல்.ஐ.சி  ஏஜென்ட் என்பதால்  எங்கள் 
அலுவலகத்திற்கும்  அந்த ஏஜென்சி  தொடர்பான தகவல்கள்
 சேகரிக்க ஒரு  சிபிஐ  குழு  வந்தது. அதன் தலைமைப் 
 பொறுப்பில்  ஒரு  இன்ஸ்பெக்டர்.  அவர்  கேட்ட ஆவணங்கள்
எல்லாம் எடுத்துக் கொடுத்தோம். வேறு வழி?


இரண்டு சிகரெட்டுக்களும் சில டீக்களும்  அவரை 
நண்பராக்கியது. அவர்கள் பணி  முடிந்து கிளம்பும் முன்பாக
சாதாரணமாக  பேசிக் கொண்டிருந்தோம். நரசிம்மராவெல்லாம்
பிரதமராக அருகதை இல்லாத ஆள், நேரு குடும்பத்தைத் 
 தவிர வேறு  யாருக்கும்  இந்தியாவை  ஆள  தகுதியே 
 கிடையாது  என்றெல்லாம்  அவர்  சொல்லிக் கொண்டே
இருந்தார்.

  பேச்சு அப்படியே  ராஜீவ்  காந்தி கொலை  பக்கம் திரும்பியது.
    அப்போது   அவர்  சொன்னதை  அப்படியே   கீழே 
எழுதியுள்ளேன்.


" ராஜீவ்  கொலைக்குப் பின்  புலிகள் தங்கியிருந்த பல்வேறு
 வீடுகளில்  சோதனை செய்தோம். அப்போது   அமைதிப்படை
நடத்திய அட்டூழியங்கள்  குறித்த  புகைப்படங்கள்  அடங்கிய 
புத்தகங்கள் நிறைய கிடைத்தது. ஒவ்வொரு தொகுப்பிலும் 
பல புகைப்படங்கள். சிறுவர்களை, வயதானவர்களை கொலை
 செய்வது, பெண்களை பாலியல் கொடுமை செய்வது  என 
 பல  அராஜகங்களை  பதிவு செய்திருந்தார்கள். அமைதிப்படை
 அழிவுப்படையாகத்தான்  இருந்திருக்கிறது. அந்த 
புகைப்படங்களைப் பார்த்த போது  அமைதிப்படையை 
 அனுப்பிய  ராஜீவ்  காந்தியை கொலை  செய்தது 
நியாயம்  என்றே  எனக்கு தோன்றியது."
  

 நேரு  குடும்பத்தைத்   தவிர  வேறு  யாருக்கும் 
 இந்தியாவை   ஆள   தகுதி கிடையாது   என்று சொன்ன
   ஒரு  அதிகாரி   ராஜீவ்  காந்தி  கொலை  நியாயமானது
 என   சொன்னது  அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் 
மனசாட்சி இன்னமும்  அவருக்கு ஒட்டிக் கொண்டுள்ளது
என்பது மகிழ்ச்சியாகவும்  இருந்தது.

Thursday, September 1, 2011

ஆக்கிரமிப்பு விநாயகர்கள்



இன்று காலை ஒரு தோழரது புது மனை புகு விழாவிற்குப்
போய் வந்திருந்தேன்.  எனது வீட்டிலிருந்து பிரதான 
சாலை செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் 
பெரிதும் சிறிதுமாக  எட்டு விநாயகர் சிலைகள் 
வைத்திருந்தார்கள். அனைத்துமே சாலையை 
ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு  இடையூறாகத்தான்
வைத்துள்ளார்கள். 


 காலையில் நான் செல்லும்  போது  பக்தி பாடல்களை
ஒலித்துக்  கொண்டிருந்த ஒலி பெருக்கிகள் இப்போது
புரியாத முக்கல் முனகல்  குத்துப் பாட்டுக்களை 
ஒலி  பரப்பி பக்தி  வளர்க்கும் அரிய சேவையை 
துவங்கி விட்டன. 


1992 ம வருடம் நான்   வேலூர் வந்தேன். அந்த வருடம்
கூட  இந்த பிரம்மாண்ட சிலை வழிபாடுகள் இல்லை. 
 வேலூர்   வருவதற்கு  முன்பிருந்த நெய்வேலியில் 
 கூட  கிடையாது. 


உண்மையைச்சொல்லப்போனால்  பிள்ளையாருக்கு
 இவ்வளவு பெரிதாக  சிலை   வைத்துக் கொண்டாடுவார்கள்
என்பது நாயகன் திரைப்படம் வந்த போதுதான் தெரியும்.


பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பே  தமிழகம் முழுதும்
 இந்த  கலாசாரம்  திட்டமிட்டு  பரப்பப்பட்டது.  பக்தி
 என்பது   இவர்களுக்கு  இரண்டாம் பட்சம்தான். 
சிலையை வைத்து கலவரம் உருவாக்குவது  என்பதே
உண்மையான நோக்கம்.


 இன்று  நான்   கண்ட இன்னொரு காட்சி. பல இடங்களில்
 இந்து முன்னணி ஆட்கள் லாரிகளில் விநாயகர்   
 சிலையை  கொண்டு வந்து இறக்கி 
 " ஓம் காளி, ஜெய  காளி" கோஷம் போட்டார்கள்.


"பார்த்திபன் கனவு"  நாவலில் அமரர் கல்கி 
   நரபலிக் கூட்டத்தார் ஓம் காளி, ஜெய  காளி
என கோஷ்மிடுவதாய்  எழுதியிருப்பார். 
இவர்களைப் பார்க்கும் போதெல்லாம்  
அந்த  நரபலிக் கூட்டம் நினைவிற்கு 
 வருவதை  தவிர்க்க முடியவில்லை.   

 சிலையை  கரைக்கச்செல்வது  என்று 
நடக்கும் ஊர்வலக் கூத்து பற்றியே 
தனியாக  எழுத வேண்டும்.