Showing posts with label மாற்று இணையதளம். Show all posts
Showing posts with label மாற்று இணையதளம். Show all posts

Thursday, December 12, 2013

நரியின் இரையா நாம்?

 180px-LIC_kolam

சமீபத்தில் பன்னாட்டு நிதி நிறுவனம் (International Monetary Fund) இந்திய நிதித்துறையின் செயல்பாடு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. சிரமமான நிலையில் இந்தியப் பொருளாதாரம் இருக்கும் போது கூட இந்திய இன்சூரன்ஸ்துறை சிறப்பாக செயல்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சொல்கிறது. இன்சூரன்ஸ்துறையின் சொத்து மதிப்பு இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 16 % க்கும் மேல் இருப்பதாக அந்த அறிக்கை பாராட்டுகிறது. உலகின் வளர்ந்த நாடுகளில் கூட இது போல இல்லை என்றும் குறிப்பிடுகிற அந்த அறிக்கை இன்சூரன்ஸ் ஊடுறுவலிலும் சீனா, பிரேசில் போன்ற நாடுகளை விட இந்தியாவில் மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது என்றும் சொல்கிறது.

அந்த அறிக்கை இன்சூரன்ஸ்துறை என்று சொன்னாலும் கூட அந்த பாராட்டுரைகள் என்னமோ எல்.ஐ.சி நிறுவனத்திற்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால் இந்திய ஆயுள் காப்பீட்டுச் சந்தையில் முதல் பிரிமிய வருமானத்தில் 72 % ஐயும் பாலிசிகள் எண்ணிக்கையில் 80 % ஐயும் வைத்துள்ள தனிப் பெரும் நிறுவனமாக எல்.ஐ.சி திகழ்கிறது. முப்பது கோடி தனி நபர் பாலிசிகளும் பத்து கோடி குழுக் காப்பீட்டு பாலிசிகளும் கொண்ட உலகின் முதன்மையான எல்.ஐ.சி யை மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரம் என்றும் இன்சூரன்ஸ் சந்தையின் முதல்வர் மட்டுமல்ல, இன்சூரன்ஸ் சந்தையையே உருவாக்கும் நிறுவனம் என்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாராட்ட வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது எல்.ஐ.சி யின் சிறப்பான செயல்பாடு. 

அது மட்டுமல்ல, ஸ்விஸ் ரீ என்கிற மறு இன்சூரன்ஸ் நிறுவனம் செய்துள்ள ஆய்வு இந்தியாவில் 7.6 ட்ரில்லியன் டாலர் அளவிற்கு இன்சூரன்ஸ் வணிகத்திற்கான ஆதார வளம் இருப்பதாக கணக்கிட்டுள்ளது. கிட்டத்தட்ட அமெரிக்காவின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 50 % அளவிற்கு இத்தொகை உள்ளது. அதே போல 2020 ல் இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்களின் அளவு 20 கோடிக்கு மேல் செல்லும் என்றும் அந்த ஆய்வு சொல்கிறது.

இந்த வளர்ச்சியும் ஆதார வளமும்தான் பன்னாட்டு மூலதனத்தின் கண்களை உறுத்துகிறது. பொதுத்துறை நிறுவனம் வலிமையாக இருக்கும்வரை தங்களால் இத்துறையில் கால் பதிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளார்கள். பன்னாட்டு மூலதனம் அதிகமாக ஊடுறுவினால் அதன் மூலம் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை பலவீனப் படுத்த முடியுமா என்று சதிகளை தீட்டுகிறார்கள். 

 உலகமயம் உலகெங்கும் தோற்றுப் போன பின்பும் இந்தியாவில் மட்டும் அதை விடாப்பிடியாக கட்டி அழுகிற  நமது ஆட்சியாளர்கள் பன்னாட்டு மூலதனத்தின் விருப்பத்தை பூர்த்தி செய்கிற வகையில் இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றத் துடிக்கிறார்கள். பிரதான எதிர்க்கட்சிகள் உட்பட முக்கிய கட்சிகள் ஆதரவளிப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் நிதியமைச்சர் சொல்கிறார்.

 காங்கிரஸ் கட்சியோடு அனுதினமும் லாவணிக் கச்சேரி  நடத்தி வருகிற பாரதீய ஜனதா கட்சியோ ப.சி சொன்னதற்கு எந்த பதிலும் சொல்லாமலும் கள்ள மவுனம் சாதித்து வருகிறது. நரி இறந்த பின்னாலும் அதன் கண்கள் இரையின் மீதே இருக்கும் என்பார்கள். ஒன்பது வருடங்களாக இந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் இன்சூரன்ஸ் ஊழியர்களின் வீரம் செறிந்த போராட்டம் தடுத்து வருகிறது. திராட்சை கிட்டாவிட்டாலும் பன்னாட்டு நரி இந்த பழம் புளிக்கும் என்று ஓடி விடவில்லை. மீண்டும் மீண்டும் அரசின் தோள் மீது நின்று எம்பிப் பார்க்கிறது. ஆனாலும் இத்தொடரிலும் அதற்கு ஏமாற்றமே கிடைக்கிற வகையில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் மக்கள் மத்தியில் ஆதரவைத் திரட்ட தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.


 மாற்று இணைய தளத்தில் 30.11.2013 அன்று வெளியான எனது கட்டுரை இங்கேயும்.
நன்றி - மாற்று இணையதளம்.