Monday, March 31, 2014

நெற்றியில் துப்பாக்கியை வைத்த நிதியமைச்சர்

இப்போது எழுதுவதை படிக்கும் போது  இரு தினங்கள் முன்பாக சிவகங்கை முன்னாள் சீமான் குறித்து எழுதிய பதிவு  உங்கள்
நினைவிற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

எப்போதோ படித்த கதை இது.

அது ஒரு ஆப்பிரிக்க நாடு. எல்லா வளங்களும் இருந்தாலும்
அது எதுவும் மக்களுக்கு போகாது.  ஆட்சியில் உள்ளபவர்கள்
சுருட்டிக் கொள்வார்கள். பல முறை ஆட்சி மாற்றம், ராணுவ
ஆட்சி என்றெல்லாம் நடந்திருக்கிறது. எந்த ஆட்சி வந்தாலும்
தோலும் எலும்புமாக குழந்தைகள் இருக்கும் காட்சி பார்ப்ப்வர்கள்
கண்ணில் நீரை வரவழைக்கும்.

அங்கே மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் வந்தது. புதிய அரசில்
நிதியமைச்சராக பொறுப்பேற்றவர்கள் தடாலடியாக பல
நடவடிக்கைகள் எடுத்தார். முன்பு ஆட்சி செய்தவர்கள் சேர்த்த
சொத்துக்களை மீண்டும் நாட்டு கஜானாவிற்கே கொண்டு வரப்
போவதாக அறிவித்தார்.

மென்மையாக பேசுபவரானுலும் உறுதியான இதயம் 
கொண்டவர் என்று அவருக்கு புகழ் கிடைத்தது. தன்னுடைய
பணி நிமித்தம் அவர் ஸ்விட்சர்லாந்து சென்று அங்கேயிருந்த
பெரிய வங்கிக்கு செல்கிறார். அந்த வங்கியின் சேர்மனை
சந்திக்கிறார்.

" எங்கள் நாட்டு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தாங்கள்
கொள்ளையடித்த பணத்தை உங்கள் வங்கியில்தான் பதுக்கி
வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். அந்த விபரங்கள்
எனக்கு வேண்டும்" என்று அவர் மரியாதையாக கேட்க,
எங்கள் வங்கியில் முதலீடு செய்பவர்கள் பற்றிய விபரங்களை
நாங்கள் தர முடியாது என்று சேர்மனும் மரியாதையாக சொன்னார்.

நிதியமைச்சர் அழுத்தமாக பேசினார், கோபமானார், மிரட்டினார்,
உங்கள் வங்கி மீது வழக்கு தொடுப்பேன் என்று என்னென்னமோ
சொல்லிப் பார்த்தார். ஆனால் சேர்மன் அசைந்தே கொடுக்கவில்லை.
பொறுத்து பொறுத்து பார்த்த நிதியமைச்சர் கடைசியில் 
ரிவால்வரை எடுத்து சேர்மனின் நெற்றியில் வைத்து " நான்
கேட்கும் தகவல்களை கொடுக்காவிட்டால் உன்னை சுட்டு 
விடுவேன்" என்று கர்ஜித்தார்.

அப்போது சேர்மன் சொன்னார்' உயிரே போனாலும் எங்கள் 
வாடிக்கையாளர்களை நாங்கள் காட்டிக் கொடுக்க மாட்டோம்".

அப்போது நிதியமைச்சர் முகத்தில் ஒரு புன்னகை. ஒரு நிமிடம்
என்று சொல்லி விட்டு அறைக்கு வெளியே போய் விட்டு வந்தார்.

மீண்டும் உள்ளே வந்தவர் கையில் ஒரு பெரிய பெட்டி.

'இதில் ஐந்நூறு கோடி டாலர் இருக்கிறது, எனக்கு ஒரு கணக்கு
தொடங்குங்கள்"

மீண்டும் சொல்கிறேன். ப.சிதம்பரம் ஸ்விஸ் அரசுக்கு எழுதிய
கடிதத்திற்கும் இக்கதைக்கும் சம்பந்தமேயில்லை.


Sunday, March 30, 2014

மோடி பிரியாணி சகிக்கவில்லை

பாகிஸ்தான் பிரதமரை பிரியாணி செய்து விடுவேன் என்ற பேச்சு
மோடி பஜனை பாடுபவர்களுக்கு மன சாட்சி இருந்திருந்தால்
தர்ம சங்கடம் ஏற்படுத்தியிருக்கும்.

ரத்த வெறி மனதில் ஊறிப் போயிருக்கிறது என்பதன் அடையாளம்
இப்பேச்சு. 

அவர் மாறி விட்டார், அமைதியாகி விட்டார், பாவம் பச்சைக்குழந்தை,
என்றெல்லாம் வர்ணித்தவர்கள் தங்கள் முகத்தை எங்கே வைத்துக்
கொள்ளப் போகிறார்கள். 

வெறியூட்டும் பேச்சுக்கள் மூலம் ஓட்டுக்களை அறுவடை செய்ய
நினைக்கு மோடி என்றும் திருந்த மாட்டார்.

மாணிக்கத்தால் அடிபட்ட இந்திரனின் ஆட்களை சோதனை செய்த
டாக்டர்கள் சொன்னது போல, உடம்பு, மனசு, நாடி, நரம்பு
எல்லாவற்றிலும் ரத்த வெறி ஊறிப் போன மோடியால் என்றும்
நல்லவராக திருந்தவே முடியாது.

அவர் நல்லவர் என்று யாராவது இனியும் சொன்னால் 
ஒன்று அவர் முட்டாளாக இருக்க வேண்டும்,
இல்லையென்றால் அவரும் மோடியின் கூட்டாளியாக
இருக்க வேண்டும்.

Saturday, March 29, 2014

முதல்வர் அலுவலகத்து கிரிமினல்கள்

கேரள முதலமைச்சரின் அலுவலகத்தில் கிரிமினல்கள் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

கொச்சி, மார்ச் 28-
கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டியின் முன்னாள் மெய்க்காப்பாளர் சலீம்ராஜ் சம்பந்தப்பட்ட நிலமோசடி வழக்கு கள் குறித்து மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) விசாரணை நடத்த வேண்டும் என்று கேரளஉயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. 

இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி ஹரூண் அல் ரஷீத், முதலமைச்சரின் அலுவலகத்தையும் கடுமையாக விமர் சித்தார். “முதலமைச்சரின் தனி அலுவலகத்தில் கிரிமினல்கள் நியமிக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் முன்னுதாரணமாக செயல்பட வேண்டிய அலுவலகமே இப்படி ஆகிவிட்டது. 

அங்கு கிரிமினல்கள் வேலைக்கு நியமனம்செய்யப்பட்டார்கள். எதையும் செய்யத் தயங்காத சிலர் அங்கு வேலைசெய்தார்கள். சரிதா விவகாரம் மற்றும் சூரிய மின்சார மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களும் அங்கு வேலை செய்தார்கள். இது அதிர்ச்சி அளிப்பதும் ஆச்சரி யப்படத்தக்கதுமாகும். இது பற்றி பல்வேறு கட்டங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும் முதலமைச்சர் எந்த பதிலும்சொல்லவில்லை. வருவாய்த் துறை அதிகாரிகளும் கூடசம்பந்தப்பட்ட வழக்காகும் இது. 

பல கோடி ரூபாய் விலை மதிக்கத்தக்க பெருமளவிலான நிலம் சம்பந்தப்பட்டுள்ளது. நிலமோசடி கும்பலின் தலைவராக சலீம்ராஜன் செயல்பட் டுள்ளார். அரசுக்கு தலைமை தாங்குகின்றவர்கள் தலையிட்டுள்ள இவ்வழக்கை மாநில போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே வழக்கை சிபிஐக்கு விடுகிறோம்” என்று நீதிபதி ஹரூண் அல் ரஷீத் தனது தீர்ப்பில் கூறினார். இவ்வழக்குகள் குறித்து ஒன்பது மாதங்களுக்குள் விசா ரணை நடத்தி முடிக்க வேண்டும். அனைத்து விபரங்களும் ஆபரணங்களும் சிபிஐ அதிகாரி களிடம் ஒப்படைக்க வேண் டும் என்று நீதிமன்றம் உத்தர விட்டது.

உம்மன்சாண்டி ராஜினாமா செய்ய வேண்டும் :பினராயி விஜயன் : இதுபற்றி கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினராயி விஜயன், இனியாவது முதலமைச்சர் உம்மன்சாண்டி அதிகார ஆசனத்திலிருந்து இறங்க வேண்டும். எவ்வளவோ நாட்களுக்கு முன்பே கேரளம் இவ்விஷயங்களையெல்லாம் நன்கு அறிந்துள்ளது.
எனினும் கூச்சநாச்சமின்றி பதவி நாற்காலியை விடாமல் தொற்றிக் கொண்டிருக்கிறார் உம்மன் சாண்டி. ஏற்கனவே அவர் பதவிவிலகியிருக்க வேண்டும் என் றார். 

எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறுகையில், இதற்கு முன்பும் முதலமைச்சர் உம்மன்சாண்டியை நீதிமன்றம் விமர்சித்துள்ளது. எனினும் முதலமைச்சருக்கு சிறிதும் வெட்க மில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு முதலமைச்சரின் கன்னத்தில் விழுந்த அறையாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேரி பால கிருஷ்ணன் கூறினார். 




முதலமைச்சர் உம்மன்சாண்டியுடன் குடைப்பிடித்து செல்கிறார் குற்றவாளி சலீம்ராஜ் (கோப்பு படம்)

நன்றி - தீக்கதிர் 29.03.2014

சிதம்பரம் அண்ணாச்சி, அது உங்களுக்கே டேஞ்சராச்சே?



இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்த கறுப்புப் பணம் பற்றிய விபரங்களைத் தராவிட்டால் நடப்பதே வேறு என்று அண்ணன் சிவகங்கை முன்னாள் சீமான் (அதான் போட்டி போடலியே, இனிமே முன்னாள்தான்) ப.சிதம்பரம் ஸ்விட்சர்லாந்து நாட்டை மிரட்டி கடிதம் எழுதியிருப்பதைக் கண்டு மெய் சிலிர்க்கிறது, உள்ளம் பூரிக்கிறது, இதயம் கனக்கிறது, கண்கள் பனிக்கிறது என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

சாவற நேரத்துல சங்கரா என்பது போல இது என்ன ஆட்சியை விட்டு விட்டு வீட்டுக்கு போகும் நேரத்தில் உங்களுக்கு வீரம் வருகிறது? சரி உங்க லெட்டரைப் பாத்து பயந்து நடுங்கி அவங்க எல்லா விபரத்தையும் கொடுத்துட்டா சிக்கலாச்சே!

ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, காமன்வெல்த், ஆதர்ஷ், ஹெலிகாப்டர் என்று எல்லா ஊழல்களிலும் கல்லா கட்டிய காசு ஸ்விஸ் வங்கிகளில்தானே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்! அந்த விபரங்கள் எல்லாம் வெளியே வந்தா உங்காளுங்களுக்கே டேஞ்சராச்சே!

இல்லை வேற நாடுகளில் பதுக்கி வைச்சுட்டாங்களா?
அதான் இவ்வளவு தைரியமா?


Friday, March 28, 2014

வாழ்த்துக்கள் கவாஸ்கர், ஜாக்கிரதையா இருங்க

 http://upload.wikimedia.org/wikipedia/commons/e/ed/Sunny_Gavaskar_Sahara.jpg

வாழ்த்துக்கள் கவாஸ்கர், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக
பொறுப்பெடுக்கப் போகின்றீர்கள். லாபியிங்க், கேம்ப்ளிங்க் போன்ற
எந்த சித்து வேலைகளும் இல்லாமல் உச்ச நீதி மன்றம் உங்கள் மீது
வைத்துள்ள நம்பிக்கை உங்கள் கையில் இந்த பொறுப்பை அளித்துள்ளது.

கட்டுக்கடங்காத முரட்டுக் குதிரையாக தறி கெட்டுத் திரிந்த இந்திய
கிரிக்கெட் வாரியத்திற்கு முதல் முறையாக உச்ச நீதி மன்றம் 
கடிவாளம் போட்டிருக்கிறது.

உங்களது பணி சாதாரணமானது அல்ல என்பது உங்களுக்கே மிக
நன்றாகத் தெரியும். இந்திய அரசியலை விட மிக மோசமாக கறைபட்டு
களங்கப்பட்டிருக்கிறது இந்திய கிரிக்கெட். ஊழல் பேர்வழிகள்,
சூதாடிகள், கார்ப்பரேட் முதலைகளின் சொர்க்க பூமியாக இந்திய
கிரிக்கெட் மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது.

நீங்கள் களத்தில் சந்திக்கப் போவது சாதாரண ஆட்கள் கிடையாது.
மால்கம் மார்ஷல், ஆண்டி ராபர்ட்ஸ், இயான் போத்தம், இம்ரான் கான்
ஆகியோரை மைதானத்தில் சந்தித்தது போல அவ்வளவு சுலபமான
சவால் அல்ல.

ஸ்ரீனிவாசன், ஜக்மோகன் டால்மியா, லலித் மோடி போன்ற ஊழல்
பெருச்சாளிகளோடு இந்திய கிரிக்கெட்டை கைப்பற்ற அருண் ஜேட்லி,
லாலு பிரசாத் போன்ற அரசியல் பெருச்சாளிகளும் மோதும் 
இடம் இது.

நிதானமான ஆட்டத்திற்கு பெயர் போனவர் நீங்கள். முடிவுகள்
எடுப்பதில் நிதானத்தை கடைபிடிப்பது உங்கள் பாணியிலே
இருக்கட்டும். ஆனால் அமலாக்குவதில் உங்களுக்கு பிடிக்காத
கபில் தேவின் வேகத்தை காண்பிக்காவிட்டால் உங்களை
இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ள ஆக்டோபஸ்கள் 
விழுங்கி விடும்.

உங்கள் பதவிக்காலத்தில் கிரிக்கெட்டை கனவான்களின் 
ஆட்டமாக மாற்றாவிட்டாலும் சரி, குறைந்த பட்சம் சூதாடிகள்,
பேராசை பிடித்த கார்ப்பரேட்டுகளின் பிடியிலிருந்தாவது 
காப்பாற்றுங்கள்.

கோடிக்கணக்கில் வாரியத்தின் கஜானாவில் குவிந்துள்ள
பணத்தை கிரிக்கெட்டை மட்டும் மேம்படுத்த பயன்படுத்தாமல்
மற்ற விளையாட்டுக்களை முன்னேற்றவும் செலவிடுங்கள்.

ஒளிரும் இந்தியா, துன்பத்தில் உழலும் இந்தியா என்று
இந்தியா இரண்டாக பிளவு பட்டிருப்பது போல இந்திய 
விளையாட்டுத் துறையும் வலிமையான கிரிக்கெட், வறுமையான
இதர விளையாட்டுக்கள் என்று இரண்டாக பிளவு பட்டுள்ளது.

அதை மாற்ற உங்கள் பதவி பயன்படட்டும். உங்களுக்கு
பாரத ரத்னா தரச்சொல்லி நானே பரிந்துரைப்பேன்.

மீண்டும் வாழ்த்துக்கள் கவாஸ்கர், கிரிக்கெட் வாரியத்திற்கு
உங்கள் மூலமாகவாவது பெருமை சேரட்டும்.
 

டாப் டென் பட்டியல் - முடியல

நேற்று "நான் அவனில்லை" என்ற பதிவர் கடந்தாண்டில் மிக
அதிகமாக இணையத்தில் பார்க்கப்பட்டதாக கூகிள் வெளியிட்ட
77 புகைப்படங்களைப் பார்ப்பதற்கான இணைப்பை அளித்திருந்தார்.

அவர் கொடுத்த இணைப்பில் சென்று பார்த்தால் 
சான்ஸே இல்லை, அத்தனையும் அபாரம், அற்புதம்.

அதிலிருந்து சிறப்பானதாக பத்து புகைப்படங்களை தேர்ந்தெடுக்க
முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. எதை எடுப்பது, எதை
விடுவது என்ற குழப்பத்தில் இருபத்தி ஐந்து படங்களை தேர்ந்தெடுத்து
இங்கே கொடுத்துள்ளேன். நீங்களும் ரசியுங்கள்.

எனக்கு மிகவும் பிடித்தது கடைசி படம் ஏனென்றால் 

காரணத்தை கடைசியில் சொல்கிறேன்


























சின்னக் குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற சிரிப்பிற்கு ஈடு இணை
ஏதாவது உண்டா?
 

Thursday, March 27, 2014

அனானிக்கு ஒரு அறிவிப்பு

என் வலைப்பக்கத்தை எப்போதும் சுற்றிக் கொண்டே இருக்கிற
ஒரு வக்கிர புத்தியுள்ள அனானி ஒன்று "ரிலாக்ஸ் ப்ளீஸ்" என்ற
வலைத் தளத்தில் என்னை நக்கல்  செய்து எழுதியிருந்ததற்கான
இணைப்பைக் கொடுத்து மிகவும் சந்தோஷப் பட்டிருந்தது.

கோபாலன் சார் கண்ணியம் காக்கவும் என்று மீண்டும் எழுதாதீர்கள்,
இந்த மாதிரியான ஜென்மங்களுக்கு மரியாதை கொடுத்தாலும்
புரியாது.

அந்த இணைப்பைப் போய் பார்த்து விட்டு அவருக்கு ஒரு பதிலும்
எழுதினேன்.  அதற்கு அவரும் பதில் போட்டார்.

அவையெல்லாம் இங்கே கீழே


அப்புறம் வெல்லூர் ராமன் ஒரு சிவப்புக்கொடி வீரர் இருக்காரு. ஆத்தா தூக்கி எறிந்தவுடன் ரொம்பத்தான் துள்ளித் துள்ளி பதிவழுதி கிழி கிழினு கிழிக்கிறாரு.


3 comments:

S.Raman,Vellore said...
என் வலைப்பக்கத்தில் அன்றாடம் வந்து போகும் அனானி நீங்கள்தானா?

உங்கள் பக்கத்து இணைப்பை நேரடியாகவே கொடுக்கலாமே?

ஜெயலலிதாவுடன் கூட்டணி இருந்த போதும் அவரது நடவடிக்கைகளை கண்டித்திருக்கிறேன். முழுமையாக படித்து விட்டு பிறகு பதிவு போடவும்.
வருண் said...
ஐயா ராமன் அவர்களே!

நான் அனானியாவெல்லாம் வர்ரது இல்லை வருணாத்தான் வர்ரது. சும்மா அரசியல்வாதிமாரி இப்படி பொய்க்குற்றம் சாட்டக்கூடாது. எவனாவது ஐ பி ஸ்பெஷலிஸ்டிடம் அந்த அனானி நாயி யாருனு கண்டுபிடிங்க. சும்மா கண்டவனையும் குற்றம் சொல்லிக்கிட்டு இருக்கக்கூடாது ஆமா.
S.Raman,Vellore said...
உங்கள் நேர்மை எனக்கு நிஜமாகவே பிடிச்சிருக்கு. உங்களை அனானியாக கருதியதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.

மீண்டும் சொல்கிறேன். சொல்லப் போனால் தேர்தல் கூட்டணி முறிந்த பின் நான் இன்னும் ஜெ வை விமர்சிக்கவே இல்லை. அதை விட முக்கியமான பணிகள் இருந்தது. இன்றுதான் ஜெ வ திட்டியே எழுதப் போகிறேன். என் வலைப்பக்கத்தை நிதானமாக படித்து முன்பு நான் ஜெ வை திட்டியதை அறிந்து கொள்ளவும்

அனானியை நான் எவ்வளவு மரியாதையாக நடத்துகிறேன் என்பதை
அனைவரும் அறிந்து கொள்ளவும்.

ஆனால் அவர் சொன்னது போல யார் அந்த அனானி என்று தேடப்
போவதில்லை.

ஏனென்றால் அவ்வளவு வொர்த் கிடையாது 

 

கலைஞர் என்னதான் சொல்றாரு?



பொதுவாக எந்த விஷயத்தையும் தெளிவாக கூறுவதில் கலைஞருக்கு நிகர் யாரும் கிடையாது. ஒரு விஷயத்தை ஆதரிப்பதோ இல்லை எதிர்ப்பதோ அது அந்த சமயத்திற்கு கறாராக இருக்கும். பின்பு வழுக்குவது சறுக்குவது என்பது வேறு விஷயம்.

அவரது அந்த தெளிவு மங்கிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தை அவரது உடன் பிறப்புக்களுக்கே அவரது நேற்றைய உரை கொடுத்திருக்கும்.

காங்கிரஸ்காரர்கள் பழி வாங்கினார்கள், நன்றி கெட்டவர்கள், விசுவாசம் இல்லாதவர்கள், தவறு செய்தவர்கள், நல்லது செய்தவர்களை நினைத்துப் பார்க்காதவர்கள், அதனால்தான் அதல பாதாளத்திற்கு போய் விட்டார்கள் என்றெல்லாம் திட்டி விட்டார்.

இவ்வளவும் சொல்லி விட்டு காங்கிரஸ் கட்சி கேட்டால் ஆதரவும் தருவேன் என்றும் சொல்கிறார்.

அதற்கு அவர் சொல்லியுள்ள காரணங்களில் வலு கிடையாது என்பது அவருக்கே தெரியும்.

ஏன் இந்த தடுமாற்றம்.

மகன் கொடுக்கும் டார்ச்சர் ஓவராக போய் விட்டதால் வந்த பிரச்சினையோ?



Wednesday, March 26, 2014

மோடி பாசத்தால் வெளியான ஜெயலலிதாவின் மொக்கை பதில்



பாரதீய ஜனதாவைப் பற்றியோ அல்லது நரேந்திர மோடியைப் பற்றியோ தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஏன் ஜெயலலிதா வாய் திறப்பதேயில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிமுக ஒரு வழியாக பதில் சொல்லியுள்ளது.

ஆனால் அந்த பதில் மிகவும் மொக்கையாக இருக்கிறது.

மத்தியில் இருப்பது காங்கிரஸ் அரசுதான். ஆகவே அதைத் தான் எதிர்க்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநில முதல்வர் பற்றி ஏன் பேச வேண்டும் என்று அம்மையார் கேள்வி கேட்டுள்ளார்.

அந்த குஜராத் மாநில முதல்வர்தான் பிரதமர் வேட்பாளர் என்று பாஜக முன் வைத்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்வது அம்மையாருக்கு தெரியாது போலும். பாஜக போட்டியிடுவதும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கத்தான் என்பதும் கூட அம்மையார் அறியவில்லை போலும்.

கதர்க்காரர்களையும் காவிக்காரர்களையும் சம தூரத்தில் நிறுத்தி உள்ளதாக சொல்கிறார். நம் கேள்வியே அதுதான். சம தூரத்தில் உள்ள இருவரில் கதர்க்காரர்களை வறுத்து எடுக்கும் போது காவிக்காரர்கள் பற்றி மட்டும் ஏன் வாய் திறக்கவேயில்லை?

மோடி மீதுள்ள பாசம், ஒரு வேளை தேவைப்பட்டால் அவருக்கு முட்டு கொடுப்பது என்பதுதான் காரணம். ஜெ வின் மொக்கை பதில் இதை நிரூபிக்கிறது.

இந்த அறிக்கையின் காமெடியான விஷயமே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் விஜயகாந்த் பற்றி வாய் திறப்பதில்லை என்று ஜெ கேட்டதுதான்.

அவர் கண்டிப்பாக படிப்பார் என்று உறுதி கொடுத்தால் என் சொந்த செலவிலேயே அவருக்கு தீக்கதிர் சந்தா கட்டி விடுகிறேன். அதைப் படித்த பின்பாவது ஜெ விற்கு தெளிவு கிடைக்கட்டும்.

Tuesday, March 25, 2014

ஐந்து மணி நேரத்தில் பாஜக விற்கு வந்த ஞானோதயம்

மங்களூரில் பெண்களை இழிவு படுத்திய ஸ்ரீராம் சேனா கும்பலின்
தலைவன் பிரமோத் முத்தாலிக்கை கட்சியில் சேர்த்த ஐந்து மணி
நேரத்திலேயே நீக்கவும் செய்து விட்டது பாரதீய ஜனதா.

அவ்வளவு மோசமான மனிதன் என்பது இந்த மனிதனைப் 
பயன்படுத்தி பெல்காமில் கலவரங்களைத் தூண்டிய  போதோ
இல்லை  சங் பரிவார அமைப்பான பஜ்ரங் தள்ளின் கர்னாடக 
மாநில தலைவராக செயல்பட்ட போதோ தெரியவில்லை போலும்.

அவ்வளவு அப்பாவிகள் பாஜகவில் உள்ளவர்கள்.

மோசமான ஆட்களை கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்ற
பாஜக வின் கொள்கை உறுதியை பாராட்டலாம் என்று பார்த்தால்
ஊழல் புகழ் யெட்டீயூரப்பா மற்றும் ரெட்டி சகோதரர்கள் விஷயத்தில்
இந்த ஞானோதயம் பல நாட்களுக்குப் பிறகும் வரவில்லை.

அது சரி மோசமான ஆட்கள் இருக்கக் கூடாது என்று பார்த்தால்
கட்சியையே கலைத்து விட வேண்டுமே



“உள்ளே – வெளியே” ஆட்டம் இனியும் முடியுமா?



வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் விதத்திலும் மக்களுடைய வாங்கும் சக்தி அதிகரிக்கக் கூடிய விதத்திலும் வளர்ச்சி அமைவது உறுதி செய்யப்படும். வளர்ச்சியும் முன்னேற்றமும் மக்கள் சார்ந்ததாக இருந்திடும்.

இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தேர்தலில் முன் வைக்கிற அடிப்படை முழக்கம். வளர்ச்சி என்பதை மற்றவர்கள் கூட சொல்கிறார்கள். ஆனால் அந்த வளர்ச்சி யாருக்காக என்பதில்தான் மற்ற முதலாளித்துவ கட்சிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அடிப்படை மாறுபாடு உள்ளது.

முதலாளிகளுக்காக முதலாளிகளால் நடத்தப்படுகிற முதலாளிகளின் அரசாகத்தான் பத்து வருட மன்மோகன்சிங் அரசும் இருந்திருக்கிறது. எழுபத்தி மூன்று மாதம், பதிமூன்று நாட்களை மூன்று முறையாக கழித்த வாஜ்பாயின் அரசும் இருந்திருக்கிறது. துன்பத்தில் உழலும் இந்தியாவை உருவாக்கிக் கொண்டே ஒளிரும் இந்தியா என்ற முழக்கத்தை சொல்ல இரு அரசுகளும் வெட்கமே பட்டது கிடையாது.

மார்க்சிஸ்ட் கட்சியின் முழுமையான தேர்தல் அறிக்கையை தயவு செய்து இதன் இணையதளமான www.cpim.org சென்று படித்துப் பாருங்கள். ஒவ்வொரு அம்சத்திலும் நாட்டிற்கும் மக்களுக்கும் எது அவசியம் என்பதை அலசி தயாரிக்கப்பட்டுள்ளது.

நிதித்துறை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்ல்ப்பட்டுள்ளது என்ன என்பதை இன்று சுருக்கமாக பார்ப்போம்.

நிதி மூலதனம் உள்ளே வருவது, வெளியே செல்வது ஆகியவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மொரீஷியஸ் பாதை வழியாக நிதியை உள்ளே கொண்டு வந்து வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும். வருவாயைப் பெருக்க வரி விதிப்பிற்கான அடித்தளம் விரிவாக்கப் படும். முதலீட்டு ஈட்டு வரி (Capital Gains Tax),   பங்கு பரிமாற்ற வரி (Security Transactions Tax)  ஆகியவை மீண்டும் கொண்டு வரப்படும்.

பெரும் செல்வந்தர்கள் சொத்து வரி செலுத்த வேண்டும்.

நிறுவன வரி உயர்த்தப்பட்டு கறாராக வசூலிக்கப்படும்.

பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது இந்திய நிறுவனங்களை விற்றாலோ அல்லது பங்குகளை விற்றாலோ அது அயல் நாட்டில் நிகழ்ந்தால் கூட அதற்கு வரி விதிக்கப்படும்

ஸ்விட்சர்லாந்திலும் மற்ற நாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் வெளியே கொண்டு வரப்படும்.

விற்பனை வரியில் கூடுதல் பங்கு மாநிலங்களுக்கு அளிக்கப்படும்.

வங்கித்துறை பொறுத்தவரை தனியார் தொழில் நிறுவனங்கள் வங்கி தொடங்க லைசன்ஸ் வழங்கப்படாது.

அன்னிய வங்கிகள் இந்திய வங்கித்துறையை மேலாதிக்கம் செய்ய வழி வகுக்கும் வங்கிகள் கட்டுப்பாட்டு மசோதா 2012 நீக்கப்படும்,

இந்திய வங்கிகளை அன்னிய வங்கிகள் வாங்க அனுமதிக்கப்படாது.

வங்கிகளில் கடன் வாங்கித் திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள், செல்வந்தர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாராக் கடன்கள்  கறாராக வசூலிக்கப்படும்.

முன்னுரிமைத் துறைகளுக்கு கடன் வழங்குவது என்ற பொறுப்பு அமலாக்கப்படும்.

பென்ஷன் துறையில் தனியார் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டு பலப் படுத்தப்படும்.

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன அளவை 26 % லிருந்து 49 % ஆக உயர்த்தும் முடிவு கைவிடப்படும்.

மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க தடையாக இருக்கிற சட்டமான Fiscal Responsibility Budget Management Act  நீக்கப்படும்.

சர்வதேச பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கிக் கொள்ளாமல் தப்பித்ததற்கு வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததுதான் காரணம். அன்னிய மூலதன சுழற்சியை கட்டுப்படுத்தும் திறனோ சட்ட பூர்வமான ஏற்பாடுகளும் இல்லாததால் பங்குச்சந்தையில் சரிவை சந்திக்க நேரிட்டது.

சர்வ தேச நிதி மூலதனம் “உள்ளே வெளியே” சூதாட்டம் விளையாடும் மைதானமாக இந்தியாவை மாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் வைத்துள்ள அத்தனை அம்சங்களுமே இந்தியாவின் பொருளாதாரத்தை உண்மையிலேயே முன்னேற்றும்.

தொழில் – வெளியுறவு – விவசாயம் ஆகியவற்றில் முன்னேற்றம் காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறது – நாளை பார்ப்போம்.