டிஜியோ மாரடோனா - 2020 அளித்த இன்னொரு பெருந்துயரம் மாரடோனாவின் மரணம்.
உலகின் தலை சிறந்த கால் பந்து வீரர். லட்சக்கணக்கான ரசிகர்களை உலகெங்கும் கொண்டவர். குள்ளமான உருவம், கொஞ்சம் குண்டு என்று கூட சொல்லலாம். ஆனால் அவர் வேகமும் எதிரணி வீரர்களை சமாளித்து பந்தை கடத்திக் கொண்டு செல்லும் லாவகமும் அவரை என்றுமே ரசிகர்களின் கண்மணியாகவே வைத்திருந்தது.
அவரது விளையாட்டை முதன் முதலில் தொலைக்காட்சியில் பார்த்தது என்பது 1986ம் வருடம் மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போதுதான். அது கூட நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் பார்த்ததுதான்.
நள்ளிரவில் நடைபெற்ற அந்த போட்டியைக் காண என் இரண்டாவது அக்காவின் கணவர் சென்னையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் பயணத்தை பாதியில் நிறுத்திக் கொண்டு நெய்வேலி வந்தார். ஒரு விளையாட்டுப் போட்டியில் ரசிகர்களின் ஆரவாரம் பெருங்கடலின் பெரும் ஓசையையும் தாண்டியதாக இருக்கும் என்பதை அறிந்து கொண்டதும் அப்போதுதான்.
சரி, எப்படியும் தூங்க முடியாது. போட்டியையாவது பார்ப்போம் என்று சலிப்போடுதான் பார்க்கத்துவங்கினேன். மாரடோனா எனும் காந்தம் மனதில் ஒட்டிக் கொண்டது. உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா வெற்றி பெற்ற பின்பு, அவர்கள் கடந்து வந்த பாதையை பின்னொரு நாள் தூர்தர்ஷன் ஒளிபரப்பிய போதுதான் "இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கோல்" என்று அழைக்கப்படுகிற இந்த பரபரப்பான கோலை பார்த்தேன்.
நீங்களும் பாருங்கள்
ஒரு வேளை காணொளி திறக்காவிடில் இந்த யூட்யூப் இணைப்பு மூலம் அதை ரசியுங்கள்.
மைதானத்தின் பாதியிலிருந்து கிட்டத்தட்ட ஆறு பேரை சமாளித்து அவர் கோலடித்த அந்த திறமை, மாரடோனாவின் மகத்தான தருணம். இங்கிலாந்திற்கு எதிரான அதே போட்டியில்தான் "கடவுளின் கை (Hand of God)" என்ற சர்ச்சைக்குரிய கோலும் இடம் பெற்றது என்பது ஒரு முரண்.
1990 உலகக் கோப்பை போட்டியும் அவரது ஆதிக்கத்தில்தான் இருந்தது. மேற்கு ஜெர்மனிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவரை நகர விடாமல் மூன்று வீரர்களை சுற்றி வளைத்து இருந்தார்கள் என்பதே அவர் மீதான அச்சத்திற்கு சான்று. ஒரு சர்ச்சைக்குரிய பெனால்டி முடிவால் உலகக் கோப்பையை அர்ஜெண்டினா இழந்தது உலகெங்கிலும் இருந்த மாரடோனா ரசிகர்களுக்கு துயரமளித்தது. (1990 போட்டிகளின் போது எனக்கு ஏற்பட்ட ஒரு சம்பவம் குறித்து பிறகு மீள் பதிவு செய்கிறேன்)
1994 உலகக் கோப்பை போட்டியிலிருந்து அவர் போதைப் பொருளை உட்கொண்ட குற்றச்சாட்டினால் வெளியேற நேரிட்டது. ஆனாலும் அவர் ரசிகர்களின் இதயத்திலிருந்து வெளியேறவில்லை.
ஒரு சாமானிய குடும்பத்திலிருந்து வந்தாலும் திறமை மூலம் சரித்திரம் படைக்க முடியும் என்பதற்கு உதாரணமானவர் அவர்.
சோஷலிச நாயகர்களை மதிப்பவர் அவர்.
தன் கையில் "சே" வை பச்சை குத்திக் கொண்டவர்.
க்யூப நாயகன் பிடல் காஸ்ட்ரோவின் மீது மதிப்பு கொண்டவர்.
பொலிவாரிய புரட்சி நாயகன் ஹ்யூகோ சாவேஸிற்கும் நெருக்கமானவர்.
இந்தியா வந்திருந்த போது தோழர் ஜோதி பாசுவை அவர் வீட்டில் சந்தித்தவர். பிடல் காஸ்ட்ரோவின் இந்தியப் பயணத்தின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை தோழர் ஜோதி பாசு, மாரடோனாவிற்கு அளித்துள்ளார்.
நான் மிகவும் மதிக்கும் பிடல் காஸ்ட்ரோவிற்கு மிகவும் நெருக்கமான உங்களையும் நான் மதிக்கிறேன் என்று அப்போது தோழர் ஜோதிபாசுவிடம் சொல்லியுள்ளார்.
மாரடோனாவிற்கு அவரது ரசிகனின் மனமார்ந்த அஞ்சலி.