Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

Saturday, April 19, 2025

தயிர்வடை எப்படிய்யா மாமிசமாகும்????

 


பைத்தியம் பிடித்த வெறியர்கள் அதிகமாகிக் கொண்டுள்ளனர். மாட்டுக் கறிக்கு எதிராக முதலில் பொங்கினார்கள். பிறகு அசைவ உணவே கூடாது என்றார்கள். இப்போது தயிர் வடையையே அசைவமாக்கி விட்டார்கள்.

இந்த காணொளியை பாருங்கள்.


சரி, தயிர் வடை எப்படி அசைவமாகும்? அப்படி சொன்னது எந்த சாஸ்திரம்? சூரியனுக்கு பல் இல்லாத காரணத்தால் பொங்கல் (தப்பு, தப்பு, அவங்க சொன்னது சங்கராந்தி) அன்று உளுந்து வடை நெய்வேத்தியம் படைத்ததாக நிர்மலா அம்மையார் ஒரு முறை ட்விட்டரில் பதிவு போட்டார். புனிதமான பஞ்ச கவ்யம் என்று சங்கிகள் சொல்வதில் கோமியத்தோடு, பால், நெய் ஆகியவற்றோடு தயிரும் சேர்க்கப்படுகிறதாம். 

சூரியனின் நெய்வேத்தியம் + பஞ்ச கவ்யம் மூலப் பொருள் காம்போ எப்படி அசைவமாகும்? கொஞ்சம் விளக்குய்யா பார்ப்போம் . . .

இந்த மாதிரி கிறுக்கனுங்களை தட்டி வைக்கலைன்னா நம்மை எதையுமே ருசியோட சாப்பிட விட மாட்டானுங்க . . .

Saturday, October 21, 2023

சங்கி விளம்பர ஏஜென்ஸி

 





பொட்டு வைக்காத பெண்களின் புகைப்படத்தை விளம்பரத்தில் வெளியிட்டதால் கஜானா ஜ்வெல்லரிக்கும் நல்லி சில்க்ஸுக்கும் எதிராக ட்வீட்டி அவர்களின் விளம்பர தூதராகினார் சங்கி எஸ்.ஆர்.சேகர்.

அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் தந்தை பெரியாரை பாராட்டி ஒரு வார்த்தை சொன்ன காரணத்திற்காக அந்த ஹோட்டலை புறக்கணிக்கச் சொல்லி சங்கிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அநேகமாக அதன் காரணமாகவே அந்த ஹோட்டலின் வணிகம் அதிகமாகும் என்று நினைக்கிறேன்.

இப்படியே இன்னும் எத்தனை நிறுவனங்களுக்கு சங்கிகள் விளம்பரம் தேடித் தரப்போகிறார்களோ!

பிகு: ஏ2பி ஹோட்டலின் இட்லி, சாம்பார், சாப்பாடு ஆகியவை சுமார்தான் என்றாலும் அவர்களின் காபி எனக்கு பிடிக்கும். பருப்பு போளி, தேங்காய் போளி ரொம்பவே பிடிக்கும்

Wednesday, November 11, 2020

மதுரை சாப்பாட்டுப் புராணம்




இரண்டு நாட்கள் முன்பாகத்தான் நெல்லையின் உணவுப் பாரம்பரியம் குறித்த பதிவை பகிர்ந்து கொண்டிருந்தேன்.

இது போல தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்றும் எழுதியிருந்தேன்.

அதற்கும் முன்பாக மதுரை நகரத்து உணவகங்களின் சிறப்பம்சம் குறித்து பேராசியர் ஆர்.வி.ராஜூ முகநூலில் பகிர்ந்து கொண்டதை பார்த்தேன். நெல்லைக்கு சற்றும் சளைத்தது அல்ல மதுரை என்பதை இப்பதிவை படித்தால் உங்களுக்கே புரியும்.

1982-85 ல் மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் பி.பி.ஏ படிக்கையில் ஆறு செமஸ்டர்களிலும் எனக்கு பாடம் எடுத்தவர் பேராசியர் ஆர்.வி.ராஜூ என்பதை சொல்லியாக வேண்டும்.

இந்த பதிவில் விடுபட்ட மூன்று உணவகங்கள் பற்றி பதிவின் இறுதியில் எழுதியுள்ளேன். 

தஞ்சைக் காரர்கள் எப்போது களம் இறங்குவார்கள் ?



 பரண் : ருசி உணர்ந்தவர்கள் கொறிக்கலாம்

பெரியாரும்,பிரபாகரனும் சாப்பிட்ட ஹோட்டல்கள்!
சொந்த ஊரில் நிதானமாய்ச் சுவைத்துச் சாப்பிடுவது தனி சுகம்! இசையை ரசிப்பதற்குத் தனி ஈடுபாடு இருப்பதைப் போல சாப்பிடுவதும் கூடத் தனி ரகம் தான்! எதற்கெடுத்தாலும் அரவை மிஷினுக்குள் தள்ளிவிடுவதைப் போல வாய்க்குள் தள்ளுகிறவர்கள் கொஞ்சம் நகர்ந்துவிடலாம்.

குமுதம் (9.7.98) சிறப்பிதழ் இணைப்பில் வெளிவந்த ‘ருசியான’ கட்டுரை இது :
தலைப்பு : ‘’மூக்குப் புடைக்க’’
தூக்கத்தில் நடக்கிற வியாதி இருக்கிறதா உங்களுக்கு?அப்படியே படுக்கையை விட்டு ‘ ஸ்லோ மோஷனில்’ ஒரு நடையாக மதுரைத் தெருவுக்குப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நிறம் மங்கிய அந்த நேரத்தில் கூட காரசாரமாகக் கடகடவென்ற சத்தத்துடன் யாராவது புரோட்டாவைக் கொத்திக் கொண்டிருப்பார்கள்.

அதே மாதிரி தோசைச்சட்டியில் பன்ரொட்டியை இரண்டாக்கி –நடுவில் பட்டரைத் தடவி நல்ல பதத்தில் வேகவிட்டு இளம் சூட்டில் உள்ளே தள்ளிப் பின்னாடியே மசாலாப்பாலை தொண்டைக்குள் இறக்கிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கால ஃபென்னர் ஆலைக்குப் பக்கத்தில் நல்ல அகலமான வெண்கலக் குண்டாவில் பருத்திப்பாலைக் கண் கிறக்கத்தோடு குடித்துக் கொண்டிருப்பார்கள். ராத்திரி கடக்கும் நேரத்தில் இந்தக் காட்சிகளைச் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும் மதுரையில்!

நாக்கின் மீது மதுரைக்காரர்கள் வைத்திருக்கிற விசுவாசமே தனி! அதை வீணாக நோகடிக்க மாட்டார்கள். வெள்ளையாய் இட்லி, சாம்பார்,தொட்டுக் கொள்ள நான்கு வகைச் சட்னியுடன் ஆவி பறக்கப் பரிமாறப்பட்டு ஆளாளுக்கு ஒரு பிடி பிடிப்பதெல்லாம் எங்கே என்கிறீர்கள்?

மதுரையில் பல இடங்களில் அங்கங்கே பரவிக்கிடக்கிற ரோட்டாரக் கடைகளில் தான். அதிலும் சௌராஷ்டிர சமூகத்தினர் நடத்தும் ரோட்டோரக்கடைகளிலேயே மெல்லிசான இடியாப்பம், குழாய்ப்புட்டு, சர்க்கரைப் பொங்கல் இத்யாதி எல்லாம் கிடைக்கும். இதுதவிர புளியோதரை,தக்காளிச்சாதம் இப்படி எல்லாமே குறைவான விலையில் கமகம மணத்துடன் ! நெய் மணக்கும் பன் அல்வா, பாதாம் அல்வா இவர்களுடைய தனித்துவம் !தெப்பக்குளம் பகுதியில் வெல்லம் உருகிய போளியும், சுண்டலும் சுவையின் மகத்துவங்கள் ! இந்தப் பக்கம் போனாலே போதும், மிகக்குறைந்த விலையில் வயிறாரச் சாப்பிட்டுச் சுதந்திரமாக ஏப்பம் விட்டுவிடலாம்.

மீனாட்சியம்மன் கோவில் பக்கம் ஒரு நடை போய்விட்டுச் சாவகாசமாய் உலாத்துகிறீர்களா? மேலக் கோபுர வாசலை அடுத்து அந்தக் கால நாகப்பட்டிணம் ஒரிஜினல் நெய் மிட்டாய்க் கடை-கிட்டத்தட்ட நம்ம நெல்லை இருட்டுக்கடை அல்வாக்கடையைப்போலத்தான். அந்தக் காலப் பழமை மாறாத கடை..இங்கு என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? நல்ல கெட்டியாக நெய் மொறுமொறுவென்று கெட்டியாக நிற்கும் பதத்தில் அல்வா அவ்வளவு சுவை! மஞ்சள் கலர் பூந்தியும், காராசேவும் பிரபலம். எம்.எஸ். சுப்புலெட்சுமியிலிருந்து பத்மினி, நேரு வரை இங்கு ருசி பார்த்தவர்கள் பட்டியல் நீ…ளம்!

நியூ சினிமா பக்கம் நகர்ந்தால்- இருக்கிற மாடர்ன் ரெஸ்டாரண்டில் காலையிலிருந்து மதியம் துவங்குவதற்குள் கிடைக்கும் ரவாகேசரியும், காராபூந்தி தூவிய தயிர்வடையும் நாவின் அற்புதங்கள்!

இதையெல்லாம் விட ஸ்பெஷல் ஐட்டம் ஜிகர்தண்டா. மஹால் அருகில் இதற்கென்றே தனிக்கடைகள். சுற்றி அவ்வளவு கூட்டம். கடல் பாசி, கெட்டியான பால், சர்க்கரைப் பாகு, மேலே ஐஸ்கிரீம் போட்டு ஜில்லென்று கிடைக்கும் மதுரைக்கே உரித்தான ஸ்பெஷல்! ( இப்போது தமிழகம் தாண்டியும்) தெருவில் கடைக்கு முன்னால் குளிர்ச்சி கையில் ஒட்ட வாங்குகிறவர்கள் குடிக்கும்போது சிலர் கண்ணை மூடித் தியானம் பண்ணுவது மாதிரி மெதுவாக ரசித்துக் குடிக்கும் அழகே தனி !

சைவத்திலேயே இப்படி என்றால் அசைவத்தில் அடித்துக் கொள்ள முடியுமா?

சாலையோரம் போகும்போதே அந்த மசாலா மணம் பட்டதுமே பலருக்கு மூக்கு சுறுசுறுப்பாகி நாக்கில் வேர்த்துவிடும். வித்தியாசமான கலவையோடு சுள்ளென்று தயாராகும் மண்பானைச் சமையலான அயிரை மீன்குழம்பு ரொம்ப ஃபேமஸ். கலைஞர் துவங்கி சிவாஜி வரை மதுரைக்கு வந்தால் ஆஜராகி விடும் அயிரை மீனுக்கு பிரபலமாக இருந்த இன்னொரு வாடிக்கையாளர் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவரான பிரபாகரன். நெடுமாறனின் அச்சக்கத்திற்கு அருகில் தங்கியிருந்த பிரபாகரன் பொடி நடையாக மண்டையன் ஆசாரி தெருவில் இருந்த சாரதா மெஸ்ஸூக்கு வந்து அயிரை மீனையும், சுக்கா வருவலையும் ரசித்துச் சாப்பிட்டு விட்டுப் போயிருக்கிறார். வைரமுத்துவும், பாரதிராஜாவும் இங்குள்ள சில மெஸ்களின் வாடிக்கையாளர்கள்.

மட்டனைப் பரப்பிப் புரட்டி மணமணக்க வரும் மட்டன் தோசை, கறிக்குழம்புக்கென்றே பிரபலமான அருளானந்தம்,நாடார் மெஸ்கள், கோனார் கடை, பாலையா கடை,பனை மரத்துக்கடைக்கெல்லாம் மேலாக அந்த நாள் ஞாபகமாக ஒரு ஹோட்டல் – சிந்தாமணி தியேட்டருக்குப் பக்கத்தில் இருக்கும் –அம்சவல்லி பவன்.

காலையிலேயே புரோட்டாவும்,சால்னாவுமாக இயங்க ஆரம்பித்துவிடும் ஹோட்டலில் பிரியாணி அவ்வளவு சுவை. பெரியார் இந்த ஹோட்டலில் ஒரு பொறித்த கோழியைச் சாப்பிடுவதை ஆச்சர்யத்துடன் முன்னாடி இருந்த கண்ணாடி வழியாகப் பார்த்த சிறுவர்களில் – இந்தக் கட்டுரையை எழுதும் நானும் ஒருவன். அப்போது பொறித்த முழுக்கோழி ரொம்பவும் ஆச்சர்யம்!

இரவு இரண்டு மணிக்கு மேல் கூட பசியோடு நடமாடுகிறவர்கள் எவருக்கும் அவரவர் ருசி சார்ந்த உணவைச் சாப்பிட முடியும். ராத்திரி வரை மூட்டையும்,வெயிலையும் சுமந்த கறுத்த லோடுமேன்கள் சில ஹோட்டல்களில் சாப்பிடுகிற விகிதாச்சாரத்தைப் பார்த்தால் உங்களுக்கும் பசி தொற்றிவிடும்.

காலை மூன்று மணி இந்த நடமாட்டம். அதற்குப் பிறகு கொஞ்ச நேரம் அசந்த மாதிரி இருக்கும். அவ்வளவு தான். நான்கு மணி ஆகிவிட்டதா?

அலுமினியப் பாத்திரங்களைக் கழுவி விபூதிப்பட்டையடித்து ஊதுபத்திக் கொளுத்தி, நீர்டீ தெளித்து கடை களை கட்ட ,

ஸ்டீரியோவில் டி.எம்.எஸ்.ஸின் ‘’ உள்ளம் உருகுதய்யா’’ ரகப்பாடலோ, சீர்காழியின் ‘விநாயகனே’ பாடலோ காதில் மெல்லிய தூறல் மாதிரி விழ ஆரம்பித்துவிடும்.

இரவு நேர மதுரை பலருக்கு அதிசயம்.
ஆனால் மதுரையில் உள்ள பலருக்கோ
- அது இன்னொரு வாழ்க்கை!



இப்பதிவில் சொல்லப்பட்டுள்ள நாகப்பட்டிணம் ஒரிஜினல் நெய் மிட்டாய்க்கடை அல்வா நான் சாப்பிட்டதில்லை. நான் சிறுவனாக இருந்த காலத்தில் மதுரைக்கு சென்று வரும் போதெல்லாம் டவுன் ஹால் சாலையின் முனையில் உள்ள பிரேம விலாசிலிருந்து அல்வா வாங்கி வருவார். அதன் ருசி அவ்வளவு அபாரம். கல்லூரியில் படிக்கும் போது பெரும்பாலும் சனிக்கிழமை என்பது திரைப்படம் பார்க்கும் நாளாக இருக்கும். அப்போதெல்லாம் பிரேம விலாசில் ஒரு ஐம்பது கிராம் அல்வா வாங்கி சாப்பிடுவது முக்கியமான பழக்கம். (மேலே உள்ள படத்தில் உள்ளது) இப்போதும் கூட எப்போது மதுரை சென்றாலும் பிரேமவிலாஸ் அல்வா வாங்காமல் வருவதில்லை.

மதுரை ரயில் நிலையத்தை ஒட்டிய கற்பகம் ஹோட்டலில் நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் "பொடி ஊத்தப்பம்" பிரபலம். சற்று சுற்றளவு அதிகமான மிதமான கனம் கொண்ட ஊத்தப்பத்தின் மேல் பகுதி முழுதும் மிளகாய் பொடி தூவி, நல்லெண்ணையையும் கொஞ்சம் பரப்பி தரும் பொடி ஊத்தப்பத்தை தேங்காய் சட்னியோடு சாப்பிடுவது அவ்வளவு சுவை. ஆனால் சில வருடங்கள் முன்பாக தேடி சென்ற போது ஏமாற்றமே. தரம் மாறி விட்டது.

மூன்றாவதாக சென்ட்ரல் தியேட்டர் எதிரில் இருக்கும் நியூ டெல்லிவாலா ஸ்வீட்ஸ். இனிப்பு, கார வகைகளைத் தவிர அங்கே மிருதுவான சப்பாத்தியும் சுடச் சுட பூரியும் மட்டுமே கிடைக்கும். அதற்கு தருகிற குருமா இப்போதும் நா ஊறவைக்கிறது. சின்ன கிண்ணத்தில் தருவார்கள் என்பதுதான் குறை. சின்ன இடத்தில் மூன்றே மேஜைகள்தான். காத்திருந்து சாப்பிடுவோம்.

அதே போல நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில்தான் ஃப்ரூட் மிக்ஸர் என்பதும் அறிமுகமானது. பல பழங்களை கலந்து ஒரு பெரிய கண்ணாடி டம்ப்ளர்களில் தருவார்கள். ஒரு ரூபாய் மட்டுமே விலை. ஒரு டம்ப்ளர் குடித்தால் மூன்று மணி நேரத்திற்கு பசி இருக்காது. பெரிய அண்டாவில் தயாரித்து வைத்திருப்பார்கள். ஒரு காலகட்டத்தில் பல கடைகளில் அழுகிய பழங்களையும் சேர்க்க ஆரம்பித்ததால் அதன் மவுசு மங்கிப் போனது.

எங்கள் கல்லூரிக்கு அருகில்தான் திருப்பரங்குன்றம். "மணி, மகாராஜா, (இன்னொரு தியேட்டரின் பெயர் நினைவுக்கு வரவில்லை) என்று மூன்று திரையரங்குகள் உண்டு. இரவுக்காட்சி பார்த்து விட்டு வரும் போதும் இட்லி கடைகள் இருக்கும். கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு பாட்டியிடம் மூன்று வகை சட்னியோடு நான்கு இட்லிகள் சாப்பிட்டு விட்டு காலாற நடந்து விடுதிக்கு வருவோம்.

மதுரை கல்லூரிக் கால நாட்களை நினைப்பதற்கு வாய்ப்பாக இந்த பதிவு அமைந்தது.

Tuesday, November 10, 2020

படிக்கும் போதே நா ஊறியதே!

 எங்கள் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி திரு பா.இசக்கி ராஜன் அவர்கள் நேற்று வாட்ஸப்பில் அனுப்பிய பதிவு. படிக்கும் போதே நா ஊறியதால் "யான் பெற்ற இன்பம் பெறுக வையகம்" என்று பகிர்ந்து கொண்டுள்ளேன். 

இதைப் படிக்கையில் "நாங்க மட்டும் என்ன லேசுப்பட்டவங்களா?" என்று "சோழ நாடு சோறுடைத்து" என்று பிரபலமான தஞ்சைத் தரணிக் காரர்கள் ஒரு பதிவு போட்டால் மறு விருந்து இன்னும் சுவையாக இருக்கும். 



போஜனப்பிரியர்கள்

--------------------------------
திருநெல்வேலிக்காரர்கள் போஜனப்பிரியர்கள் என்றே சொல்ல வேண்டும்.

" தின்னு தீர்த்தே சொத்தை இழந்தவன் திருநெவேலிக்காரன்" என்று சொல்வார்கள்.( இது எல்லோருக்கும் பொதுவானது என்று சொல்லமுடியாது. ஒரு வேடிக்கையாக இப்படி சொல்வார்கள் )

திருநெல்வேலி டவுண் காந்தி சிலை அருகே ஒரு காலத்தில் இருந்த போத்தி ஹோட்டல் பற்றி கதை கதையாக சொல்வார்கள் பெரியவர்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீடுகளில் சமைக்கும் " கூட்டாஞ்சோறு " ரொம்ப பிரபல்யமானது. எல்லாக்காய்களையும் சேர்த்துப்போட்டு சமைக்கும் இந்த உணவு நல்ல ருசியானதும்கூட.
(வெஜிடபிள் பிரியாணிக்கும் கூட்டாஞ்சோறுக்கும் வித்தியாசம் உண்டு.)
கூட்டாஞ்சோறுக்கு " தொட்டுக்கிட" கூழ்வற்றல், வெங்காய வடகம், சீனியவரக்கா வத்தல், கல்லிடைக்குறிச்சி அப்பளம்..என்று ஏகப்பட்ட டிஸ்கள் உண்டு.

இதைப்போல, தேங்காய்ப்பாலில் செய்யும் " சொதிக்குழம்பு" பிரபலம்.
அதிக காரம் இல்லாத இந்த குழம்பு வகை, தென்னை அதிகம் விளையும் இலங்கையில் இருந்து வந்தது என்பார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில்,
கல்யாணத்திற்கு மறுநாள் சொதிச்சாப்பாடு போடுவது மரபு.

" மாப்ளெ..அந்தானைக்கு கிளம்பீராதீரும்..இருந்து நாளைக்கு மறுவீட்டு சொதிச்சாப்பாட்டை சாப்பிட்டு போங்க.." என்று உரிமையோடு சொதியின் ருசிக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என்றால் பார்த்துக்கோங்களேன்.

சொதிக்கு உருளைக்கிழங்கு பொரியலும், இஞ்சி பச்சடியும் உற்ற துணை. சொதிக்குழம்பு செய்வதற்கு நல்ல அனுபவம் வேண்டும். தண்ணீர் கொஞ்சம் அதிகமானாலும் சொதப்பி விடும். தேங்காய்ப்பால் கெட்டியாக இருக்க வேண்டும். அதில், முருங்கைக்காய், அவரைக்காய், காரட் போன்ற காய்களைப்போடுவார்கள். சொதிக்குழம்போடு சேர்த்து சாப்பிட முன்பு குறிப்பிட்ட அப்பளம், கூழ்வத்தல் வகையறாக்களும் கட்டாயத்தேவை.

மாவட்டத்தின் கறி வகைகளுள் முக்கியமானது அவியல். வாழைக்காய்,கத்தரிக்காய்,அவரைக்காய் போட்டு செய்வது. இவர்களின் உணவில் அன்றாடம் சேர்க்கும் மற்றொன்று அரைக்கீரை.

அரைக்கீரை செய்யும் நாளில் பெரும்பாலும் புளிக்குழம்பு உண்டு. இரண்டையும் கலந்து சாப்பிடும் வழக்கமும் இருக்கிறது. இரவு மீதமுள்ள அவியல்,குழம்பு,கீரை போன்றவற்றை மண் சட்டியில் போட்டு கிண்டி " பழங்கறி " செய்வார்கள் . நன்றாக சுண்ட வைப்பதால், " சுண்டைக்கறி " என்றும் சொல்லப்படுவதுண்டு.

" சுண்டைக் கறியின் சுவையறியார்
   அறியார் பண்டைத்தமிழ்ப்  பெருமை"
என்று திருநெல்வேலிக்காரன் பாட்டை வேறு எழுதி வச்சிருக்காம்னா
பார்த்துக்குங்க..தமிழ்நாட்டின் பெருமைக்கும் சுண்டைக் கறிக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா ? ( சவத்தை விட்டுத் தொலைங்க அண்ணாச்சி..)

வீடுகளில் இலை போட்டு பரிமாறுவது என்பது இங்கே தனி கலை.

சாப்பிடத்தானே போறோம் என்று வாழை இலையை இஷ்டப்படி போடக்கூடாது. திருமணம் போன்ற விஷேச வீடுகளில்  இலையின் நுனிப்பகுதி இடதுகைப்பக்கம் இருக்குமாறு இலையை போடவேண்டும். தண்ணீரை ஒரு குத்தாய்  எடுத்து தெளித்து இலையை துடைத்தபிறகு, முதலில் உப்பும், மிதுக்கு வத்தலும் ஓரத்தில் வைப்பார்கள். அடுத்து பிட்டு,பொரியல், அவியல்,பச்சடி வைத்து விட்டு,  இலையின் கீழ்ப்பகுதியில் வலதுபுறத்தில் பருப்பும் வைப்பர்.

நடு இலையில் சோறு படைத்தவுடன், அதில் ஒரு பகுதியை இடது கைப்பக்கம் ஒதுக்கிவிட்டு மீதியுள்ள சோற்றை பருப்பு,நெய்,சாம்பார் விட்டு பிசைந்து உண்பார்கள். அதன் பிறகு ரசம், வத்தல் குழம்பு ,பாயாசம்(பாயசத்தை இலையில் ஊற்றி,அதன் மேல் அப்பளம்,பூந்தி போட்டு கலந்து உண்பது உண்டு ), மோர் என்ற ஒரு முறைப்படியே  சாப்பிடுவதை  மரபாய் வைத்துள்ளனர். 

இதிலே, வீட்டுக்கு மணமாகி வந்த புது மருமகள் பொரியலையோ, பருப்பையோ இடம் மாற்றி பரிமாறி விட்டால் போதும் .
" பொண்ணை என்ன   வளத்துருக்காவோ ..இலையில எப்படி பரிமாறணும்னு கூட தெரியாம .."  என்று ஏகடியம் பேசுவார்கள்.

இதெல்லாம் ஒருசில சமூகத்தில் நடப்பதை சொல்லுகிறேன்.

" காலம் ரொம்ப மாறிப்போச்சு வே..இலையப்  போட்டு சாதம் வச்சு நெய் ஊற்றுற காலமெல்லாம் போச்சு..சோத்துக்கு முன்னாடி பிரியாணின்னு ஒன்ன வச்சுட்டு போறான்..அத சாப்பிட்டு அப்புறம் சோத்தை திங்க முடியுமா வே..எந்தப் பேதீல போவான் இதைக் கண்டுபிடிச்சான்னு தெரியல.." என்று முணங்கும் பெருசுகளை இப்போதும் திருநெவேலியில் பார்க்கலாம். அவர்கள் எல்லாம் சொத்தை விற்று தின்னு தீத்த பரம்பரையின் கடைசிக்கண்ணியாக இருக்கவும் வாய்ப்புண்டு.  

டவுண் ஆர்ச் அருகே உள்ள விஞ்சை விலாஸ் இட்டிலி புகழ் பெற்றது.
அங்கே ஆவி பறக்கும் இட்லிகள், தோசைகள்  மட்டுமின்றி,
தேங்குழல், பாசிப்பருப்பு உருண்டை, தட்டை,சீடை, கைசுற்று முறுக்கு,
என பல தின்பண்டங்களும் கிடைக்கும்.

நீங்கள் நன்னாரி சர்பத் குடித்திருப்பீர்கள். நன்னாரிப்பால் குடித்திருக்கிறீர்களா ? அது இங்கே பேமஸ்.சில காலம் முன்பு வரை நாலஞ்சு மரப்பெஞ்சுகள் மாத்திரம் போடப்பட்டு பத்து பன்னிரண்டு பேரு மட்டுமே சாப்பிட முடியும் அளவிற்கு தான் இடம் இருந்தது. நேரமானாலும் பரவாயில்லை என்று வாசலில் ஒரு கூட்டம் காத்துக்கிடக்கும்.

" இந்த மாறி இட்டிலி வீட்ல கூட கெடைக்காது டே .." என்று சொல்லிக்கொள்வார்கள். தற்போது விசாலமாய் தோற்றமளிக்கிறது விஞ்சை விலாஸ்.

அங்கிருந்து சந்திப்பு வந்தால், நூறாண்டு பாரம்பரியமிக்க சந்திரவிலாஸ் ஓட்டல் ரொம்பவே பிரபலம். " சந்திர விலாஸ் காபி குடிச்சா, அடி நாக்கில் நாலு நாளைக்கு மணக்கும் " என்று சொல்லி பழைய நெனைப்பில் மூழ்கும் பல பெரியவர்கள் இன்றும் உண்டு. இங்கு சாம்பார்,ரசத்திற்கு தினமும் வீட்டில் இருந்து பொடி இடித்து வரும் என்று சொல்வார்கள். மதியம் இங்கே போடும் தவல் வடைக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. வடையில் தேங்காய் பல்லு பல்லாய் நறுக்கி போட்டிருப்பார்கள். அக்காலங்களில் மதியம் தரையில் அமர்ந்து இலை போட்டுத்தான் சாப்பாடு சாப்பிடுவார்கள் இந்த பாரம்பரிய உணவு விடுதியில்.

பாலஸ் டி வேல்ஸ் சினிமாக்கொட்டகை அருகே இருந்த மாருதி விலாஸ் ஓட்டல் பூரிக்கிழங்கு மணம் பாளையங்கோட்டை வரை கூட அடிக்கும்  என்பார்கள். ஓரணாவிற்கு ரெண்டு பூரியும் கை நிறைய கிழங்கும் கொடுப்பார்கள் என்று சொல்லும் 85  வயது காஷ்யபன்
" சாயந்தரம் இதை சாப்பிட்டம்னா மறுநாள் காலை வரை பசிக்காது "
என்று சொல்லி சிரிக்கிறார்.

பாளையங்கோட்டையில் பஸ் ஏறி, ஜங்ஷன் வந்து முந்திரிப்பருப்பு மெது பக்கோடா அல்லது பாஸந்தி  சாப்பிட ஒருத்தன் வருகிறான் என்றால் அவன் ராஜ் கஃபே பிரியன் என்று அர்த்தம். சந்திப்பு பேருந்து நிலையம் எதிரே இருந்த ராஜ் கஃபேயில், நெல்லைக்கு வரும் திரைப்பட நட்சத்திரங்கள் சாப்பிட்டதாக சொல்வார்கள்.  கை விரல்களில் ஏழெட்டு மோதிரங்கள் மின்ன கோல்டு பிரேம் கண்ணாடி, மொறுமொறு வெள்ளை வேட்டி சட்டையில் சிரித்த முகத்துடன் இருந்த நடராஜ பிள்ளை முகத்தை பலர் மறந்திருக்க மாட்டார்கள். சின்ன வயதில் கொழும்பில் ஓட்டலில் பணிபுரிந்த அனுபவம், அந்த அனுபவத்தை திருநெல்வேலியில் புகுத்தி வெற்றி கண்ட மனிதர். மினி காபி என்ற கான்செப்ட்டை திருநெல்வேலியில் 1970  களிலேயே அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. இங்கே காபி 70 பைசா. மினி காபி 40  பைசா.

பித்தளை வட்டகையில் உள்ள டம்ளரில் நுரை பொங்கி வழியும் ராஜ் கஃபே காபி எவரையும் வசீகரிக்கும் தன்மை கொண்டது.
இங்கு மூன்று நேரமும் கூட சாதம் கிடைக்குமாம். 

நெல்லை லாட்ஜ் வளாகத்தில் இருந்த மற்றொரு உணவகம் சுப்ரபாத்.
வீட்டு சாப்பாடு போல இருக்கும்.  

சாலைக்குமாரசாமி கோவில் எதிரே இருக்கும் கௌரி ஷங்கர் உணவு விடுதியில் அடைஅவியல் பிரபலம். திருபாகம் சாப்பிடணும் என்றால், சங்கர் கஃபே தான்.

இட்லி,தோசை தவிர்த்து சப்பாத்தி பிரியர்கள் விரும்பும் ஓட்டல் என்றால் அது ராஜஸ்தான் ஓட்டல் தான். சந்திப்பு தானா மூனா கட்டிடத்தில், மாடியில் முகம்மத் ராஃபியின் இந்திப்பாடலை ரசித்துக்கேட்டபடியே  சப்பாத்திகளை எண்ணிக்கையின்றி சாப்பிடலாம்.

எண்ணெய் இல்லாத மெதுவான சப்பாத்திகளுக்கு துணையாக சால்னா, வெள்ளரிக்காய்,தக்காளி,வெங்காய துருவல், கெட்டிதயிர், ஒரிஜினல் மாம்பழ ஜூஸ் என சுவையான சாப்பாடு. வட இந்திய ஓட்டல் ஒன்றில் இருப்பதான உணர்வு எப்போதும் இருக்கும் இங்கே.

பாளையங்கோட்டையில் கல்வி நிறுவனங்கள் இருக்கும் அளவிற்கு உணவகங்கள் இல்லை என்று ஒரு நண்பர் கூறினார். 

ஒரு காலத்தில் பாளையங்கோட்டை கோட்டூர் சாலையில் இருந்த தோணி செட்டியார் கடையில் இட்லி,தோசை,ஊத்தாப்பம் விலையும் மலிவு, ருசியோ அதிகம் என்று சொல்லுவார் எல்ஐசி இசக்கிராஜன்.

இங்கிருந்த குமரன் கஃபே, சங்கர் கஃபே போன்ற ஓட்டல்களும் அக்காலத்தில் பிரபலமானவை என்கிறார். 

அத்தியாயத்தில் முன்பு குறிப்பிட்ட சொதிசாப்பாடு எங்கு கிடைக்கும் என்று உங்கள் மனதில் இதற்குள் தோன்றியிருக்க வேண்டும்.

பாளையங்கோட்டை அருணாச்சலம் பிள்ளை  ஒரு பிரபல தவசுப்பிள்ளை .  தவசுப்பிள்ளை என்ற வார்த்தை கூட இங்கு தான் அதிகம் புழக்கத்தில் உள்ள சொல்.  நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்க்கும் தாமு,வெங்கடேஷ் பட், மல்லிகா பத்ரிநாத் போன்றோரை  செஃப் என்று சொல்வோம் இல்லையா..அவர்களைத்தான் நெல்லையில் தவசுப்பிள்ளை என்று அழைக்கிறார்கள்.

உணவு ஆர்டரின் பேரில் தயாரித்துக்கொடுப்பவர் தவசுப்பிள்ளை அருணாசலம்பிள்ளை. பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள இவரது வீட்டை கடக்கும்போதெல்லாம் சாம்பார்,அவியல் வாடை மணக்கும். நெல்லையின் சொதி சாப்பாடு தயார் பண்ணுவதில் நம்பர் ஒன் இவரே. 500  பேருக்கு சொதிச்சாப்பாடு என்றாலும், தேர்ந்த ருசியுடன் தயார் செய்து தருவார். பல அலுவலகங்களில் பணிநிறைவு விழாக்கள், இட மாறுதல் போன்ற நிகழ்விற்கு விருந்து சாப்பாடு எனில்,  அருணாச்சலம் பிள்ளை எண்ணிற்கே போன் போகும். அலுவலக வாசலுக்கே வண்டியில் வந்து இறங்கி இலை போட்டு பரிமாறி விட்டு செல்வார்கள் அவரது பணியாட்கள். 100  பேருக்கு நாம் ஆர்டர் செய்தால்,
125  பேர் கூட வயிறு முட்ட சாப்பிடலாம். விலையும் குறைவு. 

" நம்மிடம் ஆர்டர் கொடுத்தால், சாப்பாடு தட்டுப்பாடு என்ற ஆவலாதியே வரக்கூடாது சார்..மனுசங்க வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, வாழ்த்தி விட்டுப்போகணும் " என்பார் தவசுப்பிள்ளை அருணாச்சலம் பிள்ளை.
தற்போது அவரது மகன் நடத்தி வருகிறார். 

நெல்லையில் ஏராளமான உணவகங்கள் வந்து விட்டன.
இருந்தாலும், மேலே சொன்ன உணவகங்கள் காலாகாலத்துக்கும் பெயர் சொல்லக்கூடியவை.
------  இரா.நாறும்பூநாதன்

Sunday, August 9, 2020

ஸ்விக்கியின் ஆய்வு எங்கே முடியும்?

 

சென்னையில் தங்கியிருக்கிற என் மகன் அனுப்பிய படங்கள் கீழே உள்ளது.






 தனியாக ஒரு அறையெடுத்து வேலைக்கு போய் வருகிற அவனுக்கு உணவு விடுதிகள்தான் ஒரே வழி. இந்த ஊரடங்கு காலத்தில் காலையும் இரவும் அருகில் உள்ள ஹோட்டலில் பார்சல் வாங்குபவனுக்கு  இப்போது மதிய வேளையில் ஸ்விக்கி தான் துணை.

 அவன் ஸ்விக்கி மூலமாக வாங்கியதை வைத்து ஒரு தேர்வு போல மதிப்பெண் அளித்துள்ளார்கள்.

 எத்தனை முறை ஆர்டர் கொடுக்கப்பட்டது?

எத்தனை உணவகங்களில் ஆர்டர் கொடுக்கப்பட்டது?

எத்தனை உணவுப் பொருட்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டது?

எப்படிப்பட்ட உணவு வகைகள் ஆர்டர் கொடுக்கப்பட்டது?

அந்த ஆர்டரை வழங்க ஸ்விக்கி பணியாளர்கள் எத்தனை கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளனர்?

ஆஃபர்கள் மற்றும் தள்ளுபடி மூலமாக அடைந்த பலன் எவ்வளவு ரூபாய்?

 இதிலே அளிக்கப்பட்ட விபரங்கள் அனைத்தும் மிகவும் துல்லியமாகவே இருக்கிறதாம்.

 இவற்றை முதலில் பார்க்கிற போது சுவாரஸ்யமாக இருந்தது. நல்லா ரூம் போட்டு யோசிச்சிருக்காங்கய்யா என்று பாராட்டவும் தோன்றியது.

 சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் எவ்வளவு பெரிய வலைப் பின்னலை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது புரிந்தது.

 “பாய்ஸ்” படத்தில் செந்தில் சொல்வாரல்லவா?

 “இது வெறும் நோட்டு அல்ல, டேட்டா பேஸ், இன்பர்மேஷன், இன்பர்மேஷன் இஸ் வெல்த்”

 ஆக ஸ்விக்கியிடம்  ஒவ்வொரு ஊரிலும்

 யார், யார் உணவு விடுதியில் ஆன் லைன் மூலமாக உணவு ஆர்டர் செய்கிறார்கள்,

 எந்தெந்த உணவு வகைகளை எவ்வளவு பேர் நாடுகிறார்கள்?

 எந்தெந்த உணவகங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம்?

 எந்த உணவகத்தில் எந்த உணவு வகைக்கு அதிகம் கிராக்கி இருக்கிறது?

 எந்த வேளையில், எப்படிப்பட்ட நாட்களில் ஆன்லைன் உணவு ஆர்டர்கள் குவியும் அல்லது குறையும்?

 இந்த டேடா பேஸ் இப்பொது ஸ்விக்கியிடம் இருக்கிறது என்பது உண்மை.

 இதை வைத்து என்ன செய்ய முடியும்?

 

எந்த உணவு வகைகளை

எந்த உணவகத்திலிருந்து

வாங்குவது என்ற

உங்கள் முடிவை

அவர்களால் மாற்ற முடியும்.

 இத்தனை நாள் என்னிடம் ஸ்விக்கி ஆப் இல்லாமல் இருந்தது. அதை தரவிறக்கி சோதனை செய்து பார்த்தேன்.

 நாம் விரும்பும் உணவகத்தை விட அவர்கள் கவனப்படுத்துவது அவர்கள் விரும்பும் உணவகமாகவே உள்ளது.  

 தரமானது, பாதுகாப்பானது என்றும் மிகவும் பிரபலமானது என்றும் அவர்கள் முன்னிறுத்துவதற்கும் நம்முடைய அனுபவத்திற்கும் பெருத்த வேறுபாடு இருக்கிறது.

 ஒரு சில உணவுப் பொருட்களுக்கே (வழக்கமானவற்றை விட சற்று விலை அதிகமானது) கூடுதல் கவனம் கொடுக்கப்படுகிறது.

 சாதாரண உணவுப் பொருட்கள் இப்போது இல்லை என்று சொல்லப் படுகிறது. (பொதுவாகவே நம் உணவகங்களில் காலை எட்டரை மணிக்கு மேல் இட்லி கிடைக்காது)

 காம்போ, இத்தனை ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் இவ்வளவு தள்ளுபடி என்றெல்லாம் அவர்கள் நமக்கு நன்றாக வலை வீசுகிறார்கள்.

 அடுத்து உணவகங்களுக்கும் இது போன்ற உணவு வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வரலாம். வராதவை தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் விடும்.

 நாம் கட்டுப்பாடாக இல்லையென்றால் நம்முடைய உணவு பழக்க வழக்கத்தை இனி அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.

Saturday, January 12, 2019

இது பிரியாணி புராணம்



வாட்ஸப்பில் ஒரு தோழர் அனுப்பிய காணொளி இது.

இவர் யார் என்ற விபரங்கள் எல்லாம் தெரியாது. ஆனால் இவர் பேசுவதைக் கேட்டால் பிரியாணி பிடிக்காதவர்கள் கூட உடனடியாக பிரியாணியை தேடி ஓடுவார்கள். அப்படி ஒரு ரசனை மிகுந்த பேச்சு. கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் ஏதோ எஸ்.பி.பி பேசுவது போல குரலில் ஒற்றுமை உள்ளது.

பாருங்கள். பிரியாணி (சிக்கன் அல்லது மட்டன்)  சாப்பிட புறப்படுங்கள்.




Friday, January 4, 2019

பெரிய (சாப்பாட்டு) புராணம் இது.




வாட்ஸப்பில் வந்தது. இதை எழுதியவர் யார் என்றும் தெரியாது. ஆனாலும் படிக்க சுவாரஸ்யமாக இருந்ததால் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு மதிய வேளை சாப்பாட்டிற்கே இவ்வளவு நீண்ட பதிவு என்றால் பெரும் விருந்தெல்லாம் போய் விட்டு வந்தால் ????

ஹோட்டலில் இருந்த நேரத்தை விட எழுதுவதற்கான நேரம் அதிகமாயிருக்கும்.

இந்த்  பார்ப்கியூ,  க்ரில் உணவு ஆகியவை பற்றி இதுவரை கேள்வி கூட பட்டதில்லை என்ற உண்மையையும் பதிவு செய்வதும் நேர்மையாக இருக்கும்.

இன்னொரு வீடியோவும் இருக்கிறது. அதுவும் ஒரு ரசனையான சாப்பாட்டுப் புராணம்தான். அது பிறகு
  



நாளைக்கு நியூ இயர். இன்னைக்கு வெளில சாப்பிடலாமா?” என்று கேட்டான் மகன்.

வெளியே என்றால் எங்கே? வெளியே என்பது ஒரு Broad term. கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலத்து படிக்கட்டில் சாப்பிடுவது கூட வெளியேயில் தான் அடக்கம்.

பார்பக்யூல சாப்பிடலாமா?”

பார்பர் ஷாப்ல எல்லாம் என்னால சாப்பிட முடியாது. ஐஸ் க்ரீம் சாப்பிட்டு பழக்கம் இருக்கே தவிர ஷேவிங் க்ரீம் எல்லாம் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லே

அப்பா... இது Barbeque. ஒரு விதமான ஹோட்டல்

டேய்...எனக்கு பார்வதி பவன் போதும். இந்த பார்பெக்யூ எல்லாம் வேணாம்” 

நீங்க வந்தே ஆகனும்.. நான் டேபிள் புக் பண்றேன்

பிறகு மகன் ஹோட்டல் ஆட்களிடம் ஏதோ இங்கிலீஸில் பேசினான்

டேபிள் புக் பண்ணியாச்சு. நமக்கு மத்தியானம் 2:30 மணிக்கு அலாட் ஆகியிருக்கு

பார்பெக்யூன்னா என்னடா?” என்றேன்.

க்ரில். நீ இதுவரைக்கும் Grill சாப்பிட்டது இல்லையா?”

க்ரில்லை சாப்பிடறதா? நம்ம வீட்டு வாசல் க்ரில் கேட் கீழே கொஞ்சம் காணாமத்தான் போயிருக்கு. ஆனா நான் சாப்பிடல்லேடா...”

Grill சாப்பிட்டு பழகிக்கோ..நல்லா சூடா இருக்கும்

ஆமா. வெல்டிங் வெச்சவுடனே க்ரில் சூடாத் தான் இருக்கும்

அதன் பிறகு பார்பெக்யூ பற்றி மகன் விளக்க ஆரம்பித்தான். ஒரு இரும்பு குச்சியில் பதார்த்தங்களை வைத்து நெருப்பில் சுட்டுத் தருவார்களாம். அதை அப்படியே லபக்க வேண்டுமாம். இந்த சிந்து சமவெளி நாகரீக உணவுக்குத் தான் அநாவசிய பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தான்.

சாப்பாடு ரொம்ப ஹெவியா இருக்கும். காத்தால ஒன்னும் சாப்பிட வேணாம். வெறும் வயித்துல போனா நிறைய சாப்பிடலாம்என்றான் மகன்.

டேய்..ஏதாவது இடைக்கால நிவாரணம் கொடுடா...என்னால முடியாது

2:15 மணிக்கு பார்பெக்யூ ஹோட்டலுக்குப் போனோம். கதவருகே பெரிய க்யூ இருந்தது. நிறைய பட்டினியாளர்கள் காத்திருந்தார்கள்.

டேபிள் புக் பண்ணியிருக்கு. என் பேர்ல. நாலு பேர்” – என்றான் மகன்

உனக்கு ஏதுடா நாலு பேர்? ஒரு பேர் தானே வெச்சென்

அப்பா...சும்மா இருங்க...கொஞ்ச நேரத்துல உள்ளே போகனும். உள்ளே டீசண்டா பிஹேவ் பண்ணு. நான் சொல்ற மாதிரி தான் சாப்பிடனும்

கொஞ்ச நேரத்தில் சொர்க்க வாசல் திறந்தது

நான்கு பேர் அமரும் ஒரு டேபிளில் அமர்ந்தோம்

வெஜிட்டேரியன்என்று சொன்னதும் எல்லோருக்கும் பச்சை பார்டர் போட்ட ப்ளேட் கொண்டு வந்து வைத்தார்கள். நாங்களோ பச்சையாக சாப்பிடப் போவதில்லை. எதற்கு பச்சை ப்ளேட்?

டேபிள் மத்தியில் சதுரமாக ஒரு Slot இருந்தது. கொஞ்ச நேரத்தில் அதில் ஹோம குண்டம் மாதிரி ஏதோ கொண்டு வந்து வைத்தார்கள். நல்ல வேளை... அதில் கோலம் எதுவும் போட்டிருக்கவில்லை

அப்பா...நமக்கு சாப்பிடறதுக்கு ரெண்டு மணி நேரம் டைம் இருக்கு. 4:30 வரைக்கும் சாப்பிடலாம்

சாப்பிட இரண்டு மணி நேரமா?” அரிசியை ஊறப்போட்டால் இந்த நேரத்தில் மாவே அரைத்து விடலாமே!

ரொம்ப ரிலாக்ஸ்டா சாப்பிடு. நிறைய சாப்பிடலாம்

டேய். எனக்கு ஒரே ஒரு வயிறு தான் இருக்கு...அது என்ன ஸ்டேட் பாங்கா? நிறைய ப்ராஞ்ச் வெச்சிக்கறதுக்கு. வயிறு கொள்றவரைக்கும் தான் சாப்பிட முடியும்

பஸ் எல்லா ஸ்டாப்பிங்லயும் நின்னு நின்னு போனா நிறைய பாசஞ்சர்ஸ் ஏறிக்கறதில்லையா? வயிறும் அந்த மாதிரி தான். நின்னு நின்னு சாப்பிட்டா நிறைய சாப்பிடலாம்” 

இந்த Theory of Digestivity  கண்டு பிடித்ததற்கு என் மகனுக்கு ஜீரண் மித்ரா என்ற பட்டமே கொடுக்கலாம்.

முதல் ரவுண்டு செர்விங் ஆரம்பமானது.

சுட்ட உருளைக்கிழங்கு வில்லைகளை தயிர் மாதிரி ஏதோ ஒரு பேஸ்டில் ஊற வைத்து ப்ளேட்டில் வைத்தார்கள்.

இந்த வெள்ளை பேஸ்டுக்கு  பேர் மயோனீஸ்என்றான் மகன்.

நல்ல வேளை அந்த பேஸ்ட்டில் உப்பு இருந்தது. சூடான உருளைக்கிழங்குடன் ருசி அம்சமாக இருந்தது.

அதன் பிறகு ஒரு கம்பியில் சில பதார்த்தங்களை குத்தி ஹோம குண்டம் மேல் வைத்தார்கள். செண்டிரல் ஸ்டேஷன் ரயில்வே லைன் மாதிரி அருகருகே எட்டுக்கும் மேற்பட்ட கம்பிகள் இருந்தன. தீக்குள் விரலை விட்டு தொட்டுப் பார்த்தேன். தீண்டும் இன்பம் தோண்றியது உண்மை தான்.

ஒரு கம்பியை வெளியில் எடுத்தேன். Abacus மாதிரி இருந்தது.

கம்பியில் குத்துப்பட்டு கதம் ஆன பதார்த்தங்களை வெளியே உருவி சாப்பிட்டேன். இது வரை வருவல் சாப்பிட்டிருக்கிறேன். இது போன்ற உருவல் சாப்பிட்டதில்லை. உருவல் உண்மையிலேயே நன்றாக  இருந்தது.

நாம சாப்பிட சாப்பிட அவங்க புதுசு புதுசா கம்பியை வெச்சிகிட்டே இருப்பாங்க. இப்படியே ஒரு மணி நேரம் சாப்பிடனும். பக்கத்து டேபிளைப் பாரு

பக்கத்து டேபிளில் ஒரு சேட்டு குடும்பம் இருந்தது. எங்களுக்கு முன்பாகவே அவர்கள் வந்திருந்தார்கள். ராஜ் கபூர் மேரா நாம் ஜோக்கர் படம் ரிலீஸ் செய்த போது டேபிளுக்கு வந்திருப்பார்கள் போலத் தெரிந்தது

மகன் போய் ராமர் கலரில் ஒரு ஜூஸ் எடுத்து வந்தான். எலுமிச்சை நறுமணத்துடன் ஜிவ்வென்று இருந்தது. ஏதாவது பாத்திரம் கழுவும் லிக்விட் ஆக இருக்குமோ?

கொஞ்ச நேரத்துல பைனாப்பிள் க்ரில் வரும்என்றான் மகன்.

சொன்னபடியே ஆயிரத்தில் ஒருவன் கத்தியில் பைனாபிள் துண்டுகள் சொருகப்பட்டு வந்தன. இந்திய ரெஸ்டாரண்டுகள் வரலாற்றில் முதன்முறையாக பழத்தை நெருப்பில் சுட்டு சாப்பிடுவதைப் பார்த்தேன்.

அவ்வையார் தீர்க்க தரிசி. சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று சங்க காலத்திலேயே கேட்டு விட்டார்.

மகன் வெயிட்டரைக் கூப்பிட்டான்.

வாட்டர் மெலன் க்ரில் வைக்கவே இல்லையே?”

கொண்டு வர்ரேன் சார்

வாட்டர் மெலனை சுட்டு சாப்பிடுவதா? என் மகனுக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரிகிறது? அடிக்கடி நண்பர்களுடன் க்ரில் சாப்பிடுவானோ? ஏகப்பட்ட Grill friends வைத்திருப்பான் போல இருக்கிறது.

நான்கு சுற்று க்ரில் முடிந்தது. உருளைக்கிழங்கு தான் லீடிங்கில் இருந்தது. இப்படி பல சுற்றுகள் போயின. இறுதிச் சுற்று வருவது மாதிரியே தெரியவில்லை. அரை மணி நேரம் தான் ஆகியிருந்தது.

சேட்டு குடும்பம் மறுபடியும் மயோனீஸ் பேஸ்டிலிருந்து ஆரம்பித்தது. வயிற்றில் One Thousand G.B Expandable storage இருக்குமோ? அதிலும் அந்த அரை டிராயர் போட்ட பெண் மிகவும் மோசம். கேரம் போர்ட் ஆட்டத்தில் பாக்கெட்டில் வரிசையாக காயின் போடுவது போல வாய்க்குள் ஐட்டங்களை தள்ளிக் கொண்டிருந்தாள்

ஒரு பாத்திரத்தை எடுத்து வந்தார் வெயிட்டர். அதிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது. Corn flakes பொறித்துக் கொண்டு வந்திருந்தார். ரோடு போட லாரியிலிருந்து ஜல்லி கொட்டுவது போல தட்டில் கார்ன் ப்ளேக்கை தள்ளினார்.

சுடச்சுட கார்ன் ப்ளேக் பஞ்சு மாதிரி இருந்தது. லாரி இன்னொரு லோட் அடித்தது.

கடிகாரத்தைப் பார்த்தேன். முக்கால் மணி நேரம் தான் ஆகியிருந்தது

மெதுவா சாப்பிடுன்னு சொன்னேன் இல்லே..ஏன் இப்படி அரக்க பரக்க சாப்பிடறே?” என்றான் மகன்.

அடேய்...மூகாம்பிகை கேட்டரிங்கா இருந்தா இந்த நேரத்துல மூனு பந்தி முகூர்த்த சாப்பாடு போட்டிருப்பங்கடா? டி.வி ரன் அவுட் ஸ்லோ மோஷன்ல காட்டுவானே..அதை விட ஸ்லோவா சாப்பிட்டுகிட்டு இருக்கேன். இதுக்கு மேல என்னால முடியாது. நான் மெயின் கோர்ஸ் சாப்பாடு எடுக்கப் போறேன்

மெயின் கோர்ஸில் புலாவ், நூடுல்ஸ், சப்ஜி என்று இன்ன பிற ஐட்டங்கள் இருந்தன. கொஞ்சமாக எடுத்து வந்தேன். அதற்குள் மகன் பட்டர் ரொட்டி சொல்லியிருந்தான்.

டேபிள் மீது ஒரு கொடி இருந்தது. க்ரில் ஐட்டம் போதும் என்றால் அந்த கொடியை மடக்கி வைக்க வேண்டுமாம். நாங்கள் கொடியை மடக்கி விட்டோம். அந்த சேட்டுப்பெண் மடங்குவது மாதிரி தெரியவில்லை.

க்ரில் ஐட்டங்கள் முடிந்ததால் ஹோம குண்டத்தை எடுத்து விட்டு குழியை ஒரு பலகை போட்டு மூடினார்கள்.

இந்தா பாஸ்தா எடுத்துக்கோ?” என்றான் மகன்.

பாட்ஷா எல்லாம் வேணாம்டா

கொஞ்சம் டிரை பண்ணு

உள்ளே போ...உள்ளே போஎன்று எவ்வளவு மிரட்டியும் பாட்ஷா வயிற்றுக்குள் போக மறுத்தது.

வலது பக்கம் திரும்பினால் எல்லா கலரிலும் கேக், கீர், சாக்லேட் என ஐட்டங்களை கொலு வைத்திருந்தார்கள்.

ஒவ்வொரு கேக்லயும் ரெண்டு எடுத்துக்கோஎன்று கேக்கோபதேசம் செய்தான்  மகன்.

இரண்டு நாட்கள் வேலைக்காரி வீட்டுக்கு வராவிட்டால் குப்பை பக்கெட் எப்படி நிரம்பி வழியும்? அந்த மாதிரி இருந்தது என் வயிறு...இதில் இரண்டு கேக் எப்படி எடுப்பது? அவன் பேச்சை நான் கேக்கவில்லை.

சொற்ப அளவு கேக் எடுத்துக் கொண்டு டேபிளுக்கு வந்தால் ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் மறுபடியும் ராமர் கலர் ஜூஸ் இருந்தது.

நான் தான் சார் வைச்சேன். ஜீரணத்துக்கு நல்லதுஎன்றார் வெயிட்டர்.

இன்று போய் நாளை வாஎன்று அந்த ஜூஸைப் பார்த்து சொல்ல முடியவில்லை.

சார்..ஃபைனலா அங்கே குல்ஃபி இருக்கு. நிறைய டாப் அப் இருக்கு. எடுத்துக்குங்கஎன்றார் வெயிட்டர்.

குல்ஃபியை பார்க்கும் போதே நாக்கில் ஜலம் ஊறியது. ஆனால் குல்ஃபிக்கு இடம் கொடேல் என்றது வயிறு

பாவம். குல்ஃபி எனக்காக உருகிக் கொண்டிருந்தது.

கடைசி ஓவரை நாங்கள் போட்டு விட்டு கடிகாரத்தைப் பார்த்தோம். 3:45 தான் ஆகியிருந்தது. இன்னும் முக்கால் மணி நேரம் இருந்திருக்கலாம். என்னுடைய ஒத்துழையாமை இயக்கத்தால் எல்லாம் கெட்டுப் போனது.

கடைசியில் பில்லை ஹோம குண்டம் இருந்த இடத்தில் வைத்தார்கள். மகனுக்குத் தெரியாமல் பில்லைப் பார்த்தேன்.

க்ரெடிட் கார்டை ஹோம குண்டம் மேல் வைத்தான் மகன். நாலு பேர் சாப்பிட்டதற்கு   .............. ரூபாய் ஸ்வாகா ஆகியிருந்தது.