Showing posts with label மகளிர் மசோதா. Show all posts
Showing posts with label மகளிர் மசோதா. Show all posts

Friday, March 8, 2024

மகளிர் ஒதுக்கீடு -வரும் ஆனா வராது.

 


ஒவ்வொரு ஆண்டும் சர்வ தேச மகளிர் தினத்தின் போது "மகளிர் மசோதாவை நிறைவேற்று" என்பதே முக்கியமான முழக்கமாக இருக்கும்.

இப்போது மசோதா சட்டமாகி விட்டது. ஆனால் அமலாகுமா?

"வரும், ஆனால் வராது" என்ற நிலையை உருவாக்கி விட்டது மோடி அரசு.

இவர்கள் எப்போது மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தி, எப்போது தொகுதி மறு சீரமைப்பை செய்து பின் எப்போது மகளிர் இட ஒதுக்கீட்டை அமலாக்குவது?

தானும் செய்யாமல் அடுத்தவரையும் செய்ய விடாமல் மகளிர் மசோதாவையும் ஜூம்லாவாக மாற்றிய மோடி அரசை வீழ்த்துவதே சர்வ தேச மகளிர் தினத்தன்று நாம் எடுக்க வேண்டிய உறுதி மொழி.

அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.

பிகு: காலையிலேயே பதிவிட்டிருக்க வேண்டும். இணைய இணைப்பு சிக்கல் செய்ததால் இப்போது. . .

Thursday, September 21, 2023

பயம். மகிழ்ச்சி, மோசடி

 


எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல டிமோவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது நன்றாகத் தெரிகிறது.

அதனால் மகளிர் மசோதா நிறைவேறியது மகிழ்ச்சி.

ஆனால் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகுதான் அமலாகும் என்பது வழக்கமான பாஜக மோசடி.

எனவே 2024 ல் இவர்களை துரத்தாவிட்டால் சட்டம் அமலாகுமா என்பது கேள்விக்குறியே!

Friday, July 28, 2023

ஏன் மந்திரி இதுக்கு மட்டும்?

 



மகளிர் மசோதா பற்றிய ஒரு கேள்விக்கு “ஒரு மித்த கருத்து இல்லாமல் மகளிர் மசோதாவை நிறைவேற்ற இயலாது என்று ஒன்றிய சட்ட அமைச்சர் பதில் சொல்லியுள்ளார்.



டிமோ ஆட்சி நடத்தூம் ஒன்பதாண்டு காலத்தில் இது வரை நிறைவேறிய அனைத்து மசோதாக்களும் முழுமையான கருத்தொற்றுமையோடு நிறைவேறியுள்ளது?

 

காலையில் மக்களவை, மதியம் மாநிலங்களவை, மாலை ஜனாதிபதி ஒப்புதல் என்றுதான் நடந்துள்ளது.

 

நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்குக் கூட அனுப்ப மறுத்த அரசு இந்த அரசு.

 

அப்படி இருக்கையில் இந்த மசோதாவிற்கு மட்டும் ஒருமித்த கருத்து வேண்டும் என்று சொல்வது ஏன்?

 

வெரி சிம்பிள்.

 

மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாது என்பதை அப்படி சொல்கிறார். அவ்வளவுதான்.

Wednesday, March 9, 2022

12 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் . . .

 



 இதே நாளில் 12 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஒரு தரமான சம்பவம் நடந்தது என்பது உங்களுக்கு நினைவிலிருக்கிறதா?

 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று எங்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்ட வாயிற்கூட்டம் நடத்தினோம்.

 மகளிர் தினத்துக்கான கோரிக்கைகள் என்று வருகிற போது மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாத ஒன்று.

 ஆமாம். எத்தனை பேருக்கு அந்த கோரிக்கை இன்னும் நினைவில் உள்ளது?

 இன்று தமிழ்நாட்டில் உள்ள 22 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகளின் மேயராக பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை படிக்கும் போதாவது நகர்ப்புற உள்ளாட்சிகளில் 50 % பிரதிநிதித்துவம் உள்ளது என்பதை அறியும் போதாவது அப்படி ஒரு விகித்தாச்சார பிரதிநிதித்துவம் நம் நாட்டின் நாடாளுமன்றத்திலும் மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் இல்லை என்பதும் நினைவுக்கு வர வேண்டும்.

 பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் உரிய பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது மகளிர் மசோதா. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மாநில சட்ட மன்றங்களிலும் பெண்களுக்கு  33 % பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் மகளிர் மசோதா முதன் முதலில் 1996 ல் தேவே கௌடா பிரதமராக இருக்கும் போது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நிறைவேறவில்லை.

 அதன் பிறகு வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கூட மக்களவையில் அறிமுகமானது. ஆனால் நிறைவேறவில்லை. அந்த மக்களவை முடிந்ததும் மசோதா காலாவதியாகி விட்டது.

 மன்மோகன் சிங் பிரதமராக இருக்கையில் 2008 ல் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இம்முறை மாநிலங்களவையில் அறிமுகமானது. ஒரு வழியாக 9 மார்ச் 2010 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 12 வருடங்கள் ஆன பின்பும் கூட இன்னும் மக்களவைக்கு வரவில்லை.

 ஒருமித்த கருத்து வேண்டும் என்று சொல்லியே அம்மசோதாவை மக்களவைக்கு மன்மோகன் சிங் கோண்டு வரவில்லை. ஒருமித்த கருத்து இல்லாத போதுதான் 123 மசோதா நிறைவேற்றப்பட்டது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

 லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோரின் ஆட்சேபணை காரணமாக சொல்லப் பட்டது. அரசியல் உறுதி இருந்திருந்தால் இவ்விரு கட்சிகளின் எதிர்ப்பை புறந்தள்ளி மசோதாவை நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால் அதற்கான மனம் இல்லை என்பதுதான் யதார்த்தம்.

 இம்மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற மனுவை வேலூர் மக்களவை உறுப்பினராக இருந்த பேராசியர் காதர் மொய்தீன் அவர்களிடம் அளித்த போது அவர்,“தங்கள் தொகுதி மகளிருக்கான தொகுதியாக மாற்றப்படுவதை பழம் தின்று கொட்டை போட்ட பெரும்பாலான வடக்கிந்திய அரசியல்வாதிகள் விரும்பவில்லை. அதனால் மசோதா மக்களவைக்கு வருவதற்கு அவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்” என்ற  உண்மையை வெளிப்படையாகச் சொன்னார்.

 மோடி ஆட்சிக்கு வந்த பின்பு மகளிர் மசோதா என்பதே மக்களுக்கு மறந்து போன ஒன்றாகி விட்டது. அதைப்பற்றி சம்பிரதாயத்திற்குக் கூட யாரும் பேசுவதில்லை.

 பெண்களின் கல்வியையே முடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், பெண்களின் வேலைகளை பறிக்க முயல்பவர்கள், பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்க அனுமதிப்பார்களா என்ன?

 கனவாக, கானல் நீராக நீடிக்கும் மகளிர் மசோதா இன்னும் இரண்டு வருடங்களும் மோடி ஆட்சி தொடர்கிறவரை அப்படித்தான் இருக்கும் என்பது துயரமான யதார்த்தம்.

 இந்த ஆட்சி மாறினால்தான் மகளிர் மசோதா குறித்த விவாதமும் மீண்டும் தொடங்கும்.

 

 

Monday, March 9, 2020

பத்து வருடங்கள் முடிந்த பின்னும்




எத்தனை பேருக்கு நினைவில் இருக்கும் என்று தெரியவில்லை. சரியாக பத்து வருடங்களுக்கு முன்பாக இதே நாளில்தான் மாநிலங்களவை மகளிர் மசோதாவை நிறைவேற்றியது.

அந்த தருணத்தில் அடுத்த சில நாட்களில் மக்களவையும் இம்மசோதாவை நிறைவேற்றி விடும். அடுத்து வரும் தேர்தலிலேயே நாடாளுமன்றத்திற்கும் சட்ட மன்றங்களுக்கும் 33 % பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்தது.

ஆனால் அந்த நம்பிக்கை கானல் நீராகி விட்டது. மாநிலங்களவையில் நிறைவேறிய மசோதா மக்களவைக்கு வரவேயில்லை. சந்திராயன் நிலவுக்குப் போனது, மாநிலங்களவைக்கும் மக்களவைக்கும் தூரம் அதை விட அதிகம் போல.

காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளுக்கு இம்மசோதாவை நிறைவேற்றும் விருப்பம் இல்லாத காரணத்தால் லாலுவும் முலாயமும் செய்த அமளிகளை காண்பித்து தாமதித்தார்கள்.

மோடி அரசில் இம்மசோதா பற்றிய பேச்சே கிடையாது. காங்கிரஸ் கட்சியும் இதை மறந்து விட்டது. மகளிர் மசோதா நிறைவேறியிருந்தால் தற்போதைய மக்களவையில் 174 பெண் எம்.பி க்கள் இருந்திருப்பார்கள். ஆனால் இப்போது இருப்பதோ வெறும் 78 பேர்தான். அமைச்சர்கள் எண்ணிக்கையும் அது போலதான். மோடியின் அமைச்சரவையில் மூன்று பெண்கள்தான் கேபினெட் அமைச்சர்கள்.

பெண்கள் வேலைக்கு போவதே ஒழுக்கக்கேடு என்று சொல்கிற காவிச் சித்தாந்தம் பெண்கள் அரசியல் அதிகாரம் பெறுவதை எப்படி ஏற்கும்?

ஆட்சி மாறாமல் மசோதா சாத்தியமில்லை என்பதுதான் கசப்பான யதார்த்தம்.

ஆனால் அதற்காக அதனை நாம் மறந்து விடக் கூடாது. தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

Thursday, March 9, 2017

ஞாபகம் வருதா? மறந்தே போச்சா?



மகளிர் மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு ஏழு வருடங்கள் கடந்து விட்டது. 2010 ம் வருடம் இதே நாள்தான் ஏராளமான தடைகளை தாண்டி மாநிலங்களவையில் நிறைவேறியது.

மகளிர் மசோதாவின் வரலாற்றைச் சற்றே திரும்பிப்பார்த்தால் அதன் வயது இன்று இருப்பத்தி ஒன்று வருடங்களாகிறது.

நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் மகளிருக்கு 33 % இட ஒதுக்கீட்டை உறுதி செய்கிற இம்மசோதாவை முதன் முதலில் கொண்டு வந்தது தேவே கௌடா அரசுதான். அவரால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.. பின்னர் வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு செய்யப்பட்டு காலாவாதியாகிக் கொண்டே இருந்தது.

நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் மகளிருக்கான   இட ஒதுக்கீட்டு மசோதா வருவதற்கு முன்பே உள்ளாட்சி அமைப்புக்களில் மகளிருக்கான 33 % இட ஒதுக்கீடு அறிமுகமாகி அமலாகிக் கொண்டிருக்கிறது. கணவனோ, தந்தையோ கட்டுப்படுத்தும் நிலை என்பது துவக்கத்தில் இருந்தாலும் இப்போது நிலைமை வெகுவாக முன்னேறியுள்ளது என்பதுதான் யதார்த்தம்.

இப்போது பல மாநிலங்களில் உள்ளாட்சிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு ஐம்பது சதவிகிதம் வந்து விட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பல பிற்போக்குத் தடைகளை உருவாக்கி மேல் தட்டு பெண்கள் மட்டுமே களத்திற்கு வருமாறு செய்துள்ளனர் என்பது இன்னொரு விஷயம்.

கிராமப்பஞ்சாயத்து கவுன்சிலர்களாக, நகராட்சித் தலைவர்களாக, மாநகராட்சி மேயர்களாக பெண்கள் வர இட ஒதுக்கீடு உள்ளது. அப்படி இருக்கையில் சட்டப்[பேரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதில் மட்டும் என்ன தடை?

காங்கிரஸ் கட்சியால் மாநிலங்களவையில் மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடிந்தது. ஆனால் மறு நாளே மக்களவையில் பம்மி பதுங்கி விட்டது. காங்கிரஸ் கட்சியின் லட்சணமே இப்படி என்றால் பாஜக வைப்பற்றி சொல்லவே வேண்டாம். பெண்களுக்கு எதிரான பிற்போக்கு கட்சியல்லவா அது?

பெண்களுக்கு என்று தொகுதிகள் வந்து விட்டால் நம்முடைய தொகுதி பறி போய் விடுமோ என்ற ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் உள்ள அச்சத்தின் வெளிப்பாடே மகளிர் மசோதாவின் மீதான எதிர்ப்பாக வெளிப்படுகிறது என்று வேலூர் எம்.பி யாக  இருந்த பேராசிரியர் காதர் மொய்தீன் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வருகிறது.

இடதுசாரிக் கட்சிகளையும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போன்ற மகளிர் அமைப்புக்கள், முற்போக்கு தொழிற்சங்கங்கள் தவிர வேறு யாருக்காவது மகளிர் மசோதா பற்றி இப்போது நினைவில் இருக்குமா என்பதே சந்தேகம்.

பெண்களுடைய பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. உலகமயத்தின் விளைவாக பணிப்பாதுகாப்பு என்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. பணிகள் வெட்டப்படும்போது முதலில் பாதிக்கப்படுவது பெண் தொழிலாளர்களாகவே இருக்கிறது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையே பெண் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் வெளிப்பாடுதான்.

பணிப்பாதுகாப்பு என்ற நிலையை விட வாழ்க்கைக்கான பாதுகாப்பே இன்று கேள்விக்குறியாக மாறியுள்ளது. அரியலூர் நந்தினி, மாங்காடு ஹாசினி, சென்னை ரித்திகா என்பது சமீபத்திய பட்டியல். பட்டியல் முடிவதில்லை என்பது சோகமான யதார்த்தம். நிர்பயா பிரச்சினையின் போது  பாலியல் கொடுமைகளை கட்டுப்படுத்த நீதியரசர் வர்மா குழு பல்வேறு முக்கியமான பரிந்துரைகளை அளித்தது. அவற்றை எல்லாம் அமலாக்குவது குறித்து மத்திய, மாநில ஆட்சியாளர்கள் கவலைப்படவே இல்லை என்பது மிகப் பெரிய துயரம்.

பாலியல் வன் கொடுமைகள் நிகழும்போது குற்றமிழைத்தவன் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றத்திற்குக் காரணமாக சித்தரிக்கும் வக்கிர சிந்தனையோடு பலர் அலைகிறார்கள். இதனை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் குற்ற ஆவண ஆணையம் ஒவ்வொரு வருடமும் வெளியிடும் புள்ளி விபரங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்காண்டு அதிகரிப்பதையே காண்பிக்கிறது. பெண்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் அதிகரித்தால்  இது குறித்து ஆக்கபூர்வமான விவாதம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பது பெண்களின் நம்பிக்கை அளவையும் அதிகரிக்கும். உற்சாகம் தரும்.

பிரதான அரசியல் கட்சிகளுக்கு அரசியல் உறுதி இருந்தால் மட்டுமே மகளிர் மசோதா நிறைவேறும். தொடர்ச்சியான போராட்டங்கள் மட்டுமே அதற்கு அழுத்தம் தரும். அந்த அழுத்தம் தரும் பணியில் எங்களின் மிகச் சிறிய பங்களிப்பாக, பெருங்கடலின் சிறு துளியாக,  எங்கள் மகளிர் துணைக்குழுவின் சார்பில் இன்று மாலை வேலூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக ஒரு தர்ணா போராட்டத்தை நடத்துகிறோம்.

எங்களோடு கை கோர்க்க, குரலெழுப்ப, நீங்களும் வாருங்களேன், போராட்டத்தில் இணையுங்களேன்,
  
பின் குறிப்பு : மகளிர் தினத்தன்று நடத்தாமல் ஏன் மறுநாள் நடத்துகிறீர்கள் என்று உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். காவல்துறை அனுமதி நேற்று கிடைக்கவில்லை. அதனால் இன்று.


Monday, March 7, 2016

ஒரு நாள் நாடகம் ஏன் சார்?




மகளிர் மீது தனக்கு அக்கறை உள்ளது என்று காண்பித்துக் கொள்ள நாளை சர்வதேச மகளிர் தினத்தன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெண்கள் மட்டுமே பேசும் விதத்தில் அவை நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று மோடி சொல்லியுள்ளார்.

இது வெறும் ஏமாற்று வேலை மட்டுமே.

உண்மையிலேயே அவருக்கு பெண்களின் உரிமைகள் மீது அக்கறை இருந்தால் மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்களவையில் நிறைவேறி பல காலம் ஆன மசோதா இது. மக்களவையில்தான் நிறைவேற்றப்பட வேண்டும். பாஜக கட்சிக்கு உள்ள உறுப்பினர் எண்ணிக்கைக்கு மகளிர் மசோதா நிறைவேறுவதில் எந்த சிரமமும் கிடையாது. 

காங்கிரஸ் கட்சியோ, இடதுசாரிகளோ இல்லை அதிமுகவோ இந்த மசோதாவை எதிர்க்கப் போவதில்லை. மாறாக ஆதரித்துத்தான் ஓட்டு போடுவார்கள்.  சர்வதேச மகளிர் தினத்தன்று மகளிர் மசோதாவை நிறைவேற்றுவேன் என்று சொன்னால் அதில் அர்த்தமிருக்கும். அதை விடுத்து அன்று மகளிர் மட்டும் பேசுவார்கள் என்று சொல்வது மோடியின் வழக்கமான மோசடி நாடகம் மட்டுமே. 

முப்பத்தி மூன்று சதவிகிதம் மகளிர் இருக்க வேண்டிய மக்களவையில் வெறும் பனிரெண்டு சதவிகிதம் மட்டுமே இருப்பதை மாற்ற முயற்சிக்காதவர்கள் மகளிரை மதிப்பதாகச் சொல்வது யாரை ஏமாற்றும் வேலை?

வெற்று ஆரவாரங்களையும் பொய் முழக்கங்களையும் மட்டுமே நம்பி குப்பை கொட்டும் அரசிடம்  எந்த விஷயத்திலும் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. 

அப்படி எதிர்பார்ப்பது மூடத்தனமும் கூட.
 

Monday, February 15, 2016

உங்கள் கையெழுத்து உதவி செய்யும்





பெண்களுக்கு ஆட்சியதிகாரத்தில் பங்களிப்பை உறுதி செய்யக் கூடிய மகளிர் மசோதா பல்லாண்டுகளாக கனவாக, கானல் நீராகவே காட்சியளிக்கிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு ஆறாண்டுகள் கடந்த பின்னும் இன்னும் மக்களவையில் நிறைவேறாத காரணத்தால் அமலாகவில்லை. எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் மாநிலங்களவையில் மகளிர் மசோதாவை ஆதரித்த கட்சிகள் மட்டுமே  ஆதரித்தால் கூட மக்களவையில் 95 % சதவிகித உறுப்பினர்கள் ஆதரவோடு மகளிர் மசோதா நிறைவேறும்.

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத மசோதாக்களை ஜனநாயக விரோதமாக அவசரச் சட்டங்கள் வாயிலாக அமலாக்குவதையே மரபாக மாற்றியுள்ள மோடி அரசு மகளிர் மசோதா என்பதை மறந்து விட்டது. பெண்களுக்கு எதிரான கண்ணோட்டம் கொண்டதுதான் பாஜக என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

ஜனநாயகம் உண்மையில் தழைத்தோங்க, பெண்களின் பங்கு அதிகரிப்பது மிகவும் முக்கியம். அதனால் மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிற அமைப்பான எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், இது குறித்து பிரதமருக்கு ஆன்லைன் கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளது. ஐந்து லட்சம் ஆன்லைன் கையெழுத்துக்களை திரட்டுவது என்ற இலக்கோடு நாடு முழுதும் இந்த இயக்கம் தொடங்கியுள்ளது.

இன்று மதியம் எங்கள் கோட்டத்தில் ஆன்லைன் கையெழுத்து இயக்கத்தை குடியாத்தம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஜி.லதா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) அவர்கள் துவக்கி வைத்தார்.

அந்த கையெழுத்து இயக்கத்திற்கான இணைப்பு கீழே உள்ளது. 


https://www.change.org/p/the-honourable-prime-minister-government-of-india-new-delhi-33-reservation-in-lok-sabha-and-state-legislative-bodies?recruiter=8214810&utm_source=share_petition&utm_medium


இந்த இணைப்பிற்குச் சென்று எங்களது இயக்கத்திற்கு ஆதரவு தாருங்கள்.
உங்கள் பெயர், மெயில் ஐ.டி, பின் கோட் ஆகியவற்றை மட்டும் அளித்தால் போதுமானது.

பெண்களின் உரிமைப் போராட்டம் வெற்றி பெற உங்களது கையெழுத்து நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.

Thursday, April 10, 2014

சென்ற முறை இழந்தது 120. இம்முறை ???

வங்கி சீர்திருத்த மசோதா, பென்ஷன்துறை சீர்திருத்த மசோதா உள்ளிட்ட ஏராளமான தேச விரோத மசோதாக்களை கரம் கோர்த்து நிறைவேற்றிக்கொண்ட காங்கிரசும் பாஜகவும் கள்ள மவுனம் சாதித்து மகளிர் மசோதாவை நிறைவேற்றாமலும் பார்த்துக் கொண்டது.

கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்.

எண்
வருடம்
மொத்த இடங்கள்
பெண்கள்
சதவிகிதம்
1
1952
489
0
0
2
1957
494
22
4.45
3
1962
494
31
6.27
4
1967
520
29
5.57
5
1971
518
21
4.05
6
1977
542
19
3.50
7
1980
529
28
5.29
8
1984
541
43
7.94
9
1989
529
29
5.48
10
1991
534
38
7.11
11
1996
543
40
7.36
12
1998
543
43
7.91
13
1999
543
49
9.02
14
2004
543
45
8.29
15
2009
543
59
10.86

மகளிர் மசோதா நிறைவேறியிருந்தால் கடந்த நாடாளுமன்றத்திலேயே 179 மகளிர் உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப் பட்டதோ 59 பேர்தான்.

120 பெண்கள் மக்களவை உறுப்பினராகும் வாய்ப்பு போன முறை பறிபோனது என்றால் இம்முறை எத்தனை பேர்தான் தேர்ந்தெடுக்கப் படுவார்களோ?

பெண்கள் மீது பரிவு இருப்பதாக வாய் ஜாலம் பேசும் காங்கிரஸ், பாஜக இருவரையும் தோற்கடியுங்கள்.

குறிப்பாக பெண்கள் இந்த இரு கட்சிகளுக்கும் வாக்களிக்கவே கூடாது.